‘கபாலி’ திரைப்படத்தின் கடைசி காட்சி. இரு மாணவர்கள் கபாலியிடம் பேசும்போது சொல்வார்கள் “அவன் எஸ்.பி.எம்ல ஃபெயில் ஆயிடுவான். ஆனால் நான் எல்லா பாடத்திலும் பாஸ் பண்ணினாலும் கடனாளியாகியே கல்வி கற்க முடியும். பெய்ல் ஆவுற அவனுக்கும் எனக்கும் பெரிய வித்தியாசமில்ல…” இந்த வசனம் நாட்டின் பல இடங்களிலும் ஒலித்தது. மலேசியத் தமிழ் மாணவர்கள் என்னதான் கல்விக்கற்று சிறப்புத்தேர்ச்சி பெற்றாலும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் விளைவாக தனியார் கல்லூரிகளிலும் வெளிநாடுகளிலும் கற்க கடனாளிகளாவதையும் இக்காட்சி சர்ச்சையாக்கியது. வழக்கம்போல சர்ச்சை அடங்கியப்பின் அவரவர் மௌனமாக இருந்துவிட்டனர். இந்நிலையில் இக்கட்டுரை கபாலியின் கூற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் உருவானதல்ல. மாறாக, அந்த சர்ச்சை வெளிநாட்டுத் தமிழர் மத்தியில் ஏற்படுத்திய மலேசியக் கல்விச்சூழல் குறித்த வினாக்களுக்கு வழங்கப்படும் எளிய பதிலும் அறிமுகமே.
உலகளாவிய கல்விச்சூழலில் மாணவர்கள் தங்கள் புத்தகப்பையோடு சேர்த்து பெற்றோரின் எதிர்பார்ப்பையும், வருங்கால அழுத்தங்களையும் வருடாவருடம் அதிகப்படுத்திக்கொண்டே சுமக்கிறார்கள். மலேசியாவைப் பொருத்தமட்டில், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்விச்சூழலின் அழுத்தமென்பது எஸ்.பி.எம் தேர்வுக்குப்பிறகு உயர்கல்விக் கூடத்தினைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தலையெடுக்கத் துவங்குகிறது. குறிப்பாக, இந்திய மாணவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குவதை நாம் பல இடங்களில் சந்தித்தது உண்டு. அரசாங்கத் தரப்பிலிருந்து கூட இந்திய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உயர்கல்விக் கூடம் தொடர்பான ஆலோசனையை வழங்க ம.இ.கா மூலமாக உருவாக்கப்பட்ட திட்டம் “வெற்றி நிச்சயம்”. இத்திட்டத்தின் அடைவு நிலைகளை விமர்சிப்பதை விட, கல்வித்துறையின் வணிக அரசியலில் பாதிக்கப்பட்ட மாணவர்களது நிலை பரிதாபத்துக்குரியது என்பது பலரும் அறியப்பட வேண்டிய ஒன்று. மாற்று சிந்தனை என்பது காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே வருபவையென பல சூழ்நிலைகளில் நாம் அறியமுடிகிறது. ஆரம்பக்காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அரசாங்க உயர்கல்விக் கூடங்களில்தான் பயில வேண்டும் என்கிற எண்ணம், இன்றைய சூழலில் மாற்றம் கண்டுள்ளது.
பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் எல்லா விஷயங்களும் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. மலேசியாவில் கல்வி முறையும் இதில் முக்கியமாக இடம்பெறுகிறது. பலரது பார்வையைப் பொறுத்தமட்டில் எவ்வளவு விரைவாக உயர்கல்விக் கூடங்களில் மாணவர்கள் கல்வி கற்று முடிக்கிறார்களோ, அதே விரைவில் அவர்களது வாழ்க்கையிலும் நிலைத்தன்மை பெற்றிடுவார்கள் என்பது மக்களிடையே உலவும் கருத்து. எஸ்.பி.எம் தேர்வு முடித்த மாணவர்களுக்கு அடுத்தகட்ட நகர்வாகப் பல வாய்ப்புகள் இருக்கின்றன.
அரசாங்க உயர்கல்விக்கூடங்கள்
போலிடெக்னிக், மெட்ரிக்குலேஷன், தொழில் பயிற்சிக்கல்லூரி, எஸ்.டி.பி.எம், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி எனப் பல வாய்ப்புகள் இருக்கின்றன. மாணவர்களுக்கு இவ்வாறான வாய்ப்புகள் பல இருந்தும், அவர்கள் சில சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அச்சிக்கல்கள் யாதெனின் அத்துறைக்கு ஏற்ற புள்ளி முறையைக் (CGPA) கொண்டிருத்தலே ஆகும். குறிப்பிட்ட துறைக்கும் புலத்திற்கும் ஏற்ற புள்ளி முறையை (CGPA) கொண்டிருந்தாலே அவர்கள் தகுதி உடையவர்களாக ஆகிறார்கள். ஆக, மாணவர்கள் தங்கள் தேர்ச்சி நிலையை முதன்மைப்படுத்தியே எந்தத் துறையில் அவர்களுக்கான வாய்ப்பு அமைகிறது என்று நிர்ணயிக்க முடியும். அடைவு நிலைக்கு ஏற்ற துறையைத் தேர்ந்தெடுப்பதில் நாடு தழுவிய அளவில் பல இடங்களில் தன் உரையாலும் மட்டுமன்றி எழுத்தின் வாயிலாகவும், மாணவர்களிடத்தில் விழிப்புணர்ச்சியை உண்டாக்கியவர் மு.திருவேங்கடம் அவர்கள். இவருடைய “ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்” தலைப்பிலான கட்டுரைகள் வெறுமனே எழுத்தாக இல்லாமல், சமூகத்தில் மாணவர்கள் உயர்கல்விக் கூடங்களை அடைவதற்கு எதிர்நோக்கும் சிக்கல்களைப் புள்ளி விபரத்தோடு குறிப்பிட்டு அதனைக் களைவதற்கான முறையையும் குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.டி.பி.எம் தேர்வு என்பது ஒரு கடினமான தேர்வு என்கிற எண்ணம் மாணவர்களிடத்தில் பரவலாக நிறைந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பதிவுசெய்தால் நேரடியாக அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி தொடரும் வாய்ப்பு அதிகம். அதேவேளையில் இவ்வாய்ப்புக்குள் இருக்கின்ற அரசியலையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மெட்ரிகுலேசனில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்கப்படுமேயொழிய, அவர்களுக்கு வேண்டப்பட்ட துறை கிடைக்கும் என்பது சாத்தியமில்லாதது. அதைப்போலவே எஸ்.டி.பி.எம் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பல்கலைக்கழகத்துக்குச் சென்று விடலாம் என்ற முடிவுக்கும் நாம் வர இயலாது. புள்ளி அடிப்படையில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்களுக்கே வழி திறந்து விடப்படுகிறது. அதிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றுவிட்டாலும் கிடைக்கும் என்று அரசாங்க தரப்பு எந்த விதமான உத்தரவாதமும் வழங்கவில்லை. இதற்குச் சான்றாக, சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறைக்கு விண்ணப்பித்த மாணவர்களது விண்ணப்பம் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தும் நிராகரிக்கப்பட்டது. இதன் தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சரிடம் வினவியபோது கிடைக்கப்பெற்ற பதில் யாதெனின், சிறப்புத்தேர்ச்சி பெற்றிருப்பதால் மட்டும் அவர்கள் தகுதியானவர்கள் என்று அர்த்தமில்லை மாறாக மேலும் பல அம்சங்களையும் பொருத்திப் பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார். உதாரணமாக, இன்றுவரை ஒவ்வொரு வருடமும் அரசாங்கப் பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு வெளியிடுகையில் மாணவர்கள் பலர் சிறப்புத் தேர்ச்சி கொண்டிருந்தும் அரசாங்க உயர்கல்விக்கூடத்தில் சரியான துறை கிடைக்காமல் நாளிதழ்களில் தங்கள் அதிருப்தியையும் புலம்பலையும் வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். ஆக, நமக்கான வாய்ப்பும் உரிமையும் மறுக்கப்படுகின்ற இடமாக இஃது அமைகிறது.
2002 முதல் இந்திய மாணவர்களது எண்ணிக்கை அரசாங்க பல்கலைகழகங்களில் குறைந்த வண்ணம் உள்ளதை கல்வி அமைச்சே உறுதி செய்த வேளையில், இதன் காரணம் குறைந்தபட்ச தேர்வு புள்ளிகள் கொள்ளாதிருத்தலே எனப் பதிவிடுகிறார்கள். மருத்துவம், சட்டத்துறை போன்ற நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கல்வியைத் தொடர நமது இனத்துக்கான வாய்ப்பு மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படுவதை நாம் வெளிப்படையாகக் காணமுடிகிறது. 2002 முந்தைய ஆண்டுகளில் கோட்டா முறை மூலம் 10% விழுக்காடு இந்திய மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மஹாதீர் அவர்களது ஆட்சியின் போது, கோட்டா முறைக்கு பதிலாக புள்ளி அடிப்படையிலான அனுமதி (Merit system) அமலாக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. பல்லின மக்களுக்கும் சமத்துவமான கல்விச் சேவையை வழங்குவதன் நோக்கத்தோடு, புள்ளி அடிப்படையிலான நுழைவு முறை நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், 2003 முதல் அரசாங்க பல்கலைக்கழகங்களில் நம் இந்திய மாணவர்களது நுழைவு விழுக்காடு 10% லிருந்து 3-4% வரை பின்தள்ளப்பட்டுள்ளது. நமது 6% விழுக்காடு இழப்பு என்பது, மாற்று இனத்துக்கு கிடைக்கப் பெற்ற ஆதாயமாகும் என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. உள்நோக்கத்தோடு செயல்படுகிற அரசாங்கத்தால் பின்னப்பட்ட அரசியல் வலையென இதைக் கருதலாம்.
புள்ளிமுறை அடிப்படையில், அரசாங்கப் பல்கலைகழகங்களில் சீனர்களுக்கு 19% இடஒதுக்கீடும், இந்தியர்களுக்கு 4%-ம் ஒதுக்கப்பட்டுள்ளது, மீதம் இருப்பவை பூமிபுத்ராக்களுக்கே (BBC Malaysia). இனவாரியான இடஒதுக்கீடு பிரச்சனையை அறிந்தும் பல மாணவர்கள் துணிந்து எஸ்.டி.பி.எம் மற்றும் மெட்ரிகுலேசனை தங்கள் தேர்வாக கொள்கின்றனர். இன்னும் பலரோ, இப்பிரச்சனையில் ஏற்ற புலம் கிடைக்கும்வரை காத்திருப்பதை தவிர்க்க தொடக்கத்திலேயெ தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வதற்குக் காரணமாக இச்சூழ்நிலை அமைகிறது. பொதுப் பார்வையிலிருந்து அணுகினால், அரசாங்கம் கொடுக்கின்ற காக்காய் கடிக்கு ஆசைப்பட்டு காலத்தைக் கழிப்பதை விட தனியார் உயர்கல்வி நிலையங்களில் நம் மாணவர்கள் கல்வியைத் தொடர்கின்றனர்.
கிடைக்க வேண்டியவை கிடைக்காத பட்சத்தில், வேறொன்றைத் தேடிப்போகும் பொழுது அங்கு அதற்கேற்ற அரசியலும் வணிகமும் அதன் தளத்தில் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது.
தனியார் கல்லூரி / பல்கலைக்கழகங்கள்
ஆக, தனியார் பல்கலைகழகங்களைத் தேர்ந்தெடுப்பதில் ஆழமான சிந்தனையுடன் அதன் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். நம் நாட்டில் மொத்தம் 20 அரசாங்கப் பல்கலைக்கழகங்களும், 53 தனியார் பல்கலைக்கழகங்களும், 6 வெளிநாட்டு பல்கலைக்கழகக் கிளைகளும், சீராகச் செயல்படக்கூடிய 403 தனியார் கல்லூரிகளும், 30 போலிடெக்னிக்குகளும், 73 தொழிற்பயிற்சி கல்விக்கூடங்களும் உள்ளன, என்று (Study Malaysia.com) செய்த கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் உயர்கல்விக் கூடங்களைத் தேர்ந்தெடுப்பதில் MQA (Malaysian Qualifications Agency) அனுமதிச் சான்றிதழ் முக்கியமானதாக அமைகிறது. போதனை முறை, கல்வித் தரம், மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன சலுகைகள், இவை யாவையும் கருத்தில் கொண்டே சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இருப்பினும் அனைத்துலகக் கல்லூரி என தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் கல்லூரிகள் பல கடைவீடுகளில் நடத்தப்படுவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பல மலிந்து கிடக்கும் வேளையில், தேர்ச்சி பெற்றோரும், தேர்ச்சி பெறாதவரும் கல்வி தொடர முடியும் என்கிற நிலை ஒன்று உருவாகியுள்ளது. பணம் இருந்தால் யாவும் சாத்தியமே என்கிற அவலத்தினை தனியார் உயர்கல்விக் கூடங்கள் சில வழிநடத்தி செல்கின்றன. வளமான கல்விமுறையை வளர்க்கும் நோக்கத்தினை விடுத்து, வணிகமயமான சூழல் உருவாகியிருப்பதை தனியார் உயர்கல்விக் கூடங்கள் தெளிவாக காட்டுகின்றன. பணநோக்கத்தோடு செயல்படுகின்ற பல இடங்களில் நம் மாணவர்கள் பலியாகின்ற அனுபவம் பரிதாபத்துக்குரியவை.
அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், தனியார் பல்கலைக்கழக மாணவர்களுகும் பலதொடர்புகள் உள. இரு தரப்பினரும் கல்வி கற்று முடிக்கையில், வெளியுலகிற்கு பட்டதாரி என்கின்ற பரிமாணத்திற்கு முன் அவர்கள் கடனாளியாக வெளிப்படுகிறார்கள். கல்விக் கடன் உதவி (PTPTN)) மூலம் உயர்கல்விக் கூடங்களில் கல்விகற்ற பின், கடனை திரும்பச்செலுத்தும் கடனாளியாக உருவாகிறார்கள். அதிலும் தனியார் பல்கலைகழக மாணவர்கள் அதிகம். சராசரியாக ரிம 35,000 முதல் ரிம 100,000 வரை செலுத்த வேண்டிய கடனாளிகளைத் தனியார் கல்விக் கூடங்கள் உருவாக்குகிறது.
மலேசியக்கல்வி முறையையும் அதன் தரத்தையும் உலகளாவிய நிலைக்கு வித்திடுகிறோம் என்கிற நாமகரணத்தின் மூலம் அரசாங்கம் பல வெளிநாட்டு மாணவர்களை உள்நாட்டில் கல்வி தொடர்வதற்கு அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது. 2015ஆம் ஆண்டில் சுமார் 150,000 வெளிநாட்டு மாணவர்களை சர்க்கார் அனுமதித்துள்ளது (Study Malaysia.com). வெளிநாட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் உள்நாட்டு இந்தியர்களுக்கு கொடுக்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றாலும் அதில் அரசியல் நோக்கம் மறைந்திருப்பதை அறிய முடிகிறது. வெளிநாட்டு மாணவர்களது அனுமதியினால் வெளிநாட்டு நட்புறவு இங்கு வலுப்பெறுகிறதோடு அந்நிய முதலீட்டாளர்களையும் நம் நாட்டுக்குள் வரவேற்கச் செய்கிறது. உலகமயமாக்குதல் மூலம் அந்நிய முதலீட்டாளர்களை கல்வித்துறை வழியே பல தனியார் உயர் கல்விகூடங்களை உருவாக்கத் தூண்டுகிறது அரசாங்கம். இங்கு பாதிப்புறுவது ஆரம்பத்தில் கல்வித்துறையில் இனவாரியான இடஒதுக்கீடு பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களே.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை இனத்தவர்கள் அதிகமாக தனியார் கூடங்களில் கல்வி தொடர்வதில் முக்கியமான பங்கு இடஒதுக்கீடு பிரச்சனையில் கைகழுவிவிடும் போக்கினால்தான். கல்வித்துறையைப் பகடைக் காயாக வைத்து சதுரங்கம் ஆடும் வேடதாரிகள் நம் நாட்டில் பலர் உள்ளனர். அரசாங்கத்துடைய பல்கலைக்கழக அனுமதி வாய்ப்பு மறுத்தலுக்கும், மலிந்து வரும் தனியார் உயர்கல்விக் கூட எண்ணிக்கைக்கும் ஒரே பொதுநோக்குச் சிந்தனை வணிக அரசியல்தான்.
மேற்கோள்:
- Kementerian Pendidikan Tinggi – Institusi. (n.d.). Retrieved from https://www.mohe.gov.my/ms/institus
- B Nantha Kumar. (2013, June 23). ‘Govt being unfair on matriculation intake’ | Free Malaysia Today. Retrieved from http://www.freemalaysiatoday.com/category/nation/2013/06/23/govt-being-unfair-on-matriculation-intake/
- J., Parkinson, J. and Saniman, R. (2004). Growth and Ethnic Inequality Malaysia’s New Economic Policy, Utusan, Kuala Lumpur.
- Education system quota abused – Malaysiakini. (n.d.). Retrieved from https://www.malaysiakini.com/letters/81827
L. சிவராஜ்
//பல கடைவீடுகளில் நடத்தப்படுவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் பல மலிந்து கிடக்கும் வேளையில், தேர்ச்சி பெற்றோரும், தேர்ச்சி பெறாதவரும் கல்வி தொடர முடியும் என்கிற நிலை ஒன்று உருவாகியுள்ளது. பணம் இருந்தால் யாவும் சாத்தியமே என்கிற அவலத்தினை தனியார் உயர்கல்விக் கூடங்கள் சில வழிநடத்தி செல்கின்றன.// சிறப்பு. நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.