கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

cropped-IMG-20161102-WA0007-1.jpgமலேசியாவில் இவ்வளவு தீவிரமாக கலை இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது வல்லினம் குழுமமே என்பது இலக்கியத்தைச் சார்ந்தவர்களுக்கு சென்றடைந்திருக்கும். இலக்கிய நிகழ்ச்சிகள் ஏன் கலைத்தன்மை (creativity) சார்ந்ததாகவும் இருக்கக்கூடாது என்பதை சிந்தித்திருக்கிறது வல்லினம். அந்தச் சிந்தனையை செயல் வடிவத்தில் பார்க்கும்போது கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. எத்திசையில் நிகழ்ச்சி நகரும் என்ற சுவாரஸ்யம்.

நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயார் செய்து ஒரு நிகழ்ச்சி இப்படித்தான் அமையப் போகிறது என்ற சம்பிரதாயமான முன்னறிவிப்பை தவிர்த்திருந்தது வல்லினம். அது ஒரு புதிரை முன்னெடுத்தது போன்று இருந்தது. நிகழ்ச்சியின் கடைசிப் புள்ளிவரை கூட்டத்தைக் கட்டிப்போட்டிருந்தது, நிகழ்ச்சியில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற புதிர்த்தன்மை. இலக்கியம் வாசிப்பது எவ்வளவு சுவாரஸ்யமானதோ அதே சுவாரஸ்யம் நிகழ்ச்சி நகர்ச்சியிலும் இருந்தது. என்னதான் நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தில் நானும் இருந்தேன். அதில் நான் நேரடியாக ஈடுபட்டிருந்தது ஒரு காரணம். அதனாலேயே நிகழ்ச்சி நடப்பதற்குள் நான் அரங்கத்தை வந்து அடைந்திருந்தேன். அன்றைக்கு ஈ.ஆர்.டி ரயில் 30 நிமிடம் தாமதித்தே கோலாலம்பூர் சென்ட்ரலை அடைந்திருந்தது. 12.50-க்குப் பிடிக்க வேண்டிய ரயில் 1.20-க்குத்தான் வந்து சேர்ந்திருந்தது. அதனால் நான் என்னுடைய பகல் உணவை பிரிக்பில்ட்ஸில் எடுக்கத் திட்டமிட்டதைத் தவிர்க்கவேண்டியிருந்தது. விஜயாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்குப் பகல் உணவு கிடைப்பதை உறுதி செய்துகொண்டேன். நான் நேரத்தில் நிகழ்ச்சியில் வந்தடையும் பதற்றத்தில்.cover-01

நான்கு ஆளுமைகளான சை.பீர் முகம்மது, டாக்டர். சண்முக சிவா, அரு.சு. ஜீவானந்தன், ஆகியோரோடு என்னுடையதையும் இரண்டிரண்டு சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம்  செய்தும், அவர்களின் நேர்காணலை செறிவட்டையில் பதிவு செய்தும், புனைவு நிலை உரைத்தல் என்ற விமர்சனநூலை கொடையளித்திருந்தது, மலேசிய இலக்கியச் சூழலில் இதுவரை நடந்திராத ஒன்று. சமீபத்தில் டாக்டர் ரெ. கார்த்திகேசுவுக்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் செய்திருந்தார்கள். ஆனால் அவரின் நேர்காணல் அதில் இடம்பெறவில்லை. அது ரெ.காவுக்குத் தெரியாமல் இருக்கவே அந்த candid முன்னேற்பாடு என்றார்கள். ஜெர்மனியின் முனைவர் சுபாஷினி, டாக்டர் ரெ.காவை நேர்காணல் செய்திருந்தார். ஆனால் அது செறிவட்டு வடிவில் வந்ததா என்று தெரியவில்லை. நான் என் மின்னஞ்சல் பெட்டியில்தான் கேட்டேன்.

அன்றைய நிகழ்ச்சி முழுக்க முழுக்க நான்கு ஆளுமைகளைகளின் படைப்புகளுக்கு முதல் மரியாதை கொடுக்கும் முகமாக இருந்தது அதன் சிறப்பு. தமிழ்நாட்டிலிருந்து சாகித்ய அகாதமி விருதுபெற்ற நாஞ்சில் நாடன் வந்திருந்தாலும் அவருக்கு கடைசி சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. நாஞ்சிலைத் தூக்கிக்கொண்டு ஆடவில்லை. அப்படிச் செய்திருந்தால் நிகழ்ச்சியின் நாயகத்தன்மை பிறழ்ந்திருக்கும். அதில் வல்லினம் கவனமாகவே இருந்தது. அவர் திறமைமிக்கவர் என்பதில் எதிர்க்கருத்து இருக்க முடியாது ஆனால் நிகழ்ச்சியின் நோக்கம் அதுவல்லவே!

திறப்பு அங்கமாக நிகழ்ச்சியின் நோக்கத்தை வல்லினத்தின் நிறுவனர் ம.நவீன் தெளிவுபடுத்திய அதே வேளையில் தீவிர எழுத்தின் செல்திசை என்ன என்பதை விளக்கியது வரவேற்கத்தக்கது. நான் வாசகனாக, எழுத்தாளனாக அரை நூற்றாண்டு காலம் கடந்து வந்த பாதை நெடுக பெரும்பாலும் இலக்கியம் கேளிக்கையாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. எழுபதுகளில் தீவிர இலக்கியவகை இருந்திருக்கிறது. ஆனால், அது நீட்சி பெறாமல், எதிர்காலத்தவர் கைகளில் போய்ச்சேரும் வகை அறியாமல் தொடங்கிய இடத்திலேயே தேங்கி மறைந்துவிட்டது துரதிர்ஷ்டம்தான். ஆனால் வல்லினம் ஒரு அமைப்பாக இருந்து தீவிரத்துக்கு முன்கை எடுத்திருப்பதை காலங்காலமாய் இயங்கிவந்த ‘கேளிக்கை இலக்கியம்’ சற்று அதிர்ச்சியோடுதான் நோக்குகிறது. புனைவாளர்கள் தலைமைத்துவத்தில் இல்லாத  எழுத்தாளர் சங்கங்கள் புனைவிலக்கிய நிகழ்ச்சிகளை  மலேசிய இலக்கிய வளர்ச்சியை நோக்கிக் கறாராகச் செய்யவியலாததை அவதானிக்க முடிகிறது. சம்பிரதாயமான மேடை அலங்காரங்களே பெரும்பாலும் காணக்கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சி சரிவு கண்டு வருவதற்கு இதனையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம். இலக்கியத்துக்கு இதனை ஒரு மறுமலர்ச்சி காலம் எனச் சொல்லலாம்.

15078815_1205549059491013_5818564945914042392_nநான்கு ஆளுமைகளின் செறிவட்டு திரையேற்றத்துக்குப் பிறகு, அடுத்த  அங்கமாக நான்கு ஆளுமைகளின் கதைகளை, தேர்வுக்குழு – கங்காதுரை, ம.நவீன், மஹாத்மன், அ.பாண்டியன்- ஆகியோர் உரையாடல் அடிப்படையில் அவர்களின் கதைகள் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தனர். நான்கு புனைவாளர்களும் முன்னே அமர்ந்திருக்க சற்றும் தயக்கமின்றி தங்கள் கருத்துகளைச் சமரசமின்றிச் சொன்னார்கள். நால்வர் கதைகளில் உள்ள குறைகளையும் சுட்டிக்காட்டி ரசனை சார்ந்தும், கருத்தியல் சார்ந்தும் பேசியது மலேசியச் சபைகளில் அபூர்மாகவே நடைபெறும் ஒன்று. முகமன் பேசிப்பேசியே நாம் போலிகளை வளர்த்து விட்டிருக்கிறாம் என்பதற்கு அதிரடி மாற்றமாக இதனை நான் அவதானித்தேன். ஆனால், அவர்களின் சொற்தேர்வு மிகக்கவனமாகவே கையாளப்பட்டிருந்தது. வன்மம் தென்படவில்லை. கதைகளைப் படைத்த மூத்தவர்கள் முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்  என்ற சங்கோஜம் அவர்களுக்கு மனத்தடையாக இல்லாமல் இலக்கிய வளர்ச்சி ஒன்றையே முதன்மை நோக்கமாகக் கொண்டதாக இருந்தது.  விமர்சனம் படைப்பாளனை நோகடித்து வீழ்த்த அல்ல என்பதைப் புரிந்தே செய்தார்கள். இவ்வுரையாடல் ஒரு பெருந்திறப்பைக் காட்டியிருக்கும் என்று நம்பலாம். பரந்த வாசிப்பு இல்லாமல் இலக்கியப்போக்கினுள் நுழைதல் சிரமமே. எனக்குத் தெரிந்து மலேசியாவில் விமர்சனக்கலை பெரும்பாலும் வளரவே இல்லை. இலக்கிய ஊடகங்கள் அந்த விளையாட்டுக்குள் நுழையவே இல்லை. ஏன் பொல்லாப்பு என்றே தந்திரமாகத் தவிர்த்து வந்திருக்கிறது. வணிகச் சந்தையை விரிவாக்கும் ஊடகங்களுக்கு கறார் விமர்சனம் சிம்ம சொப்பனமாகிவிடும் என்ற காரணத்தைத்தவிர வேறென்ன இருக்கமுடியும்?. ஆனால் வல்லினம் அதற்கு மறு உயிர் கொடுத்திருக்கிறது.

அது முடிவுற்றதும் எங்கள் நால்வருக்குமான அங்கம். முன்னதைப் போன்ற உரையாடல் நிகழ்வாகவும் அது அமைக்கப்பட்டிருந்தது. நால்வரையும் தனித்தனியே மேடையில் பேசச் சொல்லியிருந்தால் நேரம் கட்டுப்பாட்டிலிருந்து மீறிப்போகும் வாய்ப்பு அதிகமாகவே இருந்ததை உணரமுடிந்தது. அவ்வாறு இருந்திருந்தால் அவ்வரங்கம் வெறும் பாராட்டு மொழியில் நனைந்திருக்கும். அதனை வல்லினம் மிகச் சாதுர்யமாகத் தவிர்த்திருந்தது. எனவே கருத்தியல் சார்ந்த உரையாடல் நிகழ்வாகவே இதனையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். மொழியாக்கம், விமர்சனம், படைப்பாளர் கருத்து என்ற அடிப்படையில் வினாக்களும் பதில்களும் அமைந்திருந்தன. அரங்கத்தில் நிறைந்திருந்த இளம் வாசகர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் இவ்வுரையாடல் ஒரு பெருந்திறப்பைக் காட்டியிருக்கும் என்று நம்பலாம். இலக்கிய மேடைகள் சம்பிரதாயப் புகழ்ச்சியையும்,  போலிப் பாராட்டையும் நிறைய சந்தித்தாகிவிட்டது. இத்தனை காலமாக அது ஒரு பண்பாடாக கவனப்படுத்தப்பட்டு விட்ட அவலம் மெல்லக் களையப்பட வேண்டும் என்ற நிலையை நாம் வந்தடைந்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நாஞ்சிலாருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மிகக்குறைவு. கடல்தாண்டி IMG-20160727-WA0000வந்திருந்த அவரை வல்லினம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் நாற்பதுக்கும் குறைவான நிமிடங்கள் மட்டுமே பேசினார். நேரம் கருதி அவரை இடையில் நிறுத்த சமிக்ஞை செய்ய வேண்டியதாயிற்று. வெறும் நாற்பது நிமிடம் பேசவா அவ்வரிய ஆளுமை பயன்படவேண்டும்? சிறுகதைக் கருத்தரங்கையோ, தீவிர இலக்கியம் சார்ந்த, அல்லது இலக்கியச் சுவை சார்ந்த உரையாடலுக்கோ அவரைப் பாவித்திருக்கலாம். நேர நிர்வாகத்தில் வல்லினம் கறாராக இருந்திருக்கிறது என்று உணரமுடிகிறது. இருப்பினும் மேலும் இரண்டுமணி நேரத்துக்கு நிகழ்ச்சியை நீட்டித்திருக்கலாமே என்ற ஆதங்கமும் உண்டாகிறது.

நான்கு ஆளுமைகளுக்கான வினாவை ஒரு ஐந்து பத்து நிமிடத்துக்கு முன்னரே கொடுத்திருக்கலாம். அவர்களிடமிருந்து அறிவார்ந்த பதில்கள் கிடைக்க இது தோதாக இருந்திருக்கும். இந்த முன்னேற்பாட்டால் நேர வரையறை கடைபிடிக்கப்பட்டிருக்காது  என்று நீங்கள் அஞ்சியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தயாஜி சாதுர்யமாக எல்லை மீறலை கட்டுப்படுத்தும் மொழியை வைத்திருந்தார். இளம் வாசகர்களும், வளரும் எழுத்தாளர்களும் நிறைந்திருந்த சபையில் அறிவார்ந்த சிந்தனையை முன்வைக்கும் வாய்ப்பை நழுவவிட்ட வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.

.அடுத்து மொழிபெயர்ப்புக்கு வருவோம். கரகம் என்ற என் கதையின் தலைப்பு மொழிமாற்றம் செய்யப்படவில்லை. அச்சொல்லுக்கு ஆங்கிலத்தில் சொல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது என்ன என்ற விளக்கத்தையாவது சிறு வாக்கியத்தில் சொல்லியிருக்கலாம். கதையில் Karakam என்ற சொல், எந்த மாதிரியான பொருளைக் குறிக்கும் என்பதில் இந்தியப் பண்பாட்டுப் பின்புலம், கலாச்சாரம் அறியாதவர்களுக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.

எங்கள் எழுத்தை மதித்து ராயல்டி தலா ஐநூறு வெள்ளியை வழங்கியதில் வல்லினம் இலக்கியத்தின் பயன்மதிப்பைப் போற்றுகிறது என்பதில் ஐயமில்லை. உள்ளபடியே அந்தத் தொகையை வாங்குவதில் கூச்சம் மிகுந்திருந்தது. ஏனெனில் மலேசியாவிலும் உலகளாவிய நிலையிலும் தமிழ் நூல்களுக்கு வணிகச்சந்தை இல்லை என்பது பரவலாகத் தெரிந்த விடயம். இந்நிலையில் வல்லினம் நூல்களை எப்படிச் சந்தைப்படுத்தும், எவ்வாறு முதலீட்டை மீட்கும் என்று எனக்குப் புரியவில்லை. நான் நூற்றுக்கணக்காக பத்திரிகைகளுக்கு எழுதியிருக்கிறேன். ராயல்டி என்பதை வார்த்தை அளவில் கேள்விப்பட்டதோடு சரி. ‘எழுதியெழுதி நீங்கள் நிறைய சம்பாதித்திருப்பீர்களே? பத்திரிகைகள் உங்கள் எழுத்துக்குப் பணம் தந்திருக்குமே’ என்றெல்லாம் விசாரிக்கும்போது ஒரு சிறு புன்னகையோடு அதனை எதிர்கொள்வேன். சாமான்ய மனிதன் அல்லது வாசகன் எழுத்தை வணிக நோக்கோடு பார்க்கிறார் என்ற பெருமைக்குள் எவ்வளவு கேலி மறைந்திருக்கிறது என்பதை அவர்களிடம் விளக்கி நானும் கேலிக்குரியவனாக ஆக விரும்பியதில்லை.

நிகழ்ச்சி முடிந்து ரயிலில் வரும்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு மலாய் மாது ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைக் காட்டி அது என்ன நூல் என்று கேட்டார். அதன் ரத்த வண்ணம் அவரை ஈர்த்திருக்க வேண்டும். நான் விபரம் சொன்னேன். கைநீட்டி அதனை வாங்கி வாசிக்க ஆரம்பித்தார். படைப்பாளன் மிக அண்மையில் இருக்கிறானே என்ற ஆர்வம் காரணமாக வாசிக்க ஆரம்பித்தவர் நல்ல மொழியாக்கம் என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து வாசித்தார். என் இரண்டு கதைகளை வாசித்தவர் நூலைத் தன் கையிலேயே பிடித்தபடி என்னிடம் பேசியபடியே வந்தார். பத்துகாஜாவில் இறங்கும்போது நூலை நான் எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டார். அவரிடம்  கொடுக்கும் எண்ணம் என்னிடம் அவர் வாய்விட்டுக் கேட்கும் வரை இல்லை. ஆனால் இரு கதைகளுக்குப் பிறகு அதனைத் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற ஒருவரின் ஆர்வத்துக்கு குறுக்கே எந்தப் படைப்பாளனாவது  நிற்பானா?

.

1 comment for “கலை இலக்கிய விழா 8-ஐ முன்வைத்து

  1. December 3, 2016 at 10:35 am

    முழுவதும் ஆழ்ந்து படித்தேன். சில இடங்களைத் தொட்டுப்பேச நினைத்தாலும், ஒரு விடயம் பற்றிப் பேசவே மனம் குதிக்கிறது. எழுத்தாளர் சங்கம் பற்றியதே அது. புனைவாளர்களே எழுத்தாளர் சங்கத் தலைமையை ஏற்க வேண்டுமென்பதே அது. இன்றுவரை எழுத்தாளர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதே என் கேள்வி. இலக்கிய நகர்தலுக்கும் வளர்ச்சிக்கும் அவர்கள் எப்பணியையும் ஆற்றவில்லை என்பதே என் கருத்தாகவும் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...