வல்லினத்துக்கு முன்- பின்

rengasamyவல்லினம் குழுவினரின் தொடர்பு கிடப்பதற்கு முன்பு என் நிலைஎன்ன?  அவர்களின் தொடர்பும் ஆதரவும் கிடைத்த பிறகு என் நிலை என்ன? என யோசிக்கிறேன். தொடக்கத்தில் எனக்குமூர்த்தி மற்றும் பாலு போன்று  கைகொடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நிறையவும் எழுதினேன். மயில், வானம்பாடி போன்ற இதழ்களில் என் தொடர்கள் வெளிவந்தன.

லங்காட் நதிக்கரை நாவலுக்கு பரிசு வாங்க மேடையில் நிற்கும் போதுதான் நவீனைச் சந்தித்தேன். பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்தார். என் வயதிற்கும் அவர் வயதிற்கும் பார்க்கும் போது அவர் பொடியன் என சொல்லலாம். அவருக்கு நாவல் போட்டியில் இரண்டாவது பரிசு கிடைத்திருந்தது. அன்றுதான் பார்த்துக்கொண்டோம். பின்னர் நவீன் என்னைக் கண்டுகொண்டார். என்னை தொடர்பு கொண்டார். என் கதைகள் குறித்து விமர்சனம் எழுதினார். முன்பு யாரும் அவ்வாறு எழுதியிருக்கவில்லை. வல்லினம்தான் என்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்தது. அவர்கள் தொடங்கிய ‘வல்லினம் விருதை’ முதலில் எனக்குதான் வழங்கினார்கள். இதனை என்னால் மறக்க முடியாது. அன்றிலிருந்து எந்த நிகழ்ச்சியையும் எனக்கு அழைப்பில்லாமல் நவீன் செய்வதில்லை. மலேசிய எழுத்துலகத்துக்கு பரவலாக அ.ரெங்கசாமி எனும் எழுத்தாளனை அறிமுகம் செய்தது வல்லினம்தான்.

நவீன், ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ என்ற என்னுடைய தன்வரலாறு நூலை எழுதச் சொல்லி ஊக்கம் கொடுத்தார். அந்நூல் எழுதும் போது அவர் என் வீட்டிலேயே தங்கி அதனை படித்து திருத்தியிருக்கிறார். என் பிள்ளைகள் போலவே இருந்தார். இன்றும் குடும்பத்தில் ஒருத்தராகவே அவர் இருக்கிறார். அந்த நூலுக்கு ஒரு விழா செய்து மலேசியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் என்னை பரவலாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். வல்லினம் குழுவினர்க்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். வல்லினம் குழு மென்மேலும் வளர வேண்டும். இந்த வயதிலும் எழுதவேண்டும் என எழுதிக்கொண்டிருப்பதற்கு வல்லினம் குழு கொடுக்கும் ஆதரவும் உக்கமும்தான முதன்மை காரணம். நமக்கு உதவவும் பாராட்டவும் ஆள் இருக்கிறார்கள் என்பதை தவிர வேறென்ன வேண்டும்.

 

1 comment for “வல்லினத்துக்கு முன்- பின்

  1. Selva Ramasami
    September 25, 2017 at 4:58 pm

    ஐயா திரு அ.ரெங்கசாமி அவர்களுக்கு வணக்கம். சில நாட்களுக்கு முன்னர் லங்காட் நதிக்கரை நாவல் எங்கள் ஊர் நூலகத்தில் கிடைத்த சமயம் சிறிது மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் தமிழ் நூல்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. மலேசியா நூல்கள் அரிது.

    தங்களின் இந்நாவவை படிக்க தொடங்கிய முதல் பிறந்த மண்ணின் நினைவுகள் மடை திறந்தது. தோட்ட புற சூழ்நிலையில் ஜப்பானியர் காலத்தை மையமாகக் கொண்ட கதைகளை படித்து நினைவுகள் உண்டு. ஆனால் இந்த கதை கலம் நான் தோட்டத்தில் பிறந்த காலத்தை விட முன்பான காலம். கம்பங்களில் என்று தமிழர்களின் வரலாறு தொடங்கியது என்ற வினாவுக்கு பதில் அளித்த கலம்.
    . தேசிய ஒருமைப்பாடு, அரசியல் கொந்தளிப்பு, கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் மனப்போராட்டத்தில் இந்த நாவல் சரித்திரத்தை பதிவு செய்துள்ளது.
    முத்துவை எனது முண்ணேடியாகவே என்னால் பார்க்க முடிந்தது. அவனுக்குள் இருந்த ஒரு உத்வேகம், சாமர்த்தியம் எப்படி அவன் சமுதாயத்தில் முடியாமைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுமாறு அவன் அப்பாச்சி அவனை வழி நடத்தி செல்லும் காட்சியில், எனது தந்தையின் நினைவுகளை அசை போட்டுக்கொண்டே வந்தேன்.

    தங்களின் இந்த நாவல், சரித்திரம் மறந்து வாழும் மலேசியா்களுக்கு ஒரு பதிவு. தமிழ் மக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மலேசிய மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கட்டாயம் தமிழ் கூறும் நல் மக்களிடம் உள்ளது. இந்த நாவல் மலேசிய மொழியில் மொழி பெயர்த்து பல்வேறு மக்களின் கைகளில் தவழும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அடியேன், முடிந்த அளவு எனது பங்களிப்பும் இருக்கும் என்று கூறி விடை பெறுகிறேன்.
    நன்றி.
    செல்வா ராமசாமி
    வெல்லிங்டன், நியூசிலாந்து
    26 Sept 2017

Leave a Reply to Selva Ramasami Cancel reply