எல்லைகளைக் கடந்த மொழியும் கவிதையும்: மொழிபெயர்ப்புக் கவிதைகள்

kulaly 2தமிழ்க்கவிதை இயக்கத்தில் மொழிபெயர்ப்புக் கவிதைகளின் வரவு புதிய பாணியிலான கவிதை உருவாக்கத்திற்கு வழி வகுத்தது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் மொழிபெயர்ப்புகளோடு தமிழோடு தொடர்பற்ற சீன, ஆப்பிரிக்க, ஜப்பானிய, லத்தீன் அமெரிக்கக் கவிதைகள் தமிழில் பரவலாக மொழிபெயர்க்கப்படுவதன் வழி புதிய வாழ்பவனுங்களைத் தமிழ்க் கவிதை உள்வாங்கிக் கொள்வதோடு, பாசாங்கற்ற அக்கவிதை மொழியினைத் தமிழ்க்கவிதைகளும் தன்னுள் ஏற்றிக் கொள்வதைப் பார்க்க முடியும்.

மொழிபெயர்ப்பின் வாயிலாக நம்மை வந்தடையும் கவிதைகளை வாசிக்கும்போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள், காட்சிப் பதிவுகள், கருத்தாக்கங்கள், கேள்விகள், அதிர்வுகள் ஆகியன புதிய தேடல்களைத் தரக்கூடியவை.

இன்றைய நிலையில் மொழிபெயர்ப்புக் கவிதைகள் குறித்த தேடல், வாசிப்பு, அதனை உள்வாங்கிக் கொள்வதற்கான தேவை நமக்கு அதிகமாகவே இருக்கிறது. எப்போதுமே வாழ்வு என்பது ஒரு சிறு வட்டத்திற்குள் அடங்கிப் போய்விடுவதில்லை. நாம்தான் அதைச் சிறிய வட்டத்திற்குள் அடக்கி வைத்துக் கொள்கிறோம். மலேசியச் சூழலில் தொடர்ந்து கவிதைத்துறையில் இயங்க விரும்புகின்றவர்கள் மிக அதிகமாகவே மொழிபெயர்ப்புக் கவிதைகளை வாசிப்பதையும் அதைத் தொடர் விவாதத்திற்குள்ளாக்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். கவிதைத்துறையின் சமகாலப் போக்குகளை உணர்ந்து கொள்ளவும், இத்துறையில் தொடர்ந்து காத்திரமாக இயங்கவும் இது துணைபுரியும்.

அதன் தொடக்கமாக, அமெரிக்க கருப்பின மக்களின் மகாகவி என கருதப்படுகிறவரான லாங்ஸ்டன் ஹியூஸின் (1902-1967) கவிதைகள் குறித்த அறிமுகம் முக்கியமானது.

லாங்ஸ்டன் ஹியூஸ் 1902-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் பிறந்தவர். ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ என அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடப்படும் கறுப்பின மக்களின் எழுச்சியைத் தலைமைதாங்கி வழிநடத்தியவர். நாவல், கவிதை, நாடகம், கட்டுரை எனப் பல்வேறு இலக்கிய வடிவங்களையும் கையாண்டவர். இசையோடு பாடப்படும் ஜாஸ் கவிதை (Jazz Poetry) என்ற வடிவத்தைத் தோற்றுவித்தவர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் என தற்போது அழைக்கப்படும் கறுப்பின மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஹியூஸ்.

அவரின் மேற்கு டெக்சாஸ் என்ற தலைப்பிலான கவிதை முக்கியமானது. மிக எளிய வரிகள். ஆனாலும், மீண்டும் மீண்டும் அந்த வரிகள் நெஞ்சுக்குள் நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கும்.

மேற்கு டெக்சாஸ்

பேயைப்போல் காய்ச்சும் சூரியன்

எனது மனைவி

அவள் பெயர் ஜோ

வயலில் பருத்தி எடுத்தபடி

அவள் கேட்டாள்:

“நம் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு

போகச் சொல்கிறார்களே என்ன ஆவோம்?”

பாசாங்கற்ற எளிய வார்த்தைகள். ஆனாலும் கவித்துவமானவை. பேயைப்போல் காய்ச்சும் சூரியன் எப்படி இருக்கும்? அவ்வளவு உக்கிரமான வெயிலா? அடுத்து, கணவனோடு சேர்ந்துழைக்கும் மனைவி. அவளின் அந்தப் பதற்றம் சட்டென நம்மைப் பற்றிக்கொள்கிறது.

நமது வாழ்வு இதுதானே? நமது முனியாண்டிகளும் மாரியம்மாக்களும் இதைத்தானே பிரட்டுக் களத்தில் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தோட்டங்கள் துண்டாடப்பட்டபோது இதுதானே நமது வாழ்வாகவும் இருந்தது. டச்சு, பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனித்துவ ஆதிக்கத்தின்கீழ் கருப்பினமக்கள் அடைந்த துயரத்தைப் போன்றதுதானே நமது வலியும். இதைத்தானே நாம் பதிவு செய்தாக வேண்டும்.

நமது வாழ்வைப் பதிவு செய்வதுதான் நமது இலக்கியமெனில் இதைப் பதிவு செய்வதுதானே நமது முதற்கடமையாக இருக்கவேண்டும்? மொழிபெயர்ப்புக் கவிதைகள் இப்படியான வாழ்வைப் பதிவு செய்வதற்கான நமது கடமையை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. அதைத்தான் அக்கவிதைகளின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம்

எப்போதும்

உனக்கு முன்னால்

கொஞ்சதூரத்தில்தான் இருக்கிறது

சாகும்வரையிலும்

அதை நீ அடைய முடியாது

என்னைத் தூங்கவிடாமல் செய்யும் கவிதை வரிகள் இவை. எல்லாருக்கும் யாரோ ஒருவர் தருவதாகச்சொன்ன நிலம் கொஞ்சதூரத்தில் இருக்கிறது. ஆனால், அந்நிலம் கைக்கெட்டுவதாக இல்லை. அந்நிலங்களைப் பற்றி நாம் ஏன் பேச மறுக்கிறோம்? அப்படியே பேசினாலும் இப்படிக் கன்னத்தில் அறைந்தாற்போல் பேசாமல் ஏன் பூசி மெழுகுகிறோம்? தோட்டங்கள் துண்டாடப்பட்டபோது பலருக்கு அவர்கள் தருவதாகச் சொன்ன நிலம் இதுதானே? நமது பள்ளிகளுக்கு, கோவில்களுக்குத் தருவதாகச் சொன்ன நிலங்கள் எங்கே? லாங்ஸ்டன் ஹியூஸக்குத் தருவதாகச்சொன்ன நிலம் வேறொரு கண்டத்தில் இருக்கலாம். அந்த நிலத்திற்கான தேவை என்பதும் வேறாக இருக்கலாம். ஆனால் நிலம் என்பது நிலம்தானே!

ஆனால்

உன் பிள்ளைகளின் பிள்ளைகள்

அவர்களின் பிள்ளைகளால்

இட்டுச் செல்லப்படுவார்கள் ஓர் இடத்திற்கு

அவர்களுக்கு முன்னால்

கொஞ்ச தூரத்தில்தான்

இருக்கும் அந்த நிலம்

காலங்காலமாய் தலைமுறை தலைமுறையாய் ஏமாற்றப்பட்ட வலியை எந்த வார்த்தைகளைக் கொண்டு சொல்ல முடியும்? இந்தக் கவிதை கருப்பினத்திற்கானது என நம்மால் எளிதாகக் கடந்து போய்விட முடியுமா? கண்டங்கள் பிரித்தாலும் சஞ்சிக்கூலியாய் இந்நாட்டிற்கு வந்த நமது பாட்டன், அவனது வழிதோன்றல்கள் கடந்துவந்த வாழ்வைத்தானே இந்த வரிகள் பேசுகிறது.

என் கனவுகள் உனக்குப் புரிகிறதா?

சில நேரம் புரிகிறது என்கிறாய்

சில நேரம் புரியவில்லை என்கிறாய்

எப்படியானாலும் பிரச்சினையில்லை

இனியும் கனவு காண்பேன்

அவரவருக்கான கனவுகள் அவரவருக்கானது. ஆனால், ஓர் இனம் அடிமைத்தனத்திலிருந்து மீட்சி பெறவேண்டும் என்ற வேட்கையில் கட்டியெழுப்பப்படும் கனவு எல்லாருக்குமானது. கனவு காண்பதை என்னால் நிறுத்திக்கொள்ள முடியாது என்பவன்தானே கவிஞன். அவன்தானே மனதிலிருந்து எழுகின்றவற்றை வார்த்தைகளில் பேசுகிறவன்.

 

இயேசு நாதரே!

நீர்

ஒரு கருப்பனாகப் பிறந்திருந்தால்

மீண்டும் உயிர்த்தெழுந்து வந்திருக்க முடியாது

வாழ்வதற்கான தகுதியை, தோலின் நிறம்கொண்டு தீர்மானிக்கும், மனிதகுலத்திற்கே அவமானமான சூழலில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். தோல்நிறம் கண்டு, சாதி வேறுபாடுகளைக் கொண்டு, மத அடிப்படையில் வாழ்வதற்கான தகுதி தீர்மானிக்கப்படுவது எவ்வளவு கொடுமையானது. கவிதையை வேறொரு கண்டத்திற்குரிய ஒருவர் எழுதியிருந்தாலும் மனிதர்களின் உயர்வு தாழ்வுக்கு வழிகோலும் சாதிமையை நம்மில் சிலர் இன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் வாசிக்கும்போது கவிதை நம்முடன் மேலும் நெருக்கமாகிறது.

லாங்ஸ்டன் ஹியூஸின் கவிதைகள் எளிமையான அமைப்பைக் கொண்டிருந்தாலும் அழுத்தமான மனப்பதிவுகளை உருவாக்குகின்றன. பெரும்பாலானான கவிதைகள் நமது வாழ்வையும் ஒத்திருக்கின்றன. போராடும் மக்கள், அவர்படும் துயரங்கள், ஆவேசம், வாழ்வின் நெருக்கடியை எதிர்கொள்வதில் ஏற்படும் வலி, கண்ணீர், தணியாத வேட்கையுடன் போராடும் போர்க்குணம் இப்படி எண்ணற்றவற்றைப் பேசுகின்றன. எல்லாக் கவிதைகளுமே நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன. மிக முக்கியமாக கவிதையில் நமக்கான தேடலை விசாலப்படுத்துகின்றன, நமக்கான கடமையையும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திப் போகின்றன.

குறிப்பு:- லாங்ஸ்டன் ஹியூஸ், கவிதை மொழிபெயர்ப்பு: ரவிக்குமார்., வெள்ளை நிழல் படியாத வீடு.

***

லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதைகள்

 

மௌனம்

 

உன் மெளனத்தின் அடுக்குகளிலிருந்த

வார்த்தைகளைப்

பிடித்துக் கொள்கிறேன்

சொற்களின் ஒலிகள்

செவிகளை வந்தடையத்

தேவையில்லை

எல்லா மௌனங்களும்

உன் வார்த்தைகளையே

பேசிக் கொண்டிருக்கின்றன

 

எனது மக்கள்

 

இரவு அழகானது

எனது மக்களின் முகங்களைப் போலவே

விண்மீன்கள் அழகானவை

எனது மக்களின் கண்களைப் போலவே

சூரியனும் அழகானதுதான்

எனது மக்களின் ஒளிரும் ஆன்மாவைப் போலவே.

 

கனவுகள்

 

கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்

கனவுகள் இறந்துவிடலாம்

வாழ்வென்பது பறக்கவியலாத

இறக்கை உடைந்த ஒரு பறவையைப் போன்றது

கனவுகளை சட்டெனப் பற்றிக் கொள்

கனவுகள் தொலைந்துப் போகலாம்

வாழ்வென்பது வரண்டுபோன வயல் அதில்

பனி கெட்டியாக உறைந்து கிடக்கிறது

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...