பன்முகநோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு

இலக்கியச்சூழல் ஓர் அறிமுகம்

BruceZahor_WomensWritingGildஎழுத்தாளர்களில் ஆண் பெண் என்ற பிரிவினை அர்த்தமற்றது என்றாலும்   தமிழ் இலக்கியச் சூழலும், தமிழ்க்குடும்பச் சூழலும் ஆண் பெண் என்ற பேதத்தை உரமிட்டு வளர்த்து வந்திருக்கின்றன. இதன் நீட்சியைத் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் எழுத்தாளன் சுயவிருப்பின் பேரில் உருவாகிறான் . சில சமயங்களில் சமூகச்சூழலில் அவன் கண்ட முரண்பாடு அவனை எழுத்தாளனாக உருவாக்கும் / பிறப்பிக்கும்! இந்நிலை பெண்களுக்கும் பொருந்துவதே! ஆயின் தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை பெண்கள் எழுத்துத்துறையில் ஈடுபடுவதற்கு உரிய வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டும், தடுக்கப்பட்டும் வந்துள்ளன.

விடுதலைக்குப் பிறகு இந்நிலை சிறிதளவே மாறினாலும் தமிழ் இலக்கியச் சூழல் இன்னும் ஆணாதிக்கம் மிக்கதாகவே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் விளங்குகிறது.மலேசியத் தமிழ் எழுத்துலகைப் பொறுத்தவரை மூத்த தலைமுறைப் பெண் எழுத்தாளர்கள் மத்தியில் ஆணாதிக்கத்துக்கு எதிரான போர்க்குரல் ஒலித்தவண்ணம் இருக்கிறது ‘அநங்கம்’ என்னும் சிற்றிதழில் “ஆணாதிக்க இலக்கிய உலகில் குதர்க்கங்களும் குரூரங்களும்” என்னும் தலைப்பில் தன் உள்ளக்குமுறலை வெளிப்படுத்துகிறார் (அநங்கம், பிப்ரவரி 2006) க.பாக்கியம் முத்து. உங்கள் குரல் என்னும் சிற்றிதழிலும் ந.மகேசுவரி, பாவை ஆகியோரும் ஆணாதிக்க மனோபாவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருந்தனர். அதன் விளைவாக மலேசியத் தமிழ் இலக்கியத்திற்குப் பெண் படைப்பாளிகளின் பங்களிப்பைப் பதிவுசெய்யும் வண்ணம் 2011இல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆணாதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய க.பாக்கியம்முத்து கூடப் பெண் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்பதை அக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் கண்கூடாகக் கண்டிருப்பர். எனவே இலக்கியம் என்னும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு (tug-of- war ) ஆண்கள், பெண்கள் என்னும் இரு அணிகளில் மூத்த தலைமுறையினர் சிலர் மோதிக்கொண்டும், பின்னர் இணைந்துகொண்டு சில பல காரியங்களைச் சுயநலத்துடன் சாதித்துக்கொண்டும் அக்கப்போர் நடத்துவது வேடிக்கைதான்! இச்சூழலில் இளந்தலைமுறையினர் சிக்கவில்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தியே! இதற்குரிய காரணங்களாக இக்கட்டுரையாளருக்குத் தோன்றுவன கீழ்வருமாறு:

  1. மூத்த தலை முறையினர் பலரிடம் காணப்படாத நவீன இலக்கியச் சிந்தனை.
  2. பரந்துபட்ட வாசிப்பு அனுபவம்.
  3. மா.சண்முகசிவா போன்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் சரியான வழிகாட்டல்.
  4. இணையத்தின் மூலம் விண்ணில் உலா வரும் மின் தமிழ்ப் படைப்புக்கள் – அவற்றின் காத்திரம் போன்றவற்றை உள்வாங்கித் தம்மை (update ) மெருகு ஏற்றிக்கொள்ளுதல்.

இதனால் மூத்த தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைக் குறை கூறுவது இக்கட்டுரையாளரின் நோக்கமன்று. மூத்த எழுத்தாளர்கள் (பெண்கள்) எல்லாருமே நிறைய வாசிக்கிறார்கள் என்றோ; வாசிக்க வேண்டுமென்றோ நாம் எதிர்பார்க்கமுடியாது. முதுமை, உடல்நிலை, மனநிலை, ஆர்வமின்மை போன்ற தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆயினும் எத்தனை பேர் இத்தடைகளைக் கடந்து நவீன இலக்கியப் போக்குகள் குறித்தும், பிற நாடுகளின் (தமிழ்) இலக்கியப் போக்குகள் பற்றியும் அறிவர்? என்பது கேள்விக்குரியதே! எனவே தலைமுறை இடைவெளி என்பது நம் அன்றாட வாழ்வில் மட்டும் அமையவில்லை; தமிழ் எழுத்துலக வாழ்விலும் தலைமுறை இடைவெளியைக் காண்கிறோம். ஆயினும் மலேசியத் தமிழ் இலக்கியம் புதியதொரு தளத்தில் இயங்க இளந்தலைமுறை எழுத்தாளர்களான ம.நவீன், கே.பாலமுருகன், யுவராஜன், சந்துரு, பூங்குழலி, தோழி, வாணி ஜெயம்,மங்களகௌரி போன்றோர் நம்பிக்கையூட்டும் படைப்புக்களை எழுதிவருகின்றனர்.

மலேசியப் பெண் படைப்பாளிகள் என 61 பேரை அடையாளம் காட்டியிருக்கிறார் பாக்கியம் முத்து. (பாக்கியம் முத்து 2013). 37 சிறுகதைத் தொகுப்புகள் 2010ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்டுள்ளன. ஆயின் 89 தொடர்கதைகள் பெண் படைப்பாளிகளால் வெளியிடப்பட்டுள்ளன. நான்கு தொடர்கதை எழுதிய பெண் படைப்பாளிகளும் உள்ளனர். தொடர்கதைகளின் எண்ணிக்கை சிறுகதைத் தொகுப்புக்களைக் காட்டிலும் மிகுதியாக இருப்பதை நோக்கப் பெண் படைப்பாளிகள் நெடுங்கதை எழுதுவதில் அதிக நாட்டம் காட்டியுள்ளனர் என்பது புலனாகிறது. பெண்படைப்பாளிகள் நூல்களாக வெளியிட்ட நாவல்களையும் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார் பாக்கியம்முத்து. அப்பட்டியலில் சிங்கப்பூர் எழுத்தாளராகிய ரத்னாவதிசுப்பிரமணியம் எழுதிய ‘மேற்கே உதிக்கும் சூரியன்’ என்னும் நாவலையும் இணைத்துள்ளார். இது தவறான தகவல். இத்தவற்றினை யாரும் அவருக்குச் சுட்டிக்காட்டியதாகத் தெரியவில்லை. 1963 முதல் 2011 வரை வெளிவந்த நாவல் / குறுநாவல்களின் எண்ணிக்கை 20 மட்டுமே. பெண் படைப்பாளிகளின் கட்டுரை நூல்கள் 14.

தொடர்கதைகளை நூல்களாக வெளியிடப் பெண் படைப்பாளிகள் தயங்குகின்றனர். இதற்குக் காரணம் அவற்றை நூல்களாக்குவதற்குத் தேவைப்படும் நிதி வசதிகள் இல்லாததே ஆகும். இனி நூல்களாக வெளிவந்த நாவல்களைப் பற்றிக் கண்ணோட்டமிடுவதற்கு முன் ஏன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.

ஆய்வின் நோக்கம்

முன்பு குறிப்பிட்டது போல் ஆணாதிக்கச் சிந்தனை கொண்ட சை. பீர் முகமது, ரெ.கார்த்திகேசு போன்றோர் பெண் எழுத்தாளர்கள் பற்றி மிகத் தாழ்வான எண்ணம் கொண்டிருப்பதும், ”பெண்கள் அடுப்பங்கரைக்குத் தான் லாயக்கு (பொருத்தமானவர்கள்); அவர்களுக்குக் கதை எழுதவெல்லாம் வராது” என்பன போன்ற சொற்களை உதிர்ப்பதும், தமிழ் நாட்டு எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு மலேசியப் பெண் எழுத்தாளர்களைக் குறைத்து மதிப்பிடுவதும் உண்மையில் மலேசியப் பெண் எழுத்தாளர்கள் இக்குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்களா என்னும் வினாவை என்னுள் எழுப்பியது. ஆகவே இவ்வினாவுக்கு விடை காணுமுகமாகப் பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களை மறுவாசிப்புக்கு உட்படுத்திப் பன்முக நோக்கில் பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை எவ்வாறு உருவாக்கியுள்ளனர் என்பதனை ஆழமாகக் காணமுயல்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

வரலாற்று நோக்கில் வனிதையர் வண்ணம்

திருமதி.சு.கமலா என்பவர் மலேசிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குறுநாவலை எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என்னும் பெருமைக்குரியவர். மலேசியாவின் வரலாற்றுக் கருவூலம் என்று சிறப்பித்துக் கூறத்தக்க வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மலாக்கா மாநிலம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் தன்னகத்தே கொண்டது மலாக்கா. இம்மலாக்காவின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது. தீ மலர் என்னும் குறுநாவல். வரலாற்று நாவலை எழுதுவதற்கு இரண்டு கூறுகள் தேவை. வரலாற்று உணமைகளிலும், வரலாற்று உணர்வுகளிலும் ஈடுபாடும், அவற்றைப் பற்றிய அறிவும் தேவை. மேலும் தனிப்பட்டவரது வாழ்வில் முக்கியத்துவம் பற்றிய ஆர்வமும் அறிவும் தேவை என்பர் பிரான்ஸிஸ் ஸ்டாட்டர்டு என்னும் மேனாட்டறிஞர். அவர் கூறியதைப் போல சு.கமலாவின் குன்றாத ஆர்வமே இக்குறுநாவலைப் படைக்க அவரைத் தூண்டியது எனலாம். மற்றொரு வரலாற்று நாவலராசிரியரான ப.சந்திரகாந்தத்தைப் (ஆண்) போல அனைத்து வரலாற்று நிகழ்ச்சிளையும் கதைக்கருவாகக் கொள்ளாது, துன்பாத்திமா, மஹ்மூட்ஷா ஆகிய இருவருடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளையே கதைக்குக் கருவாக வரையறுத்துக் கொண்டுள்ளார் கமலா. குளத்தில் விட்டெறியப்படும் ஒரு சிறு கல் சிறிய வட்ட அலையிலிருந்து பெரிய வட்ட அலைகளை எழுப்புவது போல மிகச் சுருக்கமான எண்ணிக்கையில் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மூலம் கதையைக் கற்பனை கலந்து விரிவாக்கியுள்ளார் கமலா. இவருடைய கதைத்திறனுக்கும், கதையமைப்பின் வெற்றிக்கும் கற்பனை ஒரு காரணமாகும்.

எதிர்காலச் சந்ததியினருக்கு, மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் வரும் வரலாற்றுச் செய்திகளைக் குறுநாவலில் பதிவு செய்கிறார் கமலா. மலாக்காவுக்கும் இந்திய வணிகர்களுக்கும் இடையே உள்ள வாணிபத்தொடர்பு பற்றிய செய்தி இதற்குத் தக்க சான்றாகும்.

துன்பாத்திமா கதையின் நாயகி. வாசகரின் உள்ளங்கவர் நாயகி. பனிமலராகிய அவள் தீமலராகிறாள். கமலாவின் மொழியாற்றலுக்கு என் பாத்திமா பனிமலர் என்றால்அமைச்சர் மகள் பாத்திமா ஒரு தீமலர் என்னும் வரிகள் சான்றாகின்றன. தேன் மலராகிய துன்பாத்திமா தீமலராக்கப்பட்டதை விவரிப்பது இக்குறுநாவல். குறுநாவலின் தூணாக நிற்கும் அவளை மலாக்கா வரலாற்றின் தூணாகவும் கூறுவர்.

இதுவரை தனக்குள்ளாவே மெளனமாக எரிந்து கனன்று

கொண்டிருந்த அந்த மலர் முதன் முதலாகப் பிறரைச் சுட்டது

என வருணிப்பதன் மூலம் தலைப்புப் பொருத்தத்தைச் சுட்டிச் செல்கிறார்.

ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே எனப் பாரதி பாடியது போல ஆண்களுக்கு நிகராக வரலாற்றுப் பின்புலத்தைத் தெரிவுசெய்து குறுநாவலைப் படைத்த முதல் மலேசிய மங்கை சு.கமலா. அவரின் படைப்பாற்றலே சா.ஆ.அன்பானந்தனின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசை வெல்லக் காரணமாயிற்று.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய (தமிழக) வரலாற்றை மையமாகக் கொண்டு ‘நீள்துயில்’ என்னும் வரலாற்றுப் புதினத்தைப் படைத்துள்ளார் திருமதி.கல்யாணி மணியம் தமிழக வரலாற்றை எழுதத் தமிழகத்தில் எத்தனையோ நாவலாசிரியர் இருக்கிறார்கள். மலேசிய மண்ணின் வரலாறுகளை மற்றவர்க்குத் தெரியப்படுத்துவதில் மலேசியரான கல்யாணி மணியம் ஏன் அக்கறை காட்டவில்லை? என்ற வினா பலரின் உள்ளத்தே எழுவது இயல்புதானே! மலேசியர் ஒருவர் மலேசிய வரலாற்றை எழுதுவதற்கும் மற்றவர்கள் எழுதுவதற்கும் வேறுபாடுகள் உண்டல்லவா? ஆகவே மேற்கண்ட வினா நியாயமான வினாவாகத் தோன்றுகிறது,

பெண்ணிய நோக்கில் பெண்களின் படைப்புகள்

பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட படைப்புகளைப் பெண்கள் எழுதுவதற்கும் ஆண்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பெண்கள் அப்பிரச்சனைகளின் வலிகளை உணர்கிறார்கள்; அவ்வுணர்வுகளை எழுத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார்கள். ஆணாதிக்கச் சூழலில் பெண் எழுத்தின் அவசியம் பற்றி மாலன் கூறும் கருத்து இவண் நினையத்தக்கது..

ஆண்களை மையப்படுத்திய கருத்தியல்களே நிறைந்த தமிழ்ச் சமூக அமைப்பில், இலக்கிய வெளியை ஆண்களே அல்லது ஆண்கள் வலியுறுத்தும் விழுமியங்களே அடைத்துக் கொள்ளும் சூழலில் பெண் தனக்கான இடத்தை நிறுவிக்கொள்ளும் இயல்பான ஒரு செயல்தான் பெண் எழுத்து (மாலன்,2011).மாலனின் இக்கூற்று பெண் எழுத்தின் பிற பரிமாணங்களுக்கும் இடந்தருகிறது. பெண் எழுத்தின் மூலம் சரிநிகர் சமானம் என்ற சமத்துவத்தை எட்ட முடியும். ஆணாதிக்கத்துக்கு. எதிராகக் குரல் கொடுப்பது, விமர்சிப்பது, கேள்விகேட்பது போன்ற செயல்பாடுகளும் சாத்தியப்படப் பெண் எழுத்தே கருவியாகிறது, இந்த அடிப்படையில் மலேசியப் பெண் படைப்பாளிகள் குறுநாவல்/ நாவல்களின் மூலம் பெண்ணிய நோக்கை எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதை ஆராய்வதற்கு முன் மலேசியப் பெண் எழுத்தாளர்கள் கலாச்சாரப்பெண்ணியம் (cultural feminism) என்ற பாதையில்தான் செல்கின்றனர் என்பதை மனங்கொள்ள வேண்டும்.

பெண்ணியம் என்பது உலகு தழுவிய கோட்பாடு .அது   பல்வகைத்து. நாடு, மொழி, இனம், கொள்கை, மதம், தத்துவம் போன்றவற்றுக்கு ஏற்பக் கிளைத்து வளர்வதாகும். அவ்வாறு தோன்றியவைதாம் பெண்ணியக் கோட்பாட்டு வகைகள். அமெரிக்கப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம் என்பது போல இந்தியப் பெண்ணியம் என்னும் வகையும் உண்டு. மேலைநாட்டுச் சிந்தனைகளைக் கருத்தில் கொண்டு இந்தியப் பெண்களின் வாழ்வை அணுகுவது பொருத்தமற்றது என்பதால் இந்தியப் பெண்ணியம் என்னும் வகையும் தோன்றியது. சாதியை அடியொற்றித் தலித் பெண்ணியம்;மதத்தைத் தழுவிய இசுலாமியப்பெண்ணியம், கிறித்தவப் பெண்ணியம் என்னும் வகைகளும் உள்ளன. மற்றத்துறை அறிவைப் பெண்ணியல் கருத்தாக்கங்களுடன் பொருத்திப் பார்க்கும்போது மார்க்சியப் பெண்ணியம், உளவியல் பெண்ணியம், சூழலியல் பெண்ணியம் என்பது போலப் பண்பாட்டுப் பெண்ணியமும் உண்டு.

பெண்கல்வி, பெண்ணுரிமை போன்ற பல விஷயங்கள் பெண்ணியச் சிந்தனைக்குள் அடங்கிவிடும். எனவே மலேசிய மங்கையர்களின் படைப்புக்களில் பெண்ணியச்சிந்தனைகள் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை ஆராயும் போது அவர்களின் பெண்ணிய நோக்கினைத் தெரிந்துகொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் பெண்ணியம் என்ற சொல்லோ அல்லது அத்தகையதொரு கோட்பாடோ அவர்களுக்கு அக்குறுநாவலை / நாவலை உருவாக்கும்போது அல்லது எழுதும்போது தெரியாமல் இருந்திருக்கவேண்டும், அவ்வேளையில் புதுமைப்பெண் , புரட்சிப்பெண், பாரதி கண்ட புதுமைப்பெண் போன்ற சொல்லாட்சிகளையும், அவை உணர்த்தும் கருத்தாக்கங்களையுமே அறிந்திருக்க வேண்டும் எனலாம்.சான்றாக எழுத்தாளர் ஒருவர் பின்நவீனத்துவம் என்ற கோட்பாட்டை எழுதப்போகிறேன் என்று முடிவெடுத்துக்கொண்டு எழுதுவது இல்லை.அவரின் படைப்பில் அத்தகைய சிந்தனை தானாகவே வந்து விழும். அந்த அடிப்படையில் பெண்ணியம் என்ற சொல்லாக்கம் இடம்பெறாவிட்டாலும் அது கூறும் கருத்துக்கள் வேறு வகையில் இடம்பெறுகின்றன. இத்தகைய முடிவுக்கு வருவதற்கு ந.மகேசுவரியின் ‘புதிய வாரிசு’ என்னும் குறும்புதினம் (குறுநாவல்) கருவியாகிறது. வானம்பாடி இதழின் ‘மாதம் ஒரு நாவல்’ திட்டத்தில் வெளிவந்தது புதிய வாரிசு என்னும் படைப்பு. தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே கதையை ஓரளவு ஊகித்துவிட முடிகிறது.

குழந்தைப்பேறு இன்மையைக் காரணமாகக் கொண்டு கணவன் (வசந்தன்) மனைவி (பிரியா) ஆகிய இருவரிடையே கருத்துவேறுபாடு உண்டாகிறது. கணவனே இயலாமைக்குக் காரணம் என்பதால் சோதனைக்குழாய்க் குழந்தை பெற்றுக்கொள்ள அவனே சம்மதிக்கிறான் அவ்வாறு பிறந்த குழந்தையைக் காணும் போது அவனுக்கு வெறுப்பு மிகுதியாகிறது. அவனால் குழந்தையின் உயிருக்கே ஊறு ஏற்படும் என்ற நிலையில் மனைவி தன் தாய்வீட்டிற்குச் சென்று தன் பட்டக்கல்வியைத் தொடர்கிறாள், அவளது புதிய வாரிசைத் தாயின் உதவியோடு வளர்க்கிறாள், ‘புதியவாரிசு’ என்னும் தலைப்பு குழந்தை தான் புதியவாரிசு என்னும் நேர்பொருளையும், கணவனை விட்டுப் பிரிந்து பட்டக்கல்வியைத் தொடரும் பிரியா பெண் குலத்தின் புதிய வாரிசு என மறைபொருளையும் தருகிறது.

இவண் மாலன் பெண்ணெழுத்து செயல்படும் தளங்களை வகைப்படுத்தியுள்ளதை எண்ணிப் பார்க்கலாம்.

  1.  பெண்கள் எழுச்சி கொள்ள அவர்களை நோக்கிப் பேசும் எழுத்துக்கள்
  2. ஆண்களை விமர்சித்து  (சினந்தும்,கேலியாகவும்) பேசும் எழுத்துக்கள்
  3.  இகழாமலும் புகழாமலும் சமத்துவம் கோரிப் பேசும் எழுத்துக்கள்,

எண்பதுகளில் வெளிவந்த இக்குறுநாவல் மாலன் குறிப்பிடும் (மாலன் 2011) மூவகையான பெண் எழுத்தில் முதல் வகைக்கும் மூன்றாம் வகைக்கும் உதாரணமாகக் கூறத்தக்கது. பெண்களை எழுச்சிகொள்ளவைக்கும் பெண் எழுத்து என்ற வகையில் தன்னம்பிக்கையைப் பெண்களிடையே விதைத்து அவர்களைப் பொருளாதாரத் தற்சார்பு உடையவர்களாய் ஆக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளார் ந.மகேசுவரி. ஆற்றொழுக்கும், சரளமும் உள்ள மொழிநடையால் கதை கூறும் நேர்த்தியில் வெற்றி பெற்ற ந.மகேசுவரியின் படைப்புக்களுள் புதியவாரிசு முக்கியமான குறுநாவல் ஆகும். குடும்பச்சூழல், பெண்மன இயல்புகள், மனிதமன உணர்வுகள், நமது பண்பாட்டுச் சிறப்புகள் ஆகியவற்றை எழுத்தில் வடிக்க வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்ட மகேசுவரி பெண் பாத்திரங்களுக்கு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எழுதுபவர் ஆவார்.

பெண்ணியநோக்கு – அடிநாதம் : வாணிஜெயத்தின் ‘அவளுடைய இரவென்று எதுவுமில்லை’ என்னும் புதினத்தை முன்வைத்து

வாணி ஜெயம் தனது இயற்பெயரிலும்,மீராவாணி என்னும் புனைபெயரிலும் எழுதி வருபவர். மலேசியாவின் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளிகளில் ஒருவர். கதை,கவிதை ,கட்டுரை எனப் பல தளங்களில் தீவிரமாக இயங்கி வருபவர் .’தேவதை வாழும் நட்சத்திர மரங்கள்’ என்னும் குறுநாவலை எழுதியுள்ள இவரின் இரண்டாவது புதினம் சிங்கையின் தங்கமீன் வெளியீடாக அச்சாகியுள்ளது. ‘அவளுடைய இரவென்று எதுவுமில்லை ‘ என்னும் புதினம் ஆகும். இப்புதினம் முழுக்கமுழுக்கப் பெண்களின் பிரச்னைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

பிரெஞ்சு நாட்டுப்பெண்ணியக் கோட்பாட்டாளர் ஹெலன் சீக்ஸ் ,

“பெண்தான் வாழ்வு ஆற்றலின் மூலாதாரம்; புதிய பெண் புதிய

மொழியை எழுதப் புறப்பட்டிருக்கிறாள்; “

என்று குறிப்பிட்டுப் பெண் எழுத்து விளைவிக்கப்போகும் மாற்றங்களை விவரிக்கிறார்.பொருளாதார சுதந்திரம் ,கல்வி வளர்ச்சி முதலியன சமூகத்தில் ஏற்படுத்தும் அசைவுகளை விட ஆழமான பண்பாட்டுச்சூழலில் பெண் எழுத்துக்கள் ஏற்படுத்தும் அசைவுகள் மிக முக்கியமானவை ஆகும். இப்போது தலைமுறை தலைமுறையாக மனிதர்களின் மனங்களில் குடிகொண்டிருக்கும் கருத்தாக்கங்கள் கட்டுடைக்கப்பட்டு வெளிவருகின்றன. அந்த அடிப்படையில் ஓர் ஆணும் பெண்ணும் பழகினால் காதல் என்று கதை கட்டும் இந்தச் சமூகத்தில் நட்பாகவும் பழக முடியும் என ஆண் -பெண் நட்புக்குப் புதிய பரிமாணம் தருகிறார் வாணிஜெயம். இப்போக்கு ஓவியா தேவா என்னும் இரு பாத்திரங்களின் வாயிலாகக் காட்டப்பட்டாலும் ஓவியாவின் மனவுறுதி ஆண்பெண் நட்பின் புதிய பார்வையைக் காட்டுகிறது. தேவா கூட அவள் மீது காதல் வயப்படும்போது அவள் நட்பு என்ற வட்டத்தில் உறுதியோடு நிற்பது பெண்களின் மனம் சபலப்படுவதல்ல எனப் புலப்படுத்துகிறது. ”பெண்ணே உன் மறுபெயர் சபலமோ “ என்ற வாக்குக் கூடப் பொய்த்துவிடுகிறது. பொதுவாகப் பெண் காதல் வலையில் சிக்கினாலும்,திருமணபந்தத்தில் கட்டுப்பட்டிருந்தாலும் அவளுடைய இரவு என்று சொல்வதற்கு வாய்ப்பிருக்காது.ஏனெனில் காலங்காலமாகப் பெண் மற்றவர் பொருட்டுத் தானே வாழ்ந்திருக்கிறாள் ?அவளுக்கென அவள் வாழ்திருக்கிறாளா ?ஆகவே பெண்ணுக்கு என்று இரவு எதுவுமே இல்லை என மேலோட்டமாகப் பார்க்கையில் தலைப்பு பொருள் தருகிறது. ஆனால் தனித்து வாழும் பெண்ணாக ஓவியா இருப்பதால் அவளுக்கு என இரவுகள் இருக்கின்றன என அர்த்தப்படுத்திக்கொள்ளும் வகையில் நாவலின் தலைப்பும் பெண்ணிய நோக்கில் அமைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

எந்தத் திக்கில் நோக்கினாலும் பெண்கள் பெரும்பாலும் துன்பங்களாலேயே சூழப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதும் வாணி ஜெயம் பெண்களின் துன்பத்துக்கெல்லாம் காரணம் அவர்கள் பெண்ணாகப் பிறந்ததே எனக் கருதுகிறார். உண்மையில் மலேசியச்சூழலில் – குறிப்பாகத் தமிழ்ச்சமூகச்சூழலில் வாணி ஜெயம் கருதுவது பொருத்தமாக இருப்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுதல், ஆணின் உடற்பசிக்குப் பெண்இரையாதல், பெண்ணிற்குப் பாதுகாப்பின்மை, பெண்ணைப் பெண்ணே கொடுமைப்படுத்துதல் போன்ற குறைபாடுகள் தமிழர்களிடம் மறையும் நாள் எந்நாளோ அந்நாளே பெண்கள் விடுதலை முற்றிலும் மலேசியத்தமிழர்கள் மத்தியில் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்பட முடியும். கல்வி கற்றுப் பொருளாதாரத் தற்சார்பு பெற்றால்தான் பெண்களின் துன்பங்கள் மறைய வாய்ப்பு உண்டு என்பதை மருத்துவராகச் சமூகசேவை செய்யும் டாக்டர் தமயந்தி மூலம் சொல்கிறார் வாணி ஜெயம். பெண்பிறவி எடுத்தது ஓர் ஆணைத் திருமணம் செய்து வாழ்வதற்கே என்னும் மரபுவழிக் கருத்து இவண் தமயந்தி மூலமும் ஓவியா மூலமும் தகர்க்கப்படுகின்றது.மரபுகளைக் கட்டுடைக்கும் பாத்திரங்களான இவர்கள் இருவரும் ஓரளவுக்குப் பின்நவீனத்துவப்பாணியில் இயங்கின்றனர். டாக்டர் தமயந்தி தவிர இந்நாவலில் நாம் சந்திக்கும் பெண்கள் அனைவரும் துன்பத்தில் ஊறிப்போனவர்கள்.

ஆணாதிக்கத்தால்தான் பெண்கள் துன்பப்படுவதாக மட்டும் பெரும்பாலோர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நாவல் பெண்ணுக்குப்பெண்ணே எதிரியாகும் கொடுமையையும் சித்திரிக்கிறது.போதைப்பொருளுக்கு அடிமையாய்ப்போன அப்பா, விதியின் கைப்பாவையான அம்மா ஆகிய இருவருக்கும் பிறந்த ஓவியா சிறுமியி லிருந்து பருவப்பெண்ணான பிறகும் அடிமை வாழ்வுதான் வாழ்கிறாள். ஓவியாவின் தாய் அவளைப் புறக்கணித்துவிட்டுப் போவது போன்ற பிரச்சனைகள் தமிழ்ச்சமூகத்தில் சர்வ சாதாரணமாகக் காணக்கூடியவை ஆகும்.ஆனால் அவளுடைய தாயின் நிலையும் மிகவும் பரிதாபத்திற்குரியதாகவே அமைந்துவிடுகிறது.அவளை மறுமணம் செய்துகொண்டவர் நல்லவராக அமைவது ஆயிரத்தில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்வில் அப்படிப்பட்ட நல்லவர்கள் வாய்ப்பது தமிழ்ச்சூழலில் அபூர்வமே! நல்லவர் கிடைத்தால் பெண்கள் மறுமணம் செய்வதில் தவறு   இல்லை என்பது வாணி ஜெயத்தின் கருத்தாதல் வேண்டும். தான் கண்டு கேட்ட பெண்களின் வாழ்க்கையையே தன் நாவலில் பதிவு செய்துள்ள நாவலாசிரியர் நட்பு என்னும் உணர்வை ஆத்மார்த்தமாக விளக்குகிறார் . “எல்லா உறவுகளிலும் உயர்ந்ததாக நட்பை நான் சொல்ல இவர்களது தனித்த அன்பு பலவற்றைக் கற்றுத்தந்துள்ளது. என்னை முழுமையாக உரசிச்சென்ற இவர்களின் வாழ்க்கையினை முறையாகப் பதிவாக்காவிட்டாலும் அவர்கள் இருவரையும் நண்பர்களாக இதில் உலவவிட்டு மகிழ்ந்துள்ளேன் “ என வாணிஜெயம் கூறியிருப்பது ஆண்பெண் நட்புக்கு அவர் தரும் உன்னத இடத்தைக்காட்டுகிறது. தாய் இருந்தும் தாயன்பு கிடைக்காத ஓவியாவுக்குப் பக்கத்துவீட்டு ரத்னா அக்கா மூலம் தாயன்பு கிடைக்கிறது.

பெண்ணுரிமை பேசும் சரவணன் தேவாவின் வாழ்க்கைப்பாதையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தித் தேவாவின் மனத்தில் மட்டுமின்றி நம் மனத்திலும் தொடக்கத்தில் நல்ல மதிப்பைப் பெற்றுவிடுகிறான்.அதற்குக் காரணம் அவன் பெண்ணுக்குச் சமத்துவம் கொடுப்பவன் என்று பேசுவதே ஆகும்.பெண்ணுரிமை பற்றி சிலாகிக்கும் அவன் பெண்ணை அடிமைப்படுத்திப் பார்ப்பவன் என்பது கோமதியைத் தனது உடற்பசிக்கு ஆளாக்கிக்கொள்வதன் மூலம் வெளிப்படுகிறது. பெண்ணுரிமை பேசுபவன் என்ற போர்வையில் நடமாடும் அவன் ஒவியாவால் மட்டும் வெறுக்கப்படவில்லை.வாசகர்களாலும் வெறுக்கப்படும் தன்மை கொண்டவனே.சமுதாயத்தில் சரவணன் போன்ற பசுத்தோல் போர்த்திய புலிகள் பல பெண்ணுரிமையைக் காரணம் காட்டிச் சந்தர்ப்பவாதிகளாகவும் உலவுவதை வெளிச்சமிட்டுக்காட்டியுள்ளார் வாணிஜெயம்.

பெண் என்பவள் உடலாக மட்டுமே பார்க்கப்படுகிற ஜடமா ? அவளுக்கு மனம் இல்லையா? என்று ஓவியா மூலம் வாணி ஜெயம் கேட்பது ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிராகக் கேட்கப்படும் கேள்விதான். பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் நிலை மாறினால்தான் பாலியல் பலாத்காரங்களும் ,கற்பழிப்புச் சம்பவங்களும் தமிழ்ச் சமூகச்சூழலில் நடைபெறா.தகப்பன் பெயர் தெரியாமல் வளர்ந்து சமூகத்தில் குற்றச்செயல்கள் புரிந்து தாங்கள் வாழ்வை அழித்துக்கொள்ளும் அவலநிலையும் மாறும். கோமதியின் குழந்தை பிறந்த பிறகு அவளுக்குக் கிடைத்த மறுவாழ்வு அவளைப் போன்ற பிற பெண்களுக்கும் கிடைக்கவேண்டும்.

பெண் அன்றாட வாழ்க்கையில் மட்டும் பிர்ச்னைகளை எதிர்கொள்ளவில்லை.எழுத்துலக வாழ்க்கையிலும் அவள் சிக்கல்களை எதிர்கொள்கிறாள் என்பது மாயாவின் வாழ்க்கையின் மூலம் முன்வைக்கப்படுகிறது.சரவணனின் மனைவி பிரியாவின் வழி அவளது இலக்கிய ஆர்வமும், சரவணனின் இலக்கிய ஆர்வமும் வெளிக்காட்டப்படுவதுடன்,தேவா பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை பார்ப்பதும்,அந்த அலுவலகத்திலேயே பானு வேலை பார்ப்பதும் வாணி ஜெயத்திற்கு எழுத்துலக வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பேசுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. அப்படி ஒரு கதைக்களத்தைத் தேர்வு செய்துகொண்டு எழுதுகிறார். மாயா தேசிய மொழியில் எழுதும் படைப்பாளியாகக் காட்டப்பட்டாலும் தமிழ்ப்பெண்தான். பெண் படைப்பாளியான அவருக்குப் பெண்கள் கொடுத்த தொல்லைகள் ஏராளம்.ஆகவே அவர் எழுத்துலக வாழ்விலிருந்து ஒதுங்கிக்கொண்டார் என்பது பெண் பிரச்னைகளை எதிர்கொள்ளவே பிறந்தவள் என்னும் வாணி ஜெயத்தின் கருத்துக்கு வலுவூட்டுகிறது.பெண் எழுத்துக்கு வரும் நெருக்கடிகள்,பெண்களைப் பெண்களே மதியாத நிலை என்பவை நாவலில் இடம்பெறும் உரையாடல்கள் வழி புலப்படுத்தப்படுகின்றன. பானுவின் அண்ணன் அவளது திருமணத்திற்குப் பிறகு அவளுக்குப் புத்தகங்கள் தேவைப்படாது என முடிவெடுப்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான்.

வாணி ஜெயத்தின் இந்த நாவல் பெண்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு அமையாமல் மறைமுகமாக டாக்டர் தமயந்தி போன்றோர் மூலமாக சில தீர்வுகளையும் முன்வைக்கிறது. மாலன் குறிப்பிடும் மூவகை எழுத்தின் வெளிப்பாடாக அமைகிறது இந்த நாவல்.

குடும்பநோக்கில் பெண்படைப்புக்கள்

குடும்பம் சமுதாயத்தின் ஓர் அங்கம் மட்டுமின்றி அதன் அச்சாணியாகவும் ஆணிவேராகவும் திகழ்வது. இக்குடும்ப அமைப்பில் ஏற்படும் பிரச்னைகளைத் தம் கதைக்குக் கருப்பொருளாகக் கொள்வது பெண் படைப்பாளர்களிடம் காணப்படும் பொதுமைப் போக்காகும். பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்பில் இருப்பதால் தங்களோடு தொடர்புடைய, தாங்கள் நன்கறிந்த குடும்பச் சூழலை மையமாகக் கொண்டு கதை எழுதுகின்றனர். ஆணாதிக்கம் மிக்க எழுத்துலகச் சூழலில் முன்னர்க் குறிப்பிட்டபடி ‘பெண்களுக்கு அடுப்பங்கரை மட்டுமே அத்துபடி’ என்று மூத்த தலைமுறைப் பெண் எழுத்தாளர்களைப் பகடி செய்யும் ஆண் எழுத்தாளர்களும் மலேசியச் சூழலில் நிரம்பவே உள்ளனர். ஆயின் குடும்பத்தின் பின்னணியில் படைப்புக்களை உருவாக்கினாலும் அவை சமுதாயப்பிரச்னைகளை எதிரொலிக்கின்றன, ஏனெனில் எழுத்தாளனிடமிருந்து சமுதாய உணர்வைப் பிரித்துப் பார்க்க இயலாதல்லவா?

குடும்பத்தின் பொறுப்புக்களைச் சுமக்கும் பொதிமாடு போல வித்தியா, பொறுப்பின்றித் தான் காதலித்தவளைக் கைப்பிடித்தபின் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோன அண்ணன், தவறானவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய சந்திரா எனப் பல்வேறு பாத்திரங்கள வழியே பல்வேறு குடும்பப்பிரச்னைகளைப் பேசும் நாவல் “பிராப்தம்” . என்பதாகும். 70களில் மகேசுவரியுடன் எழுதத் தொடங்கிய கெஜலெட்சுமியின் படைப்புகளில் ஒன்றான இந்நாவலை அவரது மரணத்திற்குப் அவரது கணவர் வெளியிட்டிருக்கிறார். காரைக்கிழார் புகழ்வது போல உயிரோட்டம் மிக்க நடையால் இறந்தபின்னும் வாழ்கிறார் கெஜலெட்சுமி.

பண்பாட்டு நோக்கில் பாவையின் புதினங்கள்: மரபுகளும் மீறல்களும்

“உதிர்ந்து போகும் உறவுகள்” என்னும் புதினத்தில் வாழ்க்கையென்னும் விருட்சத்தில் வண்ணப் பூக்களாய்ப் பூத்திருக்கும் உறவுகள் வாழ்க்கையை அழகுபடுத்தும் நேர்த்தியும், உறவுப்பூக்களால் மானிட வாழ்க்கை உயிர்பெறும் நேர்த்தியும், நெருடல் மிக்க வாழ்வில் உறவுப்பூக்கள் உதிர்ந்தாலும் அவை மீண்டும் துளிர்க்கும் என்று அவை தரும் நம்பிக்கையும் என உறவின் மேன்மைகளைப் புரியவைக்கிறார் பாவை. உறவுகளின் மேன்மையை உறவுகளற்ற ஒற்றைப்பறவையான புவனேஸ்வர் முலம் உணர்த்தியிருப்பது சிறப்பாக உள்ளது. ஒரு பொருள் தன்னிடம் இல்லாதபோதுதான் அப்பொருளின் மகத்துவம் புரியவரும். ஆகவே புவனேஸ்வர் உறவுகளற்ற நிலையில் அவ்வுறவுகளின் மகத்துவத்தை உணர்த்துவது சாலப்பொருந்தும். இந்தியப் பண்பாட்டுப்பாட்டையில் குடும்பம், உறவுகள் ஆகியவை மிக முக்கியமானவை. கலாசார அடையாளம் என்று சொல்லத் தக்க இவ்விழுமியங்கள் என்றென்றும் உதிர்ந்து போகாதவை என்னும் ஆழமான கருத்தை முன்வைக்கிறார். தன்னைக் கவர்ந்த திரைப்பாடல்களையும், கவிதைகளையும் அத்தியாயத் தொடக்கத்தில் எடுத்தாள்கிறார் பாவை.கதையின் ஊடேயும் மேற்கோள் காட்டி எழுதுகிறார், சாதாரணமான கதை தான் என்றாலும் சொல்லப்படும் பாணியால் கதை சிறக்கிறது. ஆயினும் மலேசியச் சூழலை \ மலேசியப் பின்னணியை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாமோ என்ற நெருடல் வாசகர் உள்ளத்தில் எழாமலிருக்க வாய்ப்பில்லை.

இன்றைய இளைய சமுதாயம் திருமணம் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துக்கள் மரபைக் கட்டுடைப்பதாக உள்ளன. புவனேஸ்வர் உறவுகளைச் சிறையெனவும், முகமூடி எனவும் கருதுகிறான். பெண்கள் என்றால் அவர்கள் ஆண்களை நம்பித்தான் வாழவேண்டும் என்கிற மரபை உடைக்கவேண்டும். பெண்களாலும் தனியாய் வாழமுடியும், ஆண்துணை இல்லாமல் வாழவேண்டும், எனக்கு இந்தக் கல்யாணம் காட்சி எல்லாம் நம்பிக்கை இல்லாத விசயம் எனச் சர்வசாதாரணமாகக் கூறும் ரேவதி பின்நவீனத்துவ பாணியில் மரபுகளைக் கட்டுடைக்கிறாள். மாமா பாத்திரமும் கூடப்பின் நவீனத்துவ பாணியில் தான் திருமணங்கிறது ஆயுள்தண்டனை என மரபு மீறிப் பேசுகிறது. பாவை மரபுநெறி மாறாதவர். அவருடைய பாத்திரங்கள் மரபுமீறிப் பேசுகின்றன. ஏன்? மரபை வலியுறுத்தவே!

“கோடுகள் கோலங்களானால்” என்னும் தலைப்பு ஆர்வத்தூண்டலை ஏற்படுத்தும் தகைமை வாய்ந்தது. ரேணு குடும்ப நலனுக்காகத் தன் நலனைத் துறக்கும் தியாகி, இவள் குடும்பத்தின் மூத்த பெண் இந்திய -குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் மூத்த பிள்ளை ஆணாயினும், பெண்ணாயினும் தியாகத்தின் மொத்த உருவந்தான்! பாவையின் பாத்திரங்கள் பெரும்பான்மையும் தமிழ்ப்பாரம்பரியத்திலும், தமிழ்ப்பண்பாட்டிலும் முழு ஈடுபாடு கொண்டவர்கள், பாவையும் தமிழ்ப் பண்பாட்டிலும் ஊறிப்போன குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர் ஆதலால் பண்பாட்டுச் சீர்குலைவுகள், மரபுடைக்கும் செயல்கள் போன்றவற்றைக் கண்டு உள்ளம் நொந்தும் கசிந்தும் எழுதுகிறார், மேலும் தனது படைப்புக்களின நோக்கம் பற்றிக் குறிப்பிடும் பாவை,

என்னுடைய கதைகளின் நோக்கம்சமுதாயத்தைத் திருத்தவேண்டும் என்பதல்ல; இப்படியெல்லாம் நடக்கின்றதே! இதனை நாம் எப்படி வெல்லப்போகிறோம்?விலக்கப்போகிறோம்? என்பதேஎன்று எழுதுகிறார். இவரது ஆதங்கத்தின் பிரதிபலிப்பு பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுகிறது.

ரேணு அறிவாளியாயும், கொள்கைப்பிடிப்பு உள்ளவளாயும் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தக்காலத்து அவதார புருஷன் ஶ்ரீராமனிலிருந்து இந்தக் காலத்துச் சாதாரணப் பரணீதரன் வரை எல்லா ஆடவர்களுமே பெண்களை அக்கினிப் பிரவேசம் செய்து பார்க்கத்தான் விரும்புகிறார்கள் விருட்சங்கள் வித்திலிருந்து முளைத்தவை தாமே என்று அவள் கூறுவது பெண்ணியக் குரலாகவும், ஆணாதிக்கத்தின் எதிர்ப்புக் குரலாகவும் ஒலிக்கிறது. மாலன் கூறும் மூன்று வகைப்பாடுகளில் முதலிரண்டு தளங்களில் செயல்படும் பெண்ணெழுத்துக்களே தமிழில் மிகுதி. இஃது ஒரு பொதுப்பண்பு என்று சொல்வது தவறாகாது.

மனதுக்குள் மீனாவுக்கும் பல்லவிக்குமாகச் சில கோடுகளைப் போட்டிருந்தாள் ரேணு” என எழுதும் பாவை நாம் போடும் எல்லாக் கோடுகளும் ஓவியங்களாவதில்லையோ?” எனச் சந்தேகத்தோடு கதையை முடிக்கிறார். சமூக அமைப்பு அல்லது சமுதாய அமைப்பு தான் அவருடைய சந்தேகத்துக்குக் காரணம். கோடுகள் கோலங்களாவது மட்டுமின்றி அழகிய ஓவியங்களாவதும் பெண்களின் கையில்தான் உள்ளது எனப் பெண்களின் பொறுப்புணர்வைப் பற்றிய எதிர்பார்ப்புடன் கதையை முடிக்கிறார் என்றும் கொள்ளலாம் .

இக்குறுநாவலின் மொழிநடை பற்றி ரெ.கார்த்திகேசு நூலின் அணிந்துரையில் சிலாகிக்கிறார். சொற்களை வைத்துச் சித்துக்கள் புரிவது போல உருவகநடையும், அடுக்குமொழிகளும், அலங்காரச் சொற்களும் பாவையின் நடைக்கு உறுதணையாகி வாசகர்களை ஈர்க்கின்றன. பாவையின் மொழிநடை மிக நன்றாக அமைந்து மழைச் சாரலில், மழைத் தூறலில் சிலிர்த்து நடக்கும் அனுபவத்தைத் தருகின்றன. பாவையின் பேனா திறமைமிக்க சிற்பியின் உளி போன்று பாத்திரங்களைச் செதுக்கியுள்ளது என்று கூறுவது பாவைக்குக் கிடைத்த பாராட்டுரையாகும்.

“நொண்டிப் பறவை” என்னும் குறுநாவல் முதிர்கன்னியான இந்துவை வைத்துவிட்டு இளையவளுக்குத் திருமணம் செய்யத் தயங்குகிறார் தந்தை. கடைசித் தங்கை காதலனுடன் வீட்டைவிட்டு ஓடிவிடுகிறாள். பூரணியின் திருமணமும் தடைப்படுகிறது. எனவே இந்து மட்டுமின்றிப் பூரணியும் நொண்டிப்பறவையாகி விடுகிறாள்.

மலேசியத் தமிழ்க்குடும்பங்களில் இப்படிப்பட்ட கதைகள் நிறைய நிகழ்வதுண்டு. தமிழ்ச் சமூகத்தில் பெருகிவரும் முதிர்கன்னிகளும் உள்ளனர். திருமணம் என்னும் சிறகின்றிப் பறக்க இயலாமல் நொண்டிப் பறவையாகும் இந்து, பூரணி போன்றோரின் நிலையைப் படைத்துள்ளார். பாவை. இது தமிழ்ச் சமூகப்பிரச்னை. குடும்பப் பிரச்னைகளை எழுதுவதன் வழி தன் சமூக அக்கறையைப் புலப்படுத்தும் பாவை அப்பிரச்னைகள் சமூகப்பிரச்னைகளாகி வருவதையும் காட்டத் தவறவில்லை.

விழுப்பம் நாடும் விழுமிய (values ) நோக்கு

‘மாதம் ஒரு நாவல்’ திட்டத்தின் வழி வானம்பாடி கம்பார் எஸ்.வேலுமதியின் குறுநாவலை வெளியிட்டது. இவரது “இதயங்கள்” என்னும் குறுநாவல் குடும்பத்தைக் களமாகக் கொண்டது. ஆனந்தன் தன் சுயநலத்திற்காக வசந்தியைப் பயன்படுத்திக் கொண்டு அவளுடன் நடத்தும் போலியான குடும்ப வாழ்வின் சிக்கல்களைச் சுற்றிப் படரும் கதையைக் கொண்டது “இதயங்கள்”. தெளிவான நடையில் அன்பின் ஆற்றலைப் புலப்படுத்துகிறார் வேலுமதி. இதயங்களை அன்பாலும், பணிவாலும் கவர்நதுவிட முடியும். வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டு நல்வாழ்வு வாழமுடியும். இழப்புகள் வேதனைகள் போன்றவற்றை மறக்கச் செய்யும் மருந்து அன்பே என அன்புநெறியை வலியுறுத்துகிறார். அன்பின் ஆற்றல் இதயங்களை ஊடுருவும் அல்லவா? அதுபோல உணர்வுகளால் இதயங்ளை ஊடுருவி அவ்வுணர்வுகளை வெளிப்படுத்தி இதயங்கள் என்னும் குறுநாவலைப் படைத்துள்ளார் வேலுமதி. எனவே இவரின் நோக்கு அன்பெனும் விழுமியத்தை வலியுறுத்தும் நோக்கு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது.

சமயநோக்கில் ஒரு குறுநாவல்

மலேசியாவில் வாழும் இஸ்லாமியத் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு கூறை மட்டும் பேசும் குறுநாவல் உம்முசல்மா எழுதிய “ஓடும்நதி” என்பதாகும். இஸ்லாமியத் தமிழர்கள் மார்க்க நெறி பிறழாதவர்கள்; ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வாழ்பவர்கள். இதற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள் கதீஜாவும் காசிமும். இந்த இணையரின் மகன் பாருக் சீனப்பெண்ணைக் காதலிக்கிறான். மெய் லீ என்னும் அப்பெண் முற்றிலும் மாறான வாழ்க்கைப் பாதையில் செல்பவள். அவளைக் காதலித்ததால் பாருக் தன் வாழ்க்கைப்போக்கையும் மாற்றிக்கொண்டானோ என எண்ணும் வகையில் மது அருந்துதல், இரவு விடுதிக்குச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். இறுதியில் மனம் திருந்துவதாகக் காட்டுகிறார் உம்முசல்மா. நதியின் போக்கு எப்போதும் ஒன்று போல இருப்பதில்லை. அதுபோலப் பாருக்கின் வாழ்க்கை அமைகிறது. சீனப் பெண்ணை ஓர் இஸ்லாமிய இளைஞன் காதலிப்பதாகக் காட்டியிருப்பது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் பல்லினக் கலாச்சாரச்சூழலைப் பிரதிபலிப்பதாக அமைகிறது. கதைப் போக்கில் குறைபாடு இருப்பினும் மார்க்க நெறிகளைப் பரப்ப எழுதப்பட்ட குறுநாவலாகவே தோன்றுகிறது.

கலை நோக்கில் ஒரு நாவல்: வேள்வி

கலைத்துறையில் ஓரங்கட்டப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பதை விடப் பெண்கலைஞர் ஒருவரின் சோக வாழ்க்கை பற்றியதே “வேள்வி”. ‘நெஞ்சுக்குள் நெருப்பாக’ எரியும் நிர்மலா பெருமாளின் உணர்வுகள் கற்பனை முலாமின்றி, உண்மைகளாக வெளிப்பட்டுள்ளன. கலைத்துறை ஊழல்கள் பற்றிய நிர்மலாவின் வார்த்தைகள் சத்தியமானவை.நம்பகத்தன்மை வாய்ந்தவை.

தொலைக்காட்சியின் சின்னத்திரையைக் கருப்பொருளாகக் கொண்டது “வேள்வி”. கதை தமிழ்நாடு, மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் நிகழ்கிறது. வெளிநாட்டுச் சினிமாக்காரர்களுக்கு அள்ளிக்கொடுப்பவர்கள் உள்நாட்டுக் கலைஞர்களுக்கு கிள்ளிக் கூடக் கொடுப்பதில்லை.எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் நிர்மலா பெருமாள். பவித்ரா என்னும் பெண்கலைஞரின் தாத்தா நாட்டுப்புறக் கலைகளில் கைதேர்ந்தவர். கலைத்தொடர்பு அவள் இரத்தத்திலேயே ஊறியிருந்தது எனப் பவித்ராவின் பாத்திரப்படைப்பை மிகச் சிறப்பாகவும், யதார்த்தமாகவும் அமைத்துள்ளார் நிர்மலா பெருமாள். பவித்ரா பெயருக்கேற்பக் கலைத்துறை / கலையுலக வேள்வி செய்கிறாள்.

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடுபாப்பா

என அநீதி கண்டு அடர்த்தெழுகிறாள், கலைத்துறை ஊழல்களும், ஒழுங்கீனங்களும் அம்பலப்படுத்தப்படுகின்றன.பவித்ராவின் தாயார் ஆண்துணையின்றிச் செயல்பட வேண்டியுள்ளது என வருந்துகிறார். அவரின் பேச்சில் அந்த வருத்தம் அதிகம் வெளிப்படுகிறது. தமிழ்ப்பெண்கள் பெரும்பாலோரின் துன்பம் இதுவே.

“வேள்வி ” என்னும் நாவலின் மூலமாகத் தனக்கு நெருக்கமானவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் துணிவுடன் பகிர்ந்துகொள்கிறார் நிர்மலா பெருமாள். கலைத்துறையில் நிகழும் கயமைகளை நாவலின் வழி முதலில் வெளிச்சமிட்டுக் காட்டிய பெண் எழுத்தாளர் என்ற பெருமை நிர்மலாவுக்கே உரியது.

உளவியல் நோக்கில் ஒரு புதினம்

“குயில் கூவித் துயில் எழுப்ப” என்னும் தலைப்பில் நிர்மலா பெருமாள் எழுதிய புதினம் வித்தியாசமான அணுகுமுறையில் எழுதப்பட்டது. கையாலாகாத, வன்முறையே வடிவெடுத்த மிருகமான கணவனால், அவனுடைய கொடுமையால் தான் பெற்ற பிள்ளைகளைக் கணவனின் அக்காவிடம் கொடுத்துவிட வேண்டிய கட்டாயம் ஒரு தாய்க்கு ஏற்படுகிறது. வளர்த்த பின் அந்தக் குழந்தைகள் தங்கள் மீது தாய்க்குப் பாசம் இல்லை எனப் பழிசுமத்துகின்றன. கணவனின் வன்முறை, பிள்ளைகளின் பாசமின்மை ஆகியவற்றால் இறுதியில் தாயின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியிலும் அந்தத் தாய் தன் முயற்சிகளில் வெற்றி பெற்றுவிடுகிறாள். இந்த நாவலுக்கு இரண்டு சிறப்புக்கள் உண்டு.

ஒன்று மனோதத்துவ ரீதியில் சற்று வித்தியாசமாக எழுதப்பட்ட நாவல்,

இரண்டு பெண்களை எழுச்சி கொள்ளவைக்கும் படைப்பு.

ஆவணப்படுத்தும் நோக்கில் ஒரு குறுநாவல்

நிர்மலா பெருமாள் தான் பிறந்து வளர்ந்த கேரித்தீவு பற்றிய செய்திளை ஆவணப்படுத்தும் முயற்சியில் உருவானது “ஒரு தீவுக்குள்ளே” என்னும் குறுநாவல். இதனை நிர்மலா பெருமாள் நாவல் என்றாலும் இதனைக் குறுநாவல் என்று அழைப்பதே பொருந்தும். ‘இந்தத் தீவுக்குள்ளே நானும்’ என்னும் முன்னுரையில் தான் பிறந்து வளர்ந்த மண் பற்றிய ஏக்கங்களையும், (Nostalgic experience ) பால்யப் பருவத்து இனிமையும், பாசமும் கலந்த நினைவுகளையும் பதிவுசெய்கிறார். நகரமயமாகி வரும் நவீனச்சூழல் கேரித்தீவினை அடியோடு மாற்றிவிட்டதையும், தோட்டப்புற அடையாளங்கள் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்ட ஏக்கத்தையும் அவர் பதிவு செய்திருப்பது வாசகர்களின் உள்ளத்தையும் தொடுகிறது.

தற்போதைய கால மாற்றத்தால்,மேம்பாடு என்னும் பெயரால் காணாமல் போய்விட்ட – தொலைக்கப்பட்டு விட்ட தோட்டத்துத் தமிழ்ப்பள்ளியின் நினைவு நெஞ்சை நெருடிக் கொண்டேயிருக்கிறது.

என்ற வரிகளின் மூலம் நிர்மலாவின் தமிழநெஞ்சம் பதிவாகியுள்ளதை அறிகிறோம்.

முன்னாளில் கட்டப்பட்ட இரண்டு கோயில்களைத் தவிர்த்து, தமிழ்ப்பள்ளிக் கூடம், பள்ளித்திடல், ஆசிரியர்களின் குடியிருப்பு, ஆயாக்கொட்டகை, அலுவலகம், பெரிய கேணி, சின்னக் கேணிகள், மாட்டுப்பட்டி, தொட்டி, தோட்டம், ரப்பர் மரக்காடுகள், தென்னந்தோப்பு இன்னும் நிறைய நிறைய! எல்லாம் இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டிருப்பினும் இன்றளவும் மனத்தோடு பசுமையாகப் பேசிக் கொண்டும், மண் வாசனையைப் பூசிக்கொண்டும் இருக்கின்ற சூழல்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தொட்டிருக்கிறேன்என எழுதும் நிர்மலாவின் ஏக்க உணர்வுகள் புலம்பெயர் இலக்கியத்தில் ஈழத்தமிழர்களின் ஏக்க உணர்வுகளையே நினைவூட்டுகின்றன.

பஞ்சம் பிழைக்கவும், சாதிக்கட்டுப்பாட்டை மீறிக், காதலித்த குற்றத்திற்காகவும் தமிழ்நாட்டிலிருந்து ஓடி வந்த முருகன், முத்தாயி ஆகிய இருவரையும் தமிழ்நாட்டிலிருந்து கடல்கடந்து வந்த உறவினர்கள் கொலை செய்து விடுவதாய் எழுதியிருப்பது இன்றைய சூழலில் நம்பத்தக்கதாய் இல்லை என்றாலும் ஆங்கிலக் காலனித்துவ ஆட்சியின்போது நடந்திருக்கக்கூடும் என எண்ணவேண்டியுள்ளது. சாதிவெறி தலைவிரித்தாடிய காலகட்டம் அல்லவா அது! முருகன் முத்தாயியின் மகன் சிவபாலன். பொறியியல் பட்டதாரியான இவனைப் பைத்தியமாக்கிவிட்ட சாதி வெறியை எண்ணும்போது தோட்டப்புறத் தமிழர்களின் வாழ்வைச் சாதி என்னும் அரக்கன் நரகமாக்கி விட்டதை நன்கு உணர முடிகிறது.

தமிழர்கள் உழைக்கச் செல்லும் நாடுகளில் எல்லாம் தங்களின் வஞ்சகமில்லா உழைப்பின் மூலம் காடு கொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்க உதவினர் என்னும் செய்தியைப் பலரும் தங்கள் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். அவ்வகையில் நிர்மலா பெருமாள் கேரித்தீவின் வளர்ச்சிக்கும், அதன் வளத்துக்கும் அயராது உழைத்த தமிழர்களின் பங்களிப்பைப் பதிவு செய்துள்ளார். மற்றப் பெண் படைப்பாளிகளிடமிருந்து நிர்மலா பெருமாளைத் தனித்துவம் மிக்க, வித்தியாசமான படைப்பாளியாக்கிக் காட்டுவது அவர் தன் புதினங்களுக்கு எடுத்துக்கொள்ளும் உள்ளடக்கமாகும்,

தமிழர்களில் பலர் கூலி வேலை செய்யும்பொருட்டுக் கடல்கடந்து சென்றாலும் கைவேலைத் திறனறிந்தவர்களாய் இருந்துள்ளனர் என்பதை நிர்மலா பெருமாள் பதிவு செய்துள்ளார், ஜாவானியர்கள், கம்பத்தில் வசிக்கும் மலாய்க்கார்கள், பழங்குடி மக்கள் போன்றோருக்கு அத்தாப்புப் பின்னக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் என்று கூறிப் பெருமை அடைகிறார்.

அறிவியல் நோக்கும் அரிவையர் மனமும்

ஊடங்கங்கள் வழி நன்கறியப்பட்ட எஸ்.பி.பாமா ஓர் எழுத்தாளரும் ஆவார். மலேசிய நண்பனில் தொடராக வந்த இவரது நாவல் தான் “தாயாக வேண்டும்” என்பது. மேனகா தாய்மையடைய ஏங்குபவள். விந்துதானம் பெற்றுச் செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்கிறாள். அண்ணியின் ஆலோசனைப்படி கணவனின் அண்ணனிடமிருந்து விந்தினைப் பெற்றுக் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். எல்லா ஆண்களையும் போல மேனகாவின் கணவனுக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. கணவன் வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல நேரிடுகிறது. குழந்தையைப் பிரிந்து கணவனுடன் செல்கிறாள் மேனகா. முதல் பகுதியில் மேனகாவின் ஏக்கமும், செயற்கைக் கருத்தரிப்பு முறையும் பேசப்படுகின்றன. பிற்பகுதியில் குழந்தையைப் பிரித்து செல்ல இயலாத ஒரு தாயின் தவிப்பு இடம்பெறுகிறது.

பெண்மன உணர்வுகளைப் பெண்களால்தான் துல்லியமாக விவிரிக்க முடியும் என்பதற்கு பாமாவின் உணர்வுபூர்வமான நடை நல்ல சான்று, மேனகாவின் உள்ளத்தை உளவியல் அடிப்படையில் படம்பிடித்துள்ளார். குழந்தையில்லாப் பெண்ணின் ஏக்கவுணர்வு சாதாரணமான கதைக்களமாகி விடலாம் என்பதால் செயற்கை முறைக் கருத்தரிப்பை – அறிவியல் முறையைத் தன் கதைக்கு ஆதாரமாகக் கொள்கிறார்.

தொழில் நோக்கில் பெண்படைப்பாளிகள்

மலேசியப் படைப்புகளில் மிகப் பல ரப்பர்த் தோட்டப் பாட்டாளி மக்களின் வாழ்க்கையையே பெரும்பாலும் பேசுகின்றன. ஒரு சில வேறு பின்னணிகளில் எழுதப்பட்டவை. இவ்வகையில் மல்லிகைத் தோட்டம் வைத்துக் கடுமையாக உழைக்கும் சீரங்கன், அவருடைய மகள் புனிதா ஆகியோரின் வாழ்வைப் பேசுவது மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை என்னும் புதினமாகும். மங்களகௌரி இப்புதினத்தினை எழுதியுள்ளார். இப்படைப்பு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், ஆஸ்ட்ரோ வானவில்லும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் (2007) முதல் பரிசை வென்றது. சிதனா என்னும் புனைபெயரில் எழுதிவரும் மங்களகௌரி வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்வைக் கருப்பொருளாக்கி அவர்களின் பேச்சுமொழியிலேயே நாவலை எழுதியுள்ளது வித்தியாசமான முயற்சி. பேச்சு வழக்கும் கொச்சைச் சொல்லாட்சிகளும் அடித்தட்டு மக்களின் யதார்த்தமான மொழி வழக்கைக் காட்டுகின்றன. மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் குறிப்பாக மூத்த தலைமுறையினர் மொழித்தூய்மையில் அக்கறை காட்டுவர். மங்கள கெளரி போன்ற இளந்தலைமுறையினர் யதார்த்தமான மொழியைக் கையாள்வர்.

மல்லிகையைப் பயிரிடும் தொழில் பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும், மலர் பறிப்பதன் நுணுக்கங்கள் பற்றியும் மங்களகௌரி விவரமாக எழுதுவதிலிருந்து அவர் அத்தொழிற்பின்னணியோடு நேரடித் தொடர்பு உடையவர் என அறியலாம். மல்லிகைப் பூக்களிலிருந்து வாசனை எண்ணெய் தயாரிப்பது பற்றியும், மல்லிகைச் செடிகளைத் தாக்கும் நோய்கள் பற்றியும், பூக்களைக் கொண்டு அழகுபடுத்தும் கலை, நவீன பாணியில் பூ வியாபாரம் செய்யும் உத்திகள் போன்ற பல தொழில்முறைச் செய்திகள் இப்புதினத்தில் கூறப்பட்டுள்ளதும் வித்தியாசமான பார்வையே!

மங்களகௌரி, தனித்து வாழும் ஒரு தாயின் வாழ்க்கைப் போராட்டத்தைப் புனிதாவின் மூலமாக காட்டுகிறார். அடித்தள மக்களில் ஆண்கள் பொறுப்பற்றவர்களாயும், குடிப்பழக்கத்தால் அழிபவர்களாயும் பெரும்பான்மையும் உள்ளனர். ஆனால் மாமா சுப்பையாவும் சிறுவயதில் குடித்துப் பின் திருந்தியவர் அவருடைய மக்கள் இருவரைப் போல ஒரு சிலரே குடிப்பழக்கம் இல்லாமல் ஒழுக்கத்துடன் வாழ்கின்றனர். சிறுவர்கள் எப்படி அடியாட்களாக மாற்றப்படுகிறார்கள், தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கப்ட்டு சீரழிக்கப்படுகிறார்கள் என்பதைச் சபாபதி (புனிதாவின் கணவன்) பொறுப்புடன் நடந்து கொண்டு தன் தாயாருக்கு உதவி செய்த பிள்ளையைச் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பும் நிலைக்கு ஆளாக்குவதன் மூலம் காட்டுகிறார்.

அடித்தட்டு மக்கள் பலரின் ஒழுக்கமற்ற வாழ்க்கை முறையும், பிறர் வாழப் பொறுக்காமல் கேடு செய்யும் தீய உள்ளமும், தானும் வாழாமல் மற்றவர்களையும் வாழவிடாமல் செய்யும் தமிழ் மக்களின் ‘நல் உள்ளமும்’, உரிமைகள் மறுக்கப்பட்டும், பறிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழும் அடித்தள மக்களின் அவலநிலையும் மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுத் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன.

புனிதா, சுப்பையாவும், அவர்தம் மக்களும் நிறம் மாறா மல்லிகைகளாயும், மணமும், மனமும் மாறா மல்லிகைகளாயும் வாசகர்களிடையே வாழ்வது பாத்திரவார்ப்பில் மங்கள கெளரிக்கு வெற்றியைத் தருவதாகும். இப்புதினத்தின் முலம் மங்கள கௌரியின் படைப்பாற்றல் திறன் பளிச்சிடுகிறது. ஆகவேதான் இக்கதையை இயக்குநர் சமுத்திரக்கனி ‘செந்தூரப் பூவே’ என்னும் சின்னத்திரை நாடகமாக்கினார்.

பாக்கியம் முத்து 2011 இல் ஒழுங்கு செய்த மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கிய வாதிகள் கருத்தரங்கில் இக்கட்டுரையாளர் நாவல்கள் பற்றிய கட்டுரையை வாசித்தார். ஆயின் அச்சுருப் பெறுவதற்குள் ‘உள் அரசியல்’ காரணமாக ந.மகேசுவரியின் கட்டுரை இடம்பெற்றுள்ளது. அக்கட்டுரையை வாசித்த பிறகு என்னுள் சில கேள்விகள் எழுந்தன. அக்கேள்விகளை இத்தருணத்தில் முன்வைப்பது இனிவருங்காலங்களில் ஆய்வுக்கட்டுரை எழுதுவோருக்கும், ஆய்வு செய்வோருக்கும் பயனளிக்கும் என இக்கட்டுரையாளர் கருதுகிறார்.

1. தொடர்கதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடுகளை ந.மகேசுவரி அம்மையார் அறியமாட்டாரா?

2. அச்சில் வாராத் தொடர்கதைகளில் துளசி அண்ணாமலையின்  கதையை மட்டும் ஏன் எடுத்திருக்கிறார்? மற்றவர்களின் தொடர்  கதைகளை ஏன் விடுத்தார்? அச்சில் வாராத் தொடர்கதைகளை முழுதுமாக விட்டிருக்கலாமே?

3. ‘நாடு விட்டு நாடு’ என்பது தன்வரலாற்று நூல் (Autobiography) அல்லவா! இது நாவல் அல்லவே! பழுத்த இலக்கிய ஆளுமை எனப் பாக்கியம் முத்து வருணிக்கும் இவருக்குத் தன்வரலாற்று நூலுக்கும் நாவலுக்கும் வேறுபாடுகள் தெரியாதா?

4. மகேசுவரியின் கட்டுரை மட்டுமின்றி 2013இல் வெளிவந்த ‘மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கிய வாதிகள்’ (புனைவிலக்கிய வரலாற்றுப்பதிவுகள்) என்னும் நூலில் இடம்பெற்ற கட்டுரைகள், பாவை, இராஜம் இராஜேந்திரன் ஆகியோருடைய கட்டுரைகளில் ஆய்வு நோக்கம் உண்டே தவிர அவை ஆய்வுக்கட்டுரையாக அமையவில்லை எஞ்சியவையும் கட்டுரைகளே!ஆய்வுக்கட்டுரைகள் அல்ல. மொத்தத்தில் ஆய்வுக் கட்டுரைகளுக்கும் சாதாரணமாக எழுதப்படும் கட்டுரைகளுக்கும் வேறுபாடு உண்டு என்பது தொகுப்பாசிரியருக்கும் கட்டுரையாளர்களுக்கும் தெரியவில்லை.

5. மகேசுவரி அம்மையார் “ஓடும் நதி” என்னும் நூல் கிடைக்காத காரணத்தால் பேராசிரியர் ரெ.கார்த்திகேசுவின் கருத்துக்களை எழுதியுள்ளேன் எனக் கூறுகிறார். அவர் அந்நூலைப் பற்றிய அறிமுகச் செய்திகளைக் கூறுவதோடு நின்றிருக்கலாம். பேராசிரியரின் கருத்துக்களைப் பதிவு செய்யவேண்டியதில்லை. (அவர் நேர்மையாகப் பேராசியரின் பெயரைச் சுட்டியதை உண்மையில் வரவேற்க வேண்டும்) இப்படியே கிருஷ்ணன் மணியத்தின் கருத்துக்களை மற்றோர் இடத்தில் பதிவு செய்கிறார். இவற்றை நோக்க இவர் தன் சொந்தக் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கலாம் எனத் தோன்றியது. புனைவிலக்கிய வரலாற்றுப்பதிவுகள் என்பதால் பேராசிரியர்களின் கருத்தைப் பதிவு செய்தாரோ? பேராசிரியர் கூறினால் அங்கீகாரம் என்று நினைத்தாரோ? சொல்லப்படும் கருத்துக்கு மதிப்பா? சொல்பவருக்கு மதிப்பா? இப்படிப்பட்ட நிலையும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இன்னும் நிலவுகிறதா? என்று அடுக்கடுக்காய் அடிமனத்தில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

முடிவுரை

மலேசியப் பெண் படைப்பாளிகளின் புதினங்கள், குறுநாவல்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் கீழ்க்காணும் உண்மைகள் புலப்படுகின்றன.

  1. பெண்படைப்பாளிகளின் பன்முக நோக்கு.
  2. பெண்மன உணர்வுகள், அவை தரும் வலிகள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்தல்.
  3. பெண்களை எழுச்சி கொள்ளவைக்கும் படைப்புகள் உள்ளன.
  4. குடும்பத்தை நிலைக்களமாகக்கொண்டு நாவலைப் படைப்பது பெண் படைப்பாளிகளின் பொதுப்போக்காக உள்ளது,
  5. பெரும்பாலான ஆண்களைப் பழிப்பதும், குறைகூறுவதும் அவர்களின் போக்காக அமைகிறது. இது பெண் எழுத்தின் வெளிப்பாட்டு வகைகளில் ஒன்றாகும்.
  6. பெண்கள் ஆண்களைப் பழிக்காமலும் இகழாமலும் சமத்துவம் கோரும் படைப்புகளும் உள்ளன.
  7. மலேசியத் தமிழ்ச் சமூக அமைப்பை ஒட்டிப் பிறந்த இப்படைப்புகளைப் பிறநாட்டு குறிப்பாகத் தமிழ்நாட்டு இலக்கியங்களை மனத்தில் கொண்டு மதிப்பிடுவதும், மலேசிய மண்மணம் வெளிப்படும் இக்கதைகளை ஒன்றுமில்லை என ஒதுக்குவதும் பெண்படைப்பாளிகளைக் காயப்படுத்தும் என்பதை உளங்கொள்ள வேண்டும்.
  8. மூத்ததலைமுறைக்கும் இளந்தலைமுறைக்கும் இலக்கியம் படைப்பதிலும் தலைமுறை இடைவெளி காணப்படுகிறது. நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கு, பிற நாட்டு இலக்கியப் பரிச்சயம், பிறமொழி இலக்கியப் பரிச்சயம் ஆகியவை இளையர்களிடம் அமைந்திருப்பது தலைமுறை இடைவெளிக்குக் காரணங்களாகும்.
  9. மூத்த தலைமுறைப் பெண்படைப்பாளிகள் தங்கள் அறிவு, அனுபவத்திறகுத் தகப் படைப்புக்களை உருவாக்கியுள்ளனர்.
  10. மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துப் பயணமும் அவர்கள் எழுதிய சூழலும் சுலபமானவை என்று கூறிவிட முடியாது. கணவன், குடும்பத்தார் எதிர்ப்புகள் எனப் பல தடைகளைக் கடந்து தங்களின் மன வருத்தங்களை வெளிப்படுத்தும் சூழலே மூத்ததலைமுறையினர் எழுதிய காலகட்டத்தில் நிலவியது. கணவனின் வன்முறைக்கு ஆளாகியவர்களும் கூட உள்ளனர். என்னே கணவனின் அறியாமை என்னே ஆணின் அடக்குமுறை! என்னே அவனின் ஆதிக்க உணர்வு! என வருந்தவைக்கும் சூழலில் அவர்கள் எழுதியுள்ள துணிவைப் பாராட்டியே ஆகவேண்டும்.
  11. குடும்பப்பிரச்னைகளை எழுதினாலும் அவை சமூகப்பிரச்னைகளாகவும் உள்ளன.
  12. குடும்பப் பொறுப்புகள் அனைத்துமே பெண்களின் தலையில் சுமத்தப்படுகின்றன. குறிப்பாகப் பெண் பொதிசுமக்கும் மாடு போலப் பொறுப்புகளைச் சுமப்பவள்.
  13. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுதல்.
  14. பெண்களின் வாழ்க்கையே அவலம் மிக்கதாய் உள்ளது.
  15. முதலில் பில்லி சூனியம், கடவுள் நம்பிக்கை ஆகியவை இல்லாதவர்களாய் இருந்து பின் அத்தகு நம்பிக்கைகளுக்கு ஆளாதல்.
  16. குடும்ப வன்முறை மிகுதி, பெண்களின் கற்பைச் சந்தேகித்தல் உள்ளது.
  17. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல்.
  18. பண்பாட்டுக்கவலை உள்ளது.

 துணைநூற்பட்டியல்:

  1. இலக்குமி மீனாட்சி சுந்தரம், இலக்கிய அரும்புகள்,ஜெயபக்தி வெளியீடு, கோலாலும்பூர், முதல் பதிப்பு, 1991.
  2. க.பாக்கியம் (தொகுப்பாசிரியர்) மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண் இலக்கிய வாதிகள், கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் இயக்கம், சுங்கைப்பட்டாணி, முதல் பதிப்பு, 2013.
  3. ம.மதியழகன், மலேசியத் தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம், ப்ரீத் வெளியீடு, காரைக்கால், முதற்பதிப்பு, 1988.
  4. மலேசியத் தமிழ் நாவல் கருத்தரங்க மலர், உமாபதிப்பக வெளியீடு, கோலாலும்பூர், முதல் பதிப்பு, 1992.

1 comment for “பன்முகநோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு

  1. lakshmi manivannan
    March 8, 2015 at 12:06 am

    good

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...