தகவல் கற்றறிவு திறன்

விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றம் மற்றும் தகவல் வளங்களின் பெருக்கம் அதிகரித்திருக்கும் இச்சமகால சூழலில் தகவல் கற்றறிவு திறன் மிகவும் முக்கியமானதாகும். தகவல் கற்றறிவு திறன் தனியாக இயங்குவதில்லை. அது சில திறன்களின் தொகுப்பாகவே செயல்படுகிறது. படிக்கும் திறன், எழுதும் திறன், வாசிக்கும் திறன், கணினியை இயக்கும் திறன், டிஜிட்டல் பொருட்களை இயக்கும் திறன் என இவையனைத்தின் சேர்க்கையில் இயங்கக் கூடியதே தகவல் கற்றறிவு திறனாகும். இத்திறன்களில் ஏதாவது ஒன்றில் சிக்கல் இருந்தாலும் தகவல் கற்றறிவு திறனை வளர்த்தெடுப்பதில் சிக்கல்கள் வருவதைத் தவிர்க்கவியலாது.

நூலகங்கள், இணையம், சமூக வளங்கள், நிறுவனங்கள், ஊடகங்கள் என பல்வகைப்பட்ட வழிகளில் தகவல்கள் வடிகட்டப்படாமல் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றின் தேவை, நம்பகத்தன்மை, ஏற்புடைமை, சார்புநிலை சார்ந்த சவாலான கேள்விகளுக்கு மிகத் தெளிவாக பதிலளிக்க முடியுமெனில் அதுவே தகவல் கற்றறிவு திறனாக கருதப்படுகிறது.

தகவல் கற்றறிவு திறனைப் பெறுவது வாழ்நாள் முழுக்க மேற்கொள்ளப் போகும் கற்றலுக்கான அடிப்படையை உருவாக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இத்திறன், கற்றலின் அனைத்து சூழல்களுக்கும் கல்வியின் அனைத்து நிலைகளுக்கும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுவானது. கற்றல் நீடிக்கும் காலம்தோறும் பயன்படக்கூடியது. தகவல் மதிப்பீடு சார்ந்த நிபுணத்துவம் பெற மற்றும் ஆய்வை நீட்டிக்க, தகவலின் தேவையை நோக்கிச் சரியான பாதையில் செல்ல, மற்றும் கற்றலின் வரையறைக்குட்பட்டிருப்பதை உறுதி செய்யவும் இத்திறன் உதவுகிறது. இத்திறன் கைவரப்பெற்றால்  வாழ்நாள் முழுக்க இதனைப் பயன்படுத்த முடியும் என்பது தெளிவு.

தகவல் கற்றறிவுத் திறனை கைவரப் பெற்றவர்களால்

  • எந்தத் தரவுகள் தனக்கு தேவையானதென எளிதில் அடையாளம் காண முடியும்
  • தேவையான தரவுகளை/தகவல் மூலங்களை மட்டும் அணுக முடியும்
  • பயன்பாட்டுக்குத் தக்கவாறு தரவுகளை ஒழுங்குபடுத்தி வைக்க முடியும்
  • நோக்கத்திற்கு ஏற்ப தகவல்களைத் திறம்பட பயன்படுத்த முடியும்
  • தரவுகளின் முழுமைத்தன்மை, மெய்த்தன்மையை மதிப்பீடு செய்து ஆய்வின் அறத்திற்கு உட்பட்டு நிபுணத்துவத்துடன் அவற்றை அணுக முடியும்

நூலகவியல்துறை சார்ந்த நிபுணர்கள் இத்திறனைப் போதிக்க பல மாதிரிகளை  (Models)  உருவாக்கியுள்ளனர். அவற்றுள் மிக முக்கியமானதாக The Big6  (Eisenberg & Berkowits, 1990), Indormation Search Process  (Kuhlthau, 1989), Stripling and Pitts Research Process Model  (1988), Pathway to Knowledge Information Skills Model  (Pappas & Tepe, 1995) ஆகியவை உள்ளன. இந்நான்கு வகை மாதிரிகளும் ஒரே மாதிரியான சில படிநிலைகளை நமக்கு முன்மொழிகின்றன. அவற்றை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் தகவல் கற்றறிவு திறனை நாம் பெற முடியும்.

தகவல்கள் தேவைப்படும்போது அவற்றை  (1) என்ன தகவல் வேண்டும் என்பதை அறிதல்  (Identify),  (2) அடையாளம் காணுதல்  (Find),  (3) மதிப்பீடு செய்தல்  (Evaluate),  (4) தேவைக்கேற்ப திறம்பட பயன்படுத்துதல்  (Apply),  (5) தரவின் மூலதாரரை அங்கீகரித்தல்  (Acknowledge) என இவ்வைந்து வகை படிநிலைகளே அனைத்துவகை தகவல் கற்றறிவு திறன் மாதிரிகளில்  (Models) முன்மொழியப்பட்டுள்ளன.

தகவல் கற்றறிவு திறனின் ஐந்து படிநிலைகள்

(1) என்ன தகவல் வேண்டும் என்பதை அறிதல்  (Identify)
இது முழுக்க முழுக்க தேடப்போகும் தலைப்பைப் புரிந்துகொள்ள உதவும் படிநிலையாகும். தலைப்பை ஓரளவு புரிந்துகொள்ள மேலோட்டமான அல்லது அறிமுகத்துக்கான வாசிப்பை மேற்கொள்ளலாம்.  (இப்படிநிலையில் Wikipedia-வைப் பயன்படுத்தலாம்). அடுத்து, தகவலைத் தேடப்போவதன் நோக்கம்  (Research objective), அதிலுள்ள சிக்கல்  (Problem statement), கேள்வி  (Research question) ஆகியவற்றை உருவாக்கிக் கொள்வதன் வாயிலாக என்ன தகவலைத் தேடப் போகிறோம் என்ற தெளிவுடன் தேடுதலைக் குறிப்பிட்ட எல்லைக்குள்/கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அல்லது தலைப்பின் குறிப்புச் சொல் (Keyword) / கருத்துப்படிவம் (Key concept) அடையாளம் காணுதல் இப்படிநிலையில் மேற்கொள்ளத் தக்கதாகும்.

உதாரணம்:-

தலைப்பு : கோலாலங்காட் அ. ரெங்கசாமி நாவல்களில் வரலாற்றுக் கூறுகள் : ஓர் ஆய்வு
குறிப்புச் சொல் 1  : அ. ரெங்கசாமி நாவல்கள்  [A. Reṅkacāmi Novels]
குறிப்புச் சொல் 2 : வரலாற்றுக் கூறுகள் [Historical Elements]

கூகுள் மற்றும் கூகுள் ஸ்கோலர் தேடுதலின் அடைவு:

  00000

சரியான குறிப்புச் சொல் மற்றும் கருத்துப் படிவத்தை உருவாக்கி வைப்பதன் மூலம் நம் தேவைக்குப் பொறுத்தமான தரவுகளை எளிதில் அடையாளம் காணமுடியும் என்பதை மேற்காணும் தரவுகளின் எண்ணிக்கையைக் கொண்டு புரிந்துகொள்ளலாம். நூலகங்க விவரண அட்டைவணையிலும்  (OPAC) இம்முறையினைப் பின்பற்றி தேடும்போது தேவையான நூல்களின் விபரங்களை எளிதில் அடையாளம் காண முடியும்.

*எம்மொழியில் ஆய்வு செய்தாலும் அதன் முக்கியமான குறிப்புச் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்வது அவசியமாகும். அல்லது தரவுகள் அதிகம் கிடைக்கக்கூடிய மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வது அவசியமாகும்.

(2) அடையாளம் காணுதல் (Find)

பல்லூடகம், தகவல் களஞ்சியம், வலைத்தளம், தரவு தொகுப்பு, ஆடியோ / வீடியோ), புத்தகம் என தரவுகள் கிடைக்கச் சாத்தியமான மூலங்கள் மற்றும் வடிவங்களை அடையாளம் கண்டடைவது இப்படிநிலையாகும். இப்படிநிலையில் தரவுகளைச் சேகரித்து, அவை முதன்மைநிலை மற்றும் இரண்டாம்நிலை ஆதாரங்கள் என வேறுபடுத்தி அவற்றின் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் அறிந்து வகைப்படுத்தி வைத்திருப்பர்.
உதாரணம்:-

தலைப்பு : கோலாலங்காட் அ. ரெங்கசாமி நாவல்களில் வரலாற்றுக் கூறுகள்: ஓர் ஆய்வு

(1) எழுத்தாளர் அ. ரெங்கசாமி நாவல்கள்
தகவல் மூலம் – நூலகம் அல்லது எழுத்தாளரை நேரடியாக அணுகுதல். அல்லது  மின்னூல்

(2) வரலாற்றுக் கூறுகள் [மலேசிய வரலாறு]
(தலைப்பு, வரலாற்றுக் கூறுகள் என்பதாக இருந்தாலும் குறிப்பாக எந்த வரலாறு எனும்      அடிப்படைத் தெளிவு இருந்தால் மட்டுமே சரியான தரவுகளை அணுக முடியும்)

தகவல் மூலம் – நூல், இணைய நூல், வரலாற்று ஆய்வாளர் அகப்பக்கங்கள், ஆய்வடங்கல்கள், இதழ்கள், பேட்டிகள்

0000

(3) மதிப்பீடு செய்தல் (Evaluate)

இது தரவுத் தளங்களையும், தரவுகளையும் மதிப்பீடு  செய்யும் படிநிலையாகும். தகவல் மூலங்களில் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து அவற்றை முழுமையாக மதிப்பீடு செய்வதன்வழி சரியான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய உதவும். நூல்கள், இணையத்தரவுகள், இணையதளங்கள் என ஒவ்வொன்றையும் மதிப்பீடு செய்ய முடியும். அதுபோல, தரவுகளை மதிப்பீடு செய்வதன் மூலம் அவை அறிவுத்துறை சார்ந்ததா (Scholarly), விவாதங்கள் அடங்கிய பிரபலமான ஆய்வா  (Popular research), சார்புநிலைக்கு உட்பட்டதா  (Bias), விக்கிபீடியா வகை சார்ந்ததா மற்றும் படைப்பாளரின் துறைசார் ஆளுமை மற்றும் நம்பகத்தன்மை (Author’s quality and accountability) என்ன என எளிதில் பிரித்துப்பார்க்க முடியும். நம்பகத்தன்மையற்ற தரவுகளைக் கழித்து மீந்திருக்கும் தரவுகள் ஆய்வின் தேவைக்குப் போதுமானதாக இருக்குமா என்பதையும் முடிவு செய்து விடலாம். தகவல்கள் போதாத சூழலில் தலைப்பை வெவ்வேறு கோணங்களில் அணுகி தேடுதலை மேற்கொள்ள முடியும்.

உதாரணம்:-
தலைப்பை வெவ்வேறு கோணங்களில் அணுகி தேடுதலை மேற்கொள்ளுதல்

தலைப்பு : கோலாலங்காட் அ. ரெங்கசாமி நாவல்களில் வரலாற்றுப் பதிவுகள் : ஓர் ஆய்வு

  • இலக்கியங்களில் வரலாற்றுப் பதிவுகள்
  • நாவல்களில் வரலாற்றுப் பதிவுகள்=
  • வெவ்வேறு மொழி இலக்கியங்களில் வரலாற்றுப் பதிவுகள்

பட்டக்கல்வி ஆய்வுகள் மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் ஆய்வியலாளர்கள் மேற்கூறிய இம்மூன்று படிநிலைகளைப் பின்பற்றினால் தங்களது ஆய்வுக்குப் போதுமான தரவுகள் கிடைக்குமா என்பதைக் கணித்துவிட முடியும். ஆய்வின் பாதியில் தரவுகளற்று ஆய்வுவேலை தேங்கிப் போவதை இதன்மூலம் களையலாம்.

(4) தேவைக்கேற்ப திறம்படப் பயன்படுத்துதல் (Apply)

இப்படிநிலையில் தகவல்களை ஒருங்கிணைத்தல், தொகுத்தல், தேவைக்கேற்ப பயன்படுத்தல் ஆகியவை குறிப்பிடத்தக்க செய்ல்பாடுகளாகும். தகவல்களை அறிவுத் திருட்டுக்கு உட்படாமல் பொழிப்புரை செய்தல்  (Paraphrasing), மேற்கோள் காட்டுதல்  (Quoting), சுருக்கி எழுதுதல் (Summarizing) ஆகியவற்றின் வித்தியாசங்களை அறிந்து பயன்படுத்துவது ஆகியவையே ‘திறம்படப் பயன்படுத்துதல்’ என இப்படிநிலையில் அழைக்கப்படுகின்றது.

(5) தரவின் மூலதாரரை அங்கீகரித்தல்  (Acknowledge)

தரவின் மூலத்தைத் தேர்வு செய்த ஒரே முறையிலான  மேற்கோள் வடிவம்  (Citation format) மூலம் படைப்பில் பதிவு செய்தல் இப்படிநிலையில் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். மேலும் பதிப்புரிமைக்கு உட்பட்ட தரவுகளைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கான பயன்பாட்டு அனுமதி பெற்றதன் சான்றையும் குறிப்பிடுவது அவசியமாகும். தரவுகளை நேர்மையான வழியில் பெற்றதையும் பயன்படுத்தியதையும் உறுதி செய்யும் வழியாகவே இது அமைகின்றது.

தகவல் கற்றறிவு திறனைப் பெற்றவர்களால் புதிய சிந்தனைகளை உருவாக்க முடியும். கருத்துப் பகிர்தலையும் வாதங்களையும் வலுவாக முன்வைக்க முடியும். பிறர் வாதங்களை சான்றுகளுடன் மறுத்துப்பேச முடியும். புதியனவற்றை உள்வாங்கிக்கொண்டு பழையனவற்றோடு எளிதில் தொகுத்துக்கொள்ள முடியும். தரவில், தரவுத்தளத்தின் நம்பகத்தன்மையை எளிதில் அடையாளம் காண முடியும். தகவல் கற்றறிவு திறன் சுதந்திரமான கற்றல் சூழலுக்கு வழிகோலும் அதேவேளை அத்திறனைப் பெற்றிடாதவர்கள் தரவுகளைக் கையில் வைத்துக் குழம்பவும், அதிகப்படியான தரவுகளுக்கு மத்தியில் சிக்குண்டுபோகவும் வாய்ப்புகள் அதிகம். கற்றல், கற்பித்தல், ஆய்வு, வாசித்தல் என இன்னும் இதர பல துறைகளும் தமிழில் மேலும் விசாலமடைய தகவல் கற்றறிவுத் திறன் இன்றியமையாததாகும்.

தொடர்ந்து, தகவல் சுழற்சி  (Information cycle) மற்றும் இணைய, நூலக தேடுதல் நுட்பங்களை  (Searching Techniques)  அடுத்த மாதம் பார்ப்போம்.

துணைநூல் பட்டியல்

  • Association of College and Research Libraries.  (1989, January 10). Presidential committee on information literacy : Final report. Retrieved from http://www.ala.org/ala/mgrps/divs/acrl/publications/whitepapers/presidential.cfm
  • Lau, J.  (2006). Guindelines on Information Literacy for Lifelong Learning: Final Draft. Retrieved from http://www.ifla.org/files/assets/information-literacy/publications/ifla-guidelines-en.pdf

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...