1.
எனக்குப் பிறகு
உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து
எண்ணிப் பார்க்கிறேன்
பாவமாய் இருக்கிறது
நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை
எதைக்கொண்டு அள்ளி முடிவாள்
நீ மறக்க முடியாமல் அவ்வப்போது
உச்சரிக்கப் போகும் என் பெயர்
இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும்
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை, மச்சங்களை
உன் உடலின் ஒவ்வொரு செண்டிமீட்டரையும் நான் எப்படி தொட்டிருப்பேன்
என கலங்கித் தவிப்பாள்
நம்மைக் குறித்த கதைகளை மறக்க
அசுர வாக்குறுதிகளை அவள் தரவேண்டியிருக்கும்
என்னைப் போன்ற ஒரு போக்கிரியை
உன்னைப் போன்ற நல்ல ஆண்மகன்
எப்படி காதலித்திருக்க முடியும் என்ற கேள்வி
அவளை உறங்கவிடாது
அடைத்து வைத்திருக்கும் கதவுகளை மீண்டும் மீண்டும்
நீ ஏன் சரிபார்த்து சாத்துகிறாய்
படுக்கையறையின் சுவர்களை
நீ ஏன் தட்டிப்பார்த்துக்கொள்கிறாய்
என அவளுக்கு இறுதிவரை புலப்படாது
உன் தோலின் மடக்குகளில் தங்கியிருக்கும்
என் பூதங்களை வென்று தான்
ஒரு சிறு முத்தத்தையேனும் உனக்குத் தர முடியும்
2.
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
பிங்க் வோட்கா போத்தலை திறந்து ஒரே மடக்கில் குடி
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
இன்று சந்தித்தவனின் தொலைபேசி எண்களை மனனம் செய்
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
பகைவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து மன்னி ப்பு கொடு
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
சன்னல் திரைச்சீலைகளை நான்காவது முறையாக தூசி தட்டி வை
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
முருங்கை மரத்தில் தொங்கும் காய்களை எண்ணிப்பார்
உனக்கு கவிதை வரவில்லையென்றால்
கட்டிலுக்கு கீழே பதுங்கி தூங்கி விடு
3.
என் பெயர் உனக்கு சவாலாக இருக்கிறது
உன்னை உண்மை சொல்ல வைக்கிறது
உன் உதடுகளை , நாக்கை, பற்களை,
அதிலிருக்கும் துளைகளை, அன்னங்களை, இடையிலிருக்கும் வெளிகளை நரம்புகளை
முழுமையாக அசைக்க வைக்கிறது
என் பெயரை சரியாக உச்சரிக்கும் வரை
உன்னை முழுமையாக நம்ப விடாமல் தடுக்கிறது
4.
நாம் இனி நண்பர்களாக இருப்போம்
இந்த வரியை நீங்கள் யாராவது
கண்ணீரில்லாமல் கடந்திருக்கிறீர்களா?
இல்லையென்றால் சொல்லியனுப்புங்கள்
உங்களை கட்டியணைக்க வேண்டியிருக்கிறது
முகம்பார்க்கும் கண்ணாடியைப்
பார்த்துவிடும் போதெல்லாம்
ஏதோ பெருந்தவறிழைத்தவள் போல
மறுகும் உடலுக்கு கதகதப்பு தேவையாய் இருக்கிறது
5.
கருணையாய் இருங்கள்
உங்கள் இதயம் குறுங்கத்தியாக மாறும்வரை
இன்னும்
அக்கத்தியை பயன்படுத்தும் நேரம் வாய்க்காதவரை
கருணையாய் இருங்கள்
என்னை ஈர்த்த புத்தகம்…
தங்களின் உலகின் அழகிய முதல் பெண்
தமிழச்சி லீனா மணிமேகலைக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்…
பெண்மையின் பரிபூரண சக்தி…
பிடறியிலிருந்து கிளந்தேழும் மயிர்க்கூச்சம்…
தேக கூடிலிருந்து தேன் எடுக்க
நாவில் நுனியில் கொழுத்தப் பட்ட பிழம்பு…
அனிச்சை கொன்று அனுப்பப் பட்ட
அதீத கொடூரம்…
ஆண்மையென அவதரித்த
அரக்கர்களின் கோலருக்க
சுயம்பாய் உருவான ருத்ரப் பெண்மை…
ஆவேசமாய் நடை போடும்
எண்ணப் பேரலைகளின்
எழுத்து வடிவம்…
நகர சுடுகாட்டின்
பிண வாடை சொல்லும் ஒற்றை மல்லி…
கடவாய்வரை அறைக்கப் பட்டு
கடித்துத் துப்பிய கரும்புச் சக்கையின்
ஈரத்தில் ஒட்டி கொண்ட குருதியின் வரலாறு…
சொல்லிவிட முடியாமல் தகிக்கும்
கோடி உயிர்களின் உயிர் நனைக்க
எழுத்தாணி முனைகொண்டு
புத்தகத்தோடு புணர்த்து ஈனப்பட்ட
திரவப் புழுக்களின் கருங்கடல்…
அதன் பேரலைகளின் நடுவே
திடீரென விழுந்து நீர்குமிழியாகிப்
போன ஒரு துளி திடப்போருள் நான்…
என்னை உருக்கியத்ற்கு நன்றி …
தோழன்,
ம.முத்தரசு
~*~
Putumaiyaai irukkiratu, unggal paarvai.Adutta katta padaippilakkiyattin munnodiyo!
Kaviythay alagiyaliyn aathangam manam rasikum vilayattu
லீனாவின் கவிதைகள் கையில் சொட்டிய அமிலம் போல. லீனாவால் வாழ்வின் Cliché & Streotypical ஹம்பக்குகளை மிக எளிதாகவும் உக்கிரமாகவும் வெளிக்கொண்டு வரமுடிகிறது. ‘உனக்கு கவிதை வரவில்லையென்றால்’ மிக முக்கியமான ஒன்று. ‘கருணையாய் இருங்கள்’ என்கிற கவிதையும்.
ஒற்றை வரியில் அருமை…
Migavum arumai…pengalin menmai gunathirkum soolalkum ulla idaiveligal thangalin karunai kavithiyal nirapa padugintana. …..
கனியைப்பிழிந்தால் சாறு வரும். ஆனால், கவிதைகளில், லீனா மணிமேகலை தன்னுடைய உணர்வுகளைப்பிழிகிறார். அவரது கவிதைகளில் வார்த்தைகளே இல்லை. அவை, வெறும் கருவிகளே. ஒரு பெண்ணின் ஆகிருதியை இவ்வளவு நுட்பமாக வடிப்பதில், அவர் வெற்றி பெற்று விடுகிறார். இவர் தமிழகத்தின் கமலா தாஸோ என்று எண்ணத்தோன்றுகிறது !! வாழ்த்துக்கள் லீனா …! உம்மைக்குறித்து பிற சக தமிழ்ப்படைப்பாளர்கள் பெருமிதம் கொள்ளுவர், அடியேனைப்போலவே. ..ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.
ஆர்.டி.எஸ்.ராஜன்
16.07.2023
கவிதையின் வரிகள், மூளையின் வரிகளை தூங்கவிடவில்லை.
கடந்த 1 ஆம் தேதி வேலூரில் சில நிகழ்ச்சிகளுக்காக நானும், என் மனைவியும் சென்றிருந்தோம். நிகழ்ச்சிகள் முடித்து, 2 ஆம் தேதி சென்னை திரும்ப. மதியம் 12 மணியை தேர்ந்தேடுத்தேன். அப்போழுது தான் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சிறிது குறைந்திருக்கும்.
புறப்பட்டு 45 நிமிடங்களில் காஞ்சிபுரத்தை நெருங்கிய சமயத்தில், இறைச்சலோடு இருக்கும் திரைபாடல்களை ரேடியோவின் FM பண்பலை வரிசையில் கேட்டுக் கொண்டே, என் மனைவியிடம் “எவ்வளவோ தமிழ் கவிதைகள் இருக்கும் போது, அவற்றில் சிலவற்றை படித்தால் நன்றாக இருக்கும் அல்லவா?” என்று கூறிக் கொண்டே இருக்கும் வேளையில், என் மனைவியோ பண்பலை வரிசையை மாற்றிக் கொண்டே இருந்தாள்……
நான் கூறியது போல், ஒரு பண்பலையில் மிக அழகான பெண் குரல்…..
ஒரு பெண் கவிஞரை பற்றிய முன்னுரை….
“பெண்ணியம் மாறாத ஆண்மையுடன், ஆண்மையை குறைக்காத பெண்ணியியத்தை கூறும் ஒரு கம்யூனிச பெண் கவிஞர். பிரிந்து சென்ற தன் கணவனை பற்றி ” என்று கூற
சட்டென்று என் முழு கவனமும் வாகன வரிசையில் இருந்து,
பண்பலை வரிசைக்கு மாறியது….
வரிகளை அந்த இனிய பெண்குரல் வாசிக்க தொடங்கியது.
“எனக்குப் பிறகு
உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன்
பாவமாய் இருக்கிறது. நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை
எதைக்கொண்டு அள்ளி முடிவாள்…..”
அடேங்கப்பா…..
என்ன ஒரு வரிகள் என உணர்வதற்கு முன்…..
இடையில் “பூவே செம் பூவே” என்ற அருமையான பாடல்…
பண்பலை வரிசையின் எண் 102.5 என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டேன்.
வாகனம் காஞ்சிபுரம் பெரிய மேம்பாலத்தை கடந்துவிட்டது..
பண்பலை வரிசை தன்னை சென்னை வரிசைக்கு மாற்றிக் கொண்டது….
மீண்டும் அதே இரைச்சல் பாடல்கள்.
வாகனத்தின் வேகத்தை குறைத்து பார்த்தேன்.
“காற்றும் சதி செய்கிறது” என்ற வாக்கியத்தை முதல் முதலில் உணர்வது போல் இருந்தது எனக்கு.
வாகனத்தை திருப்பிவிடலாமா? என்று யோசிப்பதற்குள்….
எப்போதும் இருக்கும் நெடுஞ்சாலை வாகன நெரிச்சல்.
ஆனால், அந்த வரிகள் மட்டும் என்னை தூங்கவிடவே இல்லை.
அந்த பெண் கவிஞரின் பெயர் கூட எனக்கு தெரியாது.
FM பண்பலை வரிசை தானே, எப்படியும் தேடிப்பித்துவிடலாம் என்பதற்குள்…
2 வாரங்கள் ஓடிவிட்டது.
இன்று தான் சிறிது நேரம் கிடைத்தது. இணைய வலையில் தேடி பண்பலை வரிசையை கண்டுபிடித்தேன். அது ஏ.ஐ.ஆர் தர்மபுரி பண்பலை வரிசை.
ஊடக தொடர்பு கொண்ட என் நண்பரிடம் அந்த பண்பலையில் தொடர்புக்கு ஒரு நபரை கேட்டேன்.
ஏன் என்ற விவரத்தையும் கூறினேன்.
அவர் என்னைவிட தமிழின் மீது, கவிதையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
விவரங்களை கூறிக் கொண்டிருக்கும்போதே…..
அவர் அந்த கவிதாயினியின் பெயரை சட்டென்று கூறிவிட்டார். “லீனா மணிமேகலை”.
விவரங்களை கூறி முடிப்பதற்குள், இணைய வழி தொடர்பு முகவரியை அனுப்பிவிட்டார்.
ஆம். அதே கவிதை.
உங்களுக்காக….
“எனக்குப் பிறகு
உன்னைக் காதலிக்கப் போகிறவளைக் குறித்து
எண்ணிப் பார்க்கிறேன்.
பாவமாய் இருக்கிறது.
நான் நொறுக்கிப்போட்டிருக்கும் உன்னை,
எதைக்கொண்டு அள்ளி முடிவாள்.
நீ மறக்க முடியாமல் அவ்வப்போது
உச்சரிக்கப் போகும் என் பெயர்,
இரும்புத்துகள்காய் அவள் கண்களை அரிக்கும்.
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
கழுத்தை, தோள்களை, உதடுகளை, காதுகளை, தேமல்களை, மச்சங்களை
உன் உடலின் ஒவ்வொரு செண்டிமீட்டரையும் நான் எப்படி தொட்டிருப்பேன்
என கலங்கித் தவிப்பாள்.
நம்மைக் குறித்த கதைகளை மறக்க
அசுர வாக்குறுதிகளை அவள் தரவேண்டியிருக்கும்.
என்னைப் போன்ற ஒரு போக்கிரியை
உன்னைப் போன்ற நல்ல ஆண்மகன்
எப்படி காதலித்திருக்க முடியும் என்ற கேள்வி
அவளை உறங்கவிடாது.
அடைத்து வைத்திருக்கும் கதவுகளை
மீண்டும் மீண்டும் நீ ஏன் சரிபார்த்து சாத்துகிறாய்,
படுக்கையறையின் சுவர்களை
நீ ஏன் தட்டிப்பார்த்துக்கொள்கிறாய்,
என அவளுக்கு இறுதிவரை புலப்படாது.
உன் தோலின் மடக்குகளில் தங்கியிருக்கும்
என் பூதங்களை வென்று தான்
ஒரு சிறு முத்தத்தையேனும் உனக்குத் தர முடியும்.”
இப்படி முடிகிறது அந்த கவிதை.
வைரமுத்து கவிதைகளையே
வைரமாக எண்ணியிருந்த எனக்கு
அதை அறுக்கும் வைரத்தை கண்டேன்…
RSS.Rajan.