ஏன் இணையவளங்களை மதிப்பீடு செய்யவேண்டும் என்கிற கேள்வியை முன்வைப்பதன் வழி அதன் இன்றியமையாத் தேவையை புரிந்து கொள்ளலாம்.
- நம்பகத்தன்மையற்ற தரவுகளும் தரவுத்தளங்களும்
செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் காட்டப்படும் தரவுகளைப்போல் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் தரமானதாக (Quality) அல்லது துல்லியத்தன்மை (Accuracy) கொண்டதாக இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. அவை எந்தவொரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இல்லாமலேயே பதிவிடப்படும் சாத்தியங்கள் கொண்டவை. நடப்புச் சூழலில் எல்லோருமே தாங்கள் விரும்பும் எதையும் இணையத்தில் பதிவிடும் சாத்தியம் உள்ளதைக் கவனித்தால் இவ்வுண்மை புலப்படும்.
உதாரணமாக, Blogs, Facebook, twittter போன்ற சமூக வலைதளங்களில் ஒருவரது தனிப்பட்ட அபிப்ராயங்கள், தவறான கருத்தாடல்கள், விவாதங்கள் என அனைத்தும் சேர்ந்தே நமக்கு தரவுகளாக இணையத்தில் கிடைக்கின்றன. மேலும் இணையத் தரவுகளில் பதிவிட்டவரின் அடையாளம் பொய்யானதாக (Fake identity) இருக்கும் வாய்ப்புகளும் அதிகமே. உதாரணமாக, Panda Security எனும் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிறுவனம் 2010ல் மேற்கொண்ட ஆய்வில் சராசரியாக ஒருவாரத்தில் மட்டும் 57,000 புதிய வலைத்தளங்கள் இணைய மோசடியாளர்களால் (Hackers/Cybercriminals) உருவாக்கப்படுவதைக் கண்டுபிடித்துள்ளனர்.
2.பகடியான தரவுகளும் தரவுத்தளங்களும்
இதனை ஆங்கிலத்தில் misleading information / website என்பர். சில வகைத் தரவுகளும் தரவுத்தளங்களும் வேண்டுமென்றே தவறாக இருக்க வடிவமைக்கப்படுவதுண்டு. இந்த வகைத் தரவுகளும் வலைத்தளங்களும் எள்ளல்கள், சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சீர்திருத்தும் நோக்கோடு எழுதப்படும் நையாண்டித் தாக்குதல்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டிருக்கும். Fake news அல்லது News satire என்றும் சொல்லப்படும் பகடியான தரவுகளை வடிவமைக்கும் இப்போக்கு 1835ல் Richard A. Locke என்பவரால் கையாளப்படத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வகை தரவுகள் துளியும் சந்தேகத்திற்கு இடமின்றி மெய்த்தன்மையின் சாயல் கொண்டிருக்கும். உதாரணமாக சிற்றிதழ் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தனது அகப்பக்கத்தில் எழுதியிருக்கும் ‘சிற்றிதழ்-ஓர் ஆய்வறிக்கை’ எனும் பகடியான கட்டுரையை சொல்லலாம் (ஜெயமோகன். ஏப்ரல், 2010. சிற்றிதழ்-ஓர் ஆய்வறிக்கை). இக்கட்டுரையின் துல்லியத்தன்மை (Accuracy) ஆராயப்படாமல் விக்கிபிடியாவில் ‘தமிழ் இணையச் சிற்றிதழ்கள்’ எனும் தலைப்பில் வெளி இணைப்புகள் என்பதாக மேற்கோள் காட்டப்பட்டது . பின்னாளில் தேர்ந்த வாசகர் ஒருவர் இப்பகடியான கட்டுரை விக்கிபிடியாவில் முக்கிய வாசிப்புக்கான பிரதியாக மேற்கோள் காட்டப்பட்டதை எழுத்தாளர் ஜெயமோகனின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் (ஷைன்சன். டிசம்பர் 7, 2014. சிற்றிதழ்கள் ஆய்வு).
ஆக, ஒவ்வொரு இணையப் பயனரும் இணையத் தரவுகளைத் திறம்பட சுயமதிப்பீடு செய்யக் கற்று வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை இதன்மூலம் தெளியலாம். இணையத் தரவுகளை மதிப்பீடு செய்ய உரிமை [Authority], துல்லியத்தன்மை [Accuracy], சமகாலத்தன்மை [Currency], உள்ளடக்கம் [Scope/Coverage], நிலைத்தன்மை [Objectivity] ஆகிய 5 வகை மதிப்பீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறைகளின் அடிப்படையில் இணையப் பக்கங்களையும் தரவுகளையும் மதிப்பீடு செய்வதன்மூலம் நம்மால் தரமான தரவுகளைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த முடியும்.
மதிப்பீடு 1 : உரிமை [Authority]
இம்முறையின்வழி கட்டுரை அல்லது இணையப்பக்க ஆசிரியர் அல்லது பொறுப்பாளர் யார் என்பது பரிசீலிக்கப்படுகிறது. ஆசிரியரின் / இணையப் பதிவீட்டாளரின் தகுதி, தொடர்புகொள்ள தொலைபேசி எண் / முகவரி / மின்னஞசல் முகவரி போன்றவைகளுடன் படைப்பின் மேற்கோள்கள் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தளம் நம்பகத்தன்மையானது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
ஒரு இணையதளம்/வலைப்பக்கம் யார் பொறுப்பில் நிர்வகிக்கப்படுகிறது என்பதை அதன் URLஐ வைத்துக் கண்டுகொள்ள முடியும். அதன் அடிப்படையில் அவற்றின் நம்பகத்தன்மை குறித்த பதற்றத்திலிருந்து விடுபட முடியும். உதாரணமாக அரசாங்க வலைப்பக்கங்கள் (.gov, .mil, .edu) நம்பகத்தன்மை கொண்டுள்ளதால் அவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்காது. மற்ற அனைத்துவகை இணையப் பக்கங்களும் மதிப்பீடு செய்யப்பட வேண்டியதே.
இணையப்பக்கங்களில் காணப்படும் டோமெய்ன் (Domain) வகைகள்.
டோமெய்ன் | பயன்பாடு | உதாரணம் |
.com | பெரும்பாலும் வணிக நோக்கத்தைக் கொண்டது. தற்போது வணிகம் சாரா பொது நிறுவனங்களும், இயக்கங்களும் பயன்படுத்துகின்றன. | http://www.maybank2u.com.my/ |
.int | சர்வதேசத் தளங்களால் பயன்படுத்தப்படும். | http://www.who.int/ |
.edu | கல்வித் துறை (அரசாங்க) சார்ந்த நிறுவனங்கள் பயன்படுத்துவது. | http://um.edu.my/ |
.gov | அரசாங்க நிறுவனங்கள் பயன்படுத்துவது. | https://www.pmo.gov.my/ |
.mil | இராணவத் துறை சார்ந்தவை பயன்படுத்துவது. | https://www.army.mil/ |
.net | தொடக்கத்தில் இணைய தொடர்பான தளங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது, இப்போது பல்வேறு தளங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. | http://www.culturebase.net/ |
.org | பெரும்பாலும் வணிகம் சாரா நிறுவனங்களுக்குப் பயன்படுத்தப்படும். | http://home.infitt.org/ |
இவற்றைத் தவிர தனிமனிதர்களின் வலைப்பூ போன்ற இதர சமூக வலைத்தளங்களை மதிப்பீடு செய்ய அவற்றின் ஆசிரியர் தகுதி என்ன, அவர் எத்துறையில் தேர்ச்சி பெற்றவர், அவரது நிலைப்பாடு ஆகியவற்றை மதிப்பீடு செய்வதன்வழி பயன்படுத்தலாம்.
மதிப்பீடு 2 : துல்லியத்தன்மை [Accuracy]
தகவலின் தரம், படைப்பின் ஒழுங்குத்தன்மை, தெளிவு, தகவல் மூலங்களின் (References, Bibliography) நம்பகத்தன்மை போன்றவற்றின் அடிப்படையில் படைப்பை மதிப்பிட முடியும். கிடைக்கப்படும் தரவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள் (Citation) சரியான மூலத்திலிருந்து எடுக்கப்பட்டதா என்பதையும் தகவல் மூலங்கள் கொடுக்கப்படாத சூழலில் சுயமாக இதர சில மூலங்களை நாமே தேடிப்பார்த்து உறுதி செய்வது இம்மதிப்பீட்டு முறையில் அவசியமாகும். உதாரணமாக:
தமிழ் சிற்றிதழ் வரலாறு குறித்து ம. நவீன் புதிய கோணத்திலிருந்து அணுகுவதைக் காணலாம்.
சாதி மறுப்பை தன் அடிப்படை அரசியலாகக்கொண்ட அயோத்திதாசப் பண்டிதரின் ‘ஒரு பைசா தமிழன்’ (1907), அரசாங்க ஒடுக்குமுறையில் பெரியார் நடத்திய குடியரசு, 1925ல் தொடக்கப்பட்டதையும் 1928ல் பெரியாரின் துணைவியரால் தொடங்கப்பட்ட ஆங்கில வார ஏடான ‘ரிவோல்டின்’ போன்ற பிரபலமான பட்டியல் அனைத்தையும் மறுத்துவிட்டு பார்ப்பனியத்தை முன்வைத்து வரலாறு பேசும் அபத்த நாடகங்களின் ஒன்றாகவே தமிழ் சிற்றிதழ் வரலாற்றைப் பார்க்க முடிகிறது.
(ம. நவீன். ஜனவரி 5, 2016. எழுத்து இதழும் சிற்றிதழ் அரசியலும்).
மேற்கூறிய இக்கருத்திற்கு ஆதாரங்களை மேற்கோள்களுடன் தர்க்கப்பூர்வமாக முன்வைக்கும் படைப்பாளர் பின்னாளில் இது தொடர்பாக எழுந்த எதிர்வினைகளுக்கும் சான்றுகளுடன் பதிலளித்திருப்பதை வைத்து சிற்றிதழ் தொடர்பாக இவர் முன்வைக்கும் கருத்து துல்லியத்தன்மை மிக்கதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாளில் இது தொடர்பான எதிர்வினைகளும் மீளாய்வுகளும் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இக்கட்டுரையின் துல்லியத்தன்மையும் கேள்விக்குட்படுத்தப்படலாம்.
மதிப்பீடு 3 : சமகாலத்தன்மை [Currency]
பெரும்பாலும் இணையதளங்கள் புதுப்பிக்கப்படாமல் போவதும் மேம்படுத்தப்படாமல் போவதும் சகஜமாகிவிட்ட சூழலில் அவற்றிலிருந்து பெறப்படும் தகவல்களும் காலாவதியானவையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கைவிடப்படும் இணையதளங்கள், கவனிக்காமல் விடப்படும் இணையதளங்கள் ஆகியவை இம்மாதிரியான சமகாலத் தன்மையற்ற தகவல்களைத் தருகின்றன. மேலும், சிலர் புதிய இணையப் பக்கங்களைத் தொடங்கி பழையதைக் கைவிட்டிருக்கும் சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. எனவே இணையதளங்களின், அவற்றில் உள்ள தகவல்களின் சமகாலத்தன்மையை அவை புதுப்பிக்கப்பட்ட தேதியை வைத்து அளவிட வேண்டியது அவசியமாகிறது. உதாரணம்:
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இணையப்பக்கமான http://www.tamilwriters.net/ – ஐ சமகாலத்தன்மை அற்ற இணையப்பக்கமாக வகைப்படுத்தலாம். இவ்விணையப் பக்கம் தனது புதிப்பிக்கப்பட்ட தேதியைப் பயனர் பார்வைக்கு வைக்காத நிலையில் இதில் காணப்படும் இறுதி பதிவும் செப்டம்பர் 2015 என்பதாக உள்ளதை வைத்து இம்முடிவுக்கு வர முடியும். மேலும், இதிலுள்ள நூலகம் என்ற பகுதியில் ‘சுதந்திரத்துக்கு பின்’ மலேசியாவில் பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பட்டியல் முன்னுக்குப் பின் முரணாக உள்ளதையும் தொடர்ச்சி அற்று இருப்பதையும், இதர பல தகவல்களும் மேற்கோள்களற்று தொக்கி நிற்பதால் இவ்விணைய இதழிலிருக்கும் தகவல்களின் துல்லியத்தன்மையும் சமகாலத்தன்மையும் கேள்விக்குறியாகின்றது.
மதிப்பீடு 4 : உள்ளடக்கம் [Scope/Coverage]
தவறான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் இணையத்தளங்கள் போலியான படங்களை அல்லது போலியான கட்டுரைகளை முகப்பில் வைத்து பயனர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பல சூழல்களில் கட்டுரையின் தலைப்புக்கும் கட்டுரைக்குமேகூட தொடர்பில்லாமல் இருப்பதை காணலாம். மேலும் சிலவகை இணையத்தளங்கள் கிசுகிசுக்களைப் பேசுவதாகவும் அல்லது மிக மேலோட்டமான பதிவை மட்டுமே பதிவிடுவதாக இருக்கும் சூழலில் அவற்றை ஆய்வு நோக்கில் அணுகுவதும் சாத்தியப்படாததே. உதாரணமாக https://thetimestamil.com/tag/இந்துத்துவம் மற்றும் http://www.netrigun.com/ போன்ற இணையப் பக்கங்களைச் சொல்லலாம். பெரும்பாலும் உள்ளடக்கம் சார்ந்த சிக்கலைக் கொண்ட இம்மாதிரியான பதிவுகளைத் தனிநபர் வலைப்பூவிலும் காணலாம். எனவே கட்டுரை, படங்கள், கருத்துக்கள் என உள்ளடக்கம் சார்ந்த மதிப்பீட்டைச் செய்வது அவசியமாகிறது.
மதிப்பீடு 5 : நிலைத்தன்மை [Objectivity]
இணையத்தை வரம்புகளும் தடைகளும் இன்றி மிக எளிதாக அனைவரும் பயன்படுத்த முடிவதால் அவை தற்போது தகவல் பரப்பு ஊடகங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே வலைத்தளங்களின் நிலைப்பாடும் நோக்கமும் என்ன என்பதையும், யாருக்காக அவை இயங்குகின்றன என்பதனையும் அறிவது அவசியமாகிறது. இதன்வழி சார்புநிலை (Bias) அற்ற தகவல்களைப் பெறமுடியும். பெரும்பாலும் வணிக இணையப் பக்கங்கள் இம்மாதிரியான சார்புநிலை கொண்டவையாக இருப்பதைக் காணலாம்.
இணைய நூல்கள், இணைய நூலகம் என இணையம் இன்றைய கல்வியியல், ஆய்வியல் துறைகளில் மிக முக்கியப் பங்காற்றி வருகின்றது. இணையப் பயனர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க google போன்ற இணையப் பெருநிறுவனங்கள் google scholar போன்ற கல்வி சார்ந்த பகுதிகளை உருவாக்கியும் மேம்படுத்தியும் வருகின்றன. இத்தகு இலவச இணைய வளங்கள் இருக்கின்றபோது எதனால் மில்லியன் கணக்கில் சந்தா கட்டி பல்கலைக் கழகங்கள் தரவுத்தளங்களைப் (Databases) தெரிவு செய்து தங்களது பயனர்களுக்கு வழங்குகின்றன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. முக்கியத் தரவுத்தளங்களுக்கு ஈடாக குப்பைகளும் இணையத்தில் இருப்பதே அதற்கு காரணமாகும். எனவே இணையவளங்களை மதிப்பீடு செய்தபின் பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்திக் கொள்வது இக்காலத்தின் தேவையாகும்.
சில எளிய கேள்விகளுக்கு பதில் காண முற்படுவதன்வழி இணையவளங்களை மதிப்பீடு செய்ய முடியும். அந்த எளிய வழிமுறைகளை இணைப்பில் http://snack.to/b7ul780i காணலாம்.
மேற்கோள் பட்டியல்
- ம. நவீன். ஜனவரி 5, 2016. எழுத்து இதழும் சிற்றிதழ் அரசியலும். http://vallinam.com.my/navin/?p=2359
- ஜெயமோகன். (ஏப்ரல், 2010). சிற்றிதழ்கள் ஓர் ஆய்வறிக்கை. http://www.jeyamohan.in/249#.V5qtO6LN7sI
- ஷைன்சன். (டிசம்பர் 7, 2014). சிற்றிதழ்கள் ஆய்வு.http://www.jeyamohan.in/66882#.V4JM761hnIU
- (செப்டம்பர் 9, 2010). Cybercriminals Creating Nearly 60,000 Fake Websites to Trick and Infect Users Each Week, Reports PandaLabs. Retrieved fromhttp://www.prnewswire.com/news-releases/cybercriminals-creating-nearly-60000-fake-websites-to-trick-and-infect-users-each-week-reports-pandalabs-102525764.html
1 comment for “இணைய வளங்களை மதிப்பீடு செய்தல்”