கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

15085723_1356515621028179_7208522380080636982_nசிங்கையிலிருந்து இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமி ஆகியோர் அதிகாலை 5மணிக்கு மலேசியாவில் வந்து இறங்கியவுடன் கலை இலக்கிய விழா தொடங்கிவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. உற்சாகமாக இருவரும் காத்திருந்தனர். தங்கும் விடுதியில் அவர்களை இறக்கிவிட்டபின் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் 11 மணிக்கு இராம கண்ணபிரான் அவர்களை ஆவணப்படத்துக்காக ஒளிப்பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஏற்கனவே கேள்விகள் அவரிடம் வழங்கப்பட்டமையால் வெகு நேர்த்தியாக அந்த ஒளிப்பதிவு அமைந்தது.  தொடர் அலைச்சலால் முதுகுத்தண்டில் நோவு எடுத்திருந்தது. சில ஆண்டுகளாக நட்புடன் தொடரும் வலி அது. முக்கியமான தருணங்களில் மட்டும் தலையைக் காட்டிச் செல்லும்.  அமர முடியவில்லை. ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மெத்தையில் சரிந்தேன். மீண்டும் அடுத்த கேள்விக்கு எழுந்தேன். அவர் தங்கியிருந்த விடுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது வசதியாய் போனது. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்தில் முதல்கட்ட ஒளிப்பதிவு முடிந்தவுடன் நாஞ்சில் நாடனை அழைத்துவர விமான நிலையம் சென்றோம். தயாஜி மற்றும் விஜயலட்சுமி உடன் இருந்தனர்.

நாஞ்சில் நாடன் ஏற்கனவே டத்தோ சரவணன் அழைப்பின் பேரில் மலேசியா வந்தபோது சந்தித்துள்ளேன். சந்திப்பு என்றால் உணவகத்தில் இருந்து அவர்கள் தங்கும் விடுதிவரை சென்ற சிறுபயணத்தில். அவ்வளவுதான். இந்த ஆண்டு சென்னை புத்தகச் சந்தையில் அவரது கட்டுரை நூல் ஒன்றை வாங்கி, தமிழினி புத்தகக்கடை முன் அமர்ந்திருந்தவரிடம் கையொப்பம் பெற்றேன். எதுவும் பேசவில்லை. அறிமுகமும் செய்துகொள்ளவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பார்த்தபோது அடையாளம் கண்டுகொண்டார். இணையம் வழி வாசிப்பு இல்லாதவர். வல்லினம் குறித்து அவ்வளவாக அறிமுகம் இல்லை. வழக்கமான இலக்கியப் பேச்சுகள், அரட்டை, சிரிப்பு என கார் பறந்தது. உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் விட்டோம். மீண்டும் இரவு உணவுக்குப் போகலாம் எனத் திட்டம். இரவில் நாங்கள் போகும் முன்பே இராம கண்ணபிரான் மற்றும் முனைவர் ஶ்ரீலட்சுமியுடன் நாஞ்சில் நாடன் அறிமுகமாகியிருந்தார்.

14963192_1356766477669760_4799489502110920891_n‘நாசி கண்டார்’ தேடிப்போனோம். நாஞ்சில் நாடனுக்கு அதில் விருப்பம் என முன்னமே சொல்லியிருந்தார். இரவில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இரண்டு நாள்கள் தூக்கம் இல்லாமல் இருந்ததால் ‘நாசி கண்டார்’ என சொல்லிக்கொண்ட ஒரு கடையில் எதுவும் முறையாக இல்லாததால் கோவம் வந்து தொலைத்தது. தயாஜி அத்தவறைச் சுட்டிக்காட்டினார். அது தவறான அறிகுறி எனக்கு. சரியாகத் தூங்காவிட்டால் மறுநாள் யார் மீதாவது பாய்ந்து பிராண்டிவிடுவேன். மலாய், ஆங்கிலம் என எதுவும் தெரியாதவர்களை சம்பளம் குறைவாகக் கேட்கிறார்கள் என்பதற்காக வேலைக்கு அமர்த்தி சாப்பிடச் செல்பவர்களின் உயிரை வாங்குவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. முதலாளியைத் திட்டவேண்டும். பாவம் வேலையாட்கள். ஒரு சீனக்கடைக்குச் சென்றோம். பேசிக்கொண்டே உண்டோம். இலக்கியம்தான். முனைவர் ஶ்ரீலட்சுமி உரையாடலை வலுவாக்கினார்.

மறுநாள் நாஞ்சில் நாடனுக்கு மின்னல் பண்பலையில் ஒலிப்பதிவு இருந்தது. சிறுகதையின் நுட்பங்கள் குறித்து15078724_1357505390929202_6093629296666331816_n பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தும் சமகால இலக்கியத்தில் இருந்தும் உரையாடினார். பழந்தமிழ் இலக்கியத்தில் அவர் ஆளுமை ஆச்சரியமானது. வேரில் தொடங்கி அங்கிருந்து தொடரும்போது கிளைவிட்டுக்கொண்டே படர்ந்து சென்று உச்சம் தொடும் அடர்ந்த மரம் போல அவர்.  எவ்வளவு கிளைவிட்டாலும் வேரில் வந்து சேர்ந்துவிடுகிறார். பொதுவாக வல்லினத்தைக் கொண்டு செல்வதில் அதிகார வர்க்கத்துடன் உள்ள எனது முரண்பாடுகள் குறித்து அவர் நிலைபாட்டிலிருந்து ஆலோசனை கூறினார். சிலவற்றுக்கு விளக்கமளித்தேன். அனுபவங்கள் எப்போதுமே வேறானவை. பொதுவாக விருந்தினராக வருபவர்களிடம் இங்குள்ள இயக்கத்தினர், அதிகாரத்தில் உள்ளவர்கள் காட்டும் தற்காலிக முகம் யாராலும் பொறுத்துக்கொள்ளக் கூடியதுதான். ஒருநாட்டின் சூழலில் வாழ்பவனுக்கே அதன் உண்மையான கோரம் தெரியும். எனவே பெரிய விவாதமெல்லாம் செய்யவில்லை.  ஆனால் நாஞ்சில் நாடன் பேச்சில் உண்மையான அக்கறை இருந்தது.  மீண்டும் விடுதிக்கு வந்தபோது பாண்டியன் மற்றும் கங்காதுரை இருந்தனர்.

நான் வீட்டுக்குச் சென்று மீண்டும் விடுதிக்கு வந்தபோது ஓரளவு நண்பர்கள் சேர்ந்திருந்தனர். இரண்டு மணிக்கெல்லாம் நூறு பேர் நிறைந்தனர். தலைமை அ.ரெங்கசாமி. அவர் சாலை நெரிசலில் மாட்டியிருந்தார். ஏற்கனவே அவரது உரையை ஒளிப்பதிவில் வைத்திருந்தோம். அது ‘Plan B’.  நான் கால தாமதத்தை விரும்புவதில்லை. சில நிகழ்ச்சிகளில் அனைவரும் வரும்வரை காத்திருந்து நடத்தும்போது சரியான நேரத்தில் வந்தவர்களை அவமதிப்பதாகப் படும். எனவே அறிவித்ததுபோல சரியாக இரண்டு மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இதற்கு முன்பும் அப்படித்தான் தொடங்கினோம். இனிமேலும் அப்படித்தான்.

gggதொடக்கம்

வரவேற்புரையை நான் ஆற்றினேன். இம்முறை கலை இலக்கிய விழா குறித்த தேவைகளைக் கூறினேன். வல்லினத்தில் புதிதாக இணைய விரும்பும் நண்பர்கள் முன் இருக்கும் சவால்களைக் கூறினேன். நான் எழுதக்கூறியதால் உயிரைவிட இருந்த நண்பர்களின் அவலங்களை எடுத்துரைத்தேன். எனவே வல்லினம் யாரின் உயிரை எப்போது வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்பதைத் தெளிவு படுத்தினேன். அனைவரின் முகத்திலும் பீதி. மேலும் அப்படி அவர்கள் எழுத்து நூலானவுடன் அதை அடக்கவிலையில் மட்டுமே விற்பனை செய்ய வல்லினம் அனுமதிக்கும் என்றும் தட்டை ஏந்திக்கொண்டு பத்து ரிங்கிட் நூலை ஒவ்வொருவராக முன் வந்து யார் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள் என வேடிக்கை பார்க்கும் சடங்குக்கு வல்லினத்தில் இடமில்லை என்றேன். மேலும் இந்த ஆவணப்படத்தில் இணைந்திருக்க வேண்டிய எழுத்தாளர் சீ.முத்துசாமியை இணைக்க முடியாத பட்சத்தில் இக்கலை இலக்கியவிழாவின் முயற்சிகளை அவருக்கே சமர்பித்தேன்.தொடர்ந்து ஒளிப்பதிவு செய்துவைத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் உரை ஒளிபரப்பானது.(அதனைக்காண)

முதல் அங்கம்

உரையைத் தொடர்ந்து ‘ஆளுமைகளும் ஆவணங்களும்’ என்ற ஆவணப்படத்தின் தொகுப்பு காட்சி இடம்பெற்றது.  சிங்கையிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்த ஷானவாஸ், அ.ரெங்கசாமி, எழுத்தாளர் இராஜசேகரன் ஆகியோரால் ஆவணப்படம் வெளியீடு கண்டது.(அதனைக்காண)

இரண்டாவது அங்கம்

தொடர்ந்து விமர்ச15078815_1205549059491013_5818564945914042392_nன நூலான ‘புனைவுநிலை உரைத்தல்’ முனைவர் ஶ்ரீலட்சுமி அவர்களால் வெளியீடு கண்டது. சிங்கைச் சூழலில் முக்கிய விமர்சகரான அவரால் அந்நூல் வெளியீடு செய்யப்பட்டது பொருத்தமாகவே இருந்தது. தொடர்ந்து அந்நூலில் விமர்சனக் கட்டுரை எழுதிய நான், மஹாத்மன், கங்காதுரை, பாண்டியன் ஆகியோர் மேடையில் அமர நூல் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. அறிவிப்பாளரான தயாஜியே அவ்வங்கத்தை வழிநடத்தினார். அரங்கின் முன் அமர்ந்தபோது நிறைந்திருந்த அரங்கை கண்டேன். தங்கும் விடுதியில் 200 நாற்காலிக்கு மட்டுமே சொல்லியிருந்தேன். பின்னர் கொஞ்சம் வேண்டுகோள் விடுத்து 30 நாற்காலிகளை இணைத்தனர். அதுவும் நிரம்ப மேலும் 30 நாற்காலிகள் கொஞ்சம் முனகலோடு நிரப்பப்பட்டது. முதல் பேச்சாளர் கங்காதுரை. இறுக்கமாக இருந்த அமர்வை தளர்த்தினார். சண்முகசிவாவின் சிறுகதைகளை விமர்சித்தவர் “டாக்டர் என்னையே பார்க்குறாரு பேச முடியல…பக்கு பக்குனு இருக்கு ” என இயல்பாகக் கூறவே  அரங்கில் சிரிப்பொலி. கங்காதுரையினால் அடுத்த பேச்சாளரான நான் கொஞ்சம் இயல்பானேன். தொடர்ந்து மஹாத்மன், அ.பாண்டியன் என கேள்வி பதில் அங்கம் நகர்ந்தது. (அவ்வங்கத்தைக் காண)

மூன்றாவது அங்கம்

தொடர்ந்து , தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பான ‘Children of Darkness’ எனும் நூல் வெளியிடப்பட்டது. நூல் குறித்து எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவருக்கே உரிய நடையில் கட்டுரை வாசித்தார். (காணொளியைக் காண)தொடர்ந்து அந்தக் கதைகளுக்குச் சொந்தக்காரர்களான அரு.சு.ஜீவானந்தன், மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான் மற்றும் சை.பீர்முகம்மது ஆகியோர் அரங்கின் முன் அழைக்கப்பட்டு தயாஜியின் மூலம் கேள்விகள் கேட்கப்பட்டன. (அதனைக் காண)

நான்காவது அங்கம்

prizeவழக்கம்போல எழுத்தாளர்களுக்கு ராயல்டி வழங்கும் அங்கம் இடம்பெற்றது. ராயல்டி தொகையான 2000 ரிங்கிட்டை சம அளவாகப் பகிர்ந்து ஓர் எழுத்தாளருக்கு 500.00 ரிங்கிட் வழங்கப்பட்டது.(அதனைக்காண)  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இராம.கண்ணபிரான், முனைவர் ஶ்ரீலட்சுமி, அ.ரெங்கசாமி, மற்றும் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான புருஷோத்தமன் ஆகியோருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. மலேசியாவின் கள ஆய்வாளர் ஜானகிராமன் அவர்கள் எழுதிய இரு நூல்களோடு அண்மையில் வெளியீடு கண்ட ‘காட்டுப்பெருமாள்’ புத்தகமும் நினைவுப்பரிசில் அடங்கும். மேலும் இந்த ஆவணப்பட உருவாக்கத்திற்குத் துணை நின்ற செல்வன் மற்றும் நூல் உருவாக்கத்திற்குத் துணை நின்ற தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறும் விதமாக அன்பளிப்புத் தொகை மேடையில் வழங்கப்பட்டது. (அதனைக் காண)

bஐந்தாவது அங்கம்

சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் உரை பலரையும் கவர்ந்தது. தெளிவான ஆழமான பேச்சு அவரது. புனைவிலக்கியம் குறித்த அவரது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். (அதனைக் காண)

ஆறாவது அங்கம்

utayaவல்லினம் நடத்திய சிறுகதைப் போட்டியில் இம்முறை 137 எழுத்தார்வலர்கள் பங்குபெற்றிருந்தனர். அவர்களில் 7 பேருக்கு ஆறுதல் பரிசும் மற்ற மூவருக்கு முறையே முதல், இரண்டு, மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. முதல் பரிசுத்தொகை 3000.00 ரிங்கிட்டை மை ஸ்கில்ஸ் அறவாரியம் வழங்கியது. இரண்டாவது பரிசுத் தொகையான 2000.00 ரிங்கிட்டை யாழ் பதிப்பகம் வழங்கியது. மூன்றாவது பரிசுத்தொகையான 1000.00 ரிங்கிட்டை தெள்ளியர் ஒன்றியம் என்ற இலக்கியக் குழுமம் வழங்கியது. (அதனைக் காண)

பரிசு பெற்றவர் பட்டியல் கீழே:

முதல் பரிசு : செல்வன் காசிலிங்கம் – வலி அறிதல்

இரண்டாவது பரிசு : ஐஸ்வரியா கணபதி – உப்பு

மூன்றாவது பரிசு : மதியழகன் முனியாண்டி – குளத்தில் முதலைகள்

ஆறுதல் பரிசுகள்:

உதயகுமாரி கிருஷ்ணன் – ரகசியம்

மஹாத்மன் – மூன்று புள்ளிகளுக்கு நடுவே

சிவனேஸ்வரி செல்வநாதம் – இதுவும் கடந்து போகும்

சண்முகம் இளமுருகு – வாழைமரங்கள்

குப்புசாமி முனியாண்டி – அறுபது காசு

நல்லம்மா இராமசாமி – தண்ணீர்

பரிமாளா சுப்பிரமணியம் – அவனுக்குத் தெரியாது

நிறைவு

ddஎட்டாவது ஆண்டாக நடைபெறும் இந்தக் கலை இலக்கிய விழாவில் புதிய எழுத்தாளர்களோடு வல்லினத்தின் வாசகர்களும் இணைந்திருந்தனர். வாசகர்களாலும் எழுத்தாளர்களாலும் மட்டுமே வல்லினம் தனது இலக்கை நோக்கி நகர்கிறது. பொதுவாக, கொண்டாட்ட மனநிலைக்காகவே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் சூழலில் வல்லினம் தனது ஆழமான முயற்சிகளின் வெளிப்பாட்டுக்கான தளமாக கலை இலக்கிய விழாவை உருவாக்கியுள்ளது. தேங்காத தொடர் பயணமே அதன் வெற்றி.

 

3 comments for “கலை இலக்கிய விழா 8 : தேங்காத தொடர் பயணம்

  1. சை.பீர்முகம்மது
    December 4, 2016 at 12:16 am

    வல்லினத்தின் இந்த நிகழ்வு இதுவரை நடந்த நிகழ்வுகளில் நான் பார்க்காத கட்டொழுங்கும் இலக்கியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் முயற்சி மாபெரும் வெற்றி பெற்றதாகவே நினைக்கிறேன் .நான் எதையெல்லாம் செய்ய நினைத்தேனோ அதை நான் நினைத்ததைவிடா பலமடங்கு சிறப்பாக
    நிறைவேற்றிய நவீனின் உழைப்பும் திட்டமிடலும் ஆச்சரியத்தை விளைவித்தது. தயாஜி, விஜயலசுமி, மகாத்மன் போன்ற சிறிய குழுவால் மத்தான சாதனை செய்துள்ளிர்கள் நவீன். அட இருளின் பிள்ளைகளே மொழி பெயர்த்த தலைப்பு Children’s. Of Darkenss என்று வந்துள்ளது. அந்த தலைப்பு சரியாக அக்கதைத் தலைப்பை நெருங்கி வரவில்லையோ என்று நினைத்தேன். அறியாமையில் அமிழ்ந்து போன பாமரத்தனத்தை அக்கதை சுட்டுகிறது. பிள்ளைகளே சின் நேரிடை childrens நெருக்கமாக வரவில்லையோ என தோன்றுகிறது. சில நடைமுறை வழக்குச்சொற்களை ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றும் பொழுது ஏற்படும் சிரமம் இது.
    ஒரு மொழியின் பழமொழிகள் அந்த மொழியின் ஆத்மா. அதை வேறு மொழிக்கு மாற்றும் பொழுது மிகப்பெரிய சவாலை மொழி அறிஞர்கள் கூட சந்தித்துள்ளார்கள். ‘அட இருளின் பிள்ளைகளே கூட ‘இந்த சிக்கலை சந்தித்துள்ளது .இருளின் பிள்ளைகளே என்பது அறியாமையையும் பாமரத்தனத்தையும் சுட்டுகிறது. Chidres darkness இருட்டில் உள்ள குழந்தைகள் பற்றிப்பேசுகிறது.எனது இந்த கருத்து தவறாக்கூட இருக்கலாம்.ஆங்கிலமும் தமிழும் அறிந்ததோடு இலக்கியவாதியாகவும் உள்ள. சிங்கை இளங்கோவன் போன்றவர்களும் இம்மொழிபெயர்ப்பில் இணைந்துள்ளது மற்றொரு பெரும் பலம்.
    எனது கதைகளை சிறப்பாக ஆய்வு செய்துள்ளார் மகாத்மன். இன்னும் கொஞ்சம் ஆழமாக செய்திருக்க முடியுமோ என்று தோன்றியது. குறிப்பாக எனது ஆண்மை கதையை மட்டும் சுட்டுகிறேன். திருநங்கை அக்கதையில் முக்கியப்பாத்திரம் போல் தோன்றினாலும் அக்கதை ரஹிமா என்ற திருநங்கைபற்றிய கதையல்ல. அக்கதையை வேறு கோணத்தில் மறைபொருளாக எழுதினேன். சிறுகதையில் தேவையற்ற சம்பவங்களையோ உரையாடல்களையோ வைக்கக்கூடாது என்பதில் சிறிது தெளிவு பிறந்த நேரத்தில் எழுதப்பட்ட கதை அது. செட்டியார் நட்ட மரம். ஆங்கிலேயன் அந்தமரத்தின் பழங்களை அனுபவிக்கிறான். பிறகு மலாய் திருநங்கை மரத்தை வெட்டவிடாமல் கட்டிப்பிடித்துக்கொள்கிறான். சில கேள்விகளைக்கேட்டாலே அதிலுள்ள அரசியல் புரியுமென்று நம்புகிறேன்.
    ஏன் செட்டியார் நட்டமரம்? ஆங்கிலேயன் ஏன் பழத்தை அனுபவிக்கிறான்? மலாய் திருநங்கை ஏன் மரத்தைக்கட்டிப்பிடித்து
    வெட்டப்படுவதை தடுக்கிறான்? இந்த மூன்று கேள்விகளைக்கேட்டாலே அக்கதையின் உள் விவகாரம் புரிந்து விடும்.அடிப்படையில் நம் நாட்டு அரசியலை அக்கதை பேசுகிறது. நான் சரியாக சொல்லவில்லையோ? இந்த மூன்று இனத்தவரை சொன்னதே போதும் என்று நினைத்து விட்டேனோ?
    இதை சொன்ன பிறகும் கதையின் கரு சரியில்லை என்றால் அது எனது தவறாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
    பெருமுயற்சியின் அற்புதம் இந்தவிழா.
    “செஸ் ” பலகையில் சரியாக காயைச் சுண்டி வெற்றியை அடைந்திருக்கிறது.
    நாஞ்சில் நாடனின் பேச்சில் அதிகம் எதிர் பார்த்துவிட்டேனோ? சொற்கள் பற்றி அதிகநேரத்தை எடுத்துக்கோண்டாரோ?
    சிறுகதைப்போட்டியின் முதல் பரிசு கதை யை மட்டுமே வாசித்துள்ளேன். ற்றவைகளை பிறகு வாசிப்பேன்.பரிசு பெற்றவர்கள் எனக்கு புதியவர்கள் போல் தெரிகிறார்கள். ஆனால் முதல் பரிசு கதையின் செய் நேர்த்தி அருமை. தேர்ந்த வார்ப்பு. சில தேவையற்ற விஷயங்கள் இதில் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ரே.சண்முகம், மைதி.சுல்தான், ஆதி. குமணன். கதையின் மூலத்துக்கு எப்படடி உதவும் என்பதை கதை எழுதியவர் தான் சொல்ல
    வேண்டும். எனது வாசிப்பு போதாமையும் ஒருகாரணமாகவும் இருக்கலாம்.கதையின் நுணுக்கத்தில் மிக நேர்த்தியாக கவணம் செலுத்தியுள்ளார். ஆண்டியின் நறுமணம் தாயிடத்து புளித்த மணம், அப்பா வாசனை பாட்டில்களைத்தேடுவது
    அதற்காக அம்மாவின் கோபம் கதையை சொல்லாமலேயே சொல்லியவிதம் அற்புதம்.நமது மலேசிய சிறுகதைகள் சில படிகளை தாவி மேலே போய்விட்டது என்பதற்கு இக்கதை சான்று. கலைவேலைப்பாட்டுடன் கதைமுடிகிறது.
    ஆண்டுதோறும் இப்போட்டி நடத்தப்படுமென்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இக்கதைகள் நூலுருவம் பெறுமென்று நம்புகிறேன்.
    இப்போட்டி மிக நேர்மையாக நடந்துள்ளது. விழாவில் 250 பேர் கலந்து கொண்டது பிரமிக்க வைத்துவிட்டது.முறையாக செய்தால் ஏன் கூட்டம் வராது?

  2. Shanavas
    December 4, 2016 at 1:07 pm

    நவீன் தந்த ஏமாற்றம்

    நெருக்கடியான வேலை “வல்லினம் கலை இலக்கிய விழாவுக்கு”என்னால் வர இயலவில்லை வாழ்த்துக்கள் “என்று ஒரு இன்பாக்ஸில் செய்தி அனுப்பிவிட்டு இருக்காமல் அரக்கப் பறக்க விமானத்தைபிடித்து ஏன் வந்தோம் என்று
    தோன்றியது,வேறு என்ன ஒரு பொன்னாடை இல்லை ,மேடையில் ஒரு ஓரத்தில் கூட என்னை உட்காரவைக்கவில்லை.எல்லோருக்கும் அதே கதிதான் ஆனால் மலேசிய நவீன இலக்கியத்தில் பங்களிப்பு செய்த சை.பீர்முகம்மது ,அரு.சு.ஜீவனந்தன் கோ.புண்ணியவான் ,மா.சண்முகசிவா ஆகியொர் பார்வையாளர்களுடன் கலந்து
    அமர்ந்திருக்க சமீப காலப்படைப்பாளிகள்
    மஹாத்மன் அ .பாண்டியன் ,கங்காதுரை நவீன் நால்வரும் மேடையில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு அந்த நான்கு எழுத்தாளர்களின் படைப்புக்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள் வெடித்த துப்பாக்கிகள் ,உக்கிர பாம்பு சிறுகதைகளை படைத்த எக்ஸ் சர்வீஸ் மேன் சை பீர்முகம்மது முகத்தில் கோபம் கொப்பளிக்க உட்கார் ந்திருந்தார் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் மாற்று நடவடிக்கைகளும் முயற்சிகளும் மேற்கொண்டு வல்லினம் குழுவிற்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் டாக்டர் சிவாவின் சாமிக்குத்தம் ,மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கன்னியம்மனும் போன்ற சிறுகதைகளில் அவர் வாசக இடைவெளிவிடவில்லை நிறுத்த வேண்டிய நுட்பமான இடத்தில் நிறுத்தவில்லை என்று போட்டுத்தள்ளினார்கள் . ஏதாவது வெடிக்கும் அது இப்போதே வெடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிரு ந்தேன் ,ஆனால் அவர்கள் மேடையேறி தங்கள் மேல்வைத்த விமர்சனங்களை மனதார வரவேற்பதாகக் கூறி தங்களை புகழ்ந்த வரிகளை புறந்தள்ளிப் பேசினார்கள் ஏதாவது கேஸ் வரை போகும் என்று எதிர்பார்த்த எனக்கு சப் பென்று ஆகிவிட்டது .முதல் மூன்று பரிசுத் தொகைகளைக் கொடுப்பதற்கு முன்பு அவைகளை ஏன் தேந்தெடுத்தேன் என்று நாஞ்சில் நாடன் குறிப்பிட்டு அதில் உள்ள குறைகளை முதலில் சுட்டி மோதிரக்கையால் கொட்டிவிட்டுக் கொடுத்தார்.டாக்டர் சன்முக சிவாவை தனியே அழைத்துப்போய் “நான் இலக்கியபரிசெல்லாம் வாங்கியுள்ளேன் எனக்கு கலை நழுவிவிட்டதாக சமீபத்தில் ஊரில் பிழைப்பில்லாமல் சிங்கப்பூர் வந்திருந்த எழுத்தாளர் போட்டுதாக்கிட்டார் என்ன செய்யலாம் “என்று கேட்டேன் .” நான் ஒரு டாக்டர் உங்கள் உடம்பை பரிசோதித்துவிட்டு
    எங்கெல்லாம் நோய்க் கூறுகள் உள்ளன,எவ்வளவு ஹெல்த்தியா இருக்கிறீர்கள் .அதற்கு என்ன மருந்து என்று மெல்லிய புன்னகையுடனும் சொல்லலாம் ,கடுமையாகவும் சொல்லலாம்
    இரண்டுமே உங்கள்
    ஆரோகியத்திற்குத்தான் ,ஆனால் நீயெல்லாம் ஒரு டாக்டரா என்று கேட்பது ரொம்ப ஓவர் என்றார்.வாழ்த்துரை வழங்கக் கூட எனக்கு வாய்ப்பு வழங்காத நவீன் நான் விமானத்தைபிடிக்க புறப்பட்டுக்கொண்டிருந்தபோது ,ஷா நவாஸ் ” நீங்கள். வல்லினத்தில் எழுதிய “இன்னும் பேசுவதற்கு ” கட்டுரை மாதிரி இன்னும் வரவேண்டும் என்றார், என்ன இரு ந்தாலும்
    சிங்கையில் நடக்கும் இலக்கிய விழா மாதிரியெல்லாம் அவரால் நடத்த முடியாது
    ஏமாற்றம்தான் …

  3. Kalaishegar
    December 16, 2016 at 7:02 pm

    காலில் விழுந்தாவது கூட்டும் கூட்டி, எச்சப்பட்டாலும் எண்ணிக்கை ஏத்தி,
    பல இயக்கங்கள் தோன்றி மறையும் காலத்தில்…
    கருத்தோடும் கட்டுப்பாட்டுகளோடும் வெற்றி ௮ ஆண்டுகளாய் நடைபோடும் வல்லினம் குழுவினருக்கு மரியாதைக்குரிய பாராட்டுகள்.
    வலினமான தலைவர்,
    உறுதுணைக்கு சிறந்த பற்றாளர்கள் அமையப்பெற்றிருக்கும் இனிய குழு!
    கைக்கோர்க்க மகிழ்ச்சி கலந்த ஆவல்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...