‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’
நற்றிணை – 153. தனிமகனார்.
பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம்பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஐரோப்பிய, ஐக்கிய அமெரிக்கா, மேற்குலக நாடுகளில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியும், உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கமும், மனித உழைப்பு மலிவாகக் கிடைக்கிற நாடுகளிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்வது என்ற முதலாளித்துவத்தின் நோக்கமும்தான் உலகமயமாக்கலை சாத்தியப்படுத்திற்று. முதலாளித்துவத்தின் தேவையைப் பூர்த்தி செய்வது என்ற நோக்கம் மட்டுமல்ல, முதலாளித்துவம் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பை பயன்படுத்துவது என்ற நோக்கமும் உலகமயமாக்கலை எளிதாக்கியது. புலம்பெயர்தலை ஊக்குவித்தது.
இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா, ஆஸ்திரேலியா டென்மார்க், நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, சுவிடன், மலேசியா, சிங்கப்பூர் என்று புலம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றவர்களுக்குச் சென்ற இடத்தில் அடுத்தவேளை உணவுக்கு வழியில்லை, தங்குவதற்கு தற்காலிகமான இடம்கூட இல்லை. அகதியாக ஏற்கக்கோரி விண்ணப்பித்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் பத்திரிக்கை தொடங்கி இருக்கிறார்கள், கதை, கவிதை, கட்டுரை, நாவல் எழுதியிருக்கிறார்கள், மண்ணை இழந்த மனிதர்களையும், மனிதர்களை இழந்த மண்ணையும் எழுதியிருக்கிறார்கள். அகதி வாழ்க்கை வாழும் நாட்டைப் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். புலம் பெயர்ந்தவர்கள் மொழி அறியா தேசத்தில் வாழ நேர்ந்ததின் அவலத்தை, பிறந்த இடத்தைவிட்டு வெளியேற நேர்ந்த அவலத்தை, பட்ட துயரங்களை, படும் துயரங்களை, உறவின் இழப்புகளை, வலிகளை, காயங்களை, கண்ணீரை, கடந்த காலத்தின் துயரங்களை, கடந்த காலத்தின் நினைவுகளை மட்டுமே பேசவில்லை. தனிப்பட்ட இழப்புகளை, துன்பங்களை மட்டுமே பதிவு செய்யவில்லை தன்வரலாற்றுக்கதை எழுதுவது மாதிரி வாக்குமூலம் அளித்தல், சாட்சியம் அளித்தல் என்பதாக இல்லை. புதிய இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நடத்தும் போராட்டங்களை, கண்காணிப்புக்குள்ளான, சுதந்திரமற்ற வாழ்வை வாழ நேர்ந்த அவலத்தை மட்டுமே பேசவில்லை. புலம்பெயர்ந்தோர் நாவல்கள் என்றாலே புலம்பல், சோகம், பிறந்த மண் பற்றிய ஏக்கம், அகதி வாழ்வின் அவலம் மட்டுமே இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தை பொய்யென நிரூபிக்கிறது புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்கள்.
அண்மைக்காலமாக தமிழ் மொழியில் எழுதப்படும் நாவல்கள் பழைய காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் மாதிரி தனிமனிதனுடைய கதையை, வாழ்க்கையை, ஒரு குடும்பத்தினுடைய, ஒரு வட்டாரத்தினுடைய கதையை, வாழ்க்கையை எழுதவில்லை. மாறாக, பலதேசத்து மனிதர்களுடைய கதையை, வாழ்க்கையை, பலதேசத்துச் சமூகவியலை, அரசியலை, நிலவியலை, பண்பாட்டுவியலை எழுதியிருக்கிறது. இது புலம்பெயர்ந்தவர்களால் ஏற்பட்ட மாற்றம். அவ்வகையில் மலேசியாவில் எழுதப்பட்ட மூன்று நாவல்களும் சேரும்.
’செம்மண்ணும் நீலமலர்களும்’ (1971) நாவல் மலேசிய ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுடைய ஒரு காலகட்டத்தின் வாழ்வைப் பேசுகிறது. கன்னியப்பனுக்கும் நீலவேணிக்குமிடையே இருந்த காதல், சந்தர்ப்ப சூழ்நிலையால் அழிந்தது என்பதைவிட சாதியால் அவர்களுடைய உறவு எப்படி சீரழிந்து போகிறது? இருவரும் அவரவர் சாதியில் திருமணம் செய்து கொண்டபிறகு இருவருடைய வாழ்க்கையிலும் ஏற்பட்ட துன்ப துயரங்கள் என்ன என்பதை எம்.குமாரன் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். நாவலில் துயரம் அடுக்கடுக்காக வருகிறது. இது ஒரு குடும்பத்தின் கதையா என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு காலத்தின் கதை. ஒரு சமூகத்தின் கதை. நாவலில் தமிழர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், மலாய்க்காரர்கள், வெள்ளைக்காரர்கள் வருகிறார்கள். அதனால் இது உலகத் தன்மைக் கொண்ட நாவலாக இருக்கிறது.
புக்கிட் தானா மேரா தோட்டம், ரிங்சிங் எஸ்டேட் மட்டுமல்ல, மலேசியா முழுவதும் 1940- காலப்பகுதியில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களுடைய வாழ்க்கையைப் பேசுகிறது. செம்மண்ணும் நீலமலர்களும். ரப்பர் மரம் வெட்ட காலையிலும் அந்தி வெட்டுக்கும் சென்ற தொழிலாளர்கள், அவர்கள் வாழ்ந்த லையன் வீடுகள், நிர்வாகம், கங்காணிகளின் நெருக்கடிகள் என்னென்ன என்பதை விவரிக்கிறது நாவல். அதேநேரத்தில் நிர்வாகம் தொடர்பாக நிகழ்ந்த மாற்றங்கள். வெள்ளையர்களின் ஆட்சி முடிந்து ஜப்பானியர்களின் ஆட்சி ஏற்பட்ட பிறகு, சமூக வாழ்வில், தோட்ட வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன, வெள்ளையர்களிடமிருந்த தோட்டங்களை, எஸ்டேட்டுகளை சீனர்களும், மலாய்க்காரர்களும், உள்ளுர் முதலாளிகளும் எப்படி துண்டு போட்டு வாங்கினார்கள், தோட்டங்கள் கைமாறியதால் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நிலை, ஆட்குறைப்பு செய்ததால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் நாவல் பேசுகிறது. 50-60 ஆண்டுகள் தங்களுடைய தோட்டம், வீடு, காடு, இடம் என்று வாழ்ந்த மக்களை தோட்டத்திற்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று அகதிகளாக ஒரே நாளில் வெளியேற்றியபோது எப்படி திகைத்துப்போய் தமிழர்கள் நின்றார்கள் என்பதை வலியோடு பேசுகிறது செம்மண்ணும் நீலமலர்களும்.
அரசு மாறி, அதிகாரம் மாறி, தோட்ட நிர்வாகம் மாறிய பிறகு தமிழர்கள் சந்தித்த கொடூரங்கள் என்ன, நிலக்குடியேற்றத்தை ஏன் தமிழர்கள் ஆதரிக்கவில்லை, நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்குமிடையே நடந்த சிறுசிறு அளவிலான போராட்டங்கள் எப்படி ஒடுக்கப்பட்டது, ஈத்தாம் குடியேற்றப்பகுதி எப்படி இருந்தது, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டிக்கொண்ட அமைப்புகள், கங்காணிகள் எப்படி அரசுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் கைக்கூலிகளாக மாறி செயல்பட்டார்கள் என்பதையும் நாவல் விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
வெள்ளைக்காரர்களின் ஆட்சி மாறுகிறது, ஜப்பானியர்களின் ஆட்சி வருகிறது. வெள்ளைக்காரர்களைவிட ஜப்பானியர்களும், அவர்களுடைய அரசும் மோசமாக நடத்துகிறது, பசி, வறுமை நிறைந்த காலமாக இருக்கிறது. தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட, வெளியேற்றப்படும் நிலையில் இருந்தாலும் தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்கிறார்கள், நேதாஜியை விரும்புகிறார்கள், இந்திய சுதந்திரம் பெறவேண்டும் என்று நினைப்பது மட்டுமல்ல தங்களால் இயன்றதை செய்ய நினைக்கிறார்கள். இந்த மனோநிலையை நாவலாசிரியரின் மனோநிலை என்று சொல்ல முடியாது. மலேயாவில் வாழ்ந்த அன்றைய தமிழர்களுடைய மனோநிலை இப்படித்தான் இருந்திருக்கிறது.
செம்மண்ணும் நீலமலர்களும் நாவல் மலேசிய சமூக வாழ்வில் ஒருகாலக்கட்டத்தை மட்டுமல்ல வரலாற்றில் முக்கியமான காலக்கட்டத்தை மதிப்புமிக்க ஆவணமாக்கியிருக்கிறது. கலையாக்கியிருக்கிறது. எம்.குமாரன் தேர்ந்த எழுத்தாளர் என்பதை இந்நாவல் காட்டுகிறது.
எம். குமாரன் எழுதிய செம்மண்ணும் நீலமலர்களும் நாவல் மலேசியத் தமிழர்களின் வாழ்வை ஒரு கோணத்தில் காட்டியது என்றால் அ.ரெங்கசாமி எழுதிய நினைவுச்சின்னம் நாவல் மலேசிய தமிழர்கள் சார்ந்த புதிய வாழ்வொன்றைக் காட்டுகின்றது. கிழக்காசியாவில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ விரும்புகிறது ஜப்பானிய அரசு. அதற்காக டோக்யோவிற்கும் பர்மாவிற்கும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த விரும்புகிறது. ஜப்பானிலிருந்து கடல் வழியாக பர்மாவிற்குச் செல்ல அதிகமான நாட்களும், பொருட்செலவும் அதிகமாகிறது. காலத்தையும், பொருட்செலவையும் குறைக்க நினைக்கிற ஜப்பானிய அரசு சயாமிலிருந்து பர்மாவுக்கு 262 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடுகிறது. ரயில்பாதை அமைத்தால் டோக்யோவிலிருந்து சைக்கோன், சைக்கோனிலிருந்து பாங்காக், பாங்காக்கிலிருந்து ரங்கூன் என்பது நேர்ப்பாதை. ஆகவே ஜப்பானிய அரசு ரயில்பாதை அமைக்கவும், அதை ஓராண்டிலேயே (1943-1944) முடிக்கவும் விரும்புகிறது.
மலேசியாவில் வெள்ளையர்களின் மேலாதிக்கம் குறைந்து ஜப்பானியர்களின் மேலாதிக்கம் நடந்தகாலம். மலேசிய ரப்பர் தோட்டங்களிலுள்ள தமிழர்களைசயாம் பர்மாவுக்கான ரயில்பாதை அமைப்பதற்காக திரட்டுகிறது. ஜப்பானியர்களின் கைக்கூலிகளாக கங்காணிகள் செயல்படுகிறார்கள். அதிக சம்பளம் என்ற வார்ததையை திரும்பத்திரும்ப சொல்லி ஆட்களை திரட்டுகிறார்கள். அதிக சம்பளம் என்ற ஆசையில் தமிழர்களும் சயாமிற்கு செல்கிறார்கள். பல இடங்களில் ஜப்பானிய நிர்வாகம் கட்டாயப்படுத்தியும் ஆட்களை ரயிலில் ஏற்றுகிறார்கள். வெள்ளைக்கார அரசின் ஆசை வார்த்தைகளை நம்பித்தான் நாகப்பட்டினத் துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கில் மலேயா ரப்பர் தோட்டங்களுக்கு தமிழர்கள் சென்றார்கள். மலேயா ரப்பர் தோட்டங்களிலிருந்து ஜப்பானியர்களின், கங்காணிகளின் ஆசைப்பேச்சை, மோசடி வார்த்தையை நம்பி சயாமிற்கு ரயிலேறுகிறார்கள்.
சயாமியக்காட்டை நோக்கிச் சென்ற மொட்டை ரயிலில் ஏறிய தமிழர்கள், ரயிலில், பயணத்தில் என்ன பாடுபட்டார்கள், எவ்விதமான துன்பத்திற்கு ஆளானார்கள், ரயிலைவிட்டு இறங்கி ஏழு நாள் பயணமாக நடந்து சென்றபோது பட்ட துன்பங்கள், ஜப்பானிய காவல்துறையினர் செய்த அட்டூழியங்கள் என்ன என்பதை சொல்வதுதான் நினைவுச்சின்னம் நாவல். கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட கணத்திலிருந்து ஒவ்வொரு கணமும் தமிழர்கள் பட்ட துயரத்தினை அ.ரெங்கசாமி மிக அழகாக சொல்கிறார். குளிர், மழை, மலஜலம் கழிக்க வசதியின்மை, பயணத்திலேயே காய்ச்சல் கண்டு செத்தவர்கள், தப்பிக்க நினைத்து ரயிலிலிருந்து குதித்து செத்தவர்கள், மோசமான இடத்தில் தங்க வைக்கப்பட்டது. பிணங்களுக்கிடையே படுக்கவைக்கப்பட்டது, கொசுக்கள், குளிர், மூட்டைப்பூச்சிகடி, சீலைப்பேன்கடி, வண்டுகடி, ரத்தம் உறிஞ்சும் அட்டை, தாகத்திற்கு தண்ணீர் குடிக்க முடியாநிலை, குளிக்கமுடியா நிலை, பச்சை தண்ணீரை குடித்ததால் காலராகண்டு இறந்துபோதல், கடுமையான வேலை நெருக்கடி, ஜப்பானியர்களின் கொடுமைகளுக்கிடையே தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி செத்தார்கள், எல்லா கொடூரங்களுக்கும் பிறகு தப்பி பிழைத்தவர்களின் நிலை என்ன என்று ஒவ்வொன்றாக அ.ரெங்கசாமி எழுதியிருக்கிறார். நெஞ்சை உருக்கும் விதமாக.
சயாமிற்கும் பர்மாவுக்குமான ரயில்பாதை இரண்டுவிதமாகப் போடப்படுகிறது. வடக்கே தன்பியூ ஜயாட்டிலிருந்து தெற்கு நோக்கி ஒரு குழுவும், தெற்கே பொட்போங்கிலிருந்து வடக்கு நோக்கிஒரு குழுவும் வேலை செய்கிறது. இரண்டு பிரிவிலும் தமிழர்களும், ஜப்பானியர்களிடம் அடிமைப்பட்ட வெள்ளைக்காரர்களும் வேலை செய்கிறார்கள். இரவும் பகலுமாக வேலை நடக்கிறது. வேலை பளு வால், ஜப்பானியர்களின் கொடுமையால் நாள்தோறும் மனிதர்கள் இறக்கிறார்கள். அதைவிடவும் காலரா கண்டுதான் ஆயிரக்கணக்கில் சாகிறார்கள். மனிதர்கள் சாவதைப்பற்றி ஜப்பானிய நிர்வாகம் கவலைப்படவில்லை. ஆசை காட்டியும், கட்டாயப்படுத்தியும் அடுத்தடுத்த ரயில்களில் ஆட்களை கொண்டுவந்த வண்ணமே இருக்கிறார்கள். சாவோரின் எண்ணிக்கையும், புதிதாக வருவோரின் எண்ணிக்கையும் சமஅளவில் இருக்கிறது. அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் ஜப்பானிய அரசின் எண்ணம். செத்தவர்களை பார்க்கவோ, பராமரிக்கவோ, மருத்துவம் செய்யவோ ஜப்பானிய நிர்வாகம் அனுமதிக்கவில்லை. செத்த கணவனை, குழந்தைகளை அனாதைப் பிணமாக அப்படியே போட்டுவிட்டு போக வேண்டிய, வேலை செய்ய வேண்டிய கொடூரம். செத்தவர்களுக்காக கண்ணீர்விடக்கூட அவகாசமில்லை. காரணம் வேலை கெட்டுவிடும். அசிமோத்தோ, நாகமுரா, முனிச்சி, தனக்கா என்று ஜப்பானிய ராணுவதளபதிகள் மாறிமாறி வந்தாலும் யாரிடத்திலும் இரக்கமில்லை. கனிவு இல்லை. ஒருவருக்கொருவர் போட்டி மாதிரி கொடூரமாகவே நடந்துகொள்கிறார்கள்.
மரம் வெட்டுதல், காட்டை அழித்தல், பாறைகளை உடைத்தல், தண்டவாளங்களை ஏற்றுதல், இறக்குதல், மண்கொட்டுதல், பாலம் கட்டுதல், மழையில், வெள்ளத்தில் அடித்துசெல்லப்படும் ரயில் ரோட்டை மீண்டும் போடுதல், இடிந்து விழும் பாலங்களை மீண்டும் கட்டுதல் என்று வேலை நடக்கிறது. வேலை முடிந்துவிடும், தப்பித்து போய்விடலாம் என்ற நிலையில் இரண்டாம் உலகப் போர் நடக்கிறது. ஜப்பானியர்களுக்கெதிராக இங்கிலாந்து ராணுவம் குண்டுபோடுகிறது. குண்டுபட்டு ஆயிரக்கணக்கில் தமிழர்கள் சாகிறார்கள். போடப்பட்ட ரயில் ரோடும், கட்டப்பட்ட பாலமும் குண்டுவீச்சில் காணாமல் போகிறது. குண்டுபட்டு சாகாதவர்களை வைத்துக்கொண்டு மீண்டும் ரயில்பாதை, பாலம் என்று கட்டுகிறது ஜப்பானிய அரசு. ஒரு ஆண்டில் முடிய வேண்டிய வேலை மூன்றாண்டுகள் நீடிக்கிறது. காலராவில் செத்தவர்கள், இங்கிலாந்து ராணுவ குண்டுவீச்சில் செத்தவர்கள் போக எஞ்சியிருந்தவர்களில், அடங்க மறுத்தவர்களை, தப்பித்துப்போக நினைத்தவர்களை, எதிர்த்துப் பேசியவர்களை எல்லாம் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் கொல்கிறார்கள். அத்துனை கொடூரங்களும் நாவலில் பதிவாகியிருக்கிறது.
ஜப்பான்காரர்களுக்கும் இங்கிலாந்துகாரர்களுக்குமான சண்டையில் தமிழர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? உலகில் எங்கு போர் நடந்தாலும் அப்பாவிகள்தான் கொல்லப்படுகிறார்கள். போர் எந்த நன்மையையும் செய்துவிடாது. மனிதர்களைக் கொல்லும், ஊனமாக்கும், அகதிகளாக்கும், விதவைகளாக்கும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளை உருவாக்கும், அனாதைகளை உருவாக்கும். பலரை காணாமல் போகச் செய்யும், பசியை, வறுமையை உருவாக்கும். பெண்களை ராணுவம் வன்புணர்ச்சி செய்யும். போர் மனிதர்களுக்குவேறு எந்த நன்மையையும் செய்துவிடாது. அதுதான் சயாமிலும் நடந்தது.
மலேயா ரப்பர் தோட்டங்களில் இருக்கும்போது வெள்ளைக்காரர்களுக்கு எதிரான மனோபாவத்தை கொண்டிருந்த தமிழர்கள், சயாமில் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஜப்பானியர்களுக்கு எதிராகவும் எப்படி மாறினார்கள் என்பது ஒரு முரண். காலரா கொடுமை, ஜப்பானியர் கொடுமை, வேலைபளு, உறவுகள் இறந்துபோவது, திரும்பி மலேயாவிற்கு போவோமா, மாட்டோமா என்று தெரியாத நிலை, இங்கிலாந்து ராணுவ குண்டுவீச்சு, மழை, குளிர் என்று எத்தனையோ கொடுமைகளுக்கிடையிலும் தமிழர்கள் ஐ.என்.ஏ.வில் சேர்கிறார்கள். சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார்கள், நேதாஜியை காணத் துடிக்கிறார்கள். தங்களுடைய குழந்தைகளுக்கு ‘காந்தி’ என்று பெயர் வைக்கிறார்கள், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சண்டைபோடப் போக வேண்டும் என்று லட்சியம் கொள்கிறார்கள். தீபாவளி கொண்டாடுகிறார்கள், சயாமிய பெண்களுடன் காதல் கொள்கிறார்கள். இதுதான் வாழ்க்கைத்தரும் ரகசியம். உயிர் வாழ்தலுக்கான வித்து.
சயாம் பர்மா ரயில்பாதை என்பது மரண ரயில்பாதையாக எப்படி மாறியது என்ற வரலாற்றை மட்டுமல்ல, மலேயா ரப்பர் தோட்டங்களில் தமிழர்கள் பட்ட பாடுகள் பற்றிய வரலாற்றை அறிவதற்கும் நினைவுச்சின்னம் நாவல் மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது. தமிழர்கள், ஜப்பானியர்கள், வெள்ளைக்காரர்கள், சயாமியர்கள், பர்மாக்காரர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என்று பல தேசத்தவர்கள் நாவலில் வருகிறார்கள். அதே மாதிரி பல தேசத்து மொழிகளும் பேசப்படுகிறது. அதனால் இது உலகத் தன்மைக் கொண்ட நாவலாக இருக்கிறது.
சீ.முத்துசாமி எழுதிய ‘மண்புழுக்கள்’ (2006) நாவல் வேறொரு கோணத்தில் மலேயாத் தோட்ட வாழ்வை பேசுகிறது. “இந்த கித்தா காட்டுல…. அந்த மலக்காட்டுல…. காத்தோட காத்தா கலந்து… அலஞ்சி திரிவோம்” இதுதான் மண்புழுக்கள் நாவலின் கடைசி வரி. இந்த வரிதான் இந்த நாவலின் மையம், உயிர்நாடி. பகலிலும் இருட்டாக இருக்கும் மலேயாக் காடுகளில், ரப்பர் தோட்டங்களில் உழைத்து காற்றோடு காற்றாக கலந்த மனிதர்களுடைய கதைதான் மண்புழுக்கள். நாவலின் தலைப்பு மக்களுடைய வாழ்க்கையைச் சொல்கிறது. காலையில் ‘பெரட்டு’ மணி சத்தம் கேட்டதும் ரப்பர் மரத்தை சீவுகிற தாசாகத்தியுடன், ஒட்டுப்பால் பிடிக்கிற வாளியுடன் ஓடிய, அந்தி வெட்டுக்கு ஓடிய மனிதர்களின், தமிழர்களின் கதை. கித்தா காடு, லாலாங்காடு, பச்சக்காடு, தீம்பாரு காடு, ரெட்ட மல, அபுபாக்கர் மல பகுதியில் உழைத்த, வாழ்ந்த ஆட்டுக்காரன் சின்ன கருப்பன், அஞ்சல, ரமக்கா, வேடியப்பன், மலயப்பன் மகன் காத்தாடி, ராயப்பன், காத்தம்மா, முத்துவேலு, கசியடி முனியப்பன், ஆட்டுக்காரன் மவ பழனியம்மா, தொங்க லயத்து முனியமா, சியாம்கார நொண்டி தாத்தா, வெத்தலபாட்டி, திக்குவாயர் போன்ற ஆயிரக்கணக்கான மக்களின் கதை இது. இந்த பெயர்கள் வெறும் பெயர்கள் அல்ல. இந்த பெயர்களுக்குரியவர்கள் வாழ்ந்தது சாதாரண வாழ்க்கை அல்ல. வரலாறு. அது மலேசியக் காட்டின் வரலாறு, மலேசிய சமூகத்தின் வரலாறு.
மண்புழுக்கள் நாவல் ஆட்டுக்காரன் சின்னகருப்பனின் வழியாக, அவனுடைய வாழ்க்கையின் வழியாக, அவன் வாழ்ந்த இடத்தின் வழியாக மலேயாத் தோட்டங்களில் வாழ்ந்த மொத்தத் தமிழர்களுடைய வாழ்க்கையைச் சொல்கிறது. இது வெறும் மனிதர்களுடைய கதை அல்ல, ரப்பர் மரங்களின் கதை. அங்கு பெய்த மழையின், அங்கு அடித்த வெயிலின், நடுங்க வைத்த குளிரின் கதை. பினாங் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்களில் ரப்பர் பால் ஏற்றிச்சென்று பொன்னாக மாற்றப்பட்டதின் கதை. தன்னுடைய ஷூவில் முகம் மங்கலாக தெரிந்ததற்காக ஷூவைத் துடைத்த தமிழனை இங்கிலிஷில் திட்டி, ஷூவால் உதைத்த டன்லப் போன்ற துரைகளின் கதை. வெள்ளைக்காரத் துரைகள் கப்பல்களில் கொண்டுவந்து இறக்கிய சீமை சரக்குகளின், சீமை நாய்களின் கதை. துரைகளுக்கு சஞ்சிக்கூலிகளை காட்டிக்கொடுப்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட கிராணி பொன்னுசாமி, மேட்டுக்குச்சி தண்டல் மொட்டையன், தாண்டவராயன், மூக்குறிஞ்சான் போன்றவர்களின் கதை. நிறையில் நின்ற பெண்களிடம் கிராணிகளும், தண்டல்களும் செய்த அத்துமீறல்கள், அட்டுழீயங்கள் பற்றிய கதை. உழைப்பையும் கொடுத்து வெள்ளைக்காரர்களிடமும், அவர்களுடைய மிலிட்டரியிடமும் சஞ்சிக்கூலிகள் பட்டதுயரத்தின் கதை. ஜப்பானியர்களால் கட்டாயமாக இழுத்து செல்லப்பட்டு, சயாமிய ரயில்பாதை போடும் பணியில் ஈடுபட்டு செத்துபோனவர்களைப் பற்றிய, மரண ரயில்பாதையிலிருந்து உயிரோடு திரும்பிவந்த சயாம்நொண்டி தாத்தாக்களின் கதை. மலேசியக் காடுகளில் தமிழர்களைக் கடித்துக்கடித்து கொழுத்த கொசு, மூட்டைப்பூச்சி, வண்டுகள், அட்டைப் பூச்சிகள் பற்றிய கதை.மண்புழுக்கள் ஒரு தனிமனிதனுடைய கதையோ, ஒரு குடும்பத்தின் கதை அல்ல. ஒரு காலத்தின் கதை. ஒரு சமூகத்தின் கதை. இதுபோன்ற கதைகளிலிருந்துதான் மலேயாவின் ரப்பர் தோட்டங்கள் பற்றிய வரலாறும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் வரலாறும் உருவாகும். மலேசியாவின் வரலாறும்.
மலேயா ரப்பர் தோட்டக்காடுகளில் தமிழர்கள் உழைத்தது மட்டும் வரலாறு அல்ல. ஆடுவளர்த்தார்கள். மாடுவளர்த்தார்கள். அதோடு மாரியம்மன் கோவில்களையும், முனியாண்டி கோவில்களையும் உண்டாக்கினார்கள். கள் குடித்தார்கள். கூத்துநடத்தினார்கள். மலேயா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள் என்பதெல்லாம் வெறும் கதை அல்ல.
சீ.முத்துசாமி மண்புழுக்கள் நாவலில் தமிழர்களுடைய வாழ்க்கையை மட்டும் எழுதவில்லை. தமிழர்களோடு சேர்ந்து மலேசியக் காடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த சீனன் ‘லிம் ஜிம்பொக்’ பற்றிய கதையையும் எழுதியிருக்கிறார். சீனாவின் மீது ஆக்கிரமிப்பு செய்ய ஜப்பான் முயன்றபோது ஜப்பானிய ராணுவத்தினரால் லிம்ஜிம்பொக்-கின் தங்கை வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறாள். அதன் விளைவாக ‘லிம்ஜிம்பொக்’-ன் தங்கை கர்ப்பமாகிறாள். இன்னொரு வாய்க்கு சோறுதேட வேண்டுமே என்ற கவலையில் ‘லிம்’ இருக்கும்போது ஜப்பானிய வீரர்களை வேட்டையாட வந்த சீன ராணுவம் ‘லிம்’னின் தங்கையை கூட்டுவன்புணர்ச்சிக்கு உட்படுத்திக் கொல்கிறது. துயரத்தை தாங்க முடியாமலும், உயிர் பிழைத்திருக்கவும் சீனாவைவிட்டு மலேயாவிற்கு வரும் ‘லிம்’ மலேயாவில் இருக்கும் ஜப்பானிய அரசுக்கு எதிராக கலகம் செய்யத் திட்டமிடுகிறார். அவருடைய கடவுளாக இருப்பவர் மாசேதுங். மண்புழுக்கள் நாவல் மலேசியாவில் கம்யூனிச இயக்கம் வேர் ஊன்றி வளர்ந்த பின்னணியையும் எழுதியிருக்கிறது.
சீ.முத்துசாமி நாவலாசிரியர் என்ற வகையில் கதைக்குள் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. பேச்சு மொழியிலேயே மொத்த நாவலையும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். 1940-50 காலப்பகுதியில் மலேயா ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்த மனிதர்களுடைய கதையையே நாவலாக, சிறந்த ஆவணமாக எழுதியிருக்கிறார். தமிழர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள், வெள்ளைக்காரர்கள் என பல தேசத்தவர்கள் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். பல தேசத்து மொழிகளும் நாவலுக்குள் பேசப்படுகிறது. அதனால் இது உலகத் தன்மை கொண்ட நாவலாக இருக்கிறது.
இன்றைய வாழ்க்கையில் தூரங்கள் இல்லை, காலம் இல்லை, மொழி, பண்பாடு, உணவு, உடை, கலாச்சாரம் எதுவும் தடையில்லை. எங்கும் வாழலாம், எப்படியும் வாழ்ந்தாக வேண்டும் என்றாகிவிட்ட நிலையில் தனித்த பண்பாடு, கலாச்சாரம் என்று இருக்க முடியாது. இன்றைய நவீன உலகமயமாக்கல் வாழ்க்கை முறையை நீக்கிவிட்டு இன்று நாவல் எழுத முடியாது. வாழ முடியாது. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனியான அடிப்படைகளும், அடையாளங்களும் இருந்தன. அது இன்று குலைந்துபோய் இருக்கிறது.
காலனிமயமாதல், மேற்குமயமாதல் உலகமயமாதல் என்ற விவாதத்திற்கெல்லாம் இன்றைய வாழ்க்கையில் இடமுண்டா? உலகமயமாதல் பண்பாட்டுக்கலப்பா பண்பாட்டுச் சீரழிவா, பண்பாட்டு அழிவா என்றெல்லாம் விவாதிக்க முடியுமா? உலகமயமாதல்தான் இன்றைய வாழ்க்கையாக, கலாச்சாரமாக இருக்கிறது என்று பத்து நாவல்களும் சொல்கின்றன. அதுதான் உண்மையும்கூட.
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
ஔவையார்
- நினைவுச்சின்னம் – (2005)
அ.ரெங்கசாமி
21 ஜாலன், 6 தாமான் தெலுக்
42500 தெலுக் பங்ளிமா காராங்
சிலாங்கூர் டாருல் ரசான் – மலேசியா
- செம்மண்ணும் நீல மலர்களும் (1971)
எம்.குமாரன்
தமிழ் புத்தகாலயம்
பைகிராப்ட்ஸ் ரோடு – சென்னை
- மண்புழுக்கள் – (2006)
சி.முத்துசாமி
தமிழினி பதிப்பகம்
67 பீட்டர்ஸ் சாலை
ராயப்பேட்டை – சென்னை