நமக்கு முந்தைய தலைமுறையில் இரண்டுதாரங்கள் வைத்திருப்பவரை யாரும் தவறாகப் பார்க்கவில்லை. அவர்கள் நமது தெருவில்கூட இருந்திருக்கலாம். நானிருந்த தெருவில்கூட இரண்டு குடும்பங்கள் அப்படி இருந்தன. என் எத்ரித்தவீட்டுப் பெண்மணிக்கு வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு பையன் இருந்தான். அவர் வாரத்துக்கு ஒருமுறை வந்துபோவார். அவர் வரும் அன்றைக்கு வீடே அதைக் கொண்டாடும். பிள்ளைகள் அப்பாவுக்குப் பயந்தவர்கள். பிரியத்துடன்தான் இருந்தனர். ஒருவாரம் அவர் வராவிட்டாலும் வீடே சோகமயமாகி விடும். அந்த அம்மாள் வாசலிலேயே உட்கார்ந்தபடி தெருமுனையைப் பார்த்தபடி இருப்பார். பிள்ளைகளிடம் எரிந்து விழுவார். பையனுக்கு அடிகூட சமயத்தில் விழும்.
இந்தப்பாடல் அந்தக்குடும்பத்தில் ஒட்டுமொத்த துக்கத்தை நினைவுபடுத்தியது.
புலால் வாசமடிக்கும் சிற்றூரில் மீனவர்கள்
உப்பளத்தோரம் மலர்ந்த நீலப்பூவும் புலிநகக்கொன்றையும்
சேர்த்துச் சூடிக்கொள்வர். அத்தகைய ஊரானே
கானல்நீரோடும் மணல்வெளியடுத்த
இறா மீன் கலக்கிய மண்ணோடு அலைமோதும் கரையுடைய
புன்னை மரங்கள் சூழ்ந்த
பெருந்துறை நோக்கியபடி இருக்கிறாள் இவள்
பெருங்கைகள் கொண்ட அழகிய குதிரைகளுடைய
சேரனின் கழுமலம் என்ற ஊரைப்போல
இருந்த இவள் மேனி அழகு தொலைந்தது
உன்னை எண்ணிய கண்ணில் உறக்கமில்லை
முள்மரத்தில் வேய்ந்த கூட்டில் தன் சேவலோடு
பொருத இயலாப் பேடைபோல
துயர்தரும் இவ்விரவில் போய்
உன் ஊர் செல்கிறேன் என்கிறாயே
பாடல்: அகநானூறு (270வது பாடல். இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம் எனத்தொடங்குவது. இயற்றியவர்: சாகலாசனார்)
ஒரு பழமொழி உண்டு. முடிந்தவன் சாதிக்கிறான்; முடியாதவன் போதிக்கிறான். இதையே கவிஞர்களுக்கும் மொழியறிஞர்களுக்கும் போட்டுப் பார்க்கலாம். பொழிப்புரை எழுதுபவர்கள் ஒருவகையில் கவிதையைச் சிதைப்பவர்களே. வேறு வழியும் இல்லை. கவிதையை விவரித்துச் சொல்வது கொஞ்சம் இரசக்குறைவானதுதான். அதைவிட வார்த்தைகளுக்கு மட்டும் அர்த்தம் சொல்லிவிட்டு கவிதையை வாசிப்பவரே பொருள்கொள்ளும்படி விட்டுவிடலாம். அதைத்தான் பொழிப்புரைஞர்கள் செய்கிறார்கள். கவிதை பெரும்பாலும் சொல்லாமல் சொல்லி நிற்பது. பொழிப்புரைஞர்களோ சொல்லுக்கு மட்டும் அர்த்தம் சொல்பவர்கள். ஒரு பாடலை வாசிக்கையில் அது விவரிக்கும் காட்சியை கற்பனையில் விரித்தெடுக்க வேண்டும். சில கேள்விகளை எழுப்பிக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை வாசித்து விடைகாண முயல வேண்டும். இப்படிச் செய்ய ஆரம்பித்தோமானால் சங்கப்பாடல்கள் நம்மை வேறொரு உலகத்துக்கு இழுத்துச் செல்லும். உதாரணத்திற்கு இந்தப்பாடலில் பகலில் மட்டும் தலைவியைக் கூடும் காதலனை நோக்கி தோழி சொல்வதாக உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். மேலே உள்ள பாடல் அப்படியா இருக்கிறது? பகலில் தங்கி இரவில் ஏன் செல்லவேண்டும்? இரவில் மனைவியுடன் தானே கணவன் தங்குவான்? நீலப்பூவும், புலிநகக்கொன்றையும் சூடும் பரதவர்கள் கொண்ட ஊரைச் சேர்ந்தவன் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இப்படி கேட்டுக்கொள்கையில் இது மற்றொரு மனைவியின் துயரைச் சொல்லும் தோழியின் கூற்றாகவே படுகிறது.
‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்
புலாஅன் மறுகிற் சிறுகுடிப் பாக்கத்
தினமீன் வேட்டுவர் ஞாழலொடு மலையும்?
மெல்லம் புலம்ப! நெகிழ்ந்தன தோளே;
சேயிறா முகந்த நுரைபிதிர்ப் படுதிரைப்
பராஅரைப் புன்னை வாங்குசினைத் தொடுத்த
கானலம் பெருந்துறை நோக்கி இவளை
கொய்சுவற் புரவிக் கைவண் கோமான்
நற்றேர்க் குட்டுவன் கழுமலத் தன்ன
அம்மா மேனி தொன்னலம் சிதையத்
துஞ்சாக் கண்ணன் அலமரும்; நீயே
கடவுள் மராத்த முண்மிடை குடம்பைச்
சேவலொடு வதியும் சிறுகரும் பேடை
இன்னா துயவும் கங்குலும்
நும்மூர் உள்ளுவை; நோகோ யானே