இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்

எனக்கும் என் மனைவிக்கும் பெரும்பாலும் நிகழ்கிற சண்டைக்குக் காரணம் சொன்ன நேரத்துக்கு வந்து சேர்வதில்லை நான் என்பதுதான். பெரும்பாலும் அவரை காக்க வைத்து விடுவேன். அதனாலையே சண்டை வந்துவிடும். தப்புதானே… அதுவும் காத்திருக்கும் கோடூரம் அறிந்த நானே காக்கவைப்பது பெரிய தப்புதானே. கோலாலம்பூருக்கு வந்திறங்கிய முதல் நாள் இரவு காத்திருப்பை மறக்க முடியுமா?

கோலாலம்பூருக்கு வந்து சில வருடங்களுக்குப் பிறகுதான் பேருந்து எடுத்து வீட்டுக்கு (சுங்கை திங்கி தோட்டம்) சென்று வர பழகியிருந்தேன். அந்த வாரப்பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்து சில வருடங்கள் நாய் படாத பாடு பட்டப் பிறகுதான் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைத்தது. ஞாயிறு காலை வீட்டுக்குச் சென்று திங்கள் காலை வேலைக்கு வந்துடுவேன். ஞாயிறு காலை கிளம்பினால் மதியத்துக்கு பிறகுதான் வீடுபோய் சேர்வேன். வீட்டில் பாதி நாள்தான் இருப்பேன். சனிக்கிழமை இரவு சென்றால் முழு நாளும் வீட்டில் அரட்டை அடிக்கலாம். ஆனால் அதில் சிக்கல் இருந்தது.

சனிக்கிழமைகளில் தாமதமாகத்தான் வேலை முடியும். கடைசி பேருந்து இரவு 11.00 மணிக்குதான். அதைப்பிடித்தாலும் பத்தாங் பெர்ஜுந்தை வரைதான் போக முடியும். அங்கிருந்து என் வீட்டுக்கு (சுங்கை திங்கி தோட்டம்) செல்வதற்குப் போக்குவரத்து இரவு 10.00 மணியோடு முடிந்துவிடும். டெக்சிகள் இருக்கும்; அதுவும் 12.00 மணிக்குப் பிறகு இருக்காது. ஆண்டவன் புண்ணியத்தில் சில நேரம் அபூர்வமாக வேலை சீக்கிரம் முடிந்து விடும். சனி இரவே கிளம்பிவிடுவேன். 10.30 மணிக்கெல்லாம் தோட்டத்து பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன். தோட்டமே மயான அமைதியில் உறங்கிக்கொண்டிருக்கும். என் வீடு தோட்டத்தின் கடைசியில் இருக்கும். தோட்டத்திற்கு நடுவிலும் நடந்து போகலாம் தோட்டத்தைச் சுற்றியும் பாதை உள்ளது. அதன் வழியாகவும் போகலாம். தோட்டத்திற்கு நடந்து போகலாம். வீடுகள் இருப்பதால் கொஞ்சம் வெளிச்சமாகவும் இருக்கும் ஆனால் நாய்கள் தொல்லை அதிகம். 15 அல்லது 20 நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்துகொண்டிருக்கும். அதனால் நான் தோட்டத்தை சுற்றி போகும் பாதையில்தான் போவேன். அது கும் இருட்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டு முறைத்துப்பார்க்கும் பால்மரக்காட்டை ஒட்டிய பாதை. கொலை நடுங்கும் இருட்டு. அந்த பாதையில் நடக்கவே மாட்டேன். ஓட்டம்தான்.

அந்த பால்மரக்காட்டிற்கு நடுவில் அம்மன் கோயில் இருந்தது ( கருப்பான ஒரு கல்லை வைத்து அதற்கு தகரக்கூரை அடித்து வைத்து கோயில் என்று கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்) இரவில் அம்மா உக்கிரமாக  சுற்றித்திரிவாள்; யாரும் அவள் முன் போனால் ஆவேசமாக அறைந்து விடுவாள் என்று தோட்டத்து மக்கள் பேசிக்கொள்வார்கள். மேலும் ரத்தக்காட்டேரி, பேய்கள் என்று நிறைய கதைகள் உண்டு அந்த காட்டுக்குள். அவைகள் இருக்கோ இல்லையோ அந்த இருட்டு கண்டிப்பாக பயத்தைத் தூண்டும். கைநிறைய கற்கலை பொருக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாய் ஓடுவேன். அப்படியே ஏதும் குறுக்கே வந்தால் கல்லால் அடித்துவிட்டு ஓடிவிடலாம் என்பது என் நம்பிக்கை. வாரா வாரம் வீட்டுக்கு போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

இந்த மாதிரி நேரத்தில்தான் மாமாவை எதிர்பார்ப்பேன். என்னை கோலாலம்பூருக்கு அழைத்து வந்த அதே மாமாதான். அவர் வீடும் என் வீடும் ஓரே தோட்டத்தில்தான் இருந்தது. தோட்டத்தில் என் வீடு பின்னாடி என்றால் மாமாவின் வீடு நடுவில் இருக்கும். மாமா வாரப்பத்திரிக்கை வேலைக்குப் பேருந்தில்தான் வருவார் ஆனால் வீட்டிலிருந்து மோட்டார் பைக்கிலில்தான் கிளம்புவார். மோட்டார் பைக்கை பத்தாங் பெர்ஜுந்தை பேருந்து நிறுத்தத்தில் வைத்து பூட்டிவிட்டு பேருந்தில் கோலாலம்பூருக்கு வருவார். சனி இரவு மாமாவுடன் கிளம்பினால் மாமாவின் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு வந்திடலாம். ஆனால், அவரோடு வருவதில் ஏகப்பட்ட சிக்கல் இருந்தது.

சனி இரவு அரக்கப் பறக்க வேலைகளை முடித்துவிட்டு கடைசி பேருந்தைப் பிடிக்க ஓடுவார். (பத்தாங் பெர்ஜுந்தைக்குச் செல்லும் கடைசி பேருந்து புடுராயா பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி ஜாலான் ஈப்போ வழியாகதான் செல்லும். அந்த வாரப்பத்திரிக்கை அலுவலகத்தின் அருகிலுள்ள ஜாலான் ஈப்போ பேருந்து நிறுத்தத்தில்தான் பேருந்தை பிடிக்கவேண்டும்) அவருக்கு ஈடுகொடுத்து நானும் வேலைகளை முடிக்க வேண்டும். சில நேரம் மாமா முதலில் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்று விடுவார். நான் வேலைகளை முடித்து விட்டு தெறிக்கத் தெறிக்க ஓடுவேன். பெரும்பாலும் பேருந்து வருவதற்குள் போய் விடுவேன். சில நேரம் பேருந்தை நிறுத்தி வைத்திருப்பார் மாமா. (கடைசி பேருந்து என்பதால் ஓட்டுனர்கள் சில நேரம் உதவுவார்கள்). ஓட்டுனர் உதவி செய்யாத ஓர் இரவில் நான் போவதற்குள் மாமாவை ஏற்றிக்கொண்டு பேருந்து போய் விட்டது. கவலையோடு மீண்டும் அலுவலகத்திற்கு சென்றால் ஆசிரியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். ஆண்டவன் புண்ணியத்தில் கையில் கொஞ்சம் சில்லரை இருந்தது. ஜாலான் ஈப்போ பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருந்த பொது தொலைபேசியில் ஆசிரியரை அழைத்து விசயத்தை சொல்லி விட்டு பேருந்து நிறுத்தத்தில் தனியாகக் காத்திருந்தேன். அரைமணி நேரம் கழித்து ஆசிரியர் வந்து அழைத்து சென்றார்.

இப்படியாக எந்தச் சிக்கலும் இல்லாமல் மாமாவோடு பேருந்தை பிடித்து விட்டால் ஏற்படும் சிக்கல்கள் வேறாக இருக்கும். பேருந்து 12.30 மணிக்குதான் பத்தாங் பெர்ஜுந்தையைச் சென்றடையும். மாமா உடனே வீட்டுக்குச் செல்ல மாட்டார். பத்தாங் பெர்ஜுந்தை பெருந்து நிறுத்தத்திற்கு அருகில் நிற்கும் ஒரு பெரிய மரத்தின் கீழ் நிற்க வைத்துவிட்டு “கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன். இங்கேயே காத்திரு” என்று சொல்லிவிட்டு அவர் மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போய்விடுவார். எங்கே போவார் என்று தெரியாது. சாவகாசமாக ஒருமணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் கழித்து வருவார் மாமா. சில தடவை மட்டும் ரொம்பவும் சப்பையான காரணம் எதையாவது சொல்வார். பல தடவை எதுவும் சொல்ல மாட்டார்.

பல ராத்திரிகள் அந்த பெரிய மரத்தடியில் தனியாக நின்றிருக்கிறேன். மரத்திற்கு அருகில் பலகையினால் கட்டிய சிறிய தேநீர் கடையொன்று இருக்கும் அதுவும் நான் அங்கு விடப்படும் நேரம்தான் கடை அடைக்கப்படும். அடைக்கப்பட்ட அந்த கடைக்குள் எரிந்துகொண்டிருக்கும் சிறிய வெளிச்சம்தான் தனியாக நிற்கும் எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது. மரத்தடியில் உட்காருவதற்கு வசதியில்லை. அவ்வளவு நேரமும் நின்றுகொண்டுதானிருப்பேன்.

இவ்வளவையும் தாண்டி நான் வீடுபோய் சேர்வேனா? இல்லையே…

இரண்டு தடவைதான் என் வீட்டில் என்னை விட்டுவிட்டு அவர் வீட்டுக்கு போனார். மற்ற எல்லா இரவுகளும் நேராக அவர் வீட்டுக்கு போய் விட்டு என்னை நடந்து என் வீட்டுக்கு போக சொல்லி விடுவார் மாமா. ஐயோ… அதே இருட்டு… அதே நாய்கள்… இதில் கருநாகப்பாம்புகள் சாதரணமாகச் சுற்றித்திரியும்… இவ்வளவு சிரமப் பட்டு மறுப்படியும் அதே பிரச்சனை… பல  மாதங்கள் இப்படி கொடுமையாக போயின என்று நினைக்கிறேன். இது சரியாக வராது என்று மாமாவோடு வருவதை நிறுத்திக்கொண்டேன்.

காலப்போக்கில் மாமா வாரப்பத்திரிக்கை அலுவலகத்திற்கு அன்றாடம் வருவதை நிறுத்திக்கொண்டார். மலாய் பத்திரிகைகளில் இருந்து செய்திகளை எடுத்து அதை தமிழில் மொழிபெயர்த்து எழுதி வைத்திருப்பார் மாமா. அதை நான்  செவ்வாய் இரவு நேராக என் வீட்டிற்கு சென்று மறுநாள் காலை மாமா எழுதி வைத்திருக்கும் செய்திகளை எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்துவிடுவேன். காலையில் மாமா வேலைக்கு புறப்படுவதற்குள் போய்விட வேண்டும். ஒரு நாள் தாமதமாக சென்று விட்டேன். கொஞ்சம் கோவப்பட்டார். பிறகொரு நாள் மறுப்படியும் தாமதம். இம்முறை என் வீட்டுக்கு வந்து செய்திகளை கொடுத்து விட்டு திட்டிவிட்டுப்போனார் மாமா. செய்திகளை என்னிடம் கொடுக்கும்போது செய்திகளுக்கான படங்களையும் செய்தியின் தலைப்பை பற்றியும் விளக்கவுரையாற்றுவார் அதற்கு அவருக்கு நேரம் வேண்டும். இனிமேல் நீ நேராக என் வீட்டுக்கு வந்து விளக்கவுரையை கேட்டு விட்டு செய்திகளை எடுத்துப்போ என்றார் மாமா. அதே மாதிரி அடுத்தமுறை மாமா வீட்டுக்கு போனேன். செய்திகளை காட்டினார்… விளக்கவுரையாற்றினார்… ஆனால், செய்திகளை கொடுக்கவில்லை. காலையில் வந்து எடுத்துக்கொள்ளச்சொன்னார். காலையில் போனேன் மறுப்படியும் அதே விளக்கவுரையாற்றினார்… ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கும். எனக்கு ஐயோ… என்றாகிப்போனது.

சில நாள் இரவு போனால் அப்போதுதான் எழுத தொடங்கியிருப்பார். காலையில் வா என்று அனுப்பிவிடுவார்… அல்லது எழுதப்போகும் செய்திகளுக்கு விளக்கவுரையாற்றுவார்.

போகப்போக மாமா கொடுக்கும் செய்திகள் குறையத் தொடங்கியது. வெறும் இரண்டு செய்திகள்தான் கொடுப்பார். “இந்த இரண்டு செய்தியை கொடுக்கவா உன்னை வர சொன்னார்” என்று ஆசிரியர் சலித்துக்கொண்டார். ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு போய்வர ஆசிரியர்தான் பணம் தருவார். அவருக்கு பணம் விரையமாகுதே என்கிற கடுப்பு. கொஞ்ச நாளில் வாரம் இரண்டு முறை வரச்சொன்னார் மாமா. ஆனால், செய்திகளை குறைவாகத்தான் கொடுத்தார். ஆசிரியர் செம்ம கடுப்பாகிப்போனார். மாமாவுக்கும் ஆசிரியருக்கும் மனவருத்தம் மெதுவாக வரத்தொடங்கியது. ஆசிரியருக்கு கொஞ்சம் வசதி வந்ததும் புதிய ஆள்களை வேலைக்கு எடுத்தார். ஆனால், சம்பளத்தை சொற்பமாகத்தான் கொடுத்தார். மாமாவுக்குச் சம்பளம் என்று ஒன்றை கொடுத்ததேயில்லை. கொஞ்ச நாளில் செய்திகளை எடுக்கப்போகும் வேலை நின்றுபோனது. நானும் இனி எவனுக்காகவும் காத்திருக்கப்போவதில்லை என்று திமிர் பிடித்து திரிய தொடங்கிவிட்டேன்.

இப்போதும் சொன்ன நேரத்துக்குப் போவதில்லை நான். அதனாலேயே நண்பர்களும் மனைவியும் என்னை கடிந்துகொள்வதுண்டு; சகித்துக்கொள்வதும் உண்டு. அதே வேளை என்னை கடிந்துகொள்ளும் இதே மனைவிக்காகவும் நண்பர்களுக்காகவும் இப்போது பல மணிநேரம் காத்திருக்க நேரும்போது, நான் காத்திருக்கும் இடத்தில் பெரிய மரமொன்று முளைக்கும். அதன் அருகில் பலகையினாலான ஒரு அடைக்கப்பட்ட தேநீர் கடை முளைக்கும். வானம் இருண்டுபோகும். தேநீர் கடைகுள்ளிருந்து வெளிவரும். மெல்லிய வெளிச்சம் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்கும்.

“டேய்… நண்பா… என்னை ஞாபகம் இருக்கா…?”

“இன்னும் காத்திருக்கிறேன்…. ஏதாவது நிகழும் என்று” என்பேன் நான்.

1 comment for “இல்லாத திசைகள் 3 – காத்திருத்தல்

  1. February 14, 2015 at 9:35 am

    நல்ல நினைவுப்பதிவு. எனக்கு நான்வாழ்ந்த ஊரின் நினைவெழுந்தது. வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...