இந்தக் கட்டுரை, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான காலகட்டத்தில், தென்னிந்தியாவில் வெளிப்பட்ட தலித் தன்னுணர்வின் அடிப்படைக் கூறுகளைப் பற்றிய பகிர்வு ஆகும். குறிப்பிட்ட அக்காலத்தின் வரலாற்றுத் தகவல்களுக்குள் அதிகம் நுழையாது, தலித் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதர் (1845-1914) அவர்களால் முன்னிறுத்தப்பட்ட தலித் தன்னுணர்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விவரிப்பதாகவும் ஆராய்வதாகவும் இக்கட்டுரை அமைகிறது. மிக அண்மையில்தான் அயோத்திதாச பண்டிதரின் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு (முதல் இரண்டு தொகுதிகளும் 1999லும், மூன்றாம் தொகுதி 2003லும்), அதனுடைய பதிப்பாளர் திரு ஜி. அலோச்சியஸ் அவர்களால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டது. அம்பேத்கருக்குக் கொஞ்ச காலம் முன்னதாகத்தான், அயோத்திதாசர் வாழ்ந்திருக்கிறார். அம்பேத்கருக்கு முன்னதாகவே, தலித் தன்னுணர்வையும், பௌத்த மறுமலர்ச்சியையும் பற்றி அவர் யோசித்திருக்கிறார் என்று எண்ணத்திற்கு இது இட்டுச் செல்கிறது. நவீன ஐரோப்பியச் சிந்தனையுடன் அதிகப் பரிச்சயம் கொண்ட அம்பேத்கருக்கு முந்திய தலித் தன்னுணர்வு எப்படிப்பட்டதாக இருந்தது? அம்பேத்கருக்கு முந்திய பௌத்தம் பற்றிய புரிதல் எவ்வகைப்பட்டதாக இருந்தது? என்பது போன்ற சுவையான கேள்விகளுக்கு இது நம்மைத் தயார்ப்படுத்துகிறது. தென்னிந்தியாவில் உருவான நீதிக்கட்சியே பிராமணர் அல்லாதோரின் முன்னோடி இயக்கம், நீதிக்கட்சியினரே பிராமண எதிர்ப்பு, நாத்திகம், இந்துமத விமரிசனம், மற்றும் சாதி மறுப்பு போன்ற நிலைப்பாடுகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினர் என்ற கருத்தினை மறுபரிசீலனை செய்யத் தூண்டுவதாகவும் அயோத்திதாசரின் எழுத்து புலமை உள்ளது. தமிழ்ச் சூழலில், அயோத்திதாசரால் உருவாக்கப்பட்ட தலித் தன்னுணர்வு பற்றிய கட்டமைப்பு, 20ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் மார்க்சிய கருத்துகள் வேர்கொள்ளுவதற்கு ஏற்புடையதாக அமைகிறது என்பதையும் காணமுடிகிறது. ஏனென்றால் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதியாகப் போற்றப்படும் ம. சிங்கார வேலு அவர்கள் (1860-1946) தம்முடைய அரசியல் பயணத்தை அயோத்திதாச பண்டிதருடன் இணைந்து தென்னிந்திய புத்த மறுமலர்ச்சியில் பங்கு பெறுவதுடன் தொடங்கியுள்ளார். இவ்வாறாக, தென்னிந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் உருவாகிய தலித் தண்ணுணர்வு அடுத்து வந்த காலங்களில் எழுச்சி பெற்ற பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களுக்கான முன்னோட்டமாக இருந்திருக்கிறது. இதுவரை நாம் அறிந்துள்ள சமீபகால வரலாறு குறித்த சில மாற்றுப் புரிதல்களை அது நமக்கு வழங்குகிறது.
அயோத்திதாசரின் வாழ்க்கைச் சூழல்
தென்னிந்திய தலித் நினைவுகளில் அயோத்திதாசரின் பிறந்த தேதி, குடும்பம், செயல்பாடு குறித்த மிகச் சரியான தகவல்கள் அதிகம் இல்லை. தற்சமயம், அவரைக் குறித்து சொற்பமாகக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் நாம் முன்னேறலாம். அயோத்திதாசர் வட தமிழகத்தில், எளிமையான, ஆனால் பரம்பரையாகப் படித்த, பறையர் சமூகத்தில் பிறந்தவர். அவரது தந்தையார், தனது சொந்த ஊரில் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவராகத் திகழ்ந்தார். எனவே தந்தையாரைத் தொடர்ந்து மகனும் அத்தொழிலைச் சிறப்புடன் செய்து வந்தார். சித்த மருத்துவர்கள், அரிதாகக் கிடைக்கக் கூடிய மருத்துவக் குறிப்புகளோடு மட்டுமல்லாமல், இலக்கிய மற்றும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கையெழுத்துப் பிரதிகளான ஓலைச் சுவடிகளைத் திரட்டுவதை மிகவும் வாஞ்சையுடன் பரம்பரையாகச் செய்து வந்தனர். இவர்தம் தந்தையார் ஓர் ஆங்கில அதிகாரிக்கு, தமிழ் நீதி நெறி நூலான திருக்குறள் கையெழுத்துப் பிரதியை அன்பளிப்பாகக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அயோத்திதாசரும் மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய தமிழ் இலக்கிய மற்றும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகளைத் திரட்டி வந்ததுடன் சித்த மருத்துவராகவும் பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
சென்னை மாநகரத்தை அடுத்துள்ள சிறுநகரங்கள் தொழில் மையங்களாகவும், வர்த்தக மையங்களாகவும் அக்காலத்திய தென்னிந்திய நகரமயமாக்கலுக்குள் சென்றன. வட தமிழகத்தில் இருந்த பரம்பரையான விவசாய கிராமங்களில் பணப்பயிர் விளைவிக்கச் செய்தல் என்ற காலனியக் கொள்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அந்த விவசாயிகளை ஏழ்மைக்குள் தள்ளியது. வரலாற்று ஆசிரியர்கள் இப்பகுதிகளில் ஏழ்மையையும் தொடர் பஞ்சங்களையும் பற்றித் தெரிவிக்கின்றனர். எப்படியோ வடபுறம் சென்னையை நோக்கியும் மேற்காகக் கோலார் தங்கச் சுரங்கங்களை நோக்கியும் விவசாயத் தொழிலாளர்களின் நகர்வு, பரம்பரை விவசாயக் கூலிகளின் நஷ்டத்தை ஈடு செய்வதாக அமைந்தது. விழுப்புரம், சென்னை, கோலார் என்ற முக்கோண அமைவிடம் அயோத்திதாசரின் வாழ்விடமாக அமைந்தது. தொழில் மயமாக்கப்பட்ட நகர வளர்ச்சியும் ஆங்கிலேய ஆட்சியினால் தூண்டப்பட்ட மாற்றங்களும் பண்டிதரை அடிமைத்தளையிலிருந்து விடுபடும் எண்ணத்தைத் தூண்டுவதாக அமைந்தன.
ஆங்கிலேய அரசால் தோற்றுவிக்கப்பட்ட காலனியமயமாக்கல் என்ற நிகழ்வு ஏற்கனவே தென்னிந்தியப் பகுதிகளின் பண்பாட்டு அரசியலில் ஏராளமான அனுபவங்களை ஏற்படுத்தியிருந்தன. பரம்பரையாகவும் வரலாற்றுரீதியாகவும் இலங்கைத் தமிழர்களுக்கும் தென்னிந்திய தமிழர்களுக்கும் இடையில் நிலவிய தொடர்புகள் அவர்களுக்கிடையில் மொழியையும் மதத்தையும் இணைப்பதில் பெரும் பங்கு வகித்தன. தமிழ் இன எச்சரிக்கையை தூண்டுவதற்கான முதல் அலை வீசத் தொடங்கியதில் தொடர்பு உடையவராக ஆறுமுக நாவலர் (1822-1879) அவர்களைக் குறிப்பிடலாம். இவர் யாழ்ப்பாணத்தில் பிராமணர் அல்லாத, வைதீக சைவ வெள்ளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள சைவ வெள்ளாளர்கள் பரம்பரையாக நிலவுடைமையாளர்களாவர். சைவ மடங்களுக்கும் கோவில்களுக்கும் அவர்கள்தாம் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். ஆறுமுகம் பிள்ளை மிக நெருக்கமாக இலங்கைக் கிறித்துவ கல்வியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். மேலும் அவர் விவிலியத்தை (வேதாகமத்தை) தமிழில் மொழி பெயர்த்தார். கிறித்துவ மத போதகர்களுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம் சைவ மதச் சிந்தனைகளையும் வழிபாட்டு முறைகளையும் மறுசீரமைப்புச் செய்யும் நம்பிக்கையை அவருள் ஏற்படுத்தியது. ஆறுமுகம் பிள்ளை இரு கூர் ஆயுதங்களாக இரண்டு கருத்துக்களைக் தம் கைகளில் ஏந்தியவராக இருந்தார். ஒன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துவந்த கிறித்துவ மதமாற்றத்தை எதிர்ப்பதாயும், மற்றொன்று வைதீக சைவ நிலைப்பாட்டை வலுப்படுத்துவதுமான கருத்துக்களும் செயல்பாடுகளும் ஆகும். சைவ மத நூல்களை நாவலர் எளிமையான உரைகளாக்கி அவற்றைத் தொகுத்து வெளியிட்டு வெகுஜனப் புரிதல்களுக்கு உட்படுத்தினார். சைவக் குடும்பத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கல்வி பயில்வதற்கு யாழ்ப்பாணத்தில் பொதுக் கல்வி நிலையத்தை நிர்மாணித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ் நாட்டில் சிதம்பரத்திலும் அச்சகங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம் சைவ இலக்கியங்களைப் பரவச் செய்தார். திருவாவடுதுறையில் உள்ள வைதீக சைவ மடம், சமய இலக்கியங்களைப் பேசுவதில் திறமையாளர் என்னும் பொருள்படும்படியாக அவருக்கு ‘நாவலர்’ என்று பட்டமளித்துச் சிறப்பித்தது.
இச்சமயத்தில் தேசிய அளவில் தொழில்பட்டு வந்த பிராமணிய ஆதிக்கம், தமிழர்களுக்கு இடையில் சைவ நில உடைமைச் சாதிகளின் திரட்சி, ராபர்ட் கால்ட்வெல்லின் திராவிட மொழிக் குடும்பம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், தமிழ் மொழி அடையாள இயக்கம் போன்றன அயோத்திதாச பண்டிதரை தலித் தன்னுணர்வை உருவாக்குதல் என்ற நிலைப்பாட்டிற்கு இட்டுச் சென்றன எனலாம். குறிப்பிட்ட அவ்வகைப் பின்புலத்தில் அயோத்திதாச பண்டிதர், இந்திய வரலாற்றினுள் புதையுண்டிருந்த சமூக வரலாறு, தமிழ் இலக்கிய பண்பாடு, நாட்டுப்புறப் பண்பாடு போன்றவற்றைத் தோண்டி எடுத்துத் தலித் தன்னுணர்வைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது தமிழ் பண்பாட்டு வரலாற்றின் முழுமைக்கும் ஓர் அரிய வெற்றியாகத் திகழ்ந்தது. வட தமிழகத்தில் உருவான நகரமயமாக்கல் அயோத்திதாச பண்டிதரை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. அது அவரைப் பல்வேறு நவீனத்துவ சூழல்களுக்கு அறிமுகப்படுத்தியது. பலவிதமான சமூகப் பிரிவினரும் அன்றைய காலனி ஆட்சியோடு அதிகார பேரங்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில் அவற்றுக்கான ஒரு தலித் எதிர்வினையை அவை அயோத்திதாச பண்டிதரிடமிருந்து கோரின. அயோத்திதாசரின் தலித் எதிர்வினையானது தலித்துகளின் வரம்புக்கு உட்பட்ட செயல்பாடாக மட்டுமன்றி, தமிழ் வரலாற்றுச் சூழலில் முதன் முதலாக சமூக விடுதலையை மையப் பொருளாக்கிய ஒரு வரலாற்று நிகழ்வாகவும் ஆகிப்போனது.
அயோத்திதாசரும் வரலாற்று மறு கட்டமைப்பும்
இந்திய அளவிலும், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் அக்காலக் கட்டத்தில் தோன்றிய மற்ற இயக்கங்களைப் போன்றுதான் அயோத்திதாசரின் வருகையும் பண்பாட்டு வரலாறு குறித்ததாக அமைந்திருந்தது. இந்தியாவின் மிகப்பழமையான பூர்வீக மரபு பௌத்த சமயத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டது என்ற கருத்து கொண்டவராக அயோத்திதாச பண்டிதர் விளங்கினார். இவருடைய இக்கருத்து பௌத்தத்தோடு சமண மதத்தையும் சேர்த்துக் கொண்டதாக இருந்தது. விரிவான பார்வையில் இது இந்தியாவின் சிராமண மரபைக் குறித்ததாகவும் இருக்கலாம். அயோத்திதாசரின் எண்ணப்படி புத்த சமயமானது ஆரிய-வைதீக, சைவ, வைணவ செல்வாக்கிற்கு வெகுகாலம் முன்னதாகவே ஏற்பட்டதாகும்.
தமிழ்ச் சூழல்களில் மிகச் செழுமையான பண்டைத் தமிழ் இலக்கிய நூல் தொகுதிகள் சமண பௌத்த மதங்களினால்தான் தோன்றின. அவை தமிழில் வைதீகச் சிந்தனை அறிமுகமாவதற்கு முற்பட்டவை. அவை தமிழ் மண்ணில் சைவ வைணவச் சமயங்கள் தோற்றம் பெறுவதற்கு முந்தியவை. கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் இருந்து வந்த தமிழ் இலக்கியப் பாடல்கள் அனைத்தும் தனிப்பாடல்களாக, சிதறிய வடிவில் வெளியாட்கள் எவராலும் தொடப்படாமல் இருந்து வந்தன. தமிழகத்திற்குள் சமண பௌத்த நுழைவிற்குப் பின்னர்தான் கலைந்து கிடந்த தமிழ் இலக்கிய நூற்கள் எட்டுத்தொகையாகவும் பத்துப்பாட்டாகவும் சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டன. பழமையான தமிழ் பண்பாடு தனது முதல் அடையாளத்தை இக்காலத்திலேயே ஈட்டியது. அவை “சங்க” இலக்கியங்கள் என்ற “பௌத்த” நாமத்தையே இன்றுவரை சுமந்து நிற்கின்றன. பின் வந்த காலங்களில் மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தனவென்றும், முருகன், சிவன் போன்ற கடவுளர்கள் அச் சங்கங்களில் பங்கு பெற்றதாகவும் தமிழக வரலாறு கூறுகிறது. இவ்வாறு சொல்லப்படுவது சங்க இலக்கியத் தொகுப்பு மற்றும் பதிப்புச் செயல்பாடுகளிலிருந்து பௌத்த மதச் செல்வாக்கை அழிப்பதற்கான தெளிவான முயற்சி என்றே தமிழ் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் நன்கு நிர்மாணிக்கப்பட்டுவிட்ட ‘சங்கம்’ என்ற சொல்லை இன்றுவரை அப்புறப்படுத்த முடியவில்லை. கி.மு 5ஆம் நூற்றாண்டிலிருந்து தோன்றிய சங்க இலக்கியம் சமண புத்த செல்வாக்கால் தொடர்ந்து நீதி நெறி இலக்கியங்களையும் காப்பியங்களையும் கி.பி 5ஆம் நுற்றாண்டு வரை உற்பத்தி செய்து வந்தது. அதற்கு பிற்பட்ட காலத்தில்தான் சைவமும் வைணவமும் தங்களுடைய தெய்வீகக் கீர்த்தனைகளை உருவாக்கின. சங்கம் மருவிய காலத்திலும் சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டக் காலத்திலும் தோன்றிய இலக்கியங்களில்தான் வைதீக பிராமண சிந்தனைகள் செல்வாக்கு பெறமுடிந்தன. சமண புத்த மதத்தவர்கள் தமிழ் இலக்கியத்தின் மிகப்பழமையான பதிவுகளில் ஒரு மாற்ற முடியாத இடத்தை உடையவர்களாகவும் வலிமையான பங்களிப்புகளை வழங்கியவர்களாகவும் உள்ளனர். முந்தயத் தமிழ் இலக்கியத்தைத் தாண்டி பிரசித்தி பெற்ற திருக்குறள், நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, மற்றும் நீதி நெறி நூல்கள் போன்றன மிகத் தெளிவாக சமண புத்த சிந்தனைகளைக் கொண்டனவாகத் திகழுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியத்தின் ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற அழியாப் புகழ் பெற்ற நூல்கள் சமண புத்த மதங்களின் மெய்யியல் கருத்தாக்கங்களையும் அறங்களையும் கொண்டனவாக உள்ளன. பழம்பெறும் தமிழ் இலக்கண நூலான ஒல்காப் புகழ்த் தொல்காப்பியம் சிராமணத் தத்துவங்களைக் கொண்டமைந்துள்ளது. இங்கு வரிசைப்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்டே அயோத்திதாசப் பண்டிதர் வேத, சைவ, வைணவ மதங்களுக்கு முற்பட்டது சிராமணிய மரபு என்ற கருத்தை தனது எழுத்துக்களில் நிரூபித்துக் காட்டுகிறார்.
இந்தியத் துணைக்கண்ட அளவிலும் கூட சிராமணிய பரம்பரை மகாவீரர்-புத்தர் காலத்திற்குப் முன்பாகவும் தொடர்ந்து இருந்து வந்ததாக இந்திய வரலாறு தெரிவிக்கிறது. ஜி. சி. பாண்டே, எல். எம். ஜோஷி போன்ற ஆராய்ச்சியாளர்கள் சிராமணிய பரம்பரையானது மகாவீரர், புத்தர் வாழ்ந்த காலங்களுக்கு மிகவும் முற்பட்டது என்று உறுதியாக வாதிடுகின்றனர். 24 தீர்த்தங்கரர்களில் இறுதியானவரான மகாவீரரின் வாழ்க்கை குறித்த தகவல்களும் அவருக்கு முந்திய 23 தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை விவரங்களும் நம்மைப் பழங்கால வரலாற்றுக்கு எடுத்துச் செல்கின்றன. அவை இந்தியாவில் ஆரியர் வருகை மற்றும் ஆரியர் சிந்தனைகளுக்கு மிக முற்பட்டவையாக உள்ளன. ஜைன வரலாற்று வரைவியல் ரிஷப தேவரை முந்திய தீர்த்தங்கரர் என அடையாளம் காட்டுகிறது. சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட பழம் பொருள் எச்சங்களில் கிடைத்த காளை முக உருவத் தோற்றம் கொண்ட பொருளின் மூலம் அது அடையாளம் காட்டப்படுகிறது. புத்த மதமும் கூட அதனைத் தோற்றுவித்த கெளதம புத்தருக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. புத்தருக்கு முந்திய பல போதிசத்துவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். ஜைன புத்த இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள வம்சாவளி விவரங்கள் இந்தியத் தத்துவ பாடநூல் ஆசிரியர்களால் உருவாக்கப் பட்டுள்ள தத்துவ வரலாற்றிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு காட்சியை விவரிக்கின்றன. உண்மையில் இந்தியாவின் மிகப்பழமையான தத்துவ மரபாக சமண பௌத்த மரபே விளங்கியது என ஜி. சி. பாண்டே வாதிடுகிறார். ஆயின் வேத ஆரியர்கள் அழையாத அந்நியர்களாக உள்ளே நுழைந்ததுடன் இந்திய சமூகத்தினுள் வர்ணம், சாதி முதலான பல்வேறு புதிய நடைமுறைகளை ஏற்படுத்தினர் என்று அவர் எடுத்துக்காட்டுகிறார்.
அயோதிதாச பண்டிதர் நவீன ஆராய்ச்சி மற்றும் கல்விப் பின்புலம் கொண்டவரல்லர். என்ற போதிலும் அவரது தளராத பழந் தமிழ் இலக்கிய வாசிப்பு ஜைனமும் புத்தமும் மிகப் பழமையான இந்தியத் தத்துவத்திற்கும் பண்பாட்டிற்கும் அடித்தளம் அமைத்தன என்ற முடிவிற்கு அவரை வரச் செய்தன. புத்த மதம் குறித்த அயோத்திதாசரின் கருத்துக்கள் கார்ல் மார்க்ஸ் குறிப்பிடும் பழமையான கம்யூனிச சமூக அமைப்பான பழங்குடிச் சமூக அமைப்பை ஒத்து அமைந்துள்ளது. மார்க்ஸ் அச்சமூகத்தை வர்க்கங்களற்ற சமூகம், தனி உடமையற்ற சமூகம் எனக் கூறுவார். அயோத்திதாச பண்டிதர் அது சமத்துவத்திற்கும் கருணைக்கும் பெயர் பெற்ற சமூகம், சாதி சமய ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் என்று குறிப்பிடுவார். பௌத்தத் துறவிகளின் செயல்பாடுகள் பழங்குடித் தலவர்கள் செய்துவந்த கடமைகளான நிர்வாகம், நீதி வழங்குதல், போருக்குத் தலைமை ஏற்றல், மத காரியங்களில் ஈடுபடுதல், மருத்துவம், மாந்திரிகம் போன்றவற்றுடன் ஒத்திருந்தாக அயோத்திதாச பண்டிதர் விளக்குகிறார்.
அயோத்திதாசரின் வரலாற்று வரைவுகளின் படி, புத்த மதம் செல்வாக்கு பெற்றிருந்த பழங்கால இந்திய நிலப்பகுதிகளுக்குள் பிராமணர்களின் நுழைவு பௌத்தர்களை வஞ்சகமாக ஓரங்கட்டியது. புதிதாக உருவான வேடதாரி பிராமண போதகர்கள் தங்களுடைய சூது வாது வஞ்சகத் தன்மைகளால் புத்தத் துறவிகளை கொஞ்சங் கொஞ்சமாக அப்புறப்படுத்திவிட்டு அவர்களின் தலைமை இடத்தைப் பிடித்துக் கொண்டனர். புத்த வழமையில் அவர்கள் புகுத்திய முக்கிய மாற்றம் என்னவென்றால், பிறப்பின் அடிப்படையில் தொழில் புரியும் அமைப்பை ஏற்படுத்தியது ஆகும். அம்பேத்கர், வேலைப் பிரிவினைகள் வேலை செய்வோருக்கு இடையிலான பிரிவினைகளாக மாற்றப்பட்டன என்று இதனைக் கூறுவார். இது சாதி அமைப்பை உருவாக்கியது. புத்தமதத்தினரால் போற்றப்பட்டு வந்த சாதி மறுப்பு நூல்களைப் புதிதாகத் தோன்றிய பிராமணர்களின் புனித நூல்கள் மாற்றியமைத்ததுடன் அவற்றிற்குத் தெய்வீகத் தன்மையும் அளிக்கப்பட்டன. தோற்கடிக்கப்பட்ட புத்த பாமரர்கள் நகர அல்லது கிராம எல்கைகளுக்கு அப்பால் தள்ளப்பட்டு தீண்டத்தகாதவர்கள் என்ற பெயரும் சூட்டப்பெற்றனர். அயோத்திதாசர், இந்திய பண்பாட்டின் அடித்தளத்தில் புத்த மதத்தினருக்கும் வேடதாரி பிராமணர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் அமைந்துள்ளன என எடுத்துரைக்கிறார். இது ஒரு மத முரண்பாடாக காட்சியளித்த போதிலும் அயோத்திதாசர் இதனை ஒரு சமூக முரண்பாடாகவே காட்டுகிறார். மேலும் இது பழைய பௌத்த அமைப்பான சமத்துவ சமூகம், நீதிநெறி, அன்பு போன்றவற்றிற்கும் பிராமணிய அமைப்பான சமூக ஏற்றத்தாழ்வு, ஒழுங்கீனத்திற்கும், அன்பின்மைக்கும் இடையிலான முரண்பாடாகவும் அவரால் விரித்துரைக்கப்படுகிறது. தலித் மற்றும் பிராமணரல்லாத வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாறு மற்றும் சமுதாயம் ஆகியவை பற்றிய புரிதலின் மையக் கருத்தாக சமூக முரண்பாடுகள் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனர் என கெயில் ஓம்வெத் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.
அயோத்திதாசர் வேடதாரி பிராமணர்கள் என்ற சொல்லை மிக அதிகமாகப் பயன்படுத்துகிறார். ஆரிய பிராமணர்கள் ஆரம்பகால புத்த மதத்தினரிடம் இருந்து பிராமணர்கள் என்ற சொல்லை எடுத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆதி காலத்தில் இந்தியாவில் புத்தத் துறவிகள்தாம் சமூக அந்தஸ்துடனும் பொது மக்களின் ஆதரவுடனும் உண்மையான புரோகிதர்களாக இருந்து வந்தனர். அவர்கள்தாம் இயற்கையில் ஆதிகுடிகளின் பகுத்தறிவாளர்களாவர். அவர்களில் பெரும்பான்மையினர் அரசர்களாகவும் இருந்தனர். எப்படியிருந்த போதிலும் ஆதிகால நேர்மை என்பது வேடதாரி பிராமணர்களால் அழிக்கப்பட்டுவிட்டதோடு அவர்களே புரோகிதர்கள் என்ற பட்டத்தைப் பெறுவதற்கு உரியவர்கள் என்ற நிலைமையும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் பல்வேறுபட்ட பொய்யான புராண இலக்கியங்களைத் தொகுத்து அவற்றின் மூலம் தங்களுடைய தோற்றத்தையும் தலைமையையும் நியாயப்படுத்திக் கொண்டனர். எப்போது அவர்கள் தங்களது மேட்டிமையில் வெற்றி கொண்டனரோ அப்போதிருந்து புத்தக் கொள்கைகளை சமூகத்தின் எல்லைகளுக்கு வெளியில் தள்ளிவிட்டு சாதிய அமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
அயோத்திதாசரின் வரலாற்றுக் கட்டுமானம் என்பது தமிழ் வரலாற்றையும் உள்ளடக்கியதாகவே இருந்தது. அவர் வேளாளர் என்ற சொல் விவசாய உற்பத்தியுடன் தொடர்பு உடையது என்ற கருத்தை உடையவராக இருந்தார். அவர் தமிழகத்தில் இருந்த உழவர்கள் என்ற வரிசையில் தமிழ்ச் சாதியான வெள்ளாளர்களையும் உள்ளடக்கினார். ஆதிகாலத் தமிழ் மண்ணில் வெள்ளாளர்களுக்கு இடையில் உட்பிரிவுகள் தோன்றின. வெள்ளாளர்களின் ஒரு பிரிவினர் நிலவுடைமையாளர்களாக மாறினர். அவர்கள் மற்ற கடின வேலை செய்து வந்த வெள்ளாளர்களை சமூக எல்லைக்கு வெளியில் தள்ளி அவர்களைத் தனிச் சாதியாக்கினர். வேடதாரி பிராமணர்களைப் போன்றே நிலவுடைமை வெள்ளாளர்களும் கடின உழைப்பு வெள்ளாளர்களைக் கீழ்சாதியினர் என்று கூறி கொடுமைப்படுத்தினர். நிலவுடைமை வெள்ளாளர்கள் நேரடியான விவசாய வேலைகளிலிருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். அத்தோடு முந்திய விவசாயக் குடிகளிடமிருந்து வந்த மனித நேயத்தையும் இழந்துவிட்டனர். நிலத்திலிருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்ட வெள்ளாளர்களைப் பற்றிப் பேசும்போது அயோத்திதாசர் தமிழகத்தில் கடின உழைப்பில் ஈடுபட்டிருக்கும் பாட்டாளி மக்கள் தற்சமயம் பறையர்கள் எனவும் தீண்டத் தகாதவர்கள் எனவும் அழைக்கப்படுகின்ற மக்களின் பிரதிநிதியாகவும் விளங்கினார்.
அயோத்திதாசரின் வரலாற்று கட்டமைப்பில் ஒரு மக்களை இன்னொரு மக்கள் வஞ்சகமாக வீழ்த்தும் “சதித் திட்டம்” என்ற அம்சம் இடம்பெறுவதைக் காணமுடிகிறது. இதனை இன்று எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்ளமுடியும் என்று தெரியவில்லை. அவருடைய கருத்து “பழம்பெரும் பொற்காலம்” என்ற கனவும் அதன் வீழ்ச்சி என்ற கருத்தாக்கமும் பற்றியதாக இருக்கலாம். வீழ்ச்சி ஒரு குறிப்பிட்ட மக்களின் அரசியல் தோல்வியுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம். நம்மைப் பொருத்த வரையில், இங்கு அது புத்த அரசின் வீழ்ச்சியாக அமைந்துவிட்டது. இங்கு பேசப்பட்ட பொற்காலம் குறித்த கருத்துக்களை மிதப்படுத்தி முன்பு சொன்னது போல மார்க்சியம் பேசும் புராதனப் பொதுவுடைமைக் கருத்துக்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். பொருளாதாரப் பிரிவினைகளற்ற சமூகம் என அதனை மார்க்சியர்கள் சித்தரிக்க, அயோத்திதாசர் அதனைத் தூய்மையான நீதிநெறி, சமநிலை, கருணை போன்ற கருத்துக்களைக் கொண்ட சமூகமாகக் கட்டமைத்துள்ளார்.
தற்கால பிராமணர்களுக்கும் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படும் மக்களுக்கும் இடையில் பழங்காலம் முதலே விரோதம் இருந்து வந்தது என்ற வித்தியாசமான ஒரு கருத்தை அயோத்திதாசர் இந்திய வரலாற்றில் அறிமுகப் படுத்தினார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பஞ்சமர்கள் வரலாற்றில் எப்போதுமே தற்கால பிராமணர்களுக்கு போட்டியாளர்களாக வரலாற்றில் இருந்துள்ளனர்; அந்த விரோதத்தை இன்றளவும் தொடர்கின்றனர் என்ற கருத்தை அயோத்திதாசர் கொண்டிருந்தார் எனக் கூறலாம். பிராமணர்கள் என்று அறியப்பட்ட மக்கள் திராவிடர்கள் (பஞ்சமர்களை பண்டிதர் ஆதிதிராவிடர்கள் என்றே அழைத்தார்) சுயமாக வாழ்ந்து வந்த கிராமங்களுக்குள் நுழைந்தால் அவர்கள் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்டு துரத்தியடிக்கப்பட்டனர் என்று அயோத்திதாசர் எழுதினார். அவர்களால் அசுத்தமாக்கப்பட்ட பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்கு பசுஞ்சாணம் பயன்படுத்தப்பட்டது. பசுஞ்சாணம் கரைக்கப் பயன்படுத்தப்பட்ட பானைகள் நகரங்களுக்கு அப்பால் போட்டு உடைக்கப் பட்டன. இம்முறையில் செய்வதானது ஒருவரின் மரணத்திற்குப் பின் அன்னாரது உடலை எடுத்துச் சென்றபின் அந்த துக்க வீட்டில் செய்யும் முறையை ஒத்திருப்பதாகும். இன்றைய பிராமணர்களுக்கும் பஞ்சமருக்கும் இடையில் இவ்வாறாக மிக அடிப்படையான பகைமை இருந்து வந்தது என்று அயோத்திதாசர் விரிவாக எழுதுகிறார். சமீப காலங்கள் வரையில் தலித் கிராமங்களில் பிராமணரை இவ்வாறு தூய்மையற்றவர்களாகக் கருதி, விரட்டியடிக்கும் அல்லது தீட்டுக் கழிக்கும் வழக்கம் இருந்து வந்ததாக அயோத்திதாசர் குறிப்பிடுகிறார்.
அயோத்திதாசரின் எழுத்துக்களில் பிராமண எதிர்ப்பின் தோற்றம் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வகை ஆய்வு நவீன தமிழ் வரலாற்று வரைவியலில் முதன் முதலாகக் காணப்படும் ஒன்றாகும். அயோத்திதாசரின் இக்கொள்கை ஈ.வெ.ரா வின் பிராமண எதிர்ப்புக்கு முந்தியது, அதைவிட அதிக அடிப்படைத்தன்மை கொண்டது. இதனை எதிர்த்-தீண்டாமை (Counter Untouchability) என்றுகூட கொள்ளலாம். தலித்துகளை அடிப்படையில் தீவிர பிராமண எதிர்ப்பாளர்களாக (Militant anti-Brahmins) இது காட்டுகின்றது.
முடிவுரை
அயோத்திதாசரால் எழுதப்பட்ட தமிழக மற்றும் இந்திய வரலாறு தனது அடிப்படையில் “முரண்பாடு”என்ற கருத்தாக்கத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது பூர்வ பௌத்தர்/ வேடதாரி பிராமணர் என்ற முரணை அடிப்படையாகக் கொண்டுள்ளது. வரலாற்றில் முரண்பாட்டை அஸ்திவாரமாக அமைத்திருப்பது ஹெகலிய மற்றும் மார்க்சிய தத்துவங்களின் பண்பாகும். முரண்பாட்டை வர்க்கப் போராட்டமாக காரல் மார்க்ஸ் சித்தரித்தார். ஹெகலிய மார்க்சிய தத்துவங்களின்படி சிந்தனையிலும் செயலிலும், வரலாற்றிலும் வாழ்விலும் அனைத்து இயக்கங்களுக்கும் முதல் பொருளாக அமைவன முரண்பாடுகளே ஆகும். முரண்பாடுகள் துளிர்க்கின்றன, வளர்ச்சி பெறுகின்றன, முற்றி முரணுகின்றன, தீர்வினை எட்டுகின்றன என்பதே மார்க்சியக் கோட்பாடு. அயோத்திதாச பண்டிதர் அன்று மார்க்சியத்தை அறிந்திருக்கவில்லை, ஆயின் தன் சொந்த சமூகத்தை அவரால் அக்கறையுடன் அணுகிப்பார்க்க முடிந்தது, அது அதன் வரலாறு முழுவதிலும் ஒரு வகை முரண்பாட்டால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த முரண்பாட்டை துணிச்சலோடு அயோத்திதாச பண்டிதரால் எதிர்க்கொள்ளவும் முடிந்தது. அதுவே அவரது மகத்துவம்.
ஆங்கிலத்தில்: ந. முத்து மோகன்
தமிழில்: இந்திரா மோகன்