Information Anxiety – தகவல்கள் தொடர்பான கலக்கம்

2180833265_588cb0e7a0நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படியொரு சொல் வழக்கில் இருப்பது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமல் இருக்கலாம்; அல்லது பொதுவாக மன அழுத்தம், குழப்பம் என்ற சொற்களின் வழியாக இதனைக் கடந்து சென்றிருப்போம். ஆனால் இதனை வாழ்வில் ஒரு முறைகூட அனுபவிக்காத ஆய்வியலாளர்களும், மாணவர்களும் இருக்கவே முடியாது. தற்போதைய சூழலில் சிறு பிள்ளைகள்கூட தகவல்கள் தொடர்பான கலக்க நிலையினை எதிர்கொள்வதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன (Aaron T. Beck, 2007). Information anxiety என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்வதன்வழி இன்றுவரை நாம் எவ்வாறு இச்சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அதிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு.

கணினி யுகம், தகவல் தொழிழ்நுட்ப யுகம் என்று சொல்லப்பட்டுவரும் இக்காலச் சூழலில் ஒவ்வொரு தனிமனிதனும் அறிந்தும் அறியாமலும் தகவல்கள் தொடர்பான ஒருவித மன அழுத்தத்தை எதிர்கொள்கிறான். தகவல் தொடர்பான கலக்கம் (Information anxiety) பற்றிய ஆய்வு 1605ஆம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ‘That in spacious knowledge there is much contristation, and that he that increaseth knowledge increasth anxiety’ (Sir Francis Bacon, 1605). தகவல் தொடர்பான கலக்கத்தைப் பற்றியும் அதனால் உண்டாகும் பாதிப்புகளைப் பற்றியும் பேசுவதாக இவ்வாய்வு அமைந்திருந்தது. அதன் பிறகு சுமார் 400 ஆண்டுகள் கடந்து Richard Wurman என்பரின் மூலமாக 1989ஆம் ஆண்டு மீண்டும் இச்சொல் பரவலான பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். அதன் பிறகு இதன் கருத்தாக்கம் பல்வேறு நிலைகளிலிருந்து  அறிவுக் கலக்கம் (knowledge anxiety), நூலகக் கலக்கம் (library anxiety) என புதுப்புது ஆய்வுகளுக்கும் கருத்தாக்கங்களுக்கும் வித்திட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இன்றளவிலும் இதுபற்றி தமிழ்ச் சூழலில் மிகமிகக் குறைவான அளவிலேயே ஆய்வுகளும் பரிசோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது மிகப்பெரிய குறைபாடாகும். மற்ற மொழிகளில் குறிப்பாக ஆங்கில மொழியில் பல ஆயிரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சான்றுகளும், மீள்சான்றுகளும் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றின் அடியொற்றி மலாய் மொழியிலும் ஆய்வுகள் பல தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதையும் இவ்விடம் குறிப்பிட்டாக வேண்டும்.

Information Anxiety என்பதன் சொல்பொருள் விளக்கம்

  • Information தகவல்

தகவல் என்பது பல கருத்தியல்களை உள்ளடக்கியதாகும். புதியதாக ஒரு கருத்தியலை உருவாக்க; முன் கருத்துக்களுக்கு மறுவடிவம் கொடுக்க; மாற்றியமைக்க; மேம்படுத்தப் பயன்படும் கருவியாக தகவல் என்ற சொல்லைப் புரிந்து கொள்ளலாம்.

  • Anxietyபயம் அல்லது கலக்கம்

தகவல்கள் தொடர்பான கலக்கம் எங்கிருந்து தொடங்குகிறது?

ஒருவருக்கு தன் தேவைக்குப் பொருத்தமான தகவல்கள் நிறைய இருப்பதாகவும் அவற்றை எல்லாம் வாசித்து தனது தேவையை எவ்வாறு பூர்த்திச் செய்து கொள்வது என்ற மிகப் பெரும் குழப்பம் ஏற்படத் தொடங்கும். இதுவே Information anxietyயின் தொடக்கப் புள்ளியாகும்.

இதனை சில உதாரணங்களின்வழி புரிந்து கொள்ளலாம்.

கூகுளில் (google) ‘alienation’ அதாவது அந்நியமாதல் என்பதைப் பற்றிய தரவினைத் தேட விழைகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தேடலுக்கான (Search) பதிவு 12,900,000 தரவுகளை உள்ளடக்கி நமக்குக் கிடைக்கும். இத்தரவுகளில்தான் நமக்குத் தேவையான Information மற்றும் Non-information கலந்திருக்கும். இத்தகவல்களைக் கையாளத் தொடங்கும்போது Information anxietyயை உணரத் தொடங்குவோம். இந்தத் தரவு சரியானதா, பயனுள்ளதா, நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் சிந்திக்கும்போதும் அவற்றை வகைசார்ந்து ஒழுங்குபடுத்துவதில் சிக்கல் உண்டாகும்போதும் கலக்க நிலை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளத் தொடங்கும். அவசியமான நேரத்தில் வேண்டிய தகவலை உடனடியாகக் கண்டடைய முடியாதபோது கடும் சோர்வை எதிர்கொள்வோம்.

இணைய ஊடகங்கள் மட்டுமின்றி நூலகங்களில்கூட இவ்வகை Information anxietyயை நாம் உணர்கிறோம். ஒரு நூலகத்தில் பல ஆயிரம் புத்தகங்கள் இருக்கும் நிலையில் எந்தப் புத்தகத்தை எடுத்துப் படிப்பது என்ற கலக்கம் ஒருவரை முழுவதுமாக ஆட்கொண்டு விடுகிறது. இக்கலக்கம் தொடக்கத்தில் அவ்வளவாக உணரப்படுவதில்லை. தரவுகளைத் தொடர்ந்து வாசிக்க வாசிக்க இதுவரை ஏற்பட்ட புரிதல் போதாது என்றும் சில தரவுகளுக்கு செலவிட்ட நேரவிரயமும், நமக்குத் தேவையான புரிதலுக்கும் தற்போதைய புரிதலுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதை கண்டறியும்போதும் இந்தக் கலக்க நிலை உச்சத்தை அடைகிறது. இதனால் தொடர்ந்து என்ன செய்வதென்ற குழப்பம் அதிகரித்து பாதியிலேயே தேடுதலை நிறுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து ஆரம்பிக்கவும் நேரிடும்.

இந்தக் கலக்க நிலையைதான் நாம் பயம் என்றும் குழப்பம் என்றும் மிக எளிமையாகச் சொல்லிக் கடந்து விடுகிறோம். தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த நிபுணர்களும், நூலகத் துறை சார்ந்த நிபுணர்களும் Information anxietyயை ஒருவகை நோய் (Disease) என்றும் மனதளவில் ஒருவரை நிலைத்தன்மையற்ற சூழலுக்குள் தள்ளி மன அழுத்தத்திற்குக் கொண்டு செல்லும் என்றும் கூறுகின்றனர்.

இத்துறைசார் நிபுணர் Richard Saul Wurman தகவல்கள் தொடர்பான பதற்றத்தைக் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“Information anxiety is produced by the ever-widening gap between what we understand and what we think we should understand. It is the black hole between data and knowledge, and what happens when information doesn’t tell us what we want or need to know”.  (Wurman, 2001).

தகவல் தொடர்பான கலக்கம் என்பது நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம் மற்றும் நமக்கு என்ன புரிய வேண்டும் என்பதற்கிடையிலான பிளவின் ஊடாக உருவாவதாகும். நாம் சேகரித்திருக்கும் தகவல் நமக்கு வேண்டிய புரிதலை ஏற்படுத்தாதபோது தகவலுக்கும் அது நமக்குக் கொடுக்க வேண்டிய புரிதலுக்கும் இடையே உண்டாக்கும் வெற்றிடமாகவும் இந்தத் தகவல் தொடர்பான கலக்க நிலை கருதப்படுகிறது.

தகவல்களின் வகைகள்

தகவல்கள் தொடர்பான கலக்கம் இருவேறு சூழல்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலாவதாக, தகவல் பற்றாக்குறை. மற்றொன்று தேவைக்கு அதிகமான தகவல்கள் இருத்தல் (Information overload).

(1) தகவல் பற்றாக்குறை

தகவல்களைத் தேடுவதில், கண்டடைவதில், புரிந்து கொள்வதில், பயன்படுத்துவதில் ஒருவர் எதிர்கொள்ளும் பதற்றமே Information anxiety என்று அழைக்கப்படுகிறது. விரல் இடுக்குகளில் தகவல்கள் கொட்டிக் கிடக்கும் நிலையில் ஒருவர் தன் ஆய்வுக்குப் போதுமான அளவு தகவல்கள் கிடைக்காமல் பதற்ற நிலையை அடைவதற்கான சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. இவ்வகை கலக்க நிலையைக் கையாள்வது மிக எளிது. தகவல்களின் மூலங்கள், முந்தைய ஆய்வுகளின் மேற்கோள் நூல்பட்டியல், அல்லது ஆய்வாளர்களின் உதவியை நாடுவதன்வழி இவ்வகைக் கலக்கநிலையை எதிர்கொண்டுவிட முடியும்.

(2)  அளவுக்கதிகமான தகவல்

Information age என்று பெருமிதமாக அழைக்கப்படும் இக்கால சூழலில்தான் ‘தகவல் அற்ற தகவல்கள்’ (Non-informations) தேவையான தகவல்களுக்கு இணையாகப் பெருகி இருக்கின்றன. இதனையே information overload என்று அழைக்கின்றோம். பெரும்பாலும் தகவல் அற்ற தகவல்கள் (Non-informations) அல்லது தேவையற்ற தகவல்கள் நமக்குத் தேவையான தகவல்களுக்கு மத்தியில் நுழைந்து கொண்டு அவசியமானதைப் போலவே காட்சியளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.

இணையத்தில் பல ஆயிரம் இணைய ஆய்விதழ்கள், வலைப்பதிவுகள், வலைதளங்கள் என கருத்துப் பதிவுகளுக்கான ஊடகங்கள் பெருகியதன் விளைவாகத் தகவல்களை இலவசமாகவே பதிவேற்றம் செய்யவும் பதிவிறக்கம் செய்யவும் முடிகிறது. அவ்வகையில் நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்குத் தகவல் பரிமாற்றங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

இவற்றுள் எத்தனை சதவீத தகவல் அசலானவையாகவும், நம்பகத்தன்மை வாய்ந்தவையாகவும் இருக்கும் என்பது கேள்விக்குறியே. கூகுள் நிறுவனத்தில் ஆகக் கடைசி கணக்கெடுப்பின்படி 2013ஆம் ஆண்டு  சுமார் 21.3 மில்லியன்  URLகள் நீக்கப்படவேண்டி கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டிருக்கின்றன (Dara Kerr, 2013). இக்கோரிக்கைகள் அனைத்தும் பதிப்புரிமை (Copyright) தொடர்பானவையாகும். அதாவது பிறருடைய தகவல்களும் தரவுகளும் அனுமதியின்றி இணையங்களில் பயன்படுத்தப்படுவது மிகச் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதை இதன்மூலம் அறியலாம். இதுபோலவே இணையங்களில் கிடைக்கப்பெறும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் பலவும் நடத்தப்படுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆக, ஒரே தகவல் பல இணைய ஊடகங்கள் வாயிலாக பன்முறை கிடைக்கப்படும்போது அவற்றை மீண்டும் மீண்டும் படிக்க நேரிடும் அல்லது போலியான தகவல்களைப் படித்து அதற்குள் சிக்குறுவோம். இறுதியாக, தகவல் தேட விழைந்தவர் அளவுக்கு மிஞ்சிய தகவல்களின் மத்தியில் சிக்கிக் கொண்டு தவிப்பர்.

தகவல்களின் தன்மைகள்

  • தகவல்கள் (Information)

நம் அறிவுத் தேவைக்குப் பொருத்தமான அல்லது அவசியமானவையே தகவல்கள் என்கிறோம். இவை முற்றிலும் நம்பகத் தன்மை மிக்கதாக, பொருள் பொதிந்ததாக, கால மாற்றத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதாக; மேம்படுத்தப்பட்டதாக இருக்கும்.

  • தகவல் அற்ற தகவல்கள் (Non-information)

இவை நமக்கு தேவையான தகவல்கள் போலவே காட்சியளிக்கும். நமது அறிவுத் தேவைக்குத் தீனிபோடுவதாக இல்லாமலும் நம்பகத்தன்மை இன்றியும் இருக்கும்.

எவையெல்லாம் தகவல்கள் என்பதையும் எவையெல்லாம் தகவல்கள் அல்லாத தகவல்கள் என்பதையும் மதிப்பீடு செய்வது, சரியான தேடல் உத்திகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றின் வாயிலாக நம்மால் தகவல்கள் தொடர்பான கலக்கத்திலிருந்து விடுபட முடியும்.

Information anxietyயை எதிர்கொள்ளும் எளிய வழிமுறை

கற்றல் திறன், கேட்டல் திறன், ஆய்வுத் திறன் போன்றே ஒவ்வொருவருக்கும் குறிப்பாக ஆய்வில் ஈடுபடும் ஒவ்வொரு மாணவருக்கும்; ஆய்வியலாளருக்கும் அடிப்படையான தகவல் எழுத்தறிவு திறன் (Information Literacy Skill) இருப்பது மிகவும் அவசியமாகிறது. இத்திறன் கைவரப்பெற்றவர்களால் மிக எளிதில் தேடுதல்களை மேற்கொள்ளவும், தேவையான தகவல்களைக் கண்டடையவும் முடியும். இதன்வாயிலாக தகவல் தொடர்பான கலக்கத்திலிருந்து விடுபடுவது உறுதி.

இனி, தகவல் எழுத்தறிவு திறனின் அடிப்படை அம்சங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

 மேற்கோள் பட்டியல்
1. Aaron T. Becka& David A. Clark (2007). Anxiety and depression: An information processing perspective. pages 23-36 DOI:10.1080/10615808808248218
2.   Dara kerr. (2013). Google logs record 21.5M URL takedown requests in September
3. October 7, 2013 http://www.cnet.com/news/google-logs-record-21-5m-url-takedown-requests-in-september/
4.   Francil Bacon. (1605). The advancement of learning. 1st ed. South Australia: The University of Adelaide. Web. 25 Apr. 2016. Retrieved from https://ebooks.adelaide.edu.au/b/bacon/francis/b12a/chapter1.html.
5.  Hobart, M.E. & Schiffman, Z.S. (1998). Information Age. Literacy , Numeracy and the Computer Revolution. London: John Hopkins University Press
6.  Richard Saul Wurman, “Chapter 4: Language,” inInformation Anxiety (New York: Doubleday, 1989) Pg. 102.

1 comment for “Information Anxiety – தகவல்கள் தொடர்பான கலக்கம்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...