முத்துசாமி செட்டியாரும் ஜப்பான்காரியின் ஆவியும்

bala picஎதிரிலுள்ள கார்கள்கூட தெரியாமல்போன இருள் கவிழ்ந்த ஒரு மழைப்பொழுது. நீண்ட வாகன நெரிசல். அம்மோய் கடைக்கு உடனே சென்று அமலாவை ஏற்ற வேண்டும் என்கிற தவிப்பில் மணியம் கால்கள் நடுங்க காருக்குள் இருந்தார். அவள் பிரத்தியேக வகுப்பு முடிந்து இந்நேரம் மழைக்கு ஒதுங்கி அம்மோய் கடையோரம் நின்று கொண்டிருப்பாள். அமலா இந்த வருடம் ஆறாம் ஆண்டு. கொஞ்சம் கூடுதலான கவனம் செலுத்த வேண்டிய சூழல். அன்றாடம் மாலை பிரத்தியேக வகுப்பு. மணியத்திற்கு வேலை முடிந்து உடனே சிறுநகரத்தின் பரப்பரப்பிற்குள் நுழைந்து சமாளிக்க வேண்டிய நெருக்கடி.

கார்கள் மெல்ல நகர்ந்த அடுத்த கணமே மீண்டும் வரிசை கட்டி நின்றன. கண் சிமிட்டும் நேரத்தில் உடனே எரிந்து மீண்டும் சிவப்பிற்குத் திரும்பிவிடும் சமிக்ஞை. தூரத்திலிருந்து மணியம் வெறுப்புடன் அந்தச் சமிஞ்சை விளக்கின் மீது தனது பார்வையைப் படரவிட்டார். சீன மதுபான கடையிலிருந்து இந்தியர் ஒருவர் நீல வர்ண சைக்கிளை எடுத்துக் கொண்டு நடு சாலைக்குள் புகுந்தார். மணியத்தின் காருக்கு எதிரில் வந்துவிட்டு திடீரென நின்றார். அங்கிருந்து அசையவில்லை. வெகுநேரம் எங்கேயோ உற்றுக் கவனித்தார்.

மழை கொஞ்சம் வேகமாகப் பிடிக்கத் துவங்கியது. மணியம் வைப்பரின் வேகத்தைக் கூட்டிவிட்டு வெள்ளைப் பூத்தக் கார் கண்ணாடியின் வழி எதிரிலிருக்கும் சாலையைக் கவனித்தார். அந்தச் சைக்கிள்காரன் இன்னமும் நகரவில்லை. முன்னாடியுள்ள கார்கள் மெல்ல நகர்வதைப் போல இருந்ததும் மணியத்திற்குக் கூடுதல் கலவரம் ஏற்பட்டது. உடனே ஹார்னை வேகமாக அடித்தார். மழை சத்தத்தில் அது சட்டென தூரமாக ஓடிப்போய் மறைந்தது.

“என்னா இவன் குடிக்கார….நாயி..” வாய்க்குள் முனகிவிட்டு அந்தச் சைக்கிள்காரனை நெருங்கினார்.

அவன் மேலும் கூர்ந்து எங்கோயோ பார்த்தான். மணியத்திற்கு ஏதோ சந்தேகம் சடாரென்று மூளையைப் பிசைந்தது. கண்ணாடியின் வழி பின்னாடி பார்த்தார். பஞ்சாபி சாக்குக் கடையின் நடுவில் அவருடைய கார் நின்று கொண்டிருந்தது. இடதுப்புற கண்ணாடியின் வழி மேலே பார்த்தார். முத்துசாமி செட்டியாரின் கட்டிடம். மீண்டும் அந்தச் சைக்கிள்காரன் பக்கமாகத் திரும்பும்போது அவன் அங்கில்லை. கார்கள் நகர்ந்தபடி தெரியவில்லை. மழையில் நகரம் நனைந்து கொண்டிருந்தது. மீண்டும் மணியம் முத்துசாமி செட்டியார் கட்டிடத்தைக் கவனித்தார். ஒரு வெள்ளைக்குடை. சாலையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சிறுமி. அவளின் கையை யாரோ இறுக்கமாகப் பிடித்திருக்கிறார். தரையைத் தொடும் நீளமான கவுன். குடை அவரின் முகத்தை மறைத்திருந்தது. மழைக் காற்றுக்கு குடை விலகியது. பவுடர் பூசப்பட்ட வெண்மையான முகம். கண்களைச் சுற்றி கருமை. கூந்தல் தூக்கி மேலே உருண்டையாகக் கட்டப்பட்டிருந்தது. தூரத்திலிருந்து அவளால் மணியத்தை அத்தனை கூர்மையாகப் பார்க்க முடிந்தது. திடீரென அடர்ந்த இருளில் அவளின் முகம் மேலும் பிரகாசித்தது. சாலையைக் கடந்து எங்கோ போய்க்கொண்டிருந்தாள்.

2

கருப்பாறு பாலத்திலிருந்து 20 மீட்டர் தூரத்திலுள்ள பஞ்சாபி சாக்குக் கடைக்கு நடுவிலிருந்து மேலே பார்த்தால் முத்துசாமி செட்டியார் கட்டிடம். முதல் இரண்டு மாடி செலவு பொருள் கடை. கத்திரிப்பு வர்ணத்தால் சாயம் பூசியும் மழைக் காலத்தில் தொய்ந்து வெளுத்துப்போன கலர். அதற்கும் மேலேயுள்ள கட்டிடம்தான் ஜப்பான்காரி இறந்துபோய் ஆவியாக உள்ளே வாழ்கிறாள் என அங்குள்ள மக்களால் சொல்லப்படும் கட்டிடம். பழுப்பேறி பல நாள் காக்கைகளும் குருவிகளும் எச்சமிட்டு நாசப்படுத்திய புராதன தோற்றம்.

முத்துசாமி செட்டியார் சுங்கைப்பட்டாணி சிறுநகரத்தில் மிகப்பெரிய வணிகர். 1930கள் தொடங்கி 1943வரை பல கட்டிடங்கள் வைத்திருந்தார். இன்னும் சில கிலோ மீட்டர்கள் தள்ளி இருக்கும் சில கட்டிடங்களும் அவரிடமிருந்து சீனர்கள் வாங்கியதாகச் சொல்லப்படுகின்றது. 1942களில் அவரிடமிருந்த கடைசி மூன்று மாடி கட்டிடத்தை ஜப்பான்காரர்கள் பறித்து மருந்துகளைப் பதுக்கி வைக்கப்பயன்படுத்தினார்கள். அங்கு போரில் அடிப்பட்ட அல்லது நோய் வந்தவர்களுக்கு மருந்து போடும் வேலையைச் செய்து கொண்டிருந்தவள்தான் அவள். ஜப்பான்காரி.

மூன்றாவது மாடியிலேயே தங்கிவிடுவாள். இரவில் உணவுக்காக மட்டும் கீழே இறங்கி வருவாள். வெண்ணிற ஆடை. நீளமாகத் தரையைத் தொடும் கவுன் அது. தலை முடி மேலே தூக்கிக் கட்டப்பட்டிருக்கும். வட்டமான முகம். நிலவு வெளிச்சத்தைத் தன் உடல் முழுக்கப் பூசிக் கொண்டவளைப் போல முத்துசாமி செட்டியார் கட்டிடத்தின் எதிர்புறமுள்ள பெரிய சந்திற்குள் நுழைவாள். யாருக்கும் நீண்ட நேரம் அகப்படாத ஒரு இளம்தென்றல் அவள். அவள் வருகைக்காக அந்தச் சிறுநகரமே காத்திருக்கும்.

பெரிய சைக்கிளில் அவளைக் கடந்துபோகும் ஜப்பான் இராணுவ வீரர்கள் ஏதோ பேசிக் கிண்டலடிப்பார்கள். பெரிய சந்தின் இரு பக்கங்களிலும் நெருக்கிக் கொண்டிருக்கும் காப்பி கடைகளில் எரியும் மஞ்சள் வெளிச்சத்தில் அவள் காணாமல் போகும் தேவதை. அவளைக் கவர நினைத்த நிறைய சீன சிறுமுதலாளிகளை ஜப்பான்காரர்கள் கடத்திக் கொண்டு போய் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

சில வருடங்களுக்குப் பிறகு அவளை எங்கும் பார்க்க முடிவதில்லை. முத்துசாமி செட்டியார் நகரத்தை விட்டு எங்கோ தலைமறைவாகியிருந்த சமயம். 4-5 ஜப்பான் இராணுவத்தினர் அவளை அந்த மேல்மாடியிலேயே வைத்துக் கற்பழித்துக் கொன்றுவிட்டதாகக் கூட பேசப்பட்டது. ஆனால், அவளைப் பற்றி மேலும் மேலும் சில வருடங்கள் பல கதைகள் பேசப்பட்டு வந்தன. ஒவ்வொரு காலத்திலும் அந்தக் கதை பல மர்மங்களால் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே வந்தன.

3

மஞ்சுளாவிற்கு மழை என்றால் பிடிக்காது. குறிப்பாக மழைக்காலத்தில் நகரத்தின் பக்கம் போகவே விரும்பமாட்டாள். ஆனால், இன்று காரை எடுத்துக் கொண்டு போயே ஆக வேண்டிய கட்டாயம். மஞ்சுளாவின் கடைசி மகள் வினிதாவிற்குப் புதியதாகப் புத்தகப்பை ஒன்று வாங்கியே தீர வேண்டும். நேற்று அவளுடைய புத்தகப்பை கனம் தாங்காமல் கிழிந்து தொங்கிவிட்டது. உடனே முத்துசாமி செட்டியார் கட்டிடத்தின் கீழ்மாடியிலுள்ள கடையில் அதே மாதிரி ‘ஏங்கிரி பேர்ட்’ படம் போட்ட புத்தகப்பையை வாங்குவதற்காக விரைந்தாள். நடுவில் வாகன நெரிசல் வேறு அவளுக்கு அதிகபட்சமாக எரிச்சலை உண்டாக்கியது. எப்படியோ காரை சாலை ஓரத்தில் போட்டுவிட்டு இறங்கினாள்.

மழையில் தன் உடல் நனையாமல் இருக்க வேண்டும். ஆகவே. பெரிய குடையை எடுத்து விரித்தாள். தன் மகளை இடுப்போடு அணைத்துக் கொண்டு சாலையைக் கடக்க நின்றிருந்தாள். செட்டியாரின் கட்டிடத்திற்கு எதிர்புறம் வாகன நெரிசலால் திணறிக்கொண்டிருந்தது. கார்கள் நகர முடியாமல் ஒன்றுக்கொன்று முரடு பிடித்துக் கொண்டிருந்தன. எப்படியும் சாலையைக் கடந்தாக வேண்டும். மழை கொஞ்சம் வேகமாகத் தொடங்கியது. பெரிய சாலையின் அந்தப் பக்கத்தில் சீன மதுபான கடை. அங்கிருந்து சட்டென கண்களுக்கு அகப்படாத ஒரு வர்ணத்திலான சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒருவர் வெளியேறினார். அவர் பயங்கரப் போதையில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு காருக்கு முன் போய் நின்றுவிட்டான். வினிதா மழையில் நனையாமல் இருக்க தன் அம்மாவை மேலும் நெருக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டாள். வெள்ளைக் குடை காற்றில் பறப்பது போல ஆடியது. அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றாள். மீண்டும் அந்தச் சைக்கிள்காரரின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள். அவர் போய் நின்ற கார் சரியாக முத்துசாமி செட்டியாரின் கட்டிடத்திற்கு முன்புறமாக இருந்தது. மழை இலேசான இருளில் பெய்து கொண்டிருந்தது.

அந்த மதுபான கடையிலிருந்து வெளியேறிய அந்தக் குடிகாரனுக்கு எதிரில் இருந்த கார் கண்ணாடியின் ஊடே ஏதாவது தெரிகிறதா எனப் பார்த்தாள். அல்லது அந்தக் காரில் உள்ளவர் கீழே இறங்கி அந்தக் குடிக்காரரை அடிக்கவாவது செய்வார் எனக் காத்திருந்தாள். மழை நீர் கண்ணாடியிலிருந்து தொடர்ச்சியாகச் சரிந்து கொண்டிருந்தது. மங்கலாகிவிட்ட அந்தக் கண்ணாடிக்குள் பார்க்க வேண்டுமென்றால் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்மழை  அதற்கு இடமளிக்கவில்லை. சாலையைக் கடக்கலாம் என நினைத்து முன்னேறியபோது அந்தக் காரின் பின்புறம் வந்து சேர்ந்தாள். இப்பொழுது கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. உள்ளே இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் முன் இருக்கையில் இருந்தார். பின்னாடி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். வெண்ணிற ஆடை. அவள் திரும்பும்போது முகத்தைக் கவனிக்க நேர்ந்தது. வெண்மையான முகம். பளிச்சென்று பிரகாசித்தது. கண்களைச் சுற்றி கருமை. ஏதோ ஜப்பான்காரியைப் போல இருந்தாள்.

4

நான் முத்துசாமி செட்டியாரின் கடைசி பேரன். 1948களில் சுங்கைப்பட்டாணியைவிட்டு ஓடிப் போய் கொஞ்ச நாள் செட்டியார் சியாமில் தங்கியிருந்தார். அவருடைய அனைத்துச் சொத்தும் விற்கப்பட்டன. ஒருவேளை கஞ்சிக்கு வழியில்லாமல் செட்டியார் மலேரியா காய்ச்சலால் இறந்துபோன சமயத்தில் அவருக்கு இரண்டு பையன்கள். முதல் பையனின் மகன் தான் நான். குமரகுரு.

ஜித்ரா காட்டோரங்களிலும் வயலோரங்களிலும் வாழ்ந்து வாழ்ந்து போராடி கசந்துபோய் மீண்டும் அம்மா சுங்கைப்பட்டாணிக்கு வந்தபோது செம்பனை காடுகளில் வேலை செய்ய முடியாமல் இந்தியர்கள் சிறுநகர் வாழ்க்கையைத் தேடி வந்திருந்தார்கள். முந்தைய முத்துசாமி செட்டியார் கட்டிடத்தின் தெருவிலும் சிலர் படுத்திருந்தனர். தன் வாழ்க்கையை எங்குத் தொடங்குவது எனத் தெரியாமல் அல்லல்பட்டு ஒரு பலகை வீடு எடுத்து அங்கேயே காலம் நகர்ந்தது. தாத்தாவைப் பற்றி சொல்லக்கூட யாரும் இல்லாத என் சிறுவர் பருவம் பெரும்பாலும் சுங்கைப்பட்டாணி தெருக்களில் கழிந்தது.

‘டேய்ய்ய்ய்.. எங்க தாத்தா யாரு தெரியுமா? முத்துசாமி செட்டியாரு.. இந்தச் சுங்கபட்டாணியே அவரோடத்தாண்டா” எனச் சொன்னால் அடி விழும். மதுபானக் கடையிலிருந்து விரட்டியடிப்பார்கள். போதை தலைக்கேறியதும் தாத்தா ஒரு சுமையைப் போல மூளைக்குள் கணக்கத் துவங்கிவிடுவார். அவரைப் பற்றி புலம்பியே ஆக வேண்டும் எனத் தோன்றும்.

அது மிகப்பெரிய் சாபம் என அம்மா சொல்லியிருக்கிறார். அதை நான் பார்த்ததில்லை. ஆனால், ஒவ்வொரு நாளும் அவை பின்தொடர்வதை உணர்கிறேன். வாழ்க்கையின் தோல்விக்கு முன் மிச்சமாக இருப்பது எங்கோ கேள்விப்பட்ட தாத்தாவின் பழைய புகழ் மட்டுமே. அதை அவ்வப்போது ஓரமாக வைத்துக் கொண்டே வாழ்க்கையை ஓட்டியாயிற்று.

“டேய்ய்ய்.. உங்க தாத்தான் அந்த ஜப்பான்காரியைக் கொன்னுட்டான்னும் ஆளுங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். கொன்னுட்டு தப்பிச்சி ஓடிட்டான். அந்தச் சாபம்தாண்டா” என அம்மா இரவு முழுக்கப் புலம்பிய நாட்களில் பாதி போதையிலிருந்து தப்பித்து வெளியேறியது ஒரு துர்கனவைப் போல இருக்கும்.

அன்று மழை நேரம். அதிகபடியான விரக்திக்கு ஆளிகியிருந்தேன். ஜப்பானிகாரி கனவில் வந்து மெல்ல என்னைத் துரத்தத் துவங்கிய காலம். எங்குப் பார்த்தாலும் அவள் இருந்தாள். அவளின் சாபத்தின் நாக்கு மிக நீளமானது. அம்மாவின் வார்த்தைகளிலிருந்து அவள் உருப்பெற்று வந்தாளா அல்லது மூளைக்குள் கசிந்து கொண்டிருந்த முத்துசாமி செட்டியாரின் நினைவலைகளின் மூலம் அவள் என்னைக் கண்டுபிடித்தாளா எனத் தெரியவில்லை. ஆனால், அவள் என்னைக் குரூரமாகப் பார்க்கத் துவங்கினாள். அவளின் மூச்சை என்னால் உணர முடிந்தது.

மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்திருந்தது. நகரம் இருளுக்குள் நசுங்கியது. இனி இந்த மதுபான கடையில் இருந்தால் அது கலவரத்தில் முடியலாம் எனத் தோன்றியது. எல்லோரும் என்னை வெறிக்கொண்டு கவனிப்பது போல இருந்தது. உடனே குவளையில் மீதி இருந்த பீரையும் உறிஞ்சிவிட்டு முன்பக்கம் வைத்திருந்த சைக்கிளை எடுத்தேன். மழை ஒரு பொருட்டல்ல. மழையிலும் வெயிலிலும் அலைந்து அலைந்து மறுத்துப் போன உடல். நனைந்துகொண்டே பெரிய சாலையைக் கடந்தேன். கும்மிருட்டு சட்டென பரவியது. சாலைக்கு நடுவில் வந்து நின்றுவிட்டேன். மேலே எக்கிப் பார்த்தால் முத்துசாமி செட்டியார் கட்டிடம் தெரிகிறது. மூன்றாவது மாடியில் கவிழ்ந்திருந்த இருள் மனத்தை மிரட்டியது. பஞ்சாபி சாக்குக்கடையின் ஓரம் இருந்த பெரிய சந்தில் திடீரென மஞ்சள் பல்ப் பிரகாசமாக எரிகிறது. மழை நிற்கவில்லை. முத்துசாமி செட்டியார் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து அவள் இறங்கி வந்தாள்.

தரையைத் தடவிக் கொண்டிருக்கும் வெண்ணிற கவுன். முகம் முழுக்க வெண்மை. இரு கண்களைச் சுற்றியும் கருமை. பெரிய கண்கள். தலை முடியை ஒன்றாகச் சேர்த்து உச்சியில் கட்டியிருந்தாள். தலையில் ஏதோ சொருகியிருந்தாள். ஒய்யாரமாய் சாலையைக் கடப்பதற்காக வந்தாள். ஜப்பான்காரி இரண்டு பக்கமும் பார்த்துவிட்டுச் சாலையைக் கடக்கும்போது அப்பொழுது சுங்கைப்பாட்டாணி நகரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது.

1 comment for “முத்துசாமி செட்டியாரும் ஜப்பான்காரியின் ஆவியும்

  1. கங்காதுரை கணேசன்
    July 21, 2013 at 12:18 am

    கதையைப் படித்தேன். கதையின் பலமே சுருக்கமான வாக்கியங்கள். அவை வேகமாக கதையை நகர்த்தி செல்கின்றன. கதையின் மையப் புள்ளியை வந்தடையும் பாத்திரங்கள் நான்கு பரிமானங்களாக காட்சிப் படுத்தப்பட்டிருப்பது கதையின் மற்றொரு பலம். கதையில் வரலாற்றுப் பின்னணிகளை மீட்டு வந்துள்ளது நல்ல முயற்சியும் சிந்தனையும் கூட. வாழ்த்துகள்…..

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...