தி சர்க்கிள்: மனக் காடுகளும் மதக் கோடுகளும்

12கிடக்கும் காடுகளைப் போல் மனிதனின் மனங்களுக்குள் அடர்ந்து கிடக்கும்  ஆசைகளும் கனவுகளும் மதக் கோடுகளால்  எல்லைப்படுத்தப்படும்  போது அதனால் விளையும் எதிர்வினைகள்  மதக் குற்றங்களாக விசாரணைக்குள் கைதாகிறது. இந்த மனக்காடுகளைச் சுமந்து கொண்டு சமூகத்தில் நடமாடும் மனிதனின் உணர்வுகள் மதக் கோடுகளால் பரிசீலனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மதத்தின் பேரில் பெண்களின் மேல் பாய்ச்சப்படும் பரிசீலனைகள் ஆண் ஆதிக்க ஆட்சிக்கு உட்பட்டே செய்யப்படுகிறது. கல்வியை மறுப்பது, கணவன், அல்லது உடன் பிறப்புகளின் துணை இன்றி எங்கும் செல்ல முடியாது, உடுத்தும் உடைகள் மதக் கோடுகளுக்கு வெளியே இருக்க முடியாது, போன்ற தடைகள் ஒழுக்கத்தை நிலை நாட்டும் பெயரில் ஒருதலைபட்சமாக்கப்பட்டு பெண் உரிமைகளை ஒடுக்குகிறது. ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் கைகளை முறித்துப் போடப்பார்க்கும் மதவாதிகளுக்கு எதிராக மனிதனின்  விடுதலை உணர்வு பல வடிவங்களில் போர் செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர் முறையில் மனிதனைச் சுலபமாகச் சென்றடையும் ஊடகங்கள் விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன; பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஒரு சமயக் கட்டமைப்பு முறையை எதிர்த்துப் பயன்படுத்தப்படும் ஊடகங்களை இயக்குபவர்கள்  சிறைக்குள் அடைக்கப்படுகின்றனர்.

ஷரியா சட்டத்தை அமல்படுத்தி வரும் ஈரான் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற அபத்தங்களைப் படம் பிடித்துக் காட்டிய பலர் இஸ்லாமியச் சட்டத்தின் பேரில் தண்டிக்கப்படுகிறார்கள். தண்டிக்கப்பட்டாலும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து பேசுவேன் என்று கூறுபவர்களின் வரிசையில் உலக அரங்கம் அறிந்திருக்கும் ஈரானிய பட இயக்குனர் ஜாஃபர் பனாஹி இடம் பெறுகிறார்.

“மனித சமூகத்தில் பெண்களின் சுதந்திரம் நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் சிறைக்கு வெளியே வாழ்ந்தாலும் பெரிய சிறைக்குள்தான் வாழ்கிறார்கள்” என்று ஜாஃபர் பனாஹி தம்முடைய படத்தைக் குறித்து கருத்துரைத்துள்ளார். 2000மாவது ஆண்டில் தங்கச் சிங்கம் விருது பெற்ற தி சர்க்கிள் திரைப்படம் ஈரானிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு இயக்குனர் ஜாஃபர் பனாஹியை வீட்டுக் காவலில் கொண்டு போய் அடைத்தது.  எந்தவொரு வன்முறையையும் காட்டாத படத்தில்  மனித ஈரமற்ற ஈரானிய அரசாங்கத்தின் சட்டங்களைக்  குறித்துப் பேசியதாலும் , தனித்திருக்கும் பெண்களை வேட்டையாடப்படும் மிருகமாக வருணித்ததாலும் இப்படம் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வீட்டுக் காவலில் பனாஹி 20 வருடங்களுக்கு வைக்கப்பட்டார். வசனம் எழுதுதல், படம் இயக்குதல், பேட்டி வழங்குதல், நாட்டை விட்டு வெளியே செல்லுதல் போன்றவைகளிலிருந்து தடை  செய்யப்பட்டார்  பனாஹி.  உள்ளூர் அரசாங்கம் அவருக்கு விலங்கிட்டு வீட்டுக்குள் முடக்கி விட்டாலும், சொல்லவந்த  கருத்துகளைச்   சுதந்திரத்துடன், மெல்லிய கதாபாத்திரங்களின் வழி சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்லும்  திறமை படைத்த பனாஹி உலக அரங்கில் கவனிக்கப்படக் கூடிய இயக்குனராக உருவெடுத்தார்.  தடைகள் விதிக்கப்பட்டாலும் 2003ஆம் ஆண்டு கிரிம்சன் கோல்ட், 2006 ஆம் ஆண்டு ஆப்சைடு போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆப்சைட் திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி விருதை வென்றது.

ஈரான் புரட்சியும் உரிமை வறட்சியும்

1979இல் ஈரானில் வெடித்த புரட்சி அந்நாட்டின் தலைநகரமான தெஹெரானை உலுக்கியது. “Marg bar Shah” அல்லது ஷாவுக்கு மரணம், “அமெரிக்காவுக்கு மரணம்” என்று நடுத்தரத்  தட்டு ஈரானியர்கள், இடதுசாரி பல்கலைக்கழக மாணவர்கள், ஆயதுல்லா கொமெய்னியின் இஸ்லாமிய ஆதரவாளர்கள் யாவரும் ஒன்றிணைந்து தெஹெரான் தெருக்களிலும் மற்ற நகரங்களிலும்  கோஷமிடத் தொடங்கினர்.  அக்டோபர் 1977 முதல் பிப்ரவரி 1979 வரை, முடியாட்சிக்கு ஒரு முடிவு கட்டுவதற்குக் குரல் கொடுத்தனர். யாரை அங்கே அமர்த்தவேண்டும் என்பதனை  அவர்கள் முடிவு செய்யாமலே இருந்தனர் .

1953, ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட பிரதமமந்திரியை பதவியிலிருந்து கழற்றிவிட அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை தீவிரமாக உதவியது. ஷா பதவியில் அமர்த்தப்பட்டார். தமது ஆட்சியில் நவீனச்  சிந்தனைகளைப் புகுத்தினார் ஷா.  பொருளாதாரத் துறையிலும், நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையிலும் நவீனத்தை ஆதரித்தார். பெண் உரிமைக்காகப் பேசினார். சாடோர் அல்லது ஹீஜாப் எனும் சொல்லப்படும் உடலை முழுவதுமாக மூடும்   உடை அணியும் முறையைச் தடை செய்தார்.

பெண்கள் உயர்கல்விவரை கல்வியைத் தொடரவும், பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஷாவின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது. இருப்பினும் இவரது ஆட்சியை எதிர்ப்பவர்களையும், அரசியல் எதிரிகளையும் சிறையில் தள்ளி துன்புறுத்தினார். சாவாக் எனும் ரகசிய போலிஸ் கண்காணிக்கும் நாடாக ஈரான் நடைமுறை ஆட்சி  மாறியது.

பெண்களுக்கான சுதந்திரத்தைப் போற்றும் ஷாவின் ஆட்சிப் போக்கு ஆயதொல்லா கோமெய்னி போன்ற  ஷியா மத குருக்களுக்குக் கோபத்தை மூட்டியது.  பிறகு இவர் ஷாவின் பிடியில் மாட்டாமால் இருக்க 1964-இல் ஈராக் நாட்டுக்கும் பிறகு பிரான்ஸ் நாட்டுக்கும் பறந்தார். ஷா அமெரிக்காவின் கைப்பாவை என்று அவரது  எதிராளிகள் வருணித்தார்கள்.

1970-களில் எண்ணெய் வளத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பன்மடங்கு லாபங்களை அனுபவித்தது ஷியாவின் ஆட்சியும் ஷியாவின் சொந்தக்காரர்களும். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளி இடிந்துகொண்டே சென்றது. 1975-இல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையினால் இடைவெளி விழுந்த மக்களுக்கு இடையே பதற்றம் தொடங்கியது.

மதகுருவின் மகன் இறப்புக்கு சாவாக் ரகசியப் போலீஸ்தான் காரணம் எனும் பேச்சுகள் பரவ ஆரம்பித்த பிறகு ஆயிரமாயிரம் ஆர்ப்பாட்டங்கள் தெருக்களில் நடத்தப்பட்டன. இதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
மதகுருவான ஆயதொல்லா கொமேனியின் படங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் மேய்ந்தனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஆயதொல்லா, ஷாவின் ஆட்சியைத் தூக்கி எறியுமாறு கட்டளை இட்டார்.  ஜனநாயகம் வேண்டும் என்று பேசிய இவரின் வார்த்தைகள் மெல்ல மெல்ல  மதவாசனையாகியது.

ஷாவை விரட்டி ஆட்சியில் அமர்ந்துவிட்ட மதகுரு ஆயதொல்லா கொமெய்னி, ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல் படுத்தினார். பெண்கள் உடல் முழுவதையும் மூடும் உடையணியும் முறையை சட்டமாக்கினார். பேச்சுரிமையும், ஊடக சுதந்திரமும் மதகுருக்களால் அடக்கப்பட்டது.

மதகுருக்கள் தலைமை வகிக்கும் இஸ்லாமிய நாடு( velayat-i faqih,) எனும் புதிய அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தினார் கொமெய்னி. “ஜனநாயகப் பேச்சுக்கு செவிகொடுக்காதீர். அவர்கள் இஸ்லாமுக்கு எதிரானவர்கள். நாட்டுப்பற்று, ஜனநாயகம் என்று பேசுபவர்களின் விஷப் பேனாக்கள் ஒடிக்கப்படும்” என்று கொமெய்னி விட்டுச் சென்ற வார்த்தைகள் ஈரான் ஜனநாயகத்தை அடியோடு புதைத்துவிடச் செய்துவிட்டது. புதைபட்ட ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க சுதந்திர நேசர்கள் இன்றும் ஈரானில் போராடி வருகிறார்கள். மதவாதச் சட்டங்களால் அதிகமாகப் பாதிக்கப்படும் பெண்களுக்காகப்  பேசியப் படமாக தி சர்க்கிள் திரைப்படம்  விருதுகளுடன் கொண்டாடப்படுகிறது.

ஆணாதிக்கச் சங்கிலி

தி சர்க்கிள் திரைப்படம் ஈரானிய சமூகத்தில் சவால் நிறைந்த  பெண்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் மீது சமயம் சுமத்திக்கொண்டிருக்கும் குற்றச்சாட்டுகளையும், பகிரங்கமாகப் பேசிய படம் தி சர்க்கிள். இயக்குனர் ஜாஃபர் பனாஹி மற்றும் வசனகர்த்தா கம்போசியா பட்ரோவி இருவரும் ஈரானிய சமூகத்தின் மத்தியில் தொடப்படாத அல்லது பேச அனுமதிக்கப்படாத கருவை ஈரானியன்  சினிமாவில் படம் பிடித்துக் காட்டி உள்ளனர். ஏழு பெண்கள், சமகால மனிதர்களின்   சமூக  நடப்பு முறையைப் பின்பற்றும் போக்கில் அவர்கள் சார்ந்திருக்கும்  சமய நம்பிக்கை , சமூக வாழ்வியல் கட்டமைப்புச் சட்டங்கள் யாவையையும்  கடந்துச்செல்லத் துடிக்கும் பெண்  மனதின் துடிப்புகளைக் காட்டுகிறது பனாஹியின் காமிரா.

The Circle என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் வரும் பெண்களின் கதாபாத்திரங்கள் அவர்களின் வாழ்க்கைத்  துடிப்புகள் வட்டத்திற்கு வெளியே இருக்கும் காட்சிகளை எண்ணி ஏங்குகிறது. ஆணாதிக்கம் ஆக்கிரமிக்கும் ஈரான் சமூகத்தில் பெண்களுக்கான சுதந்திரம் வட்டத்திற்குள் காணப்படும் வெற்றிடம் மட்டுமே.  புள்ளியில் இருந்து பயணப்படும் ஈரானியப் பெண்களின் சுதந்திரம் மாதிரியான பயணம்  மீண்டும் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டதோ அங்கேயே அவர்களின் பயணம்  முடிகிறது. காலில் விலங்கிட்ட யானை , சங்கிலியின் நீளம் வரை தன்  சுதந்திரத்தை  அனுபவித்துக் கொண்டிருப்பதைப்போல சமயம்,  ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பு போன்ற சங்கிலியால்  கட்டப்பட்ட  சுதந்திரத்தையே ஈரானியப் பெண்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

அறிமுகமற்ற நடிகர்கள், பிரம்மாண்டம் இல்லாத காட்சிகள், குறைந்த வசனம், வன்முறையற்ற படைப்பு   தி சர்க்கிள் படத்தின் வெற்றிக்குத் தடையாகவே இருக்கவில்லை மாறாக இப்படம் உலக அரங்கில் விருது பெற்று  சாதனை  படைத்தது.  இந்தச் சாதனை விருது உண்மையான கலையைப் பேசிய சினிமாவுக்குக் கிடைத்த விருதாகப் பார்க்கப்படுகிறது. கலை என்பது தொடப்படாத, பேசப்படாத, தீண்டப்படாத சமூகத்தின் வாழ்க்கையைப் பற்றி பேசவேண்டும். அன்றாட வாழ்கையில் அடிபட்டு, உதைப்பட்டு, ஆக்கிரமிப்பு வர்க்கத்தால் அறையப்படும் சிறுபான்மை சமூகத்தின் அவலங்களைக் காட்டும் படைப்பே  கலைப் படைப்பாகும், அதனை பனாஹி தமது படத்தில் வரும் பெண்கள் மூலம் நமக்கு உணர்த்தி இருக்கிறார்.

பெண் குழந்தையும் இறைவன் செயலே

பிரசவ  அறையில் , வலி தாங்க முடியாமல்  துடிக்கும், முகம் காட்டப்படாத தாயின் ( சொல்மசா கோலாமி ) அலறல் சத்தத்தில் தொடங்குகிறது படக்காட்சி. பிரசவிக்கும் தன் மகளுக்காகக்  காத்திருக்கும் தாயிடம் குழந்தை பிறந்த செய்தியைச் சொல்கிறாள் தாதி. பிறந்தது ஆண் பிள்ளை அல்ல ; பெண் பிள்ளை என்று அறிந்த பின்னர் மனக் குழப்பத்திற்கு ஆளாகிறாள் அவள்.  கதிர் ஒலி  ஊடுருவி கருவி மூலம் ஆண் குழந்தை என்று சொன்ன விஞ்ஞானம், ஆண் குழந்தையைப் பெண் குழந்தையாக மாற்றித் தரும் என்று  இரு தாய்களும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆண் பிள்ளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருமகனும் அவனது குடும்பத்தாரும்  பெண் பிள்ளை பிறந்ததை எப்படி ஏற்றுக் கொள்ளப்போகிறார்கள்?  மகளை விவாகரத்து செய்து விடுவார்களே என்ற கவலையோடு, மன அழுத்தத்தோடு  அவ்விடத்தை விட்டுப் புறப்படும் காட்சியாக முதல் காட்சியை நம் பார்வைக்கு வைக்கிறார்    பனாஹி.

அனைத்தும் இறைவன் செயல் என்று நம்பி வாழும் சமூகம், பெண் பிள்ளை   பிறந்தால் மட்டும் அதனை இறைவன் செயலாக வரவேற்க மறுக்கிறது. பெண் பிள்ளை பிறந்து விட்டது என்ற செய்தியைக் கேட்டு பெண்களே வருந்துகிறார்கள். இந்த பூமியில் பெண்ணாகப் பிறந்து நாங்கள் படும் துன்பத்தைப் பட வேண்டாம். இந்த ஈரானிய பூமியில் பெண்களுக்கு இடம் கிடையாது. மரியாதை கிடையாது. சுதந்திரம் கிடையாது. ஆகவே பெண்ணாகப் பிறந்து புண்படவேண்டாம் என்ற மனநிலையோடு  ஈரானியப் பெண்கள் போராடுகிறார்கள்.

தனிமை செக்ஸ் அழைப்புக்கு லைசன்ஸ்

போலிஸ் அதிகாரம் மேலோங்கி நிற்கும் ஆட்சியாக ஈரானிய நாட்டுச் சட்டம் அமைந்துள்ளது. ஆண் துணை இல்லாத பெண் தனியாகவோ அல்லது உதவிகோரி அறிமுகம் இல்லாத  ஆணுடன் செல்லவோ அனுமதிக்காத ஈரானியச் சட்டம், பெண்களையே இறுதியில் குற்றவாளியாக்கிப் பார்க்கிறது. ஆண் துணை இல்லாமல்  தனியே வீதியில் நடந்து செல்லும் பெண்களைப் பார்த்து ” நீ தனியாகத்தான் இருக்கிறாயா? வரியா ? போன்ற வார்த்தைகளால்  தெருவில் போய் வருவோரெல்லாம்  தனித்துச் செல்லும் பெண்களை நோக்கிக் கேட்கும் காட்சி அமைப்பில் இதனைக் காண முடிகிறது.

தனித்து நடமாடும் பெண்களை ஒரு குற்றவாளியாக சந்தேக மோப்பம் பிடிக்கும்  போலிஸ் நாசிகள், அவர்களுக்கான பேச்சுரிமையை  மறுப்பதையும் சில காட்சிகளின் வழி மௌனமாகப் பேசுகிறார் இயக்குனர். பொது ஜனங்களும் பெண்களின் நடவடிக்கையைச் சட்டத்தின் கண்களோடுதான் பார்க்கிறார்கள். அரிசூ என்பவள் கடைக்காரரிடம் சிகரெட் வாங்குகிறாள். கடைக்காரரும் தடை சொல்லாமல் சிகரெட்டை கொடுக்கிறார். வாங்கிய சிகெரெட்டை பற்ற வைக்க முயலுகிறாள் அரிசூ . இங்கே புகை பிடிக்காதே பிரச்சினை ஆகிவிடும் என்று தடை விதிக்கிறார் கடைக்காரர். விற்பதைக்  குற்றமாக எண்ணாத கடைக்காரர் பணம் கொடுத்து வாங்கிய சிகரெட்டை அவர் கடைமுன்  புகைப்பதைக் குற்றமாகப் பார்ப்பது  வணிக புத்தியின் சுயநலமாகத் தெரிகிறது.

தற்காலிக அட்டையில் சிறைச்சாலையிருந்து வெளியேறிய அரிசூ மற்றும் நர்கேஸ் ஆகிய இருவரும் வீதியில் போலிஸ் பீதியோடு நின்று கொண்டிருந்த தருணம், வழிப்போக்கன்  ஒருவன் இவர்களைப்  பார்த்து  தனியாகத்தான் இருக்கிறீர்களா என்ற கேட்டபடியே நடந்து செல்கிறான். இதனைக் கவனித்த அரிசூ அவனை விரட்டிச் சென்று ,  எப்படிப் பேசவேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறேன் என்று அவனிடம் வம்பு செய்கிறாள். போலிசின் மேல் உள்ள  அச்சத்தைவிட, பெண்களைக் குறித்தான ஆண்களின் இழிசொல் மனவதை செய்கிறது. தெருவில் போலிஸ் நடமாட்ட பீதியில் இருந்துகொண்டிருந்த அரிசூ அதனையும் சட்டை செய்யாமல் அந்த ஆடவனை வழிமறித்து எதிர்கொள்ளும் காட்சியில் இந்த மனவதையை நம்மால் உணர முடிகிறது. ஈரானிய சமூகக் கட்டமைப்பில் பெண்களின் மேல் ஆண்கள் கொண்டிருக்கும் பாலியல் பார்வை  சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை கிடையாது என்பதனையும், பெண்களுக்காக நீதி கேட்டு அல்லது வக்காலத்து வாங்க யாரும் வரமாட்டார்கள் என்பதனையும் நமக்கு மேற்குறிப்பிட்ட காட்சி புலப்படுத்துகிறது.
உலகம் பெண்களின்  பெரிய  சிறைச்சாலை

நர்கேஸ் அவளுடைய ஊருக்குக் கிளம்பவேண்டும். அவளுக்கு பஸ் டிக்கெட் எடுத்துக் கொடுக்க வேண்டும். ஆனால்  பணம் பற்றாக்குறையாக உள்ளது. அரிசூ  தேடிவந்த அப்துல்லா என்பவரும்  காணக் கிடைக்கவில்லை. வீதியில் தன்னந்தனியே நடமாடிக் கொண்டிருக்கும் இவர்களிடம் ” கூட வரியா” என்று பாலியல் தொந்தரவு அழைப்பு வருகிறதே ஒழிய  எந்த ஆணும் உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கவில்லை. சிறைச்சாலைப் பெண்களுக்கு சிறைச்சாலைப் பெண்களே உதவி. அவர்களின் உணர்வை அவர்களே அறிந்து செயல்படமுடியும். இந்த வெளி உலகம் மட்டுமல்ல குடும்ப அங்கத்தினரும் சிறைக்குச் சென்றவர்களை சென்று பார்ப்பதில்லை. சிறைக்குச் சென்று வெளியே வந்து விட்ட பெண்கள் இந்த வெளி உலகத்தில் ஒதுக்கப்பட்ட குற்றவாளியாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆகவே  தனக்குத் தெரிந்த ஓரிடத்துக்குச் சென்று அங்கு ஒரு ஆடவனைச் சந்திக்கிறாள் அரிசூ. நர்கேசைக் கீழே காக்கச் சொல்லி சிறிது நேரம் கழித்து வந்து நர்கேசிடம் பணத்தைத் தருகிறாள் அரிசூ. நர்கேசுடன் உடன் செல்வதாக ஆரம்பத்தில் வாக்கு கொடுத்த அரிசூ பிறகு நர்கேசை மட்டும் பஸ் ஏற்றி அனுப்ப விழைகிறாள். ” என்னுடன் வா. அங்கு சொர்க்கம் காத்துக் கொண்டிருக்கிறது என்று நர்கேஸ் வாழ்ந்த வாழ்விடத்தைக் குறித்து அரிசூவிடம் சொல்கிறாள். “எங்குச் சென்றாலும் ஒரே நிலைதான். நீ கூறும் சொர்க்கம் அங்கே இல்லையென்றால் அந்த ஏமாற்றத்தைக் கையாள  வலுவில்லை” என்று அரிசூ நர்கேசிடம் கூறுகிறாள். ஈரான் மண்ணில் எங்குச்  சென்றாலும் பெண்களுக்கு இடமில்லை. எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு அதனைத்  தன்  வாழ்நாளில் அடையமுடியாமல்  ஏமாற்ற எண்ணங்களைச் சுமக்கும் பெண்ணாக அரிசூவின் குரல் இங்கே  கேட்கிறது. நர்கேசுக்கு உதவிட அரிசூ அப்பணத்தைப்  எப்படிப் பெற்றாள் என்பது சொல்லப்படாவிட்டாலும், அதனை அவள் நரக வேதனையை அடைந்துதான் பெற்றிருக்கிறாள் என்று நர்கேசுவின் புரிதலின் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர். ” இந்தப் பணம் எப்படி கிடைத்தது? என்று நர்கேஸ் எழுப்பும் கேள்விக்கு, அது முக்கியமல்ல என்று அரிசூ பதில் சொல்கிறாள். “இந்தப் பணத்தைக் கையில் பிடிக்க எனக்கு பயமாக இருக்கிறது. சிறைச்சாலையில் யாரும் என்னை வந்து பார்க்கவில்லை. என் மகன் இருக்கிறானா? இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை. ஒரு சமயம் என்னை வந்து சந்திப்பதில் அவனுக்கு அதிகபட்சமாகத் தோன்றலாம்” போன்ற அரிசூவின் வசனங்கள் ஈரானியப் பெண்களின் வாழ்கையில்  எழும் விரக்தித் தன்மையைப் பேசுவதாக உள்ளது. இவர்கள் எதற்குச்  சிறைச்சாலைக்குப் போனார்கள்? இவர்களின் குற்றம் என்ன? படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் முடிவு ஏன் வைக்கப்படவில்லை போன்ற கேள்விகள் ரசிகர்களிடமிருந்து வந்து கொண்டிருந்தாலும், அந்த கேள்விகளுக்கு எல்லாம் விடையைப் படத்தின் காட்சிகளில் வைக்காமல் காட்சி ஓட்டங்களில் வாயிலாக ரசிகனே பதிலைத் தேடிக் கொள்ளும் அல்லது ஒரு விசாரணைக்கு வந்து விடும் உத்தியைப் பயன்படுத்தி இருக்கிறார் பனாஹி. சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லிச் சென்றுவிடும் காட்சிகளில் பேசப்படும் வசனங்களும் சிக்கனமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கன வசனங்களில் உதிர்க்கும் உணர்வுகள்  ரசிகனிடம் எழும்பிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில்களை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆணின்றி ஓர் அணுவும் அசையாது

காட்சிக்குக் காட்சி கதாபாத்திரங்கள் மாறிக்கொண்டே வருகிறது. முதல் காட்சிக்கும் அடுத்தக் காட்சிக்கும் ஒரு சந்திப்புப் புள்ளி இல்லாவிட்டாலும் ஒவ்வொரு காட்சிக்குள் வந்து போகும் பெண் கதாபாத்திரங்கள் ஈரானிய சமய சட்டக் கட்டமைப்பால் பாதிக்கப்பட்டவர்களாகவும், அதிலிருந்து வெளியேறும் விடுதலை மனப்போக்கைக் கொண்டவர்களாகவும், அதனால் குற்றம் சாட்டப்பட்டு சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டவர்களாகவும், சமுதாயத்தால், குடும்ப அங்கத்தினர்களால் ஒதுக்கப்பட்டவர்களாகவும் ஒரு வட்டத்துக்குள் அடைப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

தனக்கென்று ஒரு முடிவை எடுக்கமுடியாத, கனவு காண வாய்ப்பில்லாத, ‘ஆணின்றி  பெண்ணின் அணுவும் அசையக் கூடாது ‘ எனும் ஈரானின் அரசியல், சமூக வாழ்க்கை முறைக்குள்  திணிக்கப்படும் பெண்கள் பர்தாவுக்குள் போர்த்தப்பட்டிருக்கும் நடைபிணமாக வாழும் வாழ்க்கையின் அவலத்தைப்  பாரி, நர்கேஸ், கதாபாத்திரத்தின் மூலமாகவும் படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர் பனாஹி. சிறையில் இருந்த காதலனுடன் உறவு வைத்துக் கொண்ட பாரி எனும் பெண் கர்ப்பமாகிறாள். சிறையில் இருந்து வெளியே வந்ததும் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு முயற்சி செய்கிறாள். இவளை அவளுடைய குடும்பமும் நிராகரிக்கிறது. ஒரு கைபார்க்க வந்த அண்ணன்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறாள் பாரி.  4 மாதக் கருவைக் கலைக்கத் தோழியைத் தேடிச் செல்கிறாள். மருத்துவரான தன்  கணவனுக்குத் தாதியாகப் பணி செய்யும் தோழி அவளுக்கு உதவி செய்யத் தயங்குகிறாள். தனது கடந்தகால சிறைச்சாலை வாழ்க்கையைக் கணவனிடமிருந்து மறைத்து வாழும் தோழி உதவ மறுக்கவே அங்கிருந்து புறப்படும் பாரி செய்வதறியாது கால் போகும் போக்கில் தெருவில் நடந்து செல்கிறாள். வழியில் ஒரு மாது, தன் மகளை அழகாக உடுத்தி ஆவலுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியைக் காண்கிறாள். பக்கத்தில் இருக்கும் விடுதிக்குள் செல்ல நினைக்கும் பாரி, அங்கு இருக்கும் போலிஸ் கெடுபிடி கண்டு உள்ளே நுழையத் தயங்குகிறாள். கணவனோடு அல்லது உறவுக்காரர்கள் உடன் மட்டுமே நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கான ஈரான் சட்டம் இவளையும் சட்டத்தில் ஆணியால் அறைந்து விடுகிறது. மாதுவுடன் இருந்த பெண் குழந்தை தன்னந்தனியாக நின்று அழுவதைக் கண்ட பாரி, எதிர்புறம் கார்கள் மத்தியில் ஒளிந்து இருக்கும் பிள்ளையின் தாயை நோக்கிச் செல்கிறாள்.  அங்கே பாரியைக் கண்டு அவளையும் ஒளியும்படி செய்து தன்னுடைய வேதனையைக் கண்ணீர் விட்டுச் சொல்கிறாள் அந்த தனித்து வாழும் தாய். என் பிள்ளையை நான் தனித்து வாழ்ந்து வளர்ப்பது என்பது முடியாத ஒன்று . நல்ல குடும்பத்தாரிடம் அவள் சேரவேண்டும் என்பதற்காக அவளை அழகு படுத்தி தெருவில் விட்டு வந்தேன்.  மூன்றாவது முறையாக என் மகளை விட்டு வருகிறேன்.  நான் படும் கஷ்டம் கடவுளுக்குத்தான் தெரியும் என்கிறாள்.

தனியாகச் செல்லும் ஒரு பெண்ணிடம் அடையாள ஆவணங்களைக் கேட்டு இம்சைப் படுத்துகிறது அதிகாரத்துவம். ஆண் இல்லாமல் ஒரு பெண் தனியாக எங்கும் செல்ல முடியாது என்று அந்த மாது பாரியிடம் கூறும் காட்சியில் தனித்து வாழும் தாய்மார்களின் வாழ்க்கைச் சூழல், சிறைச்சாலைக்  கைதிகளைப் போல் உத்தரவாதம் இல்லாத ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.  குடும்பக் கட்டமைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் ஈரானிய சமூகத்தில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டும் எனும் கட்டாயத்தைத்  தனது  இஸ்லாமியச்  சட்டமுறையின் கீழ் அழுத்தத்தைத் தருகிறது.

வெல்லும் ஆண் வேதம்

ஒரு பெண்ணைத் தன் வாகனத்தில் ஏற்றி வந்த ஆடவரை அதட்டுகிறார் ஒரு போலிஸ்காரர். அவருடன் வந்த பெண்ணை உறவுக்காரியா? என்று கேள்வி எழுப்புகிறார். இல்லை என்று கூறும் பெண்ணிடம் ஏன் அவருடன் வந்தாய் என்று கேட்டதற்கு அன்றாட செலவுகளுக்கு நீ பணம் கொடுக்கப் போகிறாயா? என்று அவள் போலீஸை நோக்கிக் கேட்கிறாள். அந்த ஆடவன் உன்னை காரில் ஏறும்படி வற்புறுத்தினான்  என்று அந்தப் போலிஸ்காரர் அப்பெண்ணை நோக்கிக் கேட்கிறார். அவள் இல்லை என்று கூறியதும், போலீசிடம்  நல்லவனாக மன்றாடும் ஆடவரை அனுப்பி விடுகிறார். பிறகு இந்தப் பெண்ணை போலிஸ் வண்டியில் ஏற்றி அனுப்புகிறார் போலிஸ்காரர். இந்தச் சம்பவம் நடப்பதற்குச்  சில மணித்துளிகளுக்கு முன் சாலையில் தனியே நடந்து கொண்டிருந்த மாதுவைக் காரில் பின் தொடர்ந்து அவளை வலிய  காருக்குள் ஏறச் சொன்னதும் இந்தப் போலிஸ்காரர்தான். நான் நீங்கள் நினைப்பவள் போல் விலைமகள் அல்ல என்று அம்மாது அழுகிறாள். நீங்கள் ஏறச்சொன்னதால் ஏறினேன் என்று அவள் கூறிய சொற்களைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வண்டியைச் செலுத்துகிறார் அந்தப் போலிஸ்காரர். உறவுகள் இல்லாத ஆண்களுடன் பயணிக்கும் அல்லது நடமாடும் பெண்கள் சபல புத்திக்காரர்களாகவும், விலைமகளாகவும் மட்டுமே காணும் ஆணாதிக்க  அதிகாரத்தில், ஆண்கள்  புரியும் தவறுகளுக்கு விதிவிலக்கு உண்டு என்பதை இங்கு நம்மால் உணரமுடியும். ஆண் ஆதிக்கமும், போலிஸ் அதிகாரமும் பெண்களுக்கான பேச்சுரிமையைக் காது கொடுத்துக் கேட்பதில்லை. பெண்கள் தவறு இழைக்கப் பல வழிகளில் காரணமாக அமையும் ஆண்களின் சந்தர்ப்பவாதச் செயல் குறித்து  இந்தச் சட்டம் அவ்வளவு அக்கறைக்  காட்டுவதில்லை என்பதை இந்தப் போலிஸ் அதிகாரியின் இரட்டை வேடப் போக்கின் வழி நமக்கு உணர்த்துகிறார் இயக்குனர்.

பெண்ணுக்கு ஒரு சட்டம். ஆணுக்கு ஒரு சட்டம் என்று வகுக்கப்பட்டுள்ள ஈரானிய அரசியல் சட்டத்தினால் பெண்களுக்கு ஏற்பட்டுவரும் வாழ்க்கைச் சிக்கல்கள் மீண்டும் மீண்டும் அவர்களை கீழ்நோக்கி அழுத்துகிறது. படக்காட்சிகளில் வெளியே நடமாடிய சிறைக்கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்குள்  அடைக்கப்படுகிறார்கள். சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள் வெளி உலகத்தில் நடமாடும்போது சிறைச்சாலையைவிடக் கொடுமையான நேரங்களை அனுபவித்து வாழ்ந்தனர். பெண்பிள்ளையைப் பெற்றெடுக்கத் தவறிவிட்ட சொல்மசா கோலாமியின் பெயரைச் சொல்லி சிறைச்சாலை அதிகாரி அழைக்கிறார். முதன் முதலில் படத் தொடக்கத்தில் மருத்துவமனையில் அழைத்த இந்தப் பெயர் இறுதியில் சிறைச்சாலையில் கேட்கிறது.

பெண்பிள்ளை பெற்றதனால் விவாகரத்தை எதிர்நோக்கி இருக்கக்கூடும் கோலாமி சிறைச்சாலைக்கு எப்படி வந்தாள் என்பதை ரசிகர்களுக்குச் சொல்லாத இயக்குனர் இப்படத்தின் வழி ஒரு புரிதலை மட்டும் விட்டுச் செல்கிறார். ஒரு வட்டத்துக்குள் வட்டமடிக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கும் ஈரானியப் பெண்களின் வாழ்க்கை சமயச்சட்டமென்ற சிறைச்சாலைக்குள் முடக்கப்பட்டுள்ளது. முடங்கிக் கிடக்கும் இவர்களின் உணர்வுகளுக்கு பேச்சுரிமையைத் தந்து கொண்டிருக்கிறது பனாஹி போன்ற இயக்குனர்களின் காமிராக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *