காதலின்
இறுதி விந்தும் தீர்ந்தபின்
நாம்
சராசரி விசயங்களைப் பேசத்தொடங்கினோம்
சராசரி திரைப்படங்கள் பற்றி
சராசரி உணவுகள் பற்றி
சராசரி நூல்கள் பற்றி
சராசரி திட்டங்கள் பற்றி
சராசரி பெண்கள் மற்றும் ஆண்கள் பற்றி
சராசரி பாடல்கள் பற்றி
சராசரி வாழ்க்கை பற்றி
காதல் தீர்ந்த இடத்தில்
நாம் சராசரிகளை வைத்துதான் நிரப்ப வேண்டியுள்ளது…
சராசரிகள் அசூயையாவதில்லை
சராசரிகள் எழுச்சிகளை ஏற்படுத்துவதில்லை
சராசரிகள் கண்ணீரை வரவழைப்பதில்லை
சராசரிகள் சோர்வடைய வைப்பதில்லை
சராசரிகள் உற்சாகத்தையோ உருக்கத்தையோ உருவாக்குவதில்லை
சராசரி விசயங்கள்
வாழ்வை தொடர மட்டும் உதவுகின்றன
அவை மரணத்தை மட்டும்
நூலிழையில் தடுக்கின்றன.
***
முதியவளின் பார்வையை
நான் மறுத்தபடி கடந்த நிமிடம்தான்
மாயா என்னிடம் மிட்டாய் கேட்டாள்
பையில் எஞ்சியிருந்த
கிழிந்த ஒற்றை ரிங்கிட்டை
தயங்கியபடி வெளியெடுத்த என்னிடம்
பிடுங்கி ஓடியவள்
சப்புக்கொட்டி வந்தாள்
மிட்டாய் தீர்ந்துவிட்டதென…
கிழிந்த நோட்டை
முதியவள் வெயிலில் தூக்கி ஆராய்ந்ததை
அவளைப்போலவே
நானும் கவனிக்காதபடி நடந்தோம்.
***
நேற்று
ஒரு தடித்த
தத்துவ நூலை வாசித்து முடித்தபின்
நண்பனிடம் அழைத்து
நூலைப்பற்றி சிலாகித்தேன்
அதன் பக்கங்களைப் புரட்டி
தகவல்களைக் கூறினேன்.
மடியில் படுத்திருந்த மாயா
ஓடிச்சென்று தனது பாட நூலை எடுத்துவந்தாள்
அதில் இருந்த ‘A,B,C,D’ யைப்பற்றி
அன்றிரவு முழுவதும்
என்னிடம்
சிலாகித்துக்கொண்டே இருந்தாள்.
***
பெரிய சுறா மீன்கள் வளர்வதாகவும்
சிறிய டைனோசர் இருப்பதாகவும்
சாக்லெட் மரம் முளைத்துள்ளதாகவும்
தனது தோழியிடம்
பேசிக்கொண்டிருந்த மாயாவை அணைத்தபடி
அவள் பொய்யை கண்டித்தேன்…
இரவுகளில் மட்டுமே வீட்டுக்குள் நுழையும்
எனக்குக்குக் கூட
அவை வளர்வது தெரியாது
என தன் தோழியிடம் சத்தமிட்டு சொல்லி
தொடர்ந்து நடந்தாள்.
***
சுவர் ஓவியத்தில் இருந்த ரோஜாக்கள்
செம்பு நிறத்தில் இருப்பதில்
அதிருப்தி அடைந்த மாயா
தனது சிவப்பு வண்ணப் பென்சிலால்
அதை கிறுக்கினாள்…
பென்சில் முனையில் முழுமையாய் ஒட்டிவிட்ட
செம்பு நிறத்தை
நேற்றைய இரவு முழுவதும்
ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தாள்
அவ்வப்போது ரோஜா மணம் வீசுவதாக
முகர்ந்தபடி
Excellent!!!!
C Prabakaran
வல்லினத்தைப் படிக்கவும் அதைப் பற்றியக் கருத்துக்களைக் கூறவும் , தமிழ் மொழியில் அதிய புலமைப் பெற்றிருக்க வேண்டும் என்பது என்னுடையக் கருத்து .காரணம் படைப்புகள் அனைத்தும்
மிகவும் புதுமைப் படைப்பாக உள்ளது. மிகவும் தரமான தமிழ் மொழியில் உள்ளது.
உங்கள் கவிதையைப் புரிந்து கொள்ளச் எனக்கு முதிர்ச்சித்தேவைப்படுகிறது .
சிறு அணுவைத் துளைத்து உயரிய கருத்தை மிகவும் லாவகமாகப் புகுத்தியுள்ளீர்கள் நன்று.
மாயாவின் கற்பனை காவியம் பொய்யாக உருவெடுக்கும் போது அதைச் சாதூரியமாகச் சமாளிப்பது மிகவும் அழகாக எழுதுள்ளீர்கள்.
(இரவுகளில் மட்டுமே வீட்டுக்குள் நுழையும்
எனக்குக்குக் கூட
அவை வளர்வது தெரியாது
என தன் தோழியிடம் சத்தமிட்டு சொல்லி
தொடர்ந்து நடந்தாள்.)
சராசரிகள் எனும் கவிதையைச் சாமானியரான் என்றால் சகஜமாக ஊகிக்க இயலில்லை .
சராசரி உணவு பசி என்று வந்தால் அதுவே அனைவருக்கும் தேவாமிர்தம்.
சராசரி திட்டம் சரியான நேரத்தில் செயல்பட்டால் அதுவே இராஜா தந்திரம் .
சராசரி திரைப்படம் சரியான கண்ணொட்டத்தில் பார்த்தால் அதுவே வாழ்க்கையில் தத்துவம்.’
சராசரி ஆண்ணும் பெண்ணும் நன்னடத்தையுடன் வாழ்ந்தால் காதலும் கண்ணியமாகும்.
சராசரி வாழ்க்கை கண்ணீரை அணைப்போல தராது .
சராசரி வாழ்க்கை பொறுப்பைத் தரும் சாரசரியைச் சரியாகப்பயன்படுத்தினால்……….
இது என்னுடைய கருத்து …
உங்கள் தமிழ் நடை , முற்போக்குச் சிந்தனை மிகவும் வலுவாக உள்ளது ….. உருவாக்குங்கள் உங்களைப் போன்ற துணிச்சல் மிக்க இளைஞரை
வாழ்த்துக்கிறேன் நன்றி
நன்றி நந்தினி