குறையொன்றுமில்லை: நூல் அறிமுகம்

DSC04256a-150x150துறவிகள், முனிவர்கள், சன்யாசிகள் போன்ற ஆன்மீக பணியாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அன்னியமானவர்கள் அல்ல. பன்னெடுங்காலமாகவே தமிழ் இலக்கியத்தோடு முனிவர்களும் தவச் சான்றோர்களும் துறவிகளும் நெருங்கிய தொடர்பாளர்களாகவே இருந்துவருவதை தமிழ் இலக்கிய வரலாறு மெய்பிக்கிறது. சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ ஒரு சமண துறவி. பக்தி இலக்கியம் படைத்த சமயக் குறவர்கள் ஆன்மீக வாழ்க்கையை நாடியவர்களே. சைவ சமய தொண்டர்களின் வரலாற்றை பெரிய புராணமாக தொகுத்த சேக்கிழாரும் துறவு நெறி நின்றவரே. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டிணத்தாரும் அருணகிரிநாதரும் துறவு நெறியில் நின்றே இலக்கியச் சேவையும் ஆற்றி உள்ளனர். தமிழ் இலக்கிய சான்றோர்களை துறவிகளாக பார்த்துப் பழகிய சமூக எதிர்ப்பார்ப்பே வள்ளுவரை துறவு கோலத்திலும் ஒளவையை பழுத்த கிழத்துறவியாகவும் நம்மை வடிவமைத்துக் கொள்ள தூண்டின போலும்.

ஆகவே கதை சொல்லுதல் என்னும் இலக்கிய செயல்பாட்டில் முனிவர்களும் துறவிகளும் ஈடுபடுவது நமது மரபுகளோடு தொடர்பு உடைய ஒரு செயல்பாக்குதான். புத்தர் தனது எளிய கதைகளின் வழியே மக்களுக்கு உண்மைகளை போதித்தார். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ராமகிருஷ்ணரும் ரமணரும் சொன்ன வாழ்வியல் தத்துவ குட்டிக் கதைகள் மிகப் பிரபலமானவை. ஒரு சிக்கலான வாழ்க்கை தத்துவத்தை சாமானியனும் புரிந்து கொள்ள ராமகிருஷ்ணரின் மிக எளிய கதைகள் வழி காட்டின. ஜென் தத்துவ வாமன கதைகளும், ஓஷோவின் பொருள் பொதிந்த கதையாடல்களும் தத்துவ சிந்தனைக்கும் கதை சொல்லலுக்கும் உள்ள தொடர்பை பறைசாற்றுகின்றன. புனைவுகளின் ஊடாக மக்களுக்கு வாழ்வியலை புரிய வைக்க சான்றோர்கள் கதைச் சொல்லிகளாக செயல்பட்டுள்ளனர்.

அவ்வகையில் கூலிம் தியான ஆசிரம அமைப்பு நிர்வாகியாக ஆன்மீகப் பணியாற்றுவதோடு சமூக சேவையும் ஆற்றிவரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் தனது ஆன்மீக செயல்பாடுகளுக்கிடையே இலக்கியவாதியாகவும் செயல்படுவது சமகால தமிழுக்கு கிடைத்த கொடையாகும்.

சுவாமியின் ‘குறையொன்றுமில்லை’ என்னும் இந்நூலின் தலைப்பு எடுத்த எடுப்பிலேயே வாசகர்களின் மனதை சாந்தப்படுத்தும், அமைதிபடுத்தும் மனோவியல் சூட்சமத்தை தனக்குள் வைத்துள்ளது. மூதறிஞர் என்று புகழப்படும் ராஜாஜி அவர்களால் இயற்றப்பெற்ற பிரபல பாடலின் தலைப்பை இந்நூலின் தலைப்பாக வைத்துள்ள சுவாமியின் நோக்கம் நூலை முழுவதும் வாசித்தபின்னர் தெளிவுபடுகிறது.

உலகவாழ்க்கை அல்லல்களும் துன்பங்களும் போராட்டங்களும் நிரைந்தது என்ற குற்றச்சாட்டுகளுடன் தினம் தினம் புழுங்கிவாழும் சாமானிய மனிதனை நோக்கி வாழ்க்கையை முழுமையானதாக, பன்மைதன்மை நிரம்பியதாக பார்க்கப் பழக்கப்படுத்தும் ஒரு முயற்சியே இந்நூலின் உள்ளடக்கமாக அமைந்துள்ளது. நூலுக்கு மதிப்புரை வழங்கியுள்ள விரிவுரைஞர் பா. தமிழ்மாறன் கூறுவது போல “ இந்நூல் மானுடம் மீதான நம்பிக்கையை துளிர்த்து “ எழச் செய்வதை அதன் தார்மீக நோக்கமாக கொண்டுள்ளது.

சுவாமி போன்ற ஒரு துறவிக்கு ‘வாழ்க்கை குறைகள் அற்றது’ என்ற நிறைவும் அமைதியும் வாய்ப்பது இயல்பானது. ஆனால் இல்லறத்திலும் உலக அலைகழிப்புகளிலும் சிக்கி சோர்ந்து வாழும் ஒரு பாமர மனிதனுக்கு வாழ்க்கை குறித்த நம்பிக்கைகையை விதைக்க இந்நூல் முயன்றுள்ளது.

இந்நூலில் மொத்தம் பதினெட்டு புனைவுகளும், கட்டுரைகளும், உள்ளடங்கியுள்ளன. இவை கலவையான படைப்புகளின் தொகுப்பாகும். வாழ்வியல் கட்டுரைகள், தன்முனைப்பு கட்டுரைகள், புனைவு சார்ந்த கட்டுரைகள், கண்டன அறிக்கைகள் போன்ற பல வகை படைப்புகளை சுவாமி இந்நூலில் தொகுத்துள்ளார். இக்கட்டுரைகளில் சில வழக்கமானவை. சில தனித்து நிற்பவை; இலக்கியத்தரம் குன்றாதவை. ஆனால் எல்லாக் கட்டுரைகளும் வாசிக்க எளிமையாகவும் சுவையாகவும் இருப்பது சிறப்பு. சில கட்டுரைகளில் காணப்படும் நகைச்சுவைகள் ரசனைமிக்கவை. பல கட்டுரைகளில் பாரதியையும் வள்ளுவனையும் மேற்கோல் காட்டியுள்ளது, சுவாமியின் தமிழ் மரபு இலக்கிய ஈடுபாட்டை நன்கு காட்டுகின்றன.

சுவாமி இந்நூலை ஒரு கலவையாக அமைத்திருந்தாலும் அதன் உள்ளடக்கம் குறித்து அவர் வைக்கும் கருத்தும் எதிர்ப்பார்பும் மிக முக்கியமானவை. காரணம் சுவாமி தன்னை முழுக்க ஒரு இலக்கியவாதியாக, தேர்ந்த கதைச்சொல்லியாக வடிவமைத்துக் கொள்ளும் தனது ஆர்வத்தை அவரின் ‘போதாமை’ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். அவர் இந்நூலை முழுதும் புனைவுகளாகவே அமைக்க அவா கொண்டுள்ளார். ஆனால் எதிர்ப்பாராவிதமாக சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் புகுந்துவிட்டன என்றே தோன்றுகின்றது.

ஆன்மீகவாதிகள் கதைசொல்லிகளாக செயல்படுவது வழக்கமானது என்றாலும் சுவாமியின் நூலை வாசிக்கும் போது அதன் நோக்கத்தில் முக்கியமான வேறுபாடு ஒன்றை குறிப்பிடவேண்டியது அவசியம். மரபாக ஆன்மீகவாதிகள் கதை சொல்லவது, ஒரு வாழ்வியல் சிக்கலை மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாகவே அமைந்திருக்கும். தத்துவங்கள் அல்லது வேதாந்த ரகசியங்களை எளிமைபடுத்தும் முயற்சியாகவே புனைவுகள் கையாளப்படும். ஆனால் சுவாமிகள் புனைவுகளின் வழியே வாழ்க்கை குறித்த ஒரு நேர்மையான தேடலை முன்வைகிறார். அவர் இந்த தேடலை எந்த சமரசமும் இன்றி தன்னை முன்னிருத்தியே செய்கிறார். இது அவரின் இலக்கிய மனதின் வெளிப்பாடு என்பதே உண்மை.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ம. நவீன், சு. யுவராஜன் போன்றோரை கவர்ந்த இலக்கிய அம்சத்தின் மையம் இங்குதான் நன்கு வெளிப்படுவதாக நினைக்கிறேன். ஒரு ஆன்மீகவாதியாக மக்களுக்கு போதனைகளோ அறிவுரைகளோ வழக்குவதை விட ஒரு இலக்கியவாதியாக சில புதிய தடங்களில் அவர் பயணம் செய்துள்ளார் என்பது ஒரு வாசகனாக என்னை மகிழ்ச்சிபடுத்துகிறது. இதில் உள்ள ‘எளிய நானும் முனியான்டி சாமிகளும்’, ‘எளிய நண்பகளும் ஆன்மீகவாதியும்’ ‘நழுவும் கரங்கள்’ போன்ற முக்கியமான புனைவு சார்ந்த கட்டுரைகள் சுவாமி வாழ்க்கை என்னும் பிரமாண்டத்தை அணுகும் கோணத்தை தெளிவாக காட்டுகின்றன. இந்த அணுகுமுறை ஒரு ஆன்மீகவாதியுனுடையது என்பதைவிட தேர்ந்த இலக்கியவாதியினுடையது என்பதே பொருத்தமாக தோன்றுகிறது. உலகம், குற்றம் என்றும் குறை என்றும் சபிக்கும் வாழ்வுகளை கரிசனத்தோடு அணுகி அதன் அழகியலையும் வெளிப்படுத்தி காட்டும் வல்லமை இலக்கியத்திற்கே உண்டென்பதால் சுவாமியின் நகர்ச்சி போற்றுதற்குறியது. அவர் முழுமையாக புனைவுகளை படைக்க வேண்டும் என்பதே எனது ஆவலும் கூட.

இந்நூலில் ஆங்காங்கே சில குறைகள் தென்படுகிறது என்பதையும் மறைப்பதற்கில்லை. அவை விவாதம் சார்ந்தவை. வடிவம் சார்ந்தவை. உதாரணத்திற்கு, சில புனைவுகளை சிறப்பாக தொடங்கிச் செல்வதும் பிறகு சட்டென்று அதை ஒரு கட்டுரையாக முடித்துக் கொள்வதையும் காணமுடிகிறது. எடுத்துக் காட்டாக “மாயக்கரங்களும் இரகசிய குரல்களும்” எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய புனைவு வடிவம் என்றாலும் அதன் முடிவை சராசரி கட்டுரையாக முடித்துக் கொண்டதில் வருத்தம் ஏற்பட்டது உண்மை.

அதேபோன்று, இதில் உள்ள இரண்டு கண்டன அறிகைகளிலும் சில விடுபடல்கள் உள்ளதாகவே உணர்கிறேன். அஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையத்தின் (வானவில்) போதாமையை சுட்டிக் காட்டும் கட்டுரையில் சுவாமி இறுதிவரை அந்தப் பேராசிரியரின் பெயரை குறிப்பிடவில்லை. சம்பந்தப்பட்டவரின் பெயரை குறிப்பிடாமல் எப்படி கண்டன அறிக்கை விடுவது? இது சற்றே என்னைக் குழப்பியது. அந்த பேராசிரியரின் பெயரை மறைக்கவேண்டிய அவசியம் ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை. காரணம் கண்டனம் என்பது முழுமையாகவும் நேரடியாகவும் இருக்கவேண்டும் என்பது என் நிலைப்பாடு.

அடுத்து, “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” என்னும் கட்டுரையில் ‘கிளிங்’ என்ற சொல்லை மலாய்க்காரர்கள் நம்மை இழிவுபடுத்தும் முகமாக பயன்படுத்துவது குறித்து சுவாமி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பொதுவாக மக்கள் ‘கிளிங்” என்ற சொல்லைக் கேட்டதும் கொள்ளும் உணர்ச்சி வெளிப்பாட்டையே இக்கட்டுரையும் தாங்கி நிற்கிறது. ஆயினும் கிளிங் என்ற சொல் எவ்வகையில் இழிவு சொல்லானது? அது உண்மையிலேயே நம்மை இழிவு படுத்துகிறதா? என்பன குறித்தோ அல்லது வரலாற்றில் அச்சொல்லின் முக்கியத்துவம் குறித்தோ ஏதும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இதே தன்மையோடு பலராலும் பயன்படுத்தப்படும் ‘பறையன்’ என்ற சொல் குறித்த பதிவையும் சுவாமி செய்யாமல் விட்டிருக்கிறார். கிளிங் என்ற நையாண்டியை விட ‘பறையன்’ என்ற சாதிய சாடல் அழுத்தமான வசையாக தமிழர்களாலும் பிற இனத்தவராலும் இன்றும் பயன்படுத்தப்படுவதை மறக்கலாகாது.

இவை போன்ற சிற்சில குறைகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆயினும் சுவாமியின் நூல் ‘குறையொன்றும் இல்லை’ என்று உரைப்பதால் இச்சிறுகுறைகளை பெரிதுபடுத்துவதற்கு இல்லை.

இறுதியாக, கைக்கு அடக்கமான, ஒரு டைரி அளவில் மிக எளிமையான மொழி நடையில் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களையும் கருத்து செறிவுகளையும் அடர்த்தியாக கொண்டிருக்கும் ‘குறையொன்றுமில்லை’ என்னும் இந்நூலை வாங்கி வாசிப்பது வாழ்க்கை குறித்த நமது புரிதலை மேலும் விரிவாக்கும் என்பது உறுதி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...