தமிழில் ஏன் கோட்பாட்டு ரீதியான விமர்சனங்கள் வருவதில்லை?
தமிழில் தொல்காப்பியரின் தொல்காப்பியம் காத்திரமான விமர்சனத்தை உள்ளடக்கியுள்ளது. கிரேக்கத்தில் அரிஸ்டாடில் போல தொல்காப்பியர். ஆனால் அந்த விமர்சன மரபு வளர்க்கப்படவில்லை. வைதிக சமயத்தின் ஆதிக்கம் காரணமாகப் புத்தகம் என்றால், அது கேள்விகளுக்கு அப்பால்பட்ட நிலையில் புனிதமாகக் கருதப்பட்டது. புத்தகத்தைப் பற்றி ரசனை முறையில் நலம் பாராட்டுதல்தான் தமிழில் வழக்காகி விட்டது. கல்வித்துறை சார்ந்த விமர்சன மரபு, தமிழுக்குப் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. எழுபதுகளில் சிறுபத்திரிகை சார்ந்த மரபில் அறிமுகமான மேலைக் கோட்பாடுகள், புதிய போக்கினை அறிமுகப்படுத்தின.
தமிழவன், நாகர்ஜுனன் போன்றோர் புதிய கோட்பாடுகளை முன்வைத்தாலும், அவை படைப்புகளுடன் ஒருங்கிணையவில்லை. பிரேம் ரமேஷ், ஜமாலன் போன்ற விமர்சகர்களின் பேச்சுகள், ஒருவகையில் மேலைக்கோட்பாடுகளைத் தமிழுக்குப் பொருத்திட முயன்றன. என்றாலும் அவை நகல்களே. தமிழ் மண்ணுக்கேற்ற விமர்சன மரபு என அசலான கோட்பாடுகள் உருவாகவில்லை என்பதுதான் உண்மை. கடந்த எழுபதாண்டு கால இலக்கிய உலகினைக் கூர்ந்து அவதானித்தால் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிபடும். மேலைநாடுகளில் ஏதாவது ஒரு கோட்பாட்டை அவ்வப்போது விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். உடன் எல்லோரும் அந்தக் கோட்பாட்டின் பின்னால் செல்கின்றனர். பின்னர் வேறு புதிய கோட்பாடு உருவாக்கப்படுகின்றது. மீண்டும் அதே நிலை. படைப்பு முக்கியமா? விமர்சனம் முக்கியமா? என்றால், கோட்பாடுதான் முக்கியம் என்ற பிரேமை முன் வைக்கப்படுகிறது. இது இலக்கியத்தைப் பொறுத்தவரையில் சவலைப் பிள்ளைத்தனம். எல்லாவற்றுக்கும் மேலைநாடுகளைச் சார்ந்திருப்பது போல கோட்பாடுகளுக்கும் காத்திருக்கும்
கோட்பாடுகள் மூலம் ஒரு படைப்பை மதிப்பிட வேண்டாமென்றால், படைப்பை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக எதைக் கொள்வது?
கோட்பாடுகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. இலக்கிய ஆய்வில் கோட்பாட்டின் இடம் தனித்துவமானது. படைப்பினை அணுகுவதற்குக் கோட்பாடுகள் உதவியாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் விதிவிலக்காகப் படைப்புகளைவிடக் கோட்பாடுகளை மேலானதாக முன்னிறுத்தும் இன்றைய போக்கு, நுண்ணரசியல் சார்ந்தது. கோட்பாடு அறிந்தபின்னர்தான் ஒருவர் சிறந்த படைப்பாளியாகவோ, விமர்சகராகவோ இருக்க முடியும் என்பது வெட்டிப் பேச்சு.
விமர்சகன் படைப்பாளியாக இருக்க வேண்டுமா அல்லது நல்ல வாசகனாக இருந்தால் போதுமா? இன்றைய சூழலில் விமர்சனம், அதை படைப்பாளிகள் ஏற்றுக்கொள்ளும் விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வாசகர் மிகவும் முக்கியமானவர். கவிதை என்ற பெயரில் ஏழெட்டு வரிகளை மடக்கி எழுதிவிட்டு, தன்னைக் கவிஞராகக் கருதுகின்ற மனநிலை இன்று வலுவாக உள்ளது. யார் படைப்பாளர்? யார் விமர்சகர்? என்ற வரையறை தகர்ந்து விட்டது. பொதுவாக எல்லா விமர்சகர்களும் அடிப்படையில் படைப்பினைப் புரிந்துகொள்ள முயலுகின்றனர். இன்னும் சொன்னால் விமர்சகர்கள் ஒருவகையில் தோற்றுப்போன படைப்பாளிகள்தான். இலக்கிய உலகில் வாசகர்-படைப்பாளி என்ற நிலைதான் முக்கியம். படைப்பின் உன்னதங்களை விமர்சனம் மூலம் வெளிப்படுத்திட முயலும் விமர்சகர், படைப்பாளருக்கும் வாசகருக்கும் இடையில் பாலமாக விளங்குகிறார். விமர்சனம் என்பது மயிலிறகினால் வருடுவதுபோல இருந்தால், படைப்பாளர்கள் உற்சாகம் அடைகின்றனர். அதேவேளையில் படைப்பு குறித்த எதிர்மறையான கருத்துகளைச் சொன்னால், வர்க்க விரோதி போல பாவிக்கின்ற மனநிலையும் தமிழ்ச் சூழலில் நிலவுகின்றது. எந்தவொரு படைப்பையும் விமர்சனத்தினால் உயர்த்திடவோ அல்லது தாழ்த்திடவோ இயலாது. சிறந்த படைப்பு, தனது அசலான பலத்தினால் காலத்தைக் கடந்து நிற்கும்.
சமகாலப் படைப்புகளில் அரசியல் என்பது எந்த அளவில் இருக்கிறது?
நீங்கள் இலக்கிய அரசியலைச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். அரசியலற்ற பிரதி என எதுவும் இல்லை. எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒருநிலையில் நுண்ணரசியல் சார்ந்து வெளிப்படுகின்றன. இன்று ஈழத்தில் தமிழர்களின் போராட்டம் வீழ்ச்சியடைந்த நிலையில் வெளியாகிக் கொண்டிருக்கும் நாவல்களின் பின்புலத்தில் காத்திரமான அரசியல் உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்த 45 ஆண்டுகளாக தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.கட்சிகள் ஆட்சியில் உள்ளன. ஊழல் என்பது சாதாரண விஷயம் என மக்களை நம்ப வைப்பது ஒருபுறம் நடந்தேறியுள்ளது. முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் எப்படி வேண்டுமானாலும் ஊரை அடித்து உலையில் போடலாம் என்ற நிலையில், அரசியல் கட்சியில் சேர்வது என்பது ஊழல் செய்து பணம் கொள்ளையடிக்கத்தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. வானில் பறக்கும் ஹெலிகாப்டரைப் பார்த்துக் கூனிக்குறுகிக் கும்பிடும் அமைச்சர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை எதுவும் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் பொது வாழ்க்கையில் உன்னதமான மதிப்பீடுகள், நேர்மை என எல்லாம் சிதலமாகிக் கொண்டிருக்கின்றன. சரி இத்தகைய ஊழல், அராஜக நிலையைச் சித்திரிக்கும் அரசியல் புனைகதைகள் ஏன் தமிழில் எழுதப்படவில்லை என்ற கேள்வி தோன்றுகிறது. சமகாலப் பிரச்சினைகளை அரசியல் நோக்கில் விமர்சித்து எழுதுவது என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. தமிழர்களைப் பொறுத்தவரையில் மேனாமினுக்கி, கபடம், டாம்பீகம் போன்ற அற்ப விஷயங்களுக்குப் பழகி விட்டனர். சிறுமை கண்டு பொங்குவாய் எனப் பாரதியின் கவிதை வரி, காற்றில் கரைந்து விட்டது.
தலித்தியம் சார்ந்த படைப்புகள் குறித்த உங்கள் பார்வை? அது தற்போது எந்த நிலையில் இருக்கிறது?
எங்கெங்கு மக்கள் ஒடுக்கப்படுகின்றனரோ, அவர்களுக்குச் சார்பாக வெளிப்படும் இலக்கியப் படைப்புகள் அவசியமானவை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்றளவும் வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர் போன்ற ஆதிக்க சாதியினர், அரசியல் உள்ளிட்ட எல்லா நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். உயர் சாதிப் பெருமையின் விளைவுதான் நேற்று இளவரசன், இன்று சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிறப்பின் அடிப்படையில் தீண்டத்தாகதவர் என ஒதுக்கும் மநு தருமம், இன்றும் செல்வாக்குச் செலுத்துகின்ற நிலையில், ஒடுக்கப்பட்டவர்களின் வலியையும் எதிர்வினையையும் பதிவாக்கிட தலித்தியம் சார்ந்த படைப்புகள் நிரம்ப வர வேண்டியுள்ளது.
உண்மையில் பின்நவீனத்துவப் படைப்புகளுக்கான தேவை இப்போது தமிழ்ச்சூழலில் இருக்கிறதா?
பின்நவீனத்துவம் அறுபதுகளிலே மேலைநாடுகளில் காலாவதியாகி விட்டது என்ற பேச்சு உள்ளது. தமிழகச் சிறுபத்திரிகைச் சூழலில் பின்நவீனத்துவம் வேறுவகையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. குறிப்பாகச் சோவியத் யூனியன் நொறுக்கப்பட்ட பின்னர், தமிழகத்து அறிவுஜீவிகளிடம் நிலவிய வெற்றிடத்தைப் பின்நவீனத்துவம் பதிலி செய்து விட்டது. எல்லாவற்றையும் கட்டுடைத்தல், பிரதியின் அதிகாரம், ஆசிரியரின் மரணம், நகல்களின் உண்மை எனப் பல்வேறு நிலைகளில் பின்நவீனத்துவம் தமிழில் பெரிதும் பயன்படுகின்றது. குறிப்பாக ஒற்றைத்தன்மையுடன் சொல்லப்பட்ட யதார்த்தக் கதைசொல்லலுக்கு மாற்றாகப் பல்வேறு சாத்தியங்களை முன்னிறுத்தும் தொடர்ச்சியற்ற எழுத்து முறையானது, பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி, ஜெயமோகனின் வெள்ளை யானை, விநாயகமுருகனின் வலம் என வெளியாகியுள்ள நாவல்கள் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்துள்ளன. தமிழவன், எம்.ஜி.சுரேஷ், பிரேம் ரமேஷ், ஷோபாசக்தி எனப் பலரும் மாறுபட்ட நாவல்களைப் படைத்திட பின்நவீனத்துவம் பெரிதும் உதவியுள்ளது
கவிதைத் தொகுப்புகளும் கவிஞர்களும் பெருகி வருகிறார்கள். பதிப்பகங்கள் கவிதை நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. இன்றைய கவிதை நூல்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? இச்சூழல் ஆரோக்கியமானதா?
இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் இன்றளவும் கணக்கற்ற கவிஞர்கள் கவிதைகள் எழுதுவதும், கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவதும் என நிலவும் சூழல் ஆரோக்கியமானதுதான். என்ன, கவிதை பற்றிய பேச்சுகளும் மறுபேச்சுகளும் காத்திரமாக உருவாகவில்லை. இதுதான் கவிதை எனக் கவிஞர்கள் சிலர் வரையறுப்பதையும் மீறி, புதிய வகைப்பட்ட கவிதைகள் வெளியாகின்றன. அற்புதமான கவிதை வரிகளை எழுதுகின்ற கவிஞர்களின் தொகுப்புகளும் பரவலாக விற்பனையாகவில்லை என்ற நிலையில், பல பதிப்பகங்கள் கவிதை என்றால் முகத்தைச் சுழிக்கின்றன. தொண்ணூறுகளில்கூட தனிச்சிறப்புடன் விளங்கிய தமிழ்க் கவிதை, இன்று முட்டுச் சந்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. இதிலிருந்து கவிதை மீளூம் என்று நம்புவதை தவிர வேறு வழியில்லை.
நேர்காணல்: ஶ்ரீதர்ரங்கராஜ், கார்த்திகைப்பாண்டியன்
உண்மையான நூலகர் ….
நன்மையான கல்வியாளர் ….
பேராசிரியைகளைவிடச் சிறந்த ஆய்வறிஞர் …
அண்ணன் ந.முருகேசபாண்டியன் அவர்களின் நேர்காணல் நிறையக் கற்றுக்கொள்ளவைக்கிறது ….