ஆஸ்திரேலியப் பூர்வ பழங்குடிகளின் கனவு காலக் கதைகள்

vijaya2ஆஸ்திரேலியப் பழங்குடிச் சமூகம்

ஆஸ்திரேலிய பூர்வ பழங்குடிச் சமூகம் இன்றளவும் நிலைத்திருக்கும் உலகின் மிகத்தொன்மையான சமூகமாகத் திகழ்கின்றது. ஆஸ்திரேலியக் கண்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வழி அப்பழங்குடிகளின் வரலாறு 40,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கணிக்கப்படுகிறது. மேலும், சில ஆதாரங்கள் 60,000 ஆண்டுகள் எனவும் சான்று பகர்கின்றன. இவர்களது பூர்வீகம் தென்னிந்திய மற்றும் இலங்கையைச் சார்ந்த இந்திய  ஆஸ்திராலாயிட்(Indian Australoid) குடியிலிருந்து உருப்பெற்று வந்ததென்றும்  தஸ்மானியா (Tasmania) இனக்குழுவிலிருந்து உருவானதென்றும் இருவேறு கருத்துகள் ஆய்வுலகில் நிலவி வருகின்றன.

குடும்ப அமைப்பும் வாழ்க்கை முறையும்:

1788-ஆம் ஆண்டு சுமார் 500 முதல் 700 இனக்குழுக்களைக் கொண்டு 300,000 ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடிகள் ஆஸ்திரேலியக் கண்டம் முழுவதும் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த இனக்குழு பிரிவுகளானது மொழி, பழக்க வழக்கங்கள், பொதுச் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. பொருளியல் சிந்தனையற்று இயற்கையுடன் ஒன்றியிருத்தலே இப்பூர்வப் பழங்குடிகளின் வாழ்வாதாரமாகவும் பாரம்பரியமாகவும் இன்றுவரை இருந்து வருகின்றது. எதிர்காலம் மீது பற்றற்றவர்களாக வாழும் இவர்கள் குழந்தை வளர்ப்பிலும் தளர்வான வழிநடத்துதல்களையே மேற்கொள்கின்றனர். கலந்துரையாடுவது, கண்காணிப்பது, கதைகள் சொல்வது என விழுமியங்களையே வாழ்க்கைப் பாடமாகப் போதிக்கின்றனர். இதன்வழியே குழந்தைகள் தங்கள் கடமையை உணர்வார்கள் என்றும் இயற்கையோடு இசைந்து வாழ்வர் என்றும் நம்பப்படுகிறது. அதற்கேற்ப மிக இள வயதிலேயே உடல், உளவியல் ரீதியில் இப்பிள்ளைகள் முதிர்ச்சியடைந்தும் விடுகின்றனர்.

ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடிகளின் அழிவு:

1788-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஐரோப்பியப் படையெடுப்புக்குப் பின் இப்பூர்வப் பழங்குடிகள் தங்களது இருப்பையும் இயற்கைசார் வாழ்வையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினர். சான்றாக 1788ல் சுமார் 500 முதல் 700 இனக்குழுக்களாக வாழ்ந்த ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடியினர் இன்று 400க்கும் குறைவான இனக்குழுக்களாக சுருங்கி மிகக் குறைவான மக்கள் தொகையுடன் வாழ்கின்றனர். வெள்ளையர்களின் வருகையில் பரவிய நோய்க்கிருமிகள், தாக்குதல்கள் மற்றும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேம்பாடு, புறநகர் வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தும் இப்பூர்வப் பழங்குடிகளின் இயற்கையொத்த வாழ்வை அரிப்பதோடு சட்டங்களும் திட்டமிட்டு இவர்களது அடையாளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.

ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடிகளின் கனவு காலக் கதைகள்

இயற்கையுடன் ஒன்றியிருத்தலே ஆஸ்திரேலியப் பூர்வப் பழங்குடிகளின் அடையாளச் சின்னமாக220px-1981_event_Australian_aboriginals இருக்கிறது. மனிதன், விலங்கு மற்றும் நிலத்திற்கு இடையே உள்ள உறவினை ஏற்றிப் பிடிக்கும் போக்கும் இப்பூர்வப் பழங்குடிகளின் வழக்கமாக இருந்து வருகிறது. மேலும், இவர்களது பாரம்பரிய நம்பிக்கைகளில் இயற்கையும் நிலமும் முக்கியத்துவம் பெறுகின்றன. பாரம்பரியங்களைப் புனிதமாகக் கருதும் இவர்கள் தாங்கள் வாழும் சுற்றுச்சூழல் தெய்வத்தன்மை பொருந்தியதாக நம்புகின்றனர்.

உலகம் தோற்றுவிக்கப்பட்ட புதிதில் அது சமதரையாக இருந்ததாகவும் பின் மூதாதையர்கள் மனித வடிவில் பூமிக்கு வந்து நிலங்கள் தோறும் பயணித்து விலங்குகள், தாவரங்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள், மலைகள் போன்றவற்றை உருவாக்கியதாக இவர்கள் நம்புகின்றனர். பஞ்ச பூதங்கள், பேரண்ட அதிசயங்களான சூரியன், நிலா, நட்சத்திரங்கள் மூதாதையர்களின் உருவாக்கமாக நம்பப்படுகிறது. இதனாலேயே பாறைகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள், அருவிகள், தீவுகள், கடற்கரை – இவற்றுடன் இயற்கையின் பிற அம்சங்களான மரம் செடிகொடிகள், விலங்குகள் என அனைத்திற்கும் அதன் உருவாக்கம் மற்றும் தொடர்பு சார்ந்த அம்சங்கள் பல்வேறு கலை வடிவங்கள் வழிவழியாகக் கூறப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.

அனைத்தையும் படைத்த இம்மூதாதையர்கள் இறுதியில் கனவுகாலத்தினுள் (Dreamtime) மீண்டுவிடுவதாகவும் சமயங்களில் மரம், கல், பாறை என ஏதோ ஓர் உருவெடுத்து பூமியில் நிலைப்பதும் ஆசிர்வதிக்கப்பட்ட சிலரால் மட்டுமே அவர்களைக் காணமுடிவதாகவும் நம்பிக்கை உள்ளது.

கனவுக் காலங்களைச் சொல்லும் கனவுகாலக் கதைகளில் (Dreaming stories) பாரம்பரிய அறிவு, சட்டங்கள், மதம் ஆகியவற்றோடு நில அமைப்புமுறை, விலங்குகளின் குணங்கள், தாவரங்களைக் கொண்டு வைத்தியம் செய்தல் போன்றவற்றின் விளக்கங்கள் இரண்டறக் கலந்திருக்கின்றன. கதை, பாடல், நடனம், ஓவியம் மூலமாக வெளிப்படுத்தப்படும் இக்கனவுக்காலக் கதைகள் இன்றளவிலும் ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடிகளின் வளமான பண்பாட்டு பாரம்பரியத்தை உருவாக்கி காத்துவருகின்றது.

அதிலும் குறிப்பாக சிறுபிள்ளைகளுக்குச் செவிவழிக் கதைகளாகச் சொல்வதன்வழி தங்களது நம்பிக்கைகள், பாரம்பரியம், முக்கியமான அறிவு, பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை இவர்கள் சந்ததிகள் தோறும் மிக இயல்பாகவே கடத்திச் செல்கின்றனர். இக்கனவுக்காலக் கதைகளில் நேர்த்தியான வடிவத்தையோ, திருப்பங்களையோ, கருத்துகளையோ, தர்கங்களையோ காண முடியாது. மிகவும் தட்டையான மொழியில் கிஞ்சித்தும் அழகியலற்று இருக்கும் இக்கதைகள் ஆஸ்திரேலிய பூர்வப் பழங்குடிகளின் நம்பிக்கைகளைத் தாங்கிப் பிடிக்கின்றன. அவற்றைச் சில கதைகள் வழி காணலாம்.

கதைகள்

  • தண்ணீர் தோன்றிய வரலாறு

முன்னொரு காலத்தில் அந்த நிலம் முழுவதிலும் தண்ணீரே இல்லை. அந்த நிலத்தில் வாழ்ந்த மிருகங்கள் அனைத்தும் தங்களது தாகத்தை தணிக்க ஒரேஒரு வழியை மட்டும் நம்பிக் கொண்டிருந்தன. ஒன்று ‘குல்பிர்ரா’ எனும் கங்காரு உண்ணும் புல்லை தாங்களும் பிடுங்கித் தின்று அசைபோடுவது அல்லது இலைகளில் துளிர்க்கும் பனியை நக்கி நக்கி தாகத்தைத் தீர்த்துக் கொள்வது.

ஒரு நாள் ‘குட்டில்லா’ என்ற குறுகிய மூக்கினைக் கொண்ட பெருச்சாளி, நீல நிற நாக்கைக் கொண்ட ‘பங்கர்ரா’ என்ற  பல்லி ஒரு பாறையின் பின் நின்று தனது ஈரமான உடலை உலர்த்திக் கொண்டிருப்பதைப் பார்த்து விடுகிறது. இதை அறிந்த பிற விலங்குகள் அனைத்திற்கும் பங்கர்ரா மீது கடும் கோபம். “நீ தண்ணீரை எங்கோ மறைத்து வைத்திருக்கிறாய் அல்லவா! எங்கே அந்த இடம்?” என கேட்டு பங்கர்ராவை கடிந்து கொண்டன.

தனக்கு மட்டுமே அந்த மொத்த தண்ணீரும் வேண்டும் என முடிவு செய்து விட்டிருந்த பங்கர்ரா கடைசி வரையிலும் தண்ணீர் இருக்கும் இடத்தை மற்ற விலங்குகளிடம் சொல்லவே இல்லை.

விலங்குகள் அனைத்தும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து பங்கர்ரா செல்லும் இடமெங்கும் பின் தொடர குட்டில்லாவைத் தேர்வு செய்தன. புத்திசாலியான பங்கர்ரா தனது கண் இடுக்குவரை விழிகளை நகர்த்திப் பார்த்து குட்டில்லா பின்தொடர்வதைக் கண்டுபிடித்துவிடுவதுடன் நீர் மறைந்திருக்கும் இடத்தையும் வெளிபடுத்தாமலே இருந்தது.

உடனடியாக விலங்குகள் மற்றொரு கூட்டத்தைக் கூட்டி குட்டில்லாவை விட சிறிய விலங்கான யெகிர்ர் யெகிர்ர் எனும் இரட்டைவால் குருவியைத் தேர்வு செய்து உளவுபார்க்க அனுப்புகின்றன. ஒருவேளை, பங்கர்ரா தன்னை யாரோ ஒருவர் பின் தொடர்வதை கண்டுகொண்டு சுற்றும் முற்றும் தேடத் தொடங்கினால் யெகிர்ர் யெகிர்ர் மிக வேகமாக அவ்விடத்திலிருந்து நகர்ந்து மறைந்துக்கொள்ளக் கூடியது என்பதால் விலங்குகள் அனைத்தும் அதைத் தேர்வு செய்திருந்தன. ஆனால், விரைந்து சென்று மறைந்துவிடும் யெகிர்ர் யெகிர்ர்ரால் அடிக்கடி அசையும் தனது வெள்ளை கருப்பு வாலை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதனால் உஷாரான பங்கர்ரா தண்ணீர் இருக்குமிடத்தை மீண்டும் மீண்டும் மறைத்தே வந்தது.

விலங்குகளால் அதற்குமேல் வேறெதுவும் செய்யமுடியாமல் போனது. ஆனால் பங்கர்ராவோ எல்லா விலங்குகளை விடவும் அதிபுத்திசாலியாக இருந்தது. பிறகொருமுறை அங்கிருந்த விலங்குகளைக் காட்டிலும் மிகச்சிறியதாக இருந்த ‘குலா’ என்ற எலி முன்வந்து தன்னால் பங்கர்ராவைப் பின் தொடர முடியும் எனக்கூற, அனைத்து விலங்குகளும் கூட்டாகச் சேர்ந்து நகைக்கத் தொடங்கின. ‘மிடன்’ என்னும் வளையவால் எலி குலாவை ஓரத்தள்ளி “மிகச் சிறிய விலங்கான நீ பேசுவதையெல்லாம் நாங்கள் கேட்க வேண்டியதில்லை” எனக்கூறித் தட்டிக் கழித்தது.

மிடனின் வார்த்தைகளில் அதிகம் காயப்பட்டுப் போன குலா தன் சொந்தவழியில் பங்கர்ராவை மிக அணுக்கமாகப் பின் தொடர ஆரம்பித்தது. தன்னை யாரோ பின்தொடர்ந்து வருவதை அனுமானித்த பங்கர்ரா, வலதுபக்கம் பார்க்கும்போது குலா இடதுபக்கம் நோக்கிக் குதித்தும், எதிர்திசை நோக்கி பங்கர்ரா திரும்பும்போது வலதுபக்கம் நோக்கிக் குதித்தும் மறைந்து கொண்டது. இப்படியே அந்த நீலநாக்குப் பல்லியான பங்கர்ராவை பின்தொடர்ந்து சென்ற குலா, பங்கர்ரா பெரிய பாறையைக் கொண்டு மூடி மறைத்து வைத்திருந்த நீருற்றை அடைந்தது. பங்கர்ரா பாறையை நகர்த்தி நீரூற்று வழிந்தோட விட்டதுதான் தாமதம். குலா மறைந்திருந்த இடத்திலிருந்து சட்டென எட்டிக் குதித்து வெளிவந்து பங்கர்ராவை ஒரு கணம் நடுங்க வைத்தது. குலாவின் இச்செயலை பிறகு எல்லா விலங்குகளும் பாராட்டத் தொடங்கின.

நீரூற்றிலிருந்து குமிழ்ந்து வரும் நீரைக்கண்ட விலங்குகள் மகிழ்ச்சியில் நீரினுள் பாய தண்ணீர் எல்லா இடங்களிலும் சிதறியடித்தது. மீன்கொத்தி பறவையும் ஆனந்தத்தில் முன்னும் பின்னுமாக நீந்தி ஆர்ப்பரித்தது. தன் கூரிய அலகுகளால் வடிகால்களையும் பள்ளங்களையும் அந்த சிற்றோடையில் உருவாக்கியது. இப்படியே வடிகால் வழியாகவும் பள்ளங்கள் மூலமாகவும் நீரூற்று கடல் நோக்கிச் சென்றது.  இன்றிருக்கும் நீரோடையும் நீர் பள்ளத்தாக்குகளும் இப்படித்தான் உருவாகின.

இக்கதை உணர்த்தும் நன்னெறிப் பண்பு: அற்பமாகவும் குறைத்தும் மதிப்பிடப்படுபவர்கள் உயரியவர்களாக வரக்கூடும்.

  • பிக்கி-பெல்லா என்ற முள்ளம்பன்றி

vijaya1வயதாகிவிட்ட பிக்கி-பெல்லாவால் முன்பைப்போல சுயமாக வேட்டையாட முடியாமல் போனது. மனிதனின் மாமிசச்சுவை கண்ட பிக்கி-பெல்லா நெருப்புக்கோழியின் இறைச்சிக்கும் கங்காருவின் இறைச்சிக்கும் அவ்வளவாக அக்கறை காட்டுவதுமில்லை. பல சால்ஜாப்புகளை எல்லாம் காட்டி வாலிபர்களை தனது முகாமிற்கு கவர்ந்திழுத்து பின்பு அவர்களைப் புசிப்பது அதன் வழக்கமாக இருந்தது. பிக்கி-பெல்லாவின் கயமை குணத்தைக் கண்டுக்கொண்ட டேன்ஸ் குடிகள் அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கக் கங்கணம் கட்டினர். “எல்லோரும் சேர்ந்து அதை வளைத்துப் பிடிப்போம். அப்போது அது நம் முன் பலமற்றுப் போகும்” என அனைவரும் ஒரே குரலில் ஒப்புவித்தனர்.

கும்பலாகச் சென்று பிக்கி-பெல்லாவின் முகாமைச் சுற்றி வளைத்தனர். அப்போதுதான் அது முகத்தை தரை நோக்கி வைத்து உறங்கத் தொடங்கியிருந்தது. நேராகப் படுத்து வாய் பிளந்து தூங்கும்பொழுது அதன் கனவுகளாக உள்ளிருக்கும் ஆவிகள் திறந்திருக்கும் வாய்வழியாக வெளியாகி விடாமல் இருக்க, பிக்கி-பெல்லா எப்போது முகத்தை நிலத்தில் அழுத்திக்கொண்டு தூங்குவது வழக்கம். உறக்கத்தின் நடுவில் இலைகளின் சலசலப்பு அதன் காதுகளுக்குள் புகுந்தது. அரை மயக்கத்தில் இருந்த பிக்கி-பெல்லா தனக்கு ஏதும் தீங்கு நடக்குமோ என்கிற சந்தேகமில்லாமல், “அது நத்தை அல்லது பட்டாம்பூச்சியின் படபடப்பாகத்தான் இருக்கும்”  என்று தனக்குள் சொல்லிக்கொண்டது.

பிக்கி-பெல்லா ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்ட தருணம் எதிரிகள் அதனைச் சுற்றி நெருங்கி, ஈட்டிகளை உயர்த்தி, ஒரே சமயத்தில் அதன்மீது வீசினர். பிக்கி-பெல்லா முதுகின் எல்லாப் பகுதிகளிலும் கூரிய ஈட்டிகள் ஆழமாக சொருகிக் கொண்டன. அதோடு விட்டுவிடாமல், டேன்ஸ் குடிகள் விரைந்து அதனருகில் சென்று மரக் கோடரிகளால் அதன் கை கால்களை முறித்து அதன் அசைவை முற்றிலும் மட்டுப்படுத்தி விட்டனர். நெடிய நேரம் முனகலோ அசைவோ அற்றிருந்த பிக்கி-பெல்லாவைத் தாங்கள் கொன்றுவிட்டதாக நம்பியவர்க்ள் பழிவாங்கிய திருப்தியுடன் தங்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட்டனர். பின்னர் மீண்டும் ஒருதரம் அங்கு சென்று தங்களது ஆயுதங்களை மீட்டுக் கொள்வது அவர்களது திட்டமாக இருந்தது.

டேன்ஸ் குடிகள் போனதும், உடனடியாக பிக்கி-பெல்லா தனது நான்கு கால்களால் தவழ்ந்தவாறே ‘முர்கா முக்காய்’ என்ற தனது சிலந்தி நண்பன் வீடு நோக்கி மண்ணுக்கடியில் சென்றது. சிலந்திப்பொறி வாசல் வழியாக நிலத்தின் அடியில் சென்று தன் காயங்கள் குணமாகும்வரை அங்கேயே தங்கியிருந்தது. தன் முதுகைத் துளைத்து நீட்டிக்கொண்டிருந்த கூரிய ஈட்டிகளை இழுக்க முயற்சித்தது. கடைசிவரை பிக்கி-பெல்லாவின் முயற்சி பலனளிக்காமல் போக, அவை அதன் முதுகில் என்றென்றும் நிலைத்து விட்டன. பின்னாளில் பிக்கி-பெல்லாவைப் போலவே அதன் பரம்பரையும் நீட்டிக்கொண்டிருக்கும் கூரிய முனைகளுடன் நான்கு கால்களில் தவழ்ந்தே சென்றன.

அவைகளும், பிக்கி-பெல்லாவைப் போல, எதிரிகள் வரும்போதெல்லாம் நிலத்தினடியில் விரைந்து மறைந்து கொள்கின்றன.

  • டைன்வான் என்ற நெருப்புக்கோழியும்கும்ப்பல் கபன் என்ற வான்கோழியும்

மற்ற பறவைகளைக்  காட்டிலும் உருவத்தில் பெரியதாக இருந்த நெருப்புக்கோழியை அனைத்து பறவைகளும் ஒருமனதாக அரசராக்கின. ஆனால் வான்கோழிகளின் அம்மாவான கும்ப்பல் கபன்க்கு மட்டும் மனதில் உள்ளூர பொறாமை அரிக்க ஆரம்பித்தது. வானுயர நீண்டிருக்கும் உடல்வாகையும் துருதுருத்த ஓட்டத்தையும் இயல்பாய் கொண்டிருக்கும் நெருப்புக்கோழியைப் பார்த்து பார்த்து அதன் பொறாமை அதிகரிக்கத் தொடங்கியது. நெருப்புக்கோழியின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பலவகையிலும் யோசித்து கும்ப்பல் கபன் குழம்பித் தவித்தது. அதனை எதிர்த்து வாக்குவாதம் செய்வதோ சண்டையிடுவதோ வேலைக்காகாது என்பதை நன்கு புரிந்து கொண்ட கும்ப்பல் கபன் சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

ஒரு நாள், கிட்டிய தூரத்தில் டைன்வான் வந்துகொண்டிருப்பதைக் கண்ட கும்ப்பல் கபன் தன் இருபக்க இறக்கைகளையும் பின்னோக்கி அழுத்தி சிறகுகளுக்குள் மறைத்துக் கொண்டது. சட்டென பார்ப்பதற்கு இறக்கையற்ற பறவைபோல் காட்சிதந்த கும்ப்பல் கபன்னைப் பார்த்த டைன்வான்  தன்னுடைய இரு இறக்கைகளையும் துண்டித்துக் கொண்டது. “ஹா…. ஹா… ஹா…” என்றவாறு வானுக்கும் பூமிக்கும் எகிறிக்குதித்துச் சிரித்தவாறு “வசமாக மாட்டிக்கொண்டாயா…. குட்டை இறக்கைகளே! எனக்கு இறக்கைகள் இருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் ஏமாந்துபோன குட்டை இறக்கைகளே….!” வான்கோழி வெற்றியை கொண்டாடிக் களித்தது.

தன் தவறை உணர்ந்து கூனிக்குறுகிப்போன நெருப்புக்கோழி பழிதீர்க்கும் வேட்கையோடு அங்கிருந்து அகன்றது. நீண்ட யோசனைக்குப்பின் திட்டம் ஒன்றையும் போட்டது. தன் இரு குஞ்சுகளை அழைத்துக் கொண்டு அந்தச் சராசரி வான்கோழி பார்க்கும்படியாக அங்குமிங்கும் நடக்கத் தொடங்கியது. எதிர்பார்த்தது போலவே “ஏன் வெறும் இரு குஞ்சுகளை மட்டும் வைத்திருக்கிறாய்?”  என கும்ப்பல் கபன் கேட்க, “என் பன்னிரண்டு குஞ்சுகளுக்கும் உணவைத் தேடி கண்டுபிடித்துக் கொடுக்கச் சிரமமாக இருக்கிறது. இரண்டு குஞ்சுகள் மட்டும் என்றால் உணவளிப்பது சுலபம்” என்பதாகச் சொல்லியது. எதையும் ஆலோசிக்காத அந்தச் சாதாரண வான்கோழி தன் இரு குஞ்சுகளைத் தவிர மற்ற அனைத்தையும் கொன்றுபோட்டது. “சொந்தப் பிள்ளைகளையே கொன்றுவிட்ட குரூரத் தாயே, நீ பேராசை பிடித்தவள். என்னால் என் பன்னிரண்டு குஞ்சுகளுக்கு உணவுத் தேடி கொடுக்க முடியும். நான் உன்னை ஏமாற்றவே இப்படி செய்தேன். அன்று நீ என் இறக்கைகள் அறுபட செய்ததற்காக” என்று நெருப்புக்கோழி வஞ்சம் தீர்த்துக் கொண்டது. அன்று தொடங்கி நெருப்புக்கோழிக்கு இறக்கைகள் இல்லாதது போல வான்கோழியாலும் ஒரு தவணைக்கு இரு முட்டைகளுக்கு மேல் இட முடியாமல் போனது.

  • வயம்பா எனும் ஆமை

உணவு சேகரித்துக் கொண்டிருந்த ஆண் ஆமை ஒன்று பல்லியின் மனைவியான ஓலா எனும் பெண் பல்லியும் அதன் மூன்று குழந்தைகளும் கிழங்கு தோண்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தது. தனக்கும் அப்படி ஒரு மனைவியும் குடும்பமும் இருப்பதை விரும்பவே சட்டென அவற்றை தன் வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டது வயம்பா.

வயம்பாவின் இச்செயலை கண்டு அதன் வம்சாவளியினர் அனைவருமே கடும் கோபம் கொண்டன. உடனடியாக ஆமையை அணுகி “உனது இந்தச் செயலுக்காகத் தண்டிக்கப்படுவாய்” என்றன. ஆமையோ வெடித்துச் சிரித்தது. கடும் கோபமடைந்த ஆமையின் வம்சாவளிகள் மறுநாள் காலை வயம்பாமீது ஈட்டி மழையைப் பொழிய தயாராகக் காத்திருந்தன.

வயம்பாவோ இரு பெரும் கேடயங்களை எடுத்து தன் முதுகு பக்கமும் முன்புறமும் மாட்டிக் கொண்டது. ஈட்டிகள் ‘விர்’ரென்று வான்vijaya நோக்கிவர, வயம்பா தன் கைகளைக் கேடயத்துள் ஈர்த்துக் கொண்டதுடன் தலையையும் கீழ்நோக்கி தாழ்த்திக் கொண்டது. ஆயுதங்களைச் சரமாரியாக வீசிக்கொண்டே ஆமைகள் அனைத்தும் வயம்பாவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கத் தொடங்கின. பக்கமிருந்த சிற்றோடையினுள் மூழ்குவதைவிட வயம்பாவுக்கு வேறு வழியில்லாமல் போனது. பின் அவற்றினால் எப்போதுமே வயம்பாவை காணமுடியவில்லை. ஆனால் வயம்பா மூழ்கிய அதே சிற்றோடையின் நீர் துளைகளுக்குள் விசித்திரமான உயிரினம் ஒன்று தன் பின்பக்கம் ஒட்டிக்கொண்ட ஓட்டுடன் இருப்பதை அவை பார்த்தன. ஒவ்வொரு முறையும் அதைப்பிடிக்க முயலும் போதெல்லாம் அவ்வுயிரினம் தன் கை கால்களை ஓட்டுக்குள் ஈர்த்துக் கொண்டது. பின்னர் அவைகளும் “அதுதான் வயம்பா” என நம்பத் தொடங்கின. இதுவே ஆமைகளுக்கு ஓடுகள் இருக்க காரணமாக அமைந்தது.

மேற்கோள் பட்டியல்

  1. The Dreaming. (31 April, 2015). Retrieved 23 July 2016; from http://www.australia.gov.au/about-australia/australian-story/dreaming
  2. Australian Aborginal Culture. Retrieved 23 July 2016; from https://www.didjshop.com/shop1/AbCulturecart.html

 

3 comments for “ஆஸ்திரேலியப் பூர்வ பழங்குடிகளின் கனவு காலக் கதைகள்

  1. ஸ்ரீவிஜி
    September 26, 2016 at 8:00 am

    முகுந்த சுவாரஸ்யத்தைக்கொடுத்த பதிவு. நமது புராணங்கள் தோன்றிய வரலாறும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

  2. ஸ்ரீவிஜி
    September 26, 2016 at 8:00 am

    மிகுந்த*

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...