பாட்டாளிகளின் சூதாட்டம்

10945677_1405702809728958_5564443911096030837_n

 

 

 

 

 

 

பாட்டாளிகளின் சூதாட்டம்

 

ஏக வல்லமை பொருந்திய கன்வேயர் பெல்ட்டுகளின் பிதாக்களே
பௌர்ணமியைக் கண்டு வருடங்களாகின்றன
அமைதியாகக் கொஞ்சம் தூங்கவும் வேண்டும்

கூர் பற்சக்கரங்களை இணைத்தபடி
நீண்டுகொண்டே போகும் இக் கன்வேயர் பெல்ட்டை
எப்போதுதான் நிறுத்துவீர்கள்

காணாமல் போவது போலும்

கனவு காண்பதுபோலவும்

நான் தொழிற்சாலையின் வாயிற் கதவை கடந்துவிட்டேன்
இனி முழுமையாக இது எனது நாள்
கைகளை கால்களை தலையை
காற்றில் விருப்பப்படி அசைத்துக் கொள்ளலாம்

இத் தார்ச்சாலையும் பார்ப்பதற்கு கன்வேயர் பெல்ட் போலவே இருக்கிறது
மனிதர்களையும் வாகனங்களையும்
அது எங்கோ இழுத்துக் கொண்டு போகிறது
வீட்டை அடைந்துவிட்டேன்
நற்பேறு
வீட்டிற்குள் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

உறக்கத்தில் ஓர் கடல்நாகம்
எல்லையின்மையின் அமைதியில் நீந்துகிறது
பூதங்களின் அகண்ட நாக்கு சுழன்று வருகிறது – அது
கனவிலிருந்து நிஜத்திற்கு
வீட்டிலிருந்து கம்பெனிக்கு
இரக்கமின்றி எங்களை இழுத்துச்செல்கிறது

 

நிலக்கரியை, ரசாயனக் குவியல்களை, ஆலைக்கழிவுகளை

மூக்கொழுக அள்ளி அள்ளி அதில் வீசுகிறோம்

முடிவின்றி நீளும் இந் நாக்கோடும்,
இயந்திரங்களோடும்

எங்கள் வாழ்வை வைத்துச் சூதாடியாக வேண்டும்
இங்கிருந்து தப்பிட மார்க்கமில்லை
இதை நிறுத்துவதற்கான பொத்தானை நெருங்கவோ

எமக்கு அதிகாரம் இல்லை

ஆலையின் இரைச்சல் இருநூறு டெசிபலுக்கும் மேலான அன்று
எனது பொறுமையை, மனசாட்சியை,
அடையாள அட்டையை, கைக்கடிகாரத்தை
கன்வேயர்பெல்ட்டில் தூக்கிப்போட்டேன்

இன்றை விடவும்

சிறந்த உலகத்திற்கு கொண்டு செல்லும் என்ற பொய்யோடு

எனது மனைவியையும் குழந்தைகளையும்
அதில் அனுப்பிவைத்தேன்

நாளுக்கு நாள் உலோகச் சக்கரங்களின் வேகம் கூடுகிறது
அதன் இயக்கமும் சப்தமும் அச்சமூட்டுகின்றன

நிலைகுத்திய கண்களோடும்
நம்பிக்கையற்றுத் தொங்கும் கைகளோடும்
மக்கள் வரிசையாக அதில் ஏறத் துவங்கிவிட்டனர்

அந் நீள்வரிசையில் ஆலைக் கண்காணியும்கூட இணைந்துவிட்டார்

மனிதர்களின் இறுதி ஊர்வலங்களை
கன்வேயர் பெல்ட்டுகள் மிக எளிதாக்கிவிட்டன

தோல்வியுறும் கணத்தின் கொடும் நிசப்தம்

யாரும் எதிர்பார்த்திராத தருணத்தில்
ஓர் குழந்தை கன்வேயர் பெல்ட்டிலிருந்து
நம்பிக்கையோடு தாவிக் குதிக்கிறது

துள்ளலான ட்ரம்ஸ் இசை எங்கிருந்தோ அதிர்ந்து எழுகிறது

 

குறிப்பு:
விடுமுறை நாளிலும் விடாது சுழன்றுகொண்டிருக்கும் பெருஞ்சக்கரப் பற்களுக்குள் தனது தொடைஎலும்பை முட்டுக்கொடுத்துவிட்டு ஒயிலாக ஒரு பீடியை பற்றவைத்து தோழமைகளோடு பகிர்ந்துகுடிக்கும் காம்ரேட் முனியாண்டிதான் தன் பால்யத்தை மேற்காணும் கவிதையாக நினைவுகூர்கிறார்.

 

 

 

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...