ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

புழுக்கம்

 

வெளிகள் பலதாய்

சமுக வெளிகள் பண்மியமாய் வேண்டும்.

 

வெளிகளை உருவாக்கிட

இருப்பை உணர்த்தும் போதெல்லாம்

முற்ற முழுதாக

முள்வேலிச் சிறை அடைப்புக் கூடாய்

அதிகாரத்தோடு …

 

சிறை முகாம் முழுவதுமாய்

பாசி படர்ந்த இருட்டு

இருட்டு கக்கிய விஷக் காய்ச்சல்.

 

வெளிச்சக் கீற்றை நாடும்

அகவெளியும் புறவெளியும்

அழுத்தப்பட்ட புழுக்கத்தில்

 

உணர்தலில் இருந்து உணர்த்துதலுக்காக

இயல்பிலிருந்து மீவியல்பு

திடீர் முடுக்கமாய்த் திரள்கிறது

 

வெளிச்சக் கீற்றுகளோ

உள்ளீடற்ற வெளியாய் …

உடல்முழுதும் ரணங்கள்

ரத்தக் கரைகளோடு …

 

மறுசுழற்சி செய்யப்படும்

வெளிகள் அவலங்களாய்

திரும்பிப் பார்க்கும் திசையல்லாம்

பினங்களின் ஓலங்கள்.

 

வரலாறு முழுக்க

அதிகாரக் கோர முகங்களின் பண்பாடு.

தனித்துவமாய் நிற்கவும்

தனி வெளியைச் சமைக்கவும்

சிற்பியாய்ப் பிறப்பெடுத்து

காலவெளியில் உலவவும்

முள்வேளி முகாமுக்குள்

காத்துக் கிடக்கிறது

படைப்பின் இரகசியம்.

 

 

 


 

 

இயங்கியல்

 

காரிருள் சூழ்ந்த படலம்

கவிழ்ந்தது குடையாய்.. …

விட்டு விடுதலையாகி

வெளியேற வேண்டும்.

 

வேட்கையின் உச்சத்தில்

வெளிச்சக்கூட்டைப் பிளந்தபோது

நாகப் படம் ஒன்று

பிளவுண்ட தன் நாவை

நீட்டி உள்ளிழுத்து

எதையோ உணர்ந்ததாய்ப் பின்

நஞ்சைப் பீய்ச்சி அடித்தது.

 

குருதியில் கலந்தது நஞ்சு.

குருதி ஓட்டம் முழுவதும்

நீல நிற வண்ணம்…

 

இயக்கம் நின்று போகும் தருணத்தில்

சிறுத்துப் போன நாடித் துடிப்பின்

இறுதிக் கட்டத்தில்

விஷத் தன்மை மாற

மாற்றுப் பாய்ச்சல்.

 

இப்படியாய் …

இடைவிடாப் போராட்டத்தால்

உயிரோட்டம் எம்பி எம்பி

எழுந்தது புதுயுகமாய் …

1 comment for “ச. விஷ்ணுதாசன் கவிதைகள்

  1. Dr. J.shyamala
    March 8, 2015 at 1:42 am

    Mr.vishnudasan’s Lyrics are nice. In first lyric he shared his views about contemporary issue. When I was read this kavidai my heart is painful.adigarathin kora mugam vizvadu eppodu? Vaztthukkal nanbare.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...