காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 3

பொதுவாய் மனைவியுடன், காதலியுடன் பேசும்போது அணுசரனையாகப் பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு கண்டபடி வாக்குறுதிகளை ஆண்கள் கொடுத்துவிடுவார்கள். பின்னர் அது மறந்தே போய்விடும். இந்த விஷயத்தில் மட்டும் எல்லாப் பெண்களும் அத்தனை துல்லியமாக ஞாபகம் வைத்திருப்பார்கள். திடீரென்று கேட்பார்கள் ‘ போன வருசம் ஜனவரி மாசம் நீ என்ன சொன்னே’. எவன் கண்டான்? நேற்றுச் சொன்னதே ஞாபகம் வராது. நாம் செய்யாமல் விட்டது என்று பட்டியலிடச் சொன்னால் வீடு தாங்காத அளவுக்குப் புகார்கள் இருக்கும். ஆண்கள் இப்படி தனித்தனியாய் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. தனித்தனி சம்பவங்களை வைத்தில்லாமல் ஒட்டுமொத்தமாய் அளவிடுவார்கள். பெண்களின் இந்த selective memory power தான் அவர்களின் பெருவாரியான பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.

agam 1அதேபோல ஒரு பெண் ஆணிடம் பேசும்போது அவள் சாதாரணமாகப் பேசுகிறாளா இல்லை தன் உடல்மொழியில் அவன் மீதான ஈர்ப்பை வெளிப்படுத்துகிறாளா என்பதை ஒரு பெண் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவாள். பெண் நிற்கும் விதம், கையசைவுகள், ஆடையைத் திருத்துதல், தன்னைத்தானே தொட்டுக்கொள்ளுதல், கண்கள் போகும் இடங்கள் இப்படி நிறைய. ஆண்களோ தத்தி மாதிரி இது எதையும் அறியாது போகிற போக்கில் ஒரு flirting / jovial-social ஆகப் பேசிக்கொண்டிருப்போம். நம்மாள் சொன்ன பிறகுதான் ‘உண்மையாகவா’ என்று ஆச்சரியப்படுவோம். கீழேயுள்ள பாடலில் அந்தப் பெண்ணின் மொழியை எத்தனை அழகாகச் சொல்லிச் செல்கிறார் பரணர்.

நீண்டு பரந்த ஆற்றின் மேற்படி தொட்டு

புதுப்புனலோடுகிறது

நேற்று வலிய யானை போல 

படகைத் தழுவி புனலாடினாய்

நரந்தம்பூச்சூடிய இளந்துணைப் பெண்டிர் சூழ

குளியல் ஆடை அணிந்து நீரில் திளைத்தாடினாய்

அவர்கள் காமத்தோடு உன்னை மாறி மாறிப் 

பார்க்கிறார்கள். நீயும் வெட்கமின்றி

ஆடிக்கொண்டிருந்திருக்கிறாய்.

எவ்வி எனும் நீடுர்த் தலைவன்

எதிரிகளை அழித்து அரிமணவாயில், உறத்தூர் என்னும் ஊர்களில்

கள்ளுடன் உணவு படைத்தான் ஊரார்க்கு

ஆங்கே பகலில் எழுந்த ஆரவாரத்தைப் போல

உன் செயல் ஊரில் அலரைக் கிளப்பியிருக்கிறது

அதுகூட எனக்குக் கோபம் தரவில்லை

வயலில் உழவர் பாடும் பாடல் கேட்டோடும்

மயில் தெய்வம் வாழும் மலையகத்தே 

வந்து அழகுபொருந்த வந்து தங்கும்

அத்தகைய அலைவாய் என்னும் ஊரில்

மணிவிளக்குகள் கொண்ட முருகன் கோவிலில்

என்னை மணந்தபோது நீ பெருமையாய்ச் 

சூளுரைத்ததை எண்ணித்தான் நொந்துகொள்கிறேன்.

குறிப்பு: இந்தப்பாடலில் குளிப்பதற்கான ஆடை என்பதை ‘ஈர் அணி’  என்று குறிப்பிடப்படுகிறது. ஈரத்தில் இறங்கையில் உடுத்தும் அணி அல்லது இரட்டை ஆடை என்றும் பொருள் கொள்ளலாம். குளிப்பதற்குத் தனியாடையை வைத்திருந்தனர் என்பது ஒரு நாகரீகச் சிறப்புதான்.

  1. தலைமகள் கூற்று

கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்

அந்தீம் பாஅயப் புதுப்புனல், நெருநை

மைந்துமலி களிற்றின் தலைப்புணை தழீஇ

நரந்தம் நாறும் குவைஇருங் கூந்தல்

இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ

நீர்பெயர்ந்து ஆடி ஏந்துஎழில் மழைக்கண்

நோக்குதொறும் நோக்குதொறும் தவிர் விலை யாகி,

காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண்இழந்து

ஆடினை என்ப மகிழ்ந! அதுவே

யாழ்இசை மறுகின் நீடுர் கிழவோன்

வாய்வாள் எவ்வி ஏவல் மேவார்

நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர்

அரிமண வாயில் உறத்தூர் ஆங்கண்

கள்ளுடைப் பெருஞ்சோற்று எல்இமிழ் அன்ன

கவ்வை ஆகின்றால் பெரிதே; இனிஅஃது

அவலம் அன்றுமன் எமக்கே; அயல

கழனி உழவர் கலிசிறந்து எடுத்த

கறங்குஇசை வெரீஇப் பறந்த தோகை

அணங்குடை வரைப்பகம் பொலியவந்து இறுக்கும்

திருமணி விளக்கின் அலைவாய்ச்

செருமிகு சேஎயொடு உற்ற சூளே.

திணை – மருதம்  

இயற்றியவர் – பரணர்.

3 comments for “காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 3

  1. June 30, 2016 at 5:01 pm

    வாழ்த்துக்கள் பாலா அருமை தொடருங்கள்

  2. பாலா கருப்பசாமி
    July 3, 2016 at 5:25 pm

    மிக்க நன்றி அன்பழகன். எங்கே போனீர்கள்? முகநூலில் ஆளையே பார்க்கமுடியவில்லை.

  3. VIJAYALATCHUMY
    November 7, 2016 at 1:00 am

    பாலா உங்கள் பதிவுகள் கவர்கின்றன. சங்க இலக்கியம் வாசிக்கத் தூண்டுகின்றன. தொடருங்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...