ஒசாமா: பசியும் பசிக்காத கடவுளும்

osama-457780772-largeசோவியத் யூனியன் படை எடுப்பு, தாலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி, பின் லாடன் தலைமையிலான அல்காயிதா தீவிரவாதப் படை, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாத ராணுவப் படை, அமெரிக்கா ராணுவம் தலையீடு போன்றவற்றில் சிக்கித் தவித்த ஆப்கானிஸ்தான்,  மில்லியன் கணக்கில் கைம்பெண்களையும் அனாதைக் குழந்தைகளையும் 30 ஆண்டுகள் நடந்த போரின் வழி உருவாக்கியுள்ளது. இவர்களின் கணவர்கள் போரில் மடிந்தவர்கள். இன்னும் சிலர் காணாமல் போனவர்கள். பெரும்பாலான ஆப்கானிஸ்தான் பெண்கள் சிறுவயதிலேயே திருமணம்  செய்து கொண்டவர்கள். இதனால் போரில் கணவனை இழந்தவர்கள்  இருபது – முப்பது வயதுகளில் விதவைகளாகி உள்ளனர். (Institute of War and Peace Reporting (2003), United Nations (2006))

பெண்கள் குறிப்பாக  விதவைப் பெண்கள் சமயத் தீவிரவாதக் கொள்கைவாதிகளான தாலிபான் ஆட்சியில் பட்ட துன்பங்கள் ஏராளம்.  பெண்களுக்கான அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டது. வீட்டிற்கு வெளியே கணவன் அல்லது சகோதரன் இல்லாமல் செல்லத்  தடை விதிக்கப்பட்டது. பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது. உடல் முழுவதும் புர்கா எனப்படும் ஆடையால் மூடிக்கொள்ளவேண்டும். (கண் பகுதியில் மட்டும் வலை போன்ற   சிறு   துவாரங்கள்   கொண்ட வடிவம் அனுமதிக்கப்பட்டது). ஆண்கள் பணி  செய்யும் மருத்துவச் சேவைகளை பெறத் தடை.  அரசியலில் ஈடுபடுதல்  மற்றும் பொதுவில் பேசுவதும் மறுக்கப்பட்டது.

ஆண்களே இல்லாத வீட்டில் பெண்கள் இருந்தால் பசிக்கும் மற்ற தேவைக்கும் எங்கு செல்வார்கள்? பசிக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சோறு எங்கிருந்து கிடைக்கும்? இவர்களை யார் காப்பாற்றுவார்? சொல்லுக்குச் சொல் இறைவன் பெயரையும், நேரத்துக்கு நேரம் தொழுகையையும் செய்யும் தாலிபான் அரசாங்கம் இவர்களின் அன்றாடத் தேவைகளைக் கண்டு கொள்ளாமல், இஸ்லாமியச் சட்டத்தைப் புறக்கணிப்பவர்களைத் தண்டிப்பதிலேயே  கவனத்தைச் செலுத்தி வந்தது.

கடவுள் வகுத்த சட்டம் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலுக்காக, 50, 60 களில் ஆப்கான் பெண்கள் அனுபவித்து வந்த அடிப்படை உரிமைகளை, துப்பாக்கி முனையிலும், இஸ்லாமியச் சட்டத்தின் பெயரால் கற்களை எறிந்து கொல்லும் கொடுமை மூலமும் நசுக்கியது  தாலிபான்.

இவர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்று, பசியால்movie1 செத்து மடிவதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தங்களின் வீட்டுச் சிறுமியை சிறுவனாக மாற்றிய உண்மைச் சம்பவத்தையும் சிறுவன் வேடத்தில் அந்தச் சிறுமி பார்க்கும் தாலிபான் தீவிரவாத உலகத்தையும் ‘ஒசாமா’ படம் மூலம்  எளிய முறையில் படமாக்கியுள்ளார் படத்தின் கதை ஆசிரியரும் இயக்குனருமான சிட்டிக் பார்மார்க். 1996-இல் தொடங்கிய தாலிபான் ஆட்சியில், திரைப்படங்களுக்கும்  இசைக்கும் தடைவிதிக்கப்பட்டன. தாலிபான் ஆட்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில்  தயாரிக்கப்பட்ட முதல் சினிமாவாக ஒசாமா விளங்குகிறது.

கணவனையும் சகோதரனையும் போரில் இழந்த விதவைத் தாய் (சுபைதா சஹார்) அவளுக்கு பதின்மவயதில் உள்ள பெண்பிள்ளை (மரினா கொல்பஹாரி). இவர்களுடன் வயதான பாட்டி  ஒருத்தி.

பெண்கள் வேலைக்குப் போவதைத் தடைசெய்யும் தாலிபான் இஸ்லாமியச் சட்டத்தினால் படித்திருந்தும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலைக்குத் தாய் ஆளாகிறாள். பசி வாட்டுகிறது. சட்டத்தை எதிர்த்தால் தாலிபான் இஸ்லாமியச் சட்டத்தின் படி உயிர்க் கொலை, கல்லடி. பெண்ணாகப் பிறந்ததனால் தலைவிதி என்று சாவதா? இப்படி இக்கட்டான சூழ்நிலையைத் தாங்க முடியாமல் “பெண் பிள்ளைக்குப் பதிலாக ஆண் பிள்ளையைப் பெற்றிருக்கலாம். எனக்கு வேலைக்கு உதவியாக இருந்திருக்கும். கடவுள் பெண்ணைப்படைக்காமல் இருக்க வேண்டுகிறேன்” என்ற வசனம், பெண்களின் பிறப்பை பெண்களே வெறுக்கும் அளவிற்கு தாலிபான் ஆட்சி அவர்களை சமூக வாழ்க்கையிலிருந்து தனிமைப்படுத்தியிருக்கும் கொடுமையைச் சொல்கிறது.

உயிருக்குப் போராடும் உயிரைக் காப்பதைவிட, பசித்திருக்கும் வயிற்றுக்குச் சோறு போடுவதைவிட, கடவுளின் சட்டங்களைக் காப்பதே உயர்ந்த சேவை என்றும், நாட்டுப் பற்றைவிட கடவுள் பற்றே புனிதம் என்றும் தங்களின் சொந்த வியாக்கியானத்தில் அதிகாரம் செலுத்தும் தாலிபான்கள் கண்ணுக்குத் தெரியாத இறைவனின் பெயராலே பெண்களுக்கு எதிராகச்செய்த அட்டூழியங்களை இன்று பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தாலும் மறக்க முடியாதது என்பதை படத்தின் ஆரம்பத்தில் மண்டேலாவின் வார்த்தைகளால் (Forgive, But Don’t Forget ) உணர்த்தியிருக்கிறார்  இயக்குனர்.

27 வருடங்கள் சிறைக்கைதியாக இருந்த நெல்சன் மண்டேலா, அப்பாதேத் (apartheid)  எனப்படும் கொத்தடிமைக் கொள்கையிலிருந்து ஆப்பிரிக்காவை விடுவித்தார். மனித உரிமைக்கும் உலக சமநிலைக்கும் குரல் கொடுத்தார். சமயச் சட்டங்களின் பெயரில் பெண்களை அடிமைத்தனமாக நடத்துபவர்களிடமிருந்து பெண்களுக்கு விடுதலை பிறக்க வேண்டும். அவர்களுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும் என்பதை ஒரு பரப்புரையாகப் பயன்படுத்தவேண்டி இயக்குனர் மண்டேலாவின் வாசகங்களை இங்கே பயன்படுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆண்களும் பெண்களும் சமம். ஆண்களுக்குச் சவரம் செய்து புர்காவுடன் பார்த்தால் அவர்களும் பெண்ணாகத்தான் தெரிவார்கள். பெண்களுக்கு தலை முடியைக் கத்தரித்து ஆண்களின் உடையை அணிவித்தால் ஆண் போலத் தெரிவார்கள். இருவரும் கடுமையாக உழைக்கிறார்கள். இருவருக்கும் வேறுபாடில்லை என்று சமத்துவம் பேசுகிறார் சிறுமியின் பாட்டி. படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பாட்டியின் உருவம் 80 முதல் 85 வயதை ஒத்திருக்கும். மூன்று தலைமுறைகளுக்கு முன் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்தது. பெண்கள் அரைப் பாவாடை அணிவர். பல்கலைக்கழகம் வரை கல்வியைத் தொடர்ந்துள்ளனர். மருத்துவம் போன்ற துறைகளில் ஆண்களுடன் இணைந்து கல்வி கற்றுள்ளனர். பாட்டியின் சமத்துவப் பேச்சின் வழி பெண்களின் பொற்காலத்தைச் சொல்லும் அதேவேளையில் தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் கற்காலத்தில் வாழ்வதாகக் காட்டுகிறார்.

ஒசாமா என்ற பெயரில் ஆணாக வேடம் தரித்திருக்கும் சிறுமியின் மனப் போராட்டங்களை காட்சிக்குச் காட்சி அவளின் பயந்த மனப்போக்கு மூலம் விளக்குகிறார் சிடிக். வெட்டப்பட்ட தலை முடியின் எச்சங்களை ஒரு பூச்சாடியில் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றும் காட்சிகளில், இழந்த பெண்மை மீண்டும் வருமா, வராதா என்ற சிறுமியின் ஏக்கம் தெரிகிறது.

கடவுளின் பெயரில் இழைக்கப்படும் கொடுமையால்  பாதிக்கப்படுவோரில் வளர்ந்த பெண்கள் மட்டுமல்ல சிறுமிகளும் உண்டு. அவர்களின் குழந்தைப் பருவங்கள் அபகரிக்கப்படுகின்றன. திருமணத்திற்கும், பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவும் சிறுமிகள் ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்.  அவர்கள் விரும்பிய உடைகளை உடுத்தத் தடை செய்யப்படுகிறது. தலையை துணியால் மறைக்காமல் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே கயிறு வீசி விளையாடும் காட்சியை ஒசாமா கற்பனை செய்து பார்க்கும் காட்சிகளை முக்கியமான   கட்டங்களில் காட்டுகிறார் இயக்குனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் செய்திருக்கும் கொடுமையை விளக்குகிறது இக்காட்சி.

மனைவியை கணவன் விரும்பியபடி காண விரும்பும் சுதந்திரமும் இங்கே பறிக்கப்படுகிறது. மனைவி யாருடன் பேச வேண்டும், யாருடன் பேசக் கூடாது என்ற தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. “உன் மனைவியை பிறர் பார்க்கும் வண்ணம் சைக்கிளில் ஏற்றி வருகிறாயே முட்டாள். இதனைப் பார்க்கும் ஆண்களுக்கு விரசம் வராதா?” என்று தாலிபான் போலீஸ் அதிகாரிகள் பெண்ணைக் காப்பாற்ற அவளுக்குக் கணவனாக நடித்த நபரை நோக்கி ஏசுகிறான் . பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்கவே இது போன்ற சட்டம் தேவை  என்று வாதிடும் தாலிபான் போன்ற சமயத் தீவிரவாதிகள்  பெண்களை செக்ஸ் பொருளாகவே காண்கின்றனர். காணும் கண்களில் விரசங்களை வைத்துக் கொண்டு பெண்களை விபச்சாரப் பொருளாகக் குற்றம் சாட்டும் புனிதர்களை இக்காட்சியில் நம்மால் காண முடியும்.

துப்பாக்கி முனையில் கடவுளைக் கும்பிடப் பணிக்கும் தாலிபான் தீவிரவாதிகளின் சட்டமும், நீதி வழங்கும் சமய நாட்டாமைகளும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தற்காக்கும் உரிமையை வழங்க மறுக்கின்றனர். அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்ற விளக்கமும் கொடுக்கப்படுவதில்லை. அமெரிக்கர்கள் இறை நம்பிக்கைக்கு எதிரானவர்கள் என்ற முன்தீர்மானத்துடன் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவிய வெள்ளைக்காரப் பெண்மணியைக் கைது செய்து கல்லெறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றுகின்றனர். வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவன் நண்பனிடம் கேட்கிறான் இதற்கு சாட்சிகள் உண்டா? அதற்கு அவன் கடவுளுக்குத்தான் தெரியும் என்று பதில் சொல்கிறான். கடவுளின் சட்டத்தை உயர்த்திப் பிடித்திருக்கும் அதிகார வர்க்கங்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சட்டத்தினை தவறாகப் பயன்படுத்துவது இயல்புதானே.

தாலிபான் பேசிக்கொண்டிருக்கும் கடவுள் யார்?  தாலிபான்களால் வஞ்சிக்கப்படுபவர்களின் கடவுள் யார் என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு வருகிறது. கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் முல்லா எனும் சமயத் தலைவர் விந்து வெளிவருவதற்கு முன்னும், வந்து விட்ட பின்னும் குளிக்கும் முறையை மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறார். ஆண் குறியை எப்படி கழுவுவது என்பதனை 80 வயது கொண்ட முல்லா அவருடைய ஆண்குறியைக் கழுவிக் காட்டி மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார். தாலிபான் ஆட்சியில்  உலக நடப்புப் பாடங்கள் தடை செய்யப்பட்டன.  ஆண்களைப்  போருக்கும் பெண்களை உடலுறவுக்கும் தயார் செய்யும் தாலிபானின் உளவியலை இக்காட்சியில் பார்க்க முடிகிறது.

ஆணாக வேடம்  தரித்த 12 வயதுப்  பெண்ணை (ஒசாமா) தண்டனையிலிருந்து காப்பாற்றிய முல்லா (80 வயது கிழவன்) அச்சிறுமியை தனது நான்காவது தாரமாக்கிக் கொள்கிறான். நான் அம்மாவிடம் செல்ல வேண்டும் என்னை அந்த கிழவனோடு அனுப்பாதீர்கள்  என்று நீதி வழங்கும் சமயவாதியிடம் கதறுகிறாள் ஒசாமா. கடவுளின் நாமத்தை கொட்டையை உருட்டிக் கொண்டு உச்சரிப்பவன் காதுகளில் ஒசாமாவின் சத்தம் விழவில்லை.  மனைவிகள் பூட்டி வைக்கப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒசாமாவிடம் பூட்டுகளைக் காட்டி தேர்ந்தெடுக்கக் சொல்கிறார். செக்ஸ் வைப்பதற்கு முன்னும் பின்னும் எப்படி குளிக்க வேண்டும் என்று செய்து காட்டியது போல் முல்லா நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் குளிக்கிறார். இந்தக் காட்சிகளைக் காணும்போது மீண்டும் அதே கேள்வி எழுகிறது. நீங்கள் உயர்த்திப் பிடிக்கும் கடவுளும், உங்களால் வஞ்சிக்கப்படுபவர்கள் நம்பும் கடவுளும் ஒன்றா?

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...