காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள்

அகம்பொதுவாக பெண்களைவிட ஆண்களே கூச்சசுபாவம் மிக்கவர்கள் என்று நினைக்கிறேன். ஆண்கள் மட்டும் இருக்கையில் அவர்கள் வீரத்தைக் குறித்து சவடால் பேசுவதும் அதுவே ஒரு பெண்ணிடம் பேசுவதென்றால் உளறிக்கொட்டுவது அல்லது பேசத்தயங்குவதுமாக இருக்கிறார்கள். ஆணுக்கு பெண் ஒரு புதிர். தன் இரகசியங்களை வெளிக்காட்டவேண்டிய இடம். இப்படி நேரடியாக அணுகுவதில் உள்ள தயக்கத்தால், அதேநேரம் பெண்ணுடன் நெருங்கவேண்டும் என்ற தவிர்க்கமுடியாத வேகத்தால் நிறைய விதங்களில் தொடர்ந்து படையெடுத்துக் கொண்டே இருப்பார்கள். முகநூலில் பார்த்தாலே தெரியுமில்லையா? ஒரு பெண் போடும் ‘குட்மார்னிங்’ பதிவுக்குக்கூட பலநூறு லைக்குகள். தொண்ணூறு சதவீதத்திற்குமேல் அது ஆண்களாகத்தான் இருக்கும். பெண்ணிடம் நேரடியாக முயல்வதைவிட அவளது தோழியுடன் பழகுவது எளிதாயிருக்கிறது. அல்லது ஏதோவொரு விதத்தில் அவர்கள் வீட்டிற்கு நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்ள விழைகிறார்கள். நேரடியாகப் பெண்ணை அணுகுவது அவளது கௌரவத்திற்குக் குறைச்சல் என்றுகூடத் தயங்குகிறார்கள்.

பாக்யராஜின் இன்றுபோய் நாளைவா படம் இதைத்தான் நகைச்சுவையாகச் சொல்கிறது. தமிழில் இதையொட்டி நிறையப் படங்களில் நகைச்சுவைத் துணுக்குகள் வந்திருக்கின்றன. பெண்ணைக் கவர்வதற்காக மனம் போடும் வேஷங்கள் தான் எத்தனை. அகநானூறில் வரும் 280-வது பாடல் ‘பொன் அடர்ந்தன்ன ஒளிணர்ச் செருந்தி’ காதலனின் குணத்தையும் சொல்லிவிடுகிறது. அவன் சிந்திப்பதாக விரியும் இப்பாடலில் அவனது பண்பும், அவள்மீதான ஆசையும், நிலவமைப்பும் நீரோட்டம்போல சொல்லப்படுகிறது.

பொற்குவியல்போல ஒளிபொருந்திய செருந்திப்பூக்களைச்

சூடிய நல்லழகு கொண்ட கோதையிவள்

மணலடர்ந்த கடற்கரையில் நண்டுகள் விரட்டி

களைத்திருக்கிறாள் இந்தத் தொடியணிந்த சிறுபெண்

மரக்கலம் நிறைய பொன்னள்ளித் தந்தாலும் ஏற்றுக் கொள்வாளா என்ன

அறத்தின் பால் நிற்பவள். அரியவள்.

என் ஊரிலிருந்து இங்கே குடிபெயர்ந்து

அவள் தந்தையின் உப்பளத்தில் வேலைசெய்து

பெருங்கடலில் ஆழம் சென்றுவந்தும்

அவனைப் பணிந்து, சார்ந்து, வயப்பட்டு இருப்பின்

அவளை நமக்குத் தரமாட்டானா இந்த

விரிகடலில் திரண்ட முத்தெடுத்து

தீம்மலர் சேரும் வண்டுகள் சூழ்ந்த

கடற்கரையில் வாழும் அவள் அப்பன்?

இந்தப்பாடலிலிருந்தே காதலன் பெண்ணை சற்று நேரத்திற்கு முன்புதான் பார்த்திருக்கிறான் என்பது தெரிகிறது. அவளது நற்குணத்தைப் புரிந்துகொள்கிறான். அவளுடன் பேசத் தயங்குகிறான். பேசாமல் தன் ஊரைவிட்டு இங்குவந்து அவள் தகப்பனுக்காக ஒழுங்காக வேலைசெய்துவந்தால், அவளையும் அடிக்கடி பார்க்கலாம்; அவள் அப்பனும் நமக்கு அவளை மணமுடித்துத் தரலாம் என்று எண்ணுகிறான். இதில் அந்தப்பெண் சூடியிருக்கும் பூ செருந்தி. கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். கடற்கரையோரத்தில் செருந்திப்பூக்களை தலைநிறைய வைத்து நண்டுகளை விரட்டிக்கொண்டு களைத்து நிற்கும் ஒருபெண்.

இயற்றியவர்: அம்மூவனார்  / திணை: நெய்தல்

பொன் அடர்ந்தன்ன ஒள் இணர்ச் செருந்திப்

பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள்,

திணி மணல் அடை கரை அலவன் ஆட்டி

அசையினள் இருந்த ஆய் தொடிக் குறுமகள்,

நலம்சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும்,

பெறல் அருங்குரையள்ஆயின், அறம் தெரிந்து,

நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து, அவனொடு

இரு நீர்ச் சேர்ப்பின் உப்புடன் உழுதும்,

பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும்,

படுத்தனம், பணிந்தனம், அடுத்தனம், இருப்பின்,

தருகுவன்கொல்லோ தானே விரி திரைக்

கண் திரள் முத்தம் கொண்டு, ஞாங்கர்த்

தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும்

கானல் அம் பெருந் துறைப் பரதவன் எமக்கே?

  • பாலா கருப்பசாமி

1 comment for “காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள்

  1. அருமை வாழ்த்துக்கள் பாலா
    May 3, 2016 at 5:46 pm

    அருமை வாழ்த்துக்கள் பாலா

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...