நீயின்றி அமையாது உலகு

13அந்தப் பெண்ணை நினைவில் வைத்துக்கொள்ள அவளின் முகமோ அவளின் பெயரோ என்னிடம் இல்லை. காலியாய் கிடக்கும் வீடொன்றே போதுமானதாக இருந்தது. உண்மையில் எனக்கும் பெண்களுக்குமான மனத்தொடர்பும் அவர்கள் மீதான ஈர்ப்பும் ஏற்பட அந்த பெண் காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் அவள் குறித்து நான் அறிந்தது உண்மைதானா என்கிற சந்தேகம் கொள்ளக்கூடிய வயதெல்லாம் அப்போது இல்லை. இன்றும் அவள் குறித்த விசாரணை செய்ய எனக்கு மனமில்லை.

ஒருவேளை அது பொய்யானதாக இருந்துவிட்டால், இத்தனை நாள் நான் சுமந்திருக்கும் அவள் மீதான கருணையும் பரிவும் ஈர்ப்பும் அர்த்தமற்றுப் போய்விடலாம். இத்தருணம் நான் அதை விரும்பவில்லை. எப்படி குழந்தைகள் கையில் இருக்கும் கரடி பொம்மைகளுக்கு வயதாவதில்லையோ அவ்வாறுதான் அவள் மீதான தகவல்களை மாற்றாமல் மனதுக்குள் வைத்திருக்கிறேன். அதை மீண்டும் இன்றைய மனநிலையில் மறுபரிசீலனை செய்து சாகடிக்க விரும்பவில்லை.

கோலாலும்பூர் பட்டிணத்தில் இருந்தாலும் மனமெல்லாம் இருபத்தியோரு வருடங்கள் வாழ்ந்த யு.பி தோட்டத்தைத்தான் வசந்தகாலமாக நினைத்துக் கொள்கிறது. பொருளாதாரமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கைகோர்த்து தோட்டங்களை அழித்து தொழிற்சாலைகளையும் ஆடம்பர வீடுகளையும் கட்டின. தொழிற்சாலைகளில் வெளிநாட்டவரும் ஆடம்பர வீடுகளில் முதலாளிகளும் மையமிட்டதால் முன்னர் அங்கு வாழ்ந்தவர்களால் இப்போது தங்கள் இடங்களை சுவர்களுக்கு அப்பாலிருந்து நோட்டமிடவே முடிகிறது.

எங்கள் தோட்டத்தில் முதல் வரிசையில் இரண்டு வீடுகள்தான் இருந்தன. அதன் பின்புறம் ஒவ்வொரு வரிசையிலும் எட்டு வீடுகள் இருந்தன. முதல் இரண்டு வீடுகளும் ஒருவருடையதுதானாம். ஆனால் நான் பார்க்கும் போதெல்லாம் அந்த வீடு காலியாகவேதான் இருந்தது. பலநாள் நான் தூரத்தில் இருந்து பார்த்த அந்த இரண்டு வீடுகளையும் அருகில் பார்க்கும் ஆவல் மேலிட, நண்பர்களுடன் புறப்பட்டேன்.

இரண்டு வீடுகளை இடித்து ஒரு வீடாக அமைத்திருந்தார்கள். ஆனால் பல ஆண்டுகளாக யாருமில்லாததால் புதர் மண்டியும் கதவுகள் கண்ணாடிகள் உடைந்தும் , அலங்கோலமாக இருந்தன. தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு பூங்காவிற்கு மத்தியில் இருப்பதாக தெரிந்த வீடு இப்போது வெறும் புதர்களுக்கு மத்தியில் இருந்தது.

இவ்வளவு பெரிய வீடு கட்டியவர்கள், இங்கு வாழாமல் எங்கே போனார்கள் என மனம் படபடத்தது. அது போகட்டும், இப்படிப் புதராகும் வரை ஏன் வேறு யாரும் வரவில்லை எனவும் குழம்பினேன். நண்பர்கள் யாருக்கும் விபரங்கள் தெரியவில்லை.

வீட்டிலும் என்ன கதை ஏது கதை என விவரிக்க விரும்பவில்லையென அவர்களின் நிராகரிப்பில் தெரிந்தது. ஆனாலும் விடுவதாய் இல்லை. என்ன நடந்திருக்கும்? அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என தேடத் தொடங்கினேன். அப்போதுதான் அங்குள்ள பாட்டியிடம் கேட்கலாம் என்று தோன்றியது. பொதுவாகவே அந்தப் பாட்டியிடம் யாரும் பேசுவதில்லை. பைத்தியம் என ஒதுக்கிவிட்டார்கள். தினமும் காலையில் ஒருவர் வருவார். கோவிலின் பின்புறம் இருக்கும் கொட்டகையில் பாட்டிக்கான அன்றைய தின சாப்பாட்டுப் பொட்டலத்தை வைத்துவிட்டு போவார். எனக்கு தெரிந்து அந்தப் பாட்டி யாருடனும் வம்பு வளர்ப்பதில்லை. தானுண்டு தன் கொட்டகை உண்டு என எப்போதும்  அந்தக் கொட்டகையைச் சுற்றியே தன் வாழ்வை நகர்ந்தி வந்தார்.

எங்களைப் பார்த்த பாட்டிக்கு என்னமோ தோன்றியிருக்க வேண்டும். வெட்கமா என்னவென்று தெரியவில்லை. ஒரு மாதிரி நெளிந்தும் கூனிக்குறுகியும்தான் பேச ஆரம்பித்தார். நாங்களும் முதலில் வெட்கத்துடனேயே ஏதேதோ பேசினோம். உடன் வந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டு வந்த நோக்கத்தைப் போட்டு உடைத்துவிட்டான். போதாதென்று என்னையும் காட்டிக்கொடுத்துவிட்டான். அந்தப் பாட்டி என்னைக் கொஞ்ச நேரம் உற்று நோக்கினார். பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. என் தலையில் கைவைத்து கண்களை மூடி என்னவோ ஜெபித்தார். எனக்கு எல்லாமே நடுங்கியது. நண்பர்கள் வேறு, கேலியில் என்னை சின்னாபின்னமாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.

ஜெபித்து முடித்த பாட்டி எங்களை உட்காரக் கையசைத்துத் தானும் அமர்ந்துக் கொண்டார். அப்போது அவர் பேசிய மொழி எனக்குப் புதியதாக இருந்தது. அந்த மேட்டு வீடு குறித்து பேச ஆரம்பித்தார். சற்றுமுன் பேசியது போல் அல்லாமல் வேறு தொனியில், அவரின் மொழி இருந்தது. இப்போதும் கூட அந்த மொழியும் தொனியும் எனக்கு நினைவிருக்கிறது ஆனால் அதனைச் சொல்லவோ எழுதவோ முடியாதபடி இனம்புரியாத சிக்கலில் இன்னமும் தவிக்கிறேன்.

அவர் சொல்லி எனக்குப் புரிந்த விபரங்கள்: எங்கள் தோட்டத்திலேயே அதிகம் படித்த குடும்பமாக அந்தக் குடும்பம் இருந்தது. நல்ல பணம் புழங்கும் வீடு. அவர்களுக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை. ஒரு பிள்ளை என்பதாலோ என்னவோ அத்தனை அழகையும் ஆண்டவன் அந்தப் பெண்ணுக்கே அருளியிருக்க வேண்டும். அத்தனை அழகு. எப்போதாவது மட்டும் வெளியில் தெரியும் அந்த அழகிக்காகப் பல இளைஞர்கள் அங்கும் இங்கும் காத்திருந்திருக்கிறார்கள்.

நீண்ட கூந்தல். உப்பிய கன்னம். சாக்லெட் நிறக் கண்கள். தினம் ஒரு தினுசான ஆடை என தோட்டத்தையே திக்குமுக்காடச் செய்த பெண்ணாகவே அவர் இருந்திருக்கிறார்.

கோவில் திருவிழாக்களில் அவரின் அழகைக் காணவே பல தோட்டங்களில் இருந்தும் இளைஞர்கள் எங்கள் தோட்டம் வந்தார்களாம். பணத்திற்குப் பஞ்சமில்லாதவர்கள் என்பதால் அவரின் அழகை தூரத்தில் இருந்தே ரசிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கபெற்றவர்கள் மறந்தும் நெருங்கிச் செல்ல அஞ்சினார்கள்.

தோட்டப்பெண்கள் யாருக்கும் படிப்போ தங்களின் மேனி அழகோ அத்தனை முக்கியமாகத் தெரியவில்லை. வயது வருமுன்னே காத்திருக்கும் பால்மர வேலைகள், குடும்ப பொறுப்புகள், சீக்கிரமே திருமணம், சீக்கிரமே குழந்தைகள் என, தோட்டப் பெண்களின் வாழ்வுச்சக்கரம் அச்சு மாறாமல் சுற்றிக்கொண்ருந்தது. ஆண்களுக்கும் இன்னொரு சக்கரம் இருந்தது. வேலை-வீடு-குடி-கூத்து. அதுவும் அச்சு பிசகாமல் அப்படியே சுற்றியது. அந்த அச்சிலிருந்து விலகியோ, பிசகியோ போனவர்கள் என செத்துப் போனவர்களும் வேறெங்கோ வாழப்போனவர்களும் தனி ரகமானவர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை கோலாலும்பூரில் இருந்து சிலர் படமெடுக்க வந்திருக்கிறார்கள். இப்போது போல் அல்ல, அன்றைய தினத்தில் கோலாலும்பூர் பட்டிணம் என்பது இங்கிருந்து பாரிஸ்சுக்கு போவதற்கு ஒப்பானது. அத்தனை பிரமிப்புடன் எல்லோரும் ஒன்று கூடினார்கள். வெள்ளைக்காரன்கள் விட்டு போன இடத்தை கோலாலும்பூர்வாசிகள் பிடித்துக் கொண்டார்கள் எனவும் மக்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது ஆண்கள் செய்த முதல்வேலை, தத்தம் மனைவி பிள்ளைகள் அவர்கள் கண்ணில் படாதபடி மறைத்துக் கொண்டார்கள்.

மேட்டு வீட்டில்தான் வந்தவர்களுக்கு அன்றைய தினம் விருந்துபசரிப்பு கிடைத்தது. வந்திருந்தவர்கள் சினிமா சூட்டிங் செய்வதற்கான இடத்தைத் தேடியிருக்கிறார்கள். மேட்டு வீட்டிலேயே சில காட்சிகளை படமாக்கியவர்கள் கண்ணுக்கு அந்த அழகி தெரிந்திருக்கிறார். அப்படியொரு அழகி இந்த மாதிரி தோட்டத்தில் வாழ்வது தகாதென்றும் சினிமாவிற்கு ஏற்ற எல்லாமும் ஒருங்கே அமையும் வரம் பெற்றவர் என்றும் புகழப்பட்டிருக்கிறார்.

வந்தவர்கள் கோலாலும்பூர் செல்லுகையில் அழகியையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அன்று முதல் ஒருமாதம் அந்த அழகியின் சினிமா கனவுகளும் அவள் அடையவிருக்கும் பேரும் புகழும் தோட்டம் முழுக்கப் பேச்சாக இருந்தது.

நாளாக நாளாக அப்படியொரு அழகி வாழ்ந்ததற்கான  தடயமே இல்லாத அளவு தோட்ட வாழ்வும் பால்மர வேலைகளும் இறுக்கமாக்கின.

ஒருநாள் தோட்டத்துக்கு பெரிய கார் வந்தது. சினிமாவுக்குப் போன அழகி வந்துவிட்ட செய்தி தோட்டத்தீ போல புகை பரப்பியது.

மேட்டு வீட்டு முன் நின்ற கார் சட்டெனக் கிளம்பியது. தோட்டமே நின்று வேடிக்கை பார்க்க ஏதோ உருவம் ஒன்று நின்றிருக்கிறது. ஒட்டிபோன அந்த உருவம் மெல்ல மெல்ல நகர்ந்து மேட்டு வீட்டு வாசலை நெருங்கியிருக்கிறது. ஆரவாரம் செய்யவேண்டியவர்கள் எல்லாம் பிரமை பிடித்துப்போய் நிற்க, வாசலை அடைந்த அவ்வுருவம் ஒருமுறை திரும்பிப் பார்க்கவும், வீட்டில் இருந்து வெளிப்பட்ட அலறல் சத்தம் தோட்டத்தையே பீதிக்குள்ளாக்கியது.

அரைகுறையாக வெட்டப்பட்ட தலைமுடி, தொடைக்கு மேலாக ஏறியிருக்கும் குட்டைப்பாவாடை, ஆடையா மேலாடையா எனத் தெரியாத போர்வை, ஒட்டிப்போன கன்னம் , புரை விழுந்த கண்கள் என நடந்துசென்ற அந்த எலும்புக்கூடு, பார்த்த எல்லோரையும் புலம்ப வைத்தது.

இரண்டு நாட்களாகியும் மேட்டு வீட்டில் இருந்து யாரும் வெளிவரவில்லை. பின்னர் அந்த மூவரையும் தோட்டம் பார்க்கவேயில்லை. எங்கு போனார்கள் எப்போது போனார்கள் என யாரும் அறிந்திடாத ரகசியமாகவே அந்த மேட்டுவீடும் அதில் இருந்தவர்களும் ஆகிப்போனார்கள்.

இவ்வளவு சொன்ன பாட்டி கண்கள் கலங்கிய நிலையில் மேற்கொண்டு சொல்வதற்கு ஒன்றுமில்லையென சைகை காட்டி எங்களை புறப்பட சொன்னார். அந்த அழகிக்கு என்ன ஆனது என்று கேட்டதற்கு சிரிப்பையே பதிலாக தந்து , மீண்டும் கொட்டகைக்குள்ளே போனார்.

பிறகொருநாள் அந்தப் பாட்டி இறந்துகிடப்பதாக வந்த செய்தியை எங்களை துயரத்தில் ஆழ்த்தியது. அந்த அழகிக்கு என்னவானது என்ற கேள்விக்கும் கடைசியாய் அந்தப் பாட்டி சிரித்த சிரிப்புக்கும் இன்றுவரை எனக்குப் பதில் தெரியவில்லை.

முகமே பார்த்திடாத அந்த அழகி, பெயரே தெரிந்திடாத அந்த அழகி, உண்மையா பொய்யா எனவும் தெரிந்திடாத அந்த அழகி இன்னமும் எனது நினைவில் சஞ்சரிக்கிறாள்.

பெண்கள் மீதான என் ஈர்ப்பு ஒருவேளை அங்கிருந்து முளைத்திருக்கலாம். அந்த ஈர்ப்பு மரமாகத் தன்னை நிலைநிறுத்தவும் மனதில் நிரந்த இடம் பிடிக்கவும் அவ்வப்போது பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...