ஒருகாட்சியை அப்படியே கண்முன் விரியுமாறு விவரிப்பதை படிமம் என்று சொல்கிறோம். சங்கப்பாடல்களில் அதுவும் அகநானூற்றில் பெரும்பாலானவை படிமங்கள் கொண்டவைதான். இந்தப்படிமங்கள் எதற்கு எடுத்தாளப்படுகின்றன என்றால் உணர்வை அழுத்தமாகச் சொல்ல அதுவே ஏதுவாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ‘சுண்ணாம்புக்கல் வெடித்ததுபோல் மலர்ந்திருக்கும் வெண் கடம்ப மலர்’ என்றொரு உவமை. அந்தக்காலத்தில் எல்லாம் வீட்டுக்கு வெள்ளையடிக்க சுண்ணாம்புக்கல்லை வாங்கி வந்து நீரில்போட்டு பால்போலக் கிண்டிவிட்டு, பின் சுண்ணாம்பு மட்டையை வைத்து வெள்ளையடிப்போம். சுண்ணாம்புக்கல்லை வாங்கிவந்து நீரில் போட்டவுடன் அப்படியே வெடிக்க ஆரம்பிக்கும். சின்னப்பிள்ளையாய் இருக்கையில் அது ஒரு விளையாட்டு. தெரியாமல் எடுத்து ஒவ்வொரு சுண்ணாம்பாய் வாய்க்காலில் போட, அது சுருசுருவெனப் பொசுங்கி ஆவியெழும். கீழே வெண் கடம்ப மலரின் படம் இருக்கிறது, அதைப் பார்த்துக்கொண்டால் இந்த கற்பனையின் அழகு தெரியும்.
அப்படி மலர்ந்திருக்கும் கடம்ப மரத்தினோரம் வட்டமான பறைபோல பாதம் கொண்ட யானை வருகிறது. இப்படி வரிக்கு வரி உவமைகளைச் சொல்லி காட்சியை விவரித்தபடி செல்வது சங்கக்கவிதைகளின் இயல்பு. அந்த யானை கடம்ப மரத்தில் உரசுகிறது. அதனால் வானிலிருந்து பனி பொழிவதுபோல் கடம்ப மலர்கள் நிலத்தில் சிதறி, உழவர்கள் வெண்மையான நெல்லை உலர வைத்திருப்பதுபோல் விழுந்து கிடக்கின்றனவாம். இந்த இடம் வேங்கட மலைக்கு அப்பால் இருக்கிறது. அவர்கள் பேசும் மொழியும் வேறு. அங்கு சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே என்று புலம்புகிறாள் காதலி.
மேற்கண்ட காட்சி எதற்காகச் சித்தரிக்கப்பட்டது? மலரின் வெடிப்பு சுண்ணாம்பின் கொதிப்புக்கு ஒப்புமையாகச் சொல்லப்படுகிறது. மலர்கள் பூத்திருப்பது கார்காலம் முடிந்து வசந்தகாலம் வந்துவிட்டதைச் சொல்கிறது. அப்பூக்கள் நிலத்தில் விழுவது ஒரு சோகமான சித்திரமாக மனதில் விரிகிறதல்லவா? யானைக்கு மலரைக் குறித்து அக்கறையில்லை. அது தன் உடலின் அரிப்பு தீர மரத்தில் உரசிக் கொள்கிறது. அடுத்து வரும் பத்திகள் இன்னொரு கோணத்தில் சொல்லப்படுகின்றன. ஒருமுறை யானைகள் மொத்தமாக அவற்றைப் பிடிக்க வெட்டிவைத்த குழிக்குள் சிக்கிக் கொள்கின்றன. அவற்றைப் பிடிக்க நடந்த சண்டையில் கலந்துகொள்ளாமல், சோழமன்னனின் சொல்படி கேளாமல் எழினி என்பவன் இருந்தான். சோழமன்னன் மத்தி என்பவனை ஏவியதும், அவன் எழினியை வென்று அவன் பல்லைப் பிடுங்கி தன் வெண்மணி வாயில் என்னும் கோட்டைக் கதவில் பதித்தானாம். அவனது இந்த வெற்றியைக் குறிக்கும்வண்ணம் துறைமுகத்தில் கல்லொன்றை எழுப்பினான். அத்துறைமுகக் கல்லில் மோதும் அலையோசையைப்போல ஒலிக்கிறதாம் ஊராரின் அலர். இந்தச்செய்தி உணர்த்துவது என்ன? பெருவாரியான பாடல்களில் இப்படி அரசன் அல்லது ஒரு போர்வீரனைப் பற்றி சந்தடிசாக்கில் ஒரு செய்தி வந்துவிடுகிறது. இதன்மூலம் இந்தப்பாடல்கள் அவர்கள் முன் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது அதன்கண் விழாவாக எடுத்து அங்கே இவை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம். கோட்டைக்கதவுகளை உடைக்க அக்காலத்தில் யானைப்படையை பயன்படுத்தினார்கள். அத்தகு யானைகளிடம் இருந்து காக்க, கதவில் ஆணிபோன்ற கூர்மையானவற்றைக் குத்தி வைப்பார்களாம். மேலும் எதிரிகளை அச்சுறுத்த தாம் வென்ற பிற எதிரிகளின் பற்களை அல்லது பிற உடல் பாகங்களைக் குத்தி வைக்கும் பழக்கமும் இருந்திருக்கிறது.
இந்தச் செய்தியை காதலி குறிப்பிட்டுச் சொல்ல வேறு என்ன காரணம் இருக்கலாம்? பொதுவாக பொருள்வயின் பிரிவு பாலைத்திணை சார்ந்த பாடல்களில் வருவது. நான் வாசித்தவரை பொருள்தேடிச் செல்லும் காதலன் மீது காதலிக்குக் கோபமும் வருத்தமும் இருக்கிறது. ஒரு யானைக்கூட்டத்தையே பிடிக்கும் வேலை இருந்தும் அதைச்செய்யாமல் தூரதேசம் போன எழினியின் பல்லைப் பெயர்த்து எடுக்கிறான் மத்தி. அதேபோல் இங்கு ஒரு நல்ல வேலையிருந்தும் விட்டுவிட்டு தூரதேசம் போயிருக்கிறான் காதலன். எழினியின் பல்லை கோட்டைவாயிலில் பதித்ததால் எழும் வெற்றி ஆரவாரத்தை ஊராரின் அலருக்கு ஒப்பிடுகிறாள். இது எழினிக்கு நேர்ந்த அவமானத்தை காதலனுக்கு ஒப்பாகச் சொல்லலாம். கோட்டை வாசலை காதலியின் இல்லமாக, காதலியாக உருவகித்தால் அவனது பல் என்பது அவர்களது காதலை உருவகிப்பதாக வரும்.
கேளடி, தோழி! – வெண்மையான
சுண்ணம் விரிந்ததுபோல் கடம்பம் பூத்திருக்கிறது
வட்டப்பறை போல் பாதமும்
திடமான தந்தங்களும் கொண்ட யானை கடம்ப மரத்தில் உராய
குளிர்மழை பொழியும் பனிபோல கடம்பப்பூக்கள் சிதறி
உழவர் காயவைத்திருக்கும் வெந்நெல் போல் கிடக்கின்றன
அத்தகு பனிவிழும் சோலை வேங்கடமலை தாண்டியுள்ளது
வேற்று மொழி பேசுவர் அங்குளோர்; அங்கு சென்றிருக்கிறான் என்னவன்
குழியில் சிக்கிய யானைக்கூட்டத்தைப்
பிடிக்க நடந்த பூசலில் கலக்காது விலகிய எழினியைக்
கடுஞ்சினம் கொண்ட சோழன் ஏவச் சென்ற மத்தி
தூரநாட்டில் இருந்தவன் அறிவின்றி முதற்படையிலேயே சிக்கினான்
கல்லாத எழினி; அவன் பல்லைப் பிடுங்கி
வெண்மணி வாயில் கோட்டைக் கதவில் பதித்து
தன் துறைமுகத்தில் கல் எழுப்பினான்
அத்துறையின் நீர் அதில் மோதி ஒலிப்பதுபோல்
ஊரில் அலர் வரவும் நாம் அழவுமாகப் பிரிந்து போனானே.
பாடல்: 211: பாடியவர்: மாமூலனார்
கேளாய் எல்ல! தோழி – வாலியசுதைவிரிந் தன்ன பல்பூ மராஅம்
பறைகண் டன்ன பாவடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்,
தண்மழை ஆலியின் தாஅய், உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்,
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்-
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்,
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி,
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல்கெழுப் பனித்துறை,
நீர்ஒலித் தன்ன பேஎர்
அலர்நமக்கு ஒழிய, அழப்பிரிந் தோரே.