கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!

theertha 2சட்டப்படி குற்றமாகும் கொலைகளுக்கெல்லாம், சட்டப்படி  தண்டனை கிடைக்கிறதா? அல்லது கொலைகள் நியாயப்படுத்தப்பட்டு, சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டிய தண்டனை  குறைக்கப்படுகிறதா? மண், பொன், பெண்,  ஆகிய மூன்று பழங்குடிக் கோட்பாடுகளைக் காக்கும் கடமையில் இருப்பதாக நம்பிக்கொண்டு வாழும் குடும்பங்கள், குடும்பத் தலைவர்கள், கௌரவக் கொலை என்ற பெயரில் பெண்கள் சமுதாயத்தை அணுவணுவாகக்  கொன்று தின்ற பிறகு, மதம் அல்லது பாரம்பரியத்தைக் காரணம் காட்டிச் செய்த கொலை  சமுதாயக் கடப்பாடு என்று நியாயப்படுத்தப்படுகிறதா? என்று கௌரவக் கொலைகள் குறித்த கேள்விகளுக்கு, மண், பொன், பெண் (Land, Gold,Women)  எனும் திரைப்படம் மூலம் பதிலளித்துள்ளார் எழுத்தாளர் அவந்திகா ஹரி. இந்தியாவின் தேசிய விருதுடன் பல வெளிநாட்டு விருதுகளைப் பெற்ற அவந்திகாவின் படைப்பு மேலை நாடுகளில் நடக்கும் கௌரவக் கொலைகளைக் கேள்விப்பட்டு, நடந்த சம்பவங்களை, ஆராய்ச்சி அணுகுமுறையோடு தொகுத்து திரைப்படமாக அளித்திருப்பதாக அவந்திகா வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தினரையோ, குழுவினரையோ அடையாளம் காட்டும் நோக்கில் படம் கையாளப்பட்டுள்ளது. மிக எளிமையான வசனங்களோடும், காட்சிகளோடும் படத்தை அமைத்திருந்தாலும், அப்படம் பார்வையாளனுக்குக் கொடுத்திருக்கும் தாக்கம் பலமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மண்டை ஓட்டுக்குள் எழுதப்பட்ட விதி 

பெண்கள் எப்போதும் ஆண்களின் ஆதிக்கத்தில் வளரவேண்டிய சொத்துடமையே எனும் சிந்தனை,  வேதகாலம் தொட்டு, கணினிக் காலம் வரை, புறநகர் ஆனாலும், பெரு நகர் ஆனாலும், கல்லாதவனுக்கும், கற்றவனுக்கும்,  மண்டை ஓட்டுக்குள் எழுதப்பட்டு  விட்ட விதியாகவே இருந்து வருகிறது. மகளைக் கொலைசெய்த பாகிஸ்தான் நாட்டவர்  ஒருவரிடம்  பிபிசி நடத்திய பேட்டியில் அவர் இப்படிச் சொல்கிறார், “கொலை செய்ததற்குக் காரணம் உண்டு. பெண் எங்களுடைய சொத்து. என்னுடைய கட்டளைக்குக் கீழ் இயங்க வேண்டியவள் பெண். என்னுடைய  ஆடு, என்னுடைய மாடு, என்னுடைய கழுதை, என்னுடைய பெண் என்று அவர் கூறும் வார்த்தைகள், சமூகத்தில் பெண்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைச் சொல்கிறது. 1000 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையின் விளைவு, ஒரு நாளைக்கு 3 பெண்கள் கௌரவக் கொலைக்கு ஆளாகின்றனர்.  இந்த அடிப்படை உண்மையை அவந்திகா தன்னுடைய படைப்பில் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலாதிக்கம் செய்யும் பாரம்பரிய நம்பிக்கைகள்  

லண்டன், ப்ரிமிங்ஹம் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆசிய-பிரிட்டிஷ் குடும்பத்தில் நடக்கும் கௌரவப் போராட்டங்களின் மூலம், பெண்கள் என்றென்றும் ஆண்களால் ஆளப்படுபவர்கள் எனும் ஆணாதிக்கச் சிந்தனையை; அழகான, அன்பான குடும்பம் ஒன்றை, மதம், பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கை எவ்வாறு மேலாதிக்கம் செய்து, சிதறடிக்கிறது என்பதன் மூலம் காட்டியுள்ளார் இயக்குனர்.

முதல் காட்சியில், மகளைக் கொலை செய்த தந்தை கைதியாக  நிற்கிறார். அதிகபட்ச தண்டனையிலிருந்து இவரைக்காக்க வழக்கறிஞர் குழு, கொலைச் சம்பவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. மகளைக் கொலை செய்ததற்கான எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாத முகபாவனையைக் காட்டும் தந்தையின் பதில்கள், இப்படியும் ஒரு தகப்பனா என்ற கேள்வியை எழுப்பும் வாய்ப்ப்புண்டு. இருப்பினும் முன்நிகழ்வு இடைப்பதிவாகக் காட்டப்படும் காட்சிகளில், மகளின் மேல் உயிரையே வைத்திருந்த அன்பான தந்தை எப்படி கொலை செய்யும் அளவுக்குக்  கொடுமைக்காரர் ஆனார் எனும் கேள்விளுக்குப் பின்வரும் காட்சிகளின் மூலம் பதில்சொல்லி கதையை நகர்த்துகிறார்  இயக்குனர்.

நசீர் அலி கான், ப்ரிமிங்ஹம் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று ஆசிரியர். 25 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து லண்டனுக்குக் குடிபுகுந்தவர். கல்லானாலும் கணவன் என்ற பாரம்பரியத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவி ரிஸ்வானா.  ஆங்கிலப் பாரம்பரியத்தைத் தழுவி வாழ்ந்து வரும்  இரு பிள்ளைகள், சாய்ரா (வயது 17), அசீப் (வயது 14). மகள் சாய்ராவின் பாதுகாப்பு மீது அதிகக்கவனம் செலுத்தும் கடமையுள்ள தந்தையாக உள்ள நசீர், மகளுக்குக்  கொடுக்க வேண்டிய சுதந்திரத்தைக் கொடுக்கிறார்.

மகள் மேற்படிப்புக்குச் செல்வதை அவர் தடுக்கவில்லை. இருப்பினும் மகளின் பாதுகாப்பை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம், மதத் தீவிரவாதக் கோட்பாட்டுக் கொள்கையைக் கொண்டிருக்கும், இந்தியாவில் உள்ள  நசீரின் அண்ணன் ரியாஸ் , லண்டனுக்கு வந்த  பிறகு, சாய்ராவின் சுதந்திரம் நசுக்கப்பட ஆரம்பிக்கிறது. கேம்ப்ரிட்ஜ் கல்வியைத் தொடரவும், எழுத்தாளரான தன்னுடைய மேற்கத்தியக் காதலன் டேவிட் உடனான சந்திப்பை அதிகப்படுத்தும் உற்சாகத்திலும் இருந்த சாய்ராவின் ஆசைகள், அவளுக்கு  வரன் பார்த்துவிட்ட செய்தியால் நிலைகுலைகிறது. அவளுக்குக் காதலன் இருக்கிறான் என்னும் செய்தி குடும்பத்திற்குத் தெரிந்தவுடன் கலகம் வெடிக்கிறது. சைரா ஒதுக்கப்படுகிறாள், பிறகு அவளுடைய பெரியப்பா மற்றும் உறவினர்கள் உதவியோடு கொலை செய்யப்படுகிறாள்.

வேதங்கள் கொலை செய்யச் சொல்கிறதா?

வீட்டை, குடும்பத்தைப் பாதுகாக்கவும் (மண்), நீ பெரிதாக மதிப்பதைப் பாதுகாக்கவும், (பொன்),theertha வீட்டுப் பெண்களைப் பாதுகாக்கவும் தேவைப்பட்டால் கொலையும் செய்யலாம் என்பதைத்தான் உருது  மொழியில் Zan Zar  Zameen அல்லது ஹிந்தியில் Jar Joru Jameen என்று சொல்லப்படுகிறது.  இந்தக்கோட்பாடு பழங்கால இசுலாம் காலத்தில் பழங்குடியினரால் கடைபிடிக்கப்பட்டு வந்த கோட்பாடு. சாதி விட்டு சாதி திருமணம் செய்யும் பெண்களை குடும்ப கௌரவத்துக்கு ஈனமாக எண்ணுபவர்கள், தங்கள் பெண்களின் உடலில் பிறர்  ரத்தம் கலந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பெண்களைக் “களை”  எடுக்கிறார்கள். உறவுகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதற்காகப் பெண்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதன் உருவாக்கிய  நம்பிக்கையே, கௌரவக் கொலைக்குக் காரணம், வேதங்களோ சமயங்களோ அல்ல எனும் உண்மையைத்  வழக்கறிஞராக வரும் ஃபாரா சிடிக்கி மூலம் உணர்த்துகிறார். “ஆசியனாக இருந்தாலும் சரி, இஸ்லாமியராக இருந்தாலும் சரி, இந்தக் கோட்பாடு, நடைமுறை, பழங்காலப்  பாரம்பரியம். இது உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டது. இது மனிதனின் மனதுக்குள் அழுத்தம் பெற்றுவிட்டதால் அவர்களை அறியாமல் அதனைக் கடைபிடித்து வருகிறார்கள். இது இங்கிலாந்திலும் இடைக்கால கட்டத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ரத்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதில் எடுக்கப்பட்ட முயற்சி இது” போன்ற உரையாடல்கள், ‘கௌரவக் கொலைக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது’ எனும் ஃபாராவின் வாதம் மதவாதிகளுக்குச்  சவாலாக அமைகிறது. “கௌரவக்  கொலைக்கு மதத்தையும், பாரம்பரிய நம்பிக்கையையும் காரணம் காட்டி கொலைகாரனுக்கு தண்டனையைக் குறைக்கும் முறையீட்டை நாம் கையில் எடுத்துக்கொண்டால், பிறகு கொலை செய்யும் அப்பாக்களும், உறவினர்களும் இதே காரணத்தைக் கோரி சட்டத்துக்கு முன் முறையிடுவார்கள்” என்று ஃபாராவின் மூலம் வெளிப்படும் வசனங்கள், கொலைகளை கௌரவப்படுத்தக் கூடிய குற்றவாளிகளுக்கு எதிரான எச்சரிக்கை.  தகப்பன் பேச்சைக் கேட்காத மகளைக் கொலை செய்யலாம் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லைதானே. என்று ஆசியா-பிரிட்டிஷ் முஸ்லிமான ஃபாரா, நசீரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள், வேத வாசகங்களின் புரிதல் நிலையை வெளிப்படுத்துகிறது,

தகப்பனின் அன்பைத் தின்ற சமூகப் பார்வையும் உறவினர்களின் நெருக்கடியும்  

சமூகம் நம்மை என்ன சொல்லும் என்ற வரட்டுக்கௌரவம் பல மகள்களைக் கொன்று குவித்துள்ளது. மகளுக்காக வாழும் தகப்பனுக்கு,  மகள் என்பவளை மனம் உள்ள மனுஷியாகப் பார்க்கத் தெரியவில்லை. அவளை ஒரு களிமண்ணாக நினைத்து , தனது விருப்பத்திற்கு ஏற்ற உருவமாக மகளைப் படைக்க நினைக்கும் தந்தையின் ஆக்கிரமிக்கும் சுயநலத்தை அன்பு என்று புலம்புவதை நசீர் – சாய்ரா கதாபாத்திரத்தின் வழி காண முடிகிறது. உன் கண்களில் நீர் கொட்டுவதற்கு முன் என் கண்கள் குளமாகிவிடும் என்ற கவிதையை மகளுக்காக  எழுதிய தந்தை,  மகளைத்  தன் அண்ணன் கொலை செய்ய அனுமதிக்கும்போது  சாயம் வெளுக்கிறது. வெள்ளைக்காரனைக் காதலிக்கும் மகளின் விருப்பத்தை, அல்லது அவளுடைய தேர்வைச் சரிபார்க்காமல் அவனை வீட்டுக்கு அழைத்து, மிரட்டி, அவமதித்து அனுப்பும் காட்சிகள், மகளின் மேல் தந்தை கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு குணங்களை வெளிப்படுத்துகிறது. அன்பாக, அமைதியாக இது நாள்வரை பேசி வந்த ஒரு பேராசிரியரின்  மனதுக்குள் பயங்கரமான வன்மம் இருக்கும் என்பதை அவருடைய மகளே எதிர்பார்க்கவில்லை. சாய்ரா எனது சொத்து அதைபற்றிக் கேள்வி எழுப்ப நீ யார் என்று சாய்ராவின் காதலனை நோக்கிக் கேட்கும் வார்த்தைகள், தனி மனித உரிமைகளை நிராகரிக்கும் போக்குடையவராக  நசீரை காண்பிக்கிறது. என் மகள் எதைக் கேட்டாலும் அவள் கேட்டதைவிட அதிகமாகச் செய்வேன் என்று சொன்னவர் அவள் கேட்ட  காதலனை மட்டும் மறுத்துப் பேசுவதற்கு  அவன் இனம், ஜாதி காரணமாக அமைகிறது. “பாரம்பரியத்தைத் தொடரும் கடமை என்னுடையது. என் பிள்ளைகளுக்கு அது நமது சொத்து என்ற உணர்வை ஊட்டுவது என்னுடைய கடமை. நான் அதைச் செய்யத் தவறிவிட்டேன். என் மகள் என்னை  முழுமையாகத் தோல்வி அடைந்தவனாக ஆக்கிவிட்டாள். மனிதர்கள் எங்களைப்பற்றிப் பேசிய வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்க வேண்டும்” போன்ற வார்த்தைகள்  பாரம்பரிய நம்பிக்கையின் அபாயங்களைக் காட்டுகிறது.

குற்றம் குற்றமே

கௌரவக்கொலை என்பது கொலைக்  குற்றமே. அதற்குச் சரியான தண்டனை மரண தண்டனையே என்று இயக்குனர் ஃபாரா முன்வைக்கிறார். மகள்,  தான் கொண்டிருந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்ததால் அவளைக் கொல்வதே அவளுக்கான தண்டனையாகக் கருதிய கொலைகாரத்  தகப்பனுக்கு சில வருடங்கள் மட்டுமே தண்டனை எனப் பரிந்துரைத்து மனசாட்சி உள்ளவர்கள்  வாதாட மாட்டார்கள். சட்டத்தைப் பாதுகாப்பவர்கள் மனித நேயத்தோடு நடந்து கொள்ளல் வேண்டும் என்பதனை  ஃபாரா தன் வாதத்தில் இருந்து பின்வாங்குவதன் மூலம் சொல்கிறார் இயக்குனர். சாய்ரா என்பவள் இன்று இப்போது இங்கு உயிரோடு இருக்க வேண்டியவள். அவளைக் கொன்றவனுக்காக நான் வாதாடினால் என் கைகளில் ரத்தக்கறை படியும் என்று ஃபாரா கூறுகிறாள். கொலை செய்யப்பட்டவளுக்காக, அவளைக் கொன்றவன் தகப்பனாக இருந்தாலும் நீதி நிலைநாட்டப்படவேண்டும். ஒழுக்கத்தை நிலை நாட்டுகிறோம் என்ற ஆண் ஆதிக்கத்தின் அழுத்தங்களுக்கு எப்போதும்  பெண்களே பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். கௌரவக் கொலையைத்  தாம் வன்மையாக  எதிர்ப்பதாகக்  கதையில்  காட்டிக் கொள்ளாவிட்டாலும் ஒழுக்கத்துக்குப்  பால் வேறுபாடு இல்லை என்று தெளிவாகச் சொல்லாவிட்டாலும், புனிதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பெண்களை அடிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஆணாதிக்க  வன்முறையைக் காட்டிக் கொடுக்கிறார் அவந்திகா.

2 comments for “கோட்பாடுகளும் கௌரவக் கொலைகளும்!

  1. May 6, 2016 at 12:02 am

    அருமையான பதிவு!

  2. karan
    May 6, 2016 at 12:27 pm

    Etru kolla vendiya visayam..pennadimai intrum thodarvathu varutham alikkirathu…poka porulaai…pen..en manam kothikkirathu…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *