ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!

Teacher Pointing at Map of World ca. 2002

Teacher Pointing at Map of World ca. 2002

2016-ஆம் ஆண்டு பள்ளித்தவணை தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்துவிட்டன. ஆசிரியர்கள் ஓட்டப்பந்தய வீரர்கள் போல் சுறுசுறுப்பாக ஓடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு குறுகியதூர ஓட்டப்பந்தயம் போல் பரபரப்பான சூழலில் அவர்கள் வாழ்க்கை மின்னலாய் ஓடி மறைகிறது. அந்தப் பரபரப்பில் அவர்கள் பெறுவதும் இழப்பதும் கவனிக்கப்படாமல் மறைந்து போகிறது. அவற்றில், வாழ்க்கையின் பல அற்புதத் தருணங்களும் கரைந்துபோகின்றன. மீட்டெடுக்க முடியாத அந்தக் கணங்களை ஓரளவாவது போராடித் தக்கவைக்க ஆசிரியர்களுக்குத் தங்கள் பணிச்சூழல் குறித்த தெளிவும் வாழ்வுகுறித்த புரிதலும் மிக அவசியமாகிறது.  அந்தச் சிந்தனைகளோடு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

மலேசியா சுதந்திரம் பெற்றபோது பணியில் இருந்த ஆசிரியர்கள் பலர் அடிப்படை கல்வித் தகுதி மட்டுமே உடையவர்களாக இருந்தனர். ஆறாம் ஆண்டு அல்லது எல்.சி.இ கல்வித் தகுதியோடு ஆசிரியப்பணிக்கு வந்தவர்கள் பலர். ஓரளவு ஆங்கில அறிவு உடையவர்கள் ஆரம்பப்பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக இருந்தனர். மலாயாவில் அன்று இயங்கிய ஆங்கில, சீன, மலாய், தமிழ்ப்பள்ளிகள் எல்லாவற்றிலும் நிலைமை ஏறக்குறைய இப்படிதான் இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் குழப்பமான சூழலில் ‘எப்படியோ’ தேர்வுகளில் தேறி ஆசிரியர்களானவர்களை ‘குண்டு பாஸ் வாத்தியார்’ என்று நையாண்டியாக சொல்லும் வழக்கமும் அப்போது இருந்துள்ளது.

ஆயினும், அன்றைய ஆசிரியர்களின் பொதுவெளி செயல்பாடுகள் பிரமிப்பை ஊட்டுவன. அரசியல், சமூக இயக்கங்கள், இலக்கியம், விளையாட்டுப் போட்டிகள் என்று பல தளங்களில் ஆசிரியர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். இதன் காரணமாகவே அன்றைய ஆசிரியர்கள் தங்கள் உரிமையை உணர்ந்தவர்களாகச் செயல்பட முடிந்திருக்கிறது. மலாய் சமூகத்தினரிடையே அன்றைய ஆசிரியர்களுக்குப் பெரும் மரியாதை இருந்தது. அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தோட்டமக்களுக்கு நல்ல வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் இருந்துள்ளனர். பெரும்பகுதி படிப்பறிவு இல்லாத மக்களிடையே ஆசிரியர்கள் கற்றோராக இருந்ததால் அவர்களுக்குத் தனி மரியாதை இருந்தது. குடும்பம், சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் தகுதி அவர்களுக்கு இருந்தது. அன்றைய ஆசிரியர்கள் பலர் எழுத்தாளர்களாகவும் இருந்துள்ளனர். சமூகத்தில் அவர்களுக்கு இருந்த மதிப்பின் காரணமாகத்தான் அன்றைய அவர்களின் எழுத்து படிப்பினைகளும் அறிவுரைகளும் நிறைந்தவையாக உள்ளன.

மலேசிய அரசியலில் இன்று முன்னணியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பலவற்றுக்கும் அன்று ஆசிரியர்கள்தான் முதுகெலும்பாக இருந்து செயலாற்றி உள்ளனர். பல அம்னோ கிளைகளுக்கு ஆசிரியர்கள் தலைமை வகித்துள்ளனர். மலாய் தேசிய அரசியலில் பல ஆசிரியர்கள் ஈடுபட்டு அரசியல் பதவிகளில் இருந்துள்ளனர். மாநில மத்திய அரசாங்கங்களில் உயர்பதவியில் இருந்த பலர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்தாம். ம.இ.காவிலும் பல கிளைகளின் தோற்றுனர்கள் ஆசிரியர்களே. அரசியல் இயக்கங்கள் தவிர மணிமன்றம், இந்துசங்கம் போன்ற இயக்கங்களிலும் தமிழாசிரியர்கள் சிறப்பாக இயங்கியுள்ளனர்.

அன்றைய மலாய் இலக்கியவாதிகளிலும் தமிழ் படைப்பாளிகளிலும் பலர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களே. சாமானிய மக்களிடம் இவர்களின் எழுத்துகள் அரசியல், சமூக விழிப்புணர்வை ஓரளவேனும் ஏற்படுத்தின.  எழுதுவதோடு நில்லாமல் அவர்கள் மரபான இலக்கியங்களில் தேர்ச்சியும் பெற்றிருந்தனர்.  அவர்கள் நிலையான வாசகர்களாக இருந்தனர்.

மேலும், அன்று தீவிரமாக இயங்கிய தொழிற்சங்கங்களில் ஆசிரியத் தொழிற்சங்கமும் ஒன்று. பொதுவாகவே அன்றைய தொழிற்சங்கங்கள் இடதுசாரித் தன்மையுடன் தங்களை முன்னிறுத்திக் கொண்டன என்பது வரலாறு. ஆசிரியத் தொழிற்சங்கங்களின் செயலவையினர் தொழிற்சங்க சம்மேளனத்திற்கு தேர்வு செய்யப்படுவது இயல்பானது. அவர்களின் செயல்பாடுகள் அவ்வளவு தீவிரமாக இருந்தன.  பல்வேறு போராட்டங்கள் வழிதான் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இங்கு உருவாகின

ஆனால் இந்நிலைமை நீடிக்கவில்லை. 80-களில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் ஆசிரியர்களைப் பொதுவெளியில் இருந்து மெல்ல ஓரங்கட்டியது. கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மெல்ல இறுக்கமாகி ஆசிரியர்களை தொழிலுக்குள் முடக்கிவைத்தன.

பொது இயக்களில் நிபுணத்துவப் பணியாளர்களின் வருகை அதிகரித்ததால், ஆசிரியர்கள் அதிகபட்சம் செயலாளர் போன்ற ‘அலுவலக’ பதவிகளோடு நிறுத்தப்பட்டனர். முடிவெடுக்கும் அதிகாரம் வேறு கைகளுக்குச் சென்றது. ஆசிரியர்களின் வாழ்க்கை முறையில் நுண்ணிய மாற்றங்கள் நடந்த காலகட்டமாக இதைச் சொல்லலாம்.

இன்று பெரும்பான்மை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிக்கூடத்தையும் மாணவர்களுக்கான பாடநூலையும் தவிர வேறு உலகம் அறியாதவர்களாக உள்ளனர். அல்லது அறிந்து கொள்ள விரும்பாதவர்களாக உள்ளனர். வெகுஜன ஊடகங்களில் வரும் மேம்போக்கான தகவல்களை மட்டுமே அறிந்திருக்கின்றனர். சாதாரண சினிமா ரசிகர்களாக, வானொலி அரட்டைகளில் லயிப்பவர்களாக, மெகா தொடர்களில் பொழுது போக்குபவர்களாக, மின்னூடகச் சலசலப்புகளையே அறிவின் உச்சங்களாக நம்புபவர்களாக, பொதுபுத்தி சமூகத்தில் இருந்து கொஞ்சமும் வெளியே வராதவர்களாக, எல்லா சமய சமுதாய மூடப்பழக்கங்களையும் விட்டுக் கொடுக்காமல் பின்பற்றுபவர்களாக, அவர்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டது. பொதுவெளியில் ஈடுபடுவதோ, பொதுவிஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதோ மிகவும் குறைந்துவிட்டது. இளமையும் துடிப்பும் உள்ள ஆசிரியர்களின் பொழுதுகள் கூடுதல் வகுப்புகள் எடுத்துப் பொருளீட்டும் வேலைகளாலோ பகுதிநேர வியாபாரங்கள் செய்வதிலோ கரைந்துவிடுகிறது. 90-களில் பல ஆசிரியர்கள் ஆசிரியப் பணிக்கு அப்பாற்பட்டு காப்புறுதி முகவர்களாகவோ, ஏதாவதொரு MLM நிறுவன முகவராகவோ பணியாற்றினர். அந்த நிறுவனங்கள் காட்டிய சொகுசு வாழ்க்கையில் மனதைப் பறிகொடுத்து அல்லும் பகலும் ஆலாய் பறந்தவர்கள் பலர். ஆயினும் வெகு சிலராலேயே அங்கே நிலைக்கவும் உயரவும் முடிந்தது.

2000-தாம் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை அரசாங்கம் விரிவுபடுத்தியது.  அதோடு அவர்களை கட்டாய கடனாளிகளாவும் மாற்றியது. அனைவருக்கும் தாராளமாக வழங்கப்பட்ட PTPTN குறைந்த வட்டி கடனால் பல ஆசிரியர்கள் கூடுதல் கடன் சுமையை நீண்டகால அடிப்படையில் சுமக்க நேர்ந்தது. மேலும், அரசாங்கம் வழங்கும் பல சலுகைகளைப் பயன்படுத்தி பலர் உயர்கல்விகற்று கல்வித்தகுதியில் உயர்ந்தாலும் அவர்களின் சிந்தனைப் பரப்பு மெச்சும்வகையில் இல்லை. அவர்களின் அறிவின் விசாலம் என்பது காகித அடைவுநிலையை மட்டுமே சார்ந்ததாக உள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மேற்கோள்காட்டும் நூல்களைக் கூட முழுமையாக வாசிக்காமல் அவற்றின் சுருக்கங்களை மட்டும் அவசரத்துக்கு வாசித்துத் தேறியவர்கள் பலர். கல்வித்தகுதியில் ஒருபடி மேலே செல்லுதல் என்பது ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வுக்கான ஒரு வழியாக மட்டுமே இருந்தது.

பல்கலைப்படிப்பு முடிந்த பின்னர் வாசிப்புக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லாத நிலையில்தான் இன்றைய பட்டதாரி ஆசிரியர்கள் காலம் ஓடுகிறது. இன்றைய நிலையில், வாசிப்பை மறந்தவர்கள் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அரசியல், சமூகம், கல்வி போன்ற தளங்களில் மாற்றுக் கருத்தோ தீவிர விமர்சனமோ அற்ற சராசரி மனிதர்களாகத்தான் அவர்களும் வாழுகின்றனர். தங்களுடைய எல்லா விமர்சனங்களையும் மிகக் கவனமாக நான்கு சுவர்களுக்குள் பேசிக்கொள்ளும் இடைநிலைச்சமூக மனப்பான்மை மிக்கவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். முன்மாதிரியாக இருக்கக்கூடிய தகுதிகள் ஆசிரியர்களிடம் இல்லாமலாகிவிட்டது.

ஆசிரியப்பணியில் இணைந்து, பள்ளி நிர்வாக இறுக்கங்களுக்கிடையே உழன்றபடியே, குடும்பம், பொருளாதாரம், சொத்து சேர்த்தல் என்ற சுழற்சியில் சிக்கி, திரும்பிப் பார்க்கும்போது பதினைந்து இருபது ஆண்டுகள் ‘வெறுமையாக” கடந்துவிட்டிருப்பது ஆசிரியர் தொழில் மீது மட்டும் இன்றி வாழ்க்கையின் மீதும் அயர்ச்சியையும் சலிப்பையும் தந்தால் அது வியப்பில்லை.

இன்றைய தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் அவர்கள் வாழ்க்கையில் தொலைக்கும் பெரும்பகுதி பொழுதுகள் சந்திப்புக் கூட்டங்களிலேயே முடிகிறது. ஒரு வாரத்தில் வகுப்பறையில் இருக்கும் நேரத்துக்கு ஈடான நேரத்தை அவர்கள் அதே வாரத்தில் ‘மீட்டீங்குகளில்’ செலவிடுகிறார்கள். இதில் பள்ளி அளவிலான சந்திப்பும் மாவட்ட மாநில அளவிலான சந்திப்புகளும் அடங்கும்.

இவை தவிர, நவீன கல்வி என்கிற பெயரில் பலவகை தரவுகளையும் தகவல்களையும் மின்னியல் முறையில் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்புவதில் செலவிடப்படும் நேரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டு போகிறது.  வாரக்கடைசிகளிலும் தவணை விடுமுறைகளிலும் முன்புபோல் ஆசிரியர்கள் முழு ஓய்வில் இருந்த நிலை இப்போது இல்லை. வீட்டில் இருந்தாலும் நள்ளிரவு வரை இணைய வசதியுடன் ஏதாவது ஒரு தரவை பதிவேற்றம் செய்வதிலோ பழைய தரவுகளைச் செறிவு செய்வதிலோ மணித்துளிகள் மறைந்துபோகின்றன. ஒரே வகையான தரவுகளைப் பல செயலிகளில் பதிவேற்ற வேண்டிய எரிச்சல்மிகு பணிகளும் உண்டு.

அரசாங்கத் தேர்வுகளை முன்நிறுத்தியே பள்ளிகளில் இன்றைய கற்றல் கற்பித்தல் செயல்படுகிறது. இந்தத் தேர்வுகள் மாணவர் அடைவுநிலையை மட்டும் முடிவு செய்வதில்லை. மாறாக, பள்ளியின் அடைவுநிலையையும் முடிவு செய்கின்றன. ஆகவே, மாவட்டக் கல்வி அலுவலகம் நிர்ணயிக்கும் தரத்தை அடைய பள்ளிகள் பெரும் போராட்டத்தில் இறங்குகின்றன. தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி காலைமுதல் இரவுவரை கற்றல் கற்பித்தலில் உழன்று கொண்டிருக்கின்றனர். ஆரம்பப்பள்ளிகளில் மிகச் சாதாரணமாக மாலை வகுப்புகளும் இரவு வகுப்புகளும் வார இறுதி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

இன்றைய மலேசிய கல்வித்துறையில் பல நுண்ணிய சிக்கல்கள் மலிந்து கிடக்கின்றன. குறிப்பாக, கல்விக் கலைத்திட்ட மேம்பாடு  வாரியத்திற்கும் மலேசியத் தேர்வு வாரியத்திற்கும் இடையே உள்ள கொள்கைமுரண்களும் பிணக்குகளும் தீர்க்கப்படாமலே உள்ளன.  ஒவ்வொரு புதிய கல்வி அமைச்சரும் தங்கள் பெயர்சொல்லும் திட்டங்களை கொண்டுவருவதும் பின் பதவியைவிட்டுப் போன பிறகு அந்தத் திட்டமும் கைவிடப்படுவதும் மலேசியச் சூழலில் சாதாரணமாகி விட்டது.  தேசியக் கல்விமுறையை நவீன உலக சவால்களுக்கு ஏற்ப மாற்ற வேண்டியது அவசியம் என்றாலும், அதற்கான முறையான திட்டமிடல் இல்லாமையும், கல்வி என்பது கட்சிகளின் அரசியல் விளையாட்டுக்குரிய எளிய பொருளாக பயன்படுத்தப்படுவதும் கல்விச்சூழலை நிலைத்தன்மையற்றதாக மாற்றியிருக்கிறது.

2003ஆம் ஆண்டு, அரசாங்கம் அறிவியல், கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் திட்டத்தை அமுல்படுத்தக் காட்டிய தீவிரத்தினாலும் பின்னர் அத்திட்டத்தைத் தடாலடியாக 2011-ல் மீட்டுக் கொண்ட நடவடிக்கையாலும் மலேசியக் கல்விச்சூழல் நிரந்தர பரபரப்புக்கும் குழப்பங்களுக்கும் ஆளானது.  2011-ஆம் ஆண்டு நவீன கல்வியின் ஒரு பகுதியாக அறிமுகம் கண்ட திறன் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட சிக்கல்களும் தோல்விகளும் தேர்வுவாரியம் மற்றும் கல்வி கலைத்திட்ட மேம்பாடு வாரியம் ஆகிய அமைப்புகளின் பலவீனங்களையும் ஒத்திசைவு இல்லாமையையும் வெளிப்படுத்திக் காட்டின.  ஆயினும் அத்திட்டத்தின் சுமைகளும் தோல்விக்கான குற்றச்சாட்டுகளும் முழுதும் ஆசிரியர்களின் மீது திருப்பிவிடப்பட்டது.  ஆசிரியர் தரப்பின் வாதங்களை தொழிற்சங்கம் உட்பட கல்வி அமைச்சும் முறையாக அணுகாத காரணத்தால் கல்வித்துறையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2014முதல் மூன்றாம்படிவத் தேர்வு முறையில் கொண்டுவரப்பட்ட திடீர் மாற்றங்கள் ஆசிரியர்களுக்குப் பெரும் பணிச்சுமையையும் சிக்கலையும் கொண்டுவந்தன. 2014- ஆம் ஆண்டு மூன்றாம் படிவ மாணவர்களும் ஆசிரியர்களும் முழுதெளிவில்லா நிலையில் தேர்வு வாரியமும் கல்வி அமைச்சும் அவ்வப்போது அனுப்பும் சுற்றறிக்கைகளை வழிகாட்டிகளாகக் கொண்டு செயல்படவேண்டிய இக்கட்டு ஏற்பட்டது.   ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் படிவ மாணவ்ர்களின் கலைத்திட்டத்தில் போதுமான மாற்றங்களைச் செய்வதற்கு முன்பே, PT3 எனும் புதியவடிவிலான தேர்வு அமல்செய்யப்பட்டது நிலமையை மோசமாக்கியுள்ளது.  இவ்வாண்டு ஆறாம் ஆண்டு புதிய முறை யுபிஎஸ் ஆர் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களும் பல்வேறு  அறிவிப்பு மாற்றங்களுக்குப் பிறகு ஓரளவு தெளிவு பெற்ற நிலையில் இப்போது உள்ளனர். இதுபோன்ற தொடர் மாற்றங்களும் தெளிவின்மையும் ஆசிரியர்களுக்குப் பெரும் பணிச்சுமையும் மனச்சுமையையும் ஏற்படுத்துவதை மறுக்க முடியாது

மேலும், பணிகளில் அதிகப்படியான ‘முதலாளிகள்’ இருக்கும் தொழில் ஆசிரியர் பணியாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.  ஓர் ஆசிரியரைக் கண்காணிக்கும் அதிகாரம், பள்ளி துணைத் தலைமையாசிரியர்கள், தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அதிகாரிகள், SIC எனப்படும் சிறந்த ஆசிரியர்கள், மாநிலப் பாடவாரி அதிகாரிகள், அமைப்பாளர்கள், Fedaral Inspectors எனப்படும் ஆயினர், என்று பல பெருந்தலைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.  அவ்வப்போது, பள்ளிகளுக்கு  அதிகாரிகள் தங்கள் வருகையை அறிவிப்பதன் வழி ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றனர். ஆகவே ஓர் ஆசிரியரை வேலைவாங்கும் அதிகாரம் பலரின் கையில் உள்ளதால் ஆசிரியர்கள், தொழிலில் சுயஅடையாளமோ, சுயமதிப்போ அற்று பலருக்கும் அஞ்சி தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டியுள்ளது.

மேலும், ஆசிரியப்பணியின் தலையாய பணியான கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு ஆசிரியர்கள் திக்குமுக்காடிப் போகும் இன்னொரு பணி ‘கோப்புகளை’ நிர்வகித்தலாகும்.  பாட பணிக்குழுக்கள், புறப்பாட நடவடிக்கைகள், பள்ளி நிகழ்ச்சிகள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் போன்றவற்றின் கோப்புகளை முறையாக நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கோப்புகளை முறையாக நிர்வகிக்கின்றனரா என்பதைக் கண்காணிக்க சில மேல்மட்ட அதிகாரிகள் அவ்வப்போது பள்ளிகளுக்கு வருகிறார்கள்.  ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் எடுக்காமல் எல்லாப் பள்ளிகளும் ஒரே முறையில் கோப்புகளை நிர்வகிக்க வேண்டியிருப்பதால் சிறிய பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும் பணிச்சுமையை சுமக்கவேண்டியுள்ளது.

இந்தப் பரபரப்பான சூழலில் ஆசிரியர்களுக்கு வாசிக்க நேரம் இல்லை. பொதுவிசயங்களில் தலையிட விருப்பம் இல்லை. சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க அக்கறையில்லை. மற்ற பள்ளிகள் ஏற்பாடு செய்யும் போட்டி விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை. எது பற்றிக் கேட்டாலும் ஆசிரியர்களிடம் இருந்து வரும் பதில் நேரம் இல்லை என்பதுதான்.

ஆசிரியர் தொழிற்சங்கங்களும் (NUT) வெறும் தலையாட்டி பொம்மைகளாக, வெறுமனே கூடிக்கலையும் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கின்றன. தீவிர சிந்தனைகள் மழுங்கடிப்பட்டுவிட்டன. அதிகாரத் தரப்புக்கு அஞ்சி வாழும் ஊழியமே ஆசிரியத்தொழிலாகி விட்டது. எது குறித்தும் இன்றைக்கு ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்க முடியாது. அவர்கள் சொல்லப் போகும் பதிலை நாம் முன்கூட்டியே அனுமானித்து விடலாம். தொழிற்சங்கம் வாய்திறக்கும் ஒரே தருணம் ஆண்டு போனஸ் குறித்த பேச்சு வரும்போது மட்டுமே என்கிற அவல நிலையிலேயே அவை இயங்குகின்றன.

அரசாங்கம் தரும் சம்பள உயர்வு, கல்வி வசதி போன்ற சில அம்சங்களால் ஆசிரியர்கள், தாங்கள் சுகமான சூழலில் வாழ்வதாக நம்புகின்றனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை ஆசிரியர்கள் மோட்டார் வண்டியிலேயே பயணம் செய்தனர். சாதாரண வீடுகளிலேயே வசித்தனர். இன்று நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. வேலைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஆசிரியர்கள் சொகுசு கார்களை வாங்குகின்றனர். மாடிவீடுகளில் வசிக்கின்றனர். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். ஆயினும் இளவயதிலேயே பெரும் கடன்காரர்களாகி வாழ்நாளின் பெரும்பகுதியை கடன்களை நேர்செய்வதிலேயே கடத்திவிடுகின்றனர்.  மேலும்  உண்மையான வாழ்க்கைத் தரம் குறித்த தெளிவற்று வாழ்க்கையைப் பெரும் போராட்டமாக மாற்றிக் கொள்கின்றனர்.  ஆகவே தங்களின் ‘பாதுகாப்பான சூழலை’ தக்கவைத்துக் கொள்ள எந்தவித விமர்சனங்களுமின்றி வாழப் பழகிக் கொள்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்களின் இறுக்கமான நிலைக்குக் காரணம் என்ன? பொருளாதாரச் சிக்கல்கள் அசிரியர்களின் மனநிலையை மாற்றிவிட்டது எனலாமா? அல்லது நாட்டின் துரித கல்வி வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது என்று கூறலாமா? அல்லது ஆசிரியர்கள் முன்பைவிட இப்போது ஆசிரியப்பணியில் கூடுதல் ஈடுபாடு கொண்டுவிட்டார்கள் என்று சொல்லலாமா? இப்படியெல்லாம் நினைத்தால் அது முழுக்க உண்மை அல்ல என்றே சொல்வேன். இன்றைய ஆசிரியர்களின் வாழ்க்கை அழுத்தங்களுக்கு, பொதுவெளியில் இருந்து அவர்கள் வெகுதூரம் விலகியிருப்பதற்கு, அரசியல் வியூகத்துடன் கூடிய சில காரணங்கள் மறைவாக ஆதிக்கம் செலுத்துவதையே விவாதிக்க நினைக்கிறேன்.

மலேசியாவில் முன்னர் ஆசிரியர்கள் பொதுவெளியில் சுதந்திரமாக சுற்றிவந்த நிலையை இன்றைய அரசு வளர்க்க விரும்பவில்லை என்பது முக்கியமான விடயம். ஆசிரியர்கள் மாற்றுக் கருத்துகளையும் அரசியல் கருத்துகளையும் மக்களிடையே துரிதமாகப் பரப்பக் கூடியவர்கள். 90-ஆம் ஆண்டுகளில் நாட்டில் நடந்த சில அரசியல் குழப்பங்கள் போராட்டங்களின்போது ஆசிரியர்கள் பலர் எதிர்த்தரப்போடு இணைந்து செயல்பட்டனர். பலர் அரசுக்கு எதிரான தீவிர மனநிலையில் இருந்தனர். இதன் பாதிப்பு பொதுத் தேர்தல்களில் தொடர்ச்சியாகத் தெரிந்தது.

அரசாங்கத் துறையில் மிக அதிகமான பணியாளர்கள் ஆசிரியர்களாகவே இருப்பதால் அவர்களின் கூட்டு சக்தி மிக வலுவானது. அவர்கள் தீவிரமாக இயங்கினால் அது அரசுக்கு அச்சுறுத்தலாக அமையலாம். ஆகவே அவர்களின் இயங்குபரப்பை சுருக்கும் முகமாக வேலைப்பளுவை அதிகரிப்பது ஒரு அரசியல் தந்திரமாகும். ஒரு நாளின் இருபத்துநான்கு மணிநேரமும் ஆசிரியர்களின் மண்டைக்குள் தங்கள் வேலைகுறித்த சிந்தனையை மட்டுமே இருத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆகவே பல்வேறு வடிவங்களில் ஆசிரியர்களுக்கான பணிகளை அரசு தொடர்ந்து திட்டமிட்டு செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்கு கல்வி அதிகார வட்டம் அர்ப்பணிப்புணர்வு, கடமையுணர்வு, சமுதாயக்கடப்பாடு போன்ற அலங்காரச் சொற்களின் வழி ஆசிரியர்களைச் சமாதானப்படுத்துவது இயல்பு. ஆசிரியர்கள் மெழுகுவர்த்திக்கு ஒப்பானவர்கள்; ஏணிப்படிகள் போன்ற காலாவதியான ‘புனித’ வாசகங்களால் அவர்களின் இழப்புகளை ஈடுகட்டும் முயற்சி தொடர்ந்து எடுக்கப்படுகிறது. ஆனால் இது முதலாளித்துவ மேலாதிக்க முறையின் வழி அரசு மேற்கொள்ளும் அடக்குமுறை என்பது சிந்திக்கத் தக்கது.

இன்றைய ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தாலும், பள்ளி நிர்வாகம் மேல்மட்டக் கல்வி நிர்வாகங்களாலும் பல்வேறு புலங்களின் வழி இருபத்துநான்கு மணிநேரமும் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   வாட்சப் குழுக்கள், தெலிகிராம் குழுக்கள் போன்றவற்றின் வழி நாள் முழுக்கக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவது தொடர்கிறது. பணியைச் சுலபமாக்குகிறது என்ற போர்வையில் ஆசிரியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்பது முற்றாக அபகரிக்கப்படுகின்றது. இது ஒருவகை தனிநபர் சுதந்திர அத்துமீறல் என்பதையோ உழைப்புச் சுரண்டல் என்பதையோ உணராத ஆசிரியர்களும் தங்கள்மேல் வைக்கப்படும் கடுமையான அழுத்தங்களை சகித்துக் கொண்டு வாழப்பழகியுள்ளார்கள்.  பல்வேறு தரப்புகள் மேற்கொள்ளும் ஆய்வுகளில் மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்புக்குள்ளாகும் பணியாளர்களில் ஆசிரியர்கள் முதலிடத்தில் இருப்பதாக வரும் தகவலுக்கு இதுபோன்ற சூழல்களே முக்கியகாரணம்.

அரசாங்கம் அவ்வப்போது ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்க எண்ணம் கொண்டிருப்பதாகவும், திட்டங்கள் தீட்டியிருப்பதாகவும் அறிக்கைகள் விட்டாலும், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.  மாறாக, புதிய புதிய வேலைகள் ஆசிரியர்களின் முன் குவிந்து கிடக்கின்றன. ஆசிரியர் தொழிலில் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் யாரும் இந்தப் பணிகளில் முற்றாக மூழ்கிக்கிடக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் வியூகம். அரசுக்கு எதிர்வினையாற்றக் கூட நேரமில்லாத நிலையிலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் பொதுவெளி ஈடுபாடு முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆகவே, ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தி நிர்வகிக்க பணிச்சுமையை அரசு ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை.

7 comments for “ஆசிரியர்களின் பணிச்சுமையும் அதன் அரசியலும்!

  1. செல்வமணி
    May 4, 2016 at 2:48 pm

    அருமையான பதிவு..!

  2. Tanalacmi Nagarajah
    May 5, 2016 at 10:31 pm

    அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை…. இக்கால ஆசிரியர்களின் இயலாமையைக் கோடிக்காட்டும் கட்டுரை. இந்தக் கட்டுரையை வாசிக்க எத்தனை பேருக்கு நேரம் உண்டோ தெரியவில்லை. ஆசிரியர்களின் இந்த நிலை மாறுமா? மீண்டும் வசந்த காலம் வீசுமா ?
    ஐயா…. நனிச்சிறந்த பதிவு.

  3. Tamindey special nagamaly
    May 6, 2016 at 7:39 am

    1987இல் ஆசிரியப் பணியைத் தொடங்கிய நான் இந்த வலுக்கட்டாயப் பல பணிகளில் ஈடுகொடுத்து வருகிறேன். சில குடும்பப் பிரச்சனைகளும் இதனால் ஏற்பட்ட வண்ணம் உள்ளது

  4. Ramadass
    May 6, 2016 at 6:12 pm

    Unmaiyane karutthu. Nandri sir.

  5. May 6, 2016 at 11:04 pm

    ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துதாம்..ஆசிரியர்கள் இன்றைய நிலை யாதெனில் பெற்றோர், அரசு சாரா இயக்கங்கள் , ஊடகவியலாளர்கள், கல்வி அதிகாரிகள், போன்றோரின் கைகளில் உருளும் பகடை காய்களாக இருக்கின்றனர்…மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் அதிகமாக இருந்தாலும் இவற்றிற்கு ஈடாக நிற்கும் அஸ்ட்ரோவின் பங்கனைக் குறைத்து மதிப்பிட முடியாது.. ஆசிரியர்களின் போராட்டம் வகுப்பறையிலும் வகுப்புக்கு வெளியிலும் தொடர்கிறது..தொடரும்..இச்சூழலில் பொது இயக்கங்களில் ஈடுபாடு கொள்வது சாத்தியமற்றதாகவே இருக்கிறது..

  6. Indararani a/p kalimuthu
    May 14, 2016 at 8:36 am

    முற்றிலும் 100% உண்மையானதும் இன்றைய நாள்வரை நாம் அனுபவித்துவரும் கூற்றுகளாகும்.

  7. caroline a/p somasundaram
    April 28, 2017 at 6:52 pm

    அருமை அருமை அத்தனையும் முத்துக்கள்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...