திறவுகோல் 5: வேர்கள்

verkalசிங்கப்பூரில் பெண்கள் எழுதியுள்ள நாவல்கள் பக்கம் என் பார்வையை  சற்றுத் திருப்பலாம் என்ற எண்ணம் எழுந்தபோது என் கைக்குக் கிடைத்தது திருமதி.நூர்ஜஹான் சுலைமான் எழுதியுள்ள ‘வேர்கள்’ என்ற நூலாகும். தங்கமீன் பதிப்பகத்தால் பதிக்கப்பட்டு 2012-ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்தக் குறுநாவல் இருபத்து மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் முஸ்லீம்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது. தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நசிவுற்ற மக்கள் பிழைப்புத் தேடி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து மலாயாவுக்கு வர ஆரம்பித்தார்கள். அவர்களில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கடையநல்லூர், தென்காசி போன்ற ஊர்களிலிருந்து குடியேறியவர்கள் இன்று சிங்கைத் தமிழ் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். அப்படி தென்காசியிலிருந்து புலம்பெயர்ந்த ஓர் இஸ்லாமியக் குடும்பத்தின் கதையைப் பேசும் இந்நாவலில் கற்பனை பத்து விழுக்காடும் கண்டு, கேட்டு, அனுபவித்த உண்மைச் சம்பவங்கள் தொண்ணூறு விழுக்காடும் இருப்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

சிங்கப்பூரில் பணி ஓய்வு பெற்று இனிமேல் பேரப்பிள்ளைகளோடு காலத்தைக் கழிக்கலாம் என்று எண்ணத்தில் வீடு திரும்பும் அஹமதை அவரது மகன் ஆறுமாத ஓய்வுக்காக தென்காசிக்கு அனுப்பிவைக்கிறான். மனைவி சல்மாவோடு தென்காசிக்கு வரும் அஹமதுவின் நினைவுகள் வழியாக அவரது பால்யக்கால கதை விரிகிறது.

அஹமதுவின் அப்பா அபுபக்கர். அபுபக்கர் பிறந்ததும் அவரது வாப்பாவும் உம்மாவும் அடுத்தடுத்து இறந்துபோக பத்துவயது மூத்தவரான அண்ணன் ரெசவப்பாவின் அரவணைப்பில் வளர்கிறார். வேளாண்மை சகோதர்களின் நல்வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைகிறது. இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ரெசவப்பாவுக்கு குழந்தை பாக்கியம் கிட்டாமல் போக அபுபக்கருக்கு ஜமிலாவும் அஹமதுவும் (கதை நாயகன்) பிறக்கிறார்கள்.

அஹமது பிறந்த சில நாட்களில் ஊரில் காலரா பரவுகிறது. அக்காலகட்டத்தில், காலனின் மறு உருவமாகக் கருதப்பட்ட காலரா நோய்க்கு அஞ்சிய ரெசவப்பா, தனது தம்பி குடும்பத்தை எப்படியாவது அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்போடு முயன்று நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் ரெஜுலா கப்பலில் அவர்களை ஏற்றிவிட்டு பிரியாவிடை கொடுக்கிறார். அண்ணனை விட்டுப்பிரியும் சோகத்தோடும் புது நாட்டில் குடும்பத்தோடு எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சத்தோடும் சிங்கை நோக்கி பயணிக்கிறார் அபுபக்கர். பன்னிரண்டு நாட்கள் பயணத்திற்குப் பிறகு கப்பல்  ‘செயின்ட் ஜான்’ தீவை வந்தடைகிறது. அக்காலகட்டத்தில் PSA துறைமுகம் புலம் பெயர்ந்தவர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை நல்கியுள்ளது.

ஆரம்பத்தில் ஆப்பம், தோசை சுட்டு தெருத்தெருவாகக் கூவி விற்ற அபுபக்கர் கடை ஒன்றைத் தொடங்க வியாபாரம் சூடுபிடிக்கிறது. மூன்றாவது குழந்தையாக ரஹீம் பிறக்கிறான். காலச் சக்கரம் வாழ்க்கை என்ற வண்டியை வேகமாக இழுத்துக்கொண்டு ஓடுகிறது. அண்ணன் ரெசவப்பாவின் அறிவுறுத்தலின் பேரில் மகள் ஜமிலாவை ஊரில் உள்ள பையனுக்குத் திருமணம் செய்துகொடுக்கிறார். மூத்தமகன் அஹமது பொறுப்பான பிள்ளையாக வளர இளைய மகன் ரஹீம் தவறான சேர்க்கையால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான். ரெசவப்பா உடல்நிலை சரியில்லாமல் உயிர் துறக்க அண்ணனின் இறுதிச் சடங்கிற்கு வந்த அபுபக்கரும் உயிர் துறக்கிறார்.

ஊருக்கு அனுப்பினால் தம்பி ரஹீம் திருந்துவான் என்ற நம்பிக்கையில் அஹமது அவனை ஊருக்கு அனுப்ப அவனது குடிப்பழக்கமோ மேலும் மோசமடைகிறது. பரம்பரை வீட்டைத் தவிர மற்ற அனைத்து சொத்துக்களையும் விற்று மூன்றாக்கி தனது அக்காவிற்கும் தம்பிக்கும் பிரித்துக்கொடுக்கிறார் அஹமது. தனது பங்கை ஊதாரித்தனமாக செலவிடும் தம்பியின் மகளுக்கு தனது செலவில் திருமணத்தை நடத்தி வைக்கிறார். தம்பியும் தம்பியின் மனைவியும் இறந்துபோக பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் புகுந்த வீட்டில் இன்னலை அனுபவிக்கும் தம்பி மகளை பரம்பரை வீட்டைப் புதுப்பித்து அதில் குடிவைக்கிறார். ஆனால் தம்பி மகளும் மருமகனும் அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் நடந்துகொள்வது அவரை வருத்தமடையச் செய்கிறது. இறுதியில் கனவில் வந்து தமது மூதாதையர் சொல்வதை ஏற்று அந்த வீட்டை பள்ளிவாசலுக்கு தானமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறார்.

மூன்று தலைமுறைகள் இந்நாவலில் இடம் பெற்றிருந்தாலும் மூன்றாவது தலைமுறையைப் பற்றி விரிவாக பேசப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். அதேசமயத்தில் முதல் தலைமுறைக்கும் மூன்றாவது தலைமுறைக்குமான அறம் சார்ந்த சிந்தனை வேறுபாட்டை இந்நாவல் பதிவு செய்திருக்கிறது என்று துணிந்து சொல்லலாம். உதாரணமாக, காலரா நோயால் தானும் தனது மனைவியும் இறந்துபோனாலும் பரவாயில்லை எப்படியாவது தன் தம்பியின் குடும்பத்தைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைக்கும் முதல் தலைமுறை மனிதரான ரெசவப்பாவும், தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பது போல வீடில்லாமல் அல்லல்படும் தங்களுக்கு உதவி செய்த அஹமதுவிற்குத் துரோகம் நினைக்கும் இன்றைய தலைமுறை ரஹீமின் மகளும் மருமகனும் இரண்டு தலைமுறைக்குள் வீழ்ந்து போன விழுமியங்களின் சாட்சிகளாக நம்முன் நிற்கிறார்கள்.

இஸ்லாமியர் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் சொற்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தக் கூடியதாக இந்நாவலின் மொழி அமைந்திருப்பது சிறப்பு. மய்யத் – சடலம், இத்தா – தனிமைப்படுத்துதல் (கணவன் இறந்தபிறகு மனைவியை நாற்பது நாட்கள் தனிமைப்படுத்துவர்), ஸபுரு – பயணம், தாத்தா – அக்கா, மௌத் – மரணம், துஆ – பிரார்த்தனை, நகரா – தொழுகைக்கு முன் அறையப்படும் பறை, சுபுஹி – அதிகாலைத் தொழுகை, மக்ரிப் – முன்னிரவுத் தொழுகை, தப்ரூக் – பிரசாதம், இப்படியாக பல சொற்கள் வாசிப்பிற்கு கிடைக்கின்றன. இது ஒரு சிங்கப்பூர் நாவலா? எனக் கேட்டால், எனது பார்வையில் இதை இருபது சதவீதம் மட்டுமே சிங்கப்பூர் நாவல் என்று சொல்லமுடியும். ஏனென்றால் சிங்கப்பூரின் வாழ்க்கைச் சூழல் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே இந்நூலில் காணக்கிடைக்கின்றன.

இலக்கியத்தில் ‘காலம்’ ஒரு முக்கியமான அம்சம். அது எனது சிறுகதைகளில் இல்லை என எனது சிறுகதைத் தொகுப்பிற்கு விமர்சனம் அளித்த எழுத்தாளர் இமையம் குறிப்பிட்டார். உண்மைதான். காலத்தின் கண்ணாடி என்று இலக்கியத்தைச் சொல்லும்போது படைப்புகள் அக்காலத்தை சரியாகப் பிரதிபலிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்நாவலில் எங்குமே காலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. நூல் வெளியிடப்பட்ட ஆண்டை வைத்துக்கொண்டு ஒரு வாசகராக நான் பின்னோக்கிச் சென்று கதை நடக்கும் காலத்தைத் தோராயமாக ஊகிக்க வேண்டி உள்ளது. அதற்காக நாவலில் சம்பவங்கள் நடந்த ஒவ்வொரு வருடத்தையும் குறிப்பிடுவது சரியாக  இருக்குமா என்றால் அது ஒரு டைரி அல்லது சுயசரிதை போல அமைந்துவிடும் ஆபத்து உண்டு. ஆனால் சம்பவங்களோடு ஒட்டிய வரலாற்று நிகழ்வுகளை நாவலில் குறிப்பிடும்போது வாசகனை எளிதாக அக்காலகட்டத்திற்கு நகர்த்த முடியும்.

ஒரு தனிமனிதனின் குடும்பக்கதையாக இருந்தாலும் அவனது அகவாழ்க்கையை மட்டும் விவரிக்காமல் புறத்திலிருந்து அவனைப் பாதித்த சமூக, அரசியல், பொருளாதார காரணிகளையும் இணைத்துப் பேசியிருந்தால் இந்நாவல் இன்னும் ஒருபடி மேலே சென்றிருக்க வாய்ப்பு உண்டு. பதின்மூன்று வயதில் பெண்ணுக்குத் திருமணம், மனைவி குழந்தை பெற்றுத் தராவிட்டால் ஆண்மகனுக்கு மற்றொரு திருமணம் ஆகியவற்றை நாவலில் சொல்வதன் மூலம் இஸ்லாமியக் குடும்பத்தில் பெண்களின் நிலையை ஆசிரியர் கோடிட்டுக் காட்டுகிறார்.

பெரும்பாலான வாசகர்கள் அறிந்திராத நுண் தகவல்களால் நாவல் கட்டமைக்கப்படும்போது அதன் வீரியமும் வீச்சும் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் பார்த்தால், பல நுண் தகவல்களை இந்நாவலில் கொடுக்ககூடிய வாய்ப்பு இருந்தும் ஆசிரியர் அதைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. உதாரணத்திற்கு தென்காசியில் இஸ்லாம் சமூகத்திற்குரிய சடங்கு, பழக்க வழக்கம், உணவு ஆகியவற்றைப் பற்றி ஒரு வரியில் சொல்வதைத் தவிர்த்து சில கூடுதல் தகவல்களைத் தந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உறவுகளுக்கு இடையே நிகழும் அன்புப் பரிமாற்றம், பிணக்கு  ஆகியவற்றை மிகை உணர்ச்சி இல்லாமல் மிக இயல்பாக வெளிப்படுத்தி எழுதப்பட்டிருப்பது இந்நாவலின் பலமாக எனக்குப் பட்டது. ஆனால் இறுதிக் காட்சி சற்று பலவீனமான முடிவை நாவலுக்கு அளித்திருக்கிறது. பரம்பரை வீட்டைப் பள்ளிவாசலுக்குத் தானமாக அளித்த அஹமதுவும் அவரை அதிகமாக நேசித்த அவரது அக்கா ஜமிலாவும் ஒன்றாக இறந்து போவது வலிந்து திணிக்கப்பட்டது போல இருந்தது. நாடகப்பாணியில் அமைந்த இந்த முடிவைத் தவிர்த்திருந்தால் நாவல் வலுப்பெற்றிருக்கும். இதுபோன்ற சில தொய்வுகள் இருந்தாலும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையைப் புனைவில் கொண்டுவர முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருப்பதற்காகவே நூல் ஆசிரியரைப் பாரட்டலாம்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...