பித்தமேறிய பட்டாம்பூச்சிகள் வேண்டியவன்
மணிக்கட்டை கீறி தற்கொலை செய்கிறான்
தூரத்து மாதா கோவிலின் மணியொலிக்கும்
இசை பின்னனியில்
விஷமருந்துகிறான் இவன்
கஞ்சா குடித்த இரவுகள்
இவன் பிணத்தை அறுக்கின்றன
சாம்பல் மேனியில் ருத்ரம்
ஆடியவன்
குட்கா வேண்டி ஓரம் சாய்கிறான்
சித்தம் கலங்குகிறது
இழுத்துவிடும் புகையில்
சொர்க்கமில்லை நரகமில்லை
சுயஇன்பத்தின் துயில் கலைந்து
வெளி வருவது துயரமானது
பிரமை தப்பியவனின்
மார்பின் குறுக்கில் ஏறி தாவுகிறது
அவனின் ஏதோ ஒரு கோடை காலம்
நினைவுகளின் காட்டிலிருந்து
வெளியேரும் ராட்சஸம் இன்னும்
கேட்கிறது அவன் மாமிச ருசியினை
பனிகொட்டுகிறது நகரத்தில்
மார்கழியென்பது தெரிகிறது குளிரில்
அவரவர் இடங்களில் படுத்துவிட்டார்கள்
நடைபாதைவாசிகள்
குரலெழுப்ப நடுங்கி பம்முகின்றன
நாயின் ஊளை
கடைசி டிரிப் முடித்த ஓட்டுனர்
ஒரு மதுப்பாட்டிலை வாங்கி சுருட்டிகொள்கிறான்
கைலியில்
எவனோ ஒருவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை
மதுவருந்திய போதையில் இலக்கியம் பேசுகிறார்கள்
கவிஞர்கள்
தவிர்க்க முடியாத ஒரு மரணச்செய்திக்கு
அழுதுகொண்டே பயணம் செய்பவனாக நான் இல்லை
வேறெதோ ஆடவனோடு அவளைப் பார்த்தற்காக
தூங்காமல் இருக்கும் ஒரு காதலனாக
நான் இல்லை
வேலை ஒழிந்த அயற்சியில் உறக்கம்
தேடும் ஒருவனாகவும் நான் இந்த இரவில் இருக்க
நேரவில்லை
எழுத முடியாத ஒரு கவிதைக்கு
இறுதிவரிகள் யோசிக்காதே
3.எப்போது வேண்டுமானாலும் விலகும் பனி
ஒரு இருண்ட அறைக்குள்
கதவு திறந்து நுழைவதை போலதான்
இருக்கிறது
சொற்கள் திரட்டி நான் என்னை
எழுதி கொள்வது
கோபமாய் பேசியதால் அங்கிருந்து மாறினாய்
தலையில் தட்டியதற்காக
மற்றொரு வேலையையும் விட்டாய்
இருப்பவர்களோடு ஒத்துப்போக முடியாதென்று
இதற்கு முன்னிருந்த கடையிலிருந்து
விலகியதற்கு காரணம் சொன்னாய்
ஜனத்திரள் நிறைந்த சாலைகளில்
ஒரு ஜல்லியை எத்தி தள்ளி செல்லும்
நீ
எவ்வளவு தூரம் இது சாத்தியமென்று
நம்புகிறாய்
4.தற்கொலைக்கும் அஞ்சுபவன்
கண்டுகொள்ள யாருமில்லையென்ற
உங்கள் கணிப்பு சரியானது தான்
என்றாலும்
நீங்களென்னை வெளியே தள்ளுவதில்
எனக்கு எந்த நியாயங்களும் தெரியவில்லை…?
சித்ரவதைகளை ரசிப்பதில் உங்களுக்கு
ஆர்வம் இருக்குமென்றாலும்
நான் மட்டுமே உங்கள் விருப்பப்பட்டியலில்
இருப்பதுதான் எனக்கு குழப்பமாக உள்ளது
மூன்றாம் வீட்டில் வசிப்பவனின்
திறமைக்கு எந்த விதத்திலும்
சரிவராதது தான் என் நிலைமையென்பதை
நானே ஒப்புக்கொண்டதற்கு மேலும்
என்னிடம் இன்னும் உங்களுக்கு
என்ன வேண்டியதாய் இருக்கிறது…?
ஒரு டீக்கான நிச்சயம் கூட
இல்லாதவனின் கையலாகாத் தனத்தின் மீது
குத்திக்காட்டுவதில் இருக்கும் இன்பம்
ருசிகரமானதே என்றாலும்
அவன் கேட்பது கொஞ்சம் இடைவெளி
மட்டும்தான்
ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள்
தற்கொலைகள் செய்யும்போது
இவன் அதற்கும் பயந்தவனாக இருப்பது
உங்களுக்கு அவன் மீது
இளக்காரம் செய்வதற்கான
இன்னுமொரு காரணம் கிடைத்து விடுகிறது.
5.புகைமூட்டம்
எதுவுமெழுதாத வெண் காகிதத்தில்
எதையோ எழுதி பின் கிழித்துப்போட்டவன்
மேன்ஷனின் அறையைவிட்டு
டீக்குடிக்க எழுந்தான்
கணக்கினை எப்படி தீர்ப்பது
என்ற கேள்வியுடன் அறைக்கு திரும்பியவன்
சட்டையை மாற்றிக்கொண்டு
யாரையோ பார்க்க கிளம்பினான்
என்பது நமக்கு தெரிந்தது…?
பூங்காவை மூடுவதற்கான
விசில்கள் ஊதப்பட்டவுடன்
எழுந்தவன்
மெதுவாக நடப்பதற்கு
எங்கே போவதென்ற கேள்விதான் காரணமென்பது
தொன்னூறு சதவீதம் சரியானதாக இருக்கலாம்
வந்த ஒரு வருடங்களாக இதையே
செய்து கொண்டிருந்தவனின்
ஒரே ஒரு டைரி மட்டும் தான் இங்கே கிடக்கிறது
ஒன்றும் சொல்லாமல் ஒருநாள் ராத்திரி கிளம்பியவன்
நிச்சயம் அவன் ஊருக்கு திரும்பியிருக்க மாட்டான்
வெறும் ஒரு நிழலை மட்டும் நீங்கள் எங்கேயாவது
பார்த்தால்
புரியாத ஏதேதோ கிறுக்கலுடன்
சிறு தலைப்பிட்ட அவன் டையரி
இங்கே இருப்பதாக சொல்லுங்கள்