பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்!

ஶ்ரீ விஜி 2 படம்ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன்.

எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உள்உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி இருப்பான், போலியாக.

பெண் என்பவள் பாலியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு தயங்குவாள். அப்படி அவள் தயங்குவதற்குக் காரணம் – அவளை ஆரம்பத்திலிருந்து அடக்கி ஒடுக்கி வைத்துள்ள அவளின் சுற்றம்தான்.

இன்னமும் தனிப்பட்ட பெண் ஒருவளின் பிரச்சனை அவளின் மூலமாகவோ அல்லது மற்றவர்களின் மூலமாகவோ பொதுவில் வைக்கப்படும்போது, அங்கே பிரச்சனை என்ன என்பதைவிட , கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல் அப்பெண் பொதுவில் தூற்றப்படுவதுதான் எழுதப்படாத விதி.

`அவன் என்னிடம் காமப்பார்வையுடன் பழகிவிட்டான்’ என்று நாம் நமது பெற்றோர் மற்றும் அண்ணன் தம்பிகளிடமோ, அல்லது கணவன் காதலனிடமோ, அல்லது உற்றார் உறவினரிடமோ பகிர நேர்ந்தால் நிலைமை என்னாகும் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா.!

இந்திய கலாச்சாரப்பின்னணியாகப்பட்டது தவறு எங்கே நடந்தாலும் அங்கே அந்தப் பெண் தான் ஒழுக்கங்கெட்டவள் என்கிற ரீதியில் அவளை ரணமாக்கி வேடிக்கைப்பார்க்கும் இந்த சமூகம்… `நீ வைத்துக்கொண்ட வழி அப்படி.!’ `அவன் கிட்ட இளிச்சிருப்பே,வழிஞ்சிருப்பே..’ ‘மினுக்கிக்கிட்டு பல்லைக்காமிக்க, அவன் அப்படித்தான் கேட்பான்.’ `எதுக்கு உனக்கு ஆண் நட்பு இப்போ?’ `ஆசை உனக்கெல்லாம்..வைச்சானா ஆப்பு, இதுவும் வேணும் இன்னமும் வேணும்..’ `மொளைச்சி மூணு எல விடல அதுக்குள்ள ஆள் கேட்குதா உனக்கு..’ ‘கல்யாணம் பண்ணிட்டே, இன்னும் எதுக்கு ஆம்பளைங்களோடு பழக்கம்வேண்டிக்கிடக்கு..’ `போ.. பல்லைக்காட்டு, புள்ளைய கொடுத்துட்டு கம்பிநீட்டுவான்..’ ` வே….த்தனம் செய்கிறாயா.?’ ` போ.. நல்லா பாவிச்சுட்டு சுத்தலில் விடுவான்..’ இவைகள் யாவும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் கேட்டுக்கேட்டு புளிச்சுப்போன வசனங்கள்தாம் என்பதை யார்தான் மறுக்கமுடியும்.! எதாவது ஒரு வழியில் இந்த வார்த்தைகளைக் கேட்டிராத நம் பெண்கள், குறிப்பாக, நடுத்தரவர்க்க தமிழ் பெண்கள் இருக்கமுடியுமா என்ன.!

தமது உடலின்ப விருப்பங்களை ஒரு ஆண் பகீரங்கமாக வெளிப்படுத்தும்போது அவன் அங்கே மோசமானவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சினிமா வில்லன்கள் போல அவர்களை நாம் பார்க்கத்துவங்கிவிடுகிறோம். இது இன்னமும் நடக்கின்ற ஓர் அவலம்தான். ஓரளவு படித்து பக்குவப்பட்டவர்கள் கூட உடலின்ப காம ஆசைகள் உள்ள ஒருவன் அல்லது ஒருவளை சந்திக்கநேர்ந்தால், எதோ ஒரு விஷ ஜந்துவைப்பார்ப்பதுபோலவே பார்த்து அருவருக்கின்றனர்.

நாம் நமது ஆசைகளுக்கு எதாவதொரு முலாம் பூசி அவற்றை மறைத்துவைப்பதிலேயே குறியாக இருக்கின்றோம். குறிப்பாக  ஆன்மிகவாதி. ஆன்மிகவாதி என்றாலே அவன் உலக மகா உத்தமனாகவே சித்தரிக்கப்படுகிறான் நம் சமூகத்தில். அந்த முலாம் நம்மவர்களுக்கு மிகவும் வசதியாகப் பொருந்திவிடுகிறது. சுலபமாக ஒருவரின் வீட்டில் நுழைவதற்கு தகுந்த நுழைவுச்சீட்டாகவும் அது அமைந்துவிடுகிறது. பட்டை கொட்டை என்று பொதுவில் அலைந்து, ஆசைகளை நான்கு சுவருக்குக்குள் யாருக்கும் தெரியாமல் அனுபவித்து அகப்பட்டுக்கொள்கிற பலரை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துத்தானே வருகிறோம்.

முடிந்த தந்தையர் தினத்தை நான் கொண்டாவில்லை. ஏன் கொண்டாடவில்லை? என் தந்தை இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. அது பிரச்சனை இல்லை இங்கே. பிரச்சனை என்னவென்றால், தந்தையர் தனத்திற்கு முன்புதான், எனக்கு நன்கு அறிமுகமான தோழியின் மூலமாக ஓர் துக்கச்செய்தியினை கேட்க நேர்ந்தது.சொந்த மகளையே படுக்கைக்கு அழைத்துத் துன்புறுத்திய தந்தையின் செய்கையில் அதிர்ச்ச்யுற்ற மகள் தற்கொலை செய்துகொண்டாள். இத்தனைக்கும் தகப்பன் ஓரு பக்திமான். இந்தச் செய்தியால் மனமுடந்துபோனே நான், பிறகு எங்கே தந்தையர் தினத்தைக்கொண்டாடுவது.! யாருக்கும் வாழ்த்துகூட சொல்லவில்லை.

எங்களின் நிறுவனத்திற்கு கடிதங்களைக் கொண்டு வரும் ஒரு `ஆபிஸ்பாய்’ எனக்கு நன்கு அறிமுகம். தினமும் வருவான்.  கடிதங்களைப் பெறுவதும், என்னிடம் இருக்கின்ற கடிதங்களை எடித்துச்செல்வதும் எங்களுக்குள் நடக்கும் பண்டைமாற்று வாடிக்கை. தினமும் சந்திக்கின்ற போது சிலவிஷயங்களைப் பேசுவோம். வேலை செய்கிற பெண்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே. ஆண் பெண் கலந்து வேலை செய்கிறபோது சந்திப்பு உரையாடல் என்பதெல்லாம் சாதாரணம். (இதனால்தான் எங்கள் வீட்டில் பெண்களை நாங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை, என்று நீங்கள் உங்கள் மனதிற்குள் பெருமை பட்டுகொள்ளலாம்.)

ஒரு நாள், அவன் அலுவலகத்தில் நுழைகின்ற போது யாருடனோ ஆவேஷமான தொலைபேசி உரையாடலோடு நுழைந்தான். `ஏய் உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு ஆயிடுச்சே, ஏன் என்னைத்தொந்தரவு செய்கிறாய்? பணமெல்லாம் சரியாக வந்துடும்தானே..! இப்படியே டாச்சர் செய்தே.. நான் போன் நம்பரை மாத்திட்டு நிம்மதியா இருப்பேன். உன் தொல்லை தாங்க முடியல..’ என்று திட்டிக்கொண்டிருந்தான். `என்னாச்சு..ஒரே கோபம் இன்று.?’ என்றுதான் கேட்டேன். அன்று ஆரம்பித்ததுதான் இன்றுவரை எதாவதொரு கதையோடு என்னிடம் பேச்சுகொடுப்பது அவன் வழக்கமாகிப்போனது.

`கல்யாணம் ஆகிவிட்டது. விவாகரத்தும் ஆகிவிட்டது.’ என்றான். `அப்படியா, ஏன் விவாகரத்து?’ கேட்டேன். `அவளுக்கு சந்தேகம் நான் நிறைய பெண்களோடு படுக்கின்றேனாம்.’ என்றான். `ஓ.. நிஜமாலுமா?’ கேட்டேன். `ஆமாம், எனக்கு பெண்கள் என்றால் பிடிக்கும். நான் இதுவரையில் பல பெண்களை அனுபவித்துள்ளேன். எல்லா இனத்திலேயும் எனக்கு பெண்களின் தொடர்பு உணடு. பிடித்திருந்தால், எப்படியாது வசப்படுத்திவிடுவேன்.’ எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. `இந்த புத்தி இருக்கின்ற பட்சத்தில், ஏன் கல்யாணம் செய்துகிட்டு ஒரு பெண்ணின் வாழ்வை வீனாக்குவானேன்.!’ மனதில் பட்டதை கேட்டும்விட்டேன். `என் குணம் அவளுக்கு நல்லா தெரியும், மேலும் பெண்களைத்தேடி நானாகப்போகவே மாட்டேன் என்பது அவளுக்குத்தெரியும். என்னைத்தேடி வருகிறவர்களுக்கு நான் `சேவை’ செய்வேன். ஆரம்பத்தில் அவளும் நானும் நட்பாகத்தான் பழகினோம். நானாக சொல்லவில்லையே கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று, அவளாதானே கொக்குமாதிரி நின்றாள். கல்யாணம் முடிந்தவுடன் உரிமை கொண்டாடி கழுத்தை அறுத்தாள். விவாகரத்து கூட நான் கேட்கவில்லை. அவளா கேட்டாள், கொடுத்தேன். என்னைப்பொருத்தவரை, இதுபோன்ற புதைக்குழியில் விழுந்து தினம் தினம் சாவதைவிட சும்மா ஜாலியா தேவையானதை அனுபவித்துவிட்டு எங்கேயாவது போய் எப்படியாவது சாவது மேல்.’என்றான். எனக்கு ஒரே ஆச்சரியம். வாழ்க்கைங்கிறது சாதாரணமான ஒன்றாகிவிட்டது பலருக்கு. என்ன செய்ய?

அவனுக்குக்கிடைத்த வாழ்வை அவன் முழுமையாக அனுபவிக்கிnறான். இளமையில் துள்ளலாம் ஆட்டம்போடலாம்,  இன்னும் இருக்கே அனுபவிக்க. அதை எப்படி எதிர்கொள்வான்.! எப்படியாவது போகட்டும், நமக்கென்ன என்று எதைப்பற்றியும் கேட்காமல் அவன் வரும்போது எனது வேலைகளில் மூழ்கிவிடுவேன்.

அவன் சொல்வான், பெண்கள் என்னிடம் பேசுகிறபோது நிச்சயம் என் காதல் வலையில் விழுந்துவிடுவார்கள். நான் பொய்பேசமாட்டேன். எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பனவற்றில் நான் மிகவும் தெளிவாக இருப்பேன். என் மேல் காதல் கொண்டு பெண்கள் பைத்தியம்போல் அலைந்துள்ளார்கள். எதுவும் நான் செய்வதில்லை. அது தானாகவே நிகழும். அன்பாக மட்டுமே இருப்பேன். அன்பு உண்மை நேர்மை போதும் பெண்களை வசப்படுத்த.. வன்புணர்வு, திருட்டுத்தனம், துரத்தித்துரத்தி பெண்களை வலையில் விழவைப்பது போன்றவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.நான் நினைத்தால், உங்களைக்கூட என்னால் வசப்படுத்தமுடியும். என்பான் கண்களைச்சிமிட்டியவாறு.

தேவைதான் எனக்கு.!?

இதை வாசிப்பவர்கள் ஒருவித இந்துத்துவ கலாச்சார சிந்தனைப் போக்கில் இதை நோக்குவார்களேயானால் நிச்சயம் என்னை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத்துவங்கி முகஞ்சுளிப்பார்கள். காரணம் திருமணமான ஒரு பெண்ணிடம், அங்கே இங்கே சுற்றி பொறுக்கிச் சுகம் காண்கிற ஒரு ஆண், இப்படியெல்லாம் பேசுவதற்கு இடமளித்துள்ளாளே இவள், எப்படிப்பட்டவளாக இருப்பாள்.?

யோசிங்க.. அவனைவிட நாம் மோசமானவர்கள்தாம்.

4 comments for “பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும்!

  1. vasanthan
    July 12, 2013 at 7:54 am

    Vijaya malaysia pen endral mutalil avarukku paaraddukal. nam naaddil ivvalavu sutantiramaga eluta kuuda aal irupathil makilcci

    Vallavan

  2. கேசவன்
    July 17, 2013 at 1:11 am

    எழுத்தாளருக்கு,

    நீங்கள்,உங்கள் கருத்தில் ஆன்மிகவாதி பற்றி குறிப்பிட்டிரிந்திர்ஆன்மிகவாதி சாதாரண மக்களைவிட உயர்ந்தவர் தான்.உண்மையான ஆன்மிகவாதி ஆசையற்றவர்.நீங்கள் குறிப்பிட்டது போல அல்ல.ஆன்மிகவாதி போல் நடிக்கும் போலி மனிதர்கள் தான் நீங்கள் குறிப்பிட்டது போல நடந்துகொள்வார்கள்..காரணம் நான் ஆன்மிகவாதிகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்..ஆன்மிகவாதிகளுடனும் பழகியிருக்கிரேன்.நீங்கள் கேட்ட மற்றும் பார்த்த சில விசயங்கள் அடிப்படையில் எழுதியிருக்கிரிர்..நீங்கள் ஒரு கருத்தைச் சொல்வதற்கு அல்லது எழுதுவதற்கு முன்பு நீங்கள் அதனைப் பற்றி ஓரளவு அறிந்திருக்க வேண்டும்.நீங்கள் எழுதிய அனைத்து கருத்துகளும் நாங்கள்,மக்கள் சிந்திக்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்.ஆயினும், இதில் நீங்கள் தெரிவித்த சில கருத்துகள் நன்றாக இருந்தது.நன்றி..
    (என்னுடைய இந்த கருத்தை நீங்கள் கருத்தாக ஏற்றுக்கொள்ளாவிட்டால்,மக்களின் உரிமைக்குறளைப் நிராகரிக்கும் சில அரசியல் இயக்கம் போன்றுதான் நீங்களும் ஆனால் கருத்தாக ஏற்றுக்கொண்டால்,மக்களில் ஒருவனாகிய நான் மகிழச்சி அடைவேன்..நன்றி)

  3. ஸ்ரீவிஜி
    July 18, 2013 at 2:41 pm

    கேசவன், வாசிப்புற்கும் பின்னூட்டதிற்கும் மிக்க நன்றி சகோ. பாராட்டுதல் வேண்டி எழுதவேண்டுமென்றால் பல ‘மொக்கை’த்தனமான தலைப்புகளில் எதையாவது கிறுக்கிக்கொண்டு, என்னைப்பாராட்டுங்கள் என்று ரசியமாக யாருக்காவது குறுந்தகவல் அனுப்பிக்கொண்டிருக்கலாம். எனது நோக்கம் அதுவல்ல –

  4. shukku
    October 31, 2013 at 1:39 am

    உங்களை நிச்சயம் பாராட்டியேயாக வேண்டும்.ஏனென்றால் நீங்கள் வெ ளிப்படையாக ஆண் பெண் உறவு குறித்து அலுவலக நண்பர் செய்கை மூலமாக உங்கள் எண்ணங்களை பதிவிட்டதற்கு.
    ஆண் பெண் நட்பு பழக்கம் இயல்பாக காமத்தில் முடியும் அது இயற்கையும் கூட.உங்கள் நண்பர் பெண்ணை வசியப்படுத்தவும்,வசப்படுத்தவும் தொழிலாக வைத்திருக்கிறார்.அவர் தன்னையறியாமல் பெணகளின் காமப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்,தன் வலையில் வீழ்த்துவதாக நினைத்துக்கொண்டு,பாவம் பரிதாபத்துக்குரியவர்.அவர் செய்கைகளை நியாயப்படுத்த வேண்டாம்.உணர்வுகளை கட்டுப்படுத்தி உறவுகளை மேம்படுத்துவதில் தான் விலங்கினின்று மேம்படுகின்றான் .உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...