உலகின் எங்கோ ஒரு மூலையில் வாழும் பத்துப் பதினைந்து சீனர்கள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் தூய்மையான தமிழில் பேசுகின்றார்கள். அற்புதமானத் தமிழ் நிகழ்ச்சிகளைப் படைக்கின்றார்கள். புதிய புதிய தமிழ்க் கலைச் சொற்களைப் பயன்படுத்துகின்றார்கள். சீனாவிலே ஒரு தமிழ் வானொலி சிந்து பைரவி பாடுகிறது. அந்தத் தமிழைக் கேட்கும் போது நம் நெஞ்சம் எல்லாம் ஆனந்த ராகம் பாடுகின்றது.
தமிழனாகப் பிறந்து, தமிழனாக வளர்ந்து, தமிங்கிலம் பேசும் ஒரு நவீனமான ஆடம்பரத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர்களோ கண்ணுக்குத் தெரியாத ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் அனைவரும் தமிழராய்ப் பிறக்காத அசல் சீனர்கள். அவர்களைப் போன்றவர்கள்தான் இப்போதைக்கு தமிழ்மொழியின் உயிர்நாடிகள். நம்முடைய அந்திவானத்தில் மழை பெய்கின்றது.
ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை. ஐம்பது வருடங்கள். முடிந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதியுடன் அரை நூற்றாண்டுகள். மறுபடியும் சொல்கிறேன் 50 ஆண்டுகள். சென்ற 2012-ஆம் ஆண்டு, சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு பொன்விழா கொண்டாடியது. வாழ்த்துகிறோம்.
சீனாவில் இருந்து தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் தொடங்கியது. நாள் தோறும் ஒரு மணி நேர ஒலிபரப்பு. காலை நேர ஒலிபரப்பு மலேசிய நேரப்படி காலை 10.00 முதல் 11.00 வரை. ஒரு மணி நேர ஒலிபரப்பு. மலேசியர்கள் சிற்றலை 25.31 அலைவரிசையில் அந்த ஒலிபரப்பைக் கேட்கலாம். மறு ஒலிபரப்பு இரவு 10.00 முதல் 11.00 வரை. அந்த நேரத்தில் அலைவரிசை மாறுகிறது. சிற்றலையில் 21.19 அலைவரிசை.
சீன அனைத்துலகப் பகுதி உலகின் 43 மொழிகளில் ஒலிபரப்பு செய்கிறது. இந்திய மொழிகள் என்று எடுத்துக் கொண்டால் தமிழ், இந்தி, வங்காளம், உருது ஆகிய நான்கு மொழிகள். ஆனால், அனைத்துலக ஒலிபரப்பில் தமிழ் மொழிக்கு மட்டுமே அதிகமான ஆதரவு. 2011-ஆம் ஆண்டு மட்டும் 530,000 கடிதங்களும் மின்னஞ்சல்களும் நேயர்களிடம் இருந்து கிடைத்தன. கடிதங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள்.
நம்முடைய உள்ளூர் வானொலிச் சேவைகளுக்குக் கிடைப்பதைவிட கூடுதல் என்றே சொல்ல வேண்டும். அதற்காக ’ஆஹா… சிறந்த இசையை’க் குறைத்து எதுவும் சொல்வதாக நினைத்துவிட வேண்டாம். ’மின்னல்’ தூய்மையான தமிழில் நல்ல சிறப்பான நிகழ்ச்சிகளைப் படைத்து வருகிறது. பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டித்தான் ஆக வேண்டும். இரண்டுமே நல்ல அருமையான சேவைத்தளங்கள். என் பிள்ளைகள் எப்போதும் எனக்குச் செல்லப் பிள்ளைகள்.
சீனத் தமிழ் ஒலிபரப்பில் 15 சீனர்களும், சென்னையைச் சேர்ந்த மரியா மைக்கல், அந்தோனி கிளித்தஸ் என இரு தமிழர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவரும் சீன அறிவிப்பாளர்களின் தமிழ்மொழியைச் செப்பனிட்டுச் சீர்மை செய்கின்றனர்.
தமிழ்மொழி உலகில் எந்த ஒரு நாட்டின் தனிப்பட்ட தேசிய மொழியாக இல்லை. அதுவே சீனத் தமிழ் ஒலிபரப்பிற்கு ஒரு குறையாகவும் இருந்தது. அதனால், மற்ற மொழி ஒலிபரப்புகளைச் சார்ந்தவர்கள், தமிழ் ஒலிபரப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. இருந்தாலும் தமிழ்மொழிக்கு கிடைத்து வரும் அமோகமான வரவேற்பு இருக்கிறதே, அது மற்ற மொழிகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஒரு வழி பண்ணிவிடுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்தச் சீனத் தமிழ் ஒலிபரப்பிற்கு 300 ரசிகர்கள் சங்கங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதுவரையில் இந்தியாவில் இருந்து 40,000 ரசிகர்கள் அந்த வானொலியில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து இருக்கிறார்கள். உலகம் முழுமையும் ஓர் இலட்சம் வாடிக்கையான ரசிகர்கள். மலேசியாவில் இருந்து பலர் ஆதரவை வழங்கி வருகிறார்கள். அவர்களில் அடியேனும் ஒருவன். பதிவு செய்து கொண்டவர்களுக்கு டி-சட்டைகள், சஞ்சிகைகள், செய்திக் கடிதங்கள், கைப்பைகள் போன்றவை அதிர்ஷ்டக் குலுக்கல் மூலமாகக் கிடைக்கின்றன. ஆண்டுதோறும் சீன வானொலிக்கு வரும் கடிதங்களில் தமிழ் நேயர்களின் கடித எண்ணிக்கைதான் முன்னிலை வகிக்கிறது.
இன்னும் ஒரு விஷயம் தெரியுமா. 2010-ஆம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு எப்.எம். எனும் பண்பலை வரிசை 102-இல் நான்கு மணி நேர ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
சீனத் தமிழ் ஒலிபரப்பில் எப்படி பதிவு செய்வது என்று கேட்கிறீர்களா. http://tamil.cri.cn/ எனும் இணைய முகவரிக்குச் சென்று பதிந்து கொள்ளுங்கள். கடிதம் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின், வான் அஞ்சல் முகவரி:TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL, P.O.Box 4216, BEIJING, P.R.CHINA 100040. மின்னஞ்சல் முகவரி:tamil@cri.com.cn. கைப்பேசியின் வழியாகக் குறுந்தகவல் அனுப்ப:008618810535929.
தவிர உலகின் மற்ற தமிழ் ஒலிபரப்புகளை http://www.tamil.listenradios.com/china-radio-international-tamil/ எனும் இணைய முகவரியிலும் கேட்கலாம். பி.பிசி; ரேடியோ ஆஸ்திரேலியா, லண்டன், சென்னை, சிங்கை, ஸ்ரீலங்கா, கனடிய வானொலி, பிரெஞ்சு வானொலி போன்றவை மற்ற வெளிநாட்டு ஒலிபரப்புகள் ஆகும். ஏறக்குறைய பதினைந்து நாடுகளில் இருந்து தமிழ் ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அனைவரும் சீனர்கள்தான்; அவர்களில் இருவரைத் தவிர. சீன அரிவிப்பாளர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளைப் படித்தனர். தமிழ்மொழி இலக்கணத்தில் தேர்ச்சியும் பெற்றவர்கள்.
சீனப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, பெய்ஜிங் ஒலிபரப்புக் கல்லூரியும் இருக்கிறது. தமிழ் பட்டப்படிப்பு 1960-இல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத்தில் 20 மாணவர்களும் அதன் பின் 1963-இல் 20 மாணவர்களும் சேர்ந்து படிக்கத் தொடங்கினர். அந்தச் சமயத்தில் அவர்களுக்குத் தமிழைக் கற்றுத்தர இலங்கையில் இருந்து மாகறல் கந்தசாமி என்ற தமிழறிஞர் சென்றார். இவரை அடுத்து சின்னத்தம்பி, சாரதா சர்மா, முனைவர் ந. கடிகாசலம், ராஜாராம், கிளீட்டஸ் போன்றவர்கள் விரிவுரையாளர்களாகப் பணிபுரிந்தனர்.
தொடக்க காலத்தில் சீனப் பல்கலைக்கழகத்தில், தமிழ் கற்ற மாணவர்களைக் கொண்டே முதல் தமிழ் ஒலிபரப்பு 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது அதன் பெயர் “பீகிங் வானொலி’. அதன் பின் “பெய்ஜிங் வானொலி’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இன்று “சீன வானொலி’ என்று தமிழிலும் “சீனா ரேடியோ இண்டர்நேஷனல்’ என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது.
சீனத் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தொடக்க காலத்தில் அரை மணி நேரமாக இருந்த தமிழ்ச் சேவை 2004 ஆம் ஆண்டு முதல் ஒரு மணி நேரச் சேவையாக உயர்வு கண்டது. சிற்றலையில் ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிற்றலை வானொலிப் பெட்டிகள் வழியாக மட்டுமே கேட்க முடியும். தென்கிழக்காசிய நாடுகளுக்குப் பண்பலையில் இன்னும் ஒலிபரப்பு செய்யப்படவில்லை.
இவர்களின் நிகழ்ச்சிகளில் சீன வரலாற்றுச் சுவடுகள், சீன உணவு வகைகள், சீனாவில் இனிய பயணம், சீனப் பண்பாடு, சீனக் கதைகள், சீனச் சமூக வாழ்வு, சீன மகளிர் நலன்கள், சீன இசை நிகழ்ச்சி போன்றவை சீனாவின் கலை கலாசாரங்களை அறிந்து கொள்ள உதவும் தரமான நிகழ்ச்சிகள்.
“தமிழ் மூலம் சீனம்’ எனும் நிகழ்ச்சி, ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றது. மிக மிக எளிதாக, அனைவருக்கும் புரியும்படியாக அந்த நிகழ்ச்சியைப் படைத்து வருகின்றனர். அனைத்துப் பாடங்களையும் இணையத்திலும் தொகுத்து வைத்து இருக்கிறார்கள். அது மட்டும் அல்ல. பாடத் திட்டங்களின்படி நூல்களும் அச்சிடப்படுகின்றன. அவற்றை ரசிகர்களுக்கு இலவசமாகவே அனுப்பியும் வைக்கின்றனர். ஆர்வம் உள்ள எவரும் இந்த நூல்களைக் பெற்றுக் கொள்ளலாம். சீன மொழியை எளிதாகவும் கற்றுக் கொள்ளலாம்.
நேயர்களும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கக் கொள்ள வேண்டும் என்பதற்காக நேருக்கு நேர், நேயர் நேரம், நட்புப் பாலம், உங்கள் குரல், கேள்வியும் பதிலும், நேயர் கடிதம், நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பாகி வருகின்றன.
இதுதவிர சீன வானொலி நிலையம் தமிழ் நேயர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பொது அறிவுப் போட்டியை நடத்தி வருகிறது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நல்ல பரிசுகளை வழங்குகிறது. சிறப்புப் பரிசாக ஒரு நேயரை இலவசமாகச் சீனாவிற்கு அழைத்து வருகின்றது.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட தமிழக நேயர்கள் இலவசப் பயணம் மேற்கொண்டு உள்ளனர். மலேசியாவில் இன்னும் இல்லை. உங்களுக்கும் ஆசைதானே. அப்படி என்றால் உடனே சீனத் தமிழ் ஒலிபரப்பின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். ஒரு வி.ஐ.பி.-ஆக சீனா சென்று வரலாம்.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சீனர்கள் அனைவரும் தங்களுடைய பெயர்களைத் தூயத் தமிழில் மாற்றிக் கொண்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் சுந்தரம், கலையரசி, மலர்விழி, வாணி, கலைமகள், கலைமணி என்று மாறி விட்டன. அவர்களுக்குத் தமிழின் மீது இருக்கும் நெஞ்சார்ந்த உணர்வுகளையும் தாக்கத்தையும் சற்றே நினைத்துப் பாருங்கள். ரசிகர்கள் மனங்களில் அந்தத் தமிழ்ப் பெயர்கள் இன்றும் ஆனந்தக் கீர்த்தனங்களாக ஆலாபனை செய்கின்றன. இங்கே பாருங்கள். சிங்காரம் என்பது சிங் என்று மாறுகிறது. தங்கம்மா என்பது தேங் என்று மாறுகிறது. சங்கர் என்பது சங்கா என்று மாறிவிட்டது.
Zhu Juan Hua எனும் சீனப் பெண்மணி தமிழ்ப் பிரிவின் தலைவர். அவருடைய பெயரைக் கலையரசி என்று மாற்றிக் கொண்டார். தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1975 ஆம் ஆண்டு தமிழ்ப் பிரிவில் சேர்ந்தார். இதுவரை தமிழ்நாட்டிற்கு ஆறுமுறை கல்விப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார்.
Cai Jun என்பவரும் Zhao Luo Shan என்பவரும் துணைத் தலைவர்கள். இவர்களும் தங்கள் பெயர்களைத் தமிழில் மாற்றிக் கொண்டனர். சாய் ஜுன் என்பது வாணி என்று மாறியது. சாவ் லு சான் என்பது கலைமகள் என்று மாறியது. இப்போது ரசிகர்களுடன் பேசும் போது தமிழ்ப் பெயர்களிலேயே தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர். ஆகக் கடைசியாக, Chen Juan எனும் 23 வயது தாரகை தமிழ்ப் பிரிவில் சேர்ந்துள்ளார். அவரின் தமிழ்ப் பெயர் தேவி. அங்கேயும் ஒரு ஸ்ரீ தேவி. ஓர் அழகு ஓவியம்.
சீனப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவில், 2012-ஆம் ஆண்டில், 15 சீன மாணவர்கள் தமிழ்மொழியைத் தலைமைப் பாடமாகப் (major) பயின்று வருகின்றனர். இவர்களுக்குப் பொருத்தமான நூல்கள் அங்கே குறைவாகக் கிடைக்கின்றன. வாய்மொழியாக உரையாடுவதற்கு, அருகாமையில் அசல் தமிழர்கள் யாரும் இல்லை. அதனால், தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து உரைநடைத் தமிழைக் கற்றுக் கொள்கின்றனர்.
இங்கே பொழுது போகவில்லையே என்று திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். அங்கே மொழியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காகத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். கரும்பு இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்கள். நினைவிற்கு வருகிறது. அவர்கள் பார்க்கும் தமிழ்த் திரைப்படங்களில் ரஜினிகாந்த் முதல்நிலை ஹீரோவாக இருக்கின்றார். அவர்களுக்குத் தமிழ்ப்பாடல்களின் இனிமையும் இசையும் பிடித்துப் போய்விட்டன. அங்கே இருப்பவர்களைப் புரட்டிப் போட்ட ஒரு பாடல் இருக்கிறது. எது தெரியுமா? பிறகு சொல்கிறேன். அதைக் கேட்டதும், உண்மையிலேயே அவர்கள் சுத்தமான தமிழர்களாக இல்லாமல் போய்விட்டார்களே என்று மனவேதனை.
இருந்தாலும் சில சமயங்களில் கதைக்கும் பாட்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர். ரொம்ப லேட்டாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இன்னொரு தகவல். தமிழ் நடிகைகள் கொஞ்சம் குண்டாக இருக்கிறார்களாம். எந்த நடிகையைப் பார்த்துச் சொன்னார்களோ தெரியவில்லை.
சீனாவில் தமிழ்மொழி வளர்கிறது. சில இளம் நெஞ்சங்கள் தமிழைக் கற்றுக் கொள்ள அங்கே போராடிக் கொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தினமலர், ஆனந்த விகடன், குமுதம் போன்றவை வாடிக்கையாகப் போகின்றன. மலேசியாவில் வெளிவரும் தமிழ் இதழ்கள் எதுவுமே அங்கே கிடைப்பது இல்லையாம். மின்னஞ்சல் வழியாக எனக்கு செய்தி அனுப்பி இருந்தார்கள்.
அங்கே இருக்கும் ஒருவர் கேட்டுக் கொண்டது. பெயர் வேண்டாம். “நாங்கள் ஒரு சின்னக் குழுவாக இருக்கிறோம். ஆனால், தமிழ்மொழி, கலாசாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாய் இருக்கிறோம். மலேசியாவில் இருந்து தாளிகைகள் கிடைத்தால் பெரிய உதவியாக இருக்கும்” மனதைத் தொடுகின்ற வசனங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.
அவர்கள் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்.
காற்றின் மொழி ஒலியா இசையா?
பூவின் மொழி நிறமா மனமா?
கடலின் மொழி அலையா நுரையா?
காதல் மொழி விழியா இதழா?
ஓர் அன்பார்ந்த வேண்டுகோள். தமிழைப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அந்தச் சின்னஞ் சிறுசுகளுக்கு நாம் ஏதாவது உதவி செய்யலாம் இல்லையா. அவர்கள் பணம் காசு கேட்கவில்லையே. படிப்பதற்கு தமிழ்ப் புத்தகங்கள், தமிழ்த் தாளிகைகள் தானே கேட்கிறார்கள். மலேசியாவிலும் தமிழ் வளர்கிறது என்பதை நாம் அவர்களுக்கு அறியப்படுத்த வேண்டும். இது என்னுடைய அன்பார்ந்த வேண்டுகோள்.
முடிந்தால் மாதத்திற்கு ஒரு முறை, ஒரு மலேசியத் தமிழ்ச் தாளிகையை அனுப்பி வையுங்கள். படித்துப் பார்த்து நம் மலேசியத் தமிழர்களைக் கொஞ்சம் பெருமையாக நினைத்துப் பார்க்கட்டும். அஞ்சல் செலவு இரண்டு ரிங்கிட்டிற்குள் இருக்கும்.
அவர்களின் முகவரி:
TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL, P.O.BOX 4216, BEIJING, P.R.CHINA 100040.
நீங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே போன்ற ஒரு கட்டுரையை “ஜப்பான் வானொலி” தமிழ் ஒலிபரப்புக்காக எழுதியாதக நினைவு. அப்போது நீங்கள் கேட்டுக் கொண்டதைப் போல வரிந்து கட்டிக் கொண்டு கடிதங்கள் எழுதினோம். ஆனால் இப்போது வானொலியைக் காரில் போகின்ற நேரம் தவிர மற்ற நேரங்களில் கேட்பதில்லையே! உள்ளூரில் உள்ள தமிழன் தமிழையே அழிப்பதற்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து செயல் படுகிறான்! இருந்தாலும் நாம் வெற்றி பெறுவோம்! உஙகளுக்கு எனது வாழ்த்துகள்!