- கவிதை எழுத அடிப்படை பயிற்சியாக எதைச் சொல்வீர்கள்?
- சுகுமாறன் , மலேசியா
இருப்பதிலிருந்துதான் எடுக்கிறோம். எனவே அவசியமான அடிப்படைப் பயிற்சி என்பது ஏற்கெனவே உள்ள எழுத்துகளை வாசிப்பது என்பதுதான். நாம் வாசித்த வார்த்தைகள், வரிகள் அவை உருவாக்கிய படிமங்கள், எல்லாம் நம் மனக்கிணற்றில் தொலைந்துபோன பொருட்கள்போல ஆழ்ந்து முழுகிக்கிடக்கும். நம் மனதில் உதித்த ஒரு பொறியைக் கவிதையாக எழுத அமரும்போது, அந்த மனக் கிணற்றை அகழும்போது இவையெல்லாம், எதிர்பாராத விதமாக ஒட்டு மொத்தமாகக் கூடவே வெளிவரும். இவை இரண்டு வகையில் உதவும். ஒன்று தேவையானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இன்னொன்று ஏற்கெனவே சொல்லப்பட்டவையாக இருப்பவற்றைத் தவிர்த்து விடலாம். ஒரு கவிதை தன் முதல் வடிவத்திலேயே முழுமையை எட்டி விடாது. திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடலாம். செப்பனிட வேண்டும். அதற்கும் வாசிப்பு பயன்படும்.
காலந்தவறிய வசந்தம்
”நேரங்கழித்துக் குளிக்கின்றன
மரத்தடியில் சிந்திய மலர்கள்
மழை பெய்கையில்”
என்கிற என் ஆரம்ப காலக் கவிதை ஒன்றின் இந்த வார்த்தைக் கூட்டம் எனக்கு வந்து சேர, நான் ஒரு ஹைகு தொகுப்பு முழுக்க (ஆங்கில மொழிபெயர்ப்பு) வாசிக்க வேண்டியிருந்தது என்றால் மிகையில்லை
- தற்போது தாங்கள் முகநூலில் அதிகம் எழுதுகிறீர்கள். அவை உங்களது முந்தைய கவிதைகள் போல இல்லை. நீங்கள் அவற்றை கவிதை என்ற பிரக்ஞையில் எழுதுகிறீர்களா? அல்லது பொழுதுபோக்காகவா?
- மனோகரன், சிங்கப்பூர்
”நீங்கள் உங்கள் மொழியுடன்
அளவளாவிக் கொண்டிருங்கள்
எனக்கும் நிழல்களுக்கும்
சூரியனை மேற்கே
கொண்டு போய்ச் சேர்க்கும்
வேலையிருக்கிறது”
பொதுவாக ஒரு எழுத்தாளன் மொழியுடன் ஓயாது பேசிக் கொண்டிருப்பவன். ஆனால் இதில் சற்றே அசாதரணம் கலந்திருக்கும். அதனால் சாதாரணனை விட மேம்பட்டவன் படைப்பாளி என்று அர்த்தமில்லை. ஒரு நல்ல சஹிருதயன் – சக இருதயன் – கிடைத்தால் மகிழ்ச்சியாக உரையாடுவான். தனிமையில் அவனுக்கு வாசிப்பதும் எழுதுவதுமே துணை. சாதாரணனும் பேசிக்கொண்டே இருப்பவன்தான். அது வெறும் அரட்டை. மொழியுடன் பேசுவதில் கவிஞனுக்கு ஒரு வேலை / நோக்கம் இருக்கிறது. அது வெறும் அளவளாவுதல் அல்லது பொழுதுபோக்கு மட்டும் அல்ல, முகநூல் வந்தபின் என்னைப் போன்ற சில தனியர்களுக்கு அது ஒரு பகிர்வு மேடையாக அமைந்தது. அதனால் அங்கே அதிகம் எழுதுகிறேன். என் மனதைப் பகிர்ந்து கொள்கிறேன். அதில் எழுதுவதெல்லாமுமே கவிதையல்ல. அல்லவே அல்ல. மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதை முகநூலில் என்னால் எழுதப்பட்டதுதான். பலராலும் பாராட்டுப் பெற்றது. இப்படிக் கவனம் பெறும் சிலவற்றையே நான் தொகுப்பில் சேர்க்கிறேன். சமீபமாக ஒன்று:
“அவனால்
இன்னொரு தோளில்
இன்னொரு பிணத்தையும்
சுமக்க முடியும்
சாகத் தயாராக இருக்கிறாரா கடவுள்..”
இது ஒரு துயரச் சம்பவம் சார்ந்த ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு. இதை அந்த நொடியில் எழுதி அந்த நொடியிலேயே பிரசுரிக்கையில்தான் அதிக உயிர்ப்பும் வலியும் இருக்கும்.
- நீங்கள் செய்த தொழில் உங்கள் படைப்பின் மனநிலையை பாதித்ததுண்டா?
- அமீர், பினாங்கு
இல்லை. நான் வங்கியில் எழுத்தராக, காசாளராகப் பணி புரிந்தேன். வங்கியில் வேலைகள் தேங்க வாய்ப்பில்லை. அதனால் அன்றன்றைய வேலை முடிந்ததும் ஒருசுதந்திரவானாகி விடுவோம். அது எழுத, படிக்க, உரையாட வசதியாகவே இருந்தது.பல குணாதிசயங்களை வாடிக்கையாளர்கள் வடிவில் நிறையச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது கூடுதல் உதவியாகவே இருந்தது.
- இப்போதுதான் கவிதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். நான் வாசிக்கவேண்டிய முக்கியமான கவிஞர்கள் என்று யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்? இன்றைய தலைமுறையில் நான் யாரை வாசிக்க வேண்டும்?
- சூர்யா, கிள்ளான்.
தமிழ் நவீன கவிதைக்கு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுப் பாரம்பரியம் ஆகி விட்டது. ந.பிச்சமூர்த்தியில் ஆரம்பித்தாலும் சுமார் 80 ஆண்டுகள் ஆகிறது. இதில் சாதனையாளர்கள் பலர் இருக்கிறார்கள். திசை திருப்பியவர்கள்- Trend Setters – என்று பிரமிள், நகுலன், எஸ்.வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், அ.யேசுராசா, கல்யாண்ஜி, கலாப்ரியா, தேவதேவன்,தேவதச்சன், பிரம்மராஜன், ஆத்மாநாம்,விக்கிரமாதித்தன், ராஜ சுந்தரராஜன், சமயவேல், ரமேஷ் பிரேம், மனுஷ்ய புத்திரன் என்று ஒரு வரிசை இருக்கிறது. இது 90-களுக்கு முந்திய கவிஞர்கள். கடந்த கால் நூற்றாண்டாக தமிழ்க் கவிதையில் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்திருக்கிறது. கரிகாலன், க.மோகனரங்கன், பாலைநிலவன், அழகியபெரியவன், சல்மா, குட்டிரேவதி, தேன்மொழிதாஸ், சங்கர ராமசுப்ரமணியன், பிரான்சிஸ் கிருபா,மாலதி மைத்ரி, சுகிர்தராணி, முகுந்த் நாகராஜன், கண்டராதித்தன் என்று பலர் இருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் றியாஸ் குரானா, லீனா மணிமேகலை, இசை, இளங்கோ கிருஷ்ணன், கதிர்பாரதி, நரன், சபரிநாதன், நேசமித்திரன், போகன் சங்கர், லிபி ஆரண்யா, அனார் என்று பட்டியல் நீளும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பான கவிதைகளைத் தேர்ந்து வாசிக்க வேண்டும் என்றால் அ.ராஜமார்த்தாண்டன் தொகுத்த 90க்கு மேற்பட்ட கவிஞர்களின் தொகை நூலான “கொங்குதேர் வாழ்க்கை -2 ”- தமிழினி பதிப்பகம்-சென்னை, என்ற நூலை வாங்கிப் படிக்கலாம். அது எளிது. அதற்குப் பின்னால் உள்ளவர்களையும் எளிதில் அணுக, ‘செல்வராஜ் ஜெகதீசன்’ தொகுத்த ”கவிதையின் கால்தடங்கள்” டிஸ்கவரி புக் பாலஸ்- சென்னை, என்கிற நூல் உதவும்.
- இன்றைய நவீன கவிதைகள் நிறையப் புரியவில்லை, புரியவேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்? தமிழ்நாட்டுக் கவிஞர்கள் ஏன் இப்படி வாசகனுக்குப் புரியாமல் எழுதுகிறார்கள்?
- சரவணன், சிராங்கூன் ரோட்.
கவிதை புரியவில்லை என்பது ஒரு பழமையான குற்றச்சாட்டு அல்லது வாசகனின் உண்மையான ஆதங்கம். அதில் நியாமில்லாமல் இல்லை. கவிதையை எப்படி வரையறை செய்ய முடியாதோ அதேபோல கவிதையின் புரியாத்தன்மை அல்லது இருண்மை (Obscurity) குறித்து, ஒப்புக் கொள்ளும்படியாக விளக்க இயலாது. நம் கனவுகளின் விசித்திரத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறதா, நம் கனவு ஒன்றைப் புரிந்து கொள்ளுவதற்கு அதில் ஏதேனும் ஒழுங்கு இருக்கிறதா. ஒரு கனவை அப்படியே கவிதையாக்கினால் – அது உங்களுடைய கனவே என்றாலும்- அதில் புரியாத்தன்மை இருக்கத்தானே செய்யும். சில கவிதைகள் இத்தன்மையில் எழுதப்படுகின்றன. இது ஒரு வகை Auto poetry. வாழ்வின் புரியாத்தன்மை கலைஞனுக்கு இப்படி ஒரு பார்வையை வழங்கி விடுகிறது.
பிக்காஸோவின் ஓவியங்களில் – குறிப்பாக அவரது பிரபலமான Guernica ஓவியம்- தலை வேறு, கால் வேறு, கை வேறாக உருவங்கள் சிதைந்து கிடப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஏன் அப்படி? முந்திய அனுபவங்களின் மூலம் நாம் திருத்தி அமைக்கும், ஒரு சமூக ஒழுங்குக்கு உட்பட்டு நகரும் வாழ்க்கையை, புதிய சமூக நிகழ்வுகள் மீண்டும் சிதைத்து விடுகிறது. உதாரணமாகப் போர்.
War: a massacre of people who don’t know each other for the profit of people who know each other but don’t massacre each other.- என்கிறார் Paul Valery என்ற பிரெஞ்சுக் கவிஞர்.
ஒரு சாதாரணப் பிரஜைக்குத் தேவையில்லாமலும் சம்மதமில்லாமலும் அவன் வாழ்வில் திணிக்கப்படுகிறது போர். அது மட்டுமல்ல அணு உலை போன்ற அழிவுக் கண்டுபிடிப்புகள், நாடுகளுக்கிடையேயான நேரடிப் போர் தவிரவும், அவைகளுக்கிடையேயான பனிப் போரினால் உருவாக்கப்படும் இன அழிப்புப் போர்கள், திசைமாறும் போராளிகளின் மாஃபியாக் கலாச்சாரம் எனப் பல நினைத்தே பார்த்திராத புதிய நிகழ்வுகள் வாழ்க்கை ஒழுங்கை சிதைத்துக்கொண்டே இருக்கின்றன. காரணம் புரியாத இந்தச் சிதைவுகள் கலைஞனையும் அவனது சிந்தனைகளையும் மூர்க்கமாகக் கலைத்துப்போடுகிறது. அப்போது புரியாத் தன்மையுடனான படிமங்கள் உருவாகின்றன. எழுதும் கவிதை வரிகள் ஒழுங்கற்றுக் கலைந்து கிடக்கின்றன. அதைக் கலைஞன் தாளிலும் ஓவியத் திரையிலும் கற்களிலும் தீட்டுவதன் மூலம், தன் மூளையை சமனப்படுத்த முயற்சிக்கிறான். இதையே இருண்மை பற்றிப் பேச வரும்போது
The mind can be trained to relieve itself on paper – என்கிறார் Billy Collins.
புரியாத கவிதை வேண்டுமென்றே செய்யப்படுவதில்லை, தமிழ்க் கவிதையில் மட்டுமல்ல, உலகம் பூராவும் எல்லா மொழிகளிலும் நடைபெறுகிறது. இப்படியெல்லாம் ‘விளக்கு’வதன் மூலம் எனக்கு எல்லாம் புரிந்து விட்டன என்று அர்த்தமில்லை. என்க்குப் புரியாதவை நிறையவே இருக்கின்றன. மீண்டும் மீண்டும் வாசிப்பதே இதனைப் புரிந்து கொள்ள வழி. முதன் முறையாகப் புரிந்ததும் முந்தைய முயற்சிகளை மறந்து விடுங்கள். மறந்து விடுவீர்கள்.
A motto I adopted is if at first sight you don’t succeed hide all evidence that you have tried
என்கிறார் Steven Wright.
- கண்ணதாசன், வாலி போன்றவர்களை நீங்கள் கவிஞராக ஏற்றுக் கொள்வீர்களா?
- சந்தோஷ், மலேசியா.
கண்ணதாசனில் சலித்து எடுத்தால் நாம் தேடுகிற கவிதைகள் சில கிடைக்கும் வாலியிடம் நிறையச் சலிக்கவேண்டும். திரையிசையைப் பொறுத்தவரை இருவருமே நல்ல கவிஞர்கள். அதிலும் கண்ணதாசனுக்கு வாலியே ஒத்துக்கொள்ளும் உயரிய இடத்தை வழங்குவேன்.
- பசுவய்யாவின் கவிதைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
- கணேசன், சென்னை.
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவர். சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் சோதனை முயற்சியாக புதுக்கவிதைகள் வந்தபோது தனித்து விளங்கியவர். பின்னர் சிறிது காலம் ஓய்வெடுப்பிற்குப் பின்,
“ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கல் அல்ல பதுங்கல்…”
என்று கூறிக்கொண்டு மறுபடியும் வீறுகொண்டு எழுந்தவர். செறிவும் இறுக்கமும் மிகுந்த கவிதைகளை எழுதியவர். அவர் எதிலுமே ஒரு திருத்தமான வடிவை எதிர்பார்ப்பவர் – அதாவது அவர் ஒரு Perfectinist. அவர் கவிதைளிலும் அதைக் காணலாம். தமிழில் தன்னுடைய கவிதைகளைத் தாங்களே எழுதியவர்கள் என்று- அதாவது யாரின் பாதிப்பும் இல்லாத புதியபாணிக் கவிதைகளை எழுதியவர்கள் என்று – சிலரைச் சொன்னால் அதில் முதலில் வரும் பெயர் பசுவய்யாவாகவே இருக்கும்.
- உலக கவிதைகளின் தரத்திற்கு தமிழ் கவிதை இருக்கிறதா ?
- வே.நி.சூர்யா, (திருநெல்வேலி)
உலகளாவிய வாழ்வின் கனம் என்பதும் தமிழ் வாழ்வின் கனம் என்பதும் வேறு வேறு. வாழ்வின் அழுந்துதலுக்கு ஏற்பவே, அரசியலுக்கு ஏற்பவே கவிதையின் வெடிப்பும் திறப்பும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
தமிழ் வாழ்வின் ஆக மொத்தப் பாதிப்பு நிறைந்த நல்ல கவிதைகள் தமிழில் நிறைய வந்திருக்கின்றன. வருகின்றன. இந்த அளவு கோலின்படி உலகத்தரத்திலான கவிதைகள் தமிழில் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
- தமிழ்க்கவிஞர்கள் கவிதை கோட்பாடுகளைப் பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது போன்ற ஒரு பிம்பம் இருக்கிறதே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- வே.நி.சூர்யா, (திருநெல்வேலி)
கோட்பாடுகள் குறித்து சிலருக்கு நல்ல புரிதல் இருக்கிறது. கோட்பாடுகள் குறித்த பிரக்ஞை (மட்டும்) மேலும் அதிகமான சிலருக்கு இருக்கிறது. எல்லோருக்கும் இவை இருக்கிறது என்று சொல்லமுடியாது. என்னைப் பொறுத்து, படைப்பாளி கோட்பாடுகள் குறித்த அநாவசிய மெனக்கெடலில் கவிதையைக் கோட்டை விட வேண்டாம் என்றே நினைக்கிறேன்.
Serious minded people have few ideas. People with ideas are never serious என்று சொல்கிற பால் வலெரியைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன். ஆனால் கண்டிப்பாக, தான் எழுதுவது கவிதையாக இருக்கவேண்டும் என்ற அடிப்படைப் பிரக்ஞை ஒரு கவிஞனுக்கு வேண்டும்.
- கவிதைப் பிரதியை விமர்சனம் செய்தல் என்பதற்கு ஏதாவது வரைமுறை உண்டா?
- வே.நி.சூர்யா, (திருநெல்வேலி)
கவிதைப் பிரதியை விமர்சனம் செய்தல் என்று எடுத்துக் கொள்கிறேன். விமர்சனக் கோட்பாடு சார்ந்து சில வரையறைகள் இருக்கலாம், வரைமுறைகள் இல்லை என்றே நினைக்கிறேன். அதற்காக விமர்சன மேதைமையைக் காட்டுகிறேன் என்று படைப்பாளியைக் காயடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
- நவீன ஓவியங்கள் மற்றும் நவீன கவிதை இந்த இரண்டிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறது என நினைக்கிறீர்களா ?
- வே.நி.சூர்யா, (திருநெல்வேலி)
இரண்டுமே ஆழ்மனப் படைப்பு என்ற வகையில் தொடர்பு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஒன்றுகொன்று சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்பவை. இரண்டுமே அறிவின் விளிம்பில் நின்று நுனிப்புல் மேய்பவரை மறுப்பவை.