அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள்

image

 

 

 

 

 

 

வெண் தந்தங்களால் 

பகைவர் மதில் தகர்த்து

புலிகள் அஞ்சும்படி 

வனங்களில் திரிந்து 

மூங்கில் தின்று  பசி  தீர்த்து 

தடாகம் குடித்து தாகம் அடங்கி  

மரங்கள் பெயரும்படி உதைத்து

காடதிர பிளிருபவை  யானைகள் 

இலஞ்சி குமாரசாமி கோவிலில் 

கைப்பிள்ளைக் காரி வைத்திருக்கும் 

தலை சுமக்கா குழந்தையின் சிரம் மீது 

துதிக்கை வைத்து வாழ்த்தி 

குழைந்து குழைந்து 

குழந்தையாகிப் போவதும் யானைதான்

 

***

 

சற்று முன்பு நீங்கள் வெட்டிய 

மரத்தின் கிளைகளில்தான்  

பகலில் தாய்மார்கள் 

குழந்தைக்கு தூளி கட்டுவர் 

கால்நடைகள் இளைப்பாறும் 

பறவைகள் பழங்கள் உதப்பும் 

தாழ்ந்த கிளைகளில் 

சிறுவர்கள் ஊஞ்சல் ஆடுவர்

வழிப் போக்கர்கள் ஓய்வெடுப்பர் 

இரவில் நாரைகள் அடையும்

மனம் கை விட்ட ஒருவன்

தூக்கு கயிற்றை மாட்டியதும் 

இம்மரத்தின் கிளை ஒன்றில் தான்

 

***

 

திரண்ட நிலக் கடலைகள் 

செடிகளில்  காய்த்து தொங்குகின்றன 

நிறை மாத கர்ப்பிணியாய் இருக்கும் 

தாயின் வயிற்று மேட்டில்  வாய் வைத்து 

உள்ளிருக்கும் சிசுவுடன் பேசுகிறது 

முதல் குழந்தை 

நடை சாத்திய கோவிலுக்குள் 

காகித மாலையில் இருந்த 

துண்டுச் சீட்டுகளைப் பிரித்து 

பக்தர்களின் வேண்டுதல்களை 

படித்துக் கொண்டிருந்தார் கடவுள் 

தொடு வானத்தில் ஏதோ எழுதிக் 

கொண்டிருக்கிறேன் 

நட்சத்திரம் ஒன்று உதிர்ந்து 

நாணயம் போல 

உள்ளங்கையில் வந்து விழுகிறது 

மூச்சுக்  குழாய்களின் வழியே 

வண்ணத்துப் பூச்சிகள் புகுந்து  

வெளியேறுகின்றன

தாகம் கொண்ட மரங்கள் 

வேர்களால்  நடந்து சென்று 

அருகில் உள்ள நீர் நிலையில்  

தண்ணீர் அருந்தி விட்டு 

மீண்டும் வேர்களை 

மண்ணுடன் பிணைத்துக் கொள்கின்றன

அறுந்தறுந்து வந்த  கனவுகள்

தூக்கத்தை துளைக்கத் தொடங்கின 

மின் விசிறியில்

தூக்கிட்டுத் தொங்குபவனின் கால்கள் 

என் முகத்தில் உரசும்  

கனவின் முடிவில்தான் 

திடுக்கிட்டு  எழுந்தேன்

***

காற்றில் அலையும் 

மினுங்கும் சோப்புக் குமிழென

மிதக்கிறது  வாழ்க்கை 

சுக்கிலம் வெளியேறும் நிமிடங்களில் 

முடிந்து விடுகிறது மகிழ்ச்சியின் ஆயுள் 

துயரோ 

குளத்தில் எறிந்த கல்லென 

கரையாமல் கிடக்கிறது 

இருந்தும் 

இரைச்சல் மிகுந்த பெரு நகரின் 

பள்ளிகூடம் ஒன்றில் 

இன்று காலை பூத்த ரெட் பெல் மலரைப் போல 

ஏதோ ஒன்று தினமும்  பூக்கிறது மனதிற்குள்

***

கீரை விதைகள் 

ரோஜாப் பதியன்கள்

கிராமத்து மூதாட்டி 

முந்தியில் முடிந்து வைத்திருக்கும் 

நாணயங்கள் 

உள்ளங்கையில் வழங்கப்பட்ட 

துளசி தீர்த்தம் 

குழந்தை சேகரித்து வைத்திருக்கும் 

உண்டியல் காசுகள் 

ஐப்பசி  மாத மேகங்கள்  போன்று 

கொஞ்சம் வார்த்தைகள் வைத்து இருக்கிறேன் 

உச்சிக் கிளையிலமைந்த கூட்டில் 

இரவில் அடைந்திருக்கும் நாரைகள் 

தலைக்கு மேல் வானத்திலிருக்கும் 

வெள்ளி அரை நிலவை 

கொத்த எத்தனிக்கும் 

ஒரு க்ஷணத்தில் 

இந்த வார்த்தைகளை 

ஒரு கவிதையில் இட்டு நிரப்புவேன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...