வல்லினம் விமர்சன அரங்கு 2016 பதிவுகள் – பாகம் 3

IMG-20160207-WA0053பிப்ரவரி 7, 2016 ஞாயிற்றுக்கிழமை – [இரண்டாம் நாள்]

ஆறாவது அமர்வு : என்னை நாயென்று கூப்பிடுங்கள் 
நூலாசிரியர் : சிவா பெரியண்ணன்
நூல் விமர்சனம் : கோ. புண்ணியவான், பூங்குழலி வீரன்
நேரம்: காலை 9.30– 11.00 வரை

இக்கவிதை நூல் தொடர்பாக கோ.புண்ணியவான், பூங்குழலி வீரன் இருவரும் எழுதியிருந்த விமர்சனக் கட்டுரைக்கு அப்பால் உள்ள விடயங்கள் குறித்துப் பேசுவதாக அமர்வு முன்னகர்த்தப்பட்டது. அவ்வகையில் சிவா பெரியண்ணன் கவிதைகள் குறித்த உரையாடலும் விவாதமும் கவிதைகள், கவிஞன் எனும் அடிப்படையில் விரிவான தளத்தில் நின்று விவாதிக்கப்பட்டன. கவிதையின் மொழி, கவிதைக்கும் கவிஞனுக்கும் உள்ள தொடர்பு, கவிதைக்கும் வாசகனுக்கும் உள்ள நெருக்கம் என கவிஞர்கள், கவிதை வாசிப்பவர்கள் ஆகிய இரு தரப்பும் இணைந்து உரையாடியதில் பல புதிய திறப்புகள் ஏற்பட்டன. உதாரணமாக, தனது கவிதைகள் குறித்துப் பேசும்போது கவிதைகள் என்பன முழுக்க முழுக்க படைப்பாளியின் அகம் நோக்கிய உரையாடல் என்பதையும் வாசகனைப் பொறுத்தமட்டில் அவை அனுபவம் சார்ந்த புரிதலே என்பதும் சிவா பெரியண்ணனின் கருத்தாக இருந்தது.

ஒரு நாவலை வாசிப்பதைப்போல கவிதையை வாசித்து எளிதில் கடந்துவிட முடியாது. அது0ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறான புரிதலையும் அர்த்தத்தையும் வழங்கக் கூடியதாகும். வாசிப்பனுபவம் இல்லாமல் அதை அணுகவே முடியாது. அதிலும் குறிப்பாக, புதுக்கவிதைகள் வாசகனை அவனுக்குள் பயணிக்கத் தூண்டுபவை என்பன போன்றவை கவிதை சார்ந்த கலந்துரையாடலில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சாரமான அம்சங்களாகும். சிவா பெரியண்ணனின் ‘வீடு திரும்புதல் என்ற கவிதை மிக மேலோட்டமான வாசிப்புக்கு, இயந்திரமயமான உலகில் உழலும் ஒருவன் தனது தோட்டத்துவீட்டை நினைத்து ஏங்கும் கவிதையாக, பொருளியல் தேவைக்காக நசுக்கப்படும் ஒருவனது உள்ளுணர்வாக மட்டும் புரிந்துக்கொள்ளப்படலாம் என டாக்டர். சண்முக சிவா தனது பார்வையிலிருந்து பேசினார். உண்மையில் இக்கவிதையில் வரும் வீடு என்பது ஒரு குறியீடு மட்டுமே. வாசகனால் அக்குறியீட்டினைப் பொருளாதாரத்தைக் கடந்து யோசிக்க முடியுமானால் அது நிச்சயம் தொடர் வாசிப்பனுபவத்தினாலேயே சாத்தியமாகும் என்பது அவர் பார்வையாக அமைந்தது.

தொடக்ககட்ட வாசிப்பில் மிகச்சாதாரண கவிதையாக, அல்லது இது கவிதையே இல்லை என புறக்கணித்துவிடக் கூடியதாகப்படும் ஒரு படைப்பு வேறொரு ஆழ்ந்த உணர்வுநிலையிலிருந்து வாசிக்கும்போது மிக அர்த்தம் பொதிந்ததாக மாறிவிடுவதுண்டு. இப்பதிவினை எழுதும்போது சில நாட்களுக்கு முன்பு ம.நவீன் தனது வலைப்பூவில் அ.பாண்டியனின் ‘விடைபெறுதல் எனும் கவிதையைச் சிலாகித்து எழுதியதை நினைவுகூர முடிந்தது. சுய வாழ்வனுபவத்திலிருந்து அணுகக்கூடியதாக இருந்த இக்கவிதை பின்பு தனது உள்ளுணர்வைச் சென்று தொட்டது என்று ம.நவீன் கூறியுள்ளது நிச்சயம் டாக்டர். சண்முக சிவாவின் கருத்துக்கு ஒத்துப்போவதாகவே இருப்பதை உணர முடிகிறது.

தொடர்ந்து, ‘என்னை நாய் என்று கூப்பிடுங்கள் எனும் கவிதை அது எழுதப்பட்ட காலகட்டத்தின் அரசியலை முன்வைத்து எழுதப்பட்டதாக இருந்தாலும்கூட எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடிய அனைவருக்கும் பொருத்திப்பார்க்கக் கூடியதாக உள்ளது என்பதே அமர்வில் இருந்த பெரும்பாலோரது கருத்தாக இருந்தது.

கவிதை வடிவம் பற்றிய தனது பார்வையை முன்வைத்த ம.நவீன் Modern Art என்பது வேறெந்த வடிவத்திற்கும் மாற்றாக இருக்க முடியாது அல்லது வேறெந்த வடிவத்திற்கும் மாற்றக்கூடியதல்ல என்று குறிப்பிட்டார். இதற்கு உதாரணமாக பிரமிளின்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது

 

எனும் கவிதையையும்

‘அணிமிகு மென்கொம்பு ஊழ்ந்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே’

எனும் சங்கக் கவிதையையும் கூறினார். உணர்ச்சியைச் சொற்களால் சொல்வது சாத்தியமா எனக் கேள்வி எழுப்பி அவ்வாறு சாத்தியமாக்க முடிந்தால் அதுவே நல்ல கவிதை என்பதாக அவரது பகிர்வு அமைந்தது. அதேபோல ஒரு மென்னுணர்வை வண்ணங்களுக்குள் கொண்டுவர முடியுமானால் அதுவே நல்ல ஓவியம் என்று ஓவியம் சார்ந்தும் தனது புரிதலைப் பதிவிட்டார்.

15இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில் குறியீடு – கூறும்முறை – புரிதல் என வளர்ந்த விமர்சனங்கள் தொடர்ந்து ‘இலக்கியத்தில் தத்துவார்த்தத் தேடல்’ என்பதாக விரிந்தது. சண்முகசிவா இலக்கியங்கள் உணர்விலிருந்து ஆரம்பித்து தத்துவத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றும் உணர்வில் மட்டும் நிற்காது மெய்யியலை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் தனது எதிர்பார்ப்பை முன்வைத்தார். ம.நவீன் முன்பு உதாரணம் காட்டிய பிரமிள் கவிதை உணர்வு நிலையில் தொடங்கி தன்னை உணர்ச்சியற்ற நிலையிலிருந்து சிந்தித்துப் பார்க்க வைக்கிறது என்றார். தன்னைப்போன்ற இலக்கிய வாசகர்களுக்கு இலக்கியங்களில் தத்துவார்த்த தேடல் இயல்பாகவே வந்துவிடுவதை அமர்வில் அ.பாண்டியன் பதிவுசெய்து கொண்டார்.

தத்துவார்த்தத் தேடலானது வாசிப்பவனின் தேடல் என்பதையும் அது படைப்பாளனின் கையில் இல்லை என்பதையும் ம.நவீன் குறிப்பிட்டுச் சொல்லி ‘எனக்கு யாருமே இல்லை/ நானும்கூட’ என்ற நகுலனின் கவிதை எவ்வகையிலும் தத்துவத்தை முன்னிருத்தி எழுதப்பட்டிருக்க முடியாது எனவும் அதன் கூறுமுறையிலும் வாசகனின் வாசிப்பனுபவத்திலிருந்தும் தத்துவார்த்தப் பார்வைக்கு இட்டுச் செல்கிறது என விளக்கிக் கூறினார். உணர்வின் அடுத்தகட்ட தேடல்கள் தத்துவமாக உருவாகலாம் என்பது ம.நவீனுடைய பகிர்வின் சாரமாக இருந்தது.

சிவா பெரியண்ணனின் ‘வீடு திரும்புதல் என்ற கவிதையை வேற்றுநாட்டைச் சேர்ந்தவன், ‘ஒரே மலேசியா’ எனும் கொள்கைகளை அறியாதவன் எனும் பின்புலத்திலிருந்து வாசிக்கும்போது தன் தாய் மண்ணை நோக்கிய ஏக்கமாகவும்கூட புரிந்துகொள்ள முடிவதை ஶ்ரீதர் பகிர்ந்து கொண்டார். அவ்வாறாக வாசிக்கும்போது இக்கவிதை தனக்கு மேலும் நெருக்கத்தைக் கொடுப்பதாகக் கூறினார். இக்கவிதையின் பாடுபொருள் மலேசியச் சூழல் சார்ந்து இருப்பதால் மலாய் இனத்தவர் அவர்களது பூர்வீக குடியிருப்புகளுக்குத் திரும்பும் நடவடிக்கையானது‘Balik kampung’ என்பதனை ‘வீடு திரும்புதல்’ என்பதைவிட ‘ஊருக்குப் போகிறேன்’ என்று சொல்வதே சரியான மொழிபெயர்ப்பாக இருக்குமென அ.பாண்டியன் கூறினார்.

கூடுதலாக, பலரும் பல கவிதைகள் குறித்து சிலாகித்துப் பேச, சிவா பெரியண்ணன் கவிதைத் தொகுப்பில் மிக முக்கிய கவிதையாக தான் கருதும் ‘நிழல்தொடர்’ எனும் கவிதை குறித்து ம.நவீன் பேசினார்.

வேறெங்கோ தூரத்தில் ஒலித்திடும் இசை

நான் விரும்புவதில்லை எனினும்

கரைத்து கடத்திக்கொண்டே

இருக்கிறது காற்று

இப்போதுகூட

வெறுமனே வெறித்திருப்பதைத் தவிர

வேறொன்றும் செய்வதில்லை

விட்டு, விட்டு உயிர்கொள்ளும்

குமிழ்விளக்கை.

நிகழ்ந்துகொண்டே இருக்கிறது வாழ்வு

இந்த நொடித் துகள்

இந்த நொடித் துகள்

உன் பார்வை

உன் வாசம்

உன் ஈரம்…

உன் எல்லா சாரத்தின் எச்சங்களுடனும்

வேறென்ன செய்வது நான்’

தனது வாசிப்பிலிருந்து சுட்டிக்காட்டிய நவீன் இக்கவிதை மிகச் சொற்பமான சொற்களில் மிக அடர்த்தியான புரிதல்களைக் கொடுப்பதாகவும் தத்துவார்த்தப் பார்வையாக விரிவதாகவும் உள்ளதை அமர்வில் பகிர்ந்துகொண்டார். தன்னைச் சுற்றி நிகழும் எதுவும் ‘அது தனக்கு ஒவ்வாததாக இருந்தாலும் சரி; உடனடி நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக இருந்தாலும் சரி’ தன்னை எவ்வகையிலும் பாதித்துவிடவில்லை என்பதை அது அதுவாகவும்… நான் நானாகவும் என்பதாகச் சொல்லும் இக்கவிதை எதிலும் ஒட்டாமல் போகும் தத்துவார்த்த தேடலுக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறது என்பதே ம.நவீன் பகிர்ந்ததின் சாரமாக அமைந்தது. தன் வாசிப்பில், கவிதையின் இறுதிப்பகுதியை நீக்கினால் இது மலேசியாவிமன் முக்கியக்கவிதையாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து, சிவா பெரியண்ணனின் சிவப்பில் பயணிப்பவள்எனும் கவிதையைச்14 சுட்டிக்காட்டிய ஶ்ரீதர் அப்பெண் தடைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்தவள் என்பதாக தான் விளங்கிக்கொள்வதாகவும், ஓர் ஆணாக இருந்துகொண்டு பெண் மனதை எழுத முயல்வது எந்த அளவுக்குச்சாத்தியம் என்று கேள்வி எழுப்பினார். ஓர் ஆணால் பெண்உணர்வைச் சொல்ல முடியுமா என்பதே அவரது கேள்வியின் சாரமாகும். ‘சிவப்பில்பயணிப்பவள் எனும் தலைப்பே விந்தையாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய கோ.புண்ணியவான் அத்தலைப்பு சமிக்ஞை விளக்கை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதா எனக் கேள்வி எழுப்பி தடைகளை உடைத்தெழும் பெண்ணின் எழுச்சியைக் காட்ட சமிக்ஞை விளக்கில் உள்ள சிவப்பை குறியீடாக பயன்படுத்தியிருக்கலாமோ என தனது அவதானிப்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.

ஆண் உணர்வை பெண்ணும் பெண்ணின் உணர்வை ஆணும் புரிந்து கொள்வது தொடர்பாக பேசிய டாக்டர். சண்முக சிவா, அடிப்படையில் மனித உடலில் நிருவுரு (Chromosome) இருபாலினருக்குமே சம அளவு இருப்பதைக் குறிப்பிட்டுக்காட்டி ஆணின் இயங்குனி பெண்ணுக்கும் இருப்பதைத் தெளிவுபடுத்தினார். இவ்விடம் உடல் ரீதியான கேள்விக்கு பதில் இல்லை என்றும் உணர்வு ரீதியான புரிதல் இரு பாலினருக்குமே சமம் என்பதாக இதனைப் புரிந்துகொள்ளலாம். இதனையே சற்று விரித்து யோசிக்கையில் ஓர் உணர்வைப் புரிந்துகொள்ள நாம் அதுவாக இருக்க வேண்டியதில்லை என்பதைத் தெளியலாம். அதனாலேயே பெரியவர்களால் குழந்தைகள் உலகையும் அவதானித்து எழுத்தில் கொண்டுவர முடிகிறது. தனக்கு அப்பாற்பட்ட ஓர் உணர்வு நிலையை அத்தனை ஆழமாக வடிக்க முடிபவனே தேர்ந்த படைப்பாளனாக இருக்கிறான். மீண்டும் பெண்ணின் உலகத்தை கவிதையாக்கியது குறித்து ஶ்ரீதர் கேள்வி எழுப்ப, டாக்டர் சண்முக சிவா ‘Men Are from MarsWomen Are from Venus’  எனும் நூல் குறித்து குறிப்பிட்டு எதிர் பாலினத்தைப் புரிந்துகொள்ள உதவும் கிளாசிக் வகைசார்ந்த கையேடாக இருக்கும் இந்நூல் வாசிப்பில் தன்னைக் கவர்ந்தவைகள் குறித்துப் பேசி அமர்வை வளர்த்துச் சென்றார்.

கவிதை மொழியில் சொல்லக்கூடிய விசயங்களை மட்டும் சொல்லத் தான் காத்திருப்பதாக தன் தற்போதைய படைப்புசார்ந்த செயல்பாடுகள் குறித்துப் பேசிய சிவா பெரியண்ணன், படைப்புகளைச் செறிவாக்கம் செய்வது குறித்தும் குறிப்பிட்டார். படைப்பில் கூட்டுருவாக்கத்தின் தன்மைகள் குறித்து அமர்வில் பதிவு செய்த சிவா பெரியண்ணன் editorial guidance / post-script குறித்து தன் அதிருப்தியை வெளிபடுத்தினார். சினிமா போன்ற கலை வடிவங்கள் தனிமனித வெளிப்பாடுகளாக அல்லாமல் கூட்டு முயற்சியாக இருப்பதை லீனா மணிமேகலை மற்றும் ஹசான் தலீப் போன்றவர்களின் வாயிலாக உதாரணம் காட்டிப் பேசியிருந்தார்.

ganggaஇதுகுறித்து தம் பார்வையைப் பதிவிட்ட ஶ்ரீதர் செறிவாக்க உதவி பெறும் பழக்கம் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதாகவும் அதனை நூலில் எவ்விடத்திலும் பதிவு செய்யத் தயாரில்லாத குறுகிய மனநிலை இருப்பதையும் குறிப்பிட்டார். மேலும் செறிவாக்கம் என்பது ‘முழுவதையும் மாற்றும் வேலை’ எனும் தவறான புரிதலும் இருப்பதை மறுத்துவிட இயலாதென அவரின் பகிர்வு அமைந்தது. யின்யாங் எனும் கருத்தாக்கம் (1)தன்னிலையில் முழுமை; (2) சேரும்போது இன்னும் முழுமை என்பதான அர்த்தத்தை படைப்பின் உருவாக்கத்திலும் செறிவாக்கத்திலும் பொருத்திப்பார்க்க வேண்டிய அம்சமாக கருத்துப் பதிவு அமைந்தது.

கலந்துரையாடல்கள், விமர்சன அமர்வுகள் என அனைத்துமே தனது அறிவையும், சிறப்பையும் பறைசாற்றும் இடமாக மாறிவிடும் சாத்தியங்கள் கொண்டவை. இவை பிரக்ஞையுடனோ பிரக்ஞையற்றோ நிகழக்கூடியவைதான் என்றாலும் அவை அமர்வின் நோக்கத்தைச் சிதறடிக்கக்கூடியவை. அவ்வகையில் டாக்டர். சண்முக சிவா, கோ.புண்ணியவான், அ.பாண்டியன், ம.நவீன் போன்று நீண்டகால இலக்கிய வாசிப்பில் இருப்பவர்கள், ஶ்ரீதர் போல பலமொழி இலக்கியங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் விவாதத்தையும் உரையாடலையும் தலைப்பைக் கடந்து / மிகுந்து சென்றுவிடாமல் மிகத் தன்மையுடன் தங்களது வாசிப்பனுபவத்தையும் முரண்கருத்துகளையும் முன்வைத்தது ஒட்டுமொத்தமாக இவ்வமர்வின் நோக்கத்தை அடைய வழிவகுத்தது.

பிப்ரவரி 7, 2016 ஞாயிற்றுக்கிழமை – [இரண்டாம் நாள்]

ஏழாவது அமர்வு : மஹாத்மன் சிறுகதைகள் 
நூலாசிரியர் : மஹாத்மன்
நூல் விமர்சனம் : . பாண்டியன்
நேரம்: காலை 11.00 முதல் 1.00 வரை

முதல்நாள் இரவு 9.30க்கு முடிவடைந்த விமர்சன அமர்வு மறுநாள் அதிகாலை 8.00 மணிக்கே  தொடங்கி, நீண்ட இடைவேளைகள் எதுவுமின்றித் தொடர்ந்தபடியே இருந்தது. இதற்கிடையில் மதிய உணவு சொல்லிய நேரத்தைக் காட்டிலும் மிக விரைவாகவே வந்துவிட நண்பர்கள் சிலர் அவ்வப்போது உணவெடுக்கவும் சென்றனர். வல்லினம் விமர்சன அமர்வின் இறுதிப் பகிர்வான மஹாத்மன் சிறுகதை குறித்தான விமர்சனம் மற்றும் பகிர்விற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அ.பாண்டியன் தனது விமர்சனக் கட்டுரையைச் சாராத; மலேசியத் தமிழ் சிறுகதைகள் எனும் பரந்த நிலையிலிருந்தும் பேசினார்.

வல்லினம் எனக்கு அறிமுகமான முதல் சந்திப்பில் ம.நவீன் சில புத்தகங்களைக் கொடுத்து இவை வல்லினத்தில் பதிப்பிக்கப்பட்டவை என்றும் வாசித்துக் கருத்க்ச் சொல்லுங்கள் என்றும் சொல்லியிருந்தார். அப்போது மஹாத்மன் சிறுகதை ஒன்றிரண்டை வாசித்து மிரண்டுபோய் அடுத்த புத்தகம் நோக்கி ஓடிவிட்டிருந்தேன். அவரது கூறுமுறையும் காட்டும் உலகமும் அத்தனை மிரட்சியானதாக எனக்குப்பட்டது. அது என் மிகை கற்பனையாகக்கூட இருக்கலாம் என விட்டுவிட்டிருந்தேன். இவ்வமர்விற்காக அ.பாண்டியன் எழுதியிருந்த விமர்சனக் கட்டுரை அந்நூல் மீது எனக்கிருந்த மிரட்சியைப் போக்கியிருந்தது. மலேசியத் தமிழ் சிறுகதைச் சூழலில் இந்நூல் முற்றிலும் புதிய வடிவமாகவும் வர்ணிக்கப்பட்டது இந்நூலை மீண்டும் வாசிக்கத் தூண்டியிருந்தது.

இறைநம்பிக்கை உடையவர்களுக்கு அனைத்தையும் கொட்டித் தீர்த்துவிட இடமொன்றிருக்கிறது. இறை நம்பிக்கையற்றவர்களின் உலகம் மொத்தமாக தன்னிலை சார்ந்ததென வர்ணித்த பாண்டியன் மதம், குடும்பம், சுற்றுச்சூழல் அனைத்திலிருந்தும் உண்டாகும் சிக்கல் மனிதவாழ்வை வெகுவாகச் சிதைக்கிறது என்றார். இச்சிதைவுற்றிருக்கும் வாழ்வை என்னவென்று புரிந்துகொள்ள முடியாத ஏக்கமும் குழப்பமும் மஹாத்மன் கதைகள் நெடுக பரவியிருப்பதை பாண்டியன் மேலும் குறிப்பிட்டு காட்டினார். மஹாத்மனின் கதைகளில் மதத்தின் மீதோ கடவுளின் மீதோ எந்தவொரு கேள்வியும் இருக்கவில்லை. மாறாக, அதற்குள் நின்று கொண்டு ‘ஏன் படைத்தாய்?’ என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவதாக உள்ளது எனத் தனது புரிதலிலிருந்து பேசி, கதைகளிலிருந்து சில உதாரணங்களையும் முன்வைத்தார். மஹாத்மன் கதைகளில் ஒரு சிறு பிசகாக இருப்பது அவர் கதைகள் சம்பவங்கள்வழி சொல்லும் முறை கதைக்களத்தைச் சிதைப்பதாக உள்ளது எனவும் விமர்சித்தார்.

மனச்சிதைவுக்கு ஆட்படுவதும் பிறகு அதிலிருந்து மீள்வதும் இயல்பானதாகி விட்டிருக்கிறது. ஆனால் அதற்குள்ளேயே வாழ்க்கை முழுக்க வாழ்பவர்களின் மனநிலை என்னவென்று கணிக்க முடியாததை வியந்துக் குறிப்பிட்ட ஶ்ரீதர்  இறை பக்தி குறித்து தனது பார்வையை அரங்கில் பதிவு செய்தார். பக்தி என்பது ஒரு வகையில் மனித மனதில் உள்ளார்ந்த சுயநலத்தின் வெளிப்பாடு எனவும் சிக்கல்களும் சிதைவுகளும் உண்டாகும் தருணம் இதிலிருந்தெல்லாம் விடுபடுவேன் என்பதாக அது உருமாறுவதாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மாஹாத்மன் சிறுகதைகள் மொத்தத்தையும் வாசிக்கும்போது அவை ஒரு குறுநாவலுக்கான தன்மையுடன் இருப்பதை டாக்டர் சண்முக சிவா குறிப்பிட்டார். இச்சிறுகதைகள் நாம் காணத் தவறவிட்டிருக்கும் மனித வாழ்வின் அர்த்தத்தை சொல்வதாக உள்ளதையும் அவர் அமர்வில் பதிவு செய்தார். தொடர்ந்து, கதை சொல்லும் முறையில் நேர்க்கோட்டுத் தன்மையிலான வாழ்வைப் பதிவு செய்யும் போக்கு மஹாத்மனிடம் உள்ளதை ஶ்ரீதர் சில சிறுகதைகளின் உதாரணங்களுடன் விளக்கிச் சொன்னார். மஹாத்மனிடம் தன்னை தற்காக்கும் மனம் இல்லை என்பதே இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளினூடாகப் பார்க்க முடிவதும் மலேசியச் சிறுகதைச் சூழலில் கவனிக்கத்தக்க விடயமாகும் எனவும் அவரது பகிர்வு அமைந்தது.

குறிப்பாக, மலேசியத் தமிழ் சிறுகதைகளில் ஒரு மந்தத்தன்மை இருப்பதற்கு படைப்பாளனின் பாதுகாக்க நினைக்கும் மனமும் ஒரு முக்கிய காரணமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இது இவனுடைய வாழ்வு என்று வாசிப்பவர்கள் நினைத்து விடுவார்களோ என்கிற பயத்துடனும் பாதுகாப்புணர்வுடனும் எழுதுபவர்களால் ஒரு எல்லைக்குமேல் எதையும் எழுத்தில் கொண்டுவர இயலாது என்பதும் தெளிவு. அப்படி பார்க்கும்போது மஹாத்மனுடைய சிறுகதை மலேசியத் தமிழ் சிறுகதை பாணியை உடைத்துக் கொண்டு புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கதே. புனைவு-நிஜம் என்பதாக விரிந்த விவாதம் தொடர்ந்து புனைவில் logic பார்ப்பதைக் குறித்துச் சென்றது.

அவ்வகையில் புனைவில் logic பார்ப்பது தவறு என்றும் புனைவானது கலைத்தனமையுடனும் அழகியலோடும் இருந்தால் அது நிச்சயம் நல்ல புனைவே என்பதாக அமர்வில் பலரும் பதிவிட ம.நவீன் தனக்கே உரிய பாணியில் ஒரு உதாரணத்துடன் அதனை விளக்கினார். ஆங்கிலத் திரைப்படத்தில் வடிக்கப்படும் Superman எனும் கதாபாத்திரம் பறக்க முடிவதற்கான சாத்தியங்களைக் கதையினூடாக வளர்த்துச் செல்லும் போக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் அசாத்தியங்களை சாதாரணமாக நிகழ்த்தும்போது அசூசையான உணர்வைக் கொடுப்பதை வைத்து இதனைப் புரிந்துகொள்ள முடியும் எனச் சொன்னார்.

தொடர்ந்து படைப்பில் வடிவம், வடிவமின்மை எனத் திரும்பிய விவாதத்தில் டாக்டர். சண்முக0 சிவா நவீன படைப்புகளில் வடிவம் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி விவாதத்தைத் தொடக்கி வைத்தார். மாப்பசான் (Maupassant) படைப்புகளை உதாரணம் காட்டி இவற்றின் படைப்பு வீச்சு எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காமல், பரவலாகச் சொல்லப்படும் ‘தொடக்கம், உச்சம், முடிவு’ என்ற வடிவத்தை பொருட்படுத்தாமல் அத்தனையையும் உடைத்தெறிவதே நவீன இலக்கியம் என்று குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றிய டாக்டர், வடிவம் என்கிற ஒன்று இருந்தால்தானே அதை உடைக்க முடியும் என்றும் உடைத்த பிறகு அது என்ன? அந்த வடிவத்துக்கான பெயர் என்ன? என்பதாக அவரது எதிர்வினை கேள்விகளோடு அமைந்தது. அதுகுறித்துப் பேசிய ம.நவீன் மற்றும் அ.பாண்டியன் ஆகியோர் படைப்பில் வடிவம் இல்லாமல் இருக்கக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பியதும் டாக்டர், அப்படியான எழுத்து முறையில் பல மைல்கள் தாண்டித்தான் கதை வந்து நிற்கும் சாத்தியம் அமையலாம் என தனது பார்வையை முன்வைத்தார். அதற்கு எதிர்வினையாற்றிய ம.நவீன் அப்படியான ஒரு படைப்பும் படைப்புதான் என்றும் அது தனக்கான வடிவத்தைத் தானே ஏற்று வருகிறது என்றார். யார் குறிப்பிடும் வடிவங்களுக்குள்ளும் அடங்காமல் அவை தனக்கான வடிவத்தைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் என்பதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படியாயின் அதுகூட வடிவமே என வடிவம் சார்ந்த தனது பார்வைக்கு டாக்டர் மேலும் வலுச் சேர்த்தார்.

நண்பகல் ஒரு மணியை எட்டிக்கொண்டிருந்த வேளையில் படைப்பிலக்கியம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்து வளர்ந்துசென்றது. வடக்கு, தெற்கு நோக்கி பயணம் செய்யக்கூடியவர்கள் இருட்டுவதற்குள் புறப்பட்டுவிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வல்லினம் விமர்சன அரங்கு அந்த அளவில் ஒரு நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. அமர்வில் நிறைவாக சில ஆலோசனைகளும் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டன. அவை முறையே (1) வல்லினம் பதிப்புகளை மொழிபெயர்ப்பு செய்தல்; (2) படைப்பில் ஆங்கிலச் சொற்களின் பயன்பாட்டைக் குறைத்தல் போன்றவைகளாகும்.

இலக்கியச் சந்திப்புகளில் இலக்கிய ரசனை, எழுத்து-வாசிப்பு நுட்பங்கள், இலக்கிய அறிமுகங்கள் போன்றவை மிக இலகுவாகப் பரிமாறிக்கொள்ள வழிவகுக்கின்றன. மேலைநாடுகளைப் பொறுத்தமட்டில் இவ்வகையான இலக்கியச் சந்திப்புகள் இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்லாமல் கல்விக்கூடங்கள் வரை கொண்டு செல்லப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. எழுத்துலக ஆளுமைகள், விமர்சகர்களுக்குள் மட்டுமில்லாமல் புதிய, இளைய எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொண்டு நிகழ்த்தப்படும் உரையாடல்கள் இலக்கிய வளர்ச்சியிலும் செயல்பாட்டிலும் முக்கியத்துவம் பெறுவனவாகின்றன. அவ்வகையில் வல்லினம் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விமர்சன அமர்வில் மூத்த எழுத்தாளர்கள், இளைய எழுத்தாளர்கள், இலக்கிய வாசகர்கள், புதியவர்கள் என ஒரு கலவையான பங்கேற்பாளர்களைக் கொண்டு ஆரோக்கியமான வாத,விவாத,கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றது நிச்சயம் கவனப்படுத்தப்பட வேண்டியதே.

வல்லினம் விமர்சன அமர்வு பணியிட இறுக்கத்தை மறந்து இரண்டு நாட்கள் உல்லாசச் சுற்றுலா சென்றுவந்த களிப்பையும் மனநிறைவையும் வழங்கியது. அன்றாடத்தனங்களிலிருந்து விடுபட்டு இலக்கிய வட்டத்து நண்பர்களுடன் முற்றும் புதிதான ஓர் இடத்தில் அமர்விற்கான சில அடிப்படை கட்டுப்பாடுகளை மட்டும் நிறுத்தி இலக்கியம் சார்ந்தும் இலக்கியச் செயல்பாடுகள் சார்ந்தும் கூடி விவாதித்தது ஆரோக்கியமானதாக இருந்தது. இவ்வகை கருத்துப் பரிமாற்றங்கள் அடுத்தடுத்து தொடர வேண்டியதன் தேவையையும் உணர முடிந்தது. மேலும் பல புதியவர்களையும், இலக்கிய ஆளுமைகளையும் இணைக்கும் களமாக அடுத்த வல்லின விமர்சன அமர்வு அமைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் வலுக்கவே செய்கிறது.

முற்றும்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...