2014 ஆம் ஆண்டு, அங் மோ கியோ நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு காட்சி என்னைக் கவர்ந்திழுத்தது. வட்ட வடிவ வெள்ளை நிற மேசை ஒன்றின் நடுவில் பறவைக் கூடு ஒன்று முட்டைகளோடு அமைக்கப்பட்டு அதைச் சுற்றி பலவிதமான காகிதப் பறவைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சில காகிதப் பறவைகள் மேசைக்கு மேலே பறக்குமாறு செய்யப்பட்டிருந்தன. முழுவதும் வெண்மையாகக் காட்சி தந்த அந்த வடிவமைப்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. நுட்பமாகவும் ரசனையோடும் வடிவமைக்கப்பட்டிருந்த அந்தக் கலைப்படைப்பு ‘என்ன சொல்ல வருகிறது?’ என்று புரியாததால் அருகில் சென்று எழுதியிருந்த குறிப்புகளைப் படித்து பார்த்தேன்.
சிங்கப்பூர் தேசிய கலைகள் மன்றமும், தேசிய நூலக வாரியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘ப்ராஜக்ட் லாவா’ என்ற திட்டத்திற்கான படைப்பு அது என்று அறிந்தேன். இலக்கியத்தைக் கலைப் படைப்பாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம். நண்பரும் ஓவியருமான திரு கா.பாஸ்கர் அதை வடிவமைத்திருந்தார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட இலக்கிய படைப்பு சிங்கையின் மூத்த எழுத்தாளர் திரு மா.இளங்கண்ணன் எழுதிய ‘குருவிக் கோட்டம்’ நாவல் ஆகும். நாவல் என்பதைவிட குறுநாவல் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இந்நூல் மணிவாசகர் பதிப்பகத்தால் பதிப்பிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
குருவிக் கோட்டத்தில் பலவகையான பறவைகள் கதாபாத்திரங்களாக சிறகடித்துப் பறக்கின்றன. கதையின் சாராம்சம் இதுதான். வேலை செய்ய வெளியூரிலிருந்து பறவைகளை வரவழைக்கிறது கொக்கு. “என் நிறுவனத்தில் வேலை செய்ய தேர்ச்சி பெற்ற, நல்லா உழைக்கிற பறவைங்க தேவை” என்று கேட்டுவரும் கரிச்சான் குருவிக்கும் தேவை உள்ள மற்ற இடங்களுக்கும் வெளியூர் பறவைகளை கொக்கு அனுப்புகிறது. கொக்கின் கீழே வேலை செய்யும் கிளிக்கு இது அறவே பிடிக்கவில்லை. வேலை இல்லாமல் இருக்கும் தூக்கணாங்குருவியிடம் “இவ்வளவு திறமை உள்ள உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் கொக்கு வெளியூர் பறவைகளை வரவழைப்பதுதான்” என்று ஆதங்கத்துடன் சொல்லிப் புலம்புகிறது கிளி. மரங்கொத்திக்குருவியோ (தச்சுக்குருவி) தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான சொந்த அனுபவத்தால் வெளியூர் பறவைகளை வெறுக்கிறது. கிளி கொக்கிற்கு எதிராக உள்ளூர் பறவைகளை ஒன்றிணைக்க முடிவு செய்து மைனா, மீன்கொத்திக்குருவி ஆகியவற்றைச் சந்தித்து ஆதரவு பெறுகிறது. கிளியின் கருத்தை ஆதரிக்கும் ஒரு பறவைக்குழு உருவாகிறது. இதைக் கண்டு அஞ்சும் வெளியூர் பறவைகள் ஊருக்குக் கிளம்ப ஆயத்தமாகின்றன. புதிய வேலைகளைச் செய்ய பறவைகள் இல்லாமல் வேலையிடங்கள் தவிக்கின்றன. இதனால் ஏற்படும் சிக்கல்களையும் கிளி இதைப் புரிந்துகொண்டு மனம் மாறுவதையும் பேசுகிறது நாவல்.
“யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளில் “யாதும் ஊரே!” என்பது உலகமயமாக்கலின் தவிர்க்க முடியாத அங்கமாக இன்று மாறி இருந்தாலும் “யாவரும் கேளிர்!” என்பதை மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். உதாரணத்திற்கு ‘BREXIT’ நிகழ்வைச் சொல்லலாம். இதன் பிண்ணனியில் பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமான காரணமாக இருந்தது யூரோப்பியன் யூனியனின் குடியேற்றக் கொள்கைதான். பிரிட்டனுக்கு ஏன் செல்லவேண்டும்? சிங்கை அரசும் இதே பிரச்சினையைத்தான் எதிர்கொள்கிறது. சிங்கப்பூர் என்ற கோட்டத்தில் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை கருவாக எடுத்துக்கொண்டு பறவைகளின் வழியாக அலசுகிறார் நாவலாசிரியர்.
‘தோல் வாங்க வந்த வெள்ளைப் பறவை தோலை வாங்கிக்கிட்டுப் போக வேண்டியதுதானே… ஆனா அது போகலே. தந்திரமா அந்தப் பகுதியை கைப்பற்றி ஆளவும் தொடங்கிடுச்சு. அப்புறம்தான் ஊர்ப் பறவைகளுக்கு ஞானம் பிறந்திருக்கு…. இனி இந்த வெள்ளைப் பறவையை ஆளவிடக் கூடாது விரட்டி அடிக்கணும்னு போராடத் தொடங்கிடுச்சுங்க. ஒரு வீரஞ் செறிந்த பறவை கூட நம்ம ஊருக்கு வந்து படை திரட்டி போராடி இருக்குனா பார்த்துக்கேயேன்…..ஒரு ஒல்லிப் பறவையின் தலைமையில் போராட்டம் நடந்துக்கிட்டே இருந்துச்சு. அந்த ஒல்லிப் பறவை ரத்தம் சிந்தாமல் ‘கொல்லாமை’ என்கிற கொள்கையைக் கடைபிடிச்சுப் போராடுச்சு. அந்தப் போராட்டத்தை வெள்ளைப் பறவையால் ஒணணும் செய்ய முடியலே” என்று வெளியூர் பறவைகளை உள்ளே அனுமதித்ததால் ஒரு நாடு (எந்த நாடு என்று நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்குமே!) சந்தித்த போராட்டத்தைச் சொல்லுமிடம் சுவாரஸ்யமாக இருந்தது.
“நம்ம ஊரு வல்லூறு அது கூட்டில் இருந்தபடியே எதையோ வேகவைத்திருக்கு. வெளியூரு வல்லூறுக்கு அந்த மணம் பிடிக்கலே. உடனே அது உள்ளூரு வல்லூறின் கூட்டுக்குப் போய் சண்டை போட்டிருக்கு” என்பதைப் படித்தபோது 2011 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்த Curry Dispute பிரச்சினையை ஆசிரியர் தன் நாவலில் மிகச் சரியாக கையாண்டிருப்பதைக் கண்டு ரசித்துத் சிரித்தேன்.
வெளிநாட்டு ஊழியர்களின் வருகையை பிரதானமாகப் பேசினாலும் சிங்கப்பூர் எதிர்கொள்ளும் மற்ற சவால்களையும் கதையின் ஓட்டத்தில் இயல்பாக சொல்லிச் செல்கிறது இந்நாவல். “முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் இதோட கட்டுடல் கட்டு விட்டுப் போகுமாம். இளம் வயதிலேயே இளமை பறிபோய் விடுமாம். முதுமை வந்துவிடுமாம்” என்று ஆண் மைனா பெண் மைனாவைக் குற்றம் சாட்டுமிடத்திலும், “இணை சேர்ந்து வாழ்ந்தால் என் சுதந்திரம் பறிபோய்விடும். நான் மேலே பறக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்கு அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொள்ளணும். குடும்ப வாழ்க்கை எனக்கு ஒத்து வராது” என்று பெண் மீன் கொத்திக்குருவி சொல்லுமிடத்திலும் பிள்ளைப்பேறு மற்றும் குடும்ப அமைப்பு ஆகியவற்றில் நவீன பெண்கள் கொண்டுள்ள மனப்போக்கையும் அதன் காரணமாக நாடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களையும் மறைமுகமாக கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.
வெளியூர் பறவைகளின் வருகையை தொடர்ந்து எதிர்க்கும் ஆண் கிளியை கட்டுமானப் பகுதிக்கு அழைத்துச் செல்லும் கரிச்சான் குருவி அங்கு வேலை செய்யும் எந்திரப் பறவைகளைச் சுட்டிக் காட்டி “இந்தப் பறவைங்களை இங்கே வராதேன்னு உன்னால் சொல்ல முடியாது. தடுத்து நிறுத்தவும் முடியாது. திருப்பி அனுப்ப முடியாது” என்று கூறுமிடத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளூர், வெளியூர் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து ஊழியர்களின் வேலை வாய்ப்புகளையும் கபளீகரம் செய்யக்கூடிய வல்லமை மிக்கது என்ற உண்மையை மிக அழுத்தமாக சொல்கிறது நாவல்.
“இன்றைக்கு நேற்று இல்லே. பறவைங்களோட தொடக்க காலத்தில் இருந்தே வலசை போயிட்டுதான் இருக்குங்க. அப்படி போகலேனா பாதிப் பறவை இனங்கள் உயிர் வாழாதுங்க. அழியாமல் இருக்கத்தான் வலசை போகுதுங்க” என்று கரிச்சான் குருவி சொல்வதின் வழியாக மனிதர்களும் பல்வேறு காரணங்களுக்காக வலசை போகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அது தவிர்க்க இயலாது ஒன்று. அதுதான் வளர்ச்சிக்கான வழி என நாவலாசிரியர் கூறுவதாக நான் புரிந்துகொண்டேன்.
கல்லுப்பொறுக்கி, பனிப்பாடி, யானைப்பறவை, உள்ளான் என சில புதிய பறவைகளின் பெயர்களை அறிந்துகொள்ள முடிந்தது. கரிச்சான் குருவி தன் உடம்பில் உள்ள பேனை ஒழிக்க எறும்பு குளியல் போடுமாம். எறும்பு புற்றில் இறக்கைகளை விரித்துக்கொண்டு உட்கார எறும்புகள் அதன் உடம்பில் ஏறி இறகுகளுக்குள் புகுந்து ஒரு வகை அமிலத்தை வெளியிடுமாம். அந்த அமிலம் பேன்களைக் கொன்றுவிடுமாம். இதுபோன்ற சில தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் இந்நூல் உதவி செய்தது.
குருவிகளையும் மனிதர்களையும் ஒப்பிட்டுப் பேசும் ஆழமான ஆய்வில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்று அணிந்துரையில் எழுத்தாளர் திரு செ.ப.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருக்கும் இந்நாவலைப் படித்து முடித்தவுடன் எனக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. குறைவான பக்கங்களும் எளிமையான மொழி நடையும் கொண்ட இந்நூலைச் சிங்கை உயர்நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கலாம். பலவிதமான பறவைகளைப் பற்றிய பல நுட்பமான செய்திகளை அறிந்து கொள்ளும் அதேசமயத்தில் மாணவர்கள் சிங்கப்பூரின் முக்கியமான பிரச்சினையை அறிந்து கொள்ளவும் அதை விவாதிக்கவும் நல்ல வாய்ப்பாக அமையும். மாணவர்கள் நாடகமாக அரங்கேற்றுவதற்கு ஏற்ற வகையில் அதிக உரையாடல்களைக் கொண்டிருப்பது இந்நாவலின் சிறப்பு. சிங்கையில் இதுபோன்ற உருவகக்கதைகளோ அல்லது நாவல்களோ வேறு ஏதாவது எழுதப்பட்டுள்ளனவா என்று தேடி அவற்றை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்நூல் விதைத்துள்ளது.
அழகான நடை …. அருமையான கருத்து..படித்து ரசித்தேன்… மிக்க நன்றி!