அபத்தங்களைப் பேசுதல் கூடாதா..?

coloredபத்திரிகைகளில் எனது படைப்புகள் வரத்தொடங்கிய காலம். பெரும்பாலும் நகைச்சுவை துணுக்குகள்தான் எனக்கு சுலபமாகக்  கை கொடுத்தன. நண்பர்களுடனான உரையாடலில் இருந்தும் வீட்டிலும் உறவினரிடத்திலும் கிடைத்த நகைச்சுவை உரையாடல்களையும் கொஞ்சம் மாற்றி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். பள்ளியில் பிரசுரமான படைப்புகளை காட்டி, பள்ளிக்கு வெளியிலாவது நான் கெட்டிக்காரனாக இருக்க வேண்டியிருந்தது.

இப்படி வளர்ந்த என் எழுத்து ஆர்வம் கவிதை எழுதும் விபரீதத்தில் போய் முடிந்தது. எழுத்தாளராக ஆர்வம் இல்லாதவர்களே அப்போது கவிதைகள் எழுதிக்கொண்டிருந்ததால் நான் என் அடையாளத்தைத் தக்க வைத்துக்கொள்ள பத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்ப அவை பிரசுரமும் ஆயின. அவ்வாறு பிரசுரமான கவிதையை நாளிதழிலிருந்து வெட்டி எடுத்து அதை ஊரில் உள்ளவர்களிடம் காட்டி வந்தேன். அப்படி ஒருதரம் ஒரு பெரியவரிம் காண்பித்தேன். அவர் அந்தக் காலை வேளையிலேயே நல்ல சுரம் ஏற்றியிருந்தார்.

கவிதையை வாசித்தவர் பேச ஆரம்பித்தார்,

“தம்பி நானும் இந்த மாதிரி நிறைய எழுதியிருக்கேன். வராத பத்திரிகை புக்கே இல்ல தெரியுமா. சும்மா உட்கார்ந்திருந்தாலே அப்படியே வந்து ஊத்தும்..”

நல்லவேளையா பேச்சு வேகத்தில் கையில் இருந்த கவிதையை தவறவிட்டார். கீழே விழவும் அதை அப்படியே பிடித்து நானும் தப்பிக்க சரியாக இருந்தது.

உனக்கு முன்பே நான் கவிதைகள் எல்லாம் எழுதிட்டேன். நான் பெரிய ஆள், உன்னை விட எனக்கு அதிகம் தெரியும் போன்ற பேச்சுகள் குடிபோதையில் இருக்கிறர்களுக்கு மட்டுமல்ல. போதையற்ற மனநிலையில் இருப்பவர்களுக்கும் உண்டு.

நானும்தான் எழுதியிருக்கேன். நானும்தான் பாட்டு பாடுவேன். நானும்தான் வேகமா ஓடுவேன். நானும்தான் நல்லா சமைப்பேன். நானும்தான் நல்லா சம்பாதிச்சேன். என்று கூறி பல இடங்களில் தங்களில் இருப்பை தக்கவைத்துக்கொள்ள பலரும் முயன்று கொண்டே இருக்கிறார்கள். எதிரே இருப்பவரின் உழைப்பயோ திறமையையோ அங்கீகரிப்பதிலிருந்து தப்பித்து தாழ்வுணர்ச்சி அடைவதிலிருந்து தப்பிக்க இதுபோன்ற வசனங்கள் உறுதுணையாகிவிடுகின்றன.

பதில் சொல்வது ஒருரகம் என்றால் கேள்வி கேட்பது மற்றுமொரு ரகம். தங்களை நியாயம் சொல்பவர்களாகக் கற்பித்துக்கொண்டு, ‘நீங்கள் ஏன் அதையெல்லாம் எழுதுகிறீர்கள் நீங்கள் செய்வது உங்களுக்கே தவறாக தெரியவில்லையா’ என்பது போன்ற தொணி பலரது பேச்சில் கலந்து வந்திருக்கிறது. குறிப்பாகப் பொதுபுத்தியில் நம்பப்படும் எதையுமே கேள்விக்குள்ளாக்குவதை விரும்பாதவர்கள்  இம்மாதிரி அபத்தங்களை  பேசுதல் தவிர்க்கவேண்டியது என வலியுறுத்துவமுண்டு.

மலேசியத் தமிழ்ச்சமூகம் பேசப்படாத விடயங்கள் பேசப்படாமல் இருப்பதே பாதுகாப்பென நம்புகின்றனர். சாதியின் தாக்கம் குறித்து பேசினால், அது குறித்து பேசுவதால்தான் இளம் தலைமுறைக்கு அது குறித்து தெரியவருகிறது எனச்சொல்லும் அறிவாளிகளால்தான் குஷ்பு ‘செக்ஸ்’ குறித்து கூறிய கருத்துகள் சர்ச்சையாக்கப்பட்டன. இவ்வாறான ஒரு சமூகச் சூழலில்தான் நான் என் எழுத்தை சமூகத்தின் பொதுபுத்திக்கு ஒவ்வாத விடயங்கள் குறித்து குறிவைக்கப் பணிக்கிறேன். அதன் மூலம் இந்தச் சமூகத்தைக் கிண்டல் செய்ய முயல்கிறேன். சில சமயம் என்னையே நான் கிண்டல் செய்துக்கொள்கிறேன்.

ஏய்ட்ஸ் குறித்து பேசுகிறோம். அதன் விளைவுகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இதன் மூலம் கேட்பவர்கள் தெளிவடைவார்கள் என்பதை புரிந்துக்கொள்ளாமல் இதை தெரிந்து கொள்வதால் இளைஞர்கள் ஆணுரைகளை அதிகம் வாங்குவார்களே என கோபித்தால் அது அறச்சீற்றமாகிவிடாது. இவ்வாறு அறச்சீற்றத்துடன் குரல் உயர்த்தியவர்கள் அரைச்சீற்றத்துடன் அடங்கி வாழும் சூழலை காலம் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

எழுத்து இந்தச் சமூகம் நம்பும் ஒன்றைச் சந்தேகப்பட முழு சுதந்திரத்தையும் கொண்டுள்ளது. நகைச்சுவை எழுதுவதில் தொடங்கிய என பாலியம் இன்றும் அதைதான் செய்கிறது. ஆனால் அவை சமூகத்தைச் சங்கடப்படுத்துவதுதான் வேடிக்கை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...