அக்கா, ரமேஷ் அண்ணனோடு ஓடிப்போய் விட்டாள். நிரந்தரமான காலை ஷிப்ட் முடிந்து மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டிலிருப்பவள், ஆறரை மணிக்கு எஸ்டேட் ஜெனரேட்டர் ஸ்டார்ட் செய்யப்பட்டு கரண்டு வரும்வரை வீட்டுக்கு வராததை தம்பிதான் முதலில் கவனித்தான் போலிருக்கிறது . தீபாவளிக்கு அப்பாவுக்குக்கூட தெரியாமல் டவுன் முழுவதும் அலைந்து திரிந்து இறுதியாய் R. அப்பாராவ் சில்க் ஸ்டோரில் அவள் விருப்பப்பட்ட சின்னச்சின்ன பூக்கள் போட்ட மெரூன் கலர் பட்டுப்பாவாடை எல்லாம் வாங்கித்தந்த அம்மாவுக்கு இதை முதலில் நம்புவதா வேண்டாமாவென்ற குழப்பம் வந்தது. கூட வேலை செய்யும் பக்கத்து வீட்டு தேவி அக்கா, வேலைக்குப் போகும் பஸ் கீலாங் டிரைவர் என்று வீடு வீடாகப் போய் விசாரித்ததில், மத்தியான சாப்பாட்டு நேரத்தில் தோளில் ஒரு கருப்பு பையோடு அவசரமாய் ரமேஷ் அண்ணனின் மோட்டார் சைக்கிளில் அவள் ஏறிப்போனதை எல்லோரும் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதன் பிறகே அம்மாவின் முகத்தில் கலவரம் ஏறி அமர்ந்தது.
எஸ்டேட்டில் இந்த மாதிரி நடப்பது இதுவொன்றும் முதல் முறையல்ல. ஒன்றரை வருடத்துக்கு முன்பு எஸ்டேட் மேனேஜரின் மகள் கூட யாரோ விஜயகுமார் என்பவனுடன், அதுவும் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு, இப்படித்தான் ஓடிப்போனாள் . அவன் யாரென்றே எனக்கு தெரியாது. ஆனால் அந்தப் பெண்ணை ஒரு முறை, தோட்டத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் பார்த்திருக்கிறேன். அக்காவைவிட ஓரிரண்டு வயது மூத்தவளாக இருக்ககூடும். கோலாலும்பூரில் ஏதோ தனியார் கல்லூரியில் செக்கிரட்டேரியல் கோர்ஸ் செய்வதாக அக்கா சொன்னாள். தீபாவளிக்கு மேனேஜர் வீட்டுக்கு புதிதாய் அலங்கார விளக்குகள் மாட்ட வந்தவனிடம் அந்தப்பெண் எதோ வகை தொகையாய் தப்பு செய்து விட்டதென்றும் , அதைச் சொல்லியே அந்தப்பையன் மிரட்டியதாகவும், வேறு வழியில்லாமல் அவனோடு கிளம்பி விட்டதென்றும், மேலுமொரு சாரார் அப்பையன் அந்தப்பெண்ணுடன் கூடப் படிப்பவனென்றும், போகும்போது வீட்டிலுள்ள நகைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப்பெண் போய்விட்டதாகவும் எஸ்டேட் முழுவதும் எச்சில் தெறிக்க பேசிக்கொண்டார்கள். அப்பாகூட “கவுண்டன் கவுண்டன்னு மெதப்புல இருந்தான்ல… பறையன் வெச்ச ஆப்பை பாத்தியா … “ என்று அம்மாவிடம் ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன் .
அங்காளம்மன் கோயிலுக்கு ஆடு வெட்டுவதாக வேண்டிக்கொண்ட ஆறு மாதத்திற்கு பிறகே, ஏறக்குறைய கல்யாணம் ஆன நான்காவது வருடத்தில்தான் அக்கா முதன் முதலாக அம்மாவை வயிற்றில் உதைத்தாளாம். டவுனுக்கு போய், ஸ்ரீ வீரகத்தி விநாயகர் கோயில் பூசாரியை எல்லாம் பார்த்துக் கலந்தாலோசித்து , கஷ்டப்பட்டுத் தேடி அவளுக்கு தாட்சாயினி என்று பெயர் வைத்தார்களென்றும், சுற்று வட்டாரத்தில் யாருக்கும் அந்த மாதிரியான அழகான பெயர் வாய்க்கவில்லை என்றும் அம்மா எப்போதும் பெருமையடித்துக் கொள்வதுண்டு. முதலில் திரிபுரசுந்தரி என்னும் தனது அம்மாவின் பெயரை உத்தேசித்ததாகவும், அப்பாவுக்கு அது பிடிக்காத காரணத்தினாலேயே இந்த பெயரை வைத்ததாக அப்பாவை குறை கூறும் சமயங்களிலெல்லாம் அம்மா மறக்காமல் ஞாபகப்படுத்துவாள். எஸ்டேட் பள்ளிக்கூடத்தின் ஆங்கிலப்பாட ஆசிரியை பார்வதிதான் தாட்சாயினியை முதன்முதலாக தாட்சு என்று சுருக்கியதாகவும், அதன்பின் அதுவே பலராலும் பின்பற்றப்பட்டு, ரொம்ப காலம்வரை நீடித்து நிலைத்துப்போனதில் அவளுக்கு மிகுந்த வருத்தமும் உண்டு. அம்மா எப்போதும் தாட்சு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அழைத்து நான் பார்த்ததில்லை. அவளுக்கு பிடித்தமானது எப்போதுமே நீட்டி முழக்கப்படும் தட்சாயனிதான்.
அக்கா அழகாக இருப்பாள். சிரித்தால் அம்மாவைப்போலவே கன்னத்தின் ரெண்டு பக்கத்திலும் குழிவிழும். அதிர்ஷ்டக்காரி வேறு. அவள் பிறந்த மூன்றாம் நாள், அவளுடைய பிறந்த நாள் எண்ணையும் வருடத்தையும் சேர்த்து எடுத்ததில் அப்பாவுக்கு டோட்டோவில் முதல் பரிசாக ஆறாயிரம் வெள்ளி விழுந்ததாகவும். அந்தப்பணத்தில் அவருடைய முதல் மோட்டார் சைக்கிளை ரொக்கமாகவே வாங்கியதாக சொல்லும் போதெல்லாம் அப்பாவின் முகத்தில் மலர்ச்சி பொங்கும். அந்த சமயத்தில் அம்மாவையும், கைக்குழந்தையான அக்காவையும் கூட்டிக்கொண்டு கோலாலும்பூர் போனதையும், கொலிசியம் தியேட்டரில் அவன்தான் மனிதனையும் , கொஞ்சம் தள்ளி இருந்த சென்ட்ரல் தியேட்டரில் நாளை நமதேயையும் ஒரே நாளில் பார்த்துத் தீர்த்ததை மகிழ்ச்சியான தருணங்களில் எல்லாம் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு குதூகலிப்பதை அப்பா தவற விட்டதேயில்லை. அம்மாவும் அக்காவும் நாற்காலியொன்றில் உட்கார்ந்திருக்க அப்பா அவர்களின் பின்னால் சிரித்தபடி நிற்கும், கருப்பு வெள்ளையில் அப்போது எடுக்கப்பட்ட ஒரு போட்டோ லேசாக வெளிறிய நிறத்தில் இன்றும் எங்கள் வீட்டு ஹாலில் தொங்குவதைப் பார்க்கலாம்.
அதன் பிறகே அப்பா நிறைய மாறிப்போனதாகவும், எஸ்டேட் கங்காணியான கன்னியப்பனின் சகவாசம், அவருடைய நிஸான் சன்னியில் அடிக்கடி கோலாலும்பூர் சௌக்கிட் பக்கம் சவாரி, கெந்திங்கில் சீட்டாட்டமென அப்பா எல்லாப் பணத்தையும் அழித்தாராம் . இப்போதெல்லாம் அப்பாவை எஸ்டேட் சீனன் கடையில் அன்றாடம் சாயங்காலங்களில் பார்க்கலாம். பொன்னுச்சாமி மாமாவின் மளிகைக் கடையைத் தாண்டி கொஞ்ச தூரம் போனால், வலது பக்கம் ஒரு வளைவு வரும். அங்கிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையின் வழி நெடுக இருக்கும் லாலாங் புதர்களில் லேசாய் மூத்திர நாற்றம் அடிக்கும். அதனாலேயே பெண்களோ பிள்ளைகளோ யாரும் தேவை இல்லாமல் அந்தப் பாதையின் ஊடாக போக மாட்டோம். அதன் முட்டில் இருக்கும் தனது கடைக்குப் பின்னால் தவுக்கே தகரத்தில் கூரை வேய்ந்ததொரு கொட்டாய் ஒன்றை போட்டிருப்பான். அந்த கீழேதான் யாவும் நடக்கும் . இரவில் நெடு நேரம் கழித்து வீட்டிற்கு திரும்போதேல்லாம் அவரின் நடையில் லேசான தள்ளாட்டம் தெரியும். அக்காவை நேரில் பார்த்தால் மட்டும் லேசாக பம்முவது போன்ற பாசாங்கும், அவள் தூங்கி விட்டிருந்தால் கொஞ்சம் அதிகாரமும் குழறலும் வெளிப்படையாகவே தெரியும்.
ஆறேழு மாதங்களாகவே லேசாக காதில் விழுந்த செய்திதான். பள்ளி முடிந்து வீடு வரும்போது கவிதா கூட “நெசமாவா…‘’ என்றொரு முறை கேட்டாள். எஸ்டேட் பஸ் நிறுத்தத்தின் பக்கத்தில் இருக்கும் பெரிய தூங்குமூஞ்சி மரத்தின் கீழே ஒரு முறை அக்கா, ரமேஷ் அண்ணனின் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழிறங்கியதை, ஸ்கூல் பஸ் ஓட்டும் பெரியசாமி அண்ணன் பார்த்துவிட்டு அப்பாவிடம் சொன்னதாக வீட்டில் ஒருமுறை சண்டை கூட வந்தது. “பெத்த புள்ளையையே சந்தேகப்படுறியே… மனுஷனா நீ?” என்றெல்லாம் அம்மா அன்று விமரிசையாகப் பேசிவிட்டு இரவில் வாங்கிக்கட்டிக் கொண்டாள். அதைவிட அக்கா “நான் ஒன்னும் சின்னப்புள்ள இல்ல… யாருகிட்ட பேசணும், யாருகிட்ட பேசக்கூடாதுன்னு யாரும் எனக்கு சொல்லித்தர வேணாம்.” என்றெல்லாம் வார்த்தைகளை உதிர்த்ததுதான் ஆச்சரியமளித்ததென்றால் “சம்பாதிக்கிற திமிரு…களுதைக்கு” என்று மட்டும் முணுமுணுத்துவிட்டு அப்பா ஓய்ந்ததுதான் அன்றைக்கு அதைவிடப் பெரிய ஆச்சரியமான விஷயமாக எனக்கு தோன்றியது. அப்பா கையை ஓங்காமல் வீட்டில் எந்தச் சண்டையும் முடிந்ததில்லை. மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் சண்டைகளின் போது பதுங்கிக் கொள்ளும் தம்பிகூட அன்றிலிருந்து அவ்வப்போது தன் வளையிலிருந்து லேசாக தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்க்கும் தைரியத்தை வளர்த்துக்கொண்டான்.
அதன்பின் நடந்த வேறு சில உரையாடல்களின்போது அம்மா அக்காவின் வார்த்தைகளினால் காயப்பட்டு இருக்கிறாள் என்பது போன்ற உணர்வு எனக்கு இருந்தது. சின்னச்சின்ன வாக்குவாதங்களுக்குப் பிறகு கூட முன்னெப்போதும் போலல்லாது, இரண்டு மூன்று நாட்கள் அவள் அக்காவுக்கு முகம் கொடுக்காமல் இருப்பது போலக்கூடத் தோன்றியது. தோளுக்கு மேலே வளர்ந்து விட்டாள் போன்ற வார்த்தைகளை அம்மா அடிக்கடி முனக ஆரம்பித்தாள். அக்கா, அம்மாவின் புலம்பலை ஓரளவுக்கு மேல் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் ஒருமுறை, டவுனிலுள்ள ரெக்ஸ் தியேட்டரில் அக்கா நண்பர்களுடன் மௌன ராகம் படம் பார்த்துவிட்டு திரும்பிய ஓரிரவின் போதுதான் அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் அக்காவைக் ஓங்கிய குரலில் கண்டித்ததைப் பார்த்திருக்கிறேன். அக்கா ஒன்றும் பேசாமல் முறைத்தபடியே தன் ரூமுக்குள் புகுந்து, கதவை அறைந்து சாத்தி தாழிட்டுக்கொண்ட அன்று, ரொம்ப நாளைக்கு அப்புறம் அம்மா பூஜையறையினுள், அம்மனின் படத்துக்கு முன்னாள் நின்று கையால் வாயைப் பொத்திக்கொண்டே அழுவதைப் பார்க்க நேர்ந்தது.
நாளைக்குள் எப்படியும் எஸ்டேட் முழுக்க விஷயம் தெரிந்து விடும் . யாருக்கும் விபரமேதும் தெரியாவிட்டாலும் ஒவ்வொருவரும் யாரிடமாவது ஏதாவதொன்றை பேசி முடிக்கவும், பரிமாறவும், கிசுகிசுக்கவும் தகவல் ஒன்றினை கைவசம் வைத்திருப்பார்கள். இன்னும் ஓரிரு வாரங்களுக்கு வெளியில் தலை காட்டுவதோ, யாருடனாவது சகஜமாக பேசவோ முடியுமாவென்றோ தெரியவில்லை. எல்லா உரையாடல்களுக்கும் நடுவே அக்காவும் விரும்பத்தகாத ஒரு இன்னுமொரு பேசு பொருளாக தன்னிச்சையாய் உள் நுழைந்து, சூழலை மனச்சோர்வு தரக்கூடிய ஒன்றாக மாற்றி விடக்கூடும். எந்தவொரு முகமனிலும் ஏளனம் கலந்திருக்கிறதோவென்னும் குறுகுறுப்பு என்னை நிழலைப்போல் துரத்துமென நினைக்கிறேன். நாற்றமெடுக்கும் அழுகிய வார்த்தைகள் திசைகள் யாவிலுமிருந்தும் தெறித்து மேலே விழும் . அந்த அழுக்கை சுலபமாக துடைத்து வீசி எறிய முடியுமாவென்றும் தோன்றவில்லை.
அக்கா வீட்டிலிருந்தால் அவளது அறையிலிருந்து எப்போதும் ரேடியோ சத்தமாக பாடிக்கொண்டே இருக்கும். தேவையின்றி தன் அறைக்குள் யாரையும் அவள் அனுமதித்ததில்லை. பேனா நட்புபென்று தொலை தூரத்திலிருந்தெல்லாம் அவளுக்கு நிறைய கடிதங்கள் வரும். அந்த கடிதங்களை திறக்கவோ படிக்கவோ அக்கா யாரையும் விட்டதில்லை. தபால் தலைகளை சேகரிக்கும் பழக்கம் அந்த வகையில்தான் எனக்கு ஆரம்பித்தது. அந்த கடிதங்களிலிருந்து தபால் தலை ஒட்டப்பட்ட பகுதியை மட்டும் கொஞ்சம் இடம் விட்டு கத்தரித்து, அந்த காகிதத்துண்டை தண்ணீரில் ஊறவைத்து, தபால் தலைகளின் ஓரங்கள் கிழியாமல் அவற்றை பிரித்தெடுப்பதை ஒரு ஓவியம் வரைவதைப் போலவே அக்கா எனக்கு சொல்லிக்கொடுத்தாள். இதுதான் என்றில்லை, எல்லா விஷயங்களிலும் அக்கா ஒரு நுணுக்கமான அழகையும் ஒழுங்கையும் எதிர்பார்ப்பாள். ஆனால் இருபது காசு மதிப்பு கொண்ட ஊதா வண்ணத்தில் செம்பருத்திப்பூ படம் போட்ட தபால் தலைகளே திரும்பத் திரும்ப கிடைத்ததில் சலிப்பு ஏற்பட்டு, கொஞ்ச நாளில் நான் அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டேன்.
தோட்டத்துக்கு வரும் கடிதங்களை எல்லாம் மொத்தமாக எஸ்டேட் அலுவலகத்திலேயே சேர்ப்பித்து விடுவார்கள். அப்பாதான் இரண்டு மூன்று நாளைக்கு ஒருமுறை அலுவலகம் சென்று அக்காவுக்கான கடிதங்கள் அனைத்தையும் வீட்டிற்கு எடுத்து வருவார். அந்த சமயங்களில் எல்லாம் அவரின் முகத்திலும் வார்த்தைகளிலும் லேசான கடுகடுப்பும், இரவுகளில் குடித்து விட்டு அப்பா பேசும் வார்த்தைகளில் மட்டும், மேனாமினுக்கி, ஊர் மேயுதல் போன்ற தடித்த வார்த்தைகளைக் கேட்கலாம் . அம்மாதான் பாவம் . அக்காவிற்கும் அப்பாவிற்கும் இடையில் உட்புகுந்து சமரசம் பேசுவதிலேயே அவளின் காலம் கழிந்தது. எல்லை மீறும் சில சமயங்களில் இதனாலேயே அம்மாவுக்கு அடி உதையெல்லாம் விழுந்திருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு பிறகு, கடிதங்களை வீட்டுக்கு கொண்டு எடுத்து வரும் பணியை அம்மா எடுத்துக்கொண்டாள் . அவளால் இயலாத நாட்களில் நானும்கூட ஓரிரு முறை அலுவலகம் சென்று வந்திருக்கிறேன் . என்னைப் பார்க்கும் போதெல்லாம்‘’ ஒங்க அக்கா பெரிய ஆளு போல…. ஒனக்கு எப்போ இந்த மாதிரி லெட்டர்லாம் வரப்போகுது …?” என்று எஸ்டேட் கிளார்க் முருகன் குரூரமான கேலித் தொணியுடன் கேள்வி கேட்டுவிட்டு, அவராகவே சத்தமாக சிரித்துக் கொள்வார்
கல்யாணம் முடித்து, சம்பாத்தியம் செய்வதற்காக கெர்லிங் தோட்டத்திலிருந்து அப்பா இங்கே வந்தபோது அம்மாவுக்கு வயது இருபதாம் . முதலில் கித்தா பால் அரைக்கும் கொட்டாயின் அருகில்தான் வீடும் லாலாங் புற்களுக்கு ரவுன்ட் அப் மருந்தடிக்கும் வேலையும் கொடுத்தார்களாம். கையில் அணிந்திருக்கும் பிளாஸ்டிக் கையுறைகளையும் மீறி அப்பாவின் கைகளில் சின்னதாய் அரிப்புக் கொப்புளங்கள் வந்ததாகவும், அது அக்காவையும் தொற்றிக்கொள்ளுமென்ற பயத்தினாலேயே, அப்பா குழந்தையான அக்காவைத் தூக்கிக் கொஞ்ச பயப்படுவாரென்று அம்மா சொல்லுவாள் . கொட்டாயைச் சுற்றி புளித்த வீச்சமொன்று குடலைப் பிடுங்கும். அக்கா பிறந்ததிலிருந்தே அடிக்கடி வாந்தி எடுத்ததாகவும், ஏதாவது ஒவ்வாமை காரணமாக இருக்கக்கூடுமென்ற வைத்தியரின் ஆலோசனைப்படி, நிர்வாகத்திடம் கெஞ்சிக் கூத்தாடி அப்பா இந்த வீட்டைப் பெற்றதாக அம்மா சொல்லுவாள். அதனாலேயே அக்காவுக்கு மூக்கில் சைனஸ் வந்ததாகவும், எந்தவிதமான அதீதமான வாசனையும் அவளுக்கு ஒத்துக்கொள்ளாது என்பதால், அனுதினமும் அவளது அறையில் மட்டும் சந்தன ஊதுவர்த்தி ஒன்றை கொளுத்தி வைக்கும் வழக்கம் வீட்டில் இருந்தது. சமீபத்தில்தான் அக்கா அது தனக்கு பிடிக்கவில்லையென்று சொல்லி மல்லிகைப்பூ மத்திற்கு மாற்றிக்கொண்டாள்.
ரமேஷ் அண்ணனைத் தெரியும். பொன்னுச்சாமி மாமாவின் மகன். எஸ்பிம்மில் 3Aக்கள் எடுத்த முடித்து ஆசிரியர் வேலைக்கு மனுப்போட்டு விட்டு காத்திருப்பதாக சொல்வார்கள். எஸ்டேட்டின் முத்தமிழ் படிப்பகத்திற்கு ஒருமுறை அக்காவோடு போகும்போது எஸ்பிம் தமிழ் இலக்கிய புத்தகமான கள்ளோ காவியமோவை எனக்காக தேடி எடுத்துக் கொடுத்தார். எஸ்பிம் தமிழிலக்கியத்தில் தன்னைப்போலவே அவரும் A2 வைத்திருப்பதாக அன்றிரவு வீட்டுக்கு திரும்பும்போது அக்கா முகமலர்ச்சியுடன் சொன்னாள். மேலுமொரு முறை டவுனிலிருந்து திரும்பும்போது, அவர் ஒட்டி வந்த டாட்சன் 120வில் வீடு வரை எங்களுக்கு லிப்ட் கூட கொடுத்திருக்கிறார். இளையராஜாவின் ரசிகரென்று நினைக்கிறேன். அன்று என்னை வண்டியின் பின்னால் உட்கார வைத்துவிட்டு, அக்கா முன்னால் உட்கார்ந்துகொண்டு உரிமையுடன், அவரை கேட்காமலேயே ரேடியோ சானல்களை அடைத்துவிட்டு இளையராஜா பாடல் காசெட்களை போட்டுக்கேட்டது ஞாபகம் வருகிறது எஸ்டேட்டின் பள்ளிப் பிள்ளைகள் பலராலும் Flower Boy என்று முதலில் கிண்டலாகவும், பின் உரிமையோடும் செல்லமாகவும் அழைக்கப்பட்டுக், கொண்டாடப்பட்ட தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் பூபாலனோடு இணைந்து பள்ளித்திடலை சுத்தம் செய்தல், ஓய்வான நேரங்களில் டியூஷன் அது இதுவென்று அவர் நிறையச் செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன்
சுற்று வட்டாரத்தில் பொன்னுச்சாமி மாமாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . கொஞ்ச நாளைக்கு முன்பு வரை, மாணிக்கவாசகம் காலத்தில் தோட்டத்து மஇகா கிளைக்கு அவர்தான் தலைவராக இருந்தார். தோட்டத்து யூனியனில் செயலாளராகவும் இருந்தார். மாரியம்மன் கோயிலை கொத்தோங் ரோயோங் முறையில் சுத்தப்படுத்தும் ஒரு முயற்சியின்போது பூரான் கடித்து கால் வீங்கி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் கிடந்தார். என்ன ஆயிற்றென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. வீக்கம் சரியாக குணமாகாமல் கொஞ்ச நாளில் நொண்ட ஆரம்பித்து பின் அதுவே நிலையானதாக ஆகிப்போனது . இடது காலை பின்னுக்கு இழுத்து முட்டுக் கொடுத்தபடி லேசாக நொண்டி நடந்தாலும் , தோட்டத்தில் என்ன பிரச்சினை ஆனாலும் முன்னுக்கு நிற்பார். எஸ்டேட் நிர்வாகம் வேண்டுமென்றே அவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்வதற்கு வண்டியை தாமதமாக்கியதாலேயே இப்படி ஆனதென தோட்டத்தில் கொஞ்ச நாளைக்கு பேச்சாக கிடந்தது . .
பொன்னுச்சாமி மாமா பாட்டி வழியில் தூரத்து சொந்தக்காரரென அம்மா சொல்வாள். அப்படியல்லவென்றும் , தாத்தா இதற்கு முன்பு குடியிருந்த கெர்லிங் தோட்டத்தில் இரண்டு தலைமுறைகளாய் அவர்கள் பக்கத்து வீட்டு குடித்தனக்காரர்கள் என்றும், அதுவே மெதுவாய் மாமன் மச்சான் என்று அழைத்துக் கொள்ளுமளவுக்கு உறவு முறையாய் மாறிவிட்டதென அப்பா ஒருமுறை கூறியிருக்கிறார். பொதுவில் தோட்டத்தில் அனைவரும் ஒருவரையொருவர், அண்ணன், மச்சான், மாமா என்று ஏதாவது உறவு முறை வைத்தே அழைத்துக் கொள்கிறார்கள். பாட்டி இறந்த பின்பு எங்கள் இருவரின் குடும்பத்திலும் நெருக்கம் குறைந்தது தெரியும். அப்பா மாமாவுடன் எப்பொழுதும் அவ்வளவு இணக்கமாக இருந்ததில்லை. ஏதோவொரு மஇகா தேர்தலின்போது அப்பா சாமிவேலு பக்கம் சாய்ந்ததே அந்த விரிசலுக்கு காரணமென்று அம்மா ஒருமுறை சொல்லியிருக்கிறாள்.
விபரம் தெரிந்த நாள் முதலே தான் மாமாவின் வீட்டில் கை நனைத்தில்லை என்பதை பெருமிதத்தோடு, ஒரு பிரகடனம் போலவே அப்பா கூறும் போதெல்லாம் அவரது குரலில் குரூரம் கலந்ததொரு பரவசத்தைக் காணலாம், ராசாத்தி அக்காவின் கல்யாணப் பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு மாமா வீட்டுக்கு வந்தபோது “எது எப்படியோ… மாப்பிள்ளை விஷயத்துல மட்டும் கரெக்டா கொடிய மேல ஏத்திப் புடிச்சீட்டீங்க போலருக்கு..” என்று நக்கலாக சிரித்தவாறு எதோ சொன்னது ஞாபகம் இருக்கிறது . அந்தக் கல்யாணத்துக்கு அப்பா வரவில்லை என்பதில் மாமாவுக்கு ரொம்பவும் வருத்தம். அந்தக் கல்யாண விருந்தின் போதுதான் ரமேஷ் அண்ணனை இறுதியாகப் பார்த்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கெராக்கான் தலைவர் லிம்மை எதிர்த்து நடக்கவிருந்த போராட்டம் பற்றி அப்போது கூட யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார் . மரம் வெட்டுபவர்கள் மரத்தின் பின்னால் என்ன செய்கிறார்களென்று யாருக்குத் தெரியுமென்று அவர் சொன்னதன் பேரில் நடந்த அந்த எதிர்வினைக்கு அக்காதான் “மாதச்சம்பளம் எமதுரிமை”, “மரம் வெட்டுபவன் மனிதனில்லையா” என்பது போன்ற போராட்ட வாசகங்களை அட்டைகளில் எழுதிக்கொடுத்திருந்தாள்.
அம்மாவை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. எஸ்டேட்டில் இனி யாரையாவது நிமிர்ந்து பார்த்து மூத்த மகளைப்பற்றி பெருமையுடன் பேச அவளுக்கு தெம்பிருக்க வாய்ப்புகலற்றுப் போய்விட்டது. இரண்டு பேர் கூடுமிடத்தில் இன்னுமொரு ஆளாக அவளும் இயல்பாக சேர்ந்து, கலந்து, பேசி சிரிப்பாளாவென்று கூட தோன்றவில்லை. எத்தனையெத்தனை யுகங்களாக கட்டிய கோட்டை, ஒவ்வொரு செங்கல்களாக உதிர்ந்து வீழும்போது ஏற்படும் வலியை பேசித்தீர்க்க முடியுமா என்ன? அவளுடைய எல்லாக் காயங்களுக்கும் அக்காவையே ஒத்தடமாக நம்பிக் கொண்டிருந்தவள், இனி வரும் நாட்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள் என்பதை நினைத்து பதற்றம் வேர்கொள்வதை உணர முடிந்தது. ஏதோ இழவு வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருவதைப்போல் இனி வருகை தரக்கூடிய, கேள்வி கேட்கக்கூடும் உறவினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பதில் சொல்ல வார்த்தைகளைத்தேட வேண்டும்.
வெளியே கொட்டிக்கொண்டிருந்த இருள் வீடு முழுவதும் நிறைந்து விட்டது. என்றைக்கும்போல் அன்றும் சாயங்காலமே எஸ்டேட் சீனத் தவுக்கேயின் கடைக்குப் புறப்பட்டுப்போன அப்பாவைக் கூட்டிவர தம்பியை அனுப்பிவிட்டு, முழந்தாழிட்டு உட்கார்ந்து ,கால்களுக்கிடையில் முகம் புதைத்தவள், வெகு நேரம் தலையைக்கூட தூக்காமல் இருந்தாள். அவளின் மெல்லியதான விசும்பலும் கேவலும் வீட்டை இருட்டு போலவே தின்ன ஆரம்பித்திருந்தன. பூஜையறையின் விளக்கைகூட ஏற்ற யாருக்கும் தோன்றவில்லை. அனுதினமும் ஏழு மணிக்கெல்லாம் காயத்திரி மந்திரத்தை கேசெட்டில் போட்டுவிட்டு, வீடு முழுக்க சூடத்தட்டோடு, தேவாரமொன்றை முணுமுணுத்தவாறு வலம் வருவதை தன் அன்றாட நியமமாகவே கடைப்பிடித்தவள் அவள். நம்பிக் கும்பிட்ட கடவுள்கள் அனைத்தும் அவளைக் கைவிட்டதை எண்ணி குமைகிறாளோ என்னவோ?
“அப்பா வந்துடுச்சும்மா…” என்றபடி தம்பிதான் முதலில் வந்தான். செருப்பைக்கூட கழற்றாமல் வீட்டினுள் நுழைந்து கண நேரம் சுற்று முற்றும் பார்த்தவரின் கன்னங்கள் பழுத்து சிவந்திருந்தன . ஹாலில் மாட்டப்பட்டிருந்த கோயில் திருவிழாவொன்றில் அக்கா பரத நாட்டியம் ஆடியபோது எடுக்கப்பட்ட போட்டோவையே கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். வரும் வழியிலோ, சீனன் கடையிலோ தகவல் தெரிந்த யாராவது இதைப்பற்றி விசாரித்திருக்க சாத்தியமுண்டு. அந்தக் கேள்விகளின் பின்னால் லேசான பகடிகளும் பழைய வன்மங்களும் கூட ஒளிந்திருந்திக்கலாம். அவரும் தரையில் கால் பாவும் மற்றுமொரு மனிதன்தானே. வலித்திருக்கக் கூடும்… தோற்றுப்போன ஒருவனின் கண்ணீர் எத்துனை வலி மிக்கதென கணத்தில் அவருக்கு உறைத்திருக்கக்கூடும் . அழுதாரா என்று தெரியவில்லை. ஐந்தடி பத்தங்குலம் உயரமுள்ள அப்பாவை இப்படி குறுகி நைந்து போன கோலத்தில் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை .
கொஞ்ச நேரம் நிலை கொள்ளாமல் தனக்குள்ளேயே எதோ முணுமுணுத்தவர் திடீரென்று ஒரு வெறிகொண்ட பிச்சைக்காரனைப்போல் உறுமியபடி எழுந்து முன்னே வந்து “புள்ளையாடி வளத்திருக்கே மூதேவி… ஒடுகாலிக்கு பொறந்த நாயும் ஒடுகாலியாத்தானேடி இருக்கும்” என்று குழறியபடி இதுவரை நான் பார்த்திராத மூர்க்கத்துடன் அம்மாவின் விலாவில் எட்டி உதைத்துவிட்டு தள்ளாடியபடி கீழே சரிந்தபோது அவளின் மனதில் என்ன ஓடியதென்று தெரியவில்லை… “பாவி மவளே…” என்று மார்பில் அறைந்தபடி வீட்டின் சுவர்களே உடைந்து நொறுங்குமளவுக்கு பெருங்குரலில் ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள் அம்மா.
செல்வன் காசிலிங்கம்
.
manank.lachimanan yahoo.com
கதை தோட்டத்து சம்பவங்களை மிக இயல்பாக நகர்த்தப்பட்டிருக்கிறது.
கதாப்பாத்திரங்களின் மன உணர்வுகள் கதை வளர்ச்சிக்கு பலம் கொடுத்திருக்கிறது.
தோட்டங்களில் நடமாடும் கதாமாந்திரங்கள் பழைய தோட்டப்புற வாழ்க்கையை நினைவு படுத்தி அங்கேயே்அழைத்துச் செல்கிறார் கதா ஆசிரியர். எழுத்து நடை கவர்வதால் கதையை மீண்டும் மீண்டும் படிக்க ஆர்வம். தூண்டுகிறது. மொத்தத்தில் தோட்டத்திற்கே அழைத்துச்சென்ற ஆசியரை பாராட்டாமல் இருக்க முடியாது.வாழ்த்துகள்.
குறிப்பு
வல்லினம் இது போன்ற தரமான சிறுகதைகளைத் தொடர்ந்து முகநூலில் பதிவிரக்கம் செய்யவேண்டும் என்று பணிவோடு விழைகிறேன்.
கா.இலட்சுமணன்
பாடாங் செராய்
26.06.2017
அருமை கதையை முடித்த விதம்!