நிறைவேறாத ஆசைகள் என்றுமே மனித மனங்களில் எங்கோ ஒரு மூலையில் தேங்கியே கிடக்கின்றன. ஆசையின் அளவு பெரிதாகவோ சில சமயம் சிறியதாகவோ இருக்கலாம். ஆனாலும் முட்டுக்கட்டைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்து அடைய இயலாமல் செய்து விட்ட சின்ன ஆசைகள் அவ்வப்போது மனதின் முன் தோன்றி படுத்தும் பாடு வாழ்க்கையைவிட கொடுமைக்குரியதாக இருக்கின்றது.
நிறைவேறாத ஆசைகளைக் கொஞ்சம் அசை போட வைக்கின்றது எஸ். ராமகிருஷ்ணனின் ‘எதிர்கோணம்’ கதை. கண்டக்டரான சவரிமுத்து பேருந்தில் நின்று கொண்டிருக்கும் அப்பையனையே பார்த்த வண்ணமிருக்கின்றான். அப்பையனின் ஒடிசலான தோற்றம், வெளிறிய ஜீன்ஸ், ஆரஞ்சுவண்ண டீசர்டு அதற்குக் காரணமல்ல. அவனது கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கேனான் கேமிராதான் அதற்கு முதன்மை காரணம். சவரிமுத்துவிற்குச் சொந்தமாக ஒரு அக்பா கேமிரா ஒன்றை வாங்க வேண்டும் என்பது கனவாக இருந்தது, ஆனால் அதற்காக அவரால் பணம் சேர்க்க முடியவில்லை. டைம்கீப்பர் லாசரிடமிருந்த பழைய கேமிரா ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வருகிறது என்று தெரிந்தவுடன் வீட்டிற்கு தெரியாமல் கடன்வாங்கி ரகசியமாக கேமிராவை வாங்கி வந்தார். கேமிரா வேலை செய்யாததால் தன் பணத்தை ஏமாந்தது மட்டுமே அவருக்கு மிஞ்சியது. அன்று தோன்றிய தீரா மனவருத்தம் மீண்டும் பையனிடமிருக்கும் கேமிராவைக் கண்டதும் விழித்துக் கொண்டது.
இளைய வயதிலேயே அத்தகைய கேமிராவுக்குச் சொந்தகாரனாய் இருக்கும் அப்பையன் மீது ஏக்கமும் ஏற்படுகின்றது. மெல்ல அவனிடம் பேச்சு கொடுக்கின்றார். பையனும் வேண்டா வெறுப்பாக அவரிடம் பேசுகின்றான். அவன் பேச்சில் வெளிப்படும் அலட்சியம், ஆணவம் சவரிமுத்துவுக்குய்த் தெரிந்தாலும் கேமிராவுக்காக சகித்துக் கொள்கின்றார். கேமிராவை ஒரேயொரு முறை கையில் வாங்கி பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரது சகிப்புத்தன்மை ஒரு கட்டத்தில் ஆத்திரமாய் உருவெடுக்கின்றது. படிக்கட்டில் நிற்பவர்களை இறங்கி அடுத்த பேருந்தில் வரும்படி கட்டளையிடுகின்றார். கேமிராவுக்கு உரியவனான அப்பையனும் பேருந்து படிக்கட்டில்தான் நின்று கொண்டிருந்தான். அந்தப் பையன் உட்பட படிக்கட்டில் நின்றிருந்த ஏழெட்டு பேர் பேருந்தை விட்டு இறங்கிக் கொண்டார்கள்.
பேருந்து நகன்ற சில நிமிடங்களிலேயே அந்த பையனை அப்படி நடத்தியிருக்ககூடாது என்று நினைத்தபடியே விசில் அடித்து அடுத்த ஸ்டாப்பில் இருந்த கல்லூரி மாணவர்களை படியில் ஏற்றி கொள்கின்றார்.
சில வேளைகளில் நாமே மறக்க நினைத்தாலும் மனதினுள்ளே புதைந்து கிடக்கும் ஆசைகளை வெளிக்கொணர தருணங்கள் வாய்த்து விடும்பொழுது அதை நம்மாலேயே தடுக்க முடிவதில்லை. அதிலும் நாம் எவ்வித முயற்சி செய்தாலும் அடைய இயலாத சின்ன சின்ன ஆசைகளை மற்றவர் எளிதாய் அடைந்து விடுவதைப் பார்க்கும் பொழுது மனம் இன்னும் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகின்றது. கதையில் வரும் சவரிமுத்துவின் மனமும் இதையே செய்கின்றது.
வெறுப்பும் அங்கு புகுந்து கொள்வதைக் கதையின் தளம் உணர்த்துக்கின்றது. இத்தகைய வெறுப்பானது இரண்டு வகையில் பிரிகின்றது. முதல் வகை வெறுப்பானது நம்மை நாமே தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுகின்றது. பையன் கேமிராவின் விலை ஒரு லட்சத்து எழுபத்தியெட்டாயிரம் என கூறியதும் ஒரு வருஷம் கண்டக்டர் உத்யோகம் செய்தால் கிடைக்க கூடிய வருமானமது என்பதை எண்ணி சவரிமுத்துவின் மனம் தன்னைத் தானே நொந்து கொள்கின்றது.
‘என்ன வேலையிது?
‘எதற்காக இந்த கண்டக்டர் உத்யோகத்தில் வந்து சேர்ந்தோம்?’
‘எதற்காக திருமணம் செய்து பிள்ளைகளை பெற்றுக் கொண்டோம்?’
‘ஏன் கைக்கு கிட்டாத விஷயங்களை மனது திரும்ப திரும்ப ஆசைப்பட வைத்துக் கொண்டிருக்கிறது’
என அடுக்கடுக்காய் கேள்விகள் அவன் தன் குறைகளை எண்ணி புலம்புகின்றான்.
மற்றொரு வகை வெறுப்பானது நாம் அடையாத ஒன்றை மற்றொருவர் அடைந்துவிட்டதால் அவர் மீது உண்டாவது. பொறாமைக்கும் இதுக்கும் கடுகளவு தூரம் மட்டுமே. சவரிமுத்துவுக்கு பையன் மீது ஏற்பட்ட வெறுப்பானது இதையும் உள்ளடக்கியதாக உள்ளது.
மனம் எப்போதுமே வாழ்வில் அடைய தவறவிட்டவை பற்றியே அதிகம் நினைத்து அழுது புலம்புவதில் வல்லமை பெற்றது. பெரும்பாலும் அவை அற்ப விஷயங்களாகவே இருக்கும். வாழ்வில் அடைந்துவிட்ட மகத்தான விஷயங்களை ஏனோ மனம் பெரிதாய் கருதுவதில்லை. இதற்கான ஓர் உதாரணம் சவரிமுத்துவின் வாழ்விலும் உள்ளது. ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கேமிரா வேலை செய்யாததால் தான் ஏமாந்துவிட்டதை எண்ணி வருந்துபவனை மனைவி, ‘போட்டோ வேணும்னா, ஸ்டுடியோவில போயி பிடிச்சிகிடலாம், அதுக்கு எதுக்கு நல்ல நாளும் அதுவுமா மூஞ்சியை தூக்கிவச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க, கைமுறுக்கு கொண்டு வந்திருக்கேன், தரவா’ என ஆறுதல்படுத்துகின்றாள். அவன் இத்தகைய அன்பான மனைவியை அடைந்தது மிகப்பெரிய விஷயம் என்பதை உணரவில்லை. ஆனால் இவ்வாறான வாழ்க்கைத்துணையை அடையாதவர்களுக்கு இதன் அருமை தெரியும். தங்களுக்குக் கிடைக்கப் பெறாத அன்பான ஆறுதலான வாழ்க்கைத்துணையை அடைந்துவிட்ட சவரிமுத்துவின் மீது அவர்களுக்கும் வெறுப்பு தோன்றலாம்.
அடையாத ஆசைகள் பல நூறுகளோ ஆயிரங்களோ இருக்கலாம். மனங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருக்கின்றன. அடைந்துவிட்ட மகத்தான இன்பங்கள் அதை காட்டிலும் எப்போதுமே பன்மடங்குகளே. ஏனோ அதை மனங்கள் அறிவதில்லை; அறிய முயற்சிப்பதுமில்லை.