லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

lee-kuan-yew-3-sizedநவீன சிங்கப்பூரை உருவாக்கியவர் எனக் கருத்து வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அதன் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ வின் (செப் 16, 1923 – மார்ச் 23, 2015) மரணம் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. யாசிர் அராஃபத், நெல்சன் மண்டேலா ஆகியோருக்குப் பிறகு அதிக உளவில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டதாக அவரது இறுதி அஞ்சலி அமைந்தது.

தமிழகத்திலும் கூட ஆங்காங்கு தன்னிச்சையாக மக்கள் ஃப்லெக்ஸ் போர்டுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தீவிரத் தமிழ்த் தேசியவாதியாகிய வைகோ கண்ணீர் ததும்ப அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். “நல் ஆளுகைக்கான” விளம்பர மாதிரியாக (poster boy of good governance) ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’, ‘வால் ஸ்ட்ரீர் ஜர்னல்’ ஆகியவை லீயைப் புகழ்ந்தன.

அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளுடனும், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே போன்ற குறை வளர்ச்சி நாடுகளுடனும் லீயின் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சியை ஒப்பாய்வு செய்தது ஒரு இதழ். சிங்கப்ப்பூரின் வளர்ச்சி அமெரிக்காவுடையதைக் காட்டிலும் விரைவானது, அதிகமானது எனத் தரவுகளுடன் நிறுவியது அந்த இதழ் (கிரகாம் ஆலிசன், ‘தி அட்லான்டிக்’, மார்ச் 30, 2015). கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அதிகரிப்பு வீதம் 2 சதம் என்றால் சிங்கப்பூரின் வீதம் 6 சதம். உலகத் தொழிற் போட்டிக்கான குறியீட்டில் (Economic Forum’s Global Competitiveness Index) இரண்டாவதாகவும், உலக அளவில் வணிகம் செய்வதற்கான சிறந்த நாடுகளின் வரிசையில் (Economist Intelligence Unit’s ranking) முதலாவதாகவும் லீயின் சிங்கப்பூர் இன்று மதிப்பிடப்படுகிறது. எல்லா Credit Rating நிறுவனங்களும் இன்று சிங்கப்பூருக்கு AAA அந்தஸ்து வழங்குகின்றன என்பவற்றை எல்லாம் இதழ்கள் எழுதி மாய்ந்தன.

பொருளதாரத்தில் மட்டுமா இந்த முன்னேற்றம். இல்லை மக்கள் நலம், ஊழலற்ற ஆளுகை, குற்றச் செயல்கள் இன்மை ஆகிய அம்சங்களிலும் இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள நாடு சிங்கப்பூர்.

1965ல் ஆயிரத்திற்கு 27.3 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் (infant-mortality rate) 2003ல் வெறும் 2.2 ஆகக் குறைந்தது. இது அமெரிக்காவைக் காட்டிலும் 3 மடங்கு குறைவு. உலகிலேயே மக்கள் நலத்தில் முதலாவது நாடாக சிங்கப்பூரை புளூம்பெர்க் தரவரிசை (World’s healthiest country) முதன்மைப்படுத்துகிறது. குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ள வகையிலும் லீயின் சிங்கப்பூர் முன்னிற்கிறது. சிங்கப்பூரில் ஒருவர் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியம் அமெரிக்காவைக் காட்டிலும் 24 மடங்கு குறைவு. லீயின் மரணத்தை ஒட்டி இப்படி நிறையத் தரவுகள் விரிவான ஆதாரங்களோடு ஊடகங்களில் மிதந்தன. சுருக்கம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

***

இந்தப் பெருமைகள் அனைத்தும் லீ குவான் யூவையே சாரும் என்பதிலும் யாருக்கும் கருத்து மாறுபாடில்லை. 1950 – 60 களில், இரண்டாம் உலகப் போர் மற்றும் இனக் கலவரங்களால் நசிந்து கிடந்த இந்தப் பிரிட்டிஷ் காலனியை, வெறும் 718.3 சதுர கி.மீ பரப்பளவே உள்ள இந்தச் சின்னத் தீவை, வளர்ச்சியற்றிருந்த ஒரு துறைமுகக் கிராமத்தை, இப்படிப் பல அம்சங்களில் உலகத் தரத்தில் முதலான நகர அரசாகவும் (City state), உலகின் மிகச் சுறுசுறுப்பான துறைமுகங்களில் ஒன்றாகவும் ஆக்கியவர் லீ என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வந்து வழக்குரைஞராகப் பணி புரிந்து கொண்டிருந்த ஹாரி லீ குவான் யூ 1959 ல் தொடங்கிய பி.ஏ.பி (People’s Action Party – PAP) கட்சிதான் இன்று வரை தனிப் பெரும்பான்மையுடன் சிங்கப்பூரை ஆண்டு வருகிறது. சாகும் வரை அதன் தனிபெரும் தலைவராக் இருந்தவர் லீ. 30 ஆண்டு காலம் பிரதமர், 56 ஆண்டு காலம் சகல அதிகாரங்களும் கூடிய அமைச்சர், 60 ஆண்டு காலம் ஒரே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எனத் தொடர்ந்து சிங்கப்பூரைத் தன் சுண்டு விரல் இயக்கத்தில் வைத்திருந்தவர் அவர்.

1963 ல் சரவாக், வட போர்னியோ ஆகிய முன்னாள் பிரிட்டிஷ் காலனிகள் மலேசியத் தீபகற்பத்துடன் இணைந்து கூட்டாட்சி அமைத்த போது நீர், நிலம் முதலான மிக அடிப்படையான இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிங்கப்பூரை மலேசியக் கூட்டாட்சியில் இணைப்பது என்கிற முடிவை லீ எடுக்க வேண்டியதாயிற்று.

எனினும் சிங்கப்பூர் மாநில அரசுக்கும், மலேசிய மத்திய அரசுக்கும் பல பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. 1964ல் பெரும் இனக் கலவரம் ஒன்றும் உருப்பெற்றதை ஒட்டி மலேசிய நாடாளுமன்றம் சிங்கப்பூரை கூட்டமைப்பிலிருந்து விலக்குவது என முடிவெடித்தது. அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடனும் (120 எதிர் 0) இம்முடிவு எடுக்கப்பட்டது. உலக வரலாற்றில் இப்படி கட்டாயமாக விடுதலை அளிக்கப்பட்ட நாடாக சிங்கப்பூர் அமைந்தது. லீ இதைத் தேசிய ஊடகங்களில் அறிவித்த போது அழுதார் எனச் சொல்லப்படுகிறது.

இயற்கை வளங்கள் அற்ற இந்தச் சின்னஞ் சிறு நாட்டை தொழில் உற்பத்தியையும், வணிகத்தையும் மையமாகக் கொண்ட உலகத் தரமான நாடாக ஆக்குவதற்கு லீ தேர்ந்த அணுகல் முறையை விளக்க அரசியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் சொற்களில் முக்கியமானது Meritocracy – அதாவது திறமையை மையப்படுத்திய ஆளுகை. ஒரு கார்பொரேட் நிறுவனம் போல அது ஒவ்வொரு துறையிலும் சாதித்தாக வேண்டும். சாதனை, சாதனை ஒன்றுதான் எல்லாவற்றிலும் அளவு கோல்.

எதுவும் இதற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. மொழி, இனம் எந்தப் பிரச்சனையும் குறுக்கே வந்துவிடக் கூடாது. 5.5 மில்லியன் மக்கள் தொகையில் 75 சதம் பேர் சீனர்களாக இருந்த போதும் சீன மொழிதான் (மான்டரின்) ஆட்சி மொழி என அவர் அறிவிக்கவில்லை. மான்டரின், தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளையும் ஆட்சி மொழியாக்கினார். ஆங்கிலம் பொதுமொழி. சீனம் அல்ல. பள்ளிகளில் தாய் மொழியுடன் ஆங்கிலத்தையும் கற்கும் வாய்ப்பு ஒவ்வொரு மொழியினருக்கும் அளிக்கப்பட்டது. இதற்கென லீ தனது சொந்த நிதியிலிருந்து 12 மில்லியன் டாலரை அளித்தார்.

30 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய லீ அந்தப் பொறுப்பை அவரது மிகவும் நம்பிக்கைக்குரிய கோ சோ டோங் கிடம் ஒப்படைத்தார். எனினும் அமைச்சரவையில் “மூத்த அமைச்சர்” (Senior Minister) எனும் பதவி ஒன்றை உருவாக்கி அதைத் தன் கைவசம் வைத்துக் கொண்டார்.

உரிய நேரம் வந்த போது (2004) மகன் லீ சைன் லூங் கிடம் பிரதமர் பொறுப்பை அளித்தார். மகன் தந்தைக்கு ஆற்றும் உதவியாக லூங் தந்தையை ‘அமைச்சர்களின் ஆசான்” (Minister Mentor) என்கிற பதவியை உருவாக்கி அதில் அமர்த்தினார். அதிகார நுணுக்கங்களில் மகன் முழுமையாகத் தேறியவுடன் 2011 ல் லீ ஆசான் பதவியிலிருந்து இறங்கினார். எனினும் சாகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர்ந்தார்.

உலகத் தரமான பொருளாதார வளர்ச்சி, தூய்மையான நகரம், ஊழலற்ற ஆட்சி, அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற்ற வாழ்க்கை வேறென்ன வேண்டும் குடி மக்களுக்கு என்பதுதான் ஆளுகை குறித்து லீ கொண்டிருந்த கருத்தாக இருந்தது.

லீயின் உடல் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற இல்லத்திலும், பிற பொது மையங்களிலும் 1.25 மில்லியன் மக்கள் தங்களின் முதல் பிரதமர் லீ குவான் யூ விற்கு அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கிறார் லீயின் மூத்த மகனும் இன்றைய பிரதமருமான லீ செய்ன் சூங் (ராய்டெர்ஸ், மார்ச் 29).

***

அமோஸ் யீ ஒரு 17 வயதுச் சிறுவன். அவனைச் சிங்கப்பூர் அரசு இரண்டு நாட்களுக்கு முன் (மார்ச் 29) கைது செய்துள்ளது. அவன் செய்த குற்றம் வேறொன்றும் இல்லை “லீ, ஒரு சகிக்க முடியாத ஆள்” (Lee, A horrible Person) எனச் சொன்னதுதான்.

சென்ற மார்ச் 27 அன்று, “கடைசியாக லீ செத்துத் தொலைந்தார்” (Lee Kuan Yew is finally dead!) என்கிற தலைப்பில் ஒரு காணொளியை யூ ட்யூபில் அமோஸ் லீ பதிவேற்றினான். அடுத்த இரண்டே நாட்களில் 686,000 பேர் அதைக் கண்டனர்.

“லீ எல்லோர் மனத்திலும் அச்சத்தை விதைத்திருந்தார். ஏதாவது சொன்னால் பிரச்சினை வந்து விடுமே என எல்லோரும் அஞ்சினர்… அதன் விளைவுதான் லீக்குக் கிடைத்துள்ள பெருமைகள்…” என அவன் கூறியது ஒரு இதழில் (The Independent) வெளிவந்தது. “ஆனால் நான் இதற்கெல்லாம் பயப்படவில்லை…” எனவும் சொன்னான்.

லீ செய்ன் லூங் அரசு சென்ற 29ம் தேதி அன்று அமோஸைக் கைது செய்தது. யூ ட்யூப் பதிவும் முடக்கப்பட்டது.. கருத்துச் சுதந்திரத்தில் சிங்கப்பூர் அரசின் அணுகல் முறையைப் புரிந்து கொள்ள இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என லீயை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சியில் லீ குவான் யூவைப் பாராட்டுகிறவர்கள் கூட கடைசியில் இப்படிச் சொல்லி முடிப்பது வழக்கம்:

“அரசை எதிர்த்த ஆர்பாட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் முதலான சிவில் உரிமைகளை முடக்கும் அரசு எனவும், அரசியல் எதிரிகள் மீது வழக்குகளைத் (libel suits) தொடரும் அரசு எனவும் லீயின் ஆளுகை விமர்சிக்கப்பட்டது. ஆனால், அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அவசியம் எனவும், இத்தகைய நடவடிக்கைகளுடன் ‘சட்டத்தின் ஆட்சியும்’ சேரும்போதுதான் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும் என்றும் அவர் வாதிட்டார்” – இப்படி முடிகிறது லீ குறித்த விக்கிபீடியா கட்டுரை.

சிங்கப்பூர் குறித்த விக்கி கட்டுரையில், “பத்திரிக்கைச் சுதந்திரம் உலகத்திலேயே மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளதாலும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் அதிக பட்சமாக ஒடுக்கப்படுவதாலும் ஜனநாயக அளவுகோலைப் (Democratic index) பொருத்த மட்டில் ஆகக் கீழான நாடாக அது உள்ளது” என்கிற சொற்களைக் காணலாம்.

கலைஞர்களுக்கும் கூட அங்கு கருத்துரிமை இருந்ததில்லை. தமிழ் பேசும் உலகின் ஆகச் சிறந்த அரங்க இயக்குனரும் கலைஞருமான சிங்கை இளங்கோவன் மற்றும் அவர் மனைவி தேன்மொழி (‘அக்னிக் கூத்து’ அமைப்பின் தலைவர்) அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டது ஒரு எடுத்துக்காட்டு (Laredo Morning Times, Oct 29, 2000).

“எனது எல்லா நடவடிக்கைகளையும் சரி என நான் சொல்லவில்லை. முறையான விசாரணை இல்லாமல் நான் கைதுகளைச் செய்தது உண்மைதான்” – என அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம் லீ-யே ஒரு முறை வாக்குமூலம் அளித்துள்ளார்.

தன்னுடையது “சட்டத்தின் ஆட்சி, முற்றிலும் திறமையை அடிப்படையாகக் கொண்டது” என அவர் சொல்லிக் கொண்டாலும் நடைமுறை அப்படி இல்லை. 30 ஆண்டு காலப் பிரதமர் பதவிக்குப் பின் தனக்கு மிகவும் விசுவாசமான ஒருவரைப் பதவியில் அமர்த்திய போதிலும் அவரை முழுமையாக நம்பாமல் அமைச்சரவைப் பதவி ஒன்றை உருவாக்கி அமர்ந்து கொண்டவர் லீ. இராணுவத்தில் அவர் மகன் மிக வேகமாகப் பதவி உயர்வுகளைப் பெற்றார். அவர் பிரதமராகத் தகுதி பெறுவதற்கு அது தேவையாக இருந்தது. மருமகளின் கட்டுப்பாட்டில் ஒரு “தேசிய முதலீட்டு நிதியம்” செயல்படுகிறது. பல பில்லியன் டாலர்கள் அளவிலான மக்களின் பணம் எந்த வெளிப்படைத் தன்மையும் இன்றி அவரால் கையாளப்படுகிரது.

வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான பல கட்சி ஆட்சி முறை என்று சொல்லிக் கொண்ட போதிலும் கடந்த 60 ஆண்டுகளாக அங்கு லீயின் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது வழக்குகளைத் தொடர்ந்து கடுமையான அபராதம் விதித்து ஓட்டாண்டி ஆக்குவதோடு மீண்டும் அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாதவாறும் செய்யப்பட்டது. கடந்த தேர்தலில் எதிர்க் கட்சிகள் 40 சத வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் நாடாளுமன்றத்தில் 10 சத இடங்களைத்தான் பெற முடிந்தது.

ஊழல்கள் இல்லைதான். ஆனால் ஊழலை ஒழிப்பது என்கிற பெயரில் அரசியல் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அளிக்கப்படும் அபரிமிதமான ஊதியம் கடும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. தவிரவும் இங்கு முதலீடு செய்யப்படும் வெளி நாட்டுப் பணங்கள் பெரும்பாலும் தவறான வழிகளில் சம்பாதிக்கப்பட்டவை என்பதையும் மறந்துவிட இயலாது.

ஒன்றை இங்கு அழுத்தமாகக் குறிப்பிட்டாக வேண்டும். சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா, வங்க தேசம் முதலான நாடுகளிலிருந்து சென்று அங்கு கட்டுமானத் தொழிலிலும், இதர கடுமையானதும் ஆபத்தானதுமான பணிகளிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளிகளின் பங்கு இன்றியமையாதது.

2013ம் ஆண்டுக் கணக்குப்படி அங்கு இன்று 1.3 மில்லியன் புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் 760,000 பேர் பயிற்சியற்ற (unskilled) ஆண் தொழிலாளிகள். 210,000 பேர் வீட்டு வேலைகளுக்காகக் கொண்டுவரப்பட்ட பெண் தொழிலாளிகள் (The Straits Times, Dec 22, 2013).

இவ்வளவு அதிக எண்ணிக்கையில் அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளிகள் பணி செய்து கொண்டிருந்த போதும் லீ இறுதிவரை ‘புலம் பெயர்ந்த தொழிலாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கான’ ஐ.நா உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. அதிக அளவில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளை அனுப்புகிற நாடுகளுடன் இரு நாட்டு ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை.

வேலை அளிக்கும் நிறுவனங்கள் மூலமாகப் பெறும் விசாக்களுடன் (employer sponsored visas) வரும் தொழிலாளிகள் கடும் துன்பங்களுக்கு உள்ளாகின்றனர். முதலாளிகள் அளவற்ற அதிகாரத்துடன் சுரண்டிக் கொழுக்க இது வழி வகுக்கிறது. ஊதியம் வழங்க மறுப்பது, இடைவெளி இன்றி நீண்ட பணி நேரம், ஆபத்து விளைவிக்கக் கூடிய வேலைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துதல், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவச் செலவுகளை ஏற்க மறுத்தல், ஊதிய பாக்கிகளைக் கணக்கிட்டுக் கொடுக்காமலே கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றல் (forced repatriation), வசதிகளற்ற தங்குமிடங்களில் திணித்து அடைத்தல் என இத் தொழிலாளிகள் படும் துயரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சென்ற 2013 டிசம்பர் 8 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளி விபத்தொன்றில் இறக்க நேர்ந்ததை ஒட்டி சுமார் இரண்டு மணி நேரம் 400 தொழிலாளிகள், பெரும்பாலும் தமிழர்கள் மற்றும் வங்க தேசத்தவர், காவலர்களையும், காவல் வாகனங்களையும் தாக்கிச் சேதம் விளைவித்தபோது சிங்கப்பூர் அரசு அதிர்ச்சி அடைந்தது. வரலாறு காணாத இந்த எதிர்ப்பைக் கண்டு துணுக்குற்றது.

தேங்கிக் கிடந்த வேதனை இப்படி வெடித்துச் சிதறியது. பின்னணியாக உள்ள நியாயமான காரணங்களைக் காண மறுத்த சிங்கப்பூர் அரசு அதை ஒரு குடிகாரர்களின் வெறியாட்டமாகக் கொச்சைப் படுத்தியது. சுமார் 22 பேர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. 57 பேர்கள் கட்டாயமாக அவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டனர். இனி அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்ப இயலாது. 200 பேர்களுக்கும் மேற்பட்டோர் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். தொழிலாளிகள் மீது இவ்வளவு கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்ட சிங்கப்பூர் அரசு இந்தத் தொழிலாளிகள் வசிக்கும் லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளில் மது விற்பனையை நிறுத்துவது, தொழிலாளர்களை அழைத்துச் செல்ல தனியார் வாகனங்கள் பயன்படுத்தப் படுவதை நிறுத்துவது முதலான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டது.

கடந்த 30 ஆண்டு சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியில் கூலி குறைக்கப்பட்ட இந்தப் புலம் பெயர் தொழிலாளிகளின் உழைப்பு (subsidised labour) முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் பெருகிக் கொண்டுள்ள நிலையில் புலம் பெயர் தொழிலாளிகளின் வரத்து குறைவதற்கு வாய்ப்பே இல்லை.

***

லீ குவான் யூ வைப் பொருத்த மட்டில் ஜனநாயகம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கான தடைக் கல். இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒரே நேரத்தில் சாத்தியம். சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றின் ஆகக் கறை படிந்த காலமாகிய இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக் காலத்தை (1975- 77), “இந்தியாவில் ஒழுங்கை நிலை நாட்ட இந்திரா செய்த சரியான காரியம்…” எனப் பாராட்டியவர் லீ. “நெருக்கடி நிலையில் குடிமக்களுக்கு உயிர் வாழ்வதற்கு உரிமை இல்லை. அது அரசின் கருணை” என இந்திரா அரசு அன்று சொல்லியது நினைவிருக்கலாம். அதே போல அருகிலுள்ள மியான்மரின் இராணுவ சர்வாதிகார ஆட்சியையும் ஆதரித்து வந்தவர்தான் லீ.

பி.பி.சி. நேர்காணல் ஒன்றில் ஹாங்காங் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) நிறுவனர் மார்டின் லீ சொன்னது போல, “லீ குவான் யூ சொந்த மக்களை என்றும் நம்பியதில்லை. அவரால் அம் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தைத் தரவே இயலாது… அங்கு ஜனநாயகம் இருப்பது போலத் தோன்றும். ஆனால் எப்போதும் அங்கு மக்கள் இழப்புகளை மட்டுமே சந்திக்க இயலும்…” (Quoted by Muhammed Cohen, Forbes India, April 30, 2015). நீதி மன்றங்களும் அவர்களது இழப்புகளை ஈடு செய்ததில்லை.

“நீங்கள் ஜனநாயக உரிமைகளை விட்டுக் கொடுங்கள். நான் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறேன்…” என்பதுதான் லீ குவான் யூ அவரது மக்களிடம் மேற்கொண்ட பேரம் (bargain). மாற்று விருப்பிற்கு இடமில்லாமல் திணிக்கப்பட்ட கட்டாயமான பேரம் அது. மக்கள் அதை விருப்புடன் ஏற்றுக் கொண்டதாகச் சொல்ல இயலாது. சராசரித் தனிநபர் வருமானம் மிக அதிகமாக இருந்தபோதும் மக்கள் அங்கு திருப்தியுடன் வாழ்வதாகச் சொல்ல முடியாது. வெளி நாட்டில் அகதிகளாக வாழும் சிங்கப்பூரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு வேளை மனிதர்கள் வாய், வயிறு, பிறப்புறுப்பு ஆகிய மூன்றுடன் மட்டும் பிறந்திருந்தால், லீ குவான் யூவின் பேரத்தை அவர்கள் விருப்புடன் ஏற்று வாழலாம். ஆனால் மனிதர்கள் அரசியல் மிருகமாயிற்றே.

இது ரொம்ப நாள் தாங்காது. சிறைப்பட்டுள்ள அமோஸ் லீயின் எதிர்க்குரல் இதற்கொரு நிரூபணம்.

15 comments for “லீ குவான் யூ: நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!

  1. Ravi
    April 4, 2015 at 5:00 am

    எப்படித்தான் ஆட்சி செய்தாலும் அதில் குறை கண்டு பிடிப்பதே உலக பத்திரிகைக்காரரின் செயல்.உலகத்திலே சிங்கப்பூருக்கு நிகரான நாடு கிடையாது என்பது மட்டுமல்ல நீங்கள் குறிப்பிட்ட தொழிலாளிகளின் பிரச்சைனையிலும் தவறுண்டு உலகத்தில் எந்த நாட்டில் பிரச்சனை இல்லை அய்ரோப்பியர்கள் யோக்கியர்களா அமெரிக்கர்கள் யோக்கியர்களா?நான் ஒரு நாடோடி ITF சர்வதேச போக்குவரத்து அமைப்பில் உறுப்பினன்.உலகத்தில் முக்கால்வாசி நாடுகழுக்குப்போய் வந்திருக்கின்றேன்.சிங்கப்பூரில் உள்ளமாதிரி உலகத்தில் மக்கள் வாழ்க்கைக்கு உகந்த நாடு வேறெங்கும் இல்லை என்பேன்.எவன் தவறில்லாதவன் சட்டம் இறுக்கமாக இருந்ததால்தான் மக்கள் உலகம்பாராட்டும்படி வாழ்கின்றார்கள்.எதிரிகள் இருக்கத்தான் செய்வார்கள்.புராணக்கதைகளில் வில்லன்கள் வரவில்லையா?இறையவதாரங்களே வில்லன்களை சந்தித்திருக்கின்றது.மனிதனாக வாழ்ந்தவன் சந்திக்க முடியாதா?லீ குவான் இயூ வைக்குறைகூறுபவர்கள், ஆட்சியில் இருந்திருந்தால் சிங்கப்பூரை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பார்களா?இல்லவே இல்லை அவர்கள் தங்கழுக்குப்பணம் சம்பாதித்திருப்பார்கள் அவ்வளவுதான்.

  2. ஸ்ரீவிஜி
    April 6, 2015 at 5:36 pm

    சிங்கப்பூர் ஒரு அருமையான நாடு. மலேசியர்கள் நாங்கள் எங்கு சென்றாலும், நாங்கள் மலேசியாவில் இருந்து வந்துள்ளோம் என்று சொன்னால், பதிலுக்கு அவர்கள், சிங்கப்பூரின் அருகில் உள்ள நாடா? என்று தான் கேட்பார்கள். ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு நாட்டை, தேனீக்கள் வட்டமடிக்கின்ற சோலைவனமாக மாற்றியவர் திரு லீ. சிங்கப்பூரை வர்த்தகமையமாக மாற்றியமைக்க அவர் பட்டபாடு போன்றத்தக்கது. எவ்வளவு உழைத்திருந்தால் அந்நாடு எல்லாவளமும் உள்ள எங்களின் நாட்டையே மிஞ்சியிருக்கும். !? நல்லாட்சி செய்பவரும் கண்டனத்திற்குரியவர்.? கடுமையான உழைப்பு உலகத்தால் பாராட்டப்படவேண்டிய ஒன்று. உலக மக்கள் அனைவரையும் திருப்பிப்பார்க்கவைத்த ஒரு மாபெரும் தலைவர் திரு லீ. மூவினம், யாரையும் ஒடுக்கவில்லை. சிங்கப்பூரியன் என்று சொல்லி தலை நிமிர்கின்றார்கள். எல்லோரும் உயர்ந்துள்ளார்கள். அங்குள்ள மக்கள் யாரும் வேலை வாய்ப்புகளுக்காக உலகமுழுக்க அலைவதில்லை. அடிமட்ட தொழிலாளிகளாக எங்கும் அலைந்ததில்லை. குற்றச்செயல்களும் அதிக அளவில் குறைந்து காணப்படுகிறது. இது போதாதா சார் தனியொரு மனிதனுக்கு.!
    குரல் எழுப்பி, போராட்டம் நடத்தி, உரிமை கேட்டு, பேச்சுரிமை எழுத்துரிமை என இஷ்டம்போல் வாழ்கிற நாட்டு மக்கள் படும் அவஸ்தைகள் போதும்.
    கட்டுக்கோப்பு, ஒழுங்கு என மக்களை வழி நடத்தி நல்லாட்சி செய்த லீ என்று மக்கள் மனதில் வாழ்வார்.

    • Venkatesh.R
      September 6, 2022 at 3:35 am

      அருமை நன்றி!

  3. MGRaju
    April 7, 2015 at 7:28 pm

    படைத்த இறைவனையே ஒருவர் நல்லவன் எனவும், மற்றவர் தீயவன் என்றும் சொல்வதுண்டு. ஆகவே லீ குவான் யூவையும் அவ்வாறு சொல்வதில் தவறில்லை. அவரின் கீழ் பலர் வாழவழி காட்டினார். அதுதான் முக்கியம்.

  4. Latha
    April 10, 2015 at 5:00 pm

    மறைந்த திரு லீ குவான் இயூ குறித்து வல்லினத்தில் அ.மார்க்ஸ் எழுதியிருக்கும் கட்டுரை மிகவும் வருத்தம் தருவதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. பொருளியல் வளர்ச்சி கண்ட நாட்டில் ஜனநாயகம் சாத்தியமல்ல என்பது கட்டுரையாளர் கூற வரும் கருத்து. “லீ குவான் இயூ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிங்கப்பூரை வெற்றிகரமான நாடாக்கியிருக்கிறார், இறுதி மூச்சு வரையில் அவர் சுண்டுவிரலில் இருந்த சிங்கப்பூர், இன்னும் கொஞ்ச காலத்திலேயே சிதைந்து விடும்,” என்பது கட்டுரையின் சாராம்சம்.

    முதலில் மார்க்ஸ் குறிப்பிடும் ‘லிட்டில் இந்தியா கலவரம்’ பற்றிப் பார்ப்போம்.

    லிட்டில் இந்தியா என்பது அவர் குறிப்பிடுவதுபோல் இந்தியத் தொழிலாளிகள் வசிக்கும் இடம் அல்ல. இந்தியப் பொருள்களை விற்கும் கடைகள் அதிகமுள்ள வட்டாரம். இங்கு வார இறுதி நாட்களிலும் பொதுவிடுமுறை நாட்களிலும் இந்தியப் பொருள்கள், உணவுகளை வாங்கவும் நண்பர்களைச் சந்திக்கவும் தெற்காசியத் தொழிலாளர்கள் இங்கு கூடுவார்கள். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் என எல்லா இனத்தவர்களுமே வாழும் ஒரு குடியிருப்புப் பகுதி இது. சிங்கப்பூரில் எந்தக் குடியிருப்புப் பகுதியிலும் ஓர் இனத்தவர் மட்டுமே வாழ்வதில்லை. எல்லா இனத்தவர்களும் கலந்து வாழ்ந்து நல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்பதற்காக இன ‘கோட்டா’ அடிப்படையிலேயே அரசாங்க வீடுகளை மக்கள் வாங்கலாம்.

    சம்பவம் நடந்த அன்று அந்த இடத்துக்கு நான் சென்றிருந்தேன். பின்னர் விசாரணையின் போது சம்பவம் குறித்த காணொளி முழுமையாகக் காட்டப்பட்டது. சில காணொளிகளை யூடிப்பில் இன்னமும் பார்க்கலாம். குடிபோதையில் ஒருவர் ஓடும் வாகனத்தில் ஏறமுயன்று கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. உடனே அங்கு சூழ்ந்தவர்கள் உதவிக்கு வந்த காவல்துறையினரைத் தாக்கினர். ஆம்புலன்ஸைத் தாக்கினர். குடிபோதை முக்கிய காரணம். ஆனால் காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையாக நடந்துகொள்ளவில்லை. எந்தத் தொழிலாளியும் தாக்கப்படவில்லை. இந்தியாவாக இருந்திருந்தால் லத்தியாலேயே அடித்து நொறுக்கியிருப்பார்கள். ஒரு சில தொழிலாளர்களாவது ரத்தம் சிந்தியிருப்பார்கள். இங்கே ரத்தம் சிந்தியவர்கள் காவல், பாதுகாப்பு, அவசர மருத்துவசேவை பணிகளில் இருந்தவர்கள்தான்.

    லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் இந்தியத் தொழிலாளர்களில் ஒரு சிலர் குடித்துவிட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் வாந்தி எடுப்பதும் சலம் கழிப்பதும் பாட்டில்களையும் உணவுகளையும் கண்டபடி தூக்கி எறிவதும் பெண்களை இழிவுபடுத்துவதும் தெருவிலும் பேருந்து நிலையங்களிலும் விழுந்து கிடப்பதும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்த பிரச்சினை. நாட்டின் மற்றப் பகுதிகளிலும் இவர்கள் குடித்துவிட்டு செய்யும் அட்டகாசங்கள் அதிகம். இங்கு வந்து கஷ்டப்பட்டு உழைக்கும் இளம் தொழிலாளர்கள் பெரும் பணத்தை மதுவில் செலவிடுவதைத் திரு மார்க்ஸ் நேரில் வந்து பார்க்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இந்தத் தொழிலாளர்களை நம்பியே லிட்டில் இந்தியாவிலும் இவர்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் ஏராளமான மதுக்கடைகள் திறப்பட்டு வருகின்றன. டாக்ஸ்மார்க் கடைகள்கூட வந்துவிட்டன. முன்பு வந்தவர்களிடம் காணப்பட்ட கட்டொழுங்கும் கட்டுப்பாடும் இப்போது வரும் இளையர்களிடம் காணமுடிவதில்லை.

    சிங்கப்பூரில் பணிபுரியும் எல்லா வெளிநாட்டு ஊழியர்களுமே குடித்து விட்டுத் தொல்லைத் தருபவர்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், அண்மைக் காலமாக இங்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம் குடிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இங்கு கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை மதுபானத்தில் செலவிட்டு, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமங்களை உண்டு பண்ணுகின்றனர்.
    நல்ல வேளையாக 2013 கலவரம் மதுக்கட்டுப்பாடு சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் பொது இடங்களில் குடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

    திரு மார்க்ஸ் குறிப்பிடுவதுபோல் தமிழகத் தொழிலாளர்கள் நியாயமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், அவர்களுக்குள் சொல்லொணாத் துயரங்கள் குமுறுக்கொண்டிருந்தால் இன்று தஞ்சாவூர், புதுகோட்டை மாவடங்களில் லீக்கு அஞ்சலி செய்யமாட்டார்கள். அவருக்கு சிலைவைக்க மாட்டார்கள். பிள்ளைக்கு அவர் பெயரை வைக்க மாட்டார்கள். “லீ குவான் இயூவால்தான் இன்று நாங்கள் நன்றாக இருக்கிறோம்” என்று கொண்டாட மாட்டார்கள். சிங்கப்பூருக்கு வரும் தொழிலாளர்களும் பணிப்பெண்களும் அதிகம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். கலவரத்தைத் தொடர்ந்து திருப்பி அனுப்பட்டவர்கள் பலர் இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

    கலவரத்தைக் கண்டு நாடே அதிர்ச்சியடைந்ததுதான். ஏனென்றால், சாதாரண விஷயங்களுக்கெல்லாம், அடி, வெட்டு, குத்து, கொலை, ஆர்ப்பாட்டம், சாலைமறியல், போராட்டம், கடையெரிப்பு, தீக்குளிப்பு என்பதெல்லாம் இங்கு இல்லை. இதெல்லாம் என்னவென்றே இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது.

    1950, 60களில் இதுபோன்ற போராட்டங்கள் இருந்தன. அன்றைய தொழிற்சங்கப் போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், கம்யூனிஸ்ட் கிளர்ச்சிகள், மதக் கலவரங்களை மூத்த தலைமுறையினர் இன்னும் மறக்கவில்லை. தொழிற்சங்கவாதிகளின் வழக்கறிஞராகத் தொழில்தொடங்கிய லீ, அவர்களுக்காக பல வழக்குகளை வாதாடி அவர்களின் தோழரானார்., பல்வேறு தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஒன்றுபட்ட குரலினால் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் என்பதே தேவையற்றுப் போனது. அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பில் 1965ல் சிங்கப்பூர் இணைந்தது. அதேபோல் கம்யூனிஸ்டுகளின் பிரச்சினைகள் மதக் கலவரங்களும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

    2013 டிசம்பர் கலவரம் குறித்து 40 நாட்களுக்கு மேல் நடத்தப்பட்ட விசாரணையின் அனைத்துவிவரங்களும் இணையத்தில் உள்ளன. விசாரணை எவ்வளவு வெளிப்படையாக நடந்தது, காவல்துறையினர் எத்தனை கடுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் அதில் தெரிந்துகொள்ளலாம்.

    ஊழியர்களுக்கு தங்குமிடம், உணவு, சம்பளம், மருத்துவ வசதி, வேலையிட விபத்து இழப்பீடு போன்ற எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று சிங்கப்பூரின் வேலைச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன. மீறும் முதலாளிகளுக்குக் கடுமையான தண்டனையும் உண்டு. தொழிலாளிகளையும் பணிப்பெண்களையும் இங்கே வேலைக்கு அனுப்ப பெரும் தொகையைக் கமிஷன் வாங்கி அவர்கள் வருமானத்தைக் கொள்ளை அடிப்பது பெரும்பாலும் அந்தந்த நாடுகளிலிருந்து அவர்களை இங்கே அனுப்பும் ஏஜென்டுகள்தான். நிறுவனங்களுக்கு நேரடியாக வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு ஓரளவு நியாயமான ஊதியம் கிடைக்கிறது. இங்கே ஊழியர்கள் மேலே படித்து முன்னேற வாய்ப்பு உண்டு. படித்து உயர்ந்து, நிரந்தரவாசத் தகுதி, குடியுரிமை பெற்று குடும்பத்தோடு குடியேறியிருப்பவர்கள் பலர்.

    இங்கே பணிப்பெண்களுக்கு வாரம் ஒரு முறை கட்டாய விடுப்புக் கொடுக்க வேண்டும் என்பது சட்டமாகவே ஆக்கப்பட்டுள்ளது.

    இங்கே வேலை செய்யும் எந்த ஊழியரும் எந்தவகையில் முதலாளியால் கொடுமைக்குள்ளானாலும் அமைச்சிடம் சென்று புகார் செய்ய முடியும். சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தில் இந்நாட்டின் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த சட்டதிட்டங்கள் அனைத்தையும் விவரமாகப் பார்க்க முடியும். ஆசியான் நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் அதிகளவில் வேலை பார்க்கும் தாய்லாந்து (35%), மலேசியா (35%) ஆகியவற்றுடன் ஒப்பிட 21 விழுக்காட்டினர் வேலை பார்க்கும் சிங்கப்பூரில் அவர்கள் நியாயமாகவே நடத்தப்படுகின்றனர்.

    அ.மார்க்ஸ் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல் பிழைகள்:

    1. 1965ல் சிங்கப்பூரில் நிலப்பரப்பு 581 சதுர கிலோ மீட்டர்தான். நிலப்பற்றாக்குறையைப் போக்க தொடர்ந்து நிலமீட்புப் பணியில் சிங்கப்பூர் ஈடுபட்டு வருகிறது. இதுவும் திரு லீ குவான் இயூ குழுவினரின் தொலைநோக்குப் பார்வையினால் சாத்தியமான வளம். இப்போதைய நிலப்பரப்புதான் 718 சதுர கிலோ மீட்டர்.

    2. லீ குவான் இயூ தனது சகாக்களுடன் இணைந்து மக்கள் செயல் கட்சியைத் தொடங்கியது 1954ல். 1959ல் அவர் தன்னாட்சி பெற்ற சிங்கப்பூரின் முதல் பிரதமராகி விட்டார்.

    3. இனக்கலவரம் காரணமாக மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரித்துவிடப்படவில்லை. அதற்குப் பல காரணங்கள். அரசியல் அதிகாரம் மலாய்க்காரர்கள் கையிலேயே இருக்க வேண்டும் என்ற மலேசியாவின் போக்கை லீ எதிர்த்தது ஒரு முக்கிய காரணம்.

    4. சிங்கப்பூர் தனிநாடானபோது அதன் மக்கள் தொகை 1.8 மில்லியன்தான். 1990ல் 3 மில்லியன். 2000ல் 4 மில்லியன். 5.5 மில்லியன் என்பது இன்றைய மக்கள் தொகை. பள்ளிகளில் ஆங்கில மொழி கற்பித்தல் மொழி. தாய்மொழி இரண்டாம் மொழியாகக் கற்றுத்தரப்படுகிறது. வர்த்தகத்திற்கு ஆங்கிலம், அடையாளம், பண்பாட்டுக்குத் தாய்மொழி என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்தவர் திரு லீ. ஆரம்பகாலத்தில் அவரவர் தாய்மொழிகளை மட்டுமே அறிந்திருந்த சமூகத்தை ஆங்கிலம் படிக்க ஊக்குவித்தார். பின்னர், ஆங்கிலமயமான சமூகத்தைத் தாய்மொழியில் கவனம் செலுத்தத் தூண்டினார். காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப கொள்கைகளையும் கருத்துகளையும் மாற்றி அமைக்க லீ என்றுமே தயங்கியதில்லை.

    5. ஆங்கிலத்தையும் தாய்மொழியையும் கற்பிப்பதிலும் கற்பதிலும் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உறுதுணையாக ‘இரு மொழிக் கல்விக்கான லீ குவான் இயூ நிதியம்’ 2011ல் அமைக்கப்பட்டது. இந்த நிதியத்துக்குத்தான் லீ நன்கொடை கொடுத்துள்ளார்.

    6. அவர் தனக்காக மூத்த அமைச்சர் பதவியை உருவாக்கவில்லை. அவரது அமைச்சரவையிலேயே மூத்த அமைச்சராக மறைந்த எஸ்.ராஜரத்தினம் இருந்துள்ளார். பின்னர் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் மூத்த அமைச்சராக இருந்தார். தொடர்ந்து எஸ்.ஜயக்குமார் மூத்த அமைச்சராக இருந்தார். ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்கள் அமைச்சரவையில் சில காலம் இருந்து இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட பதவி இது.
    திரு லீ நினைத்திருந்தால் இன்னும் பல காலத்துக்குத் தானே பிரதமராக இருந்திருக்கலாம். மக்களின் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு. சொன்னதைச் செய்த கர்மவீரருக்கு இன்று வரையில் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறார்கள் சிங்கப்பூர் மக்கள்.

    இல்லாவிட்டால் எதற்குமே நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், எந்த விஷயத்துக்குமே வரிசை பிடித்துக் காத்திருக்க தேவையின்றி வசதியான வாழ்க்கைக்குப் பழகி விட்ட சிங்கப்பூர் மக்கள், கொளுத்தும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் சிறு முணுமுணுப்புக்கூட இல்லாமல், தூரத்தில் நின்று அவர் நல்லுடலைப் பார்த்து ஒரே ஒரு கணம் தலைவணங்கவும், சில நொடிகளில் கடந்து சென்று விடும் இறுதி ஊர்வல வாகனத்தைப் பார்க்கவும் 10 மணி நேரத்துக்கும் மேலாக, கால்கடுக்கத் தெருவில் காத்திருக்க மாட்டார்கள்.

    தனது தலைமுறைக்குப் பின்னரும் சிங்கப்பூரில் செம்மையான ஆட்சிமுறை நிலவ வேண்டும், தகுதியான அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே லீயின் இலக்காக இருந்தது. அதனால்தான் ஒட்டுமொத்த ஆதரவும் இருந்தபோதும் 67 வயதில் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். அவர் காலத்துக்குள்ளாகவே இரு தலைமுறைத் தலைவர்களை அவர் பார்த்துவிட்டார். பிரதமர் பதவியிலிருந்து விலகியபின்னர் முடிவு எடுக்கும் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்குப் பின்னான கொள்கை மாற்றங்கள், செயல்பாடு மாற்றங்களைப் பார்த்தாலே அது தெரியும். லீயின் சுண்டுவிரல் இயக்கத்தில் சிங்கப்பூர் இயங்கவில்லை.

    சிங்கப்பூர் மீதிருந்த அளவற்ற பற்றினாலும் பிடிப்பினாலுமே திரு லீ அரசியலில் நீடித்தார். அடுத்த தலைமுறையினருக்கு வழிவிட்டபின்னர் அவர் வழக்கறிஞர் தொழிலுக்கோ வர்த்தகத்துக்கோ போயிருக்கலாம். அனைத்துலக அமைப்புகளின் தலைவராகியிருக்கலாம். பெரும் பணமும் புகழும் சம்பாதித்திருக்கலாம். ஆற்றலும் ஆளுமையும் மிக்க அவருக்கு எங்கு சென்றாலும் சிறப்புக் கிடைத்திருக்கும். எந்தத் துறையிலும் சிறந்துவிளங்கக்கூடியவர் அவர்.

    7. லீ சியன் லூங்கை பிரதமாராக்கியது லீ குவான் இயூ அல்ல, கோ சோக் டோங்.

    8. கடைசி வரையில் கட்சித் தலைமைப் பொறுப்பு லீயிடம் இருக்கவில்லை. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னரேயே அந்தப் பொறுப்பிலிருந்து லீ விலகிவிட்டார். கடந்த பல ஆண்டுகளாக கட்சியின் மத்திய குழுவில்கூட அவர் இடம்பெறவில்லை. சாகும் வரையில் நானே தலைவன் எனும் தமிழ்நாடு, இந்தியாவின் அரசியல் போக்கு இங்கு இல்லை.

    9. ஊடகச் சுதந்திரம் என்பது தீர விசாரித்தறியாத விஷயங்களை, ஒரு தலைபட்சமாக எழுதுவதல்ல. ஆதாயங்களுக்காக நியாமில்லாத விஷயங்களை ஆதரித்து எழுதவதல்ல. அதிகாரத்திலுள்ளவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் கும்பிடு போடுவதல்ல. மிகைப்படுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி எழுதுவதல்ல.
    செய்திகளைத் திரிக்காமல், மிகைப்படுத்தாமல், உள்ளதை உள்ளபடி எழுதும் சிங்கப்பூர் பத்திரிகையாளர்கள் பலநாட்டுப் பத்திரிகையாளர்களைவிடச் சுதந்திரம் பெற்றவர்கள். காரசாரமான விவாதங்கள், விமர்சனங்களைக் கொண்ட சமூகத் தளங்கள், வலைப்பக்க எழுத்தாளர்கள் பலர் இங்கே உண்டு. உதாரணமாக பெர்த்தா ஹான்சனின் புளோக்கை பார்க்கலாம்.

    10. மாற்றுக்குரல்கள் எல்லாமே இங்கு ஒடுக்கப்படுவதில்லை. ஆன்லைன் சிட்டிசன் உட்பட, காரசார விவாதங்களை முன்வைக்கும் இணையத் தளங்கள் இன்றும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, சமய, இன நல்லிணக்கத்துக்குப் பாதகம் ஏற்படுத்தும் கருத்துகளை முன்வைப்பவர்களே சிங்கப்பூரில் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உள்ளாகிறார்கள்.

    11. அரசாங்கத்தை விமர்சிக்கும் பல படைப்புகள் இந்நாட்டில் வெளிவந்துள்ளன. நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ராபர்ட் இயோ என்ற ஆங்கில நாடகக் கலைஞர் ‘சாங்கி’ அரசியல் விமர்சனம் நிறைந்த நாடகத்தை 1990களில் எழுதினார். 2011ல் நடந்த தேர்தலை மையப்படுத்தி, வெளிப்படையான பார்வையும் விமர்சனங்களும் நிறைந்த ‘Cooling Off Day’ என்ற நாடகத்தை Alfian Sa’at எழுதியுள்ளார். இன்னும் பட்டியலிடலாம்.

    இந்நாட்டில் எந்தப் படைப்பாளரும் கலைஞரும் மக்களால் தாக்கப்படுவதில்லை. உயிரோடு எரிக்கப்படவில்லை. ‘எழுத்துகளை எரித்துவிடுகிறேன்’ என்று சொல்லும் நிலை எழுத்தாளர்களுக்கு உருவானதில்லை. வேறு நாட்டில் அரசியல் தஞ்சம் புக வேண்டிய அவலமும் ஏற்பட்டதில்லை.

    பரிசுகள், மானியங்கள், ஊக்கத்தொகைகள், கல்வி உதவிநிதிகள், விருதுகள், சலுகைகள், பெருமைகள் அதிகாரத்துவ மொழிகளான ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழிப் படைப்பாளர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
    சமயம், இனம், மொழி தொடர்பான உணர்வுபூர்வமான விஷயங்களே இங்கே மிகவும் கவனத்தோடு அணுகப்படுகின்றன. சமய நல்லிணக்கச் சட்டம், சமயத்தினால் மக்களிடையே வெறுப்பும் எதிர்ப்பும் கிளம்பாமல் இருக்க உதவுகிறது.

    12. அமைச்சர்கள், பிரதமர், அதிபருக்குப் பெரும் சம்பளம் இங்கே வழங்கப்படுகிறது. அதற்கான காரணம் அவர்கள் லஞ்சம் வாங்கக்கூடாது என்பது மட்டுமல்ல, திறனாளர்களை அரசியலுக்கு ஈர்க்க வேண்டும் என்பதும்தான். அமைச்சரவையில் உள்ளவர் தங்கள் சொந்தத் தொழிலைத் தொடர்வார்களானால் இதைவிடப் பல மடங்கு சம்பாதிக்க முடியும். தற்போது துணைப் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் உள்ள தர்மன் சண்முகரத்னம் உலகின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவர். அவரை உலக நிதி அமைப்புகள் போட்டி போட்டுத் தலைமை தாங்க அழைக்கின்றன. சட்ட அமைச்சர் கா.சண்முகம் பெரும் தொகை சம்பாதித்த பிரபல வழக்கறிஞர். தற்காப்பு அமைச்சரான டாக்டர் இங் எங் ஹென், தனியார் துறை மருத்துவர். சொல்லிக்கொண்டே போகலாம். இந்தத் தலைமுறை மட்டுமல்ல, இதற்கு முந்திய தலைமுறை அமைச்சர்களும் இத்தகைய திறனாளர்கள்தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட இத்தகையவர்கள்தான். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு, படித்தவராக, ஒழுக்கமுள்ளவராக, எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவராக, தனித்திறன்கள் பெற்றவராக இருக்க வேண்டும்.

    13. சியாம் சீ தோங், லோ தியா கியாங் உட்பட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பல காலமாக இங்கு வெற்றிகரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக எவரும் இந்நாட்டில் குற்றவாளி ஆக்கப்பட்டதில்லை. ஊழல், ஒழுக்கேடு, நேர்மையின்மையை அறவே பொறுத்துக்கொள்ளாதவர் லீ. ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக தனது அமைச்சர்கள் இருவரை கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் விலக்கியவர் அவர். ஆள்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது லீ வகுத்தது. ஒரு கட்சியே ஆட்சியிலிருந்து வருவதற்கு காரணம் தரமான அரசாட்சி, நம்பகத்தன்மைதான். சிங்கப்பூரில் கள்ள ஓட்டு சாத்தியமே இல்லை. ஒவ்வொருக்குவருக்கும் அடையாள அட்டை உண்டு. மக்கள் எளிதாக எதிர்க்கட்சியைத் தேர்வு செய்ய முடியும்.

    14. திரு லீ குறித்தும் கிறிஸ்துவ மதம் குறித்தும் புண்படுத்தும் விதமான கருத்துகளைக் கூறியதாக அமோஸ் லீ மீது பல பொதுமக்கள் புகார் செய்த பின்னரே அவர் கைது செய்யப்பட்டார். பல ஆயிரம் மக்கள் அவரது காணொளி பதிவைப் பார்த்துள்ளனர். அராஜக அரசாக இருந்திருந்தால், யூடியூப்பில் காணொளி பதிவான மறுகணமே அதை அழித்திருக்க முடியும். கேள்வி முறையின்றி அமோஸை கைது செய்திருக்க முடியும். அந்த காணொளி குறித்துப் பல சிங்கப்பூர் மக்கள் விமர்சித்திருப்பதையும் மார்க்ஸ் படிக்க வேண்டும். அமோஸும்; லீ உடல் நலமில்லாதிருந்தபோது லீ இறந்து விட்டதாக அரசாங்க அறிவிப்பு போலவே போலியாக இணையத் தளம் உருவாக்கி புரளி கிளப்பிய 16 வயதுக்கும் குறைந்த சிறுவனும் சிங்கப்பூரர்கள்தான். சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடக உரிமையும் மாற்றுக் கருத்துச் சுதந்திரமும்தான் இவர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மார்க்ஸ் புரிந்துகொள்ள வேண்டும்.

    “சிங்கப்பூரர்களுக்கு வாழ்வளிக்க எந்த நாடும் கடமைப்படவில்லை. சிங்கப்பூர் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். இல்லையெனில் சிங்கப்பூரால் உயிர் பிழைக்க முடியாது. உன்னதத்தை நோக்கிச் செல்லும் இந்த நீண்ட பயணத்தில் கையைக் கட்டி வெறும் பார்வையாளர்களாக இருப்பவர்களுக்கு இடமில்லை,” என்று சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றபோது (1965) கூறிய திரு லீ, ஒன்றிணைந்த மக்களாக ஒரு நாட்டை உருவாக்கக்கூடிய திறன் சிங்கப்பூரர்களிடம் இருக்க வேண்டும் என்பதற்காகவே போராடினார். வாழ்க்கை வெற்றிக்குத் தேவையான பண்புகளை மக்களிடம் ஏற்படுத்த அவர் அயராமல் பாடுபட்டார். திரு லீக்குப் பிந்திய காலத்திலும் சிங்கப்பூரை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சிங்கப்பூரில் மாறுதல்களைக் கொண்டு வருவதில் இளையரிடம் காணப்படும் துடிப்பு திரு லீயின் பாரம்பரியத் தொடர்ச்சியே.

    15. “எனது எல்லா நடவடிக்கைகளையும் சரி என நான் சொல்லவில்லை. முறையான விசாரணை இல்லாமல் நான் கைதுகளைச் செய்தது உண்மைதான்” – என்பது அமெரிக்கப் பத்திரிகையாளர்களிடம் லீ- கூறியதன் ஒரு பகுதிதான். எதையுமே எண்ணிய பின் துணிந்து செய்தவர் திரு லீ. அவர் என்றைக்குமே மன்னிப்புக் கேட்டதில்லை.- “நான் செய்ததெல்லாம் சரியென்று நான் சொல்ல வில்லை. ஆனால் நான் செய்தவற்¬றுக்கெல்¬லாம் கௌரவமான காரணம் உள்ளது. விசாரணை இன்றிச் சிலரை சிறையில் அடைப்பது போல் சில கடுமை¬யான காரி¬யங்களைச் செய்ய வேண்டியிருந்தது,” என்பது அவர் கூறிய முழு வாக்கியம். தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுந்த விளக்கங்களையும் காரணங்களையும் எந்தச் சமயத்திலும் ஆதாரங்களுடன் தரக்கூடியவராக லீ யும் அவரது சகாக்களும் செயல்பட்டனர்.

    குண்டர்கும்பல் ஆதிக்கம், கம்யூனிஸ்டுகள் போராட்டம், மதக் கலவரம், வேலையின்மை, வறுமை என்று சிங்கப்பூர் அன்று இருந்த மிக மோசமான காலகட்டத்தில் கடுமையான போக்குத் தேவைப்பட்டது. அன்றைய நிலையில் அதுவே ஒரே வழி. வெவ்வேறு இனம், மொழிகளைச்சேர்ந்த குடியேறி மக்களைக் கொண்ட ஒரு நாட்டை ஒரு கட்டொழுங்கிற்குள் கொண்டு வருவது எளிதான காரியமல்ல.

    “முதல் முக்கியம் நமக்கு எது? முதலில் மக்களின் நல்வாழ்வு. ஜனநாயக நடைமுறைகள் எல்லாம் பிறகுதான். இவற்றையெல்லாம் அப்போதைக்கு அப்போது நாம் நிறுத்திவைக்க வேண்டியிருக்கும்,” என்று ஆரம்ப காலத்தில் லீ குவான் இயூ கூறினார். விவேகானந்தர் சொன்னதும் இதைத்தான், முதலில் உணவு கொடு, பிறகு ஞானத்தைப் போதி. அன்று நாட்டின் நிலைமை அந்த நிலையில் இருந்தது.

    கடும் சித்தமுடைய தலைவராக விளங்கிய திரு லீ, உறுதியளித்தபடி வளமான வாழ்க்கையை அமைத்துத் தந்ததால் கடுமையான கொள்கைகளை அவர் அமல்படுத்தியபோதும் மக்கள் அவர்மீது முழு நம்பிக்கை வைத்தனர். அவர் ‘வல்லினம்’தான். ஆனால் பொறுப்புள்ள, அக்கறைமிகுந்த வல்லினத் தந்தை.

    பாதகமான நிலைமையைக்கூடச் சாதகமான ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் திரு லீ. அவரிடம் ஆழமாக வேரூன்றியிருந்த இந்தக் குணநலத்தின் வெளிப்பாடுதான் சிங்கப்பூர் மலேசியாவி லிருந்து பிரிக்கப்பட்டுத் தனித்துவிடப்பட்டபின் ஒரு வைராக்கியத்தில் எந்தவித இயற்கை வளமும் இல்லாத இந்த நாட்டை இன்று உலகமே வியந்து போற்றும் வெற்றி நகராக உருவாக்கிக் காட்டியது.

    திரு லீ, சிங்கப்பூரர்களுக்கு பிரிட்டனிடமிருந்து மட்டுமல்ல, வறுமை, அறியாமை, தன்னம்பிக்கையற்ற நிலை, ஆகியவற்றிலிருந்தும் விடுதலை பெற்றுத் தந்தார். தண்ணீர், உணவு, இருப்பிட வசதி என அத்தியாவசியத் தேவைகளில் தொடங்கி, பசுமை, தூய்மை, மொழி, கலை, பண்பாடு என மக்களின் அனைத்து அக -புறத் தேவைகளையும் தொலைநோக்குப் பார்வையுடன் ஆய்ந்தறிந்து பார்த்துப் பார்த்துப் பூர்த்தி செய்தவர்

    மிகச் சிறுபான்மையினரான தமிழர்களின் மொழிக்கு அதிகாரத்துவ அங்கீகாரம் கொடுத்து, சம உரிமையுடன் அரிசாசனத்தில் என்றும் தொடர்ந்து இருக்க வகைசெய்தவர் திரு லீ தகுதிக்கு முன்னுரிமை என்பதால் அதிபர் முதல் நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர், என எல்லாத் துறைகளிலும் பல முக்கிய பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திரு எஸ்.தனபாலன் இடைக்கால பிரதமராகச் செயல்பட்டுள்ளார். மக்கள் தொகை விகிதாசாரத்தைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை மிக அதிகம். எந்த நாட்டிலுமே தமிழுக்கும் தமிழனுக்கும் இல்லாத சிறப்பு இது. தமிழர்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு, முடங்கிக்கிக் கிடக்கும் நாடுகளுக்கு மத்தியிலேயே, இந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவருக்கும் உரிமையும் கௌரவமும் முன்னுக்கு வர வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் லீ குவான் இயூ.

    அவருக்குப் பின்னர் கெடுபிடி குறைந்து எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலத்தின், நாட்டின் வளர்ச்சியின் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்தி, ஏற்றுக்கொண்டு வரும் நாடு சிங்கப்பூர்.
    சிங்கப்பூர் சிறு நாடாக இருப்பதால், மேற்கத்திய நாடாகவோ வல்லரசாகவோ இல்லாமல் இருப்பதால் திரு லீயின் சாதனைகள் தகுந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றே கூறுவேன். நோபல் பரிசு உட்படப் பல விருதுகளுக்குத் தகுதியானவர் லீ. எதுவுமே சாதிக்காமலேயே வந்ததும் வராதுமாக ஒபாமாவுக்கு நோபல் பரிசைத் தூக்கிக் கொடுத்த மேற்கத்திய உலகின் பாரபட்சமான கண்கள் வழி உலகைப் பார்ப்பதை மார்க்ஸ் போன்றவர்கள் தவிர்க்க வேண்டும்.

    ஏற்றத் தாழ்வுகளும், வறுமையும், பெண்கள் கொடுமையும், ஊழலும் ஏமாற்றுத்தனங்களும் ஜாதி, மதங்களின் பெயரால் பேரழிவுகளும் சிறார்கள்கூட துப்பாக்கி தூக்கித் திரியும் கலாசாரமும் தார்மீகப் பொறுப்பற்ற ஊடகங்களும் நிறைந்திருக்கும் உலக நாடுகளில் ஜனநாயகம் என்பதன் பொருள் வேறு.

    ஆனால் சிங்கப்பூர் மக்களின் ஜனநாயகம் வேறு.

    50 ஆண்டு காலத்துக்கும் மேலாக இந்நாட்டுக்கு திரு லீ ஆற்றிய அரும்பணியை மறந்துவிடாமல், அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் அவரது அளப்பரிய சேவைக்கு நன்றிப்பெருக்கோடு தலைவணங்கும் பண்பு, பெரும் துக்கத்தின்போது ஒன்றிணைந்த ஒரே மக்களாக செயல்படும் பாங்கு, அமைதியாகப் பொறுமையாக வலுவைக் காட்டும் பலம்-இதுவே திரு லீ விரும்பிய சிங்கப்பூர். குடியேறிகள் நாடான சிங்கப்பூரில் ஒன்றுபட்ட நாட்டுணர்வையும் பற்றையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தி, செயற்கரிய செய்துள்ளார் திரு லீ.

    விமர்சனம் செய்ய எவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்குத் தகுந்த ஆதாரங்கள் வேண்டும். ஆய்வு வேண்டும். வெறுமனே மற்றவர்கள் எழுதியவற்றிலிருந்து வசதிக்கேற்ப பொறுக்கி மேற்கோள்காட்டி எழுதிவிட்டால் அது விமர்சனமாகாது. எதிலும் குணம்நாடி குற்றம்நாடி அவற்றுள் மிகை நாடுவதே
    மேன்மையானவர்கள் செய்வது.

    உலகிலேயே சிங்கப்பூரைப் போல் பாதுகாப்பான ஒரு நாடு கிடையாது. நள்ளிரவு நேரத்திலும் எந்த இடத்துக்கும் நிறைய நகைகளை அணிந்த அல்லது கையில் பெரும் தொகை வைத்திருக்கும் பெண்ணோ, மிகுந்த போதையில் இருக்கும் பெண்ணோ, அரைகுறையாக ஆடை அணிந்த பெண்ணோ சிங்கப்பூர் தெருக்களில் தனியாக நடந்து செல்ல முடியும். தைரியமாக டாக்சியில் ஏறிச் செல்ல முடியும்! இதுதான் உண்மையான சுதந்திரம் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். இது எப்படிச் சாத்தியமானது?

    கடுமையான சட்ட திட்டங்கள். அதன் நேர்மையான அமலாக்கம். லஞ்சம், ஊழல் என்பதற்கே இடமில்லாத நியாயம்.

    இதை அடக்குமுறை, ஜனநாயகமின்மை என்று சொல்வதனால் தாரளமாகச் சொல்லிக்கொள்ளலாம்.
    உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெயரில் எதற்கும் லஞ்சம், அடி முதல் நுனி வரை எங்கும் ஊழல் என்று அவதிப்படுவதைவிட இது பல்லாயிரம் மடங்கு மேன்மையானது. இதற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கருத்துகளை நாடவேண்டியதில்லை. ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழும் மாபெரும் ஜனநாயக நாடு, ஆசியப் புலி எனப் போற்றப்படும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரான லீ குவான் இயூவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, தேசிய துக்க நாளைக் கடைப்பிடித்ததை வைத்து புரிந்துகொள்ளலாம்.

    லதா

    • V.Balu
      April 11, 2015 at 7:57 am

      Well written piece of article Lata !

      God bless,

      V.Balu

    • Haja
      April 13, 2015 at 1:09 am

      Good…

    • shahulhameef
      April 14, 2015 at 2:39 am

      Good

    • Venkatesh.R
      September 6, 2022 at 4:21 am

      தங்கள் பதிவு நேர்மையாக தெளிவாக இருந்தது! மிக்க நன்றி

  5. kamalam
    April 11, 2015 at 4:05 am

    மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியாவில் பாதுகாப்பாக நடக்கக்கூட முடியவில்லை.மனித மிருகங்கள் பச்சிளம் பிள்ளைகளைக் கூட விட்டுவைப்பதில்லை. வாழ்வில் கல்வி,வேலை என எல்லாம் லஞ்சம் , ஊழல் மயம்! சொத்துக்குவிப்பு என்று பல அநீதிகள் தொடர்ந்த வண்ணம் இருப்பதை மார்க்ஸ் மறைத்துவிட்டு , மறந்துவிட்டு சிங்கப்பூரின் தேசத்தந்தையைக் குறை கூறி எழுதியுள்ள கட்டுரை கண்டிக்கத்தக்கது. ஒரு தலைப்பட்சமானது.திரு லீயால் வாழ்ந்தவர்கள் ( மூன்று தலைமுறைகளாக) தமிழகத்தில் நன்றிக்கடனோடு அவரை நினைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இது மார்க்க்சுக்குத் தெரியாது போலும்!எல்லாவற்றையும் விட உழைத்துவிட்டு வந்து படுப்பவர்கள் நிம்மதியாகச் சிங்கப்பூரில் படுக்க முடிகிறது என்பதை அங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்ற பலரும் உணர்கிறோம். மக்களின் பாதுகாப்பு முதன்மைக்கு முன்னுரிமை வழங்கிய நாடு என்பதில் சிங்கப்பூருக்கு இணை வேறு எந்த நாடும் இல்லை. சொந்த நாட்டில் வேலை இல்லாமல் தானே வெளிநாட்டிற்கு வேலைதேடி மக்கள் செல்கிறார்கள்.லிட்டில் இந்தியா கலவரத்தைப் பாரபட்சமான கண்ணோட்டத்துடன் பார்த்து,அதன் விளைவாகப் “பார்ப்பவை எல்லாம்
    அவையே போல் “என்னும் காமாலைக் கண்ணோட்டத்துடன் எழுதியுள்ள மார்க்சின் கட்டுரை லீயின் விசுவாசியான என்னைப்போன்ற பலருக்கும் வருத்தம் அளிப்பதாகும்.

  6. siraj
    April 11, 2015 at 10:21 pm

    மார்க்ஸின் கட்டுரை சிறிதுகூட சுயமாக எழுதப்பட்டதல்ல. அவர் அமெரிக்க கட்டுரைகளைப் பார்த்து எழுதியிருக்கிறார் . கீழே உள்ள கட்டுரை ஃபோர்ப்ஸ் இதழிலில் மார்ச் ஆம் தேதி வெளிவந்தது தலைப்பிலிருந்து எல்லாவிவரங்களையும் அப்படியே மொழிபெயர்த்திருக்கிறார். கட்டுரையின் மற்ற சில பகுதிகளையும் எங்கிருந்து எடுத்தார் என்பதை சிறிது தேடினால் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அதற்காக நான் நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. மார்க்ஸ் குறித்து நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதனை அனுப்புகிறேன்.

    http://www.forbes.com/sites/muhammadcohen/2015/03/30/lee-kuan-yew-doesnt-trust-the-nation-he-built/

    Lee Kuan Yew ‘Doesn’t Trust’ The Nation He Built

    Muhammad Cohen Contributor

    Forbes-29 Mar 2015

    Imagine a banana republic where the founding father really was the founding father. In this tiny nation with less than six million inhabitants, the founding father ruled for three decades while his son made the most rapid ever recorded rise through the military ranks, amid claims that the nation is, and due to its small size has to be, a strict meritocracy. Then the father gave way to a trusted caretaker named Goh, while maintaining a cabinet seat that many believe allowed him to maintain control, until his son was ready to ascend to the prime minister post. Beyond what natives call “the father, the son and the holy Goh,” the son’s wife runs one of the national investment funds that control billions of dollars in citizens’ money with great autonomy and little transparency.

    While this little country boasts the trappings of democracy and rule of law, if has had the same ruling party since its founding. In the last parliamentary election, opposition got 40% of the votes, but won less than 10% of the seats. Over the nation’s 50 year history, opposition figures have often found themselves dragged into courts and sued into bankruptcy, which not only ruins them financially but makes them ineligible for political office. This country pays its politicians and senior bureaucrats the world’s highest salaries in those categories to combat corruption, while it has become a safe haven for funds of dubious pedigree from across the region. No wonder that despite per capita GDP ranking among the world’s highest, there’s an extraordinary degree of cynicism among the largely well-educated population and so many of them aspire to leave the country.

    Lee Kuan Yew’s tragic flaw was not having faith in the nation to which he dedicated his life. (AP Photo/Koji Sasahara, File)

    The country described isn’t some banana republic, it’s Singapore, which bid farewell to founding father Lee Kuan Yew on Sunday. Lee rightly deserves credit for Singapore’s rise from a mosquito infested seaside village to a global financial powerhouse. From education to urban planning, the city that Lee built is worthy of admiration and emulation. Perhaps his greatest achievement is that he created a real sense of nationhood among Singapore’s disparate (though predominantly Chinese) population, avoiding the ethnic discord that plagues neighboring Malaysia. The economy, though hardly the world’s second freest, has yielded enviable results.

    Lee Kuan Yew’s tragic flaw was that he lacked faith in the nation he dedicated his life to building. As Martin Lee, founder of Hong Kong’s Democratic Party, told the BBC, “He doesn’t trust his own people, so he won’t give then genuine democracy.” The eminent legal practitioner and scholar added that Singapore has the “semblance of rule of law, but citizens always lose” when they go up against the ruling party in court. Singaporeans’ freedom of expression is strictly limited. On the economic front, Singapore’s government, through its investment funds that grab a third of salaries, holds golden shares is companies that control 60% of GDP. (That’s why it was such a surprise that neither casino license went to a government linked company.)

    The bargain that Lee crafted with his people – trust us, keep quiet and the government will take care of things – held up well for decades. Critics derided Singapore as a nanny state, but a young, small nation in a volatile region, born during the American war in Vietnam that saw its national treasury bombed, needed strong supervision. But as Singapore has matured and income disparity has grown as foreign workers depress salaries, the bargain has begun breaking down. It’s time to get rid of the nanny and give Singaporeans freedom to find their own way. Lee successors have to begin trusting that nation the founding father nurtured.

  7. April 14, 2015 at 2:18 am

    லதா அவர்களின் எதிர்வினைக்கு ஓர் எதிர்வினை – அ.மார்க்ஸ்

    லீ குவான் யூ குறித்த என் கட்டுரையைக் கடுமையாக விமர்சித்து சிங்கப்பூரின் முக்கிய எழுத்தாளர் லதா அவர்கள் ஒரு விரிவான பின்னூட்டம் இட்டிருந்தார்.இங்குள்ள சில லீ குவான் யூ ரசிகர்களும் லதா எழுப்பியுள்ள விமர்சனங்களுக்கு முடிந்தால் பதில் அளியுங்கள் எனக் கேட்டிருந்தனர். கடந்த மூன்று நாட்களாக எனக்குச் சில வேலைகள். இன்றுதான் அது குறித்து எழுத இயன்றது.

    1: லதா: //பொருளியல் வளர்ச்சி கண்ட நாட்டில் ஜனநாயகம் சாத்தியமல்ல என்பது கட்டுரையாளர் கூற வரும் கருத்து. “லீ குவான் இயூ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிங்கப்பூரை வெற்றிகரமான நாடாக்கியிருக்கிறார்//

    //பொருளியல் வளர்ச்சி கண்ட நாட்டில் ஜனநாயகம் சாத்தியமல்ல// என்பது என் கருத்து அல்ல.. பல மேலை நாடுகளில் இரண்டுமே சாத்தியமாகியுள்ளது. அப்படிக் கருதியது, அதாவது ஜனநாயகமும் பொருளியல் வளர்ச்சியும் ஒன்றாக இருக்க இயாலாது எனக் கருதியது உங்கள் லீ குவான் யூதான்.

    // லீ குவான் இயூ ஜனநாயகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிங்கப்பூரை வெற்றிகரமான நாடாக்கியிருக்கிறார்// “அடியோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு” முதலான லதா அவர்களின் இடைச் செருகல்களைத் தவிர்த்து விட்டால் இது என்னுடைய கருத்துத்தான். ஆனால் இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. லீயின் சிங்கப்பூர் ஒரு ஜனநாயக நாடு அல்ல, அது ஒரு ஜனநாயகக் குறைபாடு உள்ள நாடுதான் என்பதை விக்கிபீடியா கட்டுரைகள் தொடங்கி ஹாங்காங் Democratic Party தலைவர் மார்டின் லீ யின் கருத்தையும், அமோஸ் லீ என்னும் இளஒஞனின் ஒரு விமர்சனபூர்வமான பதிவேற்றத்திற்காக இன்று அவன் கைது செய்யப்பட்டுள்ள அவலத்தையும் மேற்கோள் காட்டி நான் எழுதியுள்ளேன். இது தொடர்பான வேறு சில சில ஆழமான கட்டுரைகளையும் என்னால் உங்கள் பார்வைக்கு முன் வைக்க இயலும். ஜனநாயக ஆளுகை குறித்த மிக அடிப்படையான அறிதல் உள்ள யாரும் லீயின் ஆளுகையை ஜனநாயகம் எனச் சொல்ல இயலாது. லீயை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் யாரும் கூட அவரது ஆளுகையை ஜனநாயகமானது என வலியுறுத்துவது கிடையாது. லதா மேடம் இப்படிச் சொல்வதன் மூலம், ஏதோ நான் மட்டுமே லீயின் ஆளுகையை இந்தக் கோணத்தில் விமர்சிப்பதாகக் காட்டுவது எனக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது.

    2. லதா: //திரு மார்க்ஸ் குறிப்பிடுவதுபோல் தமிழகத் தொழிலாளர்கள் நியாயமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், அவர்களுக்குள் சொல்லொணாத் துயரங்கள் குமுறிக்கொண்டிருந்தால் இன்று தஞ்சாவூர், புதுகோட்டை மாவடங்களில் லீக்கு அஞ்சலி செய்யமாட்டார்கள். அவருக்கு சிலைவைக்க மாட்டார்கள். பிள்ளைக்கு அவர் பெயரை வைக்க மாட்டார்கள்//

    2013 போராட்டத்தைப் பற்றிய ஒரு எழுத்தாளரான லதா அவர்களின் பார்வையைக் கண்டு வெட்கிப் போனேன். ஒரு எழுத்தாளரின் பேனா இப்படி ஒரு சர்வாதிகாரியின் மொழியைக் கக்கக் கூடும் என்பதையும் என்னால் எதிர்பார்க்க இயலவில்லை. Singapore Migrant Employees களின் துயரங்கள் குறித்து பல்கலைக் கழக ஆய்வுகள் முதல் கவ்ரவ் ஷர்மா போன்றோரின் விரிவான கட்டுரைகளும் உள்ளன. என் கட்டுரையிலேயே சில மேற்கோள்களைக் காட்டியுள்ளேன். (எ.கா: http://www.thehindu.com/news/national/miseries-migrate-as-well/article3376050.ece). ஆய்வு பூர்வமாகவும், நேரடி நேர்காணல்கள் மூலமாகவும் கவுரவ் ஷர்மா போன்றோர் முன் வைத்துள்ள முடிவுகளை அதே மட்டத்தில் நின்று உரிய தரவுகளின் அடிப்படையில் மறுக்க முயலாமல் இப்படி // இன்று தஞ்சாவூர், புதுகோட்டை மாவடங்களில் லீக்கு அஞ்சலி// செய்கிறார்களே எனச் சொல்லி ஏதோ தமிழகத்திலிருந்து சிங்கபூருக்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ள தொழிலாளிகள் எல்லாம் லீக்குப் பேனர் வைத்துக் கொண்டாடுவது போலச் சொல்லி, அதையே ஒரு ஆதாரமாகக் காட்டி சிங்கப்பூர் migrant தொழிலாளிகள் எல்லோரும் மகிழ்ச்சிப் பெருக்கில் சுகபோகங்களுடன் இருப்பதாகச் சொல்வதெல்லாம் அழகுமல்ல; நீதியுமல்ல.

    மேடம், கவுரவின் கட்டுரையில் தங்களது அவலங்களைச் சொல்லிப் புலம்புபவர்கள் எல்லோரும் சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை எனத் தமிழகத்தின் rural districts களிலிருந்து உங்கள் நாட்டிற்குப் புலம் பெயர்ந்து வந்து துன்புற்றவர்கள் மேடம். பெயர், முகவரி ஆகியவற்றுடன் அவை பதியப்பட்டுள்ளன. இங்கே ஃப்லெக்ஸ் போர்ட் வைப்பவர்களும் மணிமண்டபம் கட்டுபவர்களும், இன்று எனக்கு லீயின் இரு பெரும் நினைவுத் தொகுதிகளைப் பரிசளித்துச் சென்றவர்களும் migrant employees இல்லை.. அவர்கள் சிங்கப்பூரின் வளர்ச்சியால் பயன் பெற்றவர்கள்..
    2013 எழுச்சியின் தோற்றுவாயில் சில குடிகாரர்கள் இருந்திருக்கலாம். 400 பேர்கள் இரண்டு மணி நேரம் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். 400 பேர்களும் குடித்திருந்தார்கள் எனச் சொல்கிறீர்களா? அன்றைய பேருந்து விபத்து ஒரு triggering incident மட்டுமே. தேங்கிக் கிடந்த ஆத்திரம் அன்று வெடித்துச் சிதறியது. triggering mechanism த்தையே பிரச்சினையாகக் காட்டிப் எதிர்ப்புகளைக் கொச்சைப் படுத்துவது போலீஸ்காரர்களின் வேலை. எழுத்தாளர்களின் வேலை அல்ல.

    3. லதா: //சாதாரண விஷயங்களுக்கெல்லாம், அடி, வெட்டு, குத்து, கொலை, ஆர்ப்பாட்டம், சாலைமறியல், போராட்டம், கடையெரிப்பு, தீக்குளிப்பு என்பதெல்லாம் இங்கு இல்லை//

    ஜனநாயகப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவோர் வழக்கமாகச் சொல்கிற குற்றச்சாட்டுகள் தான் இவை. பதில் சொல்லத் தக்க அளவிற்குத் தகுதியான குற்றச்சாட்டுகள் இல்லை. எங்கள் ஊரில் இதை ஒரு middle class mentality என்போம்.

    ஊழியர்களுக்குப் பஆதுகாப்பு அளிக்க ஏராளமான சட்டங்கள் உல்ளன என்கிறார் லதா. அந்தச் சட்டங்கள் எல்லாம் என்ன லட்சணத்தில் உள்ளன என்பதற்குத்தான் சில கட்டுரைகளை நான் மேற்கோள் காட்டியுள்ளேன். தயுவு செய்து அவற்றை வாசித்து அந்தத் தொழிலாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

    4. எனது கட்டுரையில் சிங்கப்பூரின் பரப்பளவு, மக்கள் தொகை, லீ கட்சி தொடங்கிய தினம் முதலானவற்றில் சில தகவல் பிழைகள் உள்ளன என்கிறார் லதா. இருக்கலாம். Net ல் இருந்து எடுத்தவற்ருள் சில தகவல் பிழைகள் இருக்கலாம். இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இந்தத் தகவல் பிழைகள் எவ்வாறு எனது அடிப்படை அணுகல் முறைகளிலும், வந்திருக்கும் முடிவுகளிலும் பிழைகளுக்கு இட்டுச் சென்றுள்ளன என அவர் சுட்டிக் காட்டி இருந்தால் அது பயனுடையதாக இருந்திருக்கும். அதே போல நான் migrant employees குறித்து சில தரவுகளை வைத்துள்ளேன். அவற்றில் தவறுகள் உள்ளன என நிறுவியிருந்தாலாவது அதில் பொருள் இருந்திருக்கும்.

    5. லதா: //அவர் தனக்காக மூத்த அமைச்சர் பதவியை உருவாக்கவில்லை. அவரது அமைச்சரவையிலேயே மூத்த அமைச்சராக மறைந்த எஸ்.ராஜரத்தினம் இருந்துள்ளார். பின்னர் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் மூத்த அமைச்சராக இருந்தார். தொடர்ந்து எஸ்.ஜயக்குமார் மூத்த அமைச்சராக இருந்தார். ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்கள் அமைச்சரவையில் சில காலம் இருந்து இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட பதவி இது//

    உண்மைதான். லீக்கு முன்னதாகவும் சிலர் “மூத்த அமைச்சர்களாக” இருந்துள்ளனர். ஆனால், //ஆற்றலும் அனுபவமும் மிக்கவர்கள் அமைச்சரவையில் சில காலம் இருந்து இளைய தலைமுறையினருக்கு வழிகாட்ட வேண்டும் // என்பதற்காக இப்படியான பதவியை லீ உருவாக்கினார் என லதா அவர்கள் சப்பைகட்டுவதுதான் இதில் வேடிக்கை. முழுமையான ஜனநாயக அரசுகளில் இப்படியான பதவிக்கு இடமில்லை.

    இது குறித்து ஜனநாயக ஆளுகை குறித்து அறிந்தவர்கள் சொல்வது: “Senior Minister (abbreviation: SM) is a political office in the Cabinet of Singapore. It is taken by a retired Prime Minister or Deputy Prime Minister. This, however, implies a reliance on a dominant-party system, and several opposition critics find this as evidence for contempt for the political opposition in Singapore. அதாவது ஒரு “பல கட்சி ஆட்சி அமைப்பில்” (Multi Party System) இப்படியான பதவிக்கு இடமில்லை. ஒரே கட்சி பல ஆண்டுகாலம், பிற எதிர்க்கட்சிகளை வளர விடாமல் செய்து, ஒற்றை ஆதிக்கக் கட்சியாக இருக்கும் அரசமைவுகளில் மட்டுமே இப்படியான ஒரு பதவிக்கு இடமுண்டு. லதா அவர்கள் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    6. “மூத்த அமைச்சர் பதவி லீக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதல்ல. வேறு சிலரும் இருந்துள்ளனர்” எனச் சொல்லி என் தவறைச் சுட்டுக்காட்டும் லதா மேடம், ” அமைச்சர் அறிவுரையாளர் (Minister Mentor) எனும் பதவி லீக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பதையும் அவரோடு அந்தப் பதவி ஒழிக்கப்பட்டதையும் பற்றி மௌனம் சாதிப்பதேன்?

    7. லதா; // இனக்கலவரம் காரணமாக மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரித்துவிடப்படவில்லை. அதற்குப் பல காரணங்கள்//

    அப்படி நானும் சொல்லவில்லையே. தொடக்கம் முதலே அங்கு மத்திய மாநிலப் பிரச்சினைகள் குறித்துக் மோதல்கள் இருந்தன. இனக் கலவரம் ஒன்றை ஒட்டி சிங்கப்பூர் தனி நாட்டாக்கப்பட்டது என்றுதானே சொல்லியுள்ளேன்.

    8. லதா; //லீ சியன் லூங்கை பிரதமாராக்கியது லீ குவான் இயூ அல்ல, கோ சோக் டோங்// //சிங்கப்பூர் மீதிருந்த அளவற்ற பற்றினாலும் பிடிப்பினாலுமே திரு லீ அரசியலில் நீடித்தார்//

    இதெல்லாம் என்னங்க மேடம். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது. இதைத்தான் சிறு பிள்ளைதனம் என்பது. லீயின் மகனைப் பிரதமராக்கியதில் ஏதோ லீக்குப் பங்கே இல்லை, “சகல அதிகாரங்களும்’ மிக்க கோ சோக் டோங் தான் அவரைப் பிரதமராக ஆக்கினார் என்றால்… ம்… மேடம் நீங்கள் எதாவது லீயின் கட்சியில் பதவியில் உள்ளீர்களா?

    9. லதா: // மாற்றுக்குரல்கள் எல்லாமே இங்கு ஒடுக்கப்படுவதில்லை//

    அப்படியானால் இன்று அமோஸ் லீ ஏன் கைது செய்யப்பட்டுள்ளான்? இங்கு கலைஞர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை; முழுக் கருத்துச் சுதந்திரம் உண்டு என்கிறீர்கள். தயவு செய்து இளங்கோவன் அவர்கள் இது குறித்து என்ன சொல்கிறார் எனக் கேட்டுச் சொன்னீர்களானால் நம்பும்படியாக இருக்கும்.

    10. கடைசியாக : நான் வைத்துள்ள சில விமர்சனகளுக்கு நீங்கள் மௌனம் சாதித்துள்ளீர்கள். அ) வளரும் எதிர்க் கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, கடும் அபராதங்கள், தேர்தலில் போட்டியிடத் தகுதி இழப்பு செய்தல் ஆகியவற்றின் மூலம் அவர்கலின் அரசியல் எதிர்காலத்தை அழித்தல் ஆகியன லீ மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. இது குறித்து நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆ) அதே போல ஒரு முக்கியமான நிதி நிறுவனம் லீயின் மனைவியின் பொருப்பில் உள்ளது. இ) லீ ஒரு வாரிசு அரசியலை உருவாக்கியவர்.
    ஈ)சிங்கையின் வளர்ச்சியில் வெலி நாட்டுத் தொழிலாளிகளின் subsidised labour இஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உ) இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலம் உட்பட அண்டை நாட்டுகளின் ஜனநாயக மறுப்புகளை ஆதரித்தது.

    லதா மேடம் குறித்து ஒரு முக்கிய சிங்கை எழுத்தாளர் என்பது தவிர எனக்கு அதிகம் தெரியாது. எழுத்தாளர்கள் அடிப்படையில் கருத்துரிமையையும், ஜனநாயகத்தையும் நேசிப்பவர்கள். ஆனால் முக்கிய எழுத்தாளரான லதா அவர்கள் இப்படி ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவது, ஒரு கட்சிக்காரரைப்போல லீக்கு வக்காலத்து வாங்குவது என்பதெல்லாம் உண்மையில் எனக்குப் புரியவில்லை.
    எப்படியோ என் கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு விரிவான கருத்துச் சொன்னமைக்கு என் நன்றிகள். நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள தகவல் பிழைகளை உரிய ஆதாரங்களுடன் பொருத்திப் பார்த்து தவறெனில் திருத்திக் கொள்கிறேன்.

    அ.மார்க்ஸ்

  8. April 14, 2015 at 3:01 am

    இப்போதுதான் பார்த்தேன். சிராஜ் என்பவர் இட்டுள்ள பின்னூட்டத்தில் நான் ஏதோ சில ஆங்கிலக் கட்டுரைகளைப் பார்த்துக் காப்பி அடித்து எழுதியுள்ளது போலவும் அவர் அதை ரொம்பவும் புத்திசாலித்தனமாகக் கண்டு பிடித்திருப்பது போலவும் எழுதியுள்ளார். நான் எந்தக் கட்டுரைகளில் இருந்து தகவல்களை எடுத்துள்ளேன் என்பதை என் கட்டுரையிலேயே ஆகாங்கு குறிப்பிட்டுள்ளேன். அவர் “கண்டு பிடித்து” வெளியிட்டுள்ள கட்டுரை, அது வெளி வந்த forbes தளம் உட்பட நான் குறிப்பிட்டுள்ளேன். இப்படி அவதூறில் இறங்குவதன் பொருளென்ன?
    அ.மார்க்ஸ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...