குறையொன்றுமில்லை: நூல் வெளியீடு

01கடந்த 15/03/2015 அன்று, சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலான ‘குறையொன்றுமில்லை’ என்ற நூலை வல்லினம் வெளியீடு செய்தது.

பிரம்மானந்தாவின் நூலை வல்லினம் வெளியிடுகிறது என்றவுடன் ஏற்பட்ட பல்வேறு தரப்பட்ட குழப்பங்களுக்கு நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்த எழுத்தாளர் தயாஜி பதில் கூறினார். வல்லினம் எந்த இசங்களையும் சார்ந்து இயங்கவில்லை என்றும் அது முற்றிலும் அறிவுத்தேடல் கொண்ட ஓர் இயக்கம் என எடுத்துரைத்தார். எந்தக் கொள்கையும் வன்முறைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் கொண்டது. அதற்கு மேல் சிந்திக்க விடாத எந்தக் கொள்கையையு09ம் வல்லினம் ஏற்கத் தயார் இல்லை என்ற அவர், சுவாமி மலேசியாவில் ஓர் அறிவு மையம் என வல்லினம் நம்புவதை உறுதிப்படுத்தினார். தத்துவம் சார்ந்த ஆழமான அறிவுள்ள சுவாமி அவர்களின் தேவை இளம் படைப்பாளர்களுக்கு எவ்வாறான சிந்தனை மாற்றங்களைக் கொண்டுவரும் என தயாஜி கூறினார். வல்லினத்தின் இக்கட்டான காலத்திலெல்லாம் தனது சமூக மரியாதை குறித்தெல்லாம் கவலைப்படாத சுவாமி கலையின் சுதந்திரம் குறித்து பேசியதை அரங்கில் நினைவு படுத்தினார்.

06நிகழ்ச்சியில் தொடர்ந்து பூங்குழலி வீரன் ‘குறையொன்றுமில்லை’ என்ற நூல் குறித்து தனது கருத்துகளைப் பதிவு செய்தார். நிறைவு, நிறைவின்மை எல்லாமும் மனதின் கற்பனைகள்தான். ஆசைகள்தான். துறவு என்பதும் ஆசைதான். துயரங்களிலிருந்து மனித மனதிற்கு விடுதலை உண்டா? உண்டு என்று மனித மனம் கற்பனை செய்கிறது என சுவாமியின் முக்கியமான சிந்தனையைத் தனது நூலாய்வில் சுட்டிக்காட்டினார் பூங்குழலி.

எழுத்தாளர் அ.பாண்டியன் தொடர்ந்து நூலை அறிமுகம் செய்தார். துறவிகள், முனிவர்கள்,05 சன்யாசிகள் போன்ற ஆன்மீக பணியாளர்கள் தமிழ் இலக்கிய உலகுக்கு அன்னியமானவர்கள் அல்ல என்ற அவர் பன்னெடுங்காலமாகவே தமிழ் இலக்கியத்தோடு  இளங்கோவடிகள் போன்ற சமண துறவிகளும் பக்தி இலக்கியத்தை இயற்றிய  சமயக் குறவர்களும்  பட்டினத்தாரும் அருணகிரிநாதரும் ஒளவையும் ஆன்மிகத்தை நாடியவர்களே எனத் தொடங்கினார். தனக்குப் பிடித்தச் சில கட்டுரைகளைச் சுட்டிக்காட்டிய அ.பாண்டியன் தனது மாற்றுக்கருத்துகளையும் தெரிவித்தார்.

12நூலை எழுத்தாளர் மா.சண்முகசிவா வெளியீடு செய்ய விரிவுரையாளர் மன்னர் மன்னன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மா.சண்முகசிவா சுவாமி அவர்களின் ஆளுமை குறித்தும் வள்ளலார் கூறும் அன்பு நெறி பற்றியும் உரையாற்றினார். ‘அன்பு என்ற சொல் பெயர்ச்சொல் அல்ல, அது வினைச்சொல்’ என அவர் கூறியது அவர் மொத்த உரையின் சாரமாக அமைந்தது.

11நிகழ்ச்சியின் இறுதியில் சுவாமி பிரம்மானந்தா பேசினார். வாழ்வின் நமது எதிர்ப்பார்ப்புகளையும் அதன் மீதான நம்பிக்கைகளையும் அதை கடவுள் நிகழ்த்தி நம்மை மகிழ்விப்பார் என்பதையும் மனிதன் தனது கற்பனைகள் மூலம் உருவாக்குகிறான் எனக் கூறினார். கடவுள் என்பதும் அவர் நிகழ்த்துவார் என மனிதனால் நம்பப்படுபவை அனைத்துமே மனிதனின் கருத்தாக்கங்கள் என சுவாமி கூறியபோது அரங்கம் அமைதியாகச் செவிமடுத்தது.

சுவாமியின் உரைக்குப் பின் நிகழ்ச்சி முடிவுற்றது. நூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட  இவ்வருடத்தின் முதல் வல்லினம் நிகழ்ச்சி உற்சாகமான தொடக்கமாக இருந்தது.

1 comment for “குறையொன்றுமில்லை: நூல் வெளியீடு

  1. chola nagarajan
    April 2, 2015 at 1:54 am

    வாழ்த்துக்கள். சுவாமியின் நூலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், “துயரங்களிலிருந்து மனித மனதிற்கு விடுதலை உண்டா? உண்டு என்று மனித மனம் கற்பனை செய்கிறது” – என்கிற இந்தக் கருத்தும், “வாழ்வின் நமது எதிர்ப்பார்ப்புகளையும் அதன் மீதான நம்பிக்கைகளையும் அதை கடவுள் நிகழ்த்தி நம்மை மகிழ்விப்பார் என்பதையும் மனிதன் தனது கற்பனைகள் மூலம் உருவாக்குகிறான்” – என்கிற இந்தக் கருத்தும் சொல்லவருவது என்ன? ஒட்டுமொத்தமாக இந்த வாழ்வே ஒரு மாயை என்பதுபோலத்தானே? இதிலிருந்து புதிய, நவீனப் படைப்பாளிகளுக்கு என்ன புதிதாகக் கிடைத்துவிடப் போகிறது? அறியேன்.
    “வல்லினம் எந்த இசங்களையும் சார்ந்து இயங்கவில்லை… அது முற்றிலும் அறிவுத்தேடல் கொண்ட ஓர் இயக்கம்… எந்தக் கொள்கையும் வன்முறைக்கு இட்டுச்செல்லும் ஆற்றல் கொண்டது. அதற்கு மேல் சிந்திக்க விடாத எந்தக் கொள்கையையும் வல்லினம் ஏற்கத் தயார் இல்லை…” அப்படியெனில், அறிவுத்தேடல் எதற்கு? கடைசி வரையில் தேடிக்கொண்டே இருப்பதா தேடலின் நோக்கம்? எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என்கிற முன்முடிவோடா ஒரு தேடல் நிகழும்? ஒரு பயணத்தின் நோக்கமென்ன? புறப்படும் இடத்திலிருந்து போய்ச்சேரும் ஒரு இடத்தை நோக்கமெனக் கொண்டதுதானே பயணமென்பது? நண்பர்களே, இதென்ன புதுக் குழப்பமோ?
    – உங்கள்,
    சோழ. நாகராஜன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...