ஆணாயிருந்தாலும் சரி பெண்ணாயிருந்தாலும் சரி பதினைந்து வயதில் பெரும்பாலும் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அதுதான் பெற்றோரிடமிருந்து பிள்ளைகள் விலகும் பருவம். குழந்தைமை மறைந்து வாலிபம் முளைத்தெழும் வயது. சனீஸ்வரன் ஏழரை ஆண்டுகள் பிடிப்பான் என்பார்கள். உண்மையில் பதினைந்திலிருந்து இருபத்தைந்து வயது வரை எல்லோரையும் பிடிக்கிறான். தீவிரமான மனநிலையை உருவாக்கக்கூடிய பத்தாண்டுகள். எல்லோருமே இந்தக் கடினமான காலத்தைத் தாண்டி வந்திருந்தாலும் பிள்ளைகளை வழிநடத்தும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாய் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் கூச்சம் காரணமாக பிள்ளைகள் ஒதுங்குவதையே விரும்பக்கூடும். நம்முடைய கலாச்சாரப்படி இது இன்னும் கடினமாகிறது. முப்பது வயதில் மணமுடிக்கும் பையன் அடுத்த பதினைந்தாண்டுகளை எப்படிக் கடப்பான் என்பதற்கு நாம் எதுவும் கற்றுத்தருவதில்லை.
நான் காதலிக்க ஆரம்பித்தது என்னுடைய இனிய பதினாறாவது வயதில். அவள் வீடும் நாங்கள் இருந்த தெருதான். எனக்கு நேரே மூத்தவர்கள் 4 பேர். யாருக்கும் திருமணமாகவில்லை. உலகமே அழகாய்த் தெரிந்த சமயம். எனக்கு யாரிடமும் சொல்லத் தெரியவில்லை. காதல் அப்படியே என்னைத் ததும்ப வைத்தது. உயிர் ததும்பி நிற்பதை அணுவணுவாய் உணர்ந்துகொண்டிருந்தேன். அதற்கு முன்புவரை வெளிநோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த மனது, எனக்குள் திரும்பியது. அவள் என்னும் ஒற்றைப் புள்ளியில் தியானித்து நின்றது. காதலைப் பகிர வேண்டுமானால் காதலித்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பன் வேண்டும். அப்படி இல்லையெனில் பகிர்வதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் என்னுடைய டைரியில் தோன்றுவதையெல்லாம் எழுதிக்கொண்டிருந்தேன். அவளுடன் ஒருவார்த்தையும் பேசியதில்லை. அதற்கான தைரியம் இல்லை. ஆனால் அவளுக்குத் தெரியும். அவள் தினமும் எனக்காக என்னைப் பார்ப்பதற்காக வந்து நிற்கிறாள் என்பது எனக்கும் தெரியும். அவளுக்கு என்னைவிட ஒருவயது குறைவு. இருவருமே காமர்ஸ் குரூப். அவள் அம்மாவை விட்டு அவ்வப்போது என்னிடம் நோட் வாங்கிச் செல்வாள். திரும்பக் கொடுக்கையில் ஏதாவது எழுதியிருக்கிறாளா என்று ஒரு வரிவிடாமல் தேடுவேன். ம்ஹூம். அப்படியே அவள் தொட்ட என்னுடைய நோட்டை நெஞ்சோடு வைத்துக்கொண்டு படுத்திருப்பேன். என்னைப்போல நிறைய ஜீவன்கள் இந்தக் காலகட்டத்தை இதைப்போலவே தாண்டிவந்திருக்கக் கூடும். அப்போதெல்லாம் இளையராஜா இசைதான் உணர்வை அப்படியே வரித்தெடுக்க உதவியது.
ஒருமுறை நான்குநாட்கள் வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. எப்போதும் அவள் நினைவாகவே இருக்க யாருடனும் பேசாது தனியே சுற்றிக்கொண்டிருந்தேன். எப்போது ஊருக்குத் திரும்புவோம் என்று நிமிடங்களை அசைத்துக் கொண்டிருந்தேன். தெருவுக்குள் நுழைந்ததும் அவள் வழக்கமாய் நிற்கும் இடத்தைத்தான் பார்த்தேன். அவள் இல்லை. அன்று இரவு வெகுநேரம்வரை வரவில்லை. சாயங்காலத்திலிருந்து வாசலிலேயே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அம்மா ரொம்ப நேரமாய் சாப்பிடக் கூப்பிட்டுக்கொண்டிருந்தாள். எங்கள் வீட்டில் பேசுவது அங்கே கேட்கும். கடைசியாய் ஒன்பதரை மணிக்கு கையில் தட்டுடன் அவள் வீட்டுப்படியில் நின்று என்னைப் பார்த்தாள். வாயில் ஒரு விள்ளலை எடுத்து வைத்தாள். பின் உள்ளே சென்றுவிட்டாள்.
இந்தப்பாடலில் காதலியைப் பிரிந்து பொருள்தேடிச் செல்கிறான் காதலன். பிரிந்து ஒருநாள் கூட ஆகவில்லை. பித்துப்பிடிக்கச் செய்யும் மாலை கடந்து குளிர்ந்த இரவு வருகிறது. நேற்று நடந்ததை எண்ணி மருகுகிறான்.
எத்தனை வருந்தத்தக்கது; என்னதான் செய்ய
ஊர் மன்றம் கண்ணுக்குத் தெரியாது மறைகிறது
மரங்கள் இருப்பதுகூடத் தெரியாதபடி
இரவு சூழ்ந்தது
புலியென முழங்கும் செவ்வரி ஓடிய கண்கொண்ட ஆண்கள்
அயலூரில் ஆவினங்கள் கவர்ந்து
கையில் தீப்பந்தம் ஏந்தி அம்புடன் இரவில் ஊர் நுழைகின்றனர்
அவர்கள் கத்தியெழுப்பும் கூச்சல் தூரத்துப் பாதை வரை கேட்கும்
அத்தகு பாதைகள் கொண்ட தேசங்கள் பல கடந்து
பெற அரிதான பொருள்தேடிச் சென்றவனே
புள்ளி புள்ளியாய் குத்திய பச்சையும்
பொறிப் பொறியாய் விழுந்த அழகிய சுணங்கும்
ஒளிரும் அணிகளும் அணிந்த மகளிர் மூன்றாம் பிறையைத் தொழும்
வருத்தும் மாலை, நாங்கள் இங்கே தனித்திருக்க
இன்னும் காலம் தாழ்த்துவாயில்லையா, பெருந்தன்மையுடையோனே
என்று குறிலும் நெடிலுமாய் ஊடல் மொழியோடு
நேற்று இனிதாயும் மொழிந்த
காதலியைக் கொண்ட நல்ல ஊர் இது.
குறிப்பு: மூன்றாம்பிறையை வணங்கும் வழக்கம் முன்பு இருந்திருக்கிறது. மூன்றாம் பிறை என்பது வளர்பிறை தேய்பிறை இரண்டிலும் வருகிறது என்றாலும், வளர்பிறையை மட்டும்தான் கணக்கெடுப்பார்கள். அருணகிரிநாதர் இயற்றிய மயில் விருத்தத்தில் இப்படி வருகிறது “ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.”.
பாடல்:
இயற்றியவர் – எயினந்தை மகன் இளங்கீரனார்.
திணை – பாலை
அளிதோ தானே எவன் ஆவது கொல்
மன்றும் தோன்றாது; மரனும் மாயும்
’புலி என உலம்பும் செங்கண் ஆடவர்,
ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர்,
எல் ஊர் எறிந்து, பல் ஆத் தழீஇய
விளி படு பூசல் வெஞ்சுரத்து இரட்டும்
வேறு பல் தேஅத்து ஆறு பல நீந்தி,
புள்ளித் தொய்யில் பொறி படு சுணங்கின்
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம்
புல்லென் மாலை, யாம் இவண் ஒழிய,
ஈட்டு அருங்குரைய பொருள் வயின் செலினே,
நீட்டுவிர் அல்லிரோ, நெடுந்தகையீர்? என,
குறு நெடு புலவி கூறி, நம்மொடு
நெருநலும் தீம் பல மொழிந்த
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே.!
சூப்பரா இருக்கே யார் இந்த பால கருப்பசாமி
நன்றி தியாகராஜன். பாலா கருப்பசாமி தமிழகத்தைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் வசிக்கிறார். நல்ல வாசகர். சங்க இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். முகநூலிலும் சங்க இலக்கியம் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.
https://www.facebook.com/profile.php?id=100001181804045 இவர்தான்.