தன்னுடைய செயல்கள் அனைத்திலும் பொருளாதார லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் மறுகாலனியம் கல்வியை விற்பனைச் சரக்காக மாற்றியதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மதிப்பு இழந்த பாடப்பிரிவுகளில் வரலாறும் ஒன்று. ஆனால் மறுகாலனியத்தால் பன்னாட்டுச் சந்தையில் மேலாதிக்கம் செய்கின்ற நிறுவனங்களைச் சேர்ந்த வளர்ச்சியைடைந்த நாடுகளில் வளரும் நாடுகளைக் குறித்த வரலாறு உட்பட இதர சமூக அறிவியல் பாடம் மதிப்புடன் இருக்கிறது. வரலாற்றைப் பாடமாகக் கல்வி நிலையங்களில் கற்பிப்பதில் வளர்ந்த, வளரும் ஆகிய இரு நாடுகளில் இருக்கின்ற இந்த முரண்பாட்டின் பின்னணியை வரலாற்றை அறிந்து கொள்வதிலிருந்துதான் புரிந்து கொள்ள இயலும். அவ்வாறென்றால் இவ்விடத்தில் வரலாறு என்றால் என்ன? என்ற கேள்வி எழுவது தவிர்க்க இயலாதது. இந்தக் கேள்விக்கு ஏற்கனவே வரலாற்றாளர் சிலர் பதிலளித்துள்ளனர். வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு, அந்த நிகழ்வுகளுக்கு வியாக்கியானம் தருவது என்று விளக்கம் தரப்படுகிறது. வரலாற்றை அது வர்க்க மோதல், இன மோதல், சாதி மோதல் என்ற வாதமும் இருக்கிறது. இவற்றை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், சமூகப் பண்பாட்டுத் தளங்களில் ஆதிக்கம் செய்வதனூடாக அரசியல் பொருளாதார ஏகபோகத்திற்கு துணைபுரிவதால் வரலாறு நிகழ்வுகளின் தொகுப்பாகவோ அல்லது அவற்றிற்கு வியாக்கியானம் தருவதாக மட்டும் அல்லாமல் அதையும் கடந்த ஒன்றாக இருக்கிறது. அது, ஒரு குழு மீது மற்றொரு குழு தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு நியாயம் கற்பிக்கும் ஓர் அறிவாயுதம் என்பதாகும். எனவே, இந்த ஒடுக்குமுறைக்கான அறிவாயுதம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதையும் ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான வரலாற்றை எவ்வாறு எழுதுவது என்பதையும் சாதிய சூழலை அடிப்படையாகக் கொண்டு சில குறிப்புரைகளை முன்வைக்கலாம்.
ஆதிக்கத்திற்கான பொய்
ஆதிக்கம் செய்வோர் அல்லது அதற்காக எத்தனிப்போர் ஆயுதத்தால் மட்டுமின்றி அறிவுத் தளத்தினூடாகவும் அதைச் செய்கின்றனர். ஆதிக்கத்தை நிறுவுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது அது தேவைப்படும் சமயம் மட்டும் ஆயுதம் பிரயோகிக்கப்படும். ஆனால் அறிவு ஆயுத பிரயோகத்திற்கு முன்னரும் பின்னரும் மட்டுமின்றி எப்போதும் தொடர்ந்து பிரயோகிக்கப்படுகிறது. இது பல்வேறு வடிவங்களில் மீண்டும் மீண்டும் மறு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆதிக்கம் செய்வதற்கான வெகுசன ஒப்புதலைப் பெறுகின்றனர். இது ஆதிக்கம் செய்ய இருக்கின்ற குழுக்களிடமிருந்தும் கிடைப்பதுதான் அதன் பலம். முதலில், ஆதிக்கம் செய்ய விரும்புவோர் ஆதிக்கம் செய்யப்பட இருக்கின்ற குழுவைவிடவும் தாங்கள் அறிவுடையோர்/ ஆளத்தகுதியுடையோர் என்ற கருத்தியலை விதைக்கின்றனர். மேலும், அறிவியல், பண்பாடு போன்றவைகளில் ஆதிக்கம் செய்ய எத்தனிப்போரிடம் இருப்பவை உயர்ந்தது, ஆதிக்கம் செய்யப்பட இருக்கின்ற குழுவிடம் இருப்பவை தாழ்ந்தது எனவும் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். உயர்ந்தது X தாழ்ந்தது என்ற இந்த இருமை எதிர்வு அனைத்துத் தளங்களிலும் ஆதிக்கம் செய்ய விரும்புகின்ற குழுவால் கட்டமைக்கப்படுகிறது. அந்தந்தக் காலத்தில் அறிவு தளத்தில் கட்டமைக்கப்படும் இந்த இருமை எதிர்வு பின்னர் வரலாறாக மாற்றப்படுகிறது. இதுவே ஆதிக்கம் செய்ய விரும்புவோர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மட்டுமல்ல அதைத் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகக் கடத்துவதற்கும் அந்த அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்கும் கைக்கொள்ளப்படுகிறது.
அரசியல் பொருளாதார அதிகாரத்திற்காகவே கட்டமைக்கப்படும் இந்தக் கருத்தாக்கங்கள் அடிப்படையில் பொய்யானவையாகும். அது எவ்வாறென்றால், மனித சமூகம் தொடர்ந்து இயற்கையோடு போராடுவதன் மூலம் தன்னை முன்னேற்றிக் கொண்டு இருக்கிறது. ஒரு நிலப்பரப்பில் அல்லது வேறு நிலப்பரப்பில் வசிக்கின்ற ஒரு குழு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை மற்றொரு குழு பெற்றிருக்காது. இதன் பொருள் வளர்ச்சியை அடைந்திராக குழு அதற்கான அறிவுத் தகுதியைப் பெற்றிராத குழு என்றோ அல்லது அக்குழு ஒருபோதும் முன்னேற்றத்தைப் பெறாது என்பதோ அல்ல. அக்குழு தன்னுடைய புவிப்பரப்பின் தன்மை, வாழ்க்கை நிலைமை போன்றவைக்கு ஏற்ப தன்னை ஒரு நிலைமையிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு வளர்த்துக் கொள்ளும். இந்த நிலைமை மாற்றம் சம்பந்தப்பட்ட குழுவின் தேவையிலிருந்துதான் உருவாகும் என்பது கவனத்துக்குரியது. அதேசமயம், புற தாக்குதல் மூலமும் நிலைமை மாற்றம் ஏற்படும். ஆனால் இந்த நிலைமை மாற்றம் நிகழும் காலத்தை அறுதியிட்டுக் கூற இயலாது. எனவே, உயர்ந்தது X தாழ்ந்தது எனும் கட்டமைப்பே பொய்யானது. மேற்குறிப்பிட்ட நிலைமை மாற்றத்தை அடைந்திருக்காத ஒரு குழு தன்னைவிட முன்னேறிய பிற குழுவின் மீது ஆதிக்கம் செய்ய விரும்பினால் அக்குழு தாங்கள் உயர்ந்தோர் என வேறொரு பொய்யைக் கூறுகிறது. அப்பொய்: கடவுள் படைப்பின் அடிப்படையில் தாங்கள் உயர்ந்தோர் பிறர் தாழ்ந்தோர் என்பதாகும். ஆகவே, பொய்யின் வடிவம் எவ்வாறு இருப்பினும் அதன் இலக்கு அரசியல் பொருளாதார அதிகாரமாகும். அடிப்படையில் அப்பொய் இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கைக்கொள்கிறது.
ஏதோ ஒரு காலத்தில் கட்டமைக்கப்படும் பொய் வரலாறாக மாறுகிறது அல்லது மாற்றப்படுகிறது. இப்பொய்யானது மதத்தோடும் அரசியல் பொருளாதாரத்தோடும் இணைத்துக் கட்டமைக்கப்பட்டிருப்பதால் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் மட்டுமின்றி கல்விப் புலம், ஊடகம் எனச் சகலத்திலும் வரலாறு என்ற பெயரில் அது வியாபித்திருக்கிறது. இதன் மூலம் எதிர்கால தலைமுறையினரையும் அப்பொய் தன்வயப்படுத்துகிறது. பின்னர் அது என்றென்றும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு பொய் தொடர்ந்து காலம் காலமாக ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. இந்தியாவில் பிரிட்டிஷூம், பிராமணியமும் இத்தகைய பொய்களின் மூலம் தங்களின் ஏகபோகத்தைக் கட்டமைத்து அதில் வெற்றி கண்டவை. பிரிட்டிஷ் தன்னுடைய நிலைமை மாற்றத்திலிருந்து இந்தியர்களை தாழ்ந்தோர் ஆளத்தகுதியற்றோர் எனக்கூறியது. பிராமணியம் கடவுள் படைப்பில் தானே உயர்ந்தவன் பிறர் தாழ்ந்தோர் எனக் கூறியது. இவ்விருவரின் மொழி வெவ்வேறானவை ஆனால் அவற்றின் இலக்கு ஒன்றே. இன்றும்கூட சமூகப் பண்பாட்டு தளங்களில் மட்டுமின்றி அரசியல் பொருளாதாரத்திலும் அவர்களின் ஆதிக்கம் நீடித்திருப்பதற்குக் காரணம் அன்று கட்டமைக்கப்பட்ட பொய்யானது வரலாறு என வேரூன்றி இருப்பதால் ஆகும். அதை மேலோட்டமாக இங்குக் காணலாம். கல்விப் புலத்தில் பிராமணர் வருகை, பிரிட்டிஷார் வருகை என்றே கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘வருகை’ எனும் சொல்லடலே முதலில் பொய்யானதாகும். காரணம், அவர்களை இங்குள்ளவர்கள் விரும்பி வரவேற்றனர் என்ற தோற்றத்தை அச்சொல் உணர்த்த முற்படுகின்றது. அவர்களை வரவேற்றிருந்தால் அவர்களுக்கும் இங்குள்ள இனக் குழுக்களுக்கும் நட்புறவு இருந்திருக்க வேண்டும். மாறாக பகையுணர்வே இன்றுவரை நீடிக்கிறது என்பது நடைமுறை உண்மை. பிராமணர்கள், பிரிட்டிஷார் ஆகியோர் இங்கு நுழைந்து தங்களின் ஏகபோகத்தை நிறுவியதும், பிறரை ஒட்டச் சுரண்டியதும் மெய் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இவ்விடத்தில் வரலாறு எழுதுவது குறித்து கவனப்படுத்தப்பட்ட வேண்டிய ஒன்று இருக்கிறது. இந்திய வரலாற்றை எழுதியோர் பெரும்பாலானோர் பிராமணர், சாதி இந்துக்கள் என்பதால் அவர்கள் பிராமணியம் சார்ந்தே அதை எழுதினர் என்ற விமர்சனம் உண்டு. இதுதான் பாடத்திட்டங்களிலும் இருக்கிறது. எனவே, ஆரியர் வருகை, ஐரோப்பியர் வருகை என்ற சொற்றொடர் ஒரு ஆதிக்கக் குழு மற்றொரு ஆதிக்கக் குழுவோடு நட்புறவு பாராட்டும் நோக்கில் எழுதப்பட்டதோ என்ற கேள்வியும் இங்கு தவிர்க்க இயலாமல் எழுகிறது. அதாவது பிராமணர், சாதி இந்துக்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு நட்புறவு தொடர வேண்டும் என்ற அடிப்படையில் எழுதினரா என்பதுதான் கேள்வி. இது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய கருப் பொருள்.
பொய்யைப் பற்றுதல்
வரலாற்றை எழுதும் சிலர் மெய்யைவிட பொய்யையேப் பற்றிக் கொள்கின்றனர். நிரம்ப ஆதாரங்கள் இருக்கின்ற சங்க கால வாழ்க்கை முறையில் ஐவகைத் திணைகள் மட்டும் இருந்ததாகக் கூறுகிறது ஆனால் இன்றோ எண்ணற்ற சாதிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனக்கென வெவ்வேறான தோற்றக் கதைகளையும் கொண்டுள்ளன. வரலாறு, இனவரைவியல், நாட்டுப்புறவியல் எனப் பல துறைகளிலும் நடைபெறும் சாதி குறித்த ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட் சாதிகளின் வரலாற்றை அந்தத் தோற்றக் கதைகளிலிருந்து தொடங்கப்படுகிறது. அதாவது, ஆதிக்கத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட பொய்யிலிருந்து தொடங்குகிறது என்பதாகும். வாடகைத் தாய் முறை, சோதனைக் குழாய் குழந்தை, விந்து வங்கி என மனித உயிர்களை உருவாக்கும் அறிவியலானது பயங்காரவாத நிலைமைக்கு மாறிவிட்ட இக்காலத்திலும் பிராமணன், சத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகியோரை பிரம்மன் தன் உடலில் நான்கு பாகங்களிலிருந்தும் படைத்தான் எனக் கூறுவதையும், இப்பொய்யை அல்லது இதனையொத்த பொய்யையும் அறிவியல் முறையில் ஆய்வு செய்வதாக அறிவித்துக் கொள்ளும் கல்விப் புலம் ஏற்றுக் கொண்டுள்ளது. இங்கு இந்த நிலைமை என்றால் சம்பந்தப்பட்ட மக்களின் ஆய்வுப் போக்கு எவ்வாறு இருக்கும்? எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி அவர்கள் தங்கள் குழு வரலாற்றைப் பொய்யிலிருந்துதான் தொடங்குகின்றனர். நடைமுறையில் ஒருபோதும் நிகழ இயலாத, கற்பனைகூட செய்து பார்க்க இயலாத பொய்யை மெய்யென நம்புகின்றனர்.
போலித்தன வாழ்க்கை
பொய் போலித்தனமான வாழ்க்கை முறையை விளைவித்துள்ளது. பிராமணியம் கட்டமைத்துள்ள பொய்மையான நால் வருணம் படைப்பு, சுத்தம் அசுத்தம் என்ற இருமை எதிர்வு கோட்பாடு போன்றவை பெரும் பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இது ஒருவர் மற்றொருவரோடு கலப்பதற்குப் பதில் ஒருவர் மற்றொருவரை விலக்கச் செய்கிறது. பல்வேறு மொழியைப் பேசுகின்ற குழுக்கள் அதன் அடிப்படையில் ஒன்றாய்க் குழுமுவதற்குப் பதில் தனிதனி தீவுகளாய் பிரிந்து இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் குறித்த வெவ்வேறான தோற்றக் கதைகளே. அவை தனக்கென கொடி, அடையாளக்குறி, சங்கம், அரசியல் கட்சி எனத் தன்னையே தனித்த தேசமாகக் கற்பனை செய்து கொண்டு பிற குழுவுடன் நட்பை அல்லது பகைமையை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. நாடுகளுக்கு இடையேயான அயலுறவுக் கொள்கையை ஆய்வு செய்யும் ஒருவர் ஒரு சாதி மற்றொரு சாதியுடன் கொண்டிருக்கும் உறவோடு மிக எளிதாக ஒப்புமைப்படுத்த முடியும். அயலுறவுக் கொள்கை எவ்வாறு அரசியல் பொருளாதார தேவையிலிருந்து உருவாகிறதோ அதுபோலவே சாதிகளுக்கு இடையேயான உறவு அதையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. நாடுகளுக்கு இடையேயான அயலுறவு நீடித்திருப்பதில் எவ்வாறு உத்தரவாதம் இல்லையோ அதுபோலவே சாதிகளுக்கு இடையேயான உறவும் நீடித்திருப்பதற்கான உத்தரவாதம் இல்லை. எப்போது அயலுறவு உடைபடுகிறதோ அப்போது அந்த நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாகிவிடும். சாதிகளுக்கிடையேயான உறவிலும் இதுதான் நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு சாதியும் தான் அல்லாத பிற சாதியுடன் ஏதாவது ஒருவடிவில் முரண்பட்டு மோதுகின்றன. இது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுகின்றன. சாதிகளின் தோற்றம் குறித்த பொய்மையானது சாதிகள் கற்பனை தேசத்தில் வாழ்தல், மோதுதல் போன்றவற்றுக்குக் காரணமாகிறது. இந்தப் பொய் மனிதத் தன்மையின்மையை விளைவித்து மனிதனை மனிதன் சுரண்டுவதற்கும் வேட்டையாடுவதற்கும் வித்திட்டுள்ளது. எப்போதெல்லாம் கட்டமைக்கப்பட் பொய்யின் பாதகமான விளைவுகளுக்கு எதிரான போராட்டம் முகிழ்க்கிறதோ அல்லது பொய்யை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட குழு சிதைவுறத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பொய் கட்டமைக்கப்படுகிறது. சிதம்பரத்தில் நந்தன் எரிக்கப்பட்டது முதல் (அ)தர்மபுரியில் சமீபத்தில் இளவரசன் படுகொலை வரையிலான நிகழ்வுகளை உற்றுநோக்கினால் எவ்வாறெல்லாம் பொய் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மெய்க்கான நகர்வு
பொய்யும் மெய்யும் ஒன்றுக்கொன்று முரணானவை. கற்பனையால் முன்னதைக் கட்டமைக்க முடியும் ஆனால் பின்னதை அவ்வாறு செய்ய இயலாது. மெய்க்கான அடிப்படை ஆதாரம் நிகழ்வு குறித்தத் தரவு, இது இன்றி மெய்யைத் தொகுக்க இயலாது. மெய்களைத் தொகுப்பது ஒருவகை வரலாறு. நிகழ்வுக்கான வியாக்கியானங்களை முன்வைப்பது வரலாற்று வரைவியலின் இன்னொரு வகை. இது கல்விப் புலத்தில் ஆய்வாளர்களால் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையைக் கைக்கொண்டு சாதியின் அடிப்படைச் சிக்கல் குறித்த ஆய்வுகள் குறைவாகவே நிகழ்கிறது. கல்விப் புலம் சார்ந்து அதற்கான முறையான பயிற்சியைப் பெற்றுக் கொண்டு அல்லது அதைப் பெறாமலும் பொய்யிலிருந்து விடுபட்டு மெய்யை எழுதும் போக்கு இருக்கிறது. இது சமூகப் படிநிலை அடுக்கில் குறிப்பாக அடித்தட்டிலும் இடைத்தட்டிலும் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட குழுக்களிடம் உள்ளது. இந்த வரலாறு எழுதும் போக்கு முதலில் ஏற்கனவே அதிகாரத்திற்காக கட்டமைக்கப்பட்ட பொய்யை மறுத்து அதற்கு மறுவியாக்கியானம் தருகிறது. இதை சம்பந்தப்பட்ட சாதிகளின் பெயர்கள், புராணங்கள், கதைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு அதைச் செய்கின்றனர். இவர்களிடத்தில் இருக்கும் இரண்டு முக்கிய போக்குகள்: 1) வரலாற்று ஒழிப்பு, 2) பொய்யைக் கட்டமைத்தல்.
தங்கள் மீது ஆதிக்கம் செய்வதற்காக கட்டமைக்கப்பட்ட நிகழ்வு, அதனால் அனுபவித்த ஒடுக்குமுறை, அதற்கெதிரான போராட்டம் போன்றவை குறித்து ஏராளாமான எழுதப்பட்ட சான்றுகள் இருப்பினும் அந்த வரலாற்றை முற்றிலும் புறக்கணிக்கின்றனர். மேலும் அது புத்தகம், புதினம், பாடத்திட்டம், வலைத்தளம் என எங்கு எந்த வடிவத்தில் இருந்தாலும் அதைத் தேடிதேடி அழிக்கின்றனர். இந்த ஒடுக்கப்பட்ட வரலாற்றை முன்வைத்துதான் கிறிஸ்துவ மிஷனரி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் கல்வி, பொருளாதாரம், மருத்துவம் உட்பட இதர பொருளியல் பலன்கள், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்றவற்றைப் பெற்றனர். இந்த நலன்களை இந்திய அரசாங்கத்திடமிருந்து சுதந்திர காலம் முதல் இன்று வரை பெறுகின்றனர். இதுதான் அவர்கள் அரசியல் பொருளாதார தளங்களில் பெரும் வளர்ச்சியைப் பெறுவதற்கு ஓர் முக்கிய காரணம். இந்த அரசியல் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு அவர்கள் அதன் அடுத்த நிலைக்கு நகர்கின்றனர், அது ஆட்சியதிகாரம் சார்ந்தது. இதுவரை எவரெல்லாம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தனரோ அவர்களையும் கடந்து தங்களின் ஆட்சியதிகாரத்தை நிறுவ முயற்சிக்கின்றனர். அவர்களின் கடந்தகால ஒடுக்கப்பட்ட வரலாற்றை கூறினால் அது அவர்களுக்கு அவமரியாதையைத் தருவதோடு ஆட்சியதிகாரத்திற்கு இடையூறாக இருப்பதைத் தவிர்க்க இயலாது. எனவே, அந்த வரலாறு எந்த வடிவத்திலும் இருந்தாலும் அதை அழிப்பதோடு அதை உருவாக்கிய ஆய்வாளர், படைப்பாளரைத் தாக்குகின்றனர். அவர் தன் சுயசாதியைச் சேர்ந்தவராயிருந்தாலும் தாக்குதலிலிருந்து தப்பிக்க இயலாது. எனவே, இதை வரலாற்று அழித்தொழிப்பு எனலாம்.
வரலாற்றை அழிக்கும் அவர்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்கள் கட்டமைத்த பொய்யை மறுக்கின்றனர். ஆனால் அவர்களைப் போல் இவர்களும் வேறுமொழில் பொய்யைக் கட்டமைக்கின்றனர். அந்தப் பொய் என்பது ‘ஆண்டப் பரம்பரை’ என்பதாகும். தமிழ்ச் சமுகத்தில் பெரும்பாலான சாதிகள் இந்த ‘ஆண்டப் பரம்பரை’ பொய்யைக் கட்டமைக்கின்றன. இந்தப் பொய்யைக் கோராத சாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘ஆண்டப் பரம்பரை’ கற்பிதத்தைப் பொய் எனத் தர்க்க, தரவு அடிப்படையில் புறக்கணித்துவிட முடியும். ஒரு சாதியைச் சேர்ந்த ஏதோ ஒருசில குடும்பம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த சாதி முழுமைக்கும் ஆட்சியில் இருந்தது என்று அவர்கள் கோருவதை ஏற்கமுடியாது. காரணம், அவர் தன் சாதி மக்களை எவ்வாறு அணுகினார்? அந்தக் குறிப்பிட்ட மன்னர் தன் சாதி உறுப்பினர் அனைவருக்கும் ஆதரவாக செயல்பட்டாரா? அவர் ஒருபோதும் தன் சாதி உறுப்பினர்களுக்கு எதிராக செயல்பட்டது இல்லையா? அவர்களைச் சுரண்டியது இல்லையா? எனப் பல கேள்விகளை எழுப்பினால் எதிர்மறையான பதில்தான் கிடைக்கும். சகோதர/சகோதரி இரத்த உறவுகளுக்குள் ஒருவர் பெரும் பணக்காரராகவும் மற்றவர் நடுத்தர வர்க்கத்தையோ அல்லது அன்றாடக் கூலியாகவோ இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு திருமண உறவு மட்டுமின்றி ஒருவர் மற்றொருவர் இல்லத்துக்குச் சென்று விருந்தோம்பல் உட்பட எதுவும் நடைபெறுவது அரிது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது மன்னராக இருந்தவர் தன் சாதி மக்களை தனது ஆட்சிக்குட்பட்ட மக்கள் என்றுதான் நடத்தியிருப்பார். தன் சாதியைச் சேர்ந்தோர் என்பதற்காக அவர் அன்பு மழையைப் பொழிந்திருக்க வாய்ப்பு ஒருபோதும் இல்லை. காரணம், அதிகார அமைப்பில் கொடூரமானவைகளில் ஒன்று மன்னராட்சி முறை. இதில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆட்பட்டனர். மன்னர் பலர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தோடு இணைந்துகொண்டு மக்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்கு உதாரணங்கள் நிரம்பக் கிடைக்கின்றன. எனவே, தன் சாதியைச் சேர்ந்த ஒருவர் மன்னராக இருந்தார் என்ற காரணத்திற்காக அதை அந்தச் சாதியின் ஆட்சி எனக் கூறுவது ஓர் அப்பட்டமான பொய். அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் செயலும்கூட. எனவே, ஏற்கனவே ஆட்சியதிகார தேவையிலிருந்து உருவாக்கப்பட்ட பொய்க்கு மாற்றாக அல்லது அதற்கு எதிராக எழுதப்பட்டவையும் வரலாற்றை அழித்து பொய்யைப் படைக்கின்றன. அவ்வாறானால் வரலாறு எழுதும் போக்கு இங்கு நடைபெறவே இல்லையா?
சாதிய சமூகத்தில் வரலாற்றை எழுதும் போக்கு இரண்டு முகாம்களில் இருந்து உருவானது. ஒன்று இடதுசாரி முகாம், மற்றொன்று பகுத்தறிவு முகாம். பின்னது ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பொய்யை ஏற்க மறுத்தது. ஒடுக்கப்பட்ட மக்கள் குழுக்களை அப்பொய்யை புறக்கணிக்க வற்புறுத்தியது. அப்பொய் மீது மிகக் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது. இது குறிப்பிட்டு கூறுமளவிற்கு வரலாறு எழுதவில்லை, பகுத்தறிவு முகாமின் நோக்கமும் வரலாற்றைக் கட்டமைப்பது அல்ல. எனினும் வரலாற்றைக் எழுதும் கூறுகள் அதில் அடங்கியிருந்தது. வரலாற்றை எழுதும் பெரும் முயற்சியை இடதுசாரி முகாம் எடுத்தது. இது இடதுசாரி கட்சி சார்ந்து மட்டுமின்றி கார்ல் மார்க்ஸ் வழங்கிய முறையியலை அடியொற்றி அறிஞர்கள் சிலர் எழுதினர். இந்த முகாமில் இருந்த அடிப்படைச் சிக்கல் அது சாதி அமைப்பை நிலவுடைமையின் ஒரு வடிவமெனக் கருதியதாகும். ஆனால் சாதி அமைப்புக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் கிளர்ச்சியானது இடதுசாரி முகாமை வரலாற்றை வேறு கண்ணோட்டத்திலும் அணுகத் தூண்டியது.
தலித் குழுக்களிடம் வரலாற்றை அணுகுவதில் இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்கள் இருக்கின்றன: 1) ஏற்கனவே குறிப்பிட்ட அழித்தொழிப்பும் பொய்யைக் கட்டமைத்தலும், 2) சமத்துவ கருத்தியலை வலியுறுத்திய காலத்திலிருந்து வரலாற்றைத் தொடங்குதல். இரண்டாம் வகைப்பட்ட கண்ணோட்டத்தை வரலாறு எழுதும் போக்கு என ஏற்றுக் கொண்டாலும் அதில் போதாமை இருக்கிறது. அதாவது, இந்த முகாம் சமத்துவ கருத்தியலைப் போதித்த பவுத்தத்தை வரலாறு எழுதுவதற்கான தொடக்கப் புள்ளியாகக் கொண்டுள்ளது. மேலும், உற்பத்தி முறையில் ஏற்பட்ட மாற்றம் அதனால் விளைந்த புதிய சாதிகள் போன்றவற்றை புறக்கணித்தது. பவுத்தத்திற்கு முன்னரும் வரலாறு இருப்பதை தலித்-பவுத்த முகாம் கணக்கில் கொள்ளவில்லை. பவுத்தத்தையே தனக்கான அடையாளமாகக் கோருகிறது. இதனால் அது மதம் என்ற நிறுவனத்திற்குள் சிக்கிக் கொள்கிறது. இது பின்நவீனத்துவம் முன்வைத்த அடையாள அரசியலின் ஒரு தாக்கம் எனலாம்.
பின்நவீனத்துவ அடையாள அரசியலின் தாக்கம் பெரும்பாலான சாதிகளிடம் உள்ளன. அவை ஏற்கனவே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்வைத்த பொய்யை மீண்டும் தங்களின் அடையாளமென ஏற்கத் தொடங்கின. அதாவது, பார்ப்பனியம் கட்டமைத்த அல்லது அதுபோன்ற தோற்றக் கதைகளையே தனது அடையாளமென ஏற்றுக் கொண்டன. அக்கதை பார்ப்பன-சாதி இந்துக்களுக்கு சேவை செய்வதற்காகவே சூத்திரர்கள் படைக்கப்பட்டனர் எனக் கூறுவது அனைவரும் அறிந்தது. இந்த அடையாள அரசியல் வேண்டுமென்ற சில அடிப்படையான கேள்விகளை எழுப்பத் தவறுகிறது. விவசாயம் செய்வதற்கென ஒரு சாதி படைக்கப்பட்டதென்றால் விவசாயம் கண்டுபிடிப்பதற்கு முன்னர் என்ன தொழிலை அந்தச் சாதி செய்தது? வெளுப்பது வண்ணார் சாதியின் வேலை எனக் கூறப்படுகிறது. மனிதர்கள் அம்மணக்கட்டையாகச் சுற்றித் திரிந்த காலம் உண்டு, அதன் பின்னர் இலைகளைக் கொண்டு அந்தரங்கங்களை மறைக்கத் தொடங்கினர். இந்தக் காலங்களில் வண்ணார் சாதியின் தொழில் என்ன? ஒரு தொழிலை ஒரு சாதியின் அடையாளமெனக் கூறும்போது அத்தொழில் கண்டுபிடிப்பதற்கு முன்னர் அச்சாதியின் தொழில் என்ன? அந்தச் சாதி எந்தச் சாதியிலிருந்து உருவானது? இவ்வாறான பல கேள்விகள் வரலாற்றை எழுதுவதற்கு எழுப்பப்பட வேண்டும். ஆனால் அவை குறிப்பிடும்படியாக எழுப்பப்படவில்லை. இத்தகைய கேள்விகள் வரலாற்றை எழுதுவதற்கு முக்கியமான திறவுகோலாக அமையும்.
முடிவுரை
சாதி சமூகத்தில் வரலாறு எனக் கூறப்படுவதில் பெரும்பாலும் பொய்தான் நிரம்பியிருக்கிறது. வரலாறு அரசியல் பொருளாதார ஆதிக்கத்திற்கு பெருந்துணை புரிவதால் மெய்க்குப் பதில் பொய் கட்டமைக்கப்படுகிறது. இதனூடாக போலித்தனமான வாழ்க்கை முறையும் உருவாக்கப்பட்டுள்ளது. சாதி அமைப்பு அடிப்படையில் தன்னலமானதாகவும் பொதுநலன் இல்லாமலும் இருப்பதால் அரசியல் பொருளாதாரா தளத்தில் ஒவ்வொரு சாதியும் தாங்களே ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எத்தனிக்கின்றன. எனவே, அது ‘ஆண்டப் பரம்பரை’ என்ற பொய்மையைக் கட்டமைக்கிறது. இதற்கு முரணாக வரலாற்றை எழுதும் முயற்சி முதலில் அரசியல் பொருளாதார அதிகாரத்திற்கு பின் மறைந்துள்ள பொய்யைக் கட்டவிழ்ப்பது அவசியம். மனிதகுல வரலாற்றை எழுதுவதற்கு புவிப் பரப்பின் இயல்பு, அதனோடு மனிதன் நடத்திய போராட்டம், இயற்கையை சார்ந்திருப்பதில் தொடங்கி அதைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்து அதன் மீது ஆதிக்கம் செய்தல், உற்பத்தி முறை விளைவித்த மாற்றம் எனப் பலவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இதற்கு பொருளியல் கண்ணோட்டமும் பன்புலப் பயிற்சியும் அவசியம். இறுதியாக, சாதி சமூகம் பொருளியல் நிலைமையில் மாற்றங்கள் பலவற்றைக் கண்டிருப்பினும் மனித உறவுகளில் அது எண்ணற்ற நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட பொய் விளைவித்த போலித்தனமான வாழ்க்கையையே இன்றும் வாழ்கிறது. சாதிய சூழலில் வரலாறு எழுதும் போக்கைக் காணுகையில் இங்கு எழும் அடிப்படையான கேள்வி: எந்த நூற்றாண்டில் சாதி சமூகம் இருக்கிறது? கால ஓட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறது எனக் கூறுவது பொருத்தமானதா அல்லது அது இடைக்காலத்தில் இருக்கிறது எனக் கூறலாமா?
கோ. ரகுபதி
உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, திரு ஆ. கோவிந்தசாமி அரசினர் கலைக் கல்லூரி, திண்டிவனம்.