செய்யச்செய்தல்
எல்லாவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்ட நகரம் ஒன்று இருந்தது.
இப்போது, அங்கே தடை செய்யப்படாதது கிட்டிப்புள் விளையாட்டு மட்டுமே என்பதால், மக்கள் அந்நகரத்தின் பின்னாலிருந்த புல்வெளியில் ஒன்றுகூடி, கிட்டிப்புள் விளையாடி நாளைக் கழித்தனர்.
சட்டங்கள் ஒவ்வொருமுறையும் ஒவ்வொன்றாகத் தடை செய்வதாலும் அதற்கேற்ற பொருத்தமான காரணத்தோடு செய்வதாலும், அதுபற்றிப் புகார் கூறுவதற்கான காரணங்களோ அல்லது அதற்குத் தகுந்தவாறு தம்மைப் பழக்கிக்கொள்வதில் சிரமங்களோ யாருக்கும் இல்லை.
வருடங்கள் கடந்தன. ஒருநாள், காவலர்கள் எல்லாவற்றையும் தடை செய்வதற்கான காரணங்கள் இல்லாமல் போய்விட்டதைக் கண்டார்கள், எனவே மக்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்துகொள்ளலாம் என்று தூதுவர்கள் மூலம் சொல்லியனுப்பினர்.
தூதுவர்கள் மக்கள் வழக்கமாகக் கூடுமிடங்களுக்குச் சென்றனர்.
‘கவனியுங்கள், எல்லோரும் கவனியுங்கள்’ என்று அறிவித்தனர், ‘இனி எதுவும் தடை செய்யப்பட்டதில்லை.’
மக்களோ தொடர்ந்து கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
‘புரிகிறதா?’ தூதுவர்கள் அழுத்தமாகக் கூறினர். ‘நீங்கள் விரும்பியதைச் செய்யலாம்.’
‘நல்லது,’ மக்கள் பதிலளித்தனர். ‘நாங்கள் கிட்டிப்புள் விளையாடுகிறோம்.’
தூதுவர்கள் மீண்டும் மீண்டும் அவர்கள் முன்பு செய்து வந்த அற்புதமான உபயோகமான வேலைகளை ஞாபகப்படுத்தி அதை அவர்கள் மீண்டும் செய்யலாம் என்றனர். ஆனால் மக்கள் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல், மூச்சுவிடக்கூட இடைவிடாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
தங்கள் முயற்சி வீணாவதைக் கண்ட தூதுவர்கள் காவலர்களிடம் சென்று உரைத்தனர்.
“அது ரொம்ப சுலபம்.” என்றனர் காவலர்கள். ‘கிட்டிப்புள் விளையாட்டைத் தடைசெய்து விடுவோம்.’
அப்போதுதான் மக்கள் கிளர்ந்தெழுந்து தங்களுக்குள் நிறையபேரைக் கொன்றுகுவித்தனர்.
பிறகு காலத்தை வீணடிக்காமல் மீண்டும் கிட்டிப்புள் விளையாட்டுக்குத் திரும்பினர்.
***
தெரேசா என்று கத்திய மனிதன்
நடைபாதையிலிருந்து கீழே இறங்கினேன், மேலே பார்த்தபடி சில தப்படிகள் பின்னால் நகர்ந்து, சாலையின் நடுவிலிருந்து, என் கைகளை வாயருகே ஒலிபெருக்கி போலக்குவித்து, கட்டிடங்களின் மேல்மாடியை நோக்கிக் கத்தினேன்: ‘தெரேசா!’
என் நிழல் நிலவுக்குப் பயந்து என் காலடியில் சுருண்டது.
யாரோ கடந்து போனார்கள். மீண்டும் கத்தினேன்: ‘தெரேசா!’ அம்மனிதன் என்னருகே வந்து: ‘நீ சத்தமாகக் கத்தவில்லை என்றால் அவளுக்குக் கேட்காது. இருவரும் சேர்ந்து முயற்சிக்கலாம். எனவே: மூன்று வரை எண்ணலாம், மூன்று எனும்போது சேர்ந்து கத்தலாம்.’ அவன் கூறினான்: ‘ஒன்று, இரண்டு, மூன்று.’ இருவரும் சேர்ந்து கத்தினோம், ‘தெரேஏஏசாஆஆ!’
அரங்கிலிருந்தோ, கஃபேவிலிருந்தோ திரும்பிக் கொண்டிருந்த ஒரு நண்பர்கள் குழு கடந்து செல்லும்போது நாங்கள் கூவிக்கொண்டிருந்ததைப் பார்த்தது. அவர்கள்: ‘நாங்களும், உங்களுக்காகக் குரல் கொடுக்கிறோம்’ என்றனர். அவர்களும் நடுத்தெருவில் எங்களோடு சேர்ந்து, முதல் மனிதன் ஒன்றிலிருந்து மூன்றுவரை எண்ணியதும் எல்லோரும் ஒரே குரலில் கத்தினர், ‘தெ-ரேஏஏஏ-சாஆஆஆ!’
வேறு யாரோ வந்து எங்களோடு சேர்ந்துகொண்டனர்; கால் மணிநேரம் கழித்து கிட்டத்தட்ட இருபதுபேர் வரை இருந்தோம். அவ்வப்போது யாரேனும் புதிதாக வந்து சேர்ந்தபடியிருந்தனர்.
எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரே சமயத்தில் பலமானதொரு சத்தத்தை எழுப்புவதென்பது சுலபமாக இல்லை. ஒவ்வொருமுறையும் யாரேனும் மூன்றுக்கு முன்னால் ஆரம்பித்தனர் அல்லது முடிக்கும்போது நீளமாக முடித்தனர், ஆனால் கடைசியில் ஓரளவுக்குத் திறன்மிக்க வழியொன்றைக் கண்டுகொண்டோம். ‘தெ’ எனும்போது தணிவாக நீண்டும், ‘ரே’ என்பது உயர்ந்து நீண்டும், ‘சா’ என்பது மெதுவாகக் குறுகி ஒலிக்கவும் வேண்டும் முடிவாகி ஒப்புக்கொண்டோம். யாரேனும் இதிலிருந்து விலகும்போது அவ்வப்போது சில சச்சரவுகள்.
எல்லாம் சரியாக வந்து கொண்டிருக்கும்போது யாரோ ஒருவர், குரலை வைத்துக் கணிப்பதென்றால், நிறைய மச்சம் உள்ள முகமாக இருக்க வேண்டும், கேள்வி எழுப்பினார்: ‘அவள் வீட்டில் இருக்கிறாள் என்பது உறுதியாகத் தெரியுமா?’
‘இல்லை,’ என்றேன்.
‘அது மோசமானது,’ என்றார் இன்னொருவர். ‘சாவியை மறந்துவிட்டாய், அப்படித்தானே?’
‘உண்மையில், என்னுடைய சாவி என்னிடம் இருக்கிறது,’ என்றேன்.
‘அப்படியென்றால், நீ ஏன் மேலே செல்லவில்லை?’ என்று கேட்டனர்.
‘நான் இங்கே வசிப்பவனல்ல,’ என்றேன். ‘நான் நகரத்தின் அந்தப்பக்கம் வசிப்பவன்.’
‘என் ஆர்வத்தை நீங்கள் வித்தியாசமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படியென்றால் இங்கே வசிப்பது யார்?’ என்றார் மச்ச முகக்காரர்.
’உண்மையில் அது எனக்குத் தெரியாது,’ என்றேன்.
அவர்கள் இதனால் சற்றே சலிப்படைந்தனர்.
‘நீங்கள் இதைக் கொஞ்சம் விளக்க முடியுமா,’ யாரோ தெற்றுப்பல் குரலில் கேட்டார், ‘ஏன் இங்கே கீழே நின்றுகொண்டு தெரேசாவைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.’
‘என்னைக் கேட்பீர்களேயானால், நாம் இன்னொரு பெயரைக்கூட முயற்சிக்கலாம், அல்லது நீங்கள் விரும்பினால் வேறெங்காவது சென்றும் முயற்சிக்கலாம்.’ என்றேன்.
இப்போது மற்றவர்கள் எரிச்சலடையத் துவங்கினர்.
‘’அநேகமாக நீ எங்களிடம் ஏதும் விளையாட்டுத்தனமாகச் செய்யவில்லை என்று நம்புகிறோம்,’ என்றார் மச்ச முகம் கொண்டவர்.
‘என்ன?’ என்றேன் கடுஞ்சினத்துடன், என் நன்னம்பிக்கையைத் தெரிவிக்கும் முகமாக மற்றவர்களை நோக்கித் திரும்பினேன்.
சங்கடமான ஒரு சூழ்நிலை உருவானது.
‘இங்கே பாருங்கள்,’ யாரோ நல்லதனமாகச் சொன்னார், ‘நாம் ஏன் இன்னொருமுறை தெரேசாவை அழைத்துவிட்டுப் பிறகு வீட்டுக்குச் செல்லக்கூடாது.’
எனவே எல்லோரும் இன்னொருமுறை அதைச்செய்தோம். ‘ஒன்று இரண்டு மூன்று, தெரேசா!’ ஆனால் இம்முறை அவ்வளவு சரியாக வரவில்லை. பிறகு அவரவர் வீட்டுக்குக் கிளம்பினர், சிலர் ஒருபக்கம், சிலர் மறுபக்கம்.
சாலைச்சந்திப்பில் திரும்பியபோது ஒருகுரல் இன்னமும் அழைத்துக் கொண்டிருப்பதைக் கேட்டதாகத் தோன்றியது: ‘தெ-ரேஏ-சா!’
யாரோ கத்தியழைப்பதற்காகத் தங்கியிருக்க வேண்டும். யாரோ பிடிவாதமானவன்.
***
ஒளித்தெறிப்பு
அது திடீரென ஒருநாள் நடந்தது, தெருமுக்கில், மக்கள் திரளுக்கு நடுவில், அவர்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்தார்கள்.
நான் நின்றேன், இமைத்தேன்: எனக்கு எதுவும் புரியவில்லை. எதுவும், எதைப்பற்றியும் எதுவும் புரியவில்லை: விஷயங்களுக்கான அல்லது மக்களுக்கான காரணம் புரியவில்லை, எல்லாமும் அர்த்தமற்று இருக்கிறது, அபத்தம். நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
அந்நேரத்தில் எனக்கு விநோதமாகத் தோன்றியது என்னவென்றால் ஏன் இதை முன்னெப்போதும் உணர்ந்ததில்லை என்பதே. அதுவரையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டிருந்தேன்: சாலை சமிக்ஞை விளக்குகள், வாகனங்கள், சுவரொட்டிகள், சீருடைகள், நினைவுச்சின்னங்கள், உலகத்தின் அர்த்தத்திலிருந்து முழுமையாக விலகியவை அனைத்தையும் முக்கியமானவை என்பதுபோல ஏற்றுக்கொண்டிருந்தேன், சில தொடர்ச்சியான காரணங்கள் மற்றும் விளைவுகள் அவற்றைப் பிணைக்கின்றன.
பிறகு என் சிரிப்பு தொண்டைக்குள் மறைந்த்து, அவமானத்தால் முகம் சிவந்தேன். மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகக் கைகளை ஆட்டிக் கத்தினேன் ‘கொஞ்சம் நில்லுங்கள்! ஏதோ தவறாக நடக்கிறது! எல்லாமும் தவறு! அபத்தமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம்! இது சரியான முறையாக இருக்க முடியாது! இது எங்கு போய் முடியப்போகிறது?’
மக்கள் என்னைச் சூழ்ந்து நின்றனர், கூர்ந்து ஆர்வமாக கவனித்தனர். அவர்களுக்கு நடுவில் கைகளை ஆட்டியபடி, என்னை உணர்த்திவிடும் தவிப்போடு, எனக்கு ஏற்பட்ட அந்தத் திடீர் ஞானோதயத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் நோக்கோடு நான் நின்றுகொண்டிருந்தேன்: ஆனால் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் கைகளை உயர்த்தி என் வாயைத் திறந்த கணம் அவ்வுந்துதல், வார்த்தைகள் விழுங்கப்பட்டது போல் நான் உணர்ந்த அந்த உன்னதமான புரிதல் வெளிவராமல் போயிற்று.
‘என்ன?’ என்றனர், ‘என்ன சொல்ல வருகிறாய்? எல்லாம் சரியாகத்தானே இருக்கிறது. எது எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது. எல்லாமும் இன்னொன்றின் விளைவுகள். எல்லாமும் மற்றதில் பொருந்துகிறது. இதில் அபத்தத்தையோ தவறையோ எங்களால் பார்க்க முடியவில்லையே!’
நான் இப்போது அங்கே தொலைந்து போய் நின்றிருந்தேன், ஏனெனில் இப்போது மீண்டும் எல்லாம் சரியாக அதனதன் இடத்திற்குத் திரும்பி விட்டாற்போல இருந்தது, எல்லாமும் இயல்பாய் இருந்தது, சாலை சமிக்ஞை விளக்குகள், நினைவுச்சின்னங்கள், சீருடைகள், அடுகுமாடிகள், தண்டவாளங்கள், பிச்சைக்காரர்கள், ஊர்வலங்கள்; ஆனாலும் இது என்னை அமைதிப்படுத்துவதாக இல்லை, வேதனை தருவதாக இருந்தது.
‘மன்னித்து விடுங்கள்,’ என்றேன். ‘அநேகமாக நான்தான் தவறு. அப்போது அப்படித் தெரிந்தது. ஆனால் எல்லாம் சரிதான். மன்னித்துவிடுங்கள்,’ என்று கோபப்பார்வைகளுக்கு இடையில் சமாளித்தேன்.
ஆனாலும், இப்போதும், ஒவ்வொரு முறையும் (அடிக்கடி) எனக்கு ஏதோ புரியவில்லை என்று தோன்றுகிறது, பிறகு தன்னியல்பாக, எனக்குள் நம்பிக்கை நிறைகிறது, அநேகமாக இது எனக்கான தருணமாக இருக்கலாம், அநேகமாக மீண்டும் ஒரு கணத்தில் அடைந்து இழந்த அந்த ஒன்றுமற்றதில் நுழைவேன், அவ்வேறான அறிவை அடைவேன்.
***
இடாலோ கால்வினோ – 1923-ல் க்யூபாவில் பிறந்தவர். பத்திரிக்கையாளர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர். நவீன மெய்ம்மைத்துவம், பின்நவீனத்துவம் ஆகிய வகைகளில் செயல்பட்டவர். The Baron in the trees, Invisible cities, If on a winter’s night a traveler, Six memos for the next millennium ஆகியவை இவரது குறிப்பிட்த்தகுந்த படைப்புகள். 1985ல் இத்தாலியில் காலமானார்.
1 comment for “இடாலோ கால்வினோ கதைகள்”