‘பிறக்க ஓர் ஊர் பிழைக்க ஓர் ஊர்’ என்ற வசனம் இன்னமும் அதே பிரபலத்துடன் பழக்கத்தில் இருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றுதான். அச்செயல் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பணத்திற்காகத்தான் இப்படி ஊரை விட்டு ஊர் வருகிறார்கள் என சட்டென கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால் மனதினுள்ளே ஒரு சந்தேகம்.
இங்கு வேலைக்கு வந்திருப்பவர்கள், சாக்கடை அள்ளுகிறவர்கள், முடிவெட்டுகிறவர்கள், கட்டுமான பணி செய்பவர்கள், என உழைக்கவும் பிழைக்கவும் வந்த அத்தனை பேரையும் ‘ஊர்க்காரர்கள்’ என் ஒரு பொதுப்பெயரில் அழைப்பதில் நமக்கிருக்கிற பெருமைக்கு அளவேயில்லை.
இப்படி பெருமைப்பட்டுக்கொண்டு இருக்கும் நாம்தான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களை நமது தலைவர்களாகக் கொண்டாடுகிறோம். ஆக, நடிக்க வந்தவர்கள் தலைவர்கள்; பிழைக்க வந்தவர்கள் ஊர்க்காரர்கள்.
பிரபலம் என்ற மாயை போர்வைக்குள் இருக்கும் வரையில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த ஊராக இருந்தாலும் நம்ம வீட்டுப்பிள்ளையாகவே இச்சமூகம் பார்க்கும் என்பதில் இப்போதெல்லாம் எனக்கு சந்தேகம் வருவதில்லை.
என் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூக்கடையை அவ்வப்போது கவனித்து வந்தேன். வீட்டில் இருக்கும் புத்தன் சிலைகளுக்கு பூ மாலை போடலாமென எண்ணமும் அந்நேரம் வந்துப்போனது. யோசனைகளை தொடர்ந்து யோசித்து மட்டுமே பலவற்றை இழந்திருக்கிறேன். தற்சமயம் அப்பழக்கத்தை விட்டிருந்தேன்.
அன்று வேலை சீக்கிரம் முடிந்தது. காரில் காது கிழிய பாடல்களை கேட்டுக்கொண்டே வந்து கொண்டிருந்தேன். காரில் யாருமில்லாத பொழுதுகளில் இப்படி அதிக சத்தத்துடன் பாடலைக் கேட்பது ஒரு வகை மனநிலை. அமைதி மட்டும் நிம்மதி கொடுப்பதில்லை. இப்படி ஆர்ப்பரிக்கும் இசையும் என்னைப் போன்ற சிலருக்கு நிம்மதியையும் அமைதியையும் கொடுக்கும்.
காரில் இறங்கியதும் தெரிந்தது. அந்தக் கடைகாரப்பெண் எனக்கு தெரிந்தவர்தான். நிகழ்ச்சியொன்றில் அறிவிப்பாளராக இருக்கும்போது பார்த்திருக்கிறார். பூக்களை வாங்கியவுடன் வந்திடவில்லை. வழக்கம் போல நலம் முதல் ஊர் விபரம் வரை விசாரித்தேன்.
சட்டென கண் கலங்கினார். விசாரித்தேன். என்னிடம் உதவியொன்றை முன்வைத்தார்.
அவரின் அக்கா கடந்த மாதம் மலேசியாவிற்கு வந்துவிட்டாராம். ஆனால் சந்திக்க இயலவில்லை. ஏஜெண்டுகள் மூலமாகத்தான் அடுத்த நாடுகளுக்கு ஆட்கள் வேலைக்கு வருகிறார். அந்த நாட்டிலும் வருகிற நாட்டிலும் இப்படியான ஏஜெண்டுகள் இல்லாமல் சாத்தியமாகாது. சிலருக்கு கடவுள் போலவும் சிலருக்கு சாத்தான்கள் போலவும் ஏஜெண்டுகள் அமைந்துவிடுகிறார்கள். முறையான அணுகுமுறையும் தகவல்களும் இல்லாமையே சிக்கல்களுக்கு காரணம்.
என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர், தனது அக்காவை அங்கிருக்கும் ஏஜண்ட் இங்கிருக்கும் ஏஜெண்டிடம் விற்றுவிட்டாராம். அவரின் அக்காவும் அவருடன் சில பெண்களும் தனி வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இரண்டு வாய்ப்புகள் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். ஒன்று அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்க வேண்டும். அல்லது அவர்கள் சொல்கின்றவர்களிடம் சில இரவுகளை கழிக்க வேண்டும்.
தமிழகத்தில் தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்ட ஏஜெண்டுடன் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விபரங்களை வெளியில் சொன்னாலும் ஆபத்து. என்ன வழியென்று தெரியாமலேயே அந்த பெண் ரோட்டோர பூக்கடையில் சரம் கட்டிக்கொண்டிருக்கிறார்.
காதும் காதும் வைத்தது போல அந்த அக்காவிற்கு உதவி செய்ய முடியுமா என கேட்டிருந்தார்.
எனக்கு சொல்வதற்கான வாய்ப்பு வழிகள் இல்லை. ஒலிபரப்பு பணியிலிருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து பல பிரமுகர்கள் என் தொலைபேசிக்கு பதில் கொடுப்பதில்லை. பிரபலம் இல்லாதோர்க்கும் பிரபலம் இழந்தோர்க்கும் இவ்வுலகம் செவி கொடுப்பதில்லை. அவர்களை மதிப்பதும் இல்லை.
இப்போது நண்பருடன் சேர்ந்து இணைய வானொலியினை தொடங்கியுள்ளேன். ஆனால் அந்த பூக்கடையும் அந்த அக்காவும் அங்கில்லை. அவர் கொடுத்திருந்த கைபேசி எண்ணும் தொடர்பில் இல்லை.
நயந்தாராவுக்காக அழுகிறோம். விஜய்காக வக்காலத்து வாங்குகிறோம். அவர்களின் பிரபலம் அவர்களை நம்ம வீட்டு உறவுகளாக மாற்றிவிடுகிறது. பிரபலம் இல்லாத எவரையும் கண்டுக்கொள்வதில்லை. குறைந்த பட்சம் அவர்களை மனிதனாக பாவிக்கலாம்.
தயாஜி, இது குறித்த செய்தி அண்மையில் நாளிதழில் வெளிவந்தது. அது இதன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்புண்டு.