கனவுச் சாலையில் பொடி சொற்கள்

IMG-1-1ஒரு நிகழ்வு நம் மன உணர்வைத் தாக்கும்போது, அதன் பாதிப்பு சொற்களாய், செயல்பாடுகளாய் வெளிப்படுவது இயல்பு. அவ்வகை நிகழ்வு ஒரு படைப்பாளனைப் பாதிக்கும்போது, அதுவே ஒரு கலைப்படைப்பாய் உருவாகிப் போகும்.

தனக்கு ஏற்படும் நிகழ்வை ஒரு ஓவியன், ஓவியக் கண் கொண்டு ஓவியமாக்குகிறான். கதை  சொல்லும் கதைசொல்லி அதைச் சிறுகதையாகவோ அல்லது நெடுங்கதையாகவோ படைத்தளிப்பான். ஒரு கவிஞன் தனக்குள் ஏற்படும் அவ்வுணர்வை நுண்ணுணர்வாய் வெளிப்படுத்துவான்.

தன்னைக் கடந்து போகும் உணர்வின் வெளியை மிக இயல்பாக அந்தக் கணத்தின்  நேர்மை உணர்வை பாசாங்கு இல்லாமல் பூங்குழலி வீரன்  இக்கவிதைத் தொகுப்பின் முழுமைக்கும் சொல்லிப்போவது அவரது உண்மை உணர்வின் வெளிப்பாடாய்த் தெரிகிறது.

மரணம் என்பது பிறப்பிற்குப் பிறகு நிகழும் ஒரு நிகழ்வு என்றாலும், அதுவே தன்னைச் சார்ந்த உறவுகளுக்கு ஏற்படும்போது, அதன் பாதிப்பும் அதனால் ஏற்படும் உளச்சோர்வும் சொல்லில் அடங்காது. கவிஞர் தந்தையின் பிரிவில் அல்லலுறும் மன உணர்வை இப்படி பேசுகிறார்.

இறந்த என் தந்தையின்

நிழற் படங்கள்

இறக்கவே இல்லை இன்று வரை

……………………………………………………………..

………………………………………………………………

இன்றைக்கும் என்றைக்குமான

எங்கள்

வாழ்கையில் ஒன்றை இழக்க

கடக்க வேண்டியிருக்கிறது

நான் தனியே

எனக்கும் மட்டும்

நீள்கின்ற வாழ்கையை.

வாழ்பனுபவங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு வகையான பாடங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும். வாழ்வின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு படைப்பாளன், அதில் அடங்கிக்கிடக்கும் உணர்வுகளைப் படைப்புக்குள் கொடுத்துக் கொண்டிருப்பான். அதுவும் தனக்கு ஏற்படும் அனுபவங்களைக் கவிதையாய் சொல்லும்போது, அதில் இரண்டறக் கலந்திருக்கும் உணர்வுகளைச் சொல்லிச்சொல்லி புளகாங்கிதம்  அடைந்துபோவான்.

பூங்குழலி வீரன், தனக்கு ஏற்பட்ட எல்லா வகையான உணர்வுகளையும் கவிதையாக உருமாற்றியிருக்கிறார். குழந்தைகள் உலகைப் பற்றி பேசும் அவர், ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரணம் கவிதையில்,  குதூகலமாய்  கவலையற்றுத் திரியும் குழந்தைகளும், அதோடு பறந்து திரிந்த வண்ணத்துப்பூச்சியின் வாழ்வையும், சொல்லும்போது நாமும் குழந்தையாகிப் போகிறோம்.

பிரிவின் துயரம் மிகக் கொடுமையானது. தம் வாழ்வில் பின்னிப்பிணைந்த  ஓர் உறவின் பிரிவை இப்படிச் சொல்கிறார்.

எல்லா நினைவுகளையும்

கொன்று புதைத்து விட்டு

கடந்து

போகிறாய் நீ

எல்லா நினைவுகளையும்

மீட்டுத் தந்து விட்டு

நின்று 

போகிறது காலம்.

யோசித்துப் பார்க்கையில் இந்த வாழ்கையில் என்ன இருக்கிறது. தினம் எண்ணி பார்க்கின்ற இந்த உணர்வை, பிறப்பு, இறப்பு, படிப்பு, வேலை, காதல், எத்தனை முறை பிறந்தாலும் இதைத் தவிர என்ன இருக்கிறது, அருந்தவமாய் கிடைத்த இந்த வாழ்வில் என்று கவிதை முடிகையில் வாழ்வின் வெறுமையே மேலிடுகிறது.

வீட்டு முகப்பறையில் என் நிழற்படத்தைப் பார்த்தேன். நான் வளர்ந்து விட்டிருக்கிறேன். குழந்தையாக நான் இருக்கையில், என் நிர்வாணம் எல்லோருக்கும்  மகிழ்ச்சி. இப்போது நீங்கள்  என் நிழற்படத்தைப் பார்கையில் என் மகிழ்ச்சி தெரியாது. ஆனால் ‘நானும்/ இருந்திக்கிறேன் நிர்வாணமாய்/ நீங்காத/ சிரிப்புடன்’ இந்த உணர்வை நிர்வாணம் கவிதையில் சொல்லி, மீண்டும் என் குழந்தைப்பருவ மன மகிழ்ச்சியை எனக்குள் ஏற்படுத்தினார் பூங்குழலி.

புகைப்படங்கள் கவிஞரின் கவிதைகள் அதிகமாய் மிளிர்கிறது. அப்பாவின் புகைப்படம், அண்ணனின் புகைப்படம், புகைப்படக் கலைஞனின் தனிமை, உணர்வின் புகைப்படம் என அதிக கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

வீட்டின் முகப்பு அறையில் தொங்கும் கடிகாரத்தை சும்மா பார்த்து போகிறோம் நாம். அதன் பாடுபொருள் சொல்லிப் போவது என்ன..?

……….எல்லாரையும் கவனமாய் கணக்கிலெடுத்து

கரைந்து கொண்டிருக்கிறது

காலம்.

தினம் நம் வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள் வெவ்வேறான மனித குணங்களோடு  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் உணர்வோடு இவர்கள் இணைந்து போக முடியாமல் தவிக்கும்போது, அதன் பாதிப்பு மிக அதிகம்.

….பெருவாந்தியாக பிரவாகமெடுக்கிறது

எவ்வளவு தான் அடக்கி வைப்பது

பின் தொடரும் உன்னை எப்படி தவிர்ப்பது

பெருவாந்தியை எந்தச் சாக்கடையில் எறிய முடியும்.

எனும்போது உண்மையில் நம்மோடு இணைந்து, திரியும் நபர்கள் பெருவாந்தியாக  வெளிப்படுகிறார்கள்.

இக்கவிதைத் தொகுப்பில் பூங்குழலி வீரன் தன் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களையும் அதனால் ஏற்பட்ட  மன உணர்ச்சிகளையும் தொய்வில்லாமல் சொல்லி இருக்கிறார்.

எளிய சொற்களில் மன உணர்வினை கவிதைத் தொகுப்பு முழுமைக்கும் இவர் சொல்லி இருப்பது சிறப்பென்றாலும், எனக்குள் ஒர் ஐயம் தோன்றுகிறது. நம் மனதுக்குள் எழும் தனித்த வாழ்வின் உணர்வை மட்டுமே பேசி விட்டால், அது கவிதையாகிப் போகுமா? அக உணர்வுகளைத் தேக்கி வைத்து கவிதை சொல்வது, ஒருவேளை அது தன்னிரக்கத்தை உருவாக்கிவிடுமா..?. நான் கொஞ்சம் அச்சப்படுகிறேன்.

நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளிலிருந்தும், விரிந்த சமூகப் பார்வை கொண்ட படைப்புகளை வழங்கிட இன்னும் கொஞ்சம் முனைப்போடு  செயல்பட்டால், நவீன படைப்பாளியாய் அடையாளம் காணப்படும் பூங்குழலி வீரன், மிக சிறந்தப் படைப்பிலக்கியவாதியாய் திகழ்வார் என்பது என் நம்பிக்கை.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...