பேய்களோடு கொஞ்ச நேரம்

எந்தப் பேயும் இறந்துபோகாமலும்

இறந்துபோன பேய்களை

எழுப்பியவாறும்

முளைத்துக்கொண்டே இருக்கின்றன

கதைகள்

எல்லார் வாயிலும்…

பச்சைபாலன் picஎப்பொழுதும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறோம். இம்முறை பேய்களைப் பற்றிக் கொஞ்சம் பேசுவோம். பேய்க் கதைகள் என்றாலும் இவற்றிலும் மனிதர்களின் ஆதிக்கம்தான். மனிதனில்லாமல் பேய்கள் ஏது? பெரும்பாலும் எல்லாருக்கும் பேய் பற்றிய பயம் இருக்கிறது. அதனால்தான் பேய்க்கதை  என்றால் சிறார் முதல் பெரியவர் வரை எல்லாரும் ஆர்வமாய்க் கேட்கிறார்கள்.மனத்தில் பயம் இருந்தாலும் பேய்களைப் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. யாரைக் கேட்டாலும் குறைந்த பட்சம் ஒரு பேய்க்கதையாவது அல்லது பேய் பற்றிய அனுபவமாவது கைவசம் வைத்திருப்பார்கள்.

நீங்கள் பேய் வீடு போயிருக்கிறீர்களா? அண்மையில் நான் பணியாற்றும் பள்ளியில் நிதி திரட்டும் நோக்கில்  சிற்றுண்டி தினம் கொண்டாடப்பட்டது. வகுப்புகள் வாரியாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்தோம். மாணவர்களை அதிகம் ஈர்த்தது பேய் வீடுதான்.பேய் வீடு அமைக்கப்பட்ட இடத்தில் மாணவர்கள் பெருங்கூட்டமாய்க் கூடி விட்டார்கள். அதுவரை பேய்களைப் பார்க்காத மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பேய்களைப்  பார்த்துவிட வேண்டும் என அடங்காத ஆர்வத்தோடு வெயிலையும் பொருட்படுத்தாது வரிசை பிடித்து நின்றார்கள். இரண்டு வகுப்பறைகளைப் பேய் வீடாக உருமாற்றி, உள்ளே பயங்கர ஒலியோடு ஆங்காங்கே தலைநீட்டும் வெள்ளைப் பேய்கள், புதைகுழியில் படுத்திருக்கும் பேய் என உள்ளே ஒரே திகில் மயம்! பேய் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆசை. உணவுப் பொருளை வாங்குவதைவிட பேய்க்காகப் பணத்தைச் செலவு செய்வதில் ஆர்வமாய் இருந்தார்கள். பேய்கள் எப்படித்தான் இருக்கின்றன என நானும் சக ஆசிரியர்களோடு போய்ப் பார்த்து வந்தேன். மாணவர்களைப் பயிற்றுவித்து அலங்காரம் செய்து அவர்களைப் பயங்கரப் பேய்களாக மாற்றுவதில் ஆசிரியர்கள் தங்கள் முழுத் திறனையும் காட்டியிருந்தார்கள்.

மாணவனொருவன் நான் இருந்த கடைப்பக்கம் சோகமாய் நின்றுகொண்டிருந்தான். விசாரித்தேன். “கூப்பன் இருக்கா? ஏதும் வாங்கிச் சாப்பிட்டியா?”

“கூப்பன் இருந்துச்சு சார். நாலு முறை பேய் வீட்டுக்குப் போனேன். எல்லாம் முடிஞ்சுச்சு” தயங்கிவாறு சொன்னான்.

“ஏன் நாலு முறை அங்க போனாய்?”

“ஆசையாய் இருந்துச்சு. அதான் அங்க திரும்ப திரும்ப போனேன்.” வெள்ளந்தியாய்ச் சொன்னான். பேய் பார்க்கும் ஆசைக்குப் பலியான அவனை எங்கள் கடைக்கு அழைத்துச் சென்று இரண்டு முறுக்குப் பொட்டலங்களைத் தந்தேன்.

பேய் வீட்டிற்குக் கிடைத்த அமோக வரவேற்பால் சிற்றுண்டி தினம் முடிந்தும்கூட மேலும் நான்கு நாள்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பேய் வீட்டிற்குப் போகும் வாய்ப்பினை மாணவர்கள் பெற்றார்கள். மற்றக் கடைகளைவிட பேய் வீடுதான் அதிக இலாபத்தை ஈட்டியது. இயற்கையாக மனிதருக்கு இருக்கும் பேய் பயத்தைப் பணமாக்கும் செயல் சரியானதா என  எண்ணிப் பார்த்தேன். இதனால் நாம் பெரும் இலாபத்தை ஈட்டலாம். ஆனால், மனிதரின் உள்மன உணர்வோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பேய் என்ற சிறு துகளை ஊதி ஊதிப் பெரிதாக்குவதால் நீண்டகால பாதிப்புதானே உண்டாகும். வீரதீர சாகசக் கதைகளைச் சொல்லி மாணவரிடையே வீரத்தையும் துணிவையும் வளர்ப்பதை விடுத்து பய விதைகளை மனத்தில் விதைப்பது முறையாகுமா?  ‘வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒண்ணு ஆடுதின்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க, உன் வீரத்தை முளையிலேயே கிள்ளிவைப்பாங்க’ என்று இதைத்தானே பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரமும் பாடினார்.

என்னுடன் பணிபுரியும் சக ஆசிரிய நண்பர் என் கருத்தோடு முரண்பட்டார். “ஒரு வகையில இந்த பேய் வீடு நல்லதுதான். இந்த வயசுலேயே பேய்ன்னா பயந்துகிட்டு இருக்கிறவங்க நல்லா ஆசை தீர பேய பார்த்திட்டா, பயம் எல்லாம் போயிடும். பிறகு பேய்ன்னா ஒரு சலிப்பு ஏற்பட்டுடும். எதையும் வெளிப்படுத்தாம மூடி மறைச்சாதானே ஆபத்து? திறந்துவிடட்டும். எல்லாப் பேய்களும் வெளியே வரட்டும். அப்பதான் அதுங்க வேறு இடம் தேடிப் போகும்”

தோட்டப்புறத்திலும் காடுகளையொட்டிய பகுதிகளிலும் வாழ்ந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த சூழலே பேய் வாழும் இடங்களைக் கற்பிதம் செய்ய உதவின. மலைகளும் பெரிய மரங்களும் குத்துக்கட்டைகளும் பாறைகளும் மனிதர்களின் மனத்தில் பயத்தைத் தூவி பேய்கள் குடியிருக்கும் இடங்களாகக் காட்சி தந்தன. ஆனால், நகர்ப்புறங்களில் கட்டடக் காடுகளில் வாழும் மனிதர்களுக்குக் செயற்கையாகப் பேய் வீட்டை உருவாக்கிப் பேய்கள் பற்றிய கற்பனையைவளர்க்க வேண்டியிருக்கிறது.

பேய் பற்றிய பயம் எனக்குச் சிறு வயதிலேயே தொடங்கிவிட்டது. அம்மாவோடு அதிகாலைக் கும்மிருட்டில் பால் மரக்காட்டிற்கு நடந்து போகும்போது இடையில் எதிர்ப்படும் காட்டுமரங்களைக் கண்டு பயந்து நடுங்கியிருக்கிறேன். அம்மா சக தொழிலாளர்களோடு கலகலப்பாகப் பேசிகொண்டு இருளில் காண்டாவில் மாட்டிய பால் வாளிகளோடு நடந்துபோவார். எனக்கு அவர்களுக்கு முன்னே போகவும் பயம். பின்னால் வரவும் பயம். இடையிலே புகுந்துகொண்டு நடப்பேன். குறிப்பிட்ட ஓர் இடத்தில் காட்டு மரங்கள் நிறைந்து காணப்படும். அதுவும் கும்மிருட்டில் பார்ப்பதற்கு ஒரே பயங்கரம்தான். அந்த வயதிலேயே என் மனத்தளவில் கற்பனைகள் சிறகு விரிக்கத் தொடங்கியதால் பேய்களைக் கண்டபடி கற்பனை செய்ததால் எனக்கு அந்நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

தோட்டப்புறத்தில் பேய்க்கதைகளுக்குப் பஞ்சமிருக்காது. வீட்டில், பள்ளியில், நண்பர்கள் மத்தியில் நிறைய பேய்க்கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். ஒரு நாள், அதிகாலை மூன்று மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த என் அப்பா பயங்கரக் கூச்சல் போட்டு அலறினார். நாங்கள் பயந்துபோனோம். கண்ணைக் கசக்கியவாறு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த அப்பா ஒன்றும் புரியாமல் விழித்தார். கொஞ்ச நேரத்தில் மீண்டும் தூங்கத் தொடங்கினார். அவரைப் பேய் பிடித்து அமுக்கியதா? உடல்நிலைக் கோளாறா? ஒன்றும் புரியவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மாட்டுப் பட்டிக்குப் பால் கறக்கக் கைவிளக்கோடு அவர் போவார். அவருக்குப் பேய் பயம் இருந்ததில்லை. ஒரு முறை,ஒரு மாதம் அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, என் அக்காள் என்னை ஐந்து மணிக்கு எழுப்பிப் பால் கறக்கத் துணையாக அழைத்துப்போனார். உடலை ஊடுருவும் கடுங்குளிர் ஒரு பக்கம். வழியெங்கும் அடர்ந்த இருளில் மூழ்கிய காடுகளில்,சாலை வளைவுகளில் மறைந்திருந்து கோரப் பற்களைக் காட்டிச் சிரிக்கும் பேய்களின் பயம் இன்னொரு பக்கம்.

பேய்களைப் புத்தகத்தில் தேடிப் படித்த அனுபவம் அலாதியானது. படிவம் இரண்டில் படித்தபோது இரவாங் நகரில் அப்பாராவ் புத்தகக் கடையில் வழக்கமாகத் தமிழ் இதழ்களை வாங்கும்போது ‘கல்லறையின் கூச்சல்’ என்ற மர்ம நாவலை வாங்கினேன். அட்டையே பயங்கரமாய் இருந்ததாய் ஞாபகம். வாங்கி வந்து வீட்டில் மாலையில் வாசிக்கத் தொடங்கியபோது வெளியே மழை வரும் அறிகுறியாகப் பலத்த காற்று வீசத் தொடங்கிச் சன்னல்கள் படபடக்கத் தொடங்கின. அன்று பார்த்து அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை. கதையோ பயங்கரமாக இருந்தது.  பயந்துகொண்டே திகிலோடு அந்த நாவலைப் படித்தேன். அந்த நாளின் நினைவுகளைத் தூசு தட்டிப் பார்த்தால் இன்னும் பழைய பயத்தின் கணங்களை இப்பொழுதும் என்னால் உணர முடிகிறது. அந்த அனுபவத்தைப் பின்னாளில் ஒரு கவிதையில் பதிவு செய்தேன்.

படிவம் நான்கில் படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து இரவில் கதைபேசிக்கொண்டு தோட்ட முச்சந்தியிலிருந்த சுடுகாடுவரை நடந்துபோகும் அனுபவமும் மறக்க முடியாதது. இரவு பதினோரு மணிக்குத் தோட்டமே இருளில் மூழ்கிய பிறகு பலர் சேர்ந்து நடந்து போவது சுகமானது. எதைப் பற்றிப் பேசினாலும் பேய்க்கதை பற்றிப் பேசாமல் எங்கள் நடைப்பயணம் நிறைவுபெறாது.

பேய் என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் பேய்களில் பலவகை உண்டு. பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், பொந்தியானாக், தோயோல், ஓராங் பூனியான், மோகினி…. இந்தப் பட்டியல் இன்னும் நீளலாம். நம்மைவிட மலாய்க்காரர்களுக்குப் பேய்க்கதைகள் என்றால் மிகவும் விருப்பம். அதனால்தான் மலாய்மொழித் தகவல் ஊடகங்களில் இன்னும் பேய்க்கதைகள் வெளிவருகின்றன. அங்கு வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து அதைப் பணமாக்கும் முயற்சியில்  பலர் ஈடுபடுகிறார்கள். அவற்றைப் படித்தால் நாம் வாழும் உலகில் பேய்கள் என்னவோ சர்வ சாதாரணமாய் நடமாடுவதாகத் தோன்றும். மயிர்க் கூச்செறியும் கதைகளை உண்மைக் கதைகளாகச் சொல்லித் தொடர்ந்து பேய் மீதான பயம் மறைந்து போகாமல் நிலைபெறச் செய்வதில் வெற்றிப் பெறுகிறார்கள். Mastika மாத இதழ் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்நாட்டில் தொடக்ககால மலாய்த் திரைப் படங்கள்கூட பேய்கள் பற்றிய படங்களாக (Pontianak, Dendam Pontianak dan  Pontianak Gua Musang) இருந்தன. ஒரு கட்டத்தில் அரசு அத்தகைய படங்களைத் தடை செய்யத் தொடங்கியது. அந்தத் தடை மீட்டுகொள்ளப்பட்டு மீண்டும் பேய் பற்றிய படங்கள் வருகின்றன.

நம் தமிழ் ஊடகங்களில் பேய்க் கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பில்லை என்பதால் அல்லது பேய்க் கதைகளைச் சொல்லி வாசகனை ஏமாற்றமுடியாது என்பதால் எப்போதாவது மட்டும்  நம் ஏடுகளில் பேய்கள் காட்சித் தருகின்றன. ‘விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்’ என்ற தலைப்பில் மு. அன்புச்செல்வன் திகிலூட்டும் பேய்க்கதைகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்.ஆங்கிலத் திரைப்படங்கள்தாம் கலையம்சம் பொருந்திய பேய்களைப் போதும் போதும் என்ற அளவுக்குப் பல வகைகளில் காட்டி நம்மைத் திருப்தி செய்திருக்கின்றன. அமெரிக்க இந்தியரான நைட் சாமளனின் திரைக்கதையில் உருவான Sixth Sence பேய் பற்றிய திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி சிறந்த படவரிசையில் இடம் பிடித்தது. அதேபோல, எக்ஸார்சிஸ்ட், தி ஓமன், போல்ததீஸ்ட் போன்ற படங்களும் மறக்க முடியாதவை.

பேய்க்கதைகளுக்கு முடிவு உண்டா? நிச்சயமாக இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மனிதரின் மனத்தின் பேய் பற்றிய பயம் இருக்கும் வரையில் பேய்களுக்குக் கொண்டாட்டம்தான். ‘கல்லறையின் கூச்சல்’ நாவல் படித்த என் அனுபவத்தை ஒரு கவிதையில் பதிவு செய்தேன் இப்படி:

யாருமற்ற நாளில்

பேய்களோடு கழிந்தது பொழுதெனக்கு

பேய்களோடு பேசக்கூடாது என்று

அப்பா சொன்னதும் காரணமாயிருக்கலாம்

என் பேய் சகவாசத்துக்கு

சன்னல் கதவுகள் படபடக்க

வேகமாக வீசிய காற்றின் கைப்பிடித்து

வீட்டுக்குள் ஏதோ நுழைவது போலிருந்தது

கைகளில் படபடத்த

‘கல்லறையின் கூச்சல்’ நாவலின் பக்கங்களில்

பதுங்கிருந்த பேய்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்து

என்னோடு பேசத்தொடங்கின

ஒவ்வொரு பேய்க்கும் ஒவ்வொரு கோர முகம்

எல்லாப் பேய்களையும் ஒரே முகத்தோடு

கற்பனை செய்த தவறெனக்குத் தெரிந்தது

பேய்களிடம் நிறைய கதைகள் இருந்தன

ஊர் முழுக்கச் சுற்றிச் சேகரித்த கதைகளைச்

என்னிடம் சொல்லத் தொடங்கின

தூக்குப்போட்டு இறந்த தொங்கவீட்டு முனியாண்டி

கங்காணியால் கர்ப்பமாகித் தீயில் கருகிய மாலா

சுடுகாட்டு முச்சந்தியில் பஸ்சுக்குள் சிக்கிய மோகன்

குளிக்கப்போய் காணாமல்போன மனோகரன்

காதலன் கைவிட்டதால் மாத்திரைகளை விழுங்கிய உமா

கதைகளிலிருந்து வெளியேறிய புதிய பேய்கள்

என்னைச் சுற்றி நின்று உற்றுப் பார்க்க

நாவலில் பக்கங்களில் மேலும் சில பேய்களோடு

பேசத் தொடங்கினேன்

பேய்களோடு பேசும் அனுபவம்

திகிலாக இருந்தாலும் பிடித்திருந்தது

நள்ளிரவு தாண்டியும் ஆளில்லாத வீட்டில்

விருப்பத்தோடு அலையும்

பிரியமான பேய்களை அழைத்துக்கொண்டு

முச்சந்திச் சுடுகாடுவரை போய்

விட்டுவிட்டுத் திரும்பினேன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...