பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

abstract-6

 

 

 

 

 

 

 

 

காதுகளின் கடல்

 

”பொன்னுக்குவீங்கி” என்று

தடித்த தங்கச்சங்கிலியை

அம்மாஅணிவித்தபோது

காதுகளினுள் சில்லென்றது

 

பஞ்சாலை சங்கின் பேரொலி

பறவைகளின் பேச்சரவம்

அம்மாவின் ஆற்றாமை

எனப் படிப்படியாகக் குறைந்து

எதுவும் கேட்காமல் போனது

 

அப்புறம் காதுகளில் தூண்டில் மாட்டி

வயர்கள் பேட்டரி சகிதம்

புறவெளியில் நீந்தும் ஒலிகளை

வேட்டையாடும் படலம் துவங்கிற்று

 

வேட்டையில் சேகரித்த அனைத்திலும்

இசையாடும் ஓசைகளை மாத்திரம்

நுட்பமாய் பத்திரப்படுத்தும்

இயந்திரப் பேழையின்

வயர்களை கழற்றிட

 

எழுகின்றன முடிவற்ற மீயொலிகள்

எண்ணற்ற டால்பின்கள் உலாவும்

காதுகளின் கடலுள்

 

வயலின்புல்லாங்குழல்சேர்ந்திசை
42d2a42b132fa46ab4a50f2d2b26959d

 

இரு இசைக்கருவிகளுமே எத்தனை நலம்/சோகம்

வார்த்தைகளில் விவரிக்கவியலாதநிலை

வயலின் – புல்லாங்குழலில் பெருகி

கூழாங்கற்களில் சலசலக்கும் இசைக்கோலம்

 

பரிச்சயமற்ற மலைப்பாதை

அரவணைக்கும் கு…ளி…ர்

திடீரென்று உச்சிக்கு இட்டுச்சென்று

தள்ளிவிடும் இசையின் நாதவேகம்

மிதக்கும் உயிர்க்கூளம்

துளைகளும் – தந்திகளும் சிறகுகள்

 

மஞ்சு விலகும் மலைகள்

இனிமையின் சுவாசம் மூடுபனி

மலைச்சாரல்களின் மரகதப்பச்சை

மான்கள் மேயும் தாவரங்களின் ஆழங்கள்

தங்களை வழங்கின

வண்ணமயமான காட்டுப்பூக்கள் பாடின

பறவைகளை துணைக்கழைத்து

சமவெளியில் சரிந்தன

வயலினும் – புல்லாங்குழலும்

களிப்பிலிருந்து துக்கஉணர்விற்கு

தலைகோதிய சோளத்தாள்களின் சேர்ந்திசை

வயல்களில் உழவுமாடுகள்

அவற்றின் கழுத்துமணிகளின் ஒத்திசை

இப்போதில்லை எதுவும்

 

காய்ந்த புற்களின் புதரில்

பூச்சிக்கொல்லிகளின்

காலிக்குப்பிகளிலிருந்து

வெளியேறி வரும்

சம்சாரிகளின் திரவஆன்மாக்கள்

 

அதுகாறும் கசிந்த

துயரின் இசைத்தாரை

சட்டென நின்று

நிறை – மோனம்

 

ஆன்ரோமீடா நட்சத்திரத்திரள் 

 

தொலைபேசியழைப்பு

பரிச்சயமற்ற கறாரான பெயரிலி ஆண் குரல்

 

பெயரலி: நீதான் “ரா” என்பது எனக்குத்தெரியும். சற்று கவனமாகக்கேள்.இந்த அழைப்பு அச்சுறுத்தவோ சிந்தனையைத் தூண்டவோ அல்ல. நீ எனது தீவிர கண்காணிப்பில் இருக்கிறாய் என்பதை தெரிவிக்கவே

 

ரா: ஹலோ, நீங்க யாரு, வெட்டிப் பேச்சுக்கு எங்கிட்ட நேரமில்ல

 

பெயரில்: இணையத்தில் சல்லாபத்தேடல்களும், நீலப்படங்களின் தரவிறக்கங்களும் அப்பாவிப் பெண்களின் புகைப்படங்களை  நிர்வாணிகளாய் மார்ஃபிங் செய்யுமுனக்கு இதற்கு நேரமிருக்காதுதான்

 

ரா: (ரகசியத்திரை கிழிந்ததாக உணர்ந்து) யார்ரா நீ  “ஏர்பெல்” காரனா, காசை வாங்கிட்டு என்னய கண்காணிப்பா பண்றீங்க

 

பெயரிலி: நான் யார் ஏனிப்படி இருக்கேன் என உன்னையே கேட்டுக்கொள்

 

ரா: பிலாசபியா பேசுற நாயே.. போனை வைக்கிறேன்

 

பெயரில்: இணைப்பை துண்டித்தால் வெவ்வேறு எண்களிருந்து அழைப்புவரும். உனைப்பற்றிய  ஆதாரங்கள் சைபர் கிரைம் போலிஸ்வசம் ஒப்படைக்கப்படும்

 

ரா: பயமுறுத்துறியா, நேர்ல வாடா, நேர்ல வா (பதற்றத்தோடு)

 

பெயரிலி: இணையத்தில் நீயொரு தகவல் ஊடுறுவி, பித்தலாட்டக்காரன்

 

ரா: (பீதியில்) உனக்கென்ன வேணும் பணந்தானே

 

பெயரிலி:  உனது நடத்தையில் மாற்றமேற்படாவிட்டால் எதிர் வரும் ஒரு நாளில் தற்செயலான விபத்தினால் இப்பூவுகிலிருந்து அப்புறப்படுத்தப்படுவாய்

 

இணைப்பு துண்டிக்கப்பட்டது

 

ரா : அழைத்த எண்ணை

True Caller- ல் ஆராய்ந்ததில் Andromeda Galaxy  எனக் காட்டியது

                                                                                                                                       சேலம் வினுப்ரியாவிற்கு…

 

பள்ளி மாணவனை பாலியல் வன்புணர்வு எனும் குற்றச்சாட்டை முன்வைத்து குற்ற விசாரணை

*[ நிகழ்ந்தேயிராத நிகழ்வுகள் ]

 

(சிகரெட் புகைத்தவாறிருக்கும் அரேபிய காவல்அதிகாரிகளின் கேள்விகளை மொழிபெயர்ப்பாளினி சங்கோஜத்துடன் எனைநோக்கி தமிழில் வினவினாள்.)

 

“A” என்கிற மாணவன் உனது வகுப்பிலிருப்பவனா?

அவனுடனான உனது உறவு எத்தகையது?

ஆசிரியர்கள்மீது “A”யின் பெற்றோர்கள் அளித்த குற்றச்சாட்டின்பேரில் இவ்விசாரணை

பள்ளியின் கழிவறையில் அந்த மாணவனின் ஆடைகளை களையச்சொன்னீர்களா?

மறுத்த அம்மாணவனை சிகரெட் லைட்டரால் சுட்டீர்களா?

அடுத்த கேள்விக்கு அவள் முகம் இருண்டது

 

உங்களிடமிருந்த பதமான கத்தியால் “A”யின் உடலில் ரத்தம்வழிய கீறி மகிழ்ந்ததுண்டா?

கம்யூட்டர் அறையில் கணினிஆசிரியன் “A”யை வன்புணர்ச்சி செய்ததற்கு நீ உடந்தையா?

அவளால் மேற்கொண்டு கேட்க இயலவில்லை

கண்ணுக்குத் தெரியாத ஏதோ என்னை அங்கு அமர்த்தியது போல

கட்புலனாகும் எதுவோ அவளை அங்கே இருக்கச்செய்தது

 

சீசா புகைக்கும் நீண்டகுழாயை கம்யூட்டர் ஆசிரியன் “A”யின் ஆசனவாயில் நுழைத்ததை பார்த்தாயா?

அபாண்டமான பழியனைத்தும் ஆறாத வடுவாகின்றன

வழியும் கண்ணீர்கோடுகளை துடைத்தவாறு மொழிபெயர்ப்பாளினியும்

நானும் அறையைவிட்டு அகன்றோம்

இப்போது கம்யூட்டர் ஆசிரியன் அறைக்குள் செல்கிறான்

அடுத்து இசையாசிரியன் அதையடுத்து உடற்பயிற்சி ஆசிரியன்

 

விசாரணைக்குப்பின்

எங்களுக்கான தண்டனையை இறுதிசெய்யும்

“A”யின் உடற்பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்

 

ஒருவரையொருவர் பார்த்தபடி

அவரவர் எதிர்கொண்ட கேள்விகளை

பகிர்ந்து கொள்கிறோம்

உண்மையின் இன்னொருபக்கம்

கம்யூட்டர் மற்றும் கழிப்பறைகளில் இருப்பதாக

கடவுளே அதற்கு சாட்சியென

கூவியழைக்கிறோம்

 

புகைமூட்டமான அந்தஅறையில்

வட்டமான மேசையை சுற்றிலும் அமர்ந்தபடி

கம்யூட்டர் ஆசிரியனை வினவுகிறோம்

 

“நாங்களறியாது சீசாபுகைக்கும் நீளமான குழாயை

கம்யூட்டர் அறையில் எங்கே மறைத்து வைத்திருக்கிறாய்?”

 

MRI ஸ்கேனும் சில கடவுள்களும்

 

MRI – ஸ்கேன் அறையின் முன்

 

சக்கர நாற்காலியில் அவ்விளைஞன்

 

விழிப்பாவைகள் இமைகளுக்குள்

 

நெற்றி முழுவதும் குங்குமமும நீறும்

 

மூக்குத்துவாரங்களில்

மூச்சு-இரைப்பை குழாய்

 

இடுப்பிலிருந்து

சிறுநீர் சேகரிக்கும்

வடிகுழாயோடிணைந்த பை

 

தாய் திருஷ்டி கழிக்க

தந்தை கண்ணீரோடு முத்தமிட

 

உடம்புல தாயத்து மோதிரம் சாமிடாலர் எல்லாத்தையும் கழட்டுங்க என்கிறாள் தாதி

 

இடுப்பு கழுத்து கைகளில்

இருந்து கழற்றப்பட்ட

தெய்வங்கள் மேசை மீது

நாற்காலி ஸ்கேன் அறைக்குள்

 

மேசை மேலிருந்த கடவுள்கள் ஒருவரையொருவர் ஏசியும் குற்றம்சாட்டியும் கொள்கின்றனர்

 

இறுதியில் அவர்கள் பதிவு

செய்த வன்மையான கண்டனங்கள் வருமாறு

1) இளைஞனிடமிருந்து தாங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது.

2) எதிரில் நிற்கும் பெற்றோரை பார்த்து சகிப்பது

 

3) MRI- அறைக்குள் அனுமதிக்கப்படாதது

 

4) ஒட்டுமொத்தமான தங்களின் கையாலாகாத்தனத்துக்கு

2 comments for “பாம்பாட்டி சித்தன் கவிதைகள்

  1. றாம் சங்கரி
    September 2, 2016 at 5:30 am

    Superb. நல்ல வாசிப்பு அனுபவம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...