வீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகி விட்டது. மாதத் தவணையில் பணம் கட்டி வாங்கிய பொருள் என்பதால் தூக்கிப் போட மனம் வராமல் அதை பழுது பார்த்து பயன்படுத்த முடியுமா என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் ஒரு தொலைப்பேசி எண்ணைக் கொடுத்து தொடர்புகொண்டு கேட்கச் சொன்னார். பிறகு பேச்சின் ஊடே, குடிநீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் குடிப்பதுதான் உடலுக்கு நல்லது என்ற தகவலைச் சொன்னார். அதற்கு ஏதும் காரணம் இருக்கிறதா என்று நான் கேட்டதும்,, ‘சைன்டிஃவிக்கா….’என்று தொடங்கி ஒரு காரணத்தைக் கூறியதோடு அந்தத் தகவலைக் கொண்டிருந்த புலனப்பதிவு ஒன்றையும் காட்டினார்.
பண்டைய தமிழ் மக்கள் பயன்படுத்திய செம்பாலான பொருட்கள் அறிவியல் அடிப்படையில் எவ்வளவு சிறப்பானவை என்பதை அண்மைய அமெரிக்க ஆய்வுகள் நிருபித்திருப்பதாகக் கூறும் ஒரு ஆணின் கட்டைக் குரல்பதிவும் ஒளிக்காட்சிகளும் கொண்ட அந்த புலனப்பதிவை, பல குழுக்களில் இருந்தும் தனி நபர்களிடமிருந்தும் நான் பல முறை பெற்றிருந்ததால் அது எனக்கு மிகவும் பரிச்சயமானதாக இருந்தது. சரி, என்று விடைபெரும் நேரத்தில், நண்பர் முத்தாய்ப்பாக..” நம்ம முன்னோர்கள் எல்லாத்தையும் தெரிஞ்சிதான் சொல்லியிருக்கிறாங்க…. பழைய பழக்க வழக்கங்கள் எல்லாத்துக்கும் ஒரு சயிட்டிஃபிக் காரணம் இருக்கு…” என்று முடித்து அனுப்பினார்.
அவர் கூறிய தகவலும் கருத்தும் எவ்வகையிலும் என்னை பாதிக்கவில்லைஎன்றாலும் நம்மில் பலர் நமது மரபான பழக்க வழக்கங்களுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் சிறப்பு சேர்க்கவும் முட்டு கொடுக்கவும் அறிவியலை அவ்வப்போது துணைக்கழைத்துக் கொள்வது குறிப்பிடத்தக்கது. அதிலும் நவீன தொடர்புதுறையின் வழி புலனத்திலும் முகநூலிலும் தினம் தினம் எத்தனை எத்தனை தகவல்கள் இப்படி வருகின்றன என்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நமது முன்னோர் செய்த வழக்கங்கள், நடைமுறைகள் எல்லாவற்றுக்கும் ஒரு அறிவியல் உட்பொருள் கொடுத்து அவற்றை வியந்துகொள்வதுடன், மேலை நாடுகளே நமது முன்னோரின் அறிவியல் ஆற்றலைப்பார்த்து வியக்கின்றன என்பதால் நாம் அவற்றை தொடர்ந்து பின்பற்றி சிறப்புடன் வாழவேண்டும், என்று முடியும் தகவல்கள் திகட்ட திகட்ட நமக்கு கிடைக்கிறன. பாயில் படுப்பதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள், விறகு அடுப்பில் செய்யும் சமையலின் தனித்துவம், உரலில் இடித்த மாவில் பலகாரம் செய்து சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய மகிமைகள், வாழை இலையில் சாப்பிடுவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள், தரையில் அமர்ந்து கையால் சாப்பிடுவதன் மகத்துவம், அம்மியில் அரைத்த மசாலாவில் செய்யும் சமையலில் குவிந்துகிடக்கும் சத்துகள் என்று நிமிடத்துக்கு நிமிடம் தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறன.
ஆனால் இந்தத் தகவல்களுக்கும் அறிவியலுக்கும் ஆதாரபூர்வ தொடர்பிருப்பதில்லை. அறிவியல் கலைச்சொற்களையும் வேதியல் கூறுகளின் பெயர்களையும் படரவிட்ட இவ்வகை தகவல்களை படித்தவர்களும் நம்பும் நிலை உருவாகி இருக்கிறது. உலக இனங்களின் ஒவ்வொரு பழக்கத்தையும் அறிவியல் கூடத்தில் ஆய்ந்து அறிந்து கொண்டிருப்பதுசாத்தியமற்றது. முன்னோர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையையும் அது சார்ந்த பழக்கவழக்கங்களையும் அறிவியல் கண்கொண்டு ஆய்ந்து நடைமுறைபடுத்தியிருக்கவும் சாத்தியம் இல்லை. நடைமுறைக்கு ஒத்துவருவதும் பாதுகாப்பானதும் எளிமையானதும் வாழ்வியல் கூறாக நிலைபெற்று விட்டதே இயல்பான உண்மையாகும்.
நாம் இப்படி கூறும் போது ஒரு தரப்பு ‘அப்படியானால் நம் முன்னோர்களுக்கு அறிவியல் அறிவில்லையா? தமிழர்கள் அறிவியல் ஞானம் இல்லாதவர்களா? என்று கேட்டு ஜோதிடம் முதலான ஆருடக்கலைகளையும் சிற்பகலை போன்றவற்றையும் ஆதாரம் காட்டி வாதிடுவர். கடல்தாண்டி வணிகம் செய்த இனம் பெறும் அறிவியல் அறிவோடுதானே இருந்திருக்க வேண்டும் என்பதே அவர்கள் வாதமாக இருக்கும்.
மனித நாகரீகம் என்ற ஒன்று தொடங்கும் போதே அறிவியலும் தொழில்நுட்பமும் கூடவே வளர்ந்து வந்துள்ளன. ஆகவே உலகின் எல்லா நாடுகளிலும் எல்லா இனத்திலும் அறிவியலும் தொழில்நுட்பமும் இணைந்தே வந்துள்ளன என்னும் உண்மையை மறுக்க முடியாது. கணிதத்திலும் கட்டுமானத்திலும் நம் முன்னோர் சிறப்பானவர்களாக இருக்கலாம். ஆயினும் நமது முன்னோர்கள் தங்கள் வாழ்வில் புழங்கிய அனைத்து பழக்கங்களையும் அறிவியல் கூறுகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படுத்தினர் என்பதுதான்தான் அபத்தமாகஉள்ளது. மனிதன் நெடுங்காலமாக நடைமுறைபடுத்தும் ஒரு பழக்கதிற்கான பின்புல காரணங்களாக அறிவியலோ மத கொள்கைகலோ இருப்பதை விட இயற்கை சார்ந்த அறிவும் பாதுகாப்பு உணர்வும் அழகியல் உணர்வும் தான் இருக்க முடியும் என்பதே நாம் சிந்திக்க வேண்டியதாகும்.
உண்மையில் மேற்படி தகவல்கள்,மக்கள் அறிவியல் மேல் கொண்ட ஆர்வத்தில் உருவாக்கப்படும் தகவல்கள் அல்ல.பண்டைய பழக்கங்களில் பரப்பப்படுவது போல் அறிவியல் கூறுகள் அடங்கி உள்ளனவா என்பதும் ஆதாரமற்றது. ஆகவே மேற்படி பரப்புரைகளின் நோக்கம், நமது அடையாளமாகவும் மரபாகவும் ஆகிவிட்ட சடங்குகளையும் பழக்கங்களையும் தொடர்ந்து தற்கால சூழலிலும் தக்கவைத்துக் கொள்ளசிலர் திட்டமிட்டு செய்யும் ஏற்பாடு மட்டுமேயாகும். இந்த ஏற்பாடானது இன்றைய நவீன வாழ்வியலுக்கு ஏற்ப பண்பாட்டு அடையாளங்களை மறுவடிவமைக்கும் முயற்சி என்றும் புரிந்து கொள்ளலாம்.
முன்னரும் நமது பண்டைய வாழ்க்கை தடத்தைப் பாதுகாக்க சிலர் கடுமையாக முயன்றுள்ளனர்.நவீன வாழ்க்கை,இழுத்து செல்லும் பெரும் வெள்ளமாக கிளம்பி வந்த போது வழக்கத்தில் இருந்த வாழ்க்கை நடைமுறைகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டு விடக்கூடாதுதென அவர்கள் கவனமாக இருந்துள்ளனர்.ஆகவே, முன்னோர்களின் வாழ்க்கையை நவீன வாழ்க்கையோடு ஒப்பிட்டு நவீன வாழ்க்கை கீழானது என்றும் பண்டைய வாழ்க்கையே சிறந்தது என்றும் பேசிய நமது மூத்த தலைமுறையை நாம் அறிவோம். தன் பாட்டி சமைத்த சமையல் பக்குவத்தை நமது தாயார் சிறந்தது என்று கூறுவர். ஆனால் நமது தாயாரின் சமையலே சிறந்தது என்று நாம் கூறுவோம். ஆயினும் எல்லாருமே இன்றைய சமையலை ஏதோ ஓர் குறையுணர்வுடன் மென்று கொண்டிருப்போம். இது சாதாரணமாக மனித மனதில் தோன்றும் ஒரு அர்தமற்ற ஏக்க உணர்வின் வெளிப்பாடு மட்டும்தான்.
நெடுங்காலமாகவே நமது முன்னோர்கள், தங்கள் கருத்தை நிலைநாட்ட மதக் கருத்துக்களையும் கொள்கைகளையும் துணையாக்கிக் கொண்டனர். ஆகவே, எல்லா சடங்கு சம்பிரதாயங்களுடனும் சமயத்தை இணைத்துப் பேசினர். அன்றைய சூழலில் பிற அறிவுத்துறைகளை விட மத சிந்தனையே மக்களைக் கவரக்கூடியதாகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தது. ஆகவே, வாசலில் கோலமிட்டால் லெட்சுமி தேவியின் கடாச்சம் கிடைக்கும் என்றும்மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் மங்களம் தங்கும் என்றும் சமய நம்பிக்கையின் வழி புனிதத்தன்மையை ஏற்றி அவற்றை பாதுகாத்தனர். பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசுவதும் பொட்டு வைப்பதும் பூவைப்பதும் திருமணத்தால் கிடைக்கும் மங்கலம் என்னும் சமய சடங்காக ஆக்கினர். எனினும் அதன் எதிர் நிலையில் கணவன் இறந்ததும் மங்கலம் அற்ற நிலையை உருவாக்க வேண்டிய இக்கட்டில் பூ, மஞ்சள், பொட்டு என்ற அலங்காரங்களை மறுத்தனர். ஆதிகாலத்தில் மனிதன் கொண்ட அழகுணர்ச்சியின் வெளிப்பாடே மேற்கண்ட அலங்காரங்களின் என்னும் புரிந்துணர்வு இல்லாததால் பெண்களின் வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சியான அலங்காரங்கள் கூட பெரும் சமுதாய பிரச்சனையாக மாற்றங்கண்டது. சமயத்தின் வழி பல்வேறு தத்துவங்களை பொட்டுக்கும் பூவுக்கும் மஞ்சளுக்கும் ஏற்றிச்சொல்லி அவற்றை புனிதப் பொருட்களாக மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவிய முற்போக்கு சிந்தனையும் கல்வி வளர்ச்சியும் தமிழர்களிடையே பரவிய பகுத்தறிவு பிரச்சாரமும் வழக்கமாக சொல்லப்பட ‘புனித’ காரணங்களை மறுக்கவும் புறக்கணிக்கவும் மக்களைப் பழக்கியது. ஆகவே பண்டைய பழக்கவழக்கங்கள் பலவும் எள்ளி நகைக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன. மேற்கத்திய பண்பாட்டு மோதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களிடம் இருந்த பழைய பழக்கங்களை மூடநம்பிக்கைகள் என்ற நிலைக்குத் தள்ளின.
சமய தளத்தில் நின்றே முன்னோர்களின் பழக்க வழக்கங்களுக்கு விளக்கம் சொல்லிப் பழகியதால் மக்கள் முன்வைக்கும் ‘பகுத்தறிவு’ கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் மரபு காவலர்கள் தடுமாற்றம் அடைந்தனர். சற்றே பின்வாங்கினர். இது கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்த பகுத்தறிவு தரப்புக்கு தற்காலிக வெற்றியைத் தந்தது. ஆயினும் இந்த பகுத்தறிவு தரப்பும் வரலாற்று புரிதலோ அழகுணர்ச்சியோ இன்றி வரட்டுக் கேள்விகளைக் கேட்டு மரபை பின்பற்றுவோரை எள்ளிநகையாடியது. உண்மையில் அவர்களின் நோக்கம் பண்பாட்டு விழுமியங்களின் அடிப்படை உண்மைகளையும் அழகுகளையும் வெளிக்கொணர்வது அல்ல. மாறாக, மதத்தின் பெயரால் கட்டியெழுப்பப்பட்டுள்ள புனித அடையாளங்களை தகர்ப்பது மட்டுமேயாகும்.
ஆகவே, மரபை பிடிமானமாக பிடித்திருந்த தரப்பினர் தங்கள் கவனத்தை மெல்ல அறிவியல் பக்கம் செலுத்தத் தொடங்கினர்.மக்களும் எல்லாவற்றிலும் அறிவியல் அடிப்படையான உண்மை இருக்க வேண்டும் என்றே விரும்பினர். அப்படி இல்லாத நிலையில் ஏதோ ஒருவகையில் அறிவியலோடு தொடர்பு படுத்தி பேசுவது வழக்கமானது. கல்லில் அறைத்த மாவில் செய்த தோசை சத்துமிக்கது காரணம் அதில் பலவகை கனிமசத்துகள் கலக்கின்றன என்று கூறும் போது கேட்க அறிவியல் உண்மை போன்றே இருக்கும் . ஆனால் இது அறிவியல் முறையுடன் ஆய்வு செய்து ஏற்கப்பட்ட தகவல் அல்ல. கழுத்தில் அணியும் முத்து மாலையால் உடலில் வெப்பம் குறைவதோடு பல்வேறு நோய்களும் நீங்குகின்றன. காரணம் முத்து மாலை வெளிப்படுத்தும் காந்த அதிர்வலைகள் மனித உடலில் படர்ந்து நன்மை செய்கிறது என்னும் ஒரு தகவல் அறிவியல் ஆர்வமுள்ள மக்களை எளிதில் ஈர்ந்துவிடக் கூடியதாகும். இவ்வாரான விளக்கங்களை இன்று நாம் போலி அறிவியல் என்று கூறுகிறோம். நவீன அறிவியல் ஆய்வு முறைக்குஏற்ற ஒரு கட்டுமானம் உள்ளது. அந்த கட்டுமானத்துக்கு உட்படாத எதுவும் அறிவியல் ஆகாது. அறிவியல் முடிவு என்பது எல்லா சூழலிலும் எல்லா காலத்திலும் மாற்றம் இல்லாதது. இதன் அடிப்படையிலேயே, ஜோதிட ஆராய்ச்சி, ஆவிகள் ஆராய்ச்சி, மாந்திரீகம் போன்றவற்றை நாம் அறிவியல் என்று ஏற்பதில்லை.
ஒரு மக்கள் குழுவிடம் மிக நீண்ட காலம் புழக்கத்தில் இருக்கும் ஒரு செயலின் உட்பொருளை தெய்வங்களோடு தொடர்புபடுத்தி புனிதப் பொருளாக்கிப் பேசிய பழங்கால வழக்கத்திற்கு கொஞ்சமும் குறையாத பேதமை உடையது அவற்றை நவீன அறிவியலோடு தொடர்பு படுத்தி பேசுவதுமாகும். அதிலும் நம் முன்னோர்கள் அறிவியல் உண்மைகளைத் தொகுத்தே சடங்காகவும் மரபாகவும் புழங்கிவந்தார்கள் என்பது அபத்தமானது.
சாமானிய மக்களின் வாழ்க்கையில் சடங்கும் சம்பிரதாயங்களும் இன்றியமையா தேவையுள்ளவை. அவற்றை அகற்றிவிட்டால் அவர்களின் வாழ்க்கை மிகப்பெரிய வெறுமையில் வீழ்ந்துவிடும். கூடவே சடங்குகளால் அதிகார கட்டமைப்புகளும் மிகப்பெரிய வியாபார வட்டமும் உருவாகின்றன. சடங்குகளையும் சம்பிரதாய நம்பிக்கைகளையும் அடிப்படையாக வைத்தே இன்றும் பலநூறு வியாபாரிகள் வாழ்வதை எளிய ஆய்வில் நாம் அறிந்து கொள்ளலாம். இந்திய வியாபாரிகளின் பூக்கடைகள் முதல் நகைக்கடைகள், துணிக்கடைகள், அழகு ஆபரண கடைகள், வீட்டு அலங்காரப் பொருள் கடைகள் என அனைத்தும் நமது வாழ்க்கையில் ஒன்றாகி விட்ட சடங்கு சம்பிரதாயங்களை நம்பியே இயங்குகின்றன. எனவே, மடாதிபதி வளர்த்த பூனையைப் போல் சடங்குகளும் பல்வேறு பரிணாமம் கொடுக்கப்பட்டு மக்களால் தக்கவைக்கப்படுகின்றன.
சடங்கு சம்பிரதாயங்களையும் பண்டைய பழக்க வழக்கங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியின் இரு திட்டங்களாக சமயமும் அறிவியலும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகின்றன. அவை சூழலைச் சார்ந்தும் பயன்படுத்தப்படும் விதத்திலும் தான் வேறுபடுகின்றனவேயன்றி நோக்கத்தில் அல்ல. ஆகவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பகுத்தறிவு கேள்விகளின் வழி சடங்கு சம்பிரதாயங்களைக் கேள்விகுட்படுத்திய பலர், இன்று முன்வைக்கப் படும் ‘அறிவியல்’ காரணங்களைக் கண்டு ‘மனந்திருந்தி’ அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். இன்னொரு வகையில் சிந்தித்தால், முன்னர் பகுத்தறிவு தரப்பு முன்வைத்த விமர்சனங்களுக்கு எதிர்விணையாகவே இன்றைய ‘போலி அறிவியலாளர்கள்’ செயல்படுகின்றனர் என்றும் கூறமுடியும்.
மாட்டு சிறுநீர் புனிதமான பொருள். அதில் தெய்வீக தன்மை உள்ளது என்று கூறி முன்னர் அது வீடுகளில் தெளிக்கப்பட்டது. அப்போது நமது பகுத்தறிவு அதை ஏற்க மறுத்தது. ஆனால் இன்று மாட்டு மூத்திரத்தில் அரிய கிருமி நாசினி இருப்பதாகவும் அது பல நோய்களை குணமாக்கக் கூடியது என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபனம் ஆகிவிட்டதாக சிலர் கூறும் போது அதே பகுத்தறிவு நம்மை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. டெட்டோல் போன்ற ரசாயன பொருளில் உள்ள தீங்கு இயற்கையான மாட்டு சிறுநீருக்கில்லை என்றே நாம் ஏற்றுக் கொள்கிறோம்.நம் நாட்டில் பிரபலமான நவரத்தினக்கல் வியாபாரி ஒருவர் சமய சடங்குகள் பலவற்றின் அறிவியல் மெய்பாடுகள், அமெரிக்க ஆய்வு கூடங்களில் நிரூபனமானதாகவும் நாசா வியந்ததாகவும் வானொலியில் கூறும் பல தகவல்களை நாம் அறிந்திருப்போம். அந்த தகவல்களால் கவரப்பட்ட பல்லாயிரம் மக்கள் அவரின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அவர்களில் படித்தவர்களே அதிகம். பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை என்று முன்னர் ஒதுக்கப்பட்டவை இன்று ‘ அறிவியல்’ காகிதத்தில் பொட்டலம் கட்டப்பட்டு மீண்டும் நமக்குக் கிடைக்கின்றன.
மனிதனின் நாகரிக வளர்ச்சி என்பதே பல்வேறு பரிணாம மாற்றங்களை உட்படுத்தியதுதான். அழகியல் உணர்வும் இயற்கையோடு அமைந்த வாழ்வும் பல ரசமான கூறுகளை அன்றாட வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள மனிதனைத் தூண்டியபடியே இருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றையும் அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியாது. இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று நமது முன்னோர்கள் அன்றே, காலத்துக்கும் இயற்கைக்கும் பொருந்தாத பல பழக்கங்களைக் கைவிட்டு விட்டுத்தான் இன்று நாம் கொண்டாடும் பண்டைய பழக்க வழக்கங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அன்றைய பெண்கள் சூடிய பல நூறு மலர்களை இன்று நாம் அறிவதில்லை. இன்று மல்லிகையை மட்டுமே பெண்கள் வைபவங்களுக்கு சூடுகிறார்கள். நம் காலத்தில் நம் தாயும் அத்தையும் அணிந்த கனகாம்பரத்தைச் சூடும் பெண்கள் இன்று இல்லை. ஆண்களும் மலர் சூடும் வழக்கம் முன்னர் இருந்தது. இப்போது அது இல்லை. சடங்குகளும் பழக்கவழக்கங்களும் காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ப நிலைப்பதும் உருமாறுவதும் மறைவதுமாக இருப்பவை. அவை எல்லாவற்றுக்கும் அறிவியல் அடிப்படையில் பின்புலம் கற்பித்துக் கொண்டிருப்பது நமது முன்னேற்றத்திற்கு தடையாகும்.
ஆக, பண்டைய பழக்க வழக்கங்களை நிலைநிறுத்த முனைவோர் இரண்டு தரப்பாக செயல்படுவதைக் காணமுடிகிறது. ஒன்று சமய அல்லது தெய்வீக தன்மையை அப்பழக்கங்களின் மீது ஏற்றி பேசும் தரப்பு. அடுத்தது அறிவியல் அடிப்படையில் சில காரணங்களை ஜோடித்து அப்பழக்கங்களை நிலைநிறுத்த முனையும் தரப்பு. ஆனால் இந்த இரண்டு தரப்பும் ஒரு கயிரின் இரண்டு முனைகள் போன்றவைகள். ஒன்று தளரும் போது அடுத்தது இழுத்துப் பிடித்து,சடங்கு சம்பிரதாயங்களை தற்காக்கும். ஆயினும், இவர்கள் இருபாலருக்கும் பண்பாட்டு விழுமியங்களின் உண்மையை உணர்த்தும் அக்கறை இருப்பதில்லை.
ஆகவே, பண்டைய பழக்க வழக்கங்களின் உண்மையான பொருள் அறிய நாம் நமது மானுடவியல் அறிவோடும், வரலாற்று தெளிவு,நிலநூல் அறிவு, அழகியல்,சுற்றுச் சூழல், போன்ற அறிவுகளோடும் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் பின்பற்றும் சடங்குகள் பழக்க வழக்கங்கள் ஆயினவற்றின் பின்புலமாக நமது முன்னோரின் வாழ்வியல் நுகர்ச்சியும், அழலியல் ரசனையும், அரசியல், வரலாற்று எச்சங்களும் சமூக அடையாளங்களும் உள்ளன என்ற உண்மையை நாம் புரிந்து கொண்டால் அதன் பொருண்மையை சமய அடிப்படையிலோ போலி அறிவியலின் துணையுடனோ தேடவேண்டிய அவசியம் இருக்காது. தொழ் பலங்கால பழக்க வழக்கங்களில் பல இக்காலத்திற்கு பொருந்தாதவை என்று உணர்ந்தும் வழுக்கட்டாயமாக பெருமிதம் பேசி அவற்றைத் தூக்கிச் சுமக்கும் அவலமும் நேராது.
நல்ல கருத்துகளைக் கொண்ட கட்டுரை. கண்மூடித்தனமாக நம்புவதை விட்டு நமது பார்வைக்கு வரும் பல விஷயங்களை நாமே சுய சிந்தனை செய்ய ஆரம்பித்தால், உண்மை விளங்கும். உங்களது அனைய்யு மக்களுக்கும் சென்று சேர ஏதாவது வழியுண்டா?
உங்களது பதிவு அனைத்து மக்களுக்கும் சென்று சேர ஏதாவது வழியுண்டா?